நதியே! நதியே!
நதியே நதியே,
கள்ளங் கபடமில்லா
வெள்ளைச் சிரிப்போடு
தத்தித் தவளும்
சிறு பிள்ளையோ நீ?
மெல்ல வளர்ந்து
எழுந்து நடந்து
எங்கே பரதம் பயின்றாய்?
கல்லுப் பாறையிலே – நீ
துள்ளிக் குதிக்கையிலே
கால் வலிக்காதோ?
வெள்ளிக் கொலுசுகள்
வெட்கிச் சிரிக்குதே.
புல்லும் பூச்செடியும் – உன்
கொடியிடை கிள்ளிக்
கீச்சம் மூட்டுதோ – நீ
மலையிடை வருகையில்
இள நங்கையின்
ஈரப்புடவை
போல்
விழுந்தும்
எழுந்தும்
வளைந்தும் நெளிந்தும்
அங்கும் இங்கும்
யாரைத் தேடிப் போகிறாய்?
பருவம் வந்ததோ
பதுங்கிப் பதுங்கி
மரங்கள் பின்னால்
எதற்கு ஒளிக்கிறாய்?
குறும்பும் குறைந்ததே
குளிர்காயும் காதலன்
நினைவு வந்ததோ?
நதியாய் தவழ்ந்து நடந்து
காதல் கடலில் சங்கமித்தபின்
உன்னைத் தனியாகப் பிரிக்க
யாரால்தான் முடியும்?
உங்கள்
காதலில்
உலகிற்கே
பொறாமைதான்.
No comments:
Post a Comment