Sunday, 8 June 2014

ஆள் மாறாட்டம்


யூனிவசிட்டியில் படிக்கும்போது நான், திரு, சிவா என்று மூன்றுபேர் ஒரு அறையில் இருந்தோம். வெள்ளிக்கிழமை விரிவுரைகள் முடித்து, விடுதிக்கன்ரீனில் சாப்பிட்டுவிட்டு சில ஹோம்வேர்குகளை செய்துகொண்டு இருந்தபோது திடீரென்று

"நாளைக்கு நாங்கள் பெரஹரா பார்க்கப் போகின்றோம்" என்றான் திரு.
"எக்ஷாம் வாற நேரத்திலை உதுக்கெல்லாம் போய் வீணாக நேரத்தை செலவழிப்பதா? நான் வரமாட்டன்" என்றான் சிவா.
"நிறைய வடிவு வடிவான சிங்களப்பெட்டையள் எல்லாம் வருவாளவை. எக்ஷாமா பெரஹரவா? நீயே தீர்மானி" என்று திரு மீண்டும் உசுப்பேத்தினான். எனக்கென்னவோ பெரஹரா பார்க்கப் போறதுதான் நல்லது என்று பட்டது.

'எண்ணப்பறவை சிறகடித்து - விண்ணில் பறக்கின்றதா
உன் இமைகளிலே உறக்கம் வர - கண்கள் மறுக்கின்றதா' பாட்டு ஒன்று கேட்டுக்கேள்வி இல்லாமல் தக்க சமயமெனப் புறப்பட்டது.

"ஒரு ஆளின்ரை சத்தத்தைக் காணேல்லை" திரு என்னைச் சுட்டிக்காட்டி சிவாவிற்கு கண்ஜாடை செய்தான். நான் இன்னமும் 'வடிவு வடிவான' பாட்டு வரிகளிலேயே மூழ்கி இருந்தேன்.

அடுத்தநாள் மதியம் 'அக்பர் ஹோல்' பஸ் ஸ்ராண்ட் நோக்கிப் போய்க்கொண்டிருந்தோம். வழியில் எங்களுடன் விஜயனும் சேர்ந்திருந்தான்.
"ஏய்.. மச்சான் நான் வரேல்லையடா"  என்றான் திரு.
"நீதானேடா துவக்கினனி. பிறகு நீயே வரேல்லை எண்டா...."
"எக்ஷாமடா... எக்ஷாமுக்கு நிறையப் படிக்கக் கிடக்கு" என்று சொல்லியவாறு அக்பர்ஹோல் நோக்கி திரும்பிவிட்டான் திரு.

பஸ் ஸ்ராண்டை நெருங்கி விட்டோம். நாங்கள் மூவரல்ல, ஒரு பட்டாளமே பெரஹரா பார்க்கப் புறப்பட்டிருக்கின்றார்கள் என்று தெரிகிறது. அந்தக்கூட்டத்தில் கலர் கலரான உடுப்புகளில் நாலைந்து பள்ளிமாணவிகளும் இருந்தார்கள்.
"எட்டி நடவுங்கோ..." என்றபடி விஜயன் கைகளை விசுக்கி விசிக்கி நடந்தான். பின்புறமிருந்து பஸ் ஒன்று வந்து எங்களைக் கடந்து போனது.
"கொத்தப் போறாண்டா...   கொத்தப் போறாண்டா..." என்று விஜயன் பதகளிப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே, அந்த பஸ் அந்த நாலைந்து பெண்களையும் கொத்திக்கொண்டு போய்விட்டது.

 மேலும் அரைமணி நேரம் காத்திருந்து கண்டிக்கு பஸ் ஏறினோம்.

சும்மா சொல்லப்படாது. பெரஹரா 'அந்த மாதிரி' இருந்தது. தலதாமாளிகை மாலை வெய்யிலில் ஜொலித்தது. நூறுகலரில் வானவில் தெறித்தது போல சனக்கூட்டம். நெரிசலில் மிதந்து சென்றோம். 'இதிலையாவது முன்னேறுங்கள்' என்று சொல்லி பின்னாலிருந்த சனக்கூட்டம் எங்களைத் தள்ளியது. ஆள்மாறிவிடாமல் இருக்க நாங்கள் மூவரும் ஒருவர் கையை மற்றவர் எனப் பிடித்துக் கொண்டோம்.

தூரத்தே ஒரு பாட்டி தனது பேர்த்தியுடன் வந்து கொண்டிருந்தாள். பேர்த்தியோ கொள்ளை அழகு. பதினைந்துக்குள்தான் அகவை இருக்கும். அவளின் கைகளைப் பிடித்துப் பார்ப்பது என்று முடிவு செய்து கொண்டேன். மிகுதிப்பாட்டு என்னையும் அறியாமல் அவளை நோக்கிப் புறப்பட்டது.

ஊஞ்சலைப்போலே பூங்கரம் நீட்டி - அருகில் நெருங்கிட வா
உன்னை உரிமையினாலே குழந்தையைப்போலே - அள்ளி அணைத்திட வா

கிட்ட வருகின்றார்கள். இடையிடையே குறி தவறாமல் இருக்க அவளை நோட்டமிடுகின்றேன். 'அவங்களிட்டைப் பிடிபட்டா சம்பலாக்கிப் போடுவான்கள்' திருக்குமார் காதுக்குள் கிசுகிசுத்தான். சொண்டுக்கும் சிவப்புப் பூசியிருக்கின்றாள். புடலங்காய் போல நீண்டு வளைந்த கைகள். ஒரே பிடிதான். அழுங்குப்பிடி. பிடி நழுவவில்லை. ஆனால் கைதான் தவளையைப் பிடித்தது போன்று வழுவழு நொழு நொழுவென்றிருந்தது. கிழவி கெக்கட்டம் போட்டுச் சிரித்தாள். இது என்ன எங்கையோ பிடிக்க எங்கையோ 'சவுண்ட்' வருகுது? அப்போதுதான் நான் பிடித்தது கிழவியின் கை என்று தெரிந்தது. 'பழம் தின்று கொட்டை போட்ட கிழவி' எங்களின் நோக்கம் அறிஞ்சு பேர்த்தியை வளம் மாத்திப் போட்டாள். நான் எதிர்பார்த்திராத வேளையில், கிழவி தன் மறுகையால் என்னைப் பற்றிப் பிடித்து என் கன்னத்திலே ஒரு 'உம்மாக்' குடுத்தாள். பேர்த்திக்கோ அடக்கமுடியாத சிரிப்பு. துள்ளித்துள்ளி கெக்கட்டம் போட்டுச் சிரித்தாள்.

அந்தச் சிரிப்பு! 30 வருடங்கள் கழித்து இன்னமும் பசுமையாக இருக்கிறது.






1 comment:

  1. அடாடா, தங்களைப் பற்றி தெரியாமல் போய் விட்டது. தெரிந்திருந்தால், இந்த வலைப்பூவையும் இந்த பதிவில் http://unmaiyanavan.blogspot.com.au/2014/06/blog-post_3.html சேர்த்திருப்பேன்.

    ReplyDelete