Friday, 10 July 2015

ஆ! - சிறுகதை


            1.
            மாடு ஒன்று அலறும் சத்தம் விட்டு விட்டுக் கேட்கின்றது. அதிகாலை நாலு மணி இருக்கலாம். நிசப்தமாகியிருந்த  கிராமத்துத் தெருக்களில் ஒன்றில் ஒரு பெண் இழைக்க இழைக்க விரைந்து வருகின்றாள். அவளின் நடையில் நித்திரை குழம்பிய துயரம் தெரிகிறது. கோடை காலமாதலால் எங்குமே வெளிச்சம் பரவத் தொடங்கி விட்டது. பிரதானவீதிக்கு வந்துவிட்ட அவள், பதுங்கி நாலாபுறமும் கண்களைச் சுழல விட்டாள்.

            இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலை கொண்ட காலம். எங்கேயும் அவர்கள் பதுங்கி இருக்கலாம் அல்லது திடீரென்று 'ரோந்து' செய்யலாம். ஒருவரும் இல்லையென்று உறுதி செய்து கொண்டபின், பிரதான வீதியில் காலடி எடுத்து வைத்தாள். சற்று நேரம் பிரதான வீதியில்  நடந்த பின், அடுத்து வந்த குச்சொழுங்கைக்குள் இறங்கி மூச்சுப்பிடித்து ஓடத் தொடங்கினாள். ஓட்டம் செல்லாச்சிக்கிழவியின் படலையடியில் வந்து முடிந்தது. சற்று நேரம் மூச்சை விட்டு ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

             தடிகளால் பின்னப்பட்ட படலை சற்றே நீங்கி இருந்தது. உள்ளே மண் குடிசைக்குள் உத்தரத்தில் ஒரு 'அரிக்கன் லாம்புதுடித்துக் கொண்டிருந்தது. உள்ளே புகுந்து கொண்டாள். செல்லாச்சிக்கிழவியிடம் நாய் இருக்கவில்லை.

            "செல்லாச்சியக்கா! செல்லாச்சியக்கா!!" என்று மெதுவாகக் கூப்பிட்டுக் கொண்டே முற்றம் வரைக்கும் போய் விட்டாள். நெடுநேரம் படுத்துவிட்டேனோ என்ற திகைப்பில் விழித்தெழுந்த செல்லாச்சி முற்றத்தில் நின்ற பெண்ணைக் கண்டு கொண்டாள். கண்ணைப் பூஞ்சிக் கொண்டு தட்டுத் தடுமாறி வந்தாள்.

            "ஆரது? எடி பரிமளம்! நீயென்னடி இஞ்சை நிண்டு கொண்டு செய்யுறாய்? நான் ஆரோ பால் வாங்கிற ஆக்கள் வந்திட்டினம் எண்டு பதகழிச்சுப்போனன்."
            "அது சரி ஆச்சி. முதலிலை உங்கட பசுமாடு வீட்டிலை நிக்குதோ எண்டு ஒருக்காப் பாருங்கோ?"

            கிழவி குடு குடுவென்று வீட்டின் பின்புறம் போனாள். அவளின் பின்னால் பரிமளமும் உரசிக்கொண்டே போனாள். தட்டி வேலிக்குள்ளால் எட்டிப் பார்த்த கிழவி 'ஐயோ! மாட்டைக் காணேல்லை!' என்றாள். கட்டையில் கயிறு மாத்திரம் சில்லம் பல்லமாக அறுந்து சிலம்பிப்போய்க் கிடந்தது. உக்கிய கயிற்றைத் தடவிப் பார்த்த கிழவி, பரிமளத்தை நிமிர்ந்து நோக்கினாள்.

            "உவன் ராசு இருக்கிறானல்லோ ராசு, அவன் ஒரு மாட்டைக் கட்டி வைச்சு அடி அடியெண்டு அடிச்சுக் கொண்டிருந்தான். எனக்கொரு 'டவுட்டு' அது உங்கட மாடெண்டு. அதுதான் மனம் கேக்கல்ல. சொல்லுவோமெண்டு ஓடி வந்தனான்."
            "கெட்ட ராஸ்கல். வாறனடா பொறு."
            "தயவு செய்து நான் சொன்னனான் எண்டு மட்டும் சொல்லிப் போடாதை யுங்கோ. பிறகு அவனோடை காலம் தள்ளேலாது."

            கிழவி வீட்டைச் சாத்திவிட்டு பரிமளத்துடன் நடையைக் கட்டினாள்.


            2.
            ராசுவின் வீடு வருவதற்கு சற்று முன்னாலேயே பரிமளம் செல்லாச்சியை விட்டுக் கழன்று கொண்டாள். செல்லாச்சியைவிட நாலு எட்டு எடுத்து வைத்து வேகமாக மறைந்து கொண்டாள் பரிமளம்.

            வீட்டு முற்றத்திலிருந்த மரத்தினில் மாட்டைக் கட்டிவிட்டு, பக்கத்திலே ஒரு கதிரையைப் போட்டு சரிந்து கிடந்தான் ராசு. அடி அகோரத்தினால் விழுந்த மூத்திரமும் சாணகமும் முற்றத்திலே பரவிக்கிடக்க, மாடு மூச்சிரைத்துக் கொண்டு அந்தச்சகதிக்குள் நின்றது. செல்லாச்சியைக் கண்டதும் அது தீனமாக ஒரு கத்துக் கத்தியது. அந்தச் சத்தத்தினால் தலை நிமிர்ந்த ராசு, தன் முன்னாலே கிழவி நிற்பதைக் கண்டுகொண்டான்.

            "எட அறுவானே! ஏன்ரா என்ர பசுமாட்டை இப்பிடிக் கட்டிவைச்சிட்டு அடிக்கிறாய்?" செல்லாச்சி வந்ததும் வராததுமாகத் கத்தத் தொடங்கினாள்.

            "போய் முதலிலை என்ர வயலைப் பாத்திட்டு வந்து ஏதாவது கதைக்கிற தெண்டால் கதை" மேலும் கீழும் செல்லாச்சியைப் பார்த்தபடியே கதிரைக் குள்ளிருந்தபடி ராசு சொன்னான்.

            செல்லாச்சி ராசுவின் வீட்டுப்பின்புறத் தட்டியைத் திறந்து கொண்டு அவனின் வயலிற்குள் புகுந்தாள். வயல் ஒருசதத்திற்கும் உதவாமல் கிடந்தது. ஒரு பசுமாடு இவ்வளவு வேலையைச் செய்ததா என்று ஆச்சரியப்பட்டுப் போனாள். நேற்றிரவு மாட்டிற்குச் சாப்பாடு போட மறந்துவிட்டேனோ என தன்மீது சந்தேகம் கொண்டாள்.

            "தம்பி ராசு, நீ எவ்வளவு தரவேணுமெண்டு சொல்லுறியோ அதை நான் தாறன். இப்ப என்ரை மாட்டை அவுத்துவிடு" பயபக்தியோடை செல்லாச்சி முணுமுணுத்தாள்.
            "ஐயாயிரத்தை உதிலை வைச்சிட்டு மாட்டைக் கொண்டு போ"

            'ஐயாயிரம்' எண்டு சொன்னதும் மின்சாரத்தில் தீண்டப்பட்டவள் போல 'ஷொக்' அடித்து இரண்டு அடி தள்ளிக் குதித்தாள் செல்லாச்சி.

            "என்ர மாட்டை வித்தாலே ஐயாயிரம் தேறாது. நீ என்ன விசர்க்கதை கதைக்கிறாய்"
            "வயலின்ரை அழிவை மதிப்பிட்டால் ஐயாயிரத்துக்கு மேலைதான் வரும். நீ வருமானமில்லாமல், ஒரு ஆதரவும் இல்லாமல் இருக்கிறதாலை இவ்வளவத்தோடை நிப்பாட்டிறன்"

            "சரி! நான் கொஞ்சம் கொஞ்சமா இரண்டாயிரம் மட்டிலை தாறன். இப்ப என்ர மாட்டை அவுக்கிறன்" என்றபடியே மாட்டின் கயிற்றை அவிழ்ப்பதற்காக மரத்திற்குக் கிட்டப் போனாள் செல்லாச்சி. திடீரென்று உரு வந்தது போல கதிரைக் குள்ளிருந்து துள்ளி எழுந்த ராசு, "என்னை இஞ்சை ஒருத்தரும் கொஞ்சவும் வேண்டாம், கிள்ளவும் வேண்டாம்" என்று கத்தியபடியே கிழவியைப் பிடித்து ஒரு தள்ளுத் தள்ளினான்நல்லகாலத்திற்கு மரத்துடன் மோதவிருந்த செல்லாச்சியை, ஒளித்திருந்து இவ்வளவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ராசுவின் மனைவி ஓடி வந்து தாங்கிப் பிடித்துக் கொண்டாள்.

            "இஞ்சாரும் செல்லாச்சியக்கா, நான் சொல்லுறேன் எண்டு கோபிக்காதையும். உந்தாளுக்கு விசர். நீங்கள் ஓமெண்டு முதலிலை சொல்லுங்கோ. பிறகு கொஞ்சத்தை குடுத்துப் போட்டு விடுங்கோ" ராசுவின் மனைவி, செல்லாச்சியின் காதிற்குள் முணுமுணுத்தாள்.

            "ஓமெண்டு சொல்லுறதோ! இருங்கோ வாறன். இரண்டுபேருமா சேர்ந்து விளையாடுறியள். உதுக்கு விதானைதான் சரி. நான் விதானையிட்டைப் போட்டு வாறன்" துள்ளித்துள்ளி தொங்கல் நடை நடந்து வெளியே போனாள் செல்லாச்சி.
            "என்ன கிழவிக்கு அட்வைஸ் குடுக்கிறியோ?" கொடுப்பிற்குள் இருந்த பாக்கு வெற்றிலையை வெளியே துப்பிய ராசு, தனது மனைவியின் தலைமுடியைப் பற்றினான்.


            3.
            செல்லாச்சி காலையும் கையையும் மடிச்சுக் கொண்டு தியானத்தில் இருப்பவள் போல திண்ணையில் இருந்தாள். செல்லாச்சிக்கு உதவி செய்ய ஒருவருமே முன்வரவில்லை. விதானையார் பரதேசி போல அங்கும் இங்கும் அலைந்துவிட்டு செல்லாச்சியின் வீட்டிற்கு வந்தார்.

            "செல்லாச்சி! நான் ராசுவின்ர வயலைப் போய்ப் பாத்திட்டு வாறன். சேதம் கூடவாகத்தான் கிடக்கு. பேசாமல் ஒரு நாலாயிரத்தக் தூக்கி எறிஞ்சு போட்டு மாட்டை அவிட்டுக் கொண்டு வா."
            "நாலாயிரமா? என்னட்ட ஒரு நாப்பதுரூபாகூட இப்ப இல்லை ஐயா."

            விதானையார் தலையைப் போட்டுச் சொறிந்தார். சிந்தனை வயப்பட்டவர்போல தன்னைக் காட்டிக் கொண்டார்.

            "ஆச்சி! கடைசியா நான் ஒண்டு சொல்லுறன். உவன் ராசு 'குரு' இயக்கத்தின்ர சப்போட் ஆள். உன்ர செத்துப்போன மகன் குமார் '.' இயக்கத்திலை இருந்தவன். இரண்டுக்கும் ஒருநாளும் ஒத்துவராது. பச்சை மண்ணும் சுட்ட மண்ணும்போல. விஷயத்தைப் பெருப்பிக்காமல் நான் சொல்லுறது போல செய்தால் நல்லது."
            "! நீயும் அப்ப பரமார்த்தகுருவுக்கு சப்போட்டோ? பணம் பண்டம் இல்லாட்டி ஒரு நாயும் உதவிக்கு வராதுபோலத்தான் கிடக்கு."

            விதானையார் கொஞ்ச நேரமாக சைக்கிளை உருட்டிக்கொண்டு படலைக்குப் போவதும் கிழவியின் வீட்டு வாசலிற்கு வருவதுமாக இருந்தார். செல்லாச்சி மெளனமாக ஒன்றும் பேசாது வாயை இறுக்க மூடிக்கொண்டு இருந்தாள். திடீரென்று '..' என்ற 'போர்ட்' போட்ட ஒருவாகனம் 'சர்ர்.... புர்ர்ர்' என்ற பிரளயச் சத்தத்துடன் செல்லாச்சி வீட்டு வாசலில் வந்து நின்றது. வாகனம் விட்ட கரியபுகை வீதி, வளவுகளை வியாபித்தது. தருணம் பார்த்து விலகிக் கொண்டார் விதானையார்.

            தொபுக்குத் தொபுக்கு என்று துப்பாக்கிகளையும் தூக்கியபடி வாகனத்தில் இருந்து நாலைந்துபேர் குதித்தார்கள். வாகனச்சாரதி வாகனத்தை நிற்பாட்டாமல் 'ஸ்ராட்' நிலையிலேயே வைத்திருந்தான். கிழவிக்கு இது புதிசு. கையை நாரியில் ஊன்றியபடி திகைத்துப் போய் நின்றாள்.

            "ஆச்சி! எல்லாம் கேள்விப்பட்டம். உன்னுடைய ஏழ்மை நிலையைச் பாவிச்சு ஒருசிலர் வீறாப்புக் காட்ட நினைக்கினம். உதை விடப்படாது. குமார் எங்கட கட்சிக்குச் செய்த சேவை அளப்பரியது. தன்னுடைய ஒரு மகனையே நாட்டிற்காக தாரை வார்த்துக் கொடுத்த தாய்க்கு ஒரு துன்பம் வர நாங்கள் விடமாட்டம். இண்டைக்குப் பின்னேரத்துக்கு இடையிலை உங்கடைமாடு உங்கடை வீட்டிலை நிக்கும். பசுமாட்டிலை கை வைக்கிறான்களாம் பசுமாட்டிலை" வந்தவர்கள் ஆவேசமாக மாறி மாறி முழங்கினார்கள்.

            செல்லாச்சி இதை எதிர்பார்க்கவில்லை. என்ன சொல்வதென்று தெரியாமல் சங்கடப்பட்டாள்.

            "ஆச்சி! ஒண்டுக்கும் பயப்பிடாதையுங்கோ. நாங்கள் உங்களுக்கு வெண்டு தாறம்" ஒருவன் செல்லாச்சியின் தோள்களைப் பற்றியவாறே சொன்னான்.
            "பொறடா தம்பி, என்னை விழுத்திப் போடாதையடா" என்றாள் செல்லாச்சி.
            "ஆச்சி! வாகனம் ஸ்ராட்டிலை நிக்குது. ஸ்ராட்டை நிப்பாட்டினா பிறகு தள்ளவேண்டி வரும். நாங்கள் வாறம். நீங்கள் ஒண்டுக்கும் ஜோசியாதையுங்கோ. எல்லாத்தையும் இனி ... பாத்துக் கொள்ளும்."

            செல்லாச்சி தன் மகன் குமாரின் சிந்தனையில் ஆழ்ந்து கொண்டாள். அவள் கண்கள் மெல்லத் துளிர்த்தன.


            4.
            குமார் செல்லாச்சியின் ஒரே மகன். பிறக்கும்போதே கொஞ்சம் விளப்பமில்லாமல் பிறந்துவிட்டான். காதும் கொஞ்சம் மந்தம். பள்ளியிலே படிப்பு அவனுக்கு ஏறவில்லை. தான் புத்திசாலி என்று காட்டிக் கொள்வதற்காக எப்போதும் காதிற்குள் ஒரு பென்சிலைச் செருகியிருந்தான். சின்னவயதிலேயே தகப்பனை விழுங்கிவிட்டான். வளர வளர பாக்கு வெற்றிலை போடும் பழக்கம் உண்டானது. அது பின்னர் ஒரு சுற்றுப் பெருத்து கள்ளுச் சாராயம் என்று போனதுதாய் கொடுக்கும் காசு போதாதென்று போகின்ற இடங்களிலெல்லாம் தொட்டாட்டு வேலை செய்யப் பழகிக் கொண்டான். விறகு கொத்துவான், மூட்டைகள் சுமப்பான், தோட்டங்களிலே எடுபிடி வேலைகள் செய்வான்.

            இந்திய அமைதிப்படை நாட்டிற்குள் புகுந்தபோது, இருந்த சிறுசிறு இயக்கங்க ளெல்லாம் மழைக்கு முளைச்ச காளான்கள் போல தலைகாட்டத் தொடங்கின. ஒருநாள் திடீரென்று '..' ஊரிற்குள் புகுந்து நாய் பிடிக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டார்கள். வாகனங்கள் ஓடாத குச்சொழுங்கைக்குள் எல்லாம் வாகனங்கள் பறந்து புழுதி கிழப்பின. குட்டைநாய்கள், தெருநாய்கள் எல்லாம் குரைத்துக் கொண்டு ஓட விளப்பமில்லாத மனிதநாய்கள் பிடிபட்டுக் கொண்டன. ஒரு பேனா பிடிக்கத் தெரியாத குமார் போராராராளியானான்.

            மூன்றுமாதங்களாகக் குமாரைக் காணவில்லை. செல்லாச்சி மிகவும் கவலைப் பட்டாள். வாழ்க்கையில் அப்போதுதான் அவள் மிகவும் நொந்து போனாள். நாலாவது மாதம் ஒரு இருண்ட பொழுதில் ஒரு வாகனித்தினின்றும் குதித்து இறங்கினான் குமார். மூன்றுமாத அதிதீவிரப் பயிற்சியின் பின்பு கையில் ஒரு 'வாக்கி ரோக்கி'யுடனும் இரண்டு மூன்று 'இங்கிலிஸ்' வார்த்தைகளுடனும் வந்திருந்தான். செல்லாச்சி அவனுடன் அதிகம் கதைக்கவில்லை. உள்ளூரப் பெருமை கொண்டிருந்த போதிலும் கோபமாக இருப்பதுபோலப் பாஷாங்கு செய்தாள். போர் முனையில் தான் ஒரு முன்னணியில் நிற்கும் ஒரு போராளி என்றான். கிராமத்து மக்களில் ஒருசிலர் செல்லாச்சியின் வீட்டிற்கு முன்னால் கூடிவிட்டனர். 'சுதந்திரமும் அடிமைகளும்' என்ற தலைப்பில் அந்தக் கிராம மக்களுக்கு மூன்று நிமிடங்கள் பேசிக்காட்டினான். அந்தக்கிராம மக்களின் கை தட்டல்கள் விசிலடியுடன் அன்று போனவன், ஐந்தாம் மாதம் பிணமாக ஒருபிடி சாம்பராக வீடு வந்து சேர்ந்தான். அவன் பாவித்த பொருட்கள் அடங்கிய சூட்கேஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு இரண்டு நிமிட மெளன அஞ்சலியுடன் '..' போனது. போகும்போது வீதிகளில் கண்ணீர் அஞ்சலியையும் ஒட்டிவிட்டிப் போனார்கள்.

            செல்லாச்சி அவனைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள். இன்று அவன் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். சும்மா ஒரு துணையாகவாகுதல் இருந்திருப்பான். திரும்பத் திரும்ப அவனையையே நினைத்துக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. மத்தியானம் சமைப்பதற்கும் அவளிடம் ஒன்றுமிருக்கவில்லை. வீட்டு வாசலில் ஒருவாகனம் வந்து நின்ற போதுதான் சுயநினைவிற்குத் திரும்பினாள். வாகனத்தின் பின் பூட்டியிருந்த 'றெயிலரில்பசுமாடு வந்து இறங்கியிருந்தது. "என்ர சீதேவி வந்துவிட்டுது" என்று சிரித்துக் கொண்டே கொட்டிலிற்குள்ளிருந்து வெளியே ஓடி வந்தாள்.


            5.
            பொழுது கருக்கும் நேரத்தில் இன்னொருவாகனம் வந்து செல்லாச்சியின் வீட்டு வாசலில் நின்றது.

            அந்த நேரத்தில் செல்லாச்சி பசுமாட்டைத் தடவியவாறே ராசுவைத் திட்டிக்கொண்டிருந்தாள். ஈவிரக்கமில்லாமல் மாட்டிற்கு அடிச்ச அந்த ராசு, அடுத்த பிறவியில் எருமையாகப் பிறக்க வேண்டுமென சாபமிட்டாள். எவ்வளவு கொழுத்திருந்த பசுமாடு ஒருநாள் முழுக்க சாப்பாடு இல்லாமல் இப்படி மெலிந்துவிட்டதே என்று அழுதாள். மறுநாளாவது பசுமாடு பால் தரவேண்டுமென்று வைக்கோலையும் புண்ணாக்கையும் அள்ளி அள்ளி மாட்டிற்குப் பக்கத்தில் போட்டாள். மாடு ஒரே மூச்சில் சாப்பிடத் தொடங்கியது.

            அவள் கனவைச் சிதைத்து விடுமாப்போல வாகனத்தில் இருந்து பரமார்த்தகுருவும் சீடர்களும் இறங்கினார்கள். செல்லாச்சியின் வீட்டின் பின்புறம் கேட்டுக் கேள்வியில்லாமல் போய் மாட்டைத் தள்ளிக் கொண்டு வந்தார்கள். ஏற்கனவே நொந்துபோயிருந்த மாடு வேதனையில் முனகியது. செல்லாச்சி ஒன்றும் கதைப்பதில்லையென முடிவு செய்து கொண்டாள். முன்னாலே இரண்டுபேர் பிடித்திழுக்க, பின்னாலே இரண்டுபேர் தள்ள மாடு படலைவரை போய் மீண்டும் 'றெயிலரில்' ஏறியது. செல்லாச்சி ஒன்றும் ஒப்பாரி வைக்காதது மாட்டிற்கும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்க வேண்டும். அது அங்கிருந்தபடியே செல்லாச்சியை ஏக்கத்துடன் பார்த்தது.

            அதுவரையும் நடப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்த குரு, "கடைசியிலை உன்ரை ஆக்களிட்டைப் போய் சொல்லிப்போட்டாய் போல கிடக்கு" என்றபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.


            6.
            இரவு எட்டுமணியளவில் மாடு திரும்பவும் தனது வீட்டிற்கு வந்தது. '..' நாட்டு நடப்புகளை நிமிடத்திற்கு நிமிடம் 'அப்டேற்' பண்ணிக் கொண்டிருந்தார்கள். அதனால் சுடச்சுட பதிலடி குடுத்தார்கள். '..' யும் 'பரமார்த்தகுருவும்' நேருக்கு நேர் சந்திப்பதற்கு வாய்ப்புக்கள் நிறைய இருந்தும் ஏனோ அதைத் தவிர்த்துக் கொண்டார்கள்.

            மாடு வந்து சற்று நேரத்தின் பிற்பாடு, செல்லாச்சியின் வீட்டு வாசலில் இரண்டு மனிதர்கள் வந்து நின்றார்கள். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வாசலில் நிற்பது கண்டு செல்லாச்சி வீட்டைவிட்டு வெளியே வரப் பயப்பட்டாள். ஒருமாட்டிற்காக மின்சாரக் கம்பத்தில் தொங்கவேண்டிய பரிதாப நிலை தனக்கு வந்துவிட்டதா என்று தன்னை சுயமதிப்பீடு செய்து கொண்டாள்.

            "அது நான் பரிமளம். வீட்டை வரலாமோ?" வாசலில் நின்றபடியே கத்தினாள்.
            "அதென்ன வரலாமோ? இவ்வளவு நாளும் என்னண்டு வந்தனீ? அது ஆர் கூட நிக்கிறது?" எசப்பாட்டு பாடினாள் கிழவி.
            "அது ராசுஅண்ணர். எல்லாத்தையும் ஆற அமர்ந்து கதைக்க வந்திருக்கிறார்."
            "சரி வாருங்கோ."
            "ஆச்சி! எனக்கு காசும் வேண்டாம், மாடும் வேண்டாம், ஒண்டும் வேண்டாம். மாட்டைப் பாக்க எனக்கு ஒரே பரிதாபமாக்கிடக்கு. ஐஞ்சறிவு படைச்ச சீவன்கள் செய்த வேலைக்காக நாங்கள் ஏன் சண்டை பிடிக்க வேணும். எனக்கு இப்ப உவங்களை நினைக்கத்தான் ஒரே தலையிடியாக் கிடக்கு."
            "இரடா மோனை, உதிலை இரடா. எடியேய்! உனக்கு இனி தனியா வேறை சொல்லவேணுமோ?"

            மூன்றுபேரும் திண்ணையில் இருந்து அளவளாவினார்கள். செல்லாச்சி உள்ளே போய் தேநீர் போட்டுக் கொண்டு வந்தாள். கூடவே பாக்கு வெற்றிலைத் தட்டமும் வந்தது.

            "குருவை நான் இப்ப சந்திச்சுக் கொண்டு வாறன் ஆச்சி. நான் இப்ப இந்தப் பிரச்சினையை வாபஸ் வாங்கிட்டன். ஆனா அந்தத் தறுதலை இப்ப என்ன சொல்லுறான் தெரியுமோ? இந்தப் பிரச்சினை இப்ப என்னுடையதும் உன்னுடையதும் இல்லையாம். '..'க்கும் '.கு.'க்கும் இடையேயான மானப்பிரச்சினையாம். அரசியல் பிரச்சினையாம்"
            "முதன்முதலா நான் அறிய ஒரு மாடு அரசியலுக்கை தலையிடுகிறது இதுதான் முதல்தடவை" என்றாள் பரிமளம்
            "அதுக்கிடையிலை மாட்டுக்கு ஒரு பேர் வைச்சால் நல்லது" என்ற தனது ஜோசனையை முன்வைத்தாள் செல்லாச்சி. அவர்கள் பேர் வைக்கும் ஆராய்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது வீட்டு வாசலில் உறுமிக் கொண்டு ஒரு வாகனம் நின்றது.

            "எஸ்கேப்' என்று கத்திக் கொண்டே இத்துப்போய்க் கிடந்த செல்லாச்சியின் வேலிக்குள்ளால் பாய்ந்தான் ராசு.



            7.
            "ஏய் கிழவி! ராசு இந்தப் பிரச்சினையை விடச் சொல்லிப் போட்டான். ஆனா நாங்கள் விடுறதா இல்லை. மாட்டை ஏத்தி ஏத்தி எங்கட வாகனம் பழுதாப் போச்சு. ஒரே மூத்திர நாத்தமும் சாணகக் குவியலும்" பரமார்த்தகுரு கனல் பறக்கப் பேசினான்.
            "இந்தப் பிரச்சினைக்கேக்கை தலையிட்டு எங்களுக்கு ஏகப்பட்ட செலவும் அவமானமும்" அடுத்தவன் சிணுங்கினான்.

            செல்லாச்சி எதிர்த்து ஒன்றும் கதைக்காமல் இருந்தது குருவிற்குக் கோபத்தை உண்டுபண்ணியது. அவன் தனது சீடர்களுக்குக் கண்ணைக் காட்டினான். அவர்கள் கிழவியின் வீட்டிற்குள் திறந்த வீட்டிற்குள் நாய் நுழைவது போலப் புகுந்தார்கள். வீட்டிற்குள் கிடந்தவற்றைத் துருவித்துருவி ஆராய்ந்தார்கள். புதையலைக் கண்டெடுத்த புளுகத்தில் ஒரு பழைய சூட்கேஸ் ஒன்றை வெளியே கொண்டுவந்தான் ஒருவன். இறந்துபோய்விட்ட குமாரின் உடமைகள் அடங்கிய பொக்கிஷம் அது.
            "உன்ரை மகன் இயக்கத்திலை இருந்தவனாமே!"
            "இயக்கத்திலை இருந்து இறந்தவன் என்ர மகன்"

            சூட்கேசின் பூட்டிற்கு ஒருவன் சுத்தியலால் அடித்தான். அது திறந்துகொள்ள உள்ளேயிருந்து பழைய உடுப்புகளும் சிலபொருட்களும் விழுந்தன. ஆளுக்கொரு பொருட்களாகத் தூக்கிக் கொண்டார்கள்.
            " இதுக்கொரு பூட்டு. ஏய் கிழவி! என்ன இது?" பழைய துணியினால் சுற்றப்பட்ட டிரான்ஸ்சிஸ்ரர் றேடியோ ஒன்றைத் தூக்கிப் பிடித்து செல்லாச்சியைக் கேட்டான் ஒருவன்.
            "இது என்ர மகன் பாவிச்ச வாக்கி ரோக்கி" என்றாள் கிழவி பெருமிதத்துடன்.

            மாவோ சே துங், ஹோச்சிமின் போன்றவர்களின் வரலாற்று நூல்கள் சிலவும் அந்த சூட்கேசினுள் இருந்தன. அந்தப்புத்தகங்களைக் கண்டதும் மட்டியும் மடையனும் உசாரானார்கள்.
            "மாவோ சே துங்கைத் தெரியுமா?"
            "மாவோ? மாவிலை பிட்டு இடியப்பம் சாப்பிட்டு இப்ப எத்தினை வருஷமாச்சு. இருந்த கஞ்சிக்கும் இப்ப நீங்கள் உலை வச்சுப் போட்டியள்"

            "ஆச்சி! ஹோச்சிமினைத் தன்னும் தெரியுமோ?"
            "கோச்சியைத்தானே வவனியாவுக்கு இஞ்சாலை வராமல் பண்ணிப் போட்டியளே. பிறகு எந்தக்கோச்சியிலை என்ரை மாட்டை ஏத்தப் போறியள்?"

            "இஞ்சாரடாப்பா! அறளை பெயருகிற வயதிலை கிழவியின்ர ஜோக்கை."
            "ஆச்சி நல்ல பெறுமதியான புத்தகங்களை எல்லாம் உன்ர மகன் வாசிச்சிருக்கின்றான்"

            "சத்தியமாச் சொல்லுறன் மோனை. என்ரை மகனுக்கு ஒரு கையெழுத்துக்கூடப் போடத்தெரியாது மோனை."
            "எடேய், கிழவியோடை கதையை விட்டிட்டு வாகனம் ஓடியதுக்கான டீசல் காசைத் தந்தால் மாட்டை விடுவோம் எண்டு சொல்லு" என்றான் குரு.

            "தம்பியவை சூட்கேசுக்குள்ளை கிடந்த புத்தகங்கள் நல்ல பெறுமதி எண்டு சொல்லுறியள். தயவுசெய்து உதுகளை எடுத்துக் கொண்டு என்ரை மாட்டைத் தந்திட்டுப் போங்கோவன்"

            குரு சிரித்துக் கொண்டு மாட்டிற்குக் கிட்டப் போனான். அவனைக் கண்டதும் மாடு வெருண்டது. அப்படியே 'பளார் பளார்' என்று மாட்டிற்கு நாலு போட்டான். அடியின் உக்கிரம் தாங்காமல் நுரை தள்ளிய மாடு தன்பாட்டில் ஓடிப்போய் 'டிரெயிலரில்' ஏறியது. திரும்பவும் பசுமாடு போய்விட்டது.

பரிமளம் செல்லாச்சிக்கிழவியை இந்திய அமைதிப் படையிடம் கூட்டிக் கொண்டு போனாள். வழியில் இரண்டு சிறுவர்கள், சைக்கிளில் 'காஸ் சிலிண்டரை' ஒன்றை வைத்துத் தள்ளிக் கொண்டு எதிர்ப்புறமாகப் போனார்கள். கிழவி அதை விடுத்து விடுத்துப் பார்த்தாள். 'சிலிண்டர்' என்று சுருக்கமாக பரிமளம் அதற்கு விளக்கம் கொடுத்தாள்.

            செல்லாச்சியையும் பரிமளத்தையும் இந்திய அமைதிப்படை ஒரு மரநிழலில் இருத்தி வைத்திருந்தார்கள்.


            "இஞ்சாருங்கோ அம்மா! நாங்கள் மனிசற்ரை பிரச்சினையைத் தீர்க்கத்தான் இஞ்சை வந்தனாங்கள், ஆடு மாடுகளின்ர பிரச்சினையை அல்ல" என்று ஒரே வரியில் சொல்லிவிட்டார்கள் அவர்கள்.
            "இரண்டு தவ்வலுகள் சிலிண்டரைத் தள்ளிக் கொண்டு போறான்கள். அவங்களைப் பிடிச்சு இருத்துவோமெண்டு இல்லை. எங்களை இருத்தி வைச்சிருக்கிறான்கள். சிலிண்டர் வெடிக்கேக்கைதான் உவங்களுக்குப் புத்தி வரும்" என்று தன்பாட்டில் புறுபுறுத்தாள் கிழவி.
            8.
            செல்லாச்சி  இனி எந்தவொரு முயற்சியும் எடுப்பதில்லை என முடிவு செய்து கொண்டாள். ராசு பிரச்சினையில் இருந்து ஒதுங்கிக் கொள்வதற்காக சாவகச்சேரியில் இருந்து புறப்பட்டு கிளிநொச்சியில் போய் ஒளிந்து கொண்டான். அடுத்தநாள் வரையும் எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. மாடு ராசுவின் வீட்டில் 'ராசாத்தி' போல நின்றது. ராசுவின் மனைவி மாட்டிற்கு நல்ல சாப்பாடு போட்டாள். பால் கறந்து குடித்தது போக தயிரும் போட்டு வைத்தாள்.

            அதன்பிறகுதான் வேடிக்கை நிகழ்ந்தது. கழுத்திலே பூமாலைகள் சகிதம் தேர்தல் வேட்பாளர் போல மாடு திரும்பவும் செல்லாச்சியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தது. மாடு மாறி மாறி அலைக்கழிந்ததில் ஒட்டி உலர்ந்து கழுதையாகிப் போனது.

            "தம்பியவை எனக்கு மாடும் வேண்டாம், ஒண்டும் வேண்டாம். உதைக் கொண்டுபோய் ராசுவின்ர வீட்டிலை விடுங்கோ"
            "ஆச்சி! இனிமேல் ஒரு பிரச்சினையும் வராது. இதுதான் கடைசி" என்று '..' தலைவன் செல்லாச்சியின் தலையில் அடித்து வாக்குறுதி கொடுத்தான். போகும்போது மாட்டின் கழுத்திலே பெரியதொரு காகித அட்டையை மாட்டிவிட்டுச் சென்றான். 'கடைசி எச்சரிக்கை. இனியும் மாட்டைத் தொட்டால் மரணத்தை எதிர் கொள்ள நேரிடும்' என்ற வாசகம் அதில் இருந்தது. அதன் கீழே மண்டை ஓடும் அதற்குக் குறுக்காக இரண்டு எலும்புத் துண்டுகளும் கீறப்பட்டிருந்தன.

            செல்லாச்சி '..' போனபின்பு வீட்டுப் படலையை மூடிக் கயிற்றினால் கட்டினாள். திருநீறு கொஞ்சம் கையில் எடுத்து மாட்டின் நெற்றிக்குப் பூசினாள். விளக்கை ஏற்றி தொங்கவிட்டு தனது சமையலைத் தொடங்கினாள்.

            சாப்பாட்டிற்குள் கையை வைக்கும் நேரத்தில் குருவின் கூட்டம் வீட்டிற்குள்ளே புகுந்தது. இருவர் வீட்டிற்குள் புகுந்து துவம்சம் செய்ய, இருவர் செல்லாச்சிக்குப் பக்கத்தில் நிற்க, பரமார்த்தகுருவும் ஏனையோரும் மாமரத்திற்குக் கீழே நின்று மந்திராலோசனை நடத்தினார்கள்.

            "எடேய் பெடியா! வாழ்க்கையிலை எப்பவாதல் துவக்குப் பிடிச்சு சுட்டிருக்கிறாயா?" என்று தனக்குப் பக்கத்தில் நின்ற தவ்வலிடம் குரு கேட்டான். பத்துவயதும் நிரம்பியிராத அவன் மிகவும் பெளவியமாக "இல்லை அண்ணை" என்றான்.
            "இந்தா சுடு!" என்று தனது துப்பாக்கியை அவனிடம் நீட்டினான் குரு.

            "கிழவியையா? மாட்டையா?" தயங்கியபடியே சிறுவன் கேட்டான். ஓங்கி ஒரு உதை அவனுக்கு விழுந்தது. தூரத்தே போய் துப்பாக்கியுடன் விழுந்தான் சிறுவன். நல்லகாலம் துப்பாக்கி வெடிக்கவில்லை.
            "உன்னைப்போல ஆக்கள் இருக்கிறதாலைதான் எங்கட கட்சிக்கே அவமானம். ம்.... மாட்டைச் சுடு" என்றான் குரு.

            செல்லாச்சியை இரண்டுபேர் இறுக்கிப் பிடித்தார்கள். அவளிற்கு விஷயம் விளங்கிவிட்டது. மற்றவர்கள் ஓடிப்போய் மாட்டை இழுத்து வந்தார்கள். ஒரு சூடு. மாட்டின் காதை மருவிக் கொண்டு போனது. அடுத்த சூடு, மாட்டின் வாலைக் கொண்டு போனது. செல்லாச்சி 'ஐயோ' என்று கத்தினாள். திமிறி ருத்திரதாண்டவம் ஆடினாள். குரு சிறுவனிடமிருந்து துப்பாக்கியைப் பறித்து மாட்டின் நெஞ்சிலே ஒரு சூடு விட்டான். அது தீனமாக முனகிக் கொண்டு குப்புறக் கீழே விழுந்தது. அவர்கள் ஓடிப்போய் வாகனத்தில் ஏறித் தப்பிக் கொண்டார்கள்.

கீற்று (2 பங்குனி 2010)


No comments:

Post a Comment