அதிகாரம் 29 - கரடி குதறிய போராளி
சூரியன் உச்சிக்கு
வந்து விட்டது. இப்பொழுதுதான் கண் விழித்தேன்.
குட்டிப்
போட்டிக்கோவில் நின்றுவீதியைப் பார்த்தேன். புதிதாக நட்ட கொன்கிறீட் மின்சார கம்பம். அதில் ஏறியிருந்த ஒருவன் என்னைத் திரும்பிப் பார்த்துத் தலை ஆட்டினான். எனது
வீட்டுக்கு மின்சாரஇணைப்பு வழங்க வயர்கள் பொருத்திக் கொண்டிருந்தான்.
மாலைஐந்து மணி.
சுசீலா அக்கா,
மணி அண்ணை வந்தார்கள். ஏதோ முக்கிய அலுவல் பேச வந்திருப்பதாய்ப் பட்டது.
களுபண்டா, தாய், சகோதரியுடன் சுற்றுலாச் சென்றமை மனதில் கசப்பை
ஏற்படுத்தியிருந்தது. காட்டிக் கொள்ளாமல், மௌனமாய்ச் சோபாவில் அமர்ந்தார்கள். உள்மனதின் குறுகுறுப்புப் புரிந்தது. புரியாதது போல அன்பாய்ப் பேசினேன்.
பிள்ளைகள் கதை கேட்க
வருகிற வேளை. அவர்களோடு சேர்த்து இவர்களுக்கும் கதை கூறிச்
சாந்தப்படுத்த விரும்பினேன். உண்மை உணர்ந்து அமைதி
அடைவார்கள் என்று எண்ணினேன். அவர்கள் மனச்சுமையைகுறைக்க நிரம்ப வாய்ப்பிருந்தது.
●
‘அன்ரி வணக்கம்."
‘வணக்கம் பிள்ளைகள்.
உங்கள் வரவை எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். உங்களோடு
சேர இன்னும் இருவர் இன்று
கதைகேட்கப் போகிறார்கள்.
இன்றைக்கு இரண்டு கதைகள்"
பிள்ளைகள்
புன்முறுவல் மலர இருவரையும் நோக்கினர்.
மணி அண்ணை, சுசீலா அக்காவை அவதானித்தேன்.
முகத்தில் சலனம்
இல்லை.
சோபாவில் அமர இடம்
போதாது. புரிந்து கொண்டார்கள். தரையில் என் முன்னே
சம்மாணமிட்டு அமர்ந்தார்கள். புத்திசாலிப்பிள்ளைகள்.
இன்றைக்கு நான்
வித்தியாசமான கதை சொல்லப் போகிறேன்.
பிள்ளைகள் உடம்புகளை
நிமிர்த்தி, கண்மடல்களை விரித்து என்னைப் பார்த்தார்கள்.
எனது நேற்றைய
சுற்றுலாப் பற்றிக் கூறப் போகிறேன். பிள்ளைகள் கைதட்டித் தலை ஆட்டினார்கள்.
'அன்ரி,அண்ணையின்வாழ்மனை பார்த்தீர்களா?"
‘தங்கன், நிபந்தனையை மறந்து போனாயா? கேள்விகள் கேட்கலாம். கதைமுடிவில்."
‘மன்னியுங்கள்
அன்ரி."
●
நேற்றைக்கு அதிகாலை.
ஐந்து மணி.
களுபண்டாவின் நண்பர்
நிமால் கார் கொண்டு வந்தார். நீல பி.எம்.டபிள்யூ. களுபண்டாவின்
தாயார், சகோதரி பின் ஆசனத்தில் அமர்ந்திருந்தனர்.
தங்கை முத்துவின்
அருகில் அமர்ந்து கடைக் கண்ணால் கவனித்தேன்.
ஏதோ மின்சாரக்
கவர்ச்சி அவளிடம் குந்தியிருந்தது. சிவப்பு பாவாடை. நீலச் சட்டை.
கழுத்தில் வெள்ளை பிளாஸ்டிக் மணிமாலை. காதில் பென்னாம்பெரிய ஜிப்சி. தங்கமாய்த்
தெரியவில்லை. காலில் பாட்டா றப்பர் செருப்பு. நீண்ட தலை
முடியை பெரிய கொண்டையாக போட்டிருந்தாள்.
தாய் பேபிநோநா
வெள்ளைச் சேலை சட்டை. முற்பக்க இடுப்பைச் சுற்றிய பெரிய
கொய்யகம். கொண்டை. மகளிலும் கொஞ்சம் உயரம். கொஞ்சம்
வெள்ளை. முத்துவைப் போலக்
கவர்ச்சியான முகம். நகைநட்டு
இல்லை.
முகத்தைத் திருப்பிச்
சிரித்தேன். பதிலுக்குச் சிரித்தார். அசட்டுத்தனமாக.
கார் கனகராயன்குள
வீதி வழியாக மேற்குப் பக்கம் பயணித்தது. ஏ9 வீதியில் வடக்கு நோக்கித் திரும்ப வேண்டும். நெடுஞ்சாலையில் மிதந்து
திரும்ப தருணம் பார்த்து நின்றது. இன்னும் விடியவில்லை. வாகனங்களின் ஓசை காதை அடைத்தது.
ஏ9 நெடுஞ்சாலையை நிறைத்து வாகனங்கள்.
நூற்றுக்கணக்கில். மழை வரப்போதை உணர்ந்து புற்றை விட்டுப் புறப்பட்ட எறும்புத் தொடராக நகர்ந்து கொண்டிருந்தன. தென் இலங்கை வாகனங்கள். வடக்கே விடுதலைப் புலிகளின்தலைநகராக முன்னர் கொடி கட்டிப் பறந்த கிளிநொச்சி நகரத்துக்கு வழி விடு,
வழி விடு என்று பறந்து கொண்டிருந்தன.
ஆடம்பர பஸ்வண்டிகள்,
லொறிகள், கார்கள், வான்கள், ட்ரக்டர்கள்.
வாகனங்கள் நிறைந்து வழியச் சனங்கள்----சிங்கள சுற்றுலாப் பயணிகள்.
வயலில் உழுவதற்கான
ட்ரக்டர்கள், பின்னே பலகைப் பெட்டிகளை இழுத்துச் சென்றன. பெட்டிகள் நிறைந்த
சுற்றுலாச்சனம். பெண்கள், ஆண்கள்,
முதியவர்கள், மாணவர்கள், குழந்தைகள். பெட்டிகளில் பிரயாணித்தவர்கள் வன்னி தென் எல்லை பகுதிகளில் உள்ள சிங்களக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.
ஒவ்வொருவரும் கையில்
ஒவ்வொரு சிறிய பொலிதீன் பை. அதனுள் அவர்களின் உடைமைகள்---மாற்றுடைகள்.
ஏனைய வாகனங்கள் தென்
இலங்கைச் சிங்கள மக்களைச்
சுமந்து சென்றன. வாகனங்களில் வேறு
பாடுகள் தெரிந்தன. மற்றும்படி மக்கள் உடைநடை கோலங்கள் எல்லாம் ஒரே
வகை. அவர்களும் கையில் சின்னஞ் சிறிய பொலித்தீன்
பையுடன்தான் பயணித்தனர்.
பாடசாலைகள் மாணவர்களை
சீருடையில் ஆடம்பர பஸ் வண்டிகளில் அழைத்து வந்தன.
முப்பது ஆண்டு யுத்த
களத்தை பார்த்துவிட வேண்டும் என்ற உக்கிர வெறி கொண்ட
சுற்றுலாப் பயணிகள்.
●
நிமாலின் நீல
பி.எம்.டபிள்யூ. ஏ9
நெடுஞ்சாலையுள் புகுந்து
திரும்ப வாய்ப்பை எதிர்பர்த்து
மணித்தியாலக் கணக்காக தாமதித்து நின்றது. வாகனங்கள் தொடர்
வண்டிகளாகப் போய்க் கொண்டிருந்தன.
புதிய உலகுள் நுழைந்த
அதிசயம். கால் நூற்றாண்டு காலம் என் கால்பட்டு
அநுபவப்பட்ட நெடுஞ்சாலை. ஜெயசிக்குறு போர் வேளை எனது அணியை
வழிநடத்திப் பத்தொன்பது மாதங்கள் போர் புரிந்த களம். தமிழ்
ஈழ போர் வரலாற்றில் மிக நீண்ட காலம் நடந்த இரண்டு போர்களில்
ஒன்று. 1997-1999.
ஏ9 நெடுஞ்சாலை விடுதலைப் புலிகளின் ஆட்சிக்குள் அமைந்த வன்னி நிலப் பரப்பை ஊடறுத்து கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்வது. அரச படைகளுக்குத் தேவையான பொருட்களை நெடுஞ்சாலை வழியே யாழ்ப்பாண
இராணுவமுகாம்களுக்கு எடுத்துச் செல்ல முடியாமல் அரசு தவித்தது. அத்தோடு விடுதலைப் புலிகளின் கிளிநொச்சி ஆதிக்கத்தை ஒழிக்கவும்
திட்டம் தீட்டியது. திட்டத்தை நிறைவேற்ற ஜெயசிக்குறு
போரை ஆரம்பித்தது. ஜெயசிக்குறு என்றால் வெற்றி நிட்சயம்.
புளியங்குளம்
தொடக்கம் மான்குளம்வரை நெடுஞ்சாலையின் இரு பக்கமும் உள்ள காடு குடியிருப்புகளை
புல்டோசரால் இடித்து அகற்றி வீதிக்குச் சமாந்தரமாக காவல்
அரண் அமைக்கும் திட்டத்தை, புலிக்குப் பயங்த ராணுவம் முன்னெடுத்தது.
நெடுஞ்சாலையிலிருந்து கிட்டத்தட்ட 400 மீட்டர் தூரத்தில், வீதிக்குச்சமாந்தரமாக
உயர்ந்த பாரிய மண் அரண். 400
மீற்றருக்கு ஒரு காவல் நிலையம். மூன்று மாத கால எல்லையுள்
நிறைவேற்றும் திட்டம்.
விமானப் படை
உதவியுடன், 53வது டிவிசன் படைக்கு உதவியாக 21, 54, 55, 56வது டிவிசன்கள் களத்தில் போராடின. இன்னும் வழமைக்கு மாறாகக் கடற்படையும் களத்தில் இறங்கியது.
சுப்பர்சோனிக் குண்டு
வீச்சு விமானங்கள், யுத்த ஹெலி கொப்டர்கள், ராங்கிகள், எறிகணை
எந்திரங்கள் சகிதம் பாரிய
எடுப்பில் போரை இராணுவம்
முன்னெடுத்தது.
●
பத்தொன்பது மாதங்கள்
தொடர்ந்து வனத்துள் நின்று
போராடினேன். தமிழ் ஈழ விடுதலைக்காக
நான், எனது அணியினர் ‘ஜெயசிக்குறு’ போர்க்களத்தில் வழங்கிய பங்களிப்பு திகில்கள் இழப்புகள்வீரதீரங்கள் சாதனைகள் பலநிறைந்து மலிந்தது.
எமது அணிக்கான
போர்க்களம் புளியங்குளத்திலிருந்து கனகராயன்குளம் வரையான
ஏழரை மைல் பிரதேசம். ஏ9
நெடுஞ்சாலைக்கு சமாந்தரமாக கிழக்கே உள்ள 400 மீட்டர் வரை அகலமான காட்டை வெட்டி
ராணுவம் அரண் அமைக்காமல் போராடுவது. ஏலவே அந்த அரண் ஓமந்தை யிலிருந்து
புளியங்குளம்வரை அமைத்தாயிற்று.
160 போராளிகளுடன்
களம் இறங்கினேன். போராளிகள் வீரசொர்க்கம் அடைவது
தொடர்ந்து நடந்தது. வெற்றிடத்தை நிரப்பப் புதிய போராளி வந்து
கொண்டிருந்தாள்.
ஏ9 நெடுஞ்சாலைக்குச் சமாந்தரமாக எமது காவல்
அரண்கள். வனத்தின் உள்ளே ஏறக்குறைய கால் மைல் தூரத்தில்.
வனவிலங்குகள் நிறைந்து வாழும் வனம். சொத்திப் பெட்டைக் கரடி, விசப்பாம்புகள், நச்சு திருநீலகண்டம் அட்டை பற்றி எச்சரித்தனர். மருந்துக்கும் குடியிருப்புகள் கிடையாது. தண்ணீர் வசதி
இல்லை. கிழமைக்குஒருநாள் போராளிகளுக்கு விடுதலை.
குளத்தைத் தேடிச் சென்று நீராட வேண்டும். உடைகளை துவைக்க
வேண்டும். சிலகாவல் மையத்தவர்கள் மூன்று மைல்கள் வரை நடக்க வேண்டும். குடி தண்ணீர், உணவு,
மருந்து,
ஆயுதம்
விநியோகிப்பவர்கள் இரண்டு தினங்களுக்கு ஒரு தடவை வருவார்கள்.
தொடர்ந்து மழை கொட்டினால் எதுவும் கிரமமாக வராது. உணவுப்
பங்கீடு வராவிட்டால் அவசரத்துக்குச் சமைக்க முடியாது.
பகலில் சமைத்தால் புகை வனத்தின் மேல் எழுகை செய்யும். அடையாளம்
அறிந்து இராணுவம் செல் அடிக்கும். இரவில் சமைத்தால்
வெளிச்சம் காட்டிக் கொடுக்கும். இராணுவம் தவழ்ந்து தவழ்ந்து
அருகில் வந்து தானியங்கித் துப்பாக்கியால் சுட்டுப்
பொசுக்கும். பரந்தன் தேவகி
மரணித்தது அப்படி ஒரு தாக்குதலில்
தான். உணவு விநியோகம் நின்று போனால் பிஸ்கற் கடித்து மழை நீர் குடித்து
சமாளிக்க வேண்டும்.
420 யாருக்கு ஒரு
காவல் அரண் நிறுவினோம். முப்பத்திரண்டு அரண்கள். மண் சுவர் காவல் மையங்கள்.
மேற்பகுதியில் மண்மூட்டைகள். சில மரங்களில் அமைந்த பறண்கள்.
மேற்பகுதி, பக்கங்கள்
மரத்தாலானவை.
ஒரு காவல்
மையத்திலிருந்து மற்றதற்குப் போகப் பாதை இல்லை. செடிகொடிகள்
முட்பற்றைகள் மரங்கள் அடர்ந்து நிறைந்த பிரதேசம்.
தவழ்ந்து தவழ்ந்து
நகர்ந்து நெடுஞ்சாலையைக் காவல் செய்யும் கடமை. அதே வேளை
இராணுவமும் எம்மை நோக்கி
தவழ்ந்து தவழ்ந்து நகர்ந்து
கொண்டிருக்கும்.
வனத்துள்
முப்பதடிக்கு அப்பால் என்ன நடக்கிறது? கண்ணுக்குத் தெரியாது. இருட்டினால் பேசத் தேவை யில்லை. கட்டி இருளுள். கைதடவி வாழும் வாழ்க்கை. காலில் ஊர்வது பாம்பா, கழுத்தில் பிடிப்பது தோழியா கரடியா என்பது தெரியாது.
நெடுஞ்சாலை
நீளத்துக்கு புல்டோசர்கள், யுத்த
ராங்கிகள், ரக்குகள், ஆயுதம் தாங்கிய இராணுவம்---அரண் அமைப்பவர்களுக்குக்
காவல்.
முல்லைத்தீவு
முகாமைக் கைப்பற்றிய வேளை கிடைத்த ஏராளம் ஆயுதங்களைத்
தாராளமாய்ப் பாவித்தோம். ‘கே.பி.’
அனுப்பிய ஆயுதங்கள் வந்து சேர்ந்தன.
பத்தொன்பது மாதங்கள் ஒரே கோர்வை வெடி ஓசை. சில நாட்களில் இரண்டு
மூன்று மணிநேரம் தொடர்ந்து துப்பாக்கிகள், சோனாவாரியாக மழை கொட்டுவது போல குண்டுகள் பொழியும். இராணுவம் தொடராகத் துப்பாக்கியால் சுடும். இடிமுழக்கம் காதடைக்கும். மோட்டார் குண்டுகள் பறந்து வந்து விழும். வனம் அதிரும்.
மரக்கொப்புகள் முறிந்து முறிந்து விழும். காயப்பட்டவர்
மரணித்த செய்திகள் பறந்து
வரும்.
ஆர்.பி.ஜி. கிறனேட்
கொண்டு புல்டோசர், ராங்கிகள்,
ரக்குகளை தாக்கினோம். பாசுகி ஆர்.பி.ஜி.
கொண்டு யுத்தராங்கிகள், மரங்களைப்
புரட்டும் புல்டோசர்களை நாசம் செய்வதில் எதிரிக்குச்
சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தாள். நல்லூரைச் சேர்ந்த பாசுகி யாழ். இந்து மகளிர் கல்லூரியில் ஏ.எல். வகுப்பில் படித்துக்கொண்டிருந்த வேளை அமைப்பில் சேர்ந்தவள். தந்தை நிர்வாக சேவை அரச அலுவலர். அக்காமார் ரண்டு பேர்
டாக்டர்கள். பத்து றாத்தல் ஆர்.பி.ஜி. ஏவுபொறியை காவியபடி
காடு எவ்லைவரை தவழ்ந்து தவழந்து சென்று பன்னிரண்டு
புல்டோசர்கள், ஆறு ராங்கிகளை அழித்தவள். யுத்த ராங்கி ஒன்றைத்
தகர்த்துவிட்டுத் தவழ்ந்து தவழ்ந்து திரும்பும் வேளை, மோட்டார் குண்டுச் சன்னம் தாக்க, வீர காவியம்
முடிந்து வீர சொர்க்கம் எய்தினாள். சடலத்தை புதுக்குடி யிருப்புக்கு
எடுத்துச் சென்றேன். அண்ணை பாசுகியின் மேனியில் றோசாப் பூவளையம்
வைத்து, மரியாதை செய்து லெப்ரினன் தரம் பதவி வழங்கிக் கௌரவித்தார்.
இராணுவத்தின்
எதிர்த்தாக்குதலில் எனது அணியில் 45
பேர் வீரசுவர்க்கம் எய்தினர். சிவந்தி மட்டும் வன
விலங்கின் கொடுமைக்கு இரையாகினாள். வரணி மஹா
வித்தியாலயத்தில் ஓ.எல். படிக்கும் வேளை இயக்கத்தில் சேர்ந்தவள்
சிவந்தி;. எந்த நேரமும் சிரித்தபடி பேசுவாள். மூன்று வருட போர்
அனுபவம். காவல் பரண் கிழட்டுச் சொத்தி வீரை மரத்தில்.
நாலடி உயரத்தில். நள்ளிரவுவேளை.குறட்டைவிட்டு நித்திரை.
உலுவிந்தம் பழக்
காலம். கரடிக்கு மிகப் பிடித்த பழம். அருகே ஒரு மரத்தில்
உலுவிந்தம் பழக்குலைகள். அதைத் தேடி வந்த வெஞ்சம் சுமந்து
அலையும் சொத்திப் பெட்டைக் கரடிக்கு குறட்டைச் சத்தம்
கேட்டது. மூக்கை உறிஞ்சியது. கீழே நின்று தலையை நிமிர்த்தி என்ன
மனித வாடை என்று பார்த்தது. ஆத்திரம் எழுந்து அலை மோதியது.
மரத்தில் ஏறிச் சிவந்தியை கழுத்தில் கௌவி இழுத்து நிலத்தில்
விழுத்தியது. சிவந்தி கத்தும் ஒசை கேட்டுக் கண்விழித்த
விசாழினி துப்பாக்கியை எடுத்தாள். ரோச் வேலை செய்ய மறுத்தது.
கட்டி இருள். எங்கே சுடுவது என்று தெரியவில்லை. ஆகாயத்தில் படபடவெனச் சுட்டாள்.சூட்டுச் சத்தம் கரடியின் ஆத்திரத்தை அதிகரித்தது. சிவந்தியின் தொண்டையைக் கௌவிக் கிழித்துவிட்டு கண்களைத் தோண்டிக் கொண்டு போனது.
காட்டுப் பகுதியில்
தங்கிப் போராடுவது திகில் நிறைந்தது. கொடிய விலங்கோடு; போராடும் வாழ்வு. பாவனா எதற்கும் துணிந்தவள்.
தவழ்ந்து தவழ்ந்து எல்லை வரை சென்று சினைப்பர் றைபிளால் சுடுவதில் பலே கெட்டிக்காரி. மாதம் ஐந்தாறு இராணுவத்தினரையாவது
சரிக்காமல் விடமாட்டாள். யுத்த ராங்கிக்குள் பாதுகாப்பாக அமர்ந்திருந்து போரை
வழிநடத்தினார் லெப்ரினன் கேணல் நிலந்தா லக்மால் சிறீமான.
பாவனா வைத்த குறி தவறவில்லை. மாபெரும் சாதனை. சுதுமலை
தந்த வீராங்கனை. கொக்குவில் இந்துக் கல்லூரியில்
படித்தவள். பெரிய வயதில்லை. பதினெட்டு.பெரிய உயரம் என்றில்லை. மெலிந்த தேகம்.
கூரிய கதை பேசும் கண்கள். அவளின் இரண்டு சகோதரிகள்
போர்க்களத்தில். காவல் அரணைச் சுற்றிப் புல்பூண்டு; வளர்ந்திருந்தது. பாம்பு பூச்சி வரும் என்று புல்லுச் சத்தகத்தால்---கத்தி---புல் வெட்டினாள்.
பாம்பில் கத்தி பட்டிருக்க வேணும். கொத்தியது. வலது சுட்டு
விரல் நுணியில். தாமதிக்கவில்லை. அருகே நட்டுக்கொண்டு நின்ற
பட்ட வேலமரக்கட்டையில் விரலை வைத்து சத்தகத்தால் ஒரே வெட்டில் துண்டித்தாள்.
இரத்தம் சீறிப் பாய்ந்தது. விரலைத் துண்டித்த படியால் உயிர் பிழைத்தாள். அல்லாவிட்டால் பாவனாவை காட்டுக்கு வெளியே கொண்டு வர முன்னரே மரணித்திருப்பாள். கூடவிருந்தவர்கள் மயங்கிப் போன பாம்பைப்பிடித்து கழுத்தில் சுருக்குப்
போட்டு காவல் அரண் வாசல் மரத்தில் தொங்கவிட்டனர். ஐந்தரை அடி
நீளம். முற்றிவிiளைந்த முத்திரைப் புடையன்.
போர் முடிந்த வேளை,
புளியங்குளம் தொடக்கம் மான்குளம் வரை நெடுஞ்சாலைக்குச் சமாந்தரமாக காவல் அரண் அமைக்கும் இராணுவத்தின் திட்டம் தோல்வியில் நிறைவேறியது.
ஸ்ரீலங்கா அரசுக்கு பெரும் அவமானம். இராட்சத பேரழிவு. 3600
இராணுவத்தினர் கொல்லப் பட்டனர். 7800 பேர் காயமடைந்தனர். ஓமந்தை தொடக்கம் மான்குளம் வரையான பிரதேசத்தில் வீதி ஓரங்களில் இராணுவத்தின் சிதைக்கப்பட்ட யுத்த ராங்கிகள் முப்பத்திரண்டு காணப்பட்டன. புல்டோசர்கள் வாகனங்கள்
ஏராளம் சிதைந்து காணப்பட்டன.
விடுதலைப் புலிகள்
தரப்பிலும் பெருஞ் சேதம். 2146 போராளிகள்
வீரமரணம் எய்தினர். அவர்களுள் 211
பேர் பெண் போராளிகள்.
●
மீண்டும்
சுற்றுலாவுக்கு வருகிறேன்.
2009
முள்ளிவாய்க்கால் போர்க்களத்துக்குப் பின்னர், வன்னி உலகிலேயே மிக பிரபல்ய சுற்றுலாத் தலமாகியுள்ளது.
எங்கள் வாகனம் ஏ9 நெடுஞ்சாலைக்குள் நுழைய முடியாமல் திணறியது. செல்லும் வாகனங்கள் எல்லாம் அண்ணை வாழ்ந்த தரைகீழ் மாளிகையைப் பார்ப்பதையே முதன் நோக்கமாகக் கொண்டு விடுவிடென்று விரைந்தன. ஏனைய யுத்த அடையாளங்களை அவதானிப்பதில் அத்தனை ஆர்வம் காட்டவில்லை.
பிரயாணிப்பவர்கள்
அநேகம் பேரின் புத்திரர்கள், அண்ணன்,
தம்பி, உறவினர்கள் நண்பர்கள் போராடிய மூன்று தசாப்த போர்க்களம். மொத்த இராணுவ இழப்பு 22,937 போர் வீரர். அதில் இருபதினாயிரம் வரையானவர்கள் மடிந்து மறைந்து போன வன்னிப் போர்க்களம். பார்த்துவிட வேண்டும் என்ற வெறி தலைக்கேறிய நிலையில் பயணித்தனர்.
ஒருவாறு எமது வாகனம்
ஏ9 நெடுஞ்சாலையில் புகுந்து விரைந்தது.
~~~~ இன்னும் சில அதிகாரங்கள்...
No comments:
Post a Comment