Friday, 8 April 2016

முதுமை எய்துவது குற்றமா? (பகுதி 1) - சிசு.நாகேந்திரன்

முன்னுரை:

      உலகத்தில் பிறந்த எந்த மானிடனுக்கும் தான் கனகாலம் வாழவேண்டும், உலக விடயங்களை அனுபவித்து இன்பம் எய்தவேண்டும் என்ற பேராசையே அவனைப் பிடித்து ஆட்டுகிறது.  ஆனால் உண்மையில் தனது முதுமைக்காலத்தில் அனுபவிக்கப்போவது நரகமேயொழிய சுவர்க்கமல்ல என்பதை அவன் இளமையாக இருக்கும்போது உணரத் தவறிவிடுகிறான். இன்னுமொரு விதமாகச் சொல்லப்போனால் வயது முதிர்ந்தவர்கள் தங்கள் தினசரிவாழ்க்கையில் சந்தோம் அனுபவிப்பதிலும்பார்க்க துக்கத்தையும் வேதனையையும்தான் அதிகமாக அனுபவிக்கிறார்கள் என்பது கண்கூடு.  மேலை நாடுகளில் நிலவும் விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்பட்டிருக்கும் உடலாரோக்கியம் மற்றும் உளவளம் சம்பந்தமான கண்டுபிடிப்புகள் காரணமாக வியாதிகள் பீடிப்பதைக் கட்டுப்படுத்தியும், நோய்; வந்தபின்னர் அவற்றிற்குப் பரிகாரம் தேடிக்கொள்ளவும் வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதனால் நோயினால் ஏற்படக்கூடிய வேதனைகளையும் நோவையும் ஓரளவுதான் கட்டுப்படுத்தலாம். ஆனால் நோய் வராமலோ, அதன் உபாதைகளிலிருந்து தப்பிக்கொள்ளவோ முடியாது. அது பிராரப்தத்தின் நியதி.  ஒரு வியாதியினால் ஏற்படும் வலியை மருந்துகள் மாத்திரைகளை உட்கொண்டு ஓரளவு குறைக்கமுடிந்தாலும், அம்மருந்துகள் விட்டுச் செல்லும் பக்கவிளைவுகள் தவிர்க்க முடியாதவை.  அது வேறொரு வேதனையை அல்லது நோயைத் தந்துவிடும்.  ஒரு மருந்தை உட்கொண்டு வியாதி குணமடைந்த பின்னர் அதன் பலனாக வேறொரு வியாதி உடம்பில் தோற்றுவதை அடிக்கடி நாம் காணக்கூடியதாக இருக்கிறது.  சில மருந்துகள் எதிர்விளைவுகளைக்கூட ஏற்படுத்திவிடுகின்றன. 

       80, 100 ஆண்டுகளுக்குமுன்னர் வாழ்ந்திருந்த வயோதிபர்கள் பல நோய்களினால் தாக்கப்பட்டார்கள். ஆனால் அவற்றைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியும் மனவலிமையும் அவர்களிடம் தாராளமாக இருந்தன.  ஏனெனில், அவர்கள் நாளாந்தம் வாழ்ந்து வந்த வாழ்க்கை நடைமுறைகளும் உட்கொண்ட உணவு வகைகளும் அவர்களுக்குத் திடகாத்திரமான உடற்கட்டையும் எதையும் தாங்கிக கொள்ளக்கூடிய சக்தியையும் அளித்தன.  அதனால் தீராத வியாதியினால் பீடிக்கப்பட்டு படுக்கையிற் கிடந்து அழுந்திய முதியவர்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையினரே என்று கூற இடமுண்டு. எம் முன்னோர்கள் இயற்கை நியதிகளுக்குக் கட்டுப்பட்டு இயற்கையோடு சேர்ந்தே வாழப் பழகிக் கொண்டவர்கள். அதற்கொப்ப, நோய்கள் வந்தபொழுதுகூட கூடியவரை இயற்கை வைத்திய முறைகளையே கைக்கொண்டார்கள்.  தினமும் அவர்கள் சூரிய உதயத்திற்கு 2, 3 மணித்தியாலங்களுக்கு முன்னர் நித்திரைவிட்டெழுந்து பல வேலைகளில் ஈடுபடுவார்கள்.  இரவு படுக்கைக்குப் போகும்வரையும் அவர்கள் புரிந்த பற்பல வேலைகளும், அவர்கள் உட்கொண்ட ஆரோக்கியமான சத்துள்ள உணவும், அவர்களின் மனங்களில் ஊடாடிய தூய எண்ணங்களும் இப்போதைய தலைமுறையினர் நினைத்தும் பார்க்கவே முடியாத அளவுக்கு வேறுபட்டவையாகும். 


புலம்பெயர்ந்திருக்கும் முதியோரின் பொறுப்புக்கள்

புகலிடத்தில் முதியோர்களின் தேவைகளும் சேவைகளும்:

வெளிநாடுகளில் முதியோர்: மனிதரை மனிதர் ஒதுக்கிவைக்கும் வழக்கம் சாதிபேதத்தினால் மட்டும்தான் ஏற்பட்டதென்று நினைக்காதீர்கள்.  கீழைத்தேயப் பண்பாட்டில் அப்படியுமொரு ஒதுக்குமுறை இன்னும் இருக்கிறதுதான். தமிழீழத்தில் சாதிபேதம் அருகிவருகின்றது. ஆயினும் அது முற்றாக ஒழிய நாளெடுக்கும்.  ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் நடைமுறையில் இதுவரைகாலமும் இராதபோதும், இப்போது பல தமிழ்க்குடும்பங்களில்; காணக்கூடிய, மனதுக்கு வேதனை தரும், அனுபவம் ஒன்று - அதுதான் முதியவர்களை மதிக்காமை.

பிறந்த மண்ணில் தனியே இருந்து துன்பப்படாமல் தம்மோடு வந்து சேர்ந்து கொள்ளுமாறு பெற்றோரை வருந்தி அழைத்துக் கொள்ளும் பிள்ளைகள், புலம்பெயர்ந்த நாடுகளில் வைத்து தமது செயற்பாடுகளால் அவர்களின் மனதை நோகச் செய்வதை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. தமது விருப்புக்கு அமையவே தங்களின் நடை, உடை, பழக்கவழக்கங்கள், உறவாடல், ஆசாபாசங்கள் அனைத்தையும் பெற்ரோர் மீது வலிந்தோ மிரட்டியோ திணிப்பார்கள். வெளியே போய்த் தாமும், தமது பிள்ளைகளும் மேல்நாட்டு உணவுகளைக் கொண்டு வந்து வைத்து சுவைத்து உண்டு மகிழ்வர். அந்த உணவு வயதானவர்களுக்கு ஒத்து வராது. அதுபற்றிக் கவலைப்பட மாட்டார்கள். நமது மண்ணில் தீண்டாமைக்குக் காரணம் சாதீயம் - ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் தீண்டாமை என்பது முதியோரை, பெற்றோரை ஒதுக்குவதாகும். இப்படி, தமக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் பணி செய்யும் முதியவர்களை அடக்கி ஒடுக்கும் முறையானது எவ்வாறெனில், தாய்நாட்டில் முன்பிருந்த வழக்கம், தண்ணீர் காணும் வரை கிணற்றை ஆழமாகத் தோண்டுகிற 'கீழ்ச்சாதியினனை', தண்ணீர் ஊற்று சுரக்கமுன் வெளியே வந்துவிட வேண்டும். ஊற்றில் வரும் தண்ணீரை அவன் தொடக்கூடாது என்ற சாதீய ஒடுக்குமுறைகளுக்கு, ஒப்பானதாகும். பெற்றோருக்கு வேறாக சாப்பாட்டுப் பீங்கான், வேறாக கோப்பை. இப்படி, ஒரு சாதி குறைந்தவனை அல்லது வேலைக்காரனை எப்படி நடத்துவார்களோ, அதே கதிதான் இந்தப் பெற்றோருக்கும். ஆனால் அவர்களிடமிருந்து நன்றாக வேலைகள் மட்டும் வாங்கிக் கொள்ளுவார்கள். சுகவீனமாகப் படுக்கையில் விழுந்துவிட்டால் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, அங்கு 'விசிறி' பண்ணி விடுப்புப் பார்ப்பார்கள். அந்தப் பெற்றோர் வைத்தியசாலைத் தாதிகளின் தயவைத்தான் எதிர்பார்த்திருக்க வேண்டும். புண்ணியஞ் செய்திருந்தால் நல்ல தயவுள்ள தாதி வந்து கிடைப்பார். இல்லாவிடில் நரகம்தான்! (புலம்பெயர்ந்திருக்கும் முதியோர்கள் தங்கள் கடைசி நாட்களைப் பற்றி யோசிக்க வேண்டிய நேரம் இது!)

எங்கள் நாட்டில் வயதானவர்கள் தங்கள் சொந்த வீட்டிலேயே தங்கியிருந்து தமது வாழ்க்கையை முடிப்பர்.  அதனால் அவர்களுக்கு ஒரு உரிமை, சுயகௌரவம் மனதில் உறைந்திருக்கும். புலம்பெயர்ந்த நாடுகளிலோ அக்கா வைத்துப் பார்க்கட்டும், அண்ணன் பார்த்தாலென்ன என்;று பெற்றோரைப் பேணும் பொறுப்பைத் தட்டிக்கழித்து மற்றவர்கள்மேல் சுமத்திவிடுவார்கள்.  முதியவர்களுக்கு என்று தனிப்பட்ட நிறுவனங்களை அரசாங்கம் அமைத்திருந்தாலும், குடும்பத்தோடு ஒட்டிவாழ்ந்து பழகிவிட்ட எம்மவர்களுக்கு அது ஒத்துவராது. அந்த நிறுவனங்களில்  தனிமையும், வசதிக்குறைவுகளும், யந்திரம்போன்ற வாழ்க்கையும் அவர்களை வாட்டும். அந்நிய நாட்டில், பிள்ளைகளுடனேதான் வாழ்ந்து, அவர்களுக்கு அனுசரணையாக நடந்து, தமது வாழ்நாளை வெறுப்புடனும் விரக்தியுடனும் கழித்து, கடைசியில் மடிய வேண்டிய நியதி முதியோருக்கு.          

எமது முதியவர்கள் சிலர் தமக்குப் பொழுது போகவில்லையே என்று கொட்டாவி விட்டுக்கொண்டும் சலித்துக்கொண்டும் இருக்கிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் ரசிப்பதற்கு சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கலை நிகழ்ச்சிகளுக்குப் பஞ்சமில்லை.  ஒவ்வொரு வார இறுதியிலும் அநேகமாக ஒவ்வொரு வட்டாரத்திலும் நடனம், நாடகம், சங்கீதக் கச்சேரி, களியாட்டங்கள் இவற்றில் ஏதாவதொன்று நடக்கும். முதியவர்கள் தமது பிள்ளைகளுடனோ பேரப்பிள்ளைகளுடனோ இவற்றிற்குப் போய் பொழுதுபோக்கலாமே! ஆம் போக்கலாம், ஆனால் எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிட்டாது. கூட்டிப்போவதற்கு ஆள்வசதி, வாகனவசதி, தனிமையாக இயங்கமுடியாமை, அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க இயலாமை, இப்படிப் பல சிக்கல்கள் வரக்கூடும்.  இருந்தும், பல முதியவர்கள், ஆரோக்கியமாக உள்ளவர்கள் அங்கங்கு காணும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள், சமய, கலை, கலாசாரங்கள் சார்ந்த அமைப்புகளில் பணியாற்றித் தமது நேரத்தைப் பிரயோசனமாகக் கழிக்கிறார்கள்.  இவ்வாறு இவர்கள் சுறுசுறுப்பாகவும் ஏதாவது பணிகளில் ஈடுபட்டுக்கொண்டும் காலத்தைக் கடத்தும்வரை இவர்களது ஆரோக்கியம் குன்றாது என்பது எனது சொந்த அனுபவம்.

மூத்தோர் சங்கங்கள்:
முதியவர்களுக்கென்றே பல சங்கங்கள் எல்லா நாடுகளிலும் இயங்குகின்றன. அவற்றில் இவர்களும் சேர்ந்து தமது சமுதாயத்துக்குப் பயன்படக்கூடிய பல ஆக்கபூர்வமான திட்டங்களைத் தயாரித்துச் செயலாற்றி, முன்னேற்றம் அடைந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. மேலைநாடுகளில், பிரதானமாக ஒஸ்ரேலியாவின் எல்லா மாநிலங்களிலும், பல இனத்தவர்களும் தங்களினத்தின் முதியோர்களுக்கென விசேட சங்கங்கள் அமைத்திருக்கிறார்கள். அந்தவகையில் ஒஸ்ரேலியாவில் சில மாநிலங்களில் வாழும் தமிழர்களும் தமிழ் மூத்தோருக்கென சங்கங்கள் நிறுவி அவற்றை நன்கு பரிபாலித்து வருகின்றனர். இச்சங்கங்களின் அங்கத்தவர்கள் மாதமொருமுறை ஒரு மண்டபத்தில் ஒன்றுகூடி அங்கு ஒழுங்குசெய்யப்பட்டிருக்கும் பல நிகழ்ச்சிகளைக் கண்டுகளிப்பதுடன் மதியபோசனமும் சாப்பிடுவார்கள்.  நிகழ்ச்சிகள் பலவிதம்.  இசை நிகழ்ச்சி, நடனம், ஆரோக்கியம்பற்றி சொற்பொழிவு, முதியவர்களுக்கு வரக்கூடிய வியாதிகள், அவற்றை வராமற் தடுக்க எடுக்கவேண்டிய படிமுறைகள், அவை வந்துவிட்டால் அடுத்துச் செய்யவேண்டிய நடைமுறைகள் இவை யாவையும் அடக்கிய கற்பித்தல் சொற்பொழிவுகளும், கலந்துரையாடலும் நடைபெறும்.  முதியவர்களுக்கு அவற்றினால் நிறையப் பலனுண்டு.  ஆண்டுக்கு 4, 5 தடவைகள் கிட்டிய இடங்களுக்கு சுற்றுலா போவார்கள்.  பஸ் ஒன்று ஒழுங்குபண்ணி 40, 50 அங்கத்தவர்கள் காலையில் புறப்பட்டு பிரயாணம்பண்ணி விசேடமான அந்த இடங்களைப் பார்வையிட்டுவிட்டு மாலை திரும்புவார்கள். அவர்களின் பொழுது இனிது கழிவதுடன் அவர்களின் பொதுஅறிவும் விருத்தியடையும். அநேகமாக எல்லா மூத்தோர் சங்கங்களிலும் புத்தகங்கள் சேர்த்துவைத்து அவற்றை வாசிக்கத் தேவைப்படும் அங்கத்தவர்களுக்கு விநியோகிப்பார்கள். சாதாரண கதைப்புத்தகங்கள் சஞ்சிகைகளைவிட நல்ல அறிவு புகட்டும் புத்தகங்களும் அங்கு இருப்பதைக் காணலாம்.  இவை முதியவர்களின் அறிவு விருத்திக்கும், பொழுது பிரயோசனமாகக் கழிவதற்கும் உதவும்.

மூத்தோர் சங்கங்கள் அரசாங்க அங்கீகாரம் பெற்று, அவற்றிற்கு அரச நிதியுதவியும் ஓரளவு கிடைக்கும். சங்கத்தின் செயற்குழு அங்கத்தவர்கள் சங்கத்தின் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக இருக்கவேண்டியது. ஒவ்வொரு சங்கத்துக்கும் யாப்பு இருக்கிறது. நிதிசம்பந்தமான கட்டுப்பாடுகளும் அரசாங்கம் விதித்திருக்கிறது. அவைகளின் கணக்குகள் ஆண்டுதோறும் முறையாக ஆய்வுசெய்யப்பட்டு அதற்குரிய அரசாங்கத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்படவேண்டும்.  இச்சங்கங்களில் அங்கம் வகிக்கும் பல முதியவர்கள் அவற்றால் பலன்பெற்று, தங்கள் வயதுச்சுமையை உணராதபடிக்கு அவற்றைப் பாவித்தும் வருகிறார்கள். 

பழக்கதோசம்: முதியவர்கள் 60, 70 ஆண்டுகளாகப் பழகிவைத்திருந்த பழக்க வழக்கங்களைத் திடீரென்று கைவிடமுடியாதல்லவா! தாய்நாட்டில் வறுமை காரணமாகவும், பொருள்கள் கிடைப்பது அருமையென்பதாலும், கடையில் காணும் பொருட்களை மலிவான விலைக்கு வாங்குவதும், வாங்கிய பொருட்களைப் பழுதடையாமல் காப்பாற்றி நீண்ட காலத்துக்கு வைத்துப் பாவிப்பதும், தேவையின் நிமித்தம் அவர்களுக்கு ஊறிப்போன பழக்கங்களாகும். அந்தப் பழக்கங்களை புலம்பெயர்ந்த நாடுகளில் கைவிடச்சொன்னால்; அவர்களுக்குக் கடினமாகத்தான் இருக்கும். அதனால் இளையசமுதாயம் அவர்கள்மேல் கோபித்துப் பிரயோசனமில்லை. அவர்களுக்கு ஏற்ற புதியபொருட்களை வாங்கிக்கொடுத்து அவர்களையும் நாகரிக வலைக்குள் மெல்ல மெல்ல இழுத்துக்கொள்ளுவதுதான் உசிதம்.

65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு Medicare, Anti-flu Injection முதலியவை இலவசமாகக் கிடைக்கும். பிரயாணக் கட்டணங்களிலும் சலுகை உண்டு. மருந்துகள் விசேட குறைந்த விலையில் கிடைக்கவும் அரசாங்கம் ஏற்பாடுகள் செய்திருக்கிறது.  ஒஸ்ரேலியாவில் Medibank (Private Insurance) என்ற சுகாதாரக் காப்புறுதி ஸ்தாபனம் இருக்கிறது. அதில் அங்கத்தவராகச் சேர்ந்து மாதாமாதம் பணம் கட்டிவந்தால், நோய்வந்தபோது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதில் சலுகைகள் கிடைக்கும்.  சிகிச்சைக்குரிய கட்டணத்தில் கழிவு கிடைக்கும், சத்திர சிகிச்சை முதலியவற்றிற்கு கனகாலம் காத்திருக்கத் தேவையில்லை. இவைபோன்ற வேறு சலுகைகளும் கிடைக்கும்.

            நடுவயதைத் தாண்டிய முதியோர் சிலர் தங்கள் அனுபவத்தாலும், தாங்கள் வாசித்துப் பெற்ற அறிவாலும், தமது மனதைத் திருத்தி, திடப்படுத்தி, பலவிதமான சுகபோகங்களையும் மட்டுப்படுத்தி எளியவாழ்வைக் கடைப்பிடித்து இயல்பாக வாழ்ந்துவருவதனால் ஆரோக்கியத்துடன் காணப்படுகிறார்கள்.

            மேலைநாட்டாரிடமுள்ள வழக்கங்களிலொன்று, திருமணமான இளம் தம்பதிகளுடன் பெற்றோர், முதியோர் ஒரே வீட்டில் வசித்தால் தம்பதிகளின்; பாசத்துக்குப் பங்கம் விளைவிக்கக்கூடும் என்ற உண்மையின் அடிப்படையில், திருமணமானதும் இளம் தம்பதிகள் வேறு வீடு அமைத்துக்கொண்டு புறம்பாக வாழுவார்கள்.  ஆயினும் இரு குடும்பங்களுக்கிடையிலும் தொடர்பு, கொடுக்கல்வாங்கல், விருந்துகள், கொண்டாட்டங்கள் அடிக்கடி நடைபெற்று பரஸ்பர அன்பு தொடர்ந்திருக்கும்.  இதனால் தலைமுறை இடைவெளியினால் ஏற்படக்கூடிய கருத்துவேற்றுமை, கொள்கைவேறுபாடு, மனஉளைவு முதலியவற்றைத் தவிர்க்க வாய்ப்புண்டு. புலம்பெயர்ந்திருக்கும் நம்மவரிற் சிலரும் இந்த வழக்கத்தை கைக்கொள்ளுகிறார்கள்.

பொதுப்படையாக, முதியோர்கள் என்று சொல்லும்பொழுது அவர்களை மூன்று கூறாகப் பிரிக்கலாம்:– 60–70 வயது:  71–80 வயது: 81–100 வயது.  ஒவ்வொருவரின் வயது முதிர்ச்சிக்கும் ஏற்றவாறு அந்தந்த வயதுக்கூற்றுக்குள் உள்ளவர்களின் வாழ்க்கை நடைமுறைகள் வித்தியாசமாக இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.

தாய்நாட்டில் இம்முதியோர் வாழ்ந்த வாழ்க்கைமுறைகள்:
      ஊரிலிருந்தபொழுது 60-80ஆண்டுகளாகப் பழகி ஊறிப்போன பழக்கவழக்கங்களை புலம்பெயர்ந்த இடங்களிலும் பிரயோகிக்க முயற்சித்தால் அது பெரிய பிரச்சினைகளை உருவாக்கும்.  புகலிடத்தில் பிள்ளைகள், பேரர்கள் தினந்தோறும் கைக்கொள்ளும் ஒவ்வொருகாரியத்திலும்; நடைமுறையிலும் வித்தியாசங்களை அவதானிக்கலாம்.  அவற்றிற்கு ஏற்றவாறு முதியோர் தங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வது அவசியம்.  தவறினால் அது குடும்பத்துக்குள் வீண் சச்சரவுகளை உண்டாக்கும்.

வீண்விரயம்:
      கடையில் பொருட்களை வாங்கும்பொழுது அத்தியாவசிய தேவைக்கு வேண்டிய வற்றையே வாங்கவேண்டும்.  சில பொருட்களைத் தேவைக்கு மேலகதிகமாக வாங்கி விட்டு, பின்னர் மிஞ்சுவதை இனிமேல் ஊரில் நம்மவருக்கு அனுப்பவும் முடியாது:  அங்கு கட்டுப்பாடு. ஆகவே, பணத்தை உடனடித் தேவைகளுக்குமட்டுமே செலவழித்து மிகுதியைக்கொண்டு நமது நாட்டிலிருக்கும் பசித்தோர் முகம்பார்.  காந்தியடிகளின் கொள்கைப்படி, தேவைக்கதிகமான பொருட்களை வைத்திருப்பவன் மற்றவர்களுக்குரிய சொத்தை அபகரித்த கள்வனாகிறான்.  ஒவ்வொரு வீட்டிலும், கவனித்தால் தெரியும், சமைத்த உணவுகள் அல்லது உணவுப்பொருட்கள் குப்பைத்தொட்டிக்குள் போகின்றன.  இது எப்படி ஏற்படுகின்றது? இளசுகள் வேறேதாவது ருசிப்பண்டம், அல்லது வுயமந-யறயல சாப்பாடு சாப்பிட்டால் சாப்பாட்டு நேரத்தில் அவர்களுக்கு பசிக்காது.  ஆதலால் சமைத்த உணவு வீணாவது நிச்சயம்.  இது தவி;ர்க்கப்படவேண்டும். 
      சாப்பாட்டு விடயத்தில் திட்டமிடல் முக்கியமானது.  வெளியிற் போகையில் கடையிற் சாப்பிடும் திட்டமிருந்தால் முன்கூட்டியே அன்றைய சமையலை அதற்குத் தக்கதாக குறைத்துக்கொள்ளவேணும்.  
      முதுமையிலாவது மற்றவர்களுக்காக வாழக் கற்றுக்கொள்ளவேண்டும்.  செலவைச் சுருக்கவேண்டும்.  குப்பைப்தொட்டிகளில் உணவால் நிரப்புவதைத் தவிர்க்கவேண்டும்.  உணவை வீணாக்குவது பாவம்!

இளசுகளைத் தங்கள்பாட்டில் விட்டுவிடுங்கள்:
      வீட்டிலோ வெளியிலோ இளையவர்கள் கூடிக் கலந்துரையாடிக்கொண்டிருக்கும் இடங்களில், அவர்கள் அழைத்தாலன்றி, வலிந்து நுழைந்து அவர்களுடன் உரையாடுதலைத் தவிர்த்துக்கொள்ளுதல் நல்லது. 

மேசைப் பழக்கங்கள் (Table manners):
      இப்போது முதியோராயிருப்பவர்களிற் பெரும்பாலோர் ஊரிலிருந்தபொழுது சாப்பாட்டை மேசையில்வைத்துச் சாப்பிடுவது குறைவு. கோப்பையைக் கையில் வைத்துக் கொண்டே சாப்பிடுவார்கள், சோறு கறிகளை இன்னுமொருவர் விநியோகிப்பார்.  ஆனால், மேலைநாடுகளில் மேசைவழக்கம் (Table manners)
  என்றொரு வழக்கமுண்டு. நீட்டு மேசையில் பரவி வைத்திருக்கும் சாப்பாட்டு வகைகளிலிருந்து தாங்கள் விரும்பியவற்றை விரும்பியஅளவு பரிமாறிக்கொள்ளலாம். சாப்பிடும்பொழுது கைகளை அதிகம் பாவிக்காமல் கரண்டி, முள்ளுக்கரண்டி, மேசைக்கத்தி முதலியன பாவித்துச் சாப்பிடுவர். சாப்பாட்டுக்கு முன்னர் சிலர் குடிவகை (ஒரு குட்டி டோஸ்) பாவிப்பார்கள். சாப்பாட்டுக்குப் பின்னர் பழங்கள், குளிர்கழி முதலியன விநியோகிப்பார்கள். முடிவில் கை, வாய்துடைக்க (கடுதாசிக்) கைக்குட்டை மேசையில் ஒவ்வொருவருக்கும் வேறுவேறாக இருக்கும், பாவிக்கலாம்.  இந்த மேசைவழக்கத்தை வீட்டிலேயே பழகிக்கொண்டால், பிள்ளைகளுடன் வெளியேபோய் ஏதும் ஒரு திருமண நிகழ்ச்சி முடிவிலோ, அல்லது பொதுநிழ்ச்சியின் இறுதியில் நடைபெறும் போசனவிருந்திலோ கலந்துகொள்ளும்பொழுது கூச்சமில்லாமல் மற்றவர்களைப்போல் இந்த மேசைவழக்கங்களை முதியவர்களும் கடைப்பிடிக்கலாம். 

பிறநாடுகளில் குடிபெயர்ந்திருப்பவர்களிற் பலர் வேறு நாடுகளிலிருந்து வயதான உறவினர், நண்பர்கள் தங்களிடம் வருவதை விரும்பமாட்டார்கள்.  ஏனெனில், தங்களுக்கு மேலதிக செலவு ஏற்படும், வருத்தம் வந்தால் தாங்கள்தானே பராமரிக்கவேண்டி வரும், இறந்து விட்டால் அது ஒரு தேவையில்லாத தொல்லையும் செலவினமும் என்பதற்காக. 

புத்திமதி சொல்ல முற்படுதல்:
      குடும்பத்தில் ஏற்படும் சில சிக்கலான பிரச்சினை;களில் முதியவர்கள் தலையிட்டு அறிவுரை வழங்குவது அக்குடும்பத்தின் சில அங்கத்தவர்களுக்குப் பிடிக்காமலிருக்கலாம். தம்மை மிஞ்சி, தங்கள் நிலைப்பாட்டுக்கு மாறாக, புத்திகூற வந்துவிட்டார் என்ற பொறாமை.  ஆனால் அவர் கூறிய புத்திமதி நியாயமாக இருக்கலாம்!

அன்பு, காருண்யம், சிக்கனம் முதலியவற்றைப் புகட்டவேண்டும்:
      முதியோர், தம் அனுபவத்தைக்கொண்டு, தாம் வாழும் வீட்டிலுள்ள இளம் சந்ததியினருக்கு முறைக்குமுறை புத்திமதி சொல்லவேணும்.  தாம் சொல்வதற்கான காரணங்களையும் தமது சொந்த அனுபவத்தையும் எடுத்துரைக்கவேணும். தற்கால சிறிசுகள் முதியோரின் புத்திமதிக்குச் செவிசாய்க்கமாட்டார்கள்.  ஆயினும் விளையாட்டு விளையாட்டாகவோ, கதைசொல்லும் பாணியிலோ, கோமாளிக் கூத்தாடியோ நீங்கள் சொல்ல வேண்டிய புத்திமதிகளை அவர்கள் அறியாமலே அவர்களுக்குப் புகட்டி விடவேண்டும்.

தவித்தோரை வாழவை:
      முதுமையிலாவது மற்றவர்களுக்காக வாழக் கற்றுக்கொள்ளவேண்டும்.  செலவைச் சுருக்கவேண்டும்.  குப்பைப்தொட்டிகளில் உணவால் நிரப்புவதைத் தவிர்க்கவேண்டும்.  உணவை வீணாக்குவது பாவம்!.  உணவை ஊதாரித்தனம் பண்ணும்பொழுது எமது சொந்தபந்தம் அங்கு பசியால் வாடுவதை ஒருதரம் எண்ணிப்பார்.  எம்மினத்தின் ஒருசாரார் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, தங்க இடமின்றி அவலத்தில் வாடும்பொழுது இங்கு எமக்குக் கிடைக்கும் பணத்தை வீண் விரயம் செய்வது கடவுளுக்கு அடுக்காது. அது பாபச்செயலாகும்.
      செலவைக் குறைத்து, அவசிய தேவையுள்ள மற்றவர்களுக்கு உதவும் மனிதாபிமானக் கொள்கையை முதியோர்தான் தாம்தாம் வாழும் வீடுகளில் பரப்பவேணும்.
பிறருக்குக் கொடுத்து அவர்களின் சந்தோசத்தைக் காண்பது மனதுக்கு ஒரு திருப்தி. நீங்கள் கொடுப்பது பணமாக இருக்கலாம், பொருளாக இருக்கலாம் அல்லது சேவையாகக்கூட இருக்கலாம்.

பசித்தோர் முகம்பார்:  அடுத்த நேரம் எங்கிருந்தாவது ஏதாவது சாப்பாடு வருமோ என்று பசியோடும் ஏக்கத்தோடும் அங்கலாய்த்துக்கொண்டிருக்கும் எமது பந்துக்களை – சாப்பாட்டை வீணாக்கும் நேரத்திலாவது – நெஞ்சில் நினையுங்கள்.  விதிவசத்தால் ஒரு இனத்திலுள்ள சிலருக்கு பசியும் பட்டினியும், பயமும், வாழ்க்கையில் விரக்தியும் அவர்களை ஆட்கொண்டிருக்கையில் அதே இனத்திலுள்ள மற்றையோருக்கு அவர்களின் விதிவசத்தால் அவர்கள் புலம்பெயர்ந்த இடங்களில் சுமுகமான வாழ்க்கையும், போதியளவு வருவாயும் கிடைத்திருக்கின்றன.  மேலும் எம்மவரிற் பலர் பசியறியார்,  இயற்கை அனர்த்தங்களுக்கு ஆளாக்கப்படவில்லை. அவர்கள் வசதியான இல்லங்களும், வாழ்க்கை வசதிகள் பலவும் கிடைத்து, இன்பமாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பது கடவுளின் கருணையென்றே கூறலாம்.  ஆயினும், அவ்வாறு வசதி படைத்தவர்கள் தங்கள் ஒவ்வொரு செயலின்போதும் ஈழத்தில் வாழ்க்கையில் அல்லலுற்று விரக்தியடைந்திருக்கும் எமது இரத்தபாசங்களுக்கு எவ்வாறு உதவலாம் என்று எண்ணிப் பார்க்கவேணும்.
      கடவுளை நாம் வேண்டி, அவனருளால் எமக்குத் தாராளமாகக் கிடைத்திருக்கும் வருவாயை நாம் நினைத்தபடி, எமது தேவைக்கதிகமாக, செலவுசெய்வதை யாரும் தடுக்கவோ குறைசொல்லவோ முடியாது என்ற மமதையில் கிடைத்த பணத்தை வீண் விரயம் செய்யும் நம்மவரை என்செய்வது?   அவர்கள் எண்ணுவதுபோல “என் பணத்தை நான் எப்படியும் செலவு செய்வேன்.  அதைத் தட்டிக்கேட்பவன் யார்?”   என்று தாங்கள் செய்யும் மிகையான காரியங்களை நியாயப்படுத்த முற்படுவார்கள்.  ஆனால், அங்கு பரிதவிக்கும் மக்களின் ஈனக்குரல் பிறர் உணராத விதமாக, செய்மதிவழியாக வந்து இங்கு வசதியாக வாழும் உள்ளங்களை உறுத்தாமல் விடாது என்பது மறுக்கமுடியாத உண்மை.  
 
முதியவர்கள் விழிப்பாக இருந்து தவிர்க்கவேண்டியவை
எச்சிற் பழக்கங்கள்,  சுருட்டு,  குடிவகை,  உடற்சுத்தம்,  உடை சுத்தம்,  பேச்சு நிதானம்,  புறுப்புறுப்பு,  புறணி சொல்லுதல்,  குற்றம் பிடித்தல்,  மற்றவர்களின் அலுவல்களில் மூக்கை நுழைத்தல்,  தொலைபேசி பாவனை,  வழவழத்த கதைகள் முதலியனவற்றை முதியோர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். 


தொடரும்...



      

3 comments:

  1. இளையோர், முதியோர் என்ற பேதமின்றி அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை இது. பள்ளி பாடப் புத்தகங்களில் பாடமாக வைக்கலாம்.

    ReplyDelete
  2. அவசியம் வெளிநாட்டிற்கு செல்லும் அல்லது சென்று பிள்ளைகளுடன் வசிக்க முற்படும் (தனது நாட்டில் வேலையில் ஒய்வு பெற்றவர்கள்) ஒவ்வொருவரும் படித்தது கடை பிடிக்கவேண்டியவைகள்.

    கட்டுரை மிக நீளம்; But very well written! மூன்று பகுதிகளாக மறு பதிவு செய்வது நல்லது.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பதிவுக்கு நன்றி. பகுதி பகுதியாகப் பிரித்துப் போடுகின்றேன்.

      Delete