கதிர் பாலசுந்தரம்
அதிகாரம் 4 - கனவான்கள்
பயந்து மிரண்டுகொண்டிருந்த கில்லாடியின் நினைவு
அலைகளில், முதல் நாள் இரவு கண்ட
கனவு மீண்டும் புத்துயிர் பெற்றது. அவன் வீமன்காமக் கொலனிப் பனையடைப்புப்
பள்ளத்துள், கொலை செய்து வீசிய
தெல்லிப்பழைப் போஸ்ற் மாஸ்ரர் ராசையரின் பிரேதம் எழுந்து நின்று இரத்தம் கொட்டும்
ஆந்தை விழிகளால் முறைத்துப் பார்த்துக் கில்லாடியைக் கைகாட்டி அழைத்து, கழுத்தைத் திருகி அவனது குடலை உருவித் தனது கழுத்தில்
மாலையாகப் போட்டு ஆவேசமாகக் கூச்சலிட்ட காட்சி மீண்டும் தோன்ற, அது வரப்போகிற பேராபத்தின் முன்னெச்சரிக்கை
என்று பயந்து நடுங்கிய கில்லாடி, கோட்டான்
சூட்டி கோஷ்டியை ‘தொழிலுக்கு’
அன்று நண்பகல் அனுப்பிய காட்சியை
மீட்டுப் பார்த்தான். அவனுக்குச் சொல்லப்படாத நிகழ்ச்சிகள் பலவிருந்தன.
அன்று மாலை 1.00 மணியளவில் கோட்டான் சூட்டி, சால்வை மூத்தான், ஊத்தைவாளி குகன் மூவரும், தங்கள் பரமரகசிய தொழிலுக்குப் புறப்பட்டனர்.
சால்வை மூத்தான்
பார்க்கிங் நகரில் ஒரு வீதியோர நடை பாதை மூலையில்; நின்றான். வீதியிலே வாகனங்கள் நெருங்கியடித்துச் சென்று
கொண்டிருந்தன. நடை பாதையிலும் பாதசாரிகள் நிறைந்திருந்தனர். அருகே உள்ள பஸ்தரிப்பு
நிலையத்தில் பஸ் வண்டி ஒன்று வந்து நின்றது. அது வாடிக்கையாளரை அவன் சந்திக்கின்ற
வழமையான இடம்.
தாமதாமில்லாமல் தலையை மூடிய புளியங்காயச்
சடைத் தலையன் சட்டிக் கறுவல் அங்கு தோன்றினான். மூத்தான் வரும்வரை காத்திருந்தவன்
போலும். அருகிலே நிற்பவர்கள் கண்டுகொள்ள முடியாதவகையில் பணமும் பொட்டலமும்
கைமாறின. சில நிமிட நேரத்தில் அழகான பதினாறு வயது மதிக்கத்தக்க நீலக்கண் வெள்ளைக்
குமர்---பொட்டலத்தை வாங்கிக்கொண்டு சற்றே தள்ளிக் காரில் காத்திருக்கும் தனது
காதலனை நோக்கி விரைந்தாள்.
மூத்தானின்
முதுகுப்புறம் ஒரு நடுத்தரவயது தமிழ்ப் பெண். அங்கு நின்ற அநேகர்
வெள்ளைக்காரர்கள். ஏனையவர்கள்---கறுப்பு மஞ்சள் மண் வெள்ளை எனப் பலரகம். ஊதா நிறச்
சேலை அணிந்;த அந்த ஈழத்துப் பெண்,
சால்வை மூத்தானின் தோலையும் முக
அமைப்பையும் பார்த்ததும,; அவன்
சிறீலங்காத் தமிழன் என்பதை அடையாளங் காண அவளுக்கு நேரமே தேவைப்படவில்லை. சால்வை
மூத்தானின் தலைமுடியைப் பார்த்ததும், அவளுக்கு வந்த சிரிப்பை அடக்கியபடி மீண்டும் பார்த்தாள். தலையைச் சுற்றிக்
காது மேல் மட்டத்துக்கு வெகுமேலே மட்டும் அரை அங்குல நீளமளவு மயிர் குத்தி நின்று
தனது ஒய்யார அழகை அவளுக்கு விளம்பரப் படுத்தியது. கீழ்ப்;பகுதி மயிரை ஒட்ட வழித்திருந்தான். போதாததற்கு இடக்
காதில் பூட்டியிருந்த தொங்கிட்டான் வேறு ஆடி அவனது அந்தஸ்தைப் பறைசாற்றியது.
சால்வை மூத்தானின் நவீன கோலத்தைக் கண்ட அந்தப் பெண் “தலைக்குள் ஒன்றுமில்லாத மண்டு. உதுகள் எல்லாம் எப்படி
லண்டனுக்கு வந்ததுகள்?” என்று தன்னைத்தானே வினாவினாள்.
அந்த பெண்ணுக்கு
எப்டித் தெரியும்? ஊரிலே நிலபுலம்
தொழில் எதுவும் இல்லாமல், ஒரு நேர
உணவுக்கே வழி இல்லாமல், கூழே
தஞ்சமென வாழ்ந்தவர்கள் எப்படி ஐந்து ஆறு லட்சம் ஏஜன்டுக்கு அள்ளி வழங்கி லண்டன்
வந்தார்கள் என்று.
ஊத்தைவாளியின் சின்னோட்டி மூக்கு விரிந்து
சுருங்கி அவனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியது. காரில் பிரயாணம் செய்தவன் பொட்டலத்
தொழிலையும் கோத்திரத்தையும் குத்திக் காட்டியது குறுணி மூக்கின் கோபத்தைப்
பற்றவைத்தது.
“பறை வேசை மோனே.
கொம்மாவுக்கு ஆள் தேடுறியோடா? நாயே
லண்டனுக்கு வந்தாப் பிறகு ஆளாகியிட்டியளோ? குட்டை நாய். உனக்குக் கெதியிலே பழக்கிக் காட்டுறன்" என்று
போய்க்கொண்டிருந்த காரை விறைத்துப் பார்த்து ஊத்தைவாளி பொருமினான்.
நடைபாதையில் சென்றவர்கள் அவனைத் திரும்பித்
திரும்பிப் பார்த்தபடி நடந்தனர்.
ஊத்தைவாளிக்குக் கோபம் தலைக்கேறியதால் கில்லாடி
தனக்கு சொல்லிவிட்ட காவல் கடமையை மறந்து, ஊர்ந்து மறைகின்ற காரை விறைத்துப் பார்த்துக்கொண்டு நின்றதால், மூன்று பொலிசார் பதுங்கி வருவதை அவன் அவதானிக்க
வில்லை. அதில் ஒன்று பெண் பொலிஸ். முப்பது வயதை எட்டாத அவளின் காந்தக் கவர்ச்சிகூட
கோட்டான் சூட்டியின் கண்களில் படவில்லை.
கோடை வெப்பத்தின் கொடுமை கடைக்கு வெளியே
கொதித்துக் கொண்டிருந்தது. கோட்டான் சூட்டி குலைந்து விட்ட தனது கூந்தலை றப்பர்
வளையத்தால் ‘போனி ரெயிலாக’
இறுக்கிய பின், இடது குருட்டுக் கண்ணின் கறுப்புக் கவசத்தைச்
சரிசெய்தபடி கடையின் வாசற் படியை அண்டிக் காணப்பட்டான். அங்கு கண்ணாடிக் கூண்டுள்
உள்ள விளம்பரப் பொருட்களைப் பார்த்துக்கொண்டு நின்ற, கறுப்பு ஸ்கேட்டும் சின்ன வெள்ளை பனியனும் அணிந்த
இரண்டு வெள்ளைக்காரக் குமர்களின் லாவண்யத்தில் சூட்டி மெய்மறந்திருந்தான். அந்தக்
குமர்கள் வெயிலின் அகோரம் தாங்காமல் தங்கள் பிளவுசுகளை கழற்றி அரையில்
கட்டியிருந்தனர்.
கோட்டான் சூட்டியும் பதுங்கி வந்து
கொண்டிருக்கும் பொலிஸ்காரர்களைக் கவனிக்கவில்லை. அவன் தனது கடமையை மறந்துபோனான்.
பதுங்கி வந்த பொலிசார் பாய்ந்து சென்று மூத்தானை நிலத்தில் விழுத்தி
குப்புறப் படுக்கவைத்து கைவிலங்கிட்டு ஒரு பொலிஸ் வாகனத்துள் ஏற்றினர்.
விழித்துக் கொண்ட
கோட்டானும் ஊத்தைவாளியும் எட்ட நின்று நோட்டம் பார்த்தனர். அவர்களை வாகனத்தில்
இருந்த மூத்தான் பரிதாபமாகப் பார்த்த போதும், அவனை முன்பின் தெரியாதவர்கள் போல அவர்கள் இருவரும்
காரில் ஏறி வீடு திரும்பும் வழியில் ஒரு ‘பப்பில்’ - தவறணையில் - ஆற
அமரக் குடிக்கத் தொடங்கினர்.
‘பப்பில்’ மேசையின் எதிர்ப் பக்கத்தில் இருந்த ஊத்தைவாளியைப்
பார்த்து,
“மச்சான் குகன்,
காலமை கவனித்தனியே, நதியா அந்த பெடியன் அமிரைப் பார்த்துச்
சிரித்து சிரித்து இரகசியம் பேசியதை. பெடியன் வந்து மூன்று நாள்கூட முழுதா
முடியவில்லை. என்ன மாதிரி ஒட்டியிட்டினம். நாங்களும் இத்தனை நாள் தினமும் கில்லாடி
வீட்டுக்குப் போய் வருகிறம். எங்களைக் கண்டால் மூஞ்சையைத் திருப்பிக் கொண்டு மேலே
தன் அறைக்கு நழுவுகிறவள். இப்ப ..."
“மச்சான் சூட்டி.
அழகான மன்மதன் போல சின்னப் பெடியன். பதினெட்டு வயது பருவ மங்கை நதியா.
நெருப்பையும் பஞ்சையும் ஒன்றாக வைத்த மாதிரி. இல்லையே? நான் சொல்லுறது சரியோ பிழையோ?"
“சரி. சரி. சரி.
பெட்டைக்குக் கில்லாடிக் கிழவன் வெறுத்துப் போட்டுது போல." சூட்டி
சொல்லிவிட்டு கிளாசை எடுத்து மதுவை ருசிபார்த்தான்.
“கில்லாடிக்கு
மனுசியிலே பூரண நம்பிக்கை. லண்டனிலே சில பெண்டாட்டிமார் போடுகிற கூத்து
கில்லாடிக்குத் தெரியாது போல."
“புதினம்
பத்திரிகையில் படித்தனியே குகன். ஒருத்தரின் காசிலே லண்டன் வந்து அவனைக் கலியாணம்
செய்து போட்டு, காதலன் லண்டன்
வந்ததும் அவனோடு ஓடியிட்டாளாம்."
“தெரியும். நதியாவும்
பெடியனும் நெருங்கிப் பழகுகினம். லண்டன் மண்ணுக்கு அரிப்புக்கூட. கவனம் என்று
கில்லாடியின் காதிலே போட்டு வைத்தால் என்ன சூட்டி?"
“டே குகன். வேண்டாம்
உந்த எழிய வேலை. நாங்கள் ஊரிலே செய்தது போதும். இன்னும் பாவம் தேடவேண்டாம்.
கில்லாடி சந்தேகப் பட்டால் பிறகு பெடியனின் பிணத்தைக்கூட ஸ்கொற்லன்ட் யாட்டாலும்
கண்டுபிடிக்க முடியாது. தெரியுமே உனக்கு, கில்லாடி கழுதைப்புலி இயக்கப் பிரதேசத் தலைவனாக இருந்தபொழுது எத்தனை பேரைக்
கொன்று வீமன்காமம் கொலனிப் பள்ளங்களுக்குள் வீசினவன் என்று. உவனைக் கண்டு
தெல்லிப்பழையே கிடுகிடுத்தது."
“தெரியும்"
என்று கூறிய குகனுக்கு எங்கோ உதைத்தமாதிரி இருந்தது. ‘பப்புள்’ அப்போது வந்துகொண்டிருந்த ஓர் இளம் பிரிடிஷ் சோடியைக் கடைக் கண்ணால்
பார்த்து ஏதோ யோசித்தான்.
“டே குகன்.
கில்லாடிக்கு இப்போதைக்கு ஒன்றும் சொல்லாதை. பெடியன் அப்பாவி மாதிரித் தெரிகிறான்.
பெடியனை அடித்துக் கொன்றுபோடுவான். பாவம் தேடாதை."
“அதைவிடு சூட்டி.
எழும்பு போவம். இப்ப ‘பப்புக்குள்’
வந்து எவ்வளவு நேரம் தெரியுமே? போய்க் கில்லாடிக்குச் சொல்லுவம், மூத்தானைப் பொலிஸ் கொண்டு போட்டான்
என்று."
“நாய் சத்தம்
போடப்போறான். நாங்கள்தான் பிழை பண்ணி போட்டம் என்று. எழும்பு குகன். போய்ச்
சொல்லித்; தொலைப்பம்."
கோட்டானும் ஊத்தைவாளியும் கில்லாடியின்
வீட்டினுள் கால் வைத்தனர்.
கோட்டான் சூட்டியின் நாரி முட்ட நீண்ட தலைமயிர்
விரிந்த கோலத்தில் கிடப்பதையும், குகனின்
சின்னட்டிச் சப்பை மூக்கின் முகப்புத் துவாரம் விரிந்து சுருங்கி விரிவதையும் கண்ட
கில்லாடிக்கு ஏதோ வில்லங்கம் நடந்துவிட்டது புரிந்தது.
“எங்கே அவன்?”
கில்லாடியின் சிந்தனை அறுந்த இடத்தில்
முடிச்சுப்போட்டது.
கோட்டானும் ஊத்தைவாளியும், கறுப்புநரி சால்வை மூத்தானைப் பொலிஸ் பிடித்த
செய்தியைச் சொல்லி விட்டுப் போன நேரந் தொடக்கம், கில்லாடி தனது மொட்டந் தலையின் உச்சிப் பகுதியில்;
பிடுங்கி எடுக்க, மயிர் தேடிக்கொண்டிருந்தவன், கவலையை மறக்க கொஞ்சம் விஸ்கி குடிக்க அடுக்களைக்குப்
போய்வந்தான். அவன் தலை மின்னி முழங்க ஆரம்பித்தது.
வீதி மின்சார வெளிச்சம் யன்னல் கண்ணாடியையும்
சிவப்புத் திரைச் சீலையையும் ஊடறுத்து வரவேற்பறைக்குள் புகுந்து ஏதோ ஆராய்ந்தது.
குங்குமப் பொம்மை கண்சிமிட்டியது. அமிர், சோபாவில் கண்ணயர்ந்து தூங்குவதாக நதியா நினைத்தாள். கில்லாடி வீட்டில்
இல்லாவிட்டாள் அவள் அவனை எழுப்பித் அவனது அறைக்குப் போய் துயிலும்படி
சொல்லியிருப்பாள். அமிர் கோழித் தூக்கத்தில் நடப்பதை அவதானிக்கிறான் என்பது
நதியாவுக்குத் தெரியாது.
சின்ன வடிவு நதியா அடிக்கடி குட்டையான கில்லாடியின்
மொட்டந் தலையையும் அவனது பிடரியில் குப்பையாகக் கிடந்த மயிரையும் பார்த்த பின்னர்
இளமை குலுங்கும் அமிரின் அங்க இலட்சணங்களைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டாள்.
திடீரென வெளிக்கதவு
அழைப்பு-மணி ரீங்கார ஓசை எழுப்பியது.
“பொலிஸ், நதியா.”
மீணடும் அழைப்பு-மணி ஒலித்தது.
கில்லாடி பூனை போல அடிவைத்து ஜன்னல் பக்கம்
சென்று திரைச் சீலையை நீக்கிவிட்டு வாசலைப் பார்த்தான். உணர்ச்சி வெடிக்க உரத்த
குரலில், “வந்திட்டான் சால்வை
மூத்தான்" என்று வெகு உற்சாகமாகக் கூறி விரைந்து போய்க் கதவைத் திறந்தான்.
தொடரும்.
No comments:
Post a Comment