கதிர்.பாலசுந்தரம்
அமிர் லண்டனை அடைந்தபோது கோலோச்சிய கோடையும்
மறைந்து குளிர் கால உதறலும் எப்பவோ
ஆரம்பித்துவிட்டது. அமிர் தனது அறையிலிருந்து கீழிறங்கிக் கொண்டிருந்தான்.
மூத்தான் தனது அறைக் கதவு இடுக்கு வழியாக வேவு பார்ப்பதை அமிரின் வருகையை எதிர்
பார்த்து வரவேற்பறை வாசலில் நின்ற நதியா கவனிக்கவில்லை.
“என்ன முகம் வாடியிருக்கு?" என்று கேட்டபடி நதியா தேநீர்க் கோப்பையை
நீட்டினாள்.
“எனக்கு தேநீர்
வேண்டாம். சொலிசிற்றரின் கந்தோருக்குப் போய் ஜீவிதாவை அவசரமாகச் சந்திக்க
வேண்டும்" என்று கூறியபடி அமிர் வீட்டைவிட்டு வெளியேறினான்.
'ஏன் உவர் திடீரென
ஆளே மாறிவிட்டார்? காலமை தேநீரும்
குடியாமல் அவசரமாகப் போகிறார்' என்று
தன்பாட்டில் கூறியபடி கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். நிலத்தை வெள்ளைப் பனிநுரை
மெல்லிய படையாக மூடியிருந்தது. அமிர் வேகமாக நடப்பதை பார்த்துக்கொண்டே நின்றாள்.
தன்னைப் பிரிட்டிஷ் அரசு திருப்பி இலங்கைக்கு
அனுப்பிவிடும் என்ற பயம் அச்சுறுத்த, தனது முறை எப்பொழுது வரும் வரும் என்று ஆவலோடு சொலிசிற்றர் நாகப்பனின்
அழைப்பை எதிர் பார்த்தபடி அவனது கந்தோர் வரவேற்பறையில் அமிர் இருந்தான்.
ஜீவிதா கந்தோரில் இருப்பாள் சுணங்காது
சொலிசிற்றர் நாகப்பனோடு கதைத்து ஆகவேண்டியதைச் செய்ய நல்ல முறையில் உதவுவாள் என்று
நம்பி வந்த அமிருக்கு, கடந்த
நான்கு தினங்களாக ஜீவிதா வேலைக்கு வரவில்லை என்ற செய்தி மேலும் பெரும்
குழப்பமாகவும் ஏமாற்ற மாகவும் இருந்தது.
அப்பொழுது அமிரின்
அருகே வரவேற்பறையில் இருந்த ஒரு முதியவர்,
“தம்;பி எந்த ஊர்?" எனறார்.
“யாழ்ப்பாணம்."
“யாழ்ப்பாணத்திலே
எந்த ஊர்?"
“யாழ்ப்பாணந்தான்.
விளங்கயில்லையோ?"
அமிரின் பார்வையும்
தொனியும் அவரின் விசாரணையை முறித்தது.
மோட்சலோகம் போன்று பளபளத்த கண்ணாடிச் சாளரங்கள,;
அறைகள் கதவுகள் தளபாடங்கள்
கொம்பியூட்டர்கள் தொலைபேசிகள் எதுவும் அவனை இம்முறை கவரவில்லை. அவன் வைத்த கண்வாங்காமல்
சொலிசிற்றர் நாகப்பனின் அறைக் கண்ணாடிக் கதவையே பார்த்தவாறு இருந்தான்.
அழைப்பு வந்து சொலிசிற்றர் நாகப்பனின்
அறைக்குள் கால் வைத்ததும், நாகப்பன்
தனது நாடியிலுள்ள அடர்ந்த நரை விழுந்த ஆட்டுத் தாடியை வருடியபடி, பற்கள் எல்லாம் நன்கு தெரியக்கூடியதாக உரத்துச்
சிரித்து “வா தம்பி அமிர் வா.
இரும். எப்படிச் சுகம். ஊரிலே அப்பா அம்மா சுகமா?" என்று வழமையாக வாடிக்கையாளரைப் பேய்க்காட்டும் சொற்களை
அள்ளி வீசி மீண்டும் கெக்கட்டம் போட்டுச் சிரித்தார்.
சொலிசிற்றர் நாகப்பனுக்குத் தெரியும், தான் திட்டமிட்டு மொழி பெயர்த்து அனுப்பிய
அமிரினுடைய மேலதிக தகவலில், அவனுடைய
அகதி விண்ணப்பத்தை நிராகரிப்பதற்குத் தேவையான பிடிகள் இரண்டு வைத்து அனுப்பியதும்,
அதனால் குடி வரவு இலாகா அவனது தஞ்ச
விண்ணப்பத்தை நிராகரித்துக் கடிதம் அனுப்பியிருக்கிறது, அந்தக் கடிதத்தைத்;தான் கையில் வைத்திருக்கிறான், அதுதான் அமிர் ஆந்தை போல முழிசிக்கொண்டு இருக்கிறான்
என்பது.
'உப்படி வருகிற அகதித் தஞ்ச விண்ணப்பங்களை
நிராகரிக்காமல் விட்டால் குடிவரவு இலாகா தற்காலிக ‘வீசா’ கொடுக்கும்,
பிறகு எங்களின் எந்த யாழ்ப்பாணியும்
இந்தக் கந்தோர்ப் பக்கம் தலைகாட்டான். நான் இந்தக் கந்தோரை இழுத்துப்
பூட்டிப்போட்டு பழையபடி பெற்றல் செட்டுக்குப் போகவேண்டி வரும்” என்று தன்னுள் கூறித் தனது செயலுக்கு நியாயம்
கற்பித்துக்கொண்டு, தனது
கருஞ்சிவப்புக் கழுத்துப் பட்டியை வலக் கையால் இழுத்தபடி,
“தம்பி அமிர். சொல்லு
தம்பி என்ன உதவி வேணும்?" என்று
சொலிசிற்றர் நாகப்பன் அபயமளிக்க ஆண்டவனால் பூவுலகில் இறக்கப்பட்டவர் போல அமிரைக்
கேட்டுவிட்டு, அவனது வாடிய முகத்தைப் பார்த்தார்.
“எனது அகதி
விண்ணப்பத்தை நிராகரித்துப் போட்டார்கள்."
“என்ன? நான் கனவிலும் அப்படி நடக்கும் என்று நினைக்க
வில்லை. எனக்குப் புதுமையாக இருக்கிறது தம்பி."
அமிர் மௌனமாகத் தனது கையிலிருந்த குடிவரவு
இலாகாவின் ஒரு கடிதத்தை சொலிசிற்றர் நாகப்பனிடம் நீட்டினான்.
சொலிசிற்றர் நாகப்பன் தஞ்ச விண்ணப்பம்
நிராகரித்த கடிதத்தை வாசித்து முடிக்க ஒரு நிமிடங்;கூட எடுக்கவில்லை. ஆனால் மூன்று நிமிடங்கள் வரை
வாசிப்பதாகப் பாசாங்கு செய்த வேளை, அடுத்த
பணக்கறப்பு ஆட்டத்துக்குத் திட்டம் போட்டான். முதல் முறையில் 700 பவுணும், அடுத்தமுறையில் 1200 பவுணும் கறக்கத் திட்டமிட்டு முடித்தபின்னர், கனைத்துப் பின் சிரித்துத் தனது கழுத்துப்
பட்டியை உருவியபடி அமிரைப் பார்த்து,
“தம்பி அமிர். குடிவரவு இலாகாக்காரன்கள் எல்லோருக்கும் காட்டுற
விளையாட்டைத்தான் உமக்கும் காட்டி உம்முடைய அரசியல் தஞ்ச விண்ணப்பத்தை நிராகரித்து
இருக்கிறார்கள்."
“எனக்குப் பயமாக
இருக்கிறது."
“ஒன்றுக்கும்
பயப்படாதையும். அதுவும் நன்மைக்குத்தான்."
“என்ன சொல்கிறீர்கள்
சொலிசிற்றர் ஐயா?"
“நிராகரிக்காமல்
விட்டால் ஆறாறு மாதமாகத் தந்து எட்டுப் பத்து வருடத்தை நிரந்தர வதிவிட உரிமை
தராமலே கடத்திறதுக்குத்தான்."
“ஏன்?"
“எல்லாம் காரண
காரியத்தோடுதான். அந்த இடைப்பட்ட காலகட்டத்தில் சிறீ லங்காவிலே ஏதாவது சமாதானம்
தலை காட்டினால் போதும், அந்தச்
சாட்டிலே திருப்பி அனுப்பலாமல்லே?"
“என்ன செய்ய வேண்டும்
ஐயா? எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை."
“தம்பி எல்லாம் நான்
வென்று தருவன். நிராகரித்தது ஒரு வழிக்கு நல்லதுதான். நீதிமன்றத்துக்குப் போனால்.
உம்முடைய வழக்கை வெல்லுறது எனக்கு ஒரு சின்ன விசயம். அதற் கெல்லாம் என்னிடம் ஒரு
சின்னச் சூத்திரம் இருக்கிறது தம்பி" என்று கூறிய சொலிசிற்றர் நாகப்பன்
கனைத்து வெற்றிச் சிரிப்பு ஒன்றை உரத்துக்
கொட்டியபடி அமிரைப் பார்த்தான்.
அந்தச் சிரிப்பொலி சொலிசிற்றர் நாகப்பனின்
அறைக்கு வெளியே கேட்டது. வரவேற்பறையில்
நாகப்பனைக் காண வந்திருந்த யாழ்ப்பாண அகதிக் கூட்டம் - ஆண்களும் பெண்களும்,
குழந்தைகளும் குமரிகளும் ஒரே நேரத்தில்
கண்ணாடிச் சுவரூடாக நாகப்பனைப் பார்த்தனர்.
சொலிசிற்றர் என்றால் யாழ்ப்பாண நீதிமன்றத்தில்
கறுப்புக் கோட்டும் சூட்டும் அணிந்து விளாசுகிற சட்டத் தரணிகளைப்போல, சொலிசிற்றர் நாகப்பனும் பிரிட்டிஷ் நீதி
மன்றத்திலே தோன்றித் தனது ஆட்டுத் தாடியையும் கருஞ் சிவப்புக் கழுத்துப்
பட்டியையும் மாறி மாறி வருடி இருமி அட்டகாசமாகச் சிரித்து பெரிய கண்களை உருட்டி
கையை ஓங்கி மேசையிலே குத்தி நீதிபதியை மலைக்கச் செய்து தனது வழக்கை வென்று தருவார்
என்று அமிர் நம்பினான்.
அமிருக்குத் தெரியாது சொலிசிற்றர்களுக்குப்
பிரிடிஷ் நீதிமன்றங்களில் வழக்கைத்
தாக்கல் செய்து வாதாடுகிற அதிகாரம் இல்லை - அது வெறும் புலுடா என்பது. அதனால்
சொலிசிற்றர் நாகப்பன் சொல்வது சரிபோல அமிருக்குப்பட்டது.
ஆனாலும் நிராகரிப்பதற்கு உரிய காரணமாக
கொழும்பில் ஐந்து மாதங்கள் தங்கி வந்ததால் நிராகரிக்கப்படுகிறது என்றும், கொழும்பில் 300,000 தமிழர்கள் வசிக்கின்றார்கள் என்றும், ஆகவே அங்கு அமிர் துன்புறுத்தப் படாமல் வசிக்க
முடியுமென்றும் காரணம் காட்டி நிராகரித்திருந்தார்கள். இரண்டாவதாகச் சொந்தப்
கடவுச்சீட்டில் வந்ததாகவும், கட்டுநாயக்கா
விமான நிலையத்தில் படையினரோ பொலிசாரோ அமிர்மீது சந்தேகம் கொள்ளவில்லை என்றும்,
தேடுவதற்குரிய நபராக அமிர்
இருந்திருந்தால் அங்கு வைத்துக் கைது செய்யப்பட்டிருப்பார் என்றும், ஆகவே இலங்கை அரசால் அல்லது பாதுகாப்புப்
படையினரால் தேடப்படாதவர் என்பதனால் அமிரின் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு
உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தான் கொழும்பில் தங்கி வந்ததாகவோ,
தனது சொந்தப் கடவுச்சீட்டில் வந்ததாகவோ
தனது தஞ்ச மனுவில் எழுதாதபொழுது, எப்படி
அவ்வாறான இரு காரணங்களை குடிவரவுப் பகுதியினர் காட்டமுடியும் என்ற கேள்வி அமிரைக்
குடைய,
“சொலிசிற்றர் ஐயா, நான் எழுதிய தஞ்ச விண்ணப்பத்தில், நான் கொழும்பில் தங்கி வந்தாக எழுதவில்லை. எனது
சொந்தப் கடவுச்சீட்டில் வந்ததாகவும் எழுதவில்லை. எப்படி அப்படி ஒரு பொய்க்
காரணத்தைக் காட்டி நிராகரிக்க முடியும்? நாங்கள் குடிவரவு இலாகாவுக்குப் பிழையைச் சுட்டிக்காட்டி முறையிடுவோமா?"
நாகப்பனுக்கு ஆத்திரம் உள்ளுரப் புகைந்தது. 'மாற்றி எழுதிய தான் பிடிபட நேரிடும் என்ற
அச்சத்தில், வடுவா பொய்ப் பெயர்
கொடுத்ததோடு, தன்னை இராணுவம்
தேடுது என்று பொய்யும் எழுதிப்போட்டு, இப்ப என்னை மாட்டப் பார்க்கிறான்” என்று உள்ளுர எண்ணியபடி,
“தம்பி இது வெள்ளைக்காரனின்
நாடு;. பொய் சொல்லுகிறாய் என்று
எழுதினால் பழிவாங்குவினம்."
“அப்படியும்
செய்வினமோ?"
“ஓ. நாடு
கடத்துவினம்."
“நான் தமிழில்
எழுதித் தந்த கடிதத்தையும் நீங்கள் செய்த மொழிபெயர்ப்பையும் தாருங்கள். ஏதாவது
பிழையிருந்தால் அவற்றை வைத்து முறையிடலாம்?" என்ற அமிரின் சொற்களை சொலிசிற்றர் நாகப்பன் கேட்டதும்,
நாகப்பன் படமெடுத்துச் சீறுகின்ற நாக
பாம்பை அண்மித்தவன் போலத் திடுக்கிட்டான்.
அப்படி ஒரு முறையீட்டைச் செய்தால் சொலிசிற்றர்
நாகப்பன் இருட்டு அறையிலே கம்பி எண்ண வேண்டி வந்திருக்கும். இதுவரை யாழ்ப்பாண
வாடிக்கையாளர் சகலரையும், சொந்தம்
பிறத்தி என்று வேறுபாடு காட்டாமல், இதனைப்
போலவே ஏமாற்றிய சொலிசிற்றர் நாகப்பனை, இதுவரை அவ்வாறான ஒரு கேள்;வியை
எவனும் கேட்டதும் இல்லை, கேட்கத்
துணிந்ததும் இல்லை.
சொலிசிற்றர் நாகப்பன் ஆத்திரத்தோடு அமிரைப்
பார்த்தான். அப்பொழுது அமிர் தனது நடு உச்சி பிரித்து வாரிய கேசத்தை வலக்கையால்
கோதி உயர்த்தியபோது அவனது நீண்ட காய அடையாளத்தைத் தெளிவாகக் கண்ட சொலிசிற்றர்
நாகப்பனுக் குக் கரடியின் கால் நகங்களால் கிழிபடுவது போன்ற உணர்வு ஏற்பட்டது.
அவனும் தன்னைப் போல யாழ்ப்பாணத்தில் ஏதோ ஒரு
ஆயதமேந்திய தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் இருந்தவனோ என்ற கேள்விக் குறி நாகப்பனை
அச்சுறுத்தியது. அல்லது சங்கர், அருளர்
ஆகியோருடன் ஆரம்ப காலத்தில் லெபனானில் டமாஸ்கஸ் நகரத்துக்குப் பக்கத்தில் உள்ள
ஹமூறியா கெரில்லா பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றவனோ என்று ஆராய்ந்து அப்படி
இருக்காது என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லி ஒருவாறு தன்னைச் சமாளித்தபடி,
“தம்பி கொஞ்சம் பொறும். வாறன் ‘பாத் றூமிற்குப்’ போய்விட்டு வாறன்" எனக் கூறியபின் மொழி
பெயர்ப்புக்குப் பொறுப்பான இலிகிதரின் அறைக்குச் சென்று அவருக்கு ஏதோ இரகசியமாகச்
சொல்லிவிட்டு வந்து தனது இருக்கையில் இருந்தபொழுது தொலைபேசி கிறீங் கிறீங் என்று
அடித்தது.
யாருடனோ ஆங்கிலத்தில் வெளுத்து வாங்குகிறார்
என்று அமிர் நினைத்தான். உண்மையில் பின்பக்க அறையில் இருந்த அந்த மொழி
பெயர்ப்பாளருடன் ஒரு ஏமாற்று வித்தை நடத்தினார் சொலிசிற்றர் நாகப்பன்.
பின்னர் தனது மேசையில் இருந்த மணியை அடித்து
மொழி பெயர்ப்பாளரை அழைத்து அமிரின் கோப்பைக் கொண்டு வரும்படி கூற அந்த மனிதரும்
பயபக்தியோடு கொண்டு வந்து கொடுத்தார்.
சொலிசிற்றர் நாகப்பன் கோப்பைப் புரட்டினார்.
அமிர் கொடுத்த கடிதம் இல்லை. “எங்கே
இந்தத் தம்பி தந்த கடிதம்?" எனக்
கேட்க, மொழி பெயர்ப்பாளர் “அது ஒரு இடமும் போயிருக்காது ஐயா. தாருங்கள்
நான் பார்க்கிறேன்" என்று கூறி நாகப்பனிடமிருந்து கோப்பை வாங்கிப்
புரட்டினார். புரட்டிக்கொண்டே இருந்தார். எப்படிக் கிடைக்கும்? அதை நாகப்பனின் கட்டளைப்படி சற்று முன்னர்தானே
அவர் கிழித்துக் குப்பைக் கூடைக்குள் போட்டு விட்டு, இப்பொழுது நாகப்பனோடு சேர்ந்து அரிச்சந்திரர்கள்
தாங்கள் என்று முத்திரை குத்துகிறார்.
திடீரெனச் சொலிசிற்றர் நாகப்பன் உணர்ச்சி
வசப்பட்டவர் போல மொழி பெயர்ப்பாளரை வெறித்துப் பார்த்து, “மிஸ்ரர்; சோதி, நான் மிக
நேர்மையாளர் என்றது எல்லாருக்கம் தெரியும். முட்டாள். உன்னுடைய பொறுப்பற்ற செயலாலே
எவ்வளவு தொல்லை தெரியுமா? நீ
ஒழுங்காக வேலை செய்;. அல்லது
சீட்டுக் கிழியும். பிறகு முந்தியைப் போல எங்காவது கடையிலே சாமான் அடுக்கிற
வேலைதான் செய்யவேண்டி வரும். உங்களை எல்லாம் நான் தலையிலே கட்டிக்கொண்டு மாரடிக்க
வேண்டிக்கிடக்கிறது. போ. கண்ணுக்கு முன்னாலே நில்லாதே. மடைச் சாம்பிராணி"
என்று ஏசியதை அவதானித்த அமிருக்கு அந்த வயதுபோன கூனிக்குறுகி நின்ற மொழிபெயர்ப்பாளர்
மீது பரிதாபத்தை ஏற்படுத்தியது. ஏதோ தன்னுடைய கெட்ட காலம் லண்டனிலேயும் தனக்குத்
துன்பம் கொடுப்பதாக அமிர் எண்ணினான்.
அமிரின் மனக்கண்களில் யாழ்ப்பாணத்தில்
பூவரசுகள் சூழ்ந்த சுடுகாட்டில் தன் தந்தையின் சிதைக்குக் கொள்ளி வைத்த காட்சி,
அதனைத் தொடர்ந்து துப்பாக்கி முனையிலே
கறுப்பு நரிகள் தனது கால்களைக் கயிற்றால் கட்டிக் காவுதடியில் தலைகீழாகத்
தொங்கவிட்டுக் காவிச் சென்று, இரும்புச்
சங்கிலியில் பிணைத்து பங்கரில் வைத்து ஏழு மாதகாலம் செய்த சித்திரவதைகள் தோன்றின.
நாகப்பனின் செருமல் அமிரின் சிந்தனையை அறுத்தது.
சொலிசிற்றர் நாகப்பன் இருமித் தொண்டையைச்
சரிப்படுத்தி, “தம்பி அமிர்.
உம்முடைய கடிதம் எப்படித் தவறிப் போச்சோ தெரியவில்லை. சரி அதை விடும். எல்லாம்
நன்மைக்கே. தம்பி அமிர், தற்காலிக
‘வீசா’ தந்தாலும் நான் முதல் சொன்னனே அப்படித்தான்
செய்வார்கள். ஏழெட்டுப் பத்து வருடம் என்று இழுத்தடிப்பார்கள்."
“இப்ப நான் என்ன
செய்ய வேண்டும்?"
“அப்பீல்
பண்ணவேண்டும்."
“வெல்ல முடியுமா?"
“நிட்சயமாக. நான்
வழக்கை வென்றுதாறன். நீதிமன்றத்துக்குப் போனால் உந்த குடி வரவுக் கந்தோர்
கைகட்டிக்கொண்டு வந்து பதில் சொல்ல வேண்டும். ஒரு சின்னப் ‘போயின்ரிலே’ உவையை லேசாக விழுத்தலாம்."
“மெய்தானோ ஐயா?"
“ஆறு மாசம் போதும்
தம்பி. பிறகு நிரந்தர ‘வீசா’
வரும். நீர் ஊருக்குப் போய் அப்பா
அம்மாவைப் பார்க்கலாம், கலியாணம்
செய்து அவவையும் கூட்டிவரலாம்" எனச் சொல்லி முடித்துவிட்டு அமிரை ஏற இறங்கப்
பார்த்து அமிரை அளந்த நாகப்பன் தான் வைத்த பொறியில் அவன் சிக்குவதை அவதானித்துச்
சந்தோசத்தில் தலையை மேலும் கீழும் அசைத்தது ‘சம்மதமா அப்பீல் பண்ண’ என்று கேட்பதுபோல இருந்தது.
சொலிசிற்றர் நாகப்பனின் வார்த்தைகள் அமிரின்
சோர்ந்த உள்ளத்துக்கு உற்சாகமளித்தன. அப்பொழுது ‘நாடு கடத்தப்படுவாய்’ என்ற கடிதத்தை நாகப்பனிடம் நீட்டிய அமிர் “இதில் என்னை நாடு கடத்தத் திகதி
குறித்துள்ளார்கள்” என்று
கூறியபடி இரண்டாவது கடிதத்தைக் கொடுத்தான். சொலிசிற்றர் நாகப்பன் அதை வாங்கியபடியே,
“உதெல்லாம் குடி
வரவுக் கந்தோரின் வழக்கமான விளையாட்டுத்தான். குறித்த திகதிக்குள்ளே அப்பீல்
எடுத்தால் உந்த வெருட்டெல்லாம் படுத்துவிடும்" என்று ஒரு உண்மையைக்
கூறிவிட்டு அமிரைப் பார்த்தார்.
“அப்ப எனக்கு ஒரு
கஷ்டமும் வராதா ஐயா?" என்ற
அமிரின் பதிலைக் கேட்ட சொலிசிற்றர் நாகப்பன் நிமிர்து அமர்ந்து, கருஞ்சிவப்புக் கழுத்துப் பட்டியை உருவியபடி ,
தனது திருகுதாளக் காயை நகர்த்தி வெட்ட
ஆயத்தமானார்.
“கஷ்டமா? தம்பி அமிர், நீர் ஒன்றுக்கும் பயப்படாதீர். குறித்த திகதிக்கை
அப்பீல் அனுப்பினால் சரி. ஒரு நாள் சுணங்கினாலும் பிறகு யாராலும் ஒன்றும் செய்ய
ஏலாது. இன்னும் ஐந்து நாள்தான் இருக்கிறது அப்பீல் அனுப்ப. என்னு சொல்லுகிறீர்?"
என்று சொல்லிய சொலிசிற்றர் நாகப்பன்
அமிரின் பதிலை ஆவலோடு ஏதிர்பார்த்தார்.
“சரி ஐயா, அப்பீல் அனுப்புவம்" என்று கூறிய
அமிருக்குத் தெரியாது இவ்வளவு பீடிகையும் இனிவரப்போகிற பணக் கறப்புக்குத்தான்
என்பது மட்டு மல்லாமல் அது தனக்கு ஒரு பேரதிர்ச்சியாக வரப்போகிறது என்பதும்.
சொலிசிற்றர் நாகப்பன் சில வினாடிகள் யோசித்து
விட்டு “தம்பி அமிர் அப்பீல்;
பண்ணக் கனக்க வராது ஒரு 700 பவுண் தாரும். உமக்காக 40 பவுண் குறைத்து விட்டிருக்கிறன். இன்னும்
ஐந்து நாள் தான் இருக்கு. நாளைக்கே காசு தந்தால்தான் அப்பீல் எழுத ஒழுங்கு
செய்யலாம்" என்று சொல்லிவிட்டு அமிரைப் பார்த்தார்.
பணம் என்ற சொல்லைக் கேட்டதும், ‘சட்ட உதவிப் பணத்துக்கான பச்சைப் படிவத்தில்
ஒப்பம் போட்டுக் கொடுத்தனான். அரசு காசு கொடுக்கிறது. இவரென்ன காசு கேட்கிறார்’
என்று எண்ணியபடி “ஐயா, பச்சைப் படிவத்தில்
ஒப்பம் போட்டுத் தந்தனான். உங்களுக்கு அரசாங்கம் சட்ட உதவிப் பணம் தருந்தானே?"
என்று கேட்டான்.
“தம்பி அமிர். அது
முந்தி. இப்ப உள்ள புதுச் சட்டப்படி ஒருவரின் அரசியல் தஞ்ச விண்ணப்பம்
நிராகரிக்கப்பட்டால் அதற்குப் பிறகு அவருக்கு சட்ட உதவிப் பணமோ அகதி வாழ்க்கை
உதவிப் பணமோ வீட்டு வாடகைப் பணமோ எதுவும் கிடைக்காது. இது புதுச் சட்டம்
தம்பி" என்று இரண்டாவது உண்மையைக் கூறிவிட்டு அமிரைப் பார்த்தார்.
“அகதிப் பணமும்
கிடைக்காதா?" என்று அமிர்
திருப்பிக் கேட்டான்.
சொலிசிற்றர் நாகப்பன் “இல்லை" என்று கூறியதும் அவனது தலையில் கொட்டனால்
அடித்ததுமாதிரி இருந்தது.
அமிர் இது வரை அகதிப் பணத்திலேயே காலத்தைக்
கடத்தி வந்தான். அகதிப் பணமும் இல்லை வேலையும் இல்லை என்று கதிகலங்கிப் போயிருந்த
அமிரின் நினைவில் கில்லாடி கூறிய
“தம்பி அமிர். நம்பர்
இல்லாமல் வேலைசெய்ய ஏலாது. கள்ள நம்பரிலே வேலை செய்கிறதெண்டால் நம்பர் தாறன்.
வருகிற சம்பளத்திலே பத்து வீதம் எனக்குத் தரவேணும். ‘இன்சூரன்ஸ்’ ‘நம்பர்’ வரக் கனகாலம்
எடுக்கும்" என்ற வார்த்தைகள்;
எதிரொலித்தன.
தொடர்ந்து முன்னர் ஒரு தினம் பிளெசற்
பூங்காவிலே ஜீவிதாவைச் சந்தித்த சமயம் அவள் கூறிய “புதிதாக வாற எல்லாரும் கள்ள நம்பரிலேதான் வேலை
செய்கிறவை. பிடிபட்டால் அதற்குக் கிடைக்கிற தண்டனை பாலியல் வல்லுறவுக்கு உரிய
தண்டனையளவு. எங்கள் கணித ஆசிரியருடைய மகன் கள்ள நம்பரிலே வேலை செய்து பிடிபட்டுக்
கனக்கக் கஷ்டப்பட்டுப் பிறகு களவாக அமெரிக்காவுக்குப் போனவர்" என்ற சொற்களும்
காதில் ரீங்காரம் செய்தன.
“என்ன தம்பி அமிர், உலகத்தையே மறந்து யோசிக்கிறீர்;? ஐந்து நாள் இருக்குது. நான் அப்பீலை ஆயத்தப்
படுத்துகிறன். நாளைக்கு இல்லாட்டில் நாளையின்றைக்குக் காசைக் கொண்டு வாரும். என்ன
சொல்கிறீர்?"
“ஓம். கொண்டு
வருகிறேன்."
“எல்லாம் வென்று
தருவேன்."
“பயப்படத்
தேவையில்லையோ ஐயா?"
“நாமிருக்கப் பயம்
ஏன்? சரி தம்பி அமிர். வெளியாலே
ஆட்கள் பார்த்துக்கொண்டு இருக்கினம். போயிட்டு வாரும்" என்ற சொலிசிற்றர்
நாகப்பனின் சொற்களைக் கேட்டு எழுந்து அவரின் கந்தோருக்கு வெளியே வந்த அமிரின் தலை
காற்றாடியாகச் சுழன்றது.
வீதியில் வாகனங்கள் நெரிசலாக ஊர்ந்தன.
குளிர்காலக் காற்று ‘ஊ’ என்று இரைந்து வீசி அமிரின் குளிர்தாங்கி
உடையையும் ஊடறுத்து ஊசிபோலக் குத்தியது. அவனுக்குக் குளிரின் கொடுமை தெரியவில்லை.
அவனின் எண்ணமெல்லாம் எதிர்காலச் சூனியத்துள் சுழன்றது.
“யாரிடம் அவ்வளவு காசைக் கேட்கிறது? இனிச் சாப்பாடுக்கு, றூம் வாடகைக்கு கையாலே காசு கொடுக்க என்ன செய்கிறது?
சால்வை மூத்தான் கள்ளக் காட் போடக்
கேட்டவன். கில்லாடி ஹெறோயின் பொட்டலம் விற்கக் கேடவன்" என்ற பழைய பேரங்கள்
உயிர்த்து எழுந்து “என்ன தம்பி.
இப்ப சம்மதமா?" என்று
கேட்பது போன்ற பிரமையில் நடந்த அமிர் எதிரே நடை பாதையில் வந்த ஒரு வெள்ளை வயோதிப
மாதோடு முட்டி மோதினான்.
தொடரும்...
No comments:
Post a Comment