Monday, 18 May 2015

வன்னி நாவல் - கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 30 - பாதாள மாளிகை

9 நெடுஞ்சாலையில் எமது வாகனத்தின் முன்னும் பின்னும் சுற்றுலா வாகனங்கள். ஆதியும் தெரியவில்லை, அந்தமும் தெரியவில்லை.

சிங்கள மக்களை கவர்ந்த முதலாவது காட்சி. கிளிநொச்சி. ராட்சத நீர்தாங்கி--வாட்டர் ராங்.

கிளிநொச்சி நகருக்கு குடிநீர் வழங்கியது. தமிழ் ஈழ இறுதி யுத்த வேளை. வன்னி நிலப்பரப்பில் முன்னேறும் இராணுவத்துக்குப் பயன்படாமல் செய்ய, மேலிடத்துக் கட்டளையின் படி நானும் எனது அணியினரும் குண்டுவைத்து நீர் தாங்ககியின் தாங்குதூண்களையும் தகர்த்துச் சரித்தோம்.

பிரமாண்ட ராட்சத ரூபம். தரையில் சரிந்து கிடந்து காட்சி தருகிறது. இராணுவம் அருங் காட்சிப் பொருளாய் பாதுகாத்துப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது. அதனைச் சுற்றி கம்பி வேலி அருகில் சென்று பார்க்கச் செல்பவர்களுக்கு மாபிள்நடைபதை. இராணுவ வீரன் சீருடையில் நின்று வெங்கலக் குரலில் பேசுகிறான். தண்ணீர் தாங்கியின் வரலாற்றைச் சிங்களத்தில் விளக்குகிறான். சனம் முண்டியடித்து வாயைப் பிளந்து நின்று தலையை நீட்டி அவதானிக்கிறது. அவர்கள் புலன்கள் யுத்த கோரத்துள் புதைந்து மறைந்து நிற்கின்றன.

 தண்ணீர் தாங்கியின் அருகே யுத்த ஞாபகப் பரிசுப் பொருள் விற்பனை நிலையம். அருகே தேநீர்க் கடை. இராணுவம் நடத்துகிறது. முதியவர் சிலர் நின்ற நிலையில் கண்ணாடித் தம்ளரில் தேநீர் அருந்துகின்றனர்.
வீதி ஓரத்தில் தற்காலிக கடைகள். காய்கறி, உடன் மீன், குளிர்பானம் இன்னும் பல பொருட்கள் விற்பனைக்கு. சரிந்த தண்ணீர்த் தாங்கி துலங்கும் படம் அமைந்த வெள்ளை ரி-சேட், ‘கிளிநொச்சி மீண்டெழுகின்றதுஎனும் வாசகம் பொறித்த கறுப்பு ரி- சேட் விற்பனையாகின்றன.

இளைஞர்கள் தொலை பேசிக் கமெராக்கள் கொண்டு படம் எடுத்தனர். தண்ணீர் தாங்கியின் எதிரே, எரிந்துபோன புல்டோசர்’, மற்றும் வாகனங்களின்முன்னேநின்றும் படம் எடுத்தனர்.

யுத்த எச்சங்களைப் பார்த்துவிட வேண்டும் என்ற சிங்களவர் தரப்பில் உள்ள ஆர்வம், தமிழர் தரப்பில் இல்லை. தமிழன் தலை எதனையும் தரிசிக்கவில்லை. சிங்களச் சனம் என்னையும் சிங்களத்தி என்றே கணித்திருக்கும்.
சேலை அணிந்து போயிருந்தால் அடையாளம் காட்டியிருக்கும். கறுப்பு ரவுசர். பெரிய சிவப்புப் ப+ப்போட்ட சட்டை. போனி ரெயில்.
போரின் முன்னர் புலிகளின் தலைநகராய்க் கொடிகட்டிப் பறந்த கிளிநொச்சி வர்த்தக நகருள் வாகனம் புகுந்தது. போருக்கு முந்திய பழைய நிறம் குணம் எதுவும் இல்லை. ஏ9 நெடுஞ்சாலையின் இருபுறமும் ஓங்கி உயர்ந்த புதியநவீனகட்டிடங்கள்.
இலங்கையின் அத்தனை வங்கிகளும், அடுக்கு மாடிகள் அமைத்து குடிவந்துவிட்டன. வாடகைக் கொள்வனவுக்கு வாகனங்கள் வழங்கும் லீசிங் நிறுவனங்கள், சுப்பர் மார்கட்டுகள், உணவகங்கள். போரின் பின்னர் புதிதாக நவீன நகரம் எழுச்சி கண்டிருக்கிறது.

கிளிநொச்சி நகருக்கு அப்பால் மரங்களின் கீழ் வாகனங்கள். மூன்று கல் அடுப்பு வைத்துச் சமைத்துக் கொண்டிருந்தனர். சமயல் சாமான்கள் எல்லாம் சுமந்து வந்திருந்தனர். உலர் உணவு, படுக்கப் பாய், சமயல் பாத்திரம், கத்தி, கோடரி, மண்வெட்டி வைத்திருந்தனர்.
பலர் குளத்துக்குக் குளிக்கப் போய்க் கொண்டிருந்தனர். சிலர் நீராடிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
சமைத்து முடிந்தவர்கள் வட்டமாகக் குந்தியிருந்து, தகரக்கோப்பைகளைக் கையில் ஏந்திச் சாப்பிட்டனர். குத்தரிசிச் சோறு. கருவாட்டுக் குழம்புக் கறி. சிலர் மாலைதீவு மாசு போட்ட கத்தரிகாய் வெள்ளைக் கறியும் சமைத்தனர்.
நிமால் நாம் பிரயாணித்த பி.எம்.டபிள்யூ வாகனத்தை நிதானமாக ஓட்டிக்கொண்டிருந்தார்.

புதுக்குடியிருப்புச் சிறு நகரம். சிங்கள சுற்றுலா பயணிகளின் பிரதான அருங்காட்சி காண் மையம். அங்குதான் அண்ணையின் வாசஸ்தலம், பயிற்சி மைதானம். நீச்சல் குளம்.
புதுக்குடியிருப்பை நண்பகல் அடைந்தோம். கோடை வெயில் கோலோச்சியது. நீலவானம் மிக மிக மேலே காட்சி தந்தது. கதிரவன் கோபத்துடன் பார்த்தான். தேகம் அக்கினியாய் எரிந்தது. அருகே வங்காள விரிகுடா. அங்கிருந்து குளிர்மை சுமந்து வரும் வாயுபகவானை அந்தப் பக்கம் காணவில்லை. கொளுத்தும் அகோரவெயில் சிங்கள சுற்றுலாப் பயணிகளுக்கு உறைக்க வில்லை. போர்க்கள எச்சக் காட்சிகளுள் மெய்மறந் திருந்தனர்.

புலிகளின் பதுங்கு குழிகள் பத்திரமாகப் பேணப்படுகின்றன. இராணுவம் அருங்காட்சியமாக காட்சிப்படுத்துகிறது. காட்சிப்பொருள்களின் பெயர்கள் அழகாக எழுதப்பட்டுள்ளன. பொருட்களை ஒழுங்காக அடுக்கி வைத்து இன்ன பொருள் என்று எழுதி வைத்துள்ளார்கள். அடைமொழி பயங்கரவாதிகள்என்ற பதம் பளிச்செனத் தெரிந்தது.

வாகனம் நகர்ந்தது. அண்ணையின் அபூர்வ மாளிகையிலிருந்து, மிகத்தூரத்தில் தரித்து நின்றது. வியர்க்க வியர்க்க நடந்து சென்றோம். இரண்டு மைல் தூரம். நீளத்துக்குச் சனம். வரிசையாக அல்ல. குவியலாக நகர்ந்தது.
தினம் குறைந்தது நாலாயிரம் சுற்றுலாப் பயணிகள் தரிசிக்கிறார்கள்.
இரண்டு மணி நேரம் காத்து நின்றோம். எரிச்சல் எழுந்தது. சிங்களச் சனம் பத்து பதினைந்து மணித்தியாலம் பொறுமையாக நிற்கும் மனோநிலையில்அமைதியாக நின்றனர்.

அண்ணையின்தரைகீழ்மனையைப்பார்க்க நேரம் வந்தது.

வெளியே சாதாரண விவசாயின்வீடு போலத் தெரிந்தது. ஒடுங்கிய கொன்கிறீற் கீழிறங்கும் படிகள். ஒருவரை ஒருவர் நெருங்கியபடி இறங்கினோம். நான்கடுக்கு மனை. மங்கல் வெளிச்சம். காற்றோட்டம் போதாது. அடிக்கடி சிலரின் இருமல் சத்தம்.
ஒவ்வொரு அறையாக மௌனமாகப் பார்த்தபடி கீழே இறங்கினோம்.
எங்களைச் சுற்றிலும் மனிதர்கள். சிறியவர்கள். முதியவர்கள் பெண்கள், ஆண்கள். பெண் ஒருவள் இடுப்பில் பிள்ளையைச் சுமந்தபடி நின்றாள். திறந்த கண் மூடாமல், ஏக்கம் நிறைந்த ஆச்சரியத்தில் அவதானித்தாள். முதியவர்கள் களைப்படைந்து சுவர்களில் சாய்ந்து நின்றனர்.
நெருங்கி நெளியும் மனிதவாடைமத்தியில் பேய் அமைதி.
ஆலோசனை மண்டபம். இராணுவ உடையில் ஒருவன். சிங்களத்தில் விளக்கமளித்துக் கொண்டு நின்றான். வார்த்தைகள் சுவர்களில் மோதி எதிரொலித்தன. பார்வையாளர் நட்டகட்டையாக நின்று செவிமடுத்தனர். சொற்கள் தப்பித்தவறி மறைந்து போகாமல் கிரகிக்கும் ஏக்கம் ஆட்கொண்ட மனிதர்கள்.

அண்ணையின் நீச்சல் குளம்.வாயிலில் பயங்கரவாதிகளின் நீச்சல் குளம்என்ற அழகான விளம்பரம் சிங்களம், ஆங்கிலம் இரண்டிலும். மிகத் தெளிந்த நீரைக் கொண்ட பெரிய குளம். நீலத்தரைப்பகுதி கண்களைப் பறித்தது.

நிமால் வாகனத்தைப் புதுக்குடியிருப்பு தெற்கு நோக்கி செலுத்தினார். ஓரிடத்தில் மக்கள் நடமாட்டம். இறங்கிப் பார்த்தோம். பற்றைக் காடுகள். மத்தியில் அண்ணையின் போர்ப் பயிற்சி மைதானம்.
சூடு பழகும் மையம், தரைகீழ் வாகன தரிப்பு நிலையம்,  ‘யொக்கிஙபகுதி, படம் பார்க்கும் சிறியமண்டபம்.
ஒரு சிறிய கட்டிடம். பிரத்தியேகமான அறை. நீள மேடை. அண்ணை வீரசொர்க்கம் எய்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய இடம். அந்த இடத்துக்கு வெற்றி நிட்சயம் போர்க்களத்தில் வீரசுவர்க்கம் எய்திய பாசுகியின் பூதவுலுடன் முன்னர் போயிருந்தேன்.

முள்ளிவாய்க்காலுக்குச் செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்தி இறங்கி வீதியைவிட்டு உள்ளே சென்றேன். முன்னர் சிறிய குடியிருப்பு அமைந்த மிகவும் பழக்கமான இடம். எந்த மனையை யும் உருப்படியாக காண முடியவில்லை. உரிமையாளர்கள் மீள்குடியேற அந்தப் பக்கம் வரவில்லை. எல்லோரும் ஊரோடு அழிந்து போயிருக்கலாம். ஆங்காங்கு சீரழிந்த பதுங்கு குழிகள். அவற்றுள் குழந்தைகளின் ஆடைகள். திறந்த சூட்கேசுகள். செருப்பு சப்பாத்துகள். இன்னொன்றில் சமையல் பாத்திரங்கள். மண்வெட்டி. ஒரு குழி பயத்தை ஏற்படுத்தியது. மனித எலும்புக்கூடுகள். சிறியதைப் பெரியது
அணைத்தபடிஒன்று.
இரண்டு வாகனங்கள் எரிந்த நிலையில்.

நேரம் மாலை வேளை. வங்காள விரிகுடாவிலிருந்து மெல்லிதாக குளிர் காற்று வந்தது. வெய்யவனின் அனல் கடமை முடிந்து போய்விட்டது.
இறுதிப் போர்க்களம் முள்ளிவாய்க்கால். அந்தப் பக்கம் பி.எம்.டபிள்யூ. ஓடிக்கொண்டிருந்தது. முன்னும் பின்னும் சிங்களச் சனங்களைச் சுமக்கும் வாகனங்கள். கனடா-பசுபிக் புகையிரதப்பெட்டிகள் போல அந்தம் தெரியாமல் நகர்ந்து கொண்டிருந்தன.
'நிமால், சமைக்க வேணும். நல்ல இடமாய்ப் பார்த்து நிறுத்து". களுபண்டாவின் தாய் பேபிநோநா.

சுற்றுலாப் போவது. மரங்களின் கீழ் சமைத்து உண்பது இரத்தத்தில் ஊறியது. அவ்வாறு சமைத்து உண்ணாவிட்டால் பத்தியப்படாது. சுதந்திரத்தின் முன்னர்---1948---நீர்கொழும்புப் பிராந்தியத்திலிருந்து மடுவுக்கு மாட்டு வண்டிகளில் பயணம் செய்தவர்கள். பல நாள் பிரயாணம். வழியில் மரங்களின் கீழ் விடுதி. குரங்குகள் சுடக் கிடைக்குமானால் இரு நாட்களும் தங்குவர். சுற்றுலாஒருவருடாந்த கொண்டாட்டம்.
நான் கூறினேன். 'நிமால், எனக்கு ஒரு நல்ல இடம் தெரியும். குளத்தில் குளிக்கலாம். வாகனத்தை அடுத்த சந்தியில் வலது பக்கம் ஓட்டு."

வாகனம் ஓடிக்கொண்டிருந்தது.

'சிவகாமி நோநா, நாங்கள் பிழையான பாதையில் செல்கிறோம்" நிமால் தடுமாறிச் சொன்னார்.
எனக்கு இந்தப் பிரதேசம் தெரியும். நீ போ நிமால். நான் சொல்கிறேன்."

சிறிது நேரம் ஓடிய பின்னர்: 'கிட்டவா?"
'பயப்படாதே நீ தொடர்ந்து செல் நிமால். குறித்தவிடம் வந்ததும் நான் சொல்கிறேன்." கால் மணி நேரம் வாகனம் ஓடிவிட்டது.
'அதோ தெரிகிறது பெரிய வாகை மரம். அங்கே நிற்பாட்டு. பக்கத்திலே குளம்."
'சிவகாமி நோநாவுக்கு இந்த இடம் நல்ல பழக்கம் போல." களுபண்டா.
துப்பாக்கி ஏந்தி, பெண் புலிப் போராளிகளை வழி நடத்தி யுத்தம் புரிந்த பூமி. என் தோழிகள் பலர் குருதிகொட்டி வீரசொர்க்கம் எய்திய பூமி."

வாகை மரத்தின் கீழே வாகனம். ட்றங்கைத்திறந்து சமயல் பொருட்களை இறக்கினர்.

சமையல் வேலை நடந்து கொண்டிருந்தது. தாயும் மகளும் சுறுசுறுப்பாகச் சமைத்தனர். நிமாலும் களுபண்டாவும் குளத்துக்குக் குளிக்கப் போய்விட்டார்கள். சமையல் இடத்துக்குச் சென்றேன். மூன்று கருங்கற்கள் வைத்த அடுப்பில் சோறு வெந்து கொண்டிருந்தது. சின்ன சின்ன பொலிதீன் பைகளில் சமையற் சாமான்கள். பேபிநோநா பையை உடைத்துக் கும்பிளாக் கருவாட்டைச் சட்டியில் போட்டார். முத்து வெங்காயம் நறுக்கினார்.

'நான் காலாற நடந்து போய் வருகிறேன். களுபண்டா வந்தால் தேட வேண்டாம் என்று சொல்லுங்கள்." நான்கு கண்கள் என்னை ஆச்சரியத்தோடு நோக்கின. முத்துவின் பெரிய சொக்கு என் கண்களை நிறைத்தது. அதற்குள் ஏதோ இழுத்துப் பிடிக்கிற காந்தம் இருக்குதோ?

வீதியில் சென்று, வீதியைவிட்டு நீங்கிச் சின்ன சின்னப்பற்றைகள் ஊடாகப் பத்து நிமிடங்கள் நடந்திருப்பேன். ஒரு ஈச்சம்பற்றையில் முற்றிய கரும்பழக் குலை. தாமதிக்க விரும்பவில்லை. என் எண்ணம் வேறெங்கோ ஊன்றியிருந்தது.

மனதில் சின்ன மகிழ்ச்சி. மேலே நாவல் மரத்தைப் பார்த்தேன். கனிந்த கருநீலப் பழங்கள். விழுந்த பழங்கள் தரையில் பரந்து கிடந்தன. 'சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?" என்று பாலமுருகன் ஒளவையாரைக் கேட்டமை மனதில் தட்டியது. பழத்தை எடுத்து ஊதி ஊதிச் சுவைக்க நேரம் இல்லை.

போர் முடிவில் அடி மரத்தோடு குத்தி வைத்த கூரிய இரும்புக்கம்பி அப்படியே இருந்தது. கொஞ்சம் கறல் பிடித்திருந்தது. மணல்தரை. நிலத்தில் அமர்ந்தேன். ஐந்து நிமிடங்கள்கூடச் செல்லவில்லை. புதைத்த பொக்கிசங்களை வெளியே எடுத்தேன். மனஏக்கம் சொல்லாமல் கொள்ளாமல் ஒடிப்போயிற்று.
சரிந்துகண்களைமூடினேன்.

'சிவகாமி நோநா. நோநா."
கண்களை விழித்தேன். ஒரு பக்கத்தில் களுபண்டா. எதிர்ப்பக்கத்தில் நிமால்.

திரும்பினோம். பேபிநோநா தகரக் கோப்பைகளில் உணவு நீட்டினார்.
கருவாட்டுக் குழம்பு. பருப்பு. கைக்குத்தரிசிச் சோறு. நல்ல பசி. தரையில் குந்தியிருந்து கையில் கோப்பை ஏந்தி நிரம்பச் சாப்பிட்டேன். மிக ருசியாய் .இருந்தது.
வீடு வந்து சேர நள்ளிரவாகிவிட்டது.

பிள்ளைகள், இத்துடன் இன்றைய கதை முற்றுப் பெறுகின்றது."

பிள்ளைகள் போய்விட்டனர். மணி அண்ணையும் சுசீலா அக்காவும் சோபாவை விட்டு எழுந்து நின்றனர்.
என்ன இருவரும்?"
கனக்கப் பேசவேணும். நாளைக்கு வருகிறம். நீயும்

களைத்துப் போனாய்."

~~~~~~ அடுத்த அதிகாரத்துடன் நிறைவு பெறும்...

No comments:

Post a Comment