Thursday, 28 April 2016

உயிர்ப்பு - சிறுகதை

1. உதயம்.

வெண்பனி போர்த்திருந்தது. மரங்கள் நிலவில் குளிர்ந்திருந்தன. கண்கள் அரைத்தூக்கத்தில் செருகிக் கொள்ள போர்வைக்குள்ளிருந்து விழித் தெழும் மனிதர்கள்.

வெளியே ஆரவாரம். ஏதோ ஒரு கலவரத்துடன் தெருவில் விரைந்து கொண்டிருந்தார் பொன்னம்பலம். வெறும் மார்பு. மயிர்க்கால்களில் நுழைந்து கிச்சுக் கிச்சு மூட்டுகின்ற குளிர் - நரம்பை சில்லிட வைக்கும் குளிர்.

“சங்கதி தெரியுமா?”
“என்ன?”

“நேற்றிரவு அம்மன் கோயில் சிலை களவு போயிட்டுது.”

“அடக் கடவுளே!”

“அதுதான் பஞ்சலிங்கம், நான் ஒருக்கா பெரிய ஐயரிட்டைப் போய் சொல்லலாம் எண்டு போறன்.”
“நாசமாய்ப் போன உலகம்” வாய்க்கு வந்தவாறு, யார் யாரையெல்லாமோ திட்டித் தீர்த்தபடியே அவருடன் இணைந்து கொண்டார் பஞ்சலிங்கம்.



2. காலை.

மகாலிங்க ஐயரின் வீட்டுக்கதவு பலமாகத் தட்டப்பட்டது. தலையில் நீர் சொட்ட, கற்பூர வாசனை குபுக்கென்று அடித்தது. நீராடி, திருநீறு பொட்டிட்டு எட்டிப்பார்த்த ஐயருக்குக் காத்திருந்தது அதிர்ச்சி. பேரிடியாக வந்தது செய்தி. இவ்வளவு காலமும் ஆறுதல் கண்ட மனதிற்கு தலையைப் போட்டு உடைத்துக் கொண்டார். அங்குமிங்குமாக நடந்தார்.

அவரது அறுபது வயது வாழ்க்கையில் இப்படியொரு சம்பவம் இதுவரை நடந்ததில்லை. அவரது பரிபாலனத்தில் இருந்து வந்த எட்டுக் கோவில்களில் அந்த ஒன்றைத்தான் மகனிற்குக் கொடுத்து இருந்தார். அதுவும் பாலசூரியன் திருமணம் செய்து, அவனுக்கென்றும் பொறுப்புகள் வந்த பிற்பாடுதான் அதை அவனுக்குக் கொடுத்திருந்தார்.

அவனுக்கு நிறைய அக்கறையும் அவதானமும் இருப்பதை அங்குல அங்குலமாக அறிந்திருந்தார்.

ஆனால் இப்போது?

சிலை திருட்டுப் போய் விட்டது.

மகாலிங்கஐயருக்கு  வீதியில் நிறுத்தி வேட்டியை உரிந்தது போல இருந்தது. தலை கிறுகிறுக்க நிலத்திலே சக்கப் பணியக் குந்தினார். மனம் நெடு நேரம் அலட்டிக் கொண்டது. நடைப்பிணம் போலானார்.

“கோயில் குளம் எண்டும் பாராமல் அறுவான்கள்...” பொன்னம்பலம் அருச்சனையுடன் முன்னேற, நடைப்பிணம் பின்னாலே போயிற்று.


3. பகல்.

உயிரை உறுஞ்சிக் குடிக்கும் கதை ஊரெங்கும் பரவி இருந்தது. அது தலை, கை, கால் முளைத்து ஊரெங்கும் தாண்டவமாடியது.

கேடி ராமசாமி, ஊத்தைவாளி சோமு என்று தொடங்கிப் பின்பு அவன், அவள், இவள் என்று ஊகங்கள் வெளிப்பட்டுக் கடைசியில் பொன்னம்பலத்தில் வந்து முடிந்தது.

கனத்த அந்தக் கதவை உடைத்தது யார்?

“பஞ்சலிங்கம்தான் எடுத்திருக்க வேணும். இருக்கலாம் என்ன அவனேதான். அவன்தான் இப்ப காசுக் கஸ்டத்திலை திரியுறான். எடுத்துப் போட்டு பம்மாத்துக் காட்டிக் கொண்டு திரியுறான்.”

அன்றைய பொழுதெல்லாம்,
ஆறாவது அறிவை ஒழித்துவிட்டு அவதூறு பொழிந்தன ஜடங்கள்.

விக்கிரகம் கோயிலுக்கு வந்த வரலாறு பற்றியும், அதன் பிறகு நடந்த அதிசயங்கள் பற்றியும் வாய் ஓயாது கதைத்தார்கள்.

மக்களுக்கு எல்லாமே தேவாமிர்த்தம்தான்.



4. இரவு.

நிலா மேலே பிரசவமாகிற்று.

மகாலிங்க ஐயர், பாலசூரியனின் வீட்டிற்கு வந்திருந்தார். இருவருமாக நெடு நேரம் கதைத்தனர். கோவில் – விக்கிரகம் பற்றி வாக்குவாதப்பட்டனர்.

முதல்நாள் இரவுப் பூசை முடிந்தபின், கோவில் கதவையும் பிரதான வாயிலையும் பாலசூரியன்தான் பூட்டியிருந்தான். அதுவும் ஒன்றிற்கு இரண்டு தடவை நிதானமாக இழுத்துப் பார்த்துத்தான் பூட்டியிருந்தான். அந்தக் கனத்த கதவையும் மீறித் திருட்டுப் போவது என்றால், அது அவனது சக்திக்கு அப்பாற்பட்டதுதான்.

மகாலிங்க ஐயர் அவனது இயலாத்தன்மையையிட்டு உருத்திர தாண்டவம் ஆடினார்.

அவரின் ஏச்சுக்களை உள்வாங்க முடியாமல், பாலசூரியன் மறுபுறம் திரும்பி தலை தாழ்த்திக் கொண்டான்.

பாலசூரியனின் மனைவி கார்த்திகாயினி கதவிடுக்கினூடாக பூதகணங்களைப் பார்ப்பது போல, இருவரையும் பார்த்து நடுங்கினாள். இடையிடையே அரவம் கேட்டு குழந்தை வேறு விழித்து, சினந்து அழுதது. கடவுள் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கை, கிடைத்துவிடும் என்ற உள்ளுணர்வு. இதைத் தவிர தேடல்கள் தேடல்கள்.

கார்த்திகாயினியை பொறுமையாக இருக்கும்படி கூறிவிட்டு, கதவைப் பூட்டி தந்தையும் மகனுமாக வெளியேறி இருளின் அந்தகாரத்தினுள் மறைந்து போனார்கள். நெடு நேரம் நடந்தார்கள். குழந்தையொன்றின் அழும்குரல்  மெலிதாகத் தொலைவில் கேட்டது.



5. மறுநாள் காலை.

பாலசூரியன் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. ‘வீழ்ந்து விடுவேனோ’ என்றிருந்த கதவு அதைச் செய்து கொண்டது.

அதே மனிதர்கள். கல்லாக மாறி கல்லுக்குப் பக்கத்திலே உட்காரும் கல்லுகள். வேடிக்கை மனிதர்கள்.

“ஆண்டவன் கிருபையால் விக்கிரகம் கிடைத்து விட்டது” என்றார் நா தழுதழுத்தவாறே பொன்னம்பலம்.
“கேட்டியா கார்த்திகா! விக்கிரகம் கிடைத்து விட்டதாம்” துள்ளிக் கொண்டே ஓடினான் பாலசூரியன்.

வீட்டிற்கு உள்ளும் புறமும் ஒரே மகிழ்ச்சி ஆரவாரம்.
ஆடினார்கள். ஆனந்தக் கூத்தாடினார்கள். பாடினார்கள். தேவாரம் பாடினார்கள்.
ஒரே பக்தி மயம்.

“பெரிய ஐயரிடமும் சொன்னோம். அவர் ஒரே சந்தோசத்தில் மூழ்கிவிட்டார். பிராயச்சித்தத்திற்கு ஆயத்தம் செய்யும்படி சொன்னார்” என்றார் பஞ்சலிங்கம்.

“ஆனாலும் ஒரு அதிசயம் நடந்துவிட்டது!”
“என்ன?” பாலசூரியன் பயந்து விட்டார்.

“சிலையின் கழுத்தில் ஒரு தங்கமாலை ஜொலிக்கிறது!”

“இந்த ஊருக்கு சூரியன் போல நீங்கள் இருக்கும் வரைக்கும் ஒன்றுமே நடவாது” என்றார்கள் அவர்கள்.



6. இரவு.

பாலசூரியன் முகட்டை வெறித்துப் பார்த்தபடி படுத்திருந்தான். பக்கத்திலே கார்த்திகாயினி. நடுவே பச்சைக் குழந்தை. ஓலைப்பாயொன்று ‘குசேலரின்’  சரித்திரம் பேசிற்று. சற்றே முடமாகிப் போய்விட்ட கதிரை ஒன்று. மேலே கூரை, பாறிவிட்டேனென சந்திர சூரியர்களை உள்வாங்கிற்று.

குழந்தை அடிக்கடி வீரிட்டு அழுவதும், வரண்ட முலைகளில் உதட்டைக் குத்தி உப்புவதுமாயிருந்தது. சுவரில் தொங்கியிருந்த கோயிலின் திறப்புக்கோர்வை காற்றில் ஆடி துடிதுடித்தது. பாலசூரியனது மனசில் பாரம் அழுத்தியது.

“குழந்தைக்குப் பசிக்குது போல. பாலைக்குடு” பாலசூரியன்.

கார்த்திகாயினி குத்திட்டு அவன் முகத்தை வெறித்தாள்.

“பால் இல்லை!” இரத்தினச் சுருக்கமாக அவள்.

திருத்தோணிபுரத்தில் சம்பந்தக் குழந்தை அழுதது. தந்தையைக் காணாது அழுத குழந்தைக்கு திருமுலைப்பால் உவந்தளித்தார் உமையம்மை. இங்கே?

பணமில்லை. பால் இல்லை. பால்மா வாங்க வக்கில்லை.

“அப்பா ஏழு கோவிலைக் கவனிக்கிறார். நல்ல வருமானம். எனக்கு ஒரு கோவில்!” பாலசூரியன் முணுமுணுத்தான்.

“முன்பு தனிய இருக்கேக்கை பரவாயில்லை. நீ வந்தாய். பிறகு குழந்தை வந்தது. நான் என்ன செய்வது?”

கார்த்திகாயினி அவனது உதடுகளை தனது விரல்களினால் அழுத்தி மூடினாள். அப்புறம் அவனது பார்வையை சந்திக்காமல் மறுபுறம் திரும்பி தலையணைக்குள் முகம் புதைத்தாள்.

விக்கி விசிகசித்து விம்மி வெடித்தது அழுகை. மனசைக் கரைய வைக்கும் விசும்பல்.

அவளால் என்ன செய்ய முடியும்? அழுவதைத் தவிர!

அவனுக்கு அவள் என்றும், அவர்களுக்கு அது என்றும் அமைந்திருந்த போது அவளால் என்ன செய்ய முடியும்?

‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ தெருவில் தேவாரம் போய்க் கொண்டி ருந்தது.



7. நள்ளிரவு.

“சிலையை யார் எடுத்திருப்பார்கள் என நீ நினைக்கிறாய்? திடீரென பால சூரியன் கார்த்திகாயினியைக் கேட்டான்.

அவள் அவனைப் பிடித்து ஒரு கணம் உசிப்பினாள்.

“ஆர் எடுத்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். கடுமையான தண்டனை குடுக்கப்பட வேண்டும்” என்றாள் மூர்க்கமாக.

“அப்பாவிற்கு ஏழு கோவில்கள். எனக்கு மட்டும் ஒன்று.”
“நீங்கள் என்ன பிதற்றுகிறியள்?” சிறுக மூடிய மெல்லிய உதடுகளுக்குள்ளிருந்து எழுந்தது அக்கினி.

குழந்தை அழுதது. பசியினால் களைத்து, சோர்ந்தது. அதற்குப் பசி. என்று மில்லாதவாறு வீரிட்டு அலறியது. நிலம் முழுவதும் சிறுநீர் ஒழுக்கி அதனூடே உழுதது.

“அதாலை அந்தச் சிலையை!” உண்மையின் சூட்சுமம் உதடுவரை வந்து ஒலிக்க முடியாது போயிற்று.

இது புதிசு. வழக்கமில்லாத வழக்கம். அவளின் மனதுக்குள் விஷப்பாம்புகள் நெளிந்தன.

வெறி பிடித்தவள் போல பாய்ந்து அவனது பூனூலிற்கு கொக்கி போட்டாள்.
“இந்த மண் இவர்களையெல்லாம் சுமந்து கொண்டிருக்கிறதே!”

எங்கிருந்து வந்தது அந்தப் பலம்?

குறி பிசகவில்லை.

நிலவை சிறுமேகம் விழுங்கிற்று.

அப்படியே பூனூல் அறுந்து விழுந்தது.

பாலசூரியன் சிலையென நின்றான். குழந்தையின் அழுகுரல் நிற்க அப்போதுதான் கார்த்திகாயினி அதைக் கவனித்தாள்.

பூனூல் ‘சம்பந்தக்’ குழந்தையின் கழுத்தில் மாலையாகி வளையம் போட்டு நின்றது.

ஊன்றியுணர்ந்த உண்மையாக அங்கே, அந்தத் குழந்தையின் கழுத்தில் தங்க மாலை இருக்கவில்லை.

                                  


1 comment: