"அரை
மணித்தியாலத்துக்குள்அலுவலை முடிச்சிட வேணும்"
முன்னாலே சைக்கிளில் போய்க்கொண்டிருந்த கபாலர் சொன்னார்.
"இப்ப
ஐஞ்சேகால். ஐஞ்சரைக்கு முன்னம் வாசிகசாலையடிக்குப் போய் விடுவம். ஆறுமணி மட்டிலை
திரும்பி விடவேணும்" ஏற்கனவே கதைத்துப் பேசி வந்திருந்த போதிலும் மீண்டும்
ஞாபகமூட்டினார் கோபாலர். ஊரிலை இருக்கேக்கை பத்துப் பதினைந்து வீடுகள் இடைவெளி
தூரத்திலை இருந்திருப்பம். இப்ப, இடம்பெயர்ந்த பின்பு இடைவெளி நெருக்கமாகி பக்கத்துப் பக்கத்து
வீடுகளில் தஞ்சமடைந் திருக்கிறோம். கோபாலர் இதற்கு முன்பும் ஒருதடவை போய்
வீட்டிலிருந்து பொருட்களை எடுத்திருக்கின்றார். அந்தத் துணிவு தந்த
தைரியத்தில்தான் இன்று என்னையும் கூட்டிக் கொண்டு போகின்றார்.
"பாத்தியேடா
தம்பி! மூண்டு கிழமைக்கு முதல் எவ்வளவு சொர்க்கபுரியா இருந்தது எங்கட ஊர். இப்ப
நரகமாப் போச்சு."
சைக்கிள்கள் இரண்டும் பிரதான வீதியிலிருந்தும் விலகி, குறுகலான பாதையில்
விரைந்து கொண்டிருந்தன. தெரு வெறிச்சோடிக் கிடந்தது. கோபாலரை முன்னாலே போகவிட்டு
நான் பின்னாலே போய்க் கொண்டிருந்தேன். மழை பெய்த தெருவில் சைக்கிள் ஓடும்போது
ஏற்படும் 'சர சர' ஒலியைத் தவிர வேறு
ஒரு சத்தமுமில்லை. நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. பொக்கற்றுக்குள்ளிருந்த
பேப்பரை எடுத்துப் பார்த்தேன்.
1. என்னுடையதும்
தங்கைச்சியினதும் சேர்ட்டிபிக்கேட்டுகள்
2. அப்பா சொன்ன
சுவாமிப் படங்கள்
3. கொத்து
விறகு
4. தேங்காய்
5. புத்தகங்கள்
(மு.வ இன் அகல்விளக்கு நாவல், ராஜகோபாலாச்சாரியார் எழுதிய வியாசர் விருந்து, தங்கம்மா
அப்பாக்குட்டி எழுதிய சமயக்கட்டுரைகள்)
இவ்வளவும் நான் எழுதியிருந்தவை. இவற்றிற்குக் கீழே எனது தங்கை
புதிதாக ஒன்றைச் சிவப்பு மையினால் சேர்த்திருந்தாள்.
6. ரேணு போய்