ஒன்றை நினைத்து -
முற்றுமுழுதாக நம்பி – அதுவே கதியென்று தஞ்சமடைந்து, பின்னர் அது
கிடைக்காமல் மனம் புழுங்குகிற கொடுமை இருக்கிறதே அதைச் சொல்லி மாளாது. அந்தக்
கதிதான் இப்போ நடேசனுக்கும்.
வேலை பறிபோய்விட்டது. எந்தவித மின்னலுமில்லாமல் இடி
முழங்கிவிட்டது.
‘ஃபரடைஸ்’ ஹோட்டலில் சாப்பிடுகிற அளவுக்கு இப்ப
காசுப்புழக்கம் இல்லை. வந்தாயிற்று. சாப்பிட்டாயிற்று. சர்வர் பில்லைக்
கொண்டுவந்து வைத்தான்.
“அட முப்பது ரூபா…”
ரிப்ஸ் வைக்கக் காசு காணாத கலவரம். பொக்கற்றுக்குள்
துளாவியபோது ஒரு ஐம்பது சதம் கொஞ்சம் கறுத்துப் போனது கண் முழித்தது. அதனுடன்
சேர்த்து ஒரு இருபத்தைந்து சதம் – ரிப்ஸ்.
கவலையின் கனம் - அதன் பரிமாணம் – அவனை மெதுவாகக்
கீழிறங்க வைத்தது. ‘ஃபரடைஸ் பாமஷி’ - சாப்பாட்டுக் கடைக்கு கீழே ‘மெடிக்கல் ஷொப்’
இருப்பதில் ஒரு சில செளகரியங்கள் இருக்கத்தான் செய்கிறது. சாப்பிட்டுவிட்டு அரக்கி
அரக்கி ஸ்டெப்பில் கீழே இறங்கி வரும்போது வயிறு முரண்டு பண்ணினால், சோக்காக இரண்டு
மூன்று மாத்திரைகளைப் போட்டு அமுக்கிப் போடலாம்.
“உணவு ஜீரணமாகப் பாவியுங்கள்….” விளம்பரம். காசுதான்
இல்லை.
வாசலில் வாகனம் ஒன்று தண்ணீர் சுமந்து கொண்டிருந்தது.
வண்டில் – வாகனம் – நாலு மரப்பலகைகள் கயிறுடன் கோர்த்து ‘டொயோட்டா’ என நாமம்
அடித்திருந்தது. அதற்குக் கீழே சிறிதாக ‘fully insured’ என்று குட்டி எழுத்தில்
வேறு. குனிந்து வேடிக்கை பார்க்க, முதுகினில் பளீர் என முட்டி மோதித் தெறித்தது.
பில்லைக் கசக்கி கடாசி வீசிவிட்டு ஜன்னலிற்குள் மறைந்தான் சர்வர்.
பறந்து வந்து தோளோடு உரசியது – அந்தச் செல்லாக் காசு.
“ஓ! ரிப்ஸ் காணாதோ?”
இயல்பாக நடக்க முடியவில்லை. போய் படுக்கையில் சரிந்தான்.
நண்பன் சிவபாலன் எட்டாம் வகுப்பு கணிதப்புத்தகம் ஒன்றை
ஆற அமர இருந்து படித்துக் கொண்டிருந்தான்.
அவமானம், பெருத்த அவமானம்.
முதுகினில் விழுந்து சன்னமாக எழுப்பிய ஒலி, நீங்காத
வடுவாகியது.
“என்ன நடேசன் ஏதாவது வேலை!
எங்கையாவது படிப்புச் சொல்லிக் குடுக்க ஒழுங்கு செய்து
தரட்டுமா? கொஞ்சமாவது வீட்டு வாடகை, சாப்பாட்டுக்கெண்டு சமாளிக்கலாம்.”
மனதுக்குள் பூட்டி மறுகிக் கொண்டிருப்பதில் என்ன
அர்த்தம் இருக்கிறது என்று மடையைத் திறந்துவிட்டான் நடேசன்.
தோளோடு உரசியது – அந்தச் செல்லாக்காசு.
“எனக்கும் ரியூசனாலை பெரிய வரும்படி எண்டில்லை. ஏதோ
தனிக்கட்டை – பண்ணித் தொலைக்கிறேன். நீதான் பிள்ளை குட்டிக்காரன்” என்று
தேற்றினான் சிவபாலன்.
அதிகாலை நாலுமணி பன்னிரண்டு நிமிட சுபவேளையில்- அந்த
அதிரடி யோசனை- திருவாளர் சிவபாலனது மூளையில் உதயமானது.
“ஏய் நடேசன்… ஏய் நடேசன்!”
நடேசன் துடிச்சுப் பதைத்து எழுந்தான்.
“நாளைக்கு சீதேவி ஹோட்டலுக்குப் போவோம்.”
J
மெதுவாக வெளிச்சம் படர்ந்தது.
சிவபாலன் எழுந்து எட்டாம் வகுப்பிற்கு ரியூசன் கொடுக்கப்
புறப்பட்டான். ஒரு வீட்டில் இரு பெண்கள். போனவாரம் மூத்தபெண் கார்க்காரனுடன் ஓடிப்
போய்விட்டாள். வழக்கமாகப் பாடசாலைக்குப் பத்திரமாகக் கூட்டிச் செல்பவன், பத்திரம்
காற்றில் பறக்க பறந்துவிட்டார்கள்.
சிவபாலன் வீடுவர மதியமாகிவிட்டது. இன்னும் நடேசன்
படுக்கையில் இருந்து எழும்பவில்லை.
அவமானம் – பெருத்த அவமானம்.
“காலமை சாப்பிட்டாச்சா?”
“இல்லை!”
‘சீதேவி ஹோட்டலை’ அண்டினார்கள். ஒதுக்கிடமாக
அமர்ந்தார்கள்.
“சேர் சாப்பிட என்ன வேணும்?” பரிசாரகர்கள்
அங்குமிங்குமாக ஓடித் திரிந்தார்கள். ஏமாறக்கூடிய சோணகிரி வரும்வரைக்கும்
பொறுமையாக இருந்தார்கள்.
“தம்பி… திம்பீ இஞ்சை வாரும்.”
முதன்முதலாக இந்த ஜன்மத்தில் அவனைத் ‘தம்பி’ என்று
அழைத்தவர்கள் இவர்களாகத்தான் இருக்கவேண்டும். தம்பி – தேங்காய் கொப்பரை போல
இருப்பான் – ‘ஸ்லோ மோசனில்’ வந்து நின்றான்.
“தம்பிக்கு என்ன பெயர்?”
பெயரைக் கேட்டதும் பொக்கற்றுக்குள் கையைப் புகுத்தி,
நாடியை நிமிர்த்தி, தலைமயிரை ரஜனி ஸ்ரைலில் கோதி, அரைவட்ட வடிவில் திரும்பினான்.
“அழகு! அழகராசு குபேரன். சுருக்கமாக அழகு.”
குபேரனுக்கும் இவனுக்கும் எதுவித சம்பந்தமும்
இருப்பதாகத் தெரியவில்லை.
“உம். ஒரு நாளைக்கு என்ன சம்பளம் உனக்கு வரும்?”
“என்ன சேர் பிழைப்பு இது? மூணுவேளை சாப்பாடு. ஒரு ஐம்பது
ரூபா காசு. உறங்கி எழும்ப ஒரு பாய். அவ்வளவுந்தான். வேலைக்கெண்டு வந்தாச்சு. என்னா
செய்யுறது?”
“என்னா தம்பி, ரிப்ஸ் ஏதாவது கிடைக்குமா?”
“எவன் போடுறான் ரிப்ஸ்? அஞ்சு சதம், பத்து சதம். சிலவேளை
கிடக்கிறதையும் பிடுங்கிட்டுப் போயிடுறான்கள்.”
சிவபாலனும் நடேசனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
உசாரானார்கள். அவனின் காதிற்குள் குனிந்தனர்.
“டேய் அழகு, உங்கை என்ன செய்கிறாய்? ஒரு கஸ்டமரோடை
இவ்வளவு நேரமும் மினக்கெட்டால் என் பிழைப்பு என்ன ஆகிறது?” கவுண்டரில் இருந்த
சிறீதேவி கத்தினாள். அழகு திடுக்கிட்டு கொஞ்சம் விலகினான்.
“அம்மா, இதோ வந்திட்டேன்மா.”
உள்ளே போய் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு மீண்டும் சுழண்டு
அவர்களண்டை வந்தான் அழகு. இனியும் தாமதம் கூடாது என நினைத்து மந்திரத்தைக் கக்கி
விட்டனர் சிவபாலனும் நடேசனும்.
“தம்பி, எங்களுக்கு இரண்டு பிளேட் சிக்கன் பிரியாணி,
எக்ஸ்ராவா இரண்டு காக்கோழி, இரண்டு முட்டை, இரண்டு கப் டெஷேற் கொண்டுவந்து தந்தால்
ஒரு குத்துமதிப்பா எவ்வளவு பில் வரும்?”
கொஞ்சநேரம் மனதுக்குள் போராடினான். கூட்டிக் கழித்தான்.
அழகுக்கு கணக்கிலை ஒரு இழவும் தெரியாது.
“எண்பது ரூபா வரும் சேர்.”
“தம்பி அழகு என்ன செய்யிறான்… நாப்பது ரூபாவுக்கு பில்
எழுதி வாங்கிவாறான். மிச்ச நாப்பது ரூபாவிலே பாதி பாதி. ஐம்பதுவீதம் எங்களுக்கு,
ஐம்பதுவீதம் உனக்கு. எங்களுக்கு இருபது ரூபா, உனக்கு ரிப்ஸ் இருபது ரூபா”
அழகின் கண்கள் அகல விரிந்தன. என்ன ரசவாத வித்தை இது!
இருபது ரூபாய் ரிப்ஸ். அதுவும் உடனே கணப்பொழுதில். மப்பும் மந்தாரமுமாக மைம்மைலில்
நின்றான் அழகு. ஒருமுறை கவுண்டரைப் பார்த்தான். மற்ற சர்வர்மாரை நோட்டம் விட்டான்.
“கொஞ்சம் இருங்க… வாறன்.”
சொல்லிவிட்டு கழிவறைப் பக்கமாகப் போனான் அழகு. அவனுக்கு
ஏதோ பிசகிறமாதிரியும், பிசகாத மாதிரியும். வேலை போய்விடுமோ என்றும் பயமாக
இருந்தது. உயர உயரப் பறப்பது போல முகம் மலர்ந்தது. மெல்லிய சீழ்க்கைக்குரலுடன்,
நடேசனுக்கு அருகில் வந்து மேசையைத் துடைத்து வித்தை காட்டி நின்றான்.
“தம்பி… நாங்கள் வந்து எவ்வளவு நேரமாயிட்டுது. இரண்டு
ஃபுல், இரண்டு காக்கோழி, இரண்டு முட்டை சீக்கிரம் கொண்டு வா தம்பி. நேரம் போட்டுது.
நல்லா ஆவி பறக்க வேணும்” உரக்கக் கத்தினார் சிவபாலன். உச்சஸ்தாயி கவுண்டர்வரையும்
போனது.
“அழகு… அவங்களைக் கொஞ்சம் கவனி” கவுண்டர் மீள
எதிரொலித்தது.
தம்பி சுறுசுறுப்படைந்தான். கவனித்தான்.
அன்று தொடங்கிய கவனிப்பு. இன்றுவரை சுமாராகப் போகின்றது.
நடேசனுக்கும் சிவபாலனுக்கும் தற்காலிகமாகக் கவலை போய் பொழுதுகள் அமிழ்ந்துகொண்டு
போயின.
J
“தம்பி, எப்பிடி இருக்கிறாய்? லைட்டாக நாப்பது
இடியப்பம், பொரிச்ச கோழி, ஆட்டுக்கறிச்சூப்பு, நல்ல கட்டைச் சம்பல்…ல்…ல்” –
சிவபாலன், நடேசன்.
“உங்கட தயவாலே சுகம்மா இருக்கிறேன்.”
கொப்பரா போய் – சாரம், பெனியன், தொப்பி, பாட்டா
சிலிப்பர் சகிதம் குளிர்ந்து மொழுப்பாக நின்றான் அழகு.
J
”லைட்டா இருபது இட்லி, சாம்பார், கோக் இரண்டு…” நடேசன்.
சேர்ந்து வந்தாலென்ன, தனித்து வந்தாலென்ன கவனிப்பு
கவனிப்புதான்.
“அதென்ன சேர், எப்ப பாத்தாலும் லைட்டா?”
“லைட்டா சாப்பிடுகிறதிலை இருக்கிற சுகமே தனிதான். என்னவா
இருந்தாலும் அழகு - நீ எனக்கு கஸ்டமர், நான் உனக்கு கஸ்டமர்.”
அழகுவின் போக்கு, புரிந்து கொள்ளும் தன்மை இவர்களைத்
திணறடித்தது. சாரம், பெனியன் போய் ஜீன்ஸ், கலர் கலர் உடுப்புகள், கழுத்தில் மைனர்
செயின்… நாலு இங்கிலீசும் பேசத் தொடங்கிவிட்டான்.
J
நடேசனுக்கு அதிக சம்பளத்துடன் ஒரு வேலை கிடைத்தது. அவன்,
மனைவி இரண்டு பிள்ளைகளையும் கொழும்புக்குக் கூட்டி வரலாம் என நினைத்தான்.
“எட்டாம் வகுப்பு, படிப்பிக்கேக்கை காலை அடிக்கடி
சுரண்டுது” என்றான் சிவபாலன்.
நடேசன் அவனை மேலும் கீழும் பார்த்தான். திடீரென ஏதோ
ஒன்று புலப்பட்டாற் போலிருந்தது.
“எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா… இறைவா” பாட்டுடன்
சிவபாலனும் நடேசனும் ஹோட்டலுக்குப் போனார்கள்.
“என்ன அழகு? சாப்பாடு அவ்வளவு ருசியில்லை. வியாபாரம் படுத்திட்டுதோ?
முட்டைப் பரோட்டா கிடைக்குமா?” சிவபாலன்.
“என்ன முந்தினமாதிரி கவனிப்பு ஜோரா இல்லை?” நடேசன்.
“மற்றவங்களையும் கவனிக்கணும் இல்லையா? இல்லை… இல்லை
சேர்… கடை நட்டத்திலை போகுதெண்டு அம்மா சொல்லுறா. அது சரி சேர், வருஷக்கடைசி
எனக்கு போனஸ் இல்லையா?” மழுப்பினான் அழகு.
அழகுவின் போக்கில் சிறுசிறு மாற்றங்கள் தென்பட்டன.
’ஸ்ப்ரே சென்ற்’ நாத்தம் வேறு. இடுப்பில் இப்போ வாழைப்பொத்தி போல ஏதோ சுத்தி
இருக்கிறான். முழங்கால் அடிபட விழுந்தவன் மாதிரி ஜீன்சைக் கிழிச்சு
விட்டிருக்கிறான்.
J
நடேசன் மனைவி, பிள்ளைகளை அழைத்துவர லீவில் போய்விட்டான்.
சிவபாலனுக்கு விசராக இருந்தது. ஹோட்டலுக்குப் போனான். அழகு இருவாரங்கள் லீவு என
அறிந்தான். அன்றுதான் உண்மையில் லைட்டாக இரண்டு தோசை, பிளேன் ரீ சாப்பிட்டான்.
அழகுவின் அருமை தெரிந்தது. சீதேவி ஹோட்டல் மூதேவியாகி விட்டது. நாள் முழுக்க
ரியூசன் கொடுத்தான். கடைசியில் மற்றக் கிளியைக் கொத்தி முடிக்கும் கைங்கரியமும்
நடத்தி வைத்தான்.
J
நடேசன் குடும்பம், மூட்டை முடிச்சுகளுடன் கொழும்பு வந்து
இறங்கினார்கள். பழைய வீட்டில் நின்றுகொண்டு வீடு தேடும் படலம் ஆரம்பமாயிற்று.
ஹோட்டலுக்குக் கிட்ட இருந்தால் செலவு குறைவாக இருக்கும்.
போகும் வழியில் சிவபாலனைக் கண்டான். அவனின் பின்னால் பின்னிப் பிணைந்து நடந்து
போனது அந்தக் கிளி.
“நடேசன் எப்படி ஊர்? நீ போய் வாறதுக்குள்ளை நடந்து
போச்சு. இப்ப மனிசி வீட்டிலைதான் இருப்பு.”
“றூம் வெளிச்சது ஒரு வகையிலை நல்லதுதான். ஹோட்டல்
எப்பிடிப் போகுது?”
“மனிசி வந்தாப்போல ஹோட்டல் என்னத்துக்கு? இப்ப புது
நிர்வாகம் போலக் கிடக்கு. அங்கை பார், பெயரையும் மாத்திப் போட்டான்கள்.”
”கெட்டுது போ” என்று சொல்லிக்கொண்டு ஹோட்டலை எட்டிப்
பார்த்தான் நடேசன்.
’வடை, பாயாசத்துடன் சாப்பாடு தயார்’ என்று ஒரு போர்ட்
காற்றுக்கு ஆடியது. சிறிசுகள் குதியாய்க் குதித்தார்கள். நகரத்தைப் பார்க்கின்ற
பெருமிதம். மனைவி உள்ளிட்டு அவர்கள் சாப்பாட்டுக் கடைக்கு வருவது இதுவே முதல்தடவை.
அழகு கவுண்டரில் நின்றான். திருநீற்றுப்பட்டை,
சந்தனப்பொட்டு, வேட்டி சகிதம்.
“உந்த முட்டாளை யார் கவுண்டரிலை விட்டது? கடையையே
கவுட்டுப் போடுவான். எங்களைப்
போகவிட்டிட்டு புது நிர்வாகம் புறமோஷன் குடுத்திருக்குப்போல. கையிலையும் ஏதோ
பெட்டி வைச்சு கூட்டிக் கழிச்சு விளையாடுறான். அழகு கவுண்டரிலை நிக்கிறதாலை
இண்டைக்கு விளாசிப் போடலாம். மனிசி, பிள்ளையள் கேட்கிறதையெல்லாம் வாங்கிக் குடுக்க
வேணும்” நடேசன் தனக்குள் நினைத்துக் கொண்டான்.
“என்ன அழகு கவுண்டரிலை இப்ப?”
அழகுவிடம் இருந்து பதில் வரவில்லை. கேட்கவில்லையோ? அலது
கவுண்டரிலை நிக்கிறதாலை கேட்கவில்லையோ தெரியவில்லை. பரிசாரகன் ஒருவன் வந்து நோட்டம்
விட்டான்.
“ஏய்! கேட்கிறதெல்லாம் குடுப்பா, நல்லாச்
சாப்பிடட்டும்.”
கடையைச் சுற்றிப் பார்த்தான் நடேசன். அழகு இருப்பிடத்தை
விட்டு அசைவதாகக் காணோம்.
“என்னங்க பெரியவரே, ஐஞ்சிலொரு பங்குக்கு குறைவா நாங்கள்
ரிப்ஸ் வாங்கிறதில்லை எண்டு தெரியாதோ?” யாரோ ஒருவருக்கு பரிசாரகன் ஒருவன் பேசினான்.
“விருப்பமெண்டா உதைக் கொண்டுபோய் கவுண்டரிலை எங்கடை
’பொஸ்’ இருக்கிறார். அவரிட்டைக் குடுத்திட்டுப் போங்கோ.”
கவுண்டரிலை ‘பொஸ்’ என்றவுடன் அரைகுறைச் சாப்பாட்டுடன்
எழுந்தான் நடேசன்.
“இஞ்சாருங்கோ… காசை எடுத்து வைச்சிட்டுப் போங்கோ. என்ரை
‘பேர்ஸ்’ பாக்குக்குள்ளை அடியிலை கிடக்கு.”
‘பேர்ஸை’ மனைவியிடம் எறிந்துவிட்டு, வீர நடை நடந்து
அழகுக்கு முன்னால் காட்சி கொடுத்தான் நடேசன். அழகு இவரைக் கவனிப்பதாக இல்லை.
‘சப்ளை’ பண்ணும் பொருட்களை சர்வர்மாரின் பெயருக்குக் கணக்கு வைத்து, அவர்கள்
குடுக்கும் காசைக் குறித்து ‘கிறடிற் டிபெற்’ என்று குத்துக்கரணம் போட்டான்.
“லைட்டா ஒரு எண்பது இடியப்பம், குருமாக்கறி கிடைக்குமா?”
“கிடைக்கும். குருவுக்கு குருமாக்கறி முழுவிலைக்குத்தான்
கிடைக்கும்.
டேய்! யார்ரா இந்தக் கஸ்டமரை கவுண்டருக்கு அனுப்பினது?”
நடேசனுக்கு பீதி கிழம்பியது. அது பேதியாவதற்குள் ஏதாவது
செய்தாக வேண்டும் என நினைத்தான்.
“ஐயா! இப்ப நான் ஓணர் ஐயா!! தமிழிலை சொல்லுறதெண்டால்
உரிமையாளர். போங்க போங்க… போய் முன்னுக்கு வாற வழியைப் பாருங்க.”
நடேசன் வந்த வேகத்தில் மேசைக்குத் திரும்பினான்.
மற்றவங்களையும்
கவனிக்கணும் இல்லையா?
மற்றவன்கள் – ஐம்பது வீதத்திலை நாலுபேர்கள். அறுபது வீதத்திலை இரண்டுபேர், ஏன் எழுபது
வீதத்திலையும் அந்த மற்றவங்கள் இருக்கலாம்.
மேசையில் பில் இருந்தது. நூற்றி இருபது ரூபா! இருபதா
நூற்றியிருபதா? இவ்வளவு நடந்த பின்னரும் ஒரு சந்தேகம், பழக்கதோசம். காசை சர்வரிடம்
சுளையாகக் கொடுத்தான்.
“எடுங்கோ பெட்டி படுக்கையளை. போய் வெளியிலை நில்லுங்கோ.
நான் ஒருக்கா ரொயிலற் போட்டு வாறன். எல்லாம் கலக்குது. வசந்தி… சில்லறை ஏதாவது
இருக்கா ரிப்ஸ் குடுக்க?”
வழிச்சுத் துடைச்சு சில்லறையை எடுத்துக் கை நீட்டினாள்
வசந்தி. படக்கெனப் பறித்து, ‘உந்த மனிசனுக்கு என்ன வந்ததோ?’ என்று வசந்தி
நினைக்கும் வண்ணம் மேசையில் விட்டெறிந்தான். வசந்தி பிள்ளையளையும் தள்ளிக் கொண்டு
வெளியே ஓடினாள்.
“அம்மா… மேசையிலை தொப்பியை விட்டிட்டு வந்திட்டன்”
கத்திக் கொண்டே உள்ளுக்கு ஒரு வட்டம் அடிச்சு வெளியே ஓடி வந்தான் நடேசனின் கடைசிப்புத்திரன்.
அவசரத்தை முடித்து வெளியே வந்தான் நடேசன். ஏதோ ரிப்ஸ்
என்று முணுமுணுத்துக் கொண்டே அவனை இடிப்பதுபோல விலகிப் போனான் பரிசாரகன்.
நடேசனுக்கு கோபம் வந்தது. விறுவிறென்று கைகளை வீசிக் கொண்டு வெளியேறினான்.
எல்லாரும் நடேசனின் முகத்தை மாறிமாறிப் பார்த்தபடி
மெளனமாக நடந்து வந்தனர். கோயில் ஒன்று வர, தருணம் பார்த்திருந்த கடைசிமகன் கொஞ்ச
சில்லறையை நடேசனிடம் கொடுத்து பேச்சுக் கொடுத்தான்.
“அப்பா! உங்களுக்கு இப்ப சரியான மறதி அப்பா!!
கடைக்குள்ளை கொஞ்சக் காசை விட்டிட்டு வந்திட்டியள் அப்பா!!!”
“அட கடவுளே! அது சர்வருக்கு வைச்ச ரிப்ஸப்பா!”
மனைவியும் பிள்ளைகளும் ஆளுக்கு ஆள் முழுசினார்கள்.
“ரிப்ஸ் எண்டால் என்னப்பா?”
J
No comments:
Post a Comment