Monday, 25 May 2015

வன்னி நாவல் - கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 31 - வாரிசு
நிறைவுப் பகுதி

அண்ணையின் அற்புத தரைகீழ் மாளிகை தரிசனம் முடிந்து வந்து ஒரு வாரமாகிறது.

கல்யாணத்துக்கு இன்னும் எண்ணி மூன்று நாட்கள். சுபநாளைச் சதா நினைவூட்டும் களுபண்டா, எனது கண்களில் அடிக்கடி எழுந்து நின்று வினாவெழுப்பினார்.

வாழ்வின் பொன்னான நாள். சொர்க்கத்தில் எழுதிய கல்யாணம். அதற்கு இராணுவ முகாம் தளபதிகளுக்குக் கல்யாணப்பத்திரம் வைக்கும் சுபநாள். சுபவேளைக்கு ரண்டு மணிநேரந்தான் உண்டு. தேகம் புல்லரித்தது.
காலை எழுந்ததும் ராஜ மல்லிகைப் பூச் சேகரித்து கட்டிய அழகிய முத்து வண்ண மாலையின், கமகம சுகந்தம் என் குழப்பத்தை மௌனமாக நோக்கியது.

பத்திரம் வைக்கப் போகும் வேளை என்ன உடை அணிவது? பல நாள் கேள்வி. முடிவில்லாத குழப்பம். ஒரு மாதமாக நடக்கிற ஓய்வில்லாத போராட்டம். திருமணக் கோலத்தில் செல்ல ஆசை எழுந்து நின்று வினா எழுப்பியது. கூறைச்சேலை? தமிழர் வழமையில்லை. சுடிதார் நல்ல பொருத்தம். சிங்களவர் கண்களை அள்ளி அணைக்கும். கூறைச் சேலையும் அழகாய் வசதியாய் அமையும். இராணுவ முகாமில் யார் வழமையை பார்க்கப் போகிறார்கள்? அந்தத்தில் வந்த வினா தலைநிமிர்ந்து மேலும் கீழும் தலை அசைத்தது.
களுபண்டா என்னோடு முகாம் வர விரும்பினால்? நல்ல மனிதர். அப்பழுக்கில்லாத சுத்தமான மனம். எவருக்கும் தீங்கு செய்ய எண்ணாத மகத்துவம் நிறைந்த மனிதர். நிறை குடம். என்ன வேலைஏவினாலும் ஏலாதென்று சொல்லத் தெரியாத அப்பாவி.

நயினாமடு இராணுவமுகாம். ஒரே கொண்டாட்டம். கேணல் ரணவீர மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் கல்யாணப் பத்திரம் வைக்கும் நிகழ்வு சொற்ப நேரத்தில். சிப்பாய்கள் மத்தியில் ஆட்டம், பாட்டு, கூத்து ஆனந்தம்.
சிங்களச் சகோதரர்கள் கொஞ்சம் வித்தியாசமான ஜீவன்கள். சிங்கள இனம் சம்பந்தமாக நல்லது கெட்டது எழுந்து வரும் வேளை காக்கைக்கூட்டமாய் ஒன்றாய் சேர்ந்துகாகாஎன்றுகத்திப் பறப்பர்.

கல்யாணப் பத்திரம் வைக்கத் தனியப் போகிறேனா? களுபண்டாவுடன் இணைந்து போகிறேனா? எவரும் சிந்தனையில் கொள்ளவில்லை. என் மனதில்தான் மகாபாரதப் போர்.
களுபண்டா தனது ஊருக்கு, கறுப்பிக்கடவைக்கு, கல்யாணப்பத்திரம் வைக்கப் போனவர், ஏன் வரச் சுணங்குது? ஏதன் பிரச்சினையோ? கடவுளே, நேரத்துக்கு நல்லபடி வந்து சேர வேண்டும்.

ஆயிலடி வாழ் மக்கள் வெடிக்கப்போகும் பூகம்பமாய்க் குமுறுகின்றனர். கதை கேட்ட பிள்ளைகள் தலைகளைத் தேடுகிறேன். கோமதியைப் பார்க்க ஆவல் எழுகின்றது. இறந்த பின்னர் கவிதை பாடுஎன்று சொல்லியிருக்கக்கூடாது. நான் உங்களுடன் என்றும் இருப்பேன்என்று சொல்லியிருக்கக் கூடாது. என் உள்ளத்தை ஊடுருவிப் பார்த்தவள். தலையை தொங்கப் போட்டுக் கொண்டு போனவள். பாவம். சின்னப் பிள்ளை.
ஆயிலடிச் சனம் காறித் துப்பிக் கோபம் கொண்டு நிற்கிறார்கள். சுசீலா அக்காவும் முகந் தந்து பேசுவதை வள்ளிசாய் வெட்டிப்போட்டார். யாரும் அற்ற அநாதையாய் ஒற்றை விருச்சமாய் பூமாதேவியே கதியென்று நிற்கிறேன்.

'ராச நாச்சியார் வம்சத்துக்கு அவமானம் தேடுகிறாள் சிவகாமி. ஆயிலடியில் ஒரு குருவிகூடக் கலியாணத்துக்குப் போகக் கூடாது. அந்த அடங்காப்பிடாரி பரத்தையோடு யாரும் பேச்சுவார்த்தை வைக்கக்கூடாது. கல்யாணப் பத்திரம் கொண்டு வந்தால் கிழிச்சு மூஞ்சையில் வீசுங்கள்." சுசீலா அக்கா ஆவேசமாய்க் கத்தினார்.
இந்திய உதவியில் அமைந்த சுசீலா அக்காவின் வீட்டு வாசலில் செல்வீச்சில் கிளைகள் பல இழந்து கோலம் மாறிய அம்பலவி மாமரம். கீழே சுசீலா அக்கா. சுசீலாவைச் சுற்றிக் கொந்தளிக்கும் கூட்டம். யாவரும் பெண்கள்.
'சுசீலா மச்சாள், கல்யாணப் பத்திரம் சிங்களத்திலே எழுதியிருக்குதாம்."
'சிவகாமியின் தாத்தா துரோணர். தமிழ் மொழிக்கு சமவுரிமை கேட்டுக் காலி முகத் திடலில் சத்தியாக்கிரகம் செய்தவர். வெள்ளவத்தையில் துண்டு துண்டாகச் சிங்களவன் வெட்டி, தலையை பஸ்தரிப்பு நிலையத்தில் தொங்கவிட்டு காறித் துப்பினவன். அதை மறந்து சிங்களத்திலே கல்யாணப் பத்திரம் அடித்திருக் கிறாள். தூ. ரோசம் கெட்டவள். தமிழ்த் துரோகி." தவமணி பொரிந்தாள். சிவகாமிக்கு கிட்டிய உறவு. பெரியம்மாமுறை.
'புலிகள் தலைவரை அண்ணை அண்ணை என்று பெரிதாய்ப் பேசுவாள். புலிதான் தன் மூச்சு என்பாள். விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கே அவமானம். தலைவர் உயிரோடு இருந்தால் யாழ்ப்பாணமீன் சந்தைக்குமுன்னே தந்திக் கம்பத்தில் கட்டிச் சுட்டுக்கொன்றிருப்பார். தூ! தோலம் கெட்ட நாய்." ஏசிய ஒற்றைக் கண் கைராசி,  நீலச் சேலையை அரையில் வரிந்து சொருகியபடி காறித்துப்பினாள்.

ஆயிலடி கொந்தளித்து எழுந்து நின்று வசை பாடும் வேளை, நான் குங்கும வண்ண கூறைச் சேலையால் என்னை அலங்கரித்துக் கொண்டிருந்தேன். நாற்பதினாயிரம் ரூபாய்க்கு கொழும்பில் களுபண்டா கொள்வனவு செய்தது. அழகு கோலம் கண்களைப்பற்றிப் பறித்தது. செஞ்சிவப்புச் சட்டை கொஞ்சம் பெரிது. கண்ணாடியில் பார்த்துப் பார்த்து மனம் குதூகலித்துத் துள்ளியது. வாழ் நாளில் என்றும் அத்தனை அழகாய் இருந்ததில்லை. நெற்றியில் மங்கள குங்குமம். ஆயிரங் கதைகள் என்னிடம் பேசியது. வாழ்க்கை முழுவதும் ஒன்று திரண்டு ஓடி வந்து கண்களுக்குத் தரிசனம் தந்து மறைந்தது. கண்ணீர்த் துளிகள் பொலபொலவெனச் சொரிந்தன. நினைவுகள் சிறகடித்து வானத்தில் வட்டமிட களுபண்டா வழங்கிய திருமண தங்க நகைகளை அணிந்தேன். களுபண்டாவின் திருக்கோலம் தர்மக் கோல் தாங்கி கண்களில் தரிசனம் தந்து நியாயவாதம் புரிந்தது. கொஞ்சம் தடுமாற்றம் தலைகாட்டியது.

'வானம் இடிந்து விழுந்திடலாம்
தினம் வாயு எழுந்து பிளந்திடலாம்
வீணர்படைஅதுவந்திடலாம்
புலி எந்த நிiயிலும் வென்றிடலாம்."

எங்கிருந்தோ செல்லப்பாவின் பாடல் காதில் ஒலித்தது. கண்முன்னே கண்ணகி எழுந்து நின்று கால் சிலம்பைத் தரையில் வீசியடித்து உடைத்து நியாயம் கேட்கிறாள். இடது மார்பகத்தைத் திருகி எறிந்து மதுரையை தீமூட்டி எரிப்பவள், வேதனைகள் சூழ்ந்து நின்று வருத்தி வழிநடத்தும் என் தன்வழிப் பாதையை பார்த்துச் சிரிக்கிறாள். என் கவனத்தை வீதியில் வந்து தரித்த வாகனம் பலாத்காரமாய்க் கவர்ந்தது.

களுபண்டா வந்து சேர்ந்தார். நிமாலின் நீலபி.எம்.டபிள்யூ. கருநீல கோட்சூட். சற்றே கவர்ச்சியாய்க் காட்சி தந்தார். அழகு சொட்டும் தோற்றம் மனிதரின் நோக்கத்தை விபரமாக விளக்கியது. என்னுடன் இணைந்து கல்யாணப் பத்திரம் வைக்கவே மாப்பிளை அலங்காரம். எப்படித் தவிர்ப்பது? உள்ளம் ஏங்கியது.

தாயும் சகோதரியும் வந்திருந்தனர். ஊர் கறுப்பிக்கடவ. மதவாச்சி வடகிழக்கு எல்லையில் உள்ள சின்னக் கிராமம். குளத்தை நம்பி உயிர் வாழ்பவர்கள்.
வெள்ளைத் துணியால் மூடிய செப்புத் தட்டத்தில் கொண்டைப் பணியாரமும், கொக்கீசும் கொண்டு வந்தனர். அவர்களின் கலாசாரப் பலகாரம். எங்கள்வடைமுறுக்கு போல.
அணிந்திருந்த கூறைச் சேலையைக் கண்டு திருதிருவென விழித்தனர். தேவ உலகத்திலிருந்து வந்த தேவமாதோ என்று நினைத்தார்கள் போலும். சிரஞ் சீவியத்துவம் பெற்ற சிகிரிய ஓவியங்களை எண்ணிப் பார்த்திருப்பர். சிங்கள மக்கள் தமது பூர்வீக சரித்திர தலங்களை தரிசிப்பதை வாழ்நாளின் நிரந்தர கலாசார அம்சமாகக் கொண்டவர்கள். அருகில் வரவே தயங்கி நின்றனர். ஒருவேளை இந்தத் திருமணக் கோலத்தில் கறுப்பிக்கடவைக்கு அழைத்துச் சென்றால், வைக்கோலால் வேய்ந்த சின்ன வீடுகளில் வாழும் ஊரவர் எப்படி அதிசயிப்பர் என்று எண்ணினர் போலும். இமைகளை அகலத் திறந்து வைத்துக் கொண்டு அடிக்கடி கடைக் கண்ணால் நோக்கினர்.

'கல்யாணப் பத்திரம் வைக்க நாங்களும் கூட வருகிறோம்." சொக்கு பருத்த தங்கை முத்து இனிய தேன் குரலில் பேசினாள். பனங்காய் அளவு பெரிய கொண்டை. எட்டி எட்டி விழித்துப் பார்க்கும் ஊதிப் புடைத்த மார்பகம். அழகான பெரிய கதை பேசும் கண்கள். எவரும் திரும்பிப் பார்க்கும் கவர்ச்சி. அதற்கு அந்தப் பருத்த சொக்கைதான் காரணமோ அல்லது பெரிய கழுத்துச் சட்டைக்கு வெளியே எட்டிப் பார்க்கும் மாதுளங்கனிதான் காரணமேர்? எனக்குச் சரியாய்ப் புரியவில்லை.
'வேண்டாம். அப்படி தமிழர் வழமை இல்லை." அவர்களுக்குத் தமிழர் கலாசாரம் ஆனாஆவன்னா கூடத் தெரியாது என்ற கணிப்பில் கூறினேன்.
'காம்ப் வாசல் மட்டும்."
'வேண்டாம் முத்து. முகாம் பார்க்க ஆசை என்றால் நான் போய் அரைமணிநேரம் கழித்து வாருங்கள். அவர்கள் உங்களைக் கூடிநின்று வரவேற்பார்கள்."

கறுப்பிக்கடவ கிராமத்திலிருந்து அழகாய், அரையைச்சுற்றிய பெரிய கொய்யகம் வைத்த கண்ணைப் பறிக்கும் பூப்போட்ட வண்ணச் சேலை அணிந்து, கண்ணாடி ஆபரணம் அணிந்து அலங்கரித்து ஆயிலடிக்கு வந்ததே என்னோடு சேர்ந்து கல்யாணப்பத்திரிகை வைக்கவே. ஏமாற்றம் முகங்களில் வெளிச்சமாய்ப் பிரகாசித்தது.
வெள்ளித் தட்டத்தில் கல்யாணப் பத்திரங்கள். எடுக்கக் குனிந்தேன். மேலே குந்தியிருந்த பத்திரம் கண் சிமிட்டியது. உள்ளம் பயப்படவில்லை என்று பதில் சொன்னது. தமிழ் வழமைப்படி தட்டத்தில் வெற்றிலை பழம் பாக்கு வைத்திருந்தேன்.
களுபண்டா 'நானும் வருகிறேன்?" என்று புறப்பட்டார். 'தேவை இல்லை. தமிழ் முறையில் அப்படி இல்லை" என்று சமாளித்துக் கொண்டேன். அந்த மனிதருக்கு எனது வார்த்தைகள் தேவவாக்கு.

'நோநா, நிமாலிடம் காரில் கொண்டு போய் விடச் சொல்லவா?"
'ஓம் வசதியாய் இருக்கும்."

காரில் ஏறினேன். சாரதி களுபண்டாவைப் பார்த்துக் கைகாட்டி விட்டு வாகனத்தைச் செலுத்தினார்.

வாகனம் நயினாமடு இராணுவ முகாம் வாசல் கேற்றில்கெம்பீரமாக நின்றது. ஏறுக்குறைய கால் மைல் நீள அகலம் கொண்ட பாரிய முகாம். என்றும் பச்சையான வெப்ப வலயப் பெருங்காடுகளை வெட்டி வீழ்த்தி அகற்றி அண்மையில் அமைக்கப்பட்டது. சுற்றிவர புலிகள் புகுந்துவிடும் என்ற அச்சத்தில் சிக்காரான பல அடுக்கு முள்ளுக்கம்பி வேலிப் பாதுகாப்பு. ஆங்காங்கு யாவறணை, பாலை, முதிரை, கருங்காலி, வீரை மரங்கள் மட்டும் எஞ்சி நின்று நிழல் கொடுத்தன.
வாசலின் குறக்கே துலா போன்ற நீள மரம். சிவப்பு வெள்ளை தீந்தை பூசியது. உள்ளே செல்ல தடைபோட்டு நின்றது. கேறஓரம் மணல் மூட்டைகள் சுற்றிவர அடுக்கிய காவல் அரண். வழமையில் பிறர் எவர் வந்தாலும் வாகனத்தால் இறக்கி கேள்வி கேட்டு, சந்தேகம் என்றால் உடைகளைத் தட்டிப் பார்த்தே உள்ளே அனுப்புவர். முன்னர் கை எழுத்திடப் போயிருக்கிறேன். கேணல் ரணவீரவிடம் அநுமதி பெறப் போயிருக்கிறேன். தெரிந்து கொண்டும் ஒவ்வொரு தடவையும் சோதனை புரிந்த பின்னரே உள்ளே அனுப்பினர்.

காவல் நிலையத்தில் ஒருவன். இருபத்தைந்து வயதிருக்கும். ஓங்கி வளர்ந்தவன். அவனுக்கு ஏலவே என்னைத் தெரியும். துப்பாக்கியோடு நின்றான். காருள் பின் ஆசனத்தில் இருக்கும் என்னைஅதிசயமாய்ப் பார்த்தான்.
புன்னகை செய்துவிட்டு கூறினேன். 'கல்யாணப் பத்திரம் கொடுக்கப் போகிறேன்."
'தெரியும் நோநா. போகலாம். அத நோநா போஹம லக்சணாய்---இன்று அம்மணி மிக லட்சணம்" என்று கூறிவிட்டு தடைத் துலாக் கயிற்றை இளக்கினான். துலா மெல்ல மெல்ல மேலே எழுந்து வணக்கம் சொல்லி வழியனுப்பியது.
புதிய ஆள் என்றால் இறக்கி ஏற்றி இருப்பான். மனம்  தன்பாட்டில் பேசியது.

ஆயிரம் ஆயிரம் இரகசிய திட்டங்களைச் சுமந்து அமர்ந்தபடி முகாமுள் நகர்ந்து கொண்டிருந்தேன். கண்ணகி மேலும் ஒருமுறை மின்னல் கோலத்தில் தலை காட்டி மறைந்தாள். வெளியே நோக்கினேன். ஆங்காங்கு நீண்ட நீண்ட கட்டிடங்கள். இராணுவ வீரர்களின் வதிவிடங்கள். இராணுவ வீரர்கள் காரை நோக்கி, மகிழ்ச்சியில் கைகளை உயர்த்தி வாழ்த்தியபடி ஓடியோடி வந்து கொண்டிருந்தனர். முந்நூறு பேர்வரை பார்க்கலாம். புன்னகை தவழும் வதனங்கள். சிங்கத்தின் வாரிசுகள். இராணுவ உடையில் உற்சாகமாய்க் காட்சி தந்தனர். வாகனத்தைப் பின்தொடர்ந்து கேணல் ரணவீரவின்  வீடுவரை ஒடி வந்து சேர்ந்தனர்.
வாகனத்தால் இறங்கிய வேளை முழு இராணுவ வீரர்களுமே அண்மையாக நின்றனர். என் அலங்கார கோலத்தில் கண்கள் குத்தி நின்றன.
கேணல்ரணவீரவின் அழகியவீட்டு வாசல். எதிரே ரட்டைச்சிறகுப் பெரிய முதிரைக் கதவு பளபளத்தது. போட்டிக்கோவின் பக்கம் இரண்டும் பிரமாண்டமான கண்ணாடி ஜன்னல்கள். அழகான மென்பச்சை வண்ணத் திரைகள். வாசலின் இரு பக்கமும் அழகான பெரிய சீனப்; பூச்சாடிகள். றோசாச் செடிகளில் தொங்கும் பூக்கொத்துக்களின் இனிய சுகந்தம் வரவேற்புக் கூறியது.

'மேஜர் சிவகாமி நோநா. மிச்சம் சந்தோசம். மிச்சம் சந்தோசம். வாங்க. வாங்க." வீட்டு வாசலில் இராணுவ உடையில் நின்று கேணல் ரணவீர வரவேற்றார். தொப்பி மட்டும் இல்லை. கருமுடி உதிர்ந்த பள பளக்கும் உச்சந்தலை என் கண்களில் குத்தி நின்றது. .உயர்ந்த உறுதியான உடல்வாகு. இராணுவ கேணல் எனும் பெருமை, அகங்காரம், அட்டகாசம் முகத்தில் ஆழமாய்ப் பதிந்திருந்தது. சிறிது நேரம் தொடர்ந்து உடை அலங்கார கோலத்தை விழுங்குவது போல நோக்கினார். கீழ்ப்படிவுள்ள வீரர்கள் எதிரே நிறைந்து நிற்கிறார்கள். அதை மறந்து போனார். முகத்தில் புரியாத குறிகள் ஆட்சி புரிந்தன. என் முன்னே வவுனியாப் பூந்தோட்டம் எழுந்து நின்று புன்னகை செய்து கையசைத்தது.

உள்ளே அழைத்துச் சென்றார். அழகிய பெரிய வரவேற்பறை. நான்கு செம்மஞ்சல் சோபாக்கள். நடுவில் கண்ணாடி ரீபோய். மூலையில் மீன் தொட்டி. சிவப்பு பெரிய கிங்பிஸ்கள் நான்கு ஓயாமல் அசைந்தன. கண்கள் அதில் சிறிது நேரம் லயித்தன.
சுவரில் கேணல் ரணவீரவின் இளமையில் எடுத்த பெரிய புகைப்படம். இராணுவ அதிகார திமிருடன் தோற்றம் தந்தது.
வெள்ளித் தட்டத்தை நீட்டினேன். இரு கைகளாலும் மரியாதையாக வாங்கிக் கண்ணாடி ரீபோயில் பக்குவமாய் வைத்தார். அழகிய கல்யாணப் பத்திரத்தை எடுத்து சோபாவில் அமர்ந்து, கால்களை நீட்டி, சாய்ந்து அமர்ந்தபடி, ஆவலுடன் உரத்து ராகமிழுத்து சிங்களத்தில் வாசிக்கத் தொடங்கினார். வாசிப்பது ஜன்னல் மற்றும் வாசல் ஓரங்களில் தலையை நீட்டியபடி நிற்கும் இராணுவ வீரர்கள் காதுகளில் தேனாக விழுந்தது.
அவர்தம் கால்கள் அருகாமையில் நான். கம்பிவலைப் பொறிக்கூட்டுள் புகுந்த எலி தன்னை மறந்து வெண்ணெய்க் கட்டியை லபெக்லபெக்கென விழுங்கிச் சுவைப்பது போல, கேணல் ரணவீர தன்னை மறந்து வாசிப்பதில் முற்று முழுதாய் மூழ்கி மெய்மறந் திருந்தார். அந்த அரிய சந்தர்ப்பத்தைப் பற்றி ஆயிரம் ஆயிரம் தடவைகள் கண்ணகியாகி ஆராய்ந்திருப்பேன். இது போன்ற பொன்னான சந்தர்ப்பம் வாழ்நாளில் எவருக்கும் அமைவதில்லை. அமைதியாக அவசரப்படாமல் மார்பின் குறுக்கே அமைந்த குங்கும வண்ணக் கூறைச் சேலையை நீக்கி, சட்டை 'பட்டனை' கழற்றி, மார்பகத்தை சிறிது உயர்த்தி, கையை புகுத்தி, பிஸ்ரலை உருவி எடுத்து உச்சியில் படபடவெனமூன்றுதடவைகள் சுட்டேன்.
வவுனியா பூந்தோட்ட முகாமில் என்னை கெடுத்த பைத்தியக்கார நச்சுப் புடையனிலிருந்து குருதி சீறிக்கொண்டிருந்தது. தலை தன்பாட்டில் சரிந்தது. வெஞ்சம் தீர்த்த உள்ளம் இன்னும் குமுறிக் கொண்டிருந்தது. காமுகன் செத்து மடிந்தாலும், புரிந்த வடு மாறாது.

இத்தனை நாள் மௌனம் காத்திருந்து
நாள்நேரம் பார்த்து தவமிருந்து புரிந்த
பச்சைக்குருதி சீறும் இந்தப் பழிவாங்கலை

கிரிசாந்தி தொடக்கம் இசைப்பிரியாவரை
கதற கதறக் கொடுமைப் படுத்தி
பதற பதற குதறியவேளை
கையெடுத்துக் கெஞ்சி நின்று
ஐயகோஆண்டவனேஎன்று ஓலமிட
அழுகுரல்ஓசையதுகேட்டெழுந்த
கருணைமகான் புத்த பெருமான்
கண்ணீர் சொரிந்து சரணம் சொல்ல
வெறி கொண்டு சதுராடி முடிந்து
சாட்சியம் வைக்காமல் கொன்று குவித்த
ராணுவவிசப் புடையன்களுக்கு
அண்ணையின்பெயரில் இப்பழிவாங்கலை
எச்சரிக்கைப் பரிசாக சமர்ப்பிக்கின்றேன்.

என்னோடு முடிந்து போனகதைஅல்ல இது.
அருந்ததி வழிவந்த தமிழ் மங்கையர்களை
ராணுவவிசர் ஓநாய்களிடமிருந்து காப்பாற்ற
வீரமிகு கண்ணகிகள் பலர் தோன்றவேண்டும்.

அண்ணையின்பாசறையில் புடம்போட்டு எழுந்த
இந்தச்சிவகாமி என்றும்தவறுபுரியமாட்டாள்.
அண்ணையின்நாமத்துக்கு தாழ்மை சுமந்துவராள்.
பேரும் புகழும் பெருமையுந்தான் ஏந்திவருவாள்.

வெளியே வாயில் ஓரம் சாளர ஓரம்
நிறைந்து நின்றராணுவவீரர்கள்
வெடிஓசைகேட்டு பதைத்து எழுந்து
உள்ளே தாவிப் பாய்ந்து ஓடிவந்தனர்.

எனதுகையில் பிஸ்ரல்.

அச்சத்தில் அலறிப்படைத்து வெளியேறினர்.
தொண்டை கிழிய ஓவென்று ஒப்பாரி வைத்தனர்.
'கொட்டியா, மாத்தையா சுட்டுப் போட்டாள்.
கேணல் மாத்தையா சுட்டுப் போட்டாள்."
காட்டுக் கூய்ச்சல்முகாமைபூகம்பமாய்க் உலுக்கியது.

சிலர் எட்டி எட்டி அழகிய சாளரம் வழியே
தலைசரிந்து பச்சைக் குருதி கொட்டும்
கேணல்ரணவீரவைகூர்ந்து கூர்ந்து பார்த்தனர்.

கோபதாபம் கொஞ்சந் தன்னும் தணியவில்லை.
பிஸ்ரலை நீட்டிநின்று சுவரில் தொங்கிய
கேணல்ரணவீரவின் போட்டோவை நோக்கி
'என்னைக் கற்பழித்த நச்சுப் புடையனே!
கண்ணகி வழிவந்த தமிழ்மங்கை நான்.
கற்பு எங்கள் கலாச்சாரத்தின் உயிர்." எனவிழித்து
குறிபார்த்துப் படபட வெனச் சுட்டேன்.
பால்வண்ணபளிங்கு நிலத்தில்
உடைந்து விழுந்த கண்ணாடித் துண்டங்கள்
கணீர்கணீரென ஒலி எழுப்பின.

எலித் தலையன் சாஜன் நந்தசேன,
நரிகண்டு வெருண்ட முயல் போலத்
தாவித் தாவிச் சென்றான் முகாமுக்கு.
றைபிளுடன் பாய்ந்து பாய்ந்து திரும்பினான்.
தமிழர்களின் பச்சைக் குருதியைக் குடித்துச்
சரித்திரத்தில் பதிவாகிய மகா கொலைஞன்.
மட்டக்களப்பு சத்துருக் கொண்டான் கிராமத்து
பெண்கள், குழந்தைகள், வயோதிபர் அனைவரையும்
காரிருள் படரும்வேளை சுற்றி வளைத்து
அழுதுகுளற அடிபோட்டு இழுத்துச் சென்று,
முகாம் விளையாட்டு மைதானத்தைச் சுற்றி
வட்டமாக நிரைக்கு நிறுத்தி வைத்து,
இரவிரவாக வெட்டிக் கொத்திக் கொன்று
குவித்து செங்குருதியில் குளித்து வெறியாடியவன்---
செப்டம்ர் 9, 1990.

இரக்கமில்லாத கருங்கல் நெஞ்சன் முழங்கினான்.
'கொட்டியா, கொட்டியா சுட்டுப் போட்டாள்.
சிவகாமி கொட்டியா சுட்டுப் போட்டாள்."
வானம் நோக்கித் தொடர்ந்து சுட்டபடி,
மானை வேட்டையாடும் ஒநாய் போலத்
தாவித் தாவி வந்தான்.

முகாம் வாயிலில் காவல் புரிந்த சிப்பாய்கள்
திகில் கொண்டு தானியங்கி துப்பாக்கிகள் ஏந்தி
ஆகாயத்தில் தொடர்ந்து படபட வெனச் சுட்டனர்.
அருகேவனத்துள் பதுங்கியிருந்து துயின்ற விலங்குகள்
அஞ்சி நடுங்கிவெருண்டுஎழுந்து ஓடத்தொடங்கின.
குளத்தில் விழுந்து எழுந்து இரைதேடிய புள்ளினங்கள்
பயந்து அலறிக் கீச்சிட்டுக் கத்திப் பறந்தன.
அவற்றின் நீள்சுரம் நீண்டு நீண்டு ஒலித்தது.

'கொல்லாதே! கொல்லாதே! உயிரோடு பிடியவளை.
நந்தசேன கொல்லாதே! உயிரோடு பிடியவளை!"
ஆவேசக் குரல்கள் ஒன்றுடன் மற்றது
திரண்டுஉருண்டுஉரத்து ஒலித்தன.

'நந்தசேன, சுடாதே. சிவகாமியை உயிரோடு பிடி.
எல்லோருக்கும் நல்ல லட்சண நோநா விருந்து.
முள்ளிவாய்க்கால் போர்க் களத்துக்குப் பிறகு
சோக்கான விருந்து தேடி வந்திருக்குது.
அது மாதிரி எல்லோரும் பண்ணலாம்.
சாட்சியம் வைக்காமல் பின்னர் சுட்டுக்கொல்லலாம்.
கொல்லாதே நந்தசேனா! வாய்ப்பைப் பாழாக்காதே."
போர் முடிவில் சரணாகதி அடைந்த
இளம் பெண்களை கௌவிச்சப்பி ருசிகண்ட
மீசை வைத்த உயர்ந்த அரக்கன்
கருந் தடியன் கோப்போரல் பெர்னான்டோ
ஊளையிட்ட பின்னர் மேலுந் தொடர்ந்தான்:
';லக்சன சிவகாமி ஆயிலடி வந்தநாள் தொடக்கம்
அவளை அள்ளி யணைத்துக் கடித்துக் குதற
நாள்நேரம் பார்த்து காத்துக் கிடக்கிறேன்.
எனக்குத்தான் முதல் சதுர் ஆட்டம்.

ஆர்ப்பரிக்கும் வாயிலில் கண்கள் பதிந்தன.
ஆத்திரம் சுமந்த ராணுவ சிங்கங்கள்
முண்டி யடித்து வரவேற் பறைக்குள்
காலணிக் கால்களை ஓசையெழ வைத்து
பூகம்ப அலையாய்ப் புரண்டு வந்தனர்.

காமுகன் கோப்போரல் பெர்ணான்டோதான்
திருமணக் கோலத்தில்ஆடைஅணிந்த
ராசநாச்சியார் வம்ச வழிவழி வந்த
நீள் கூந்தலில் மல்லிகை வாசம்வீசும்
வாழைபோல் வளர்ந்த என் பொன்மேனியில்---
காமபோதை கக்கும் கண் மடல்களை
அகலவிரித்த ஆந்தை முழிகளால்
விறைத்துப் பார்த்து ஆவல் குமுற---
முதலில் கருங்கைபதித்தான்.

முன்னரே,
போர் முடிவில் நாவல் மரத்தின் கீழ்
புதைத்து வைத்து எடுத்து வந்த
சைனைட் குப்பியை சப்பி முடிந்து,
சைனைட் வெட்டிய நாக்கின் குருதிவழியே
என் மரணம் மின்னல் வேகத்தில்
சீறிப் பாய்ந்து பரந்து கொண்டிருந்தது.

அந்த தற்கொலைப் போரின் முடிவில்
அகிலம் பேசும் தானைத் தலைவன்
அண்ணை பூரண ராணுவ உடையில்
புலிக் கொடி பட்டொளி பறக்க
புன்னகை பூத்த திருக் கோலத்தில்
புனித தரிசனம் தந்து வாழ்த்தினார்.

சபதம் நிறைவேறி வீரகாவியம் முடிந்து
பேரானந்தம் நிறைந்து பொலிந்து நிற்க,
என் ஆத்மா
தேவலோக பிரயாணத்தை ஆரம்பித்தது.

நிறைவு பெறுகின்றது.



                     நாவல்

வருகிறது! விரைவில்

‘வன்னி நாவல் ஆசிரியர்
கதிர் பாலசுந்தரத்தின்
போர்க்கால நாவல்

மறைவில் ஐந்து முகங்கள்.

மழை கண்டு மகிழ்ந் தெழுந்த
காளான்களாக முளைத் தெழுந்தன, 
தமிழ் ஈழம் தலைமீது தாங்கிவர
தம்பிகளின் மூன்றுபத்து இயக்கங்கள்.

வான்புகழ வாயார வாழ்த்தி
வாழ்விடம் மறைவிடம் மேலும்
பொருள் பண்டம் பொற்கொடி
சோத்துப் பார்சல் வழங்கி
போர்க் களம் அனுப்பினர்
தமிழ் மண்ணின் மைந்தர்.

ஐயகோ! தங்கத் தம்பிகள் சிலர்
போன திசை மாறிப் புரிந்த
சகோதர சங்கார சதுர் வேள்வி
உரத்த குரலில் பேசும் நாவல்.

அதற்கும் அப்பால்,
வாழ்வின் இன்பங்கள் வாய்ப்புகள் துறந்து
தமிழ்ஈழம் விரைந்து எழுந்து தாவிவர
ஆண்டுகள் மூபத்து களத்தில்நின்று போராடிய
மாண்புமிகு போராளிகள்தம் மேன்மை பேசும்
நாவல் மறைவில் ஐந்து முகங்கள்.

சுருதி blog இல்
Shuruthy.blogspot.com.au
தொடர் விருந்தளிக்க
விரைவில் வருகின்றது.






No comments:

Post a Comment