Sunday, 6 November 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்
 11.   மர்மத்தில் ஆரம்பித்த கதை
                                   
யூனியன் கல்லூரியின் 163 வருட அடிப்படைக் கட்டுமானத்தினைப் புதுக்கி அமைத்த முதற் கட்டம் 1979 ஜனவரி முதலாந் திகதி நிகழ்ந்தது. யூனியனிலிருந்து ஆரம்ப பிரிவைப் பிரித்தெடுத்து, தந்தை செல்வா தொடக்க நிலைப் பள்ளியைத் தனித்தியங்க வைத்த கதை மர்மத்தில் ஆரம்பித்தது. அதனை அடுத்து ஆரம்ப பிரிவைத் தனித்துவமாக இயங்க வைக்க எடுத்த முயற்சிகள் துரிதமாகப் பலனளித்தன. இனிய தேநீர் விருந்துடனும், மலர்ந்த முகங்களுடனும் அது ஓஹோ என்று நிறைவேறியது. அதன் விளைவாகப் புதுப் பிரச்சினைகள் வரும் என்று எவரும் ஆருடம் கூறவில்லை. 

1816 ஆம் ஆண்டு யூனியன் கல்லூரியின் காவியம் ஆரம்பித்த காலம் தொட்டு, ஆரம்ப பிரிவு அதன் அங்கமாக விளங்கியது. அருவரி தொடக்கம் அல்லது ஆண்டு ஒன்று தொடக்கம் வகுப்புக்கள் இருந்தன. அதனைப் பிரிக்க வேண்டிய கட்டம் ஆரம்ப பிரிவுக்குத் திரு. கே.சிவனேசன் அவர்கள் பொறுப்பாக இருந்தபொழுது எழுந்தது. ஒல்லியாக உயர்ந்த அவர் மிகச் சுறுசுறுப்பான பெரியார். எந்த வேளையும் சளைக்காமல் வேலை செய்பவர். வயதின் சோர்வு அவருக்கு அஞ்சி ஓடிவிட்டது. அவர் ஓய்வாக இருந்ததை நான் பார்த்ததில்லை. மேற்கே வேலி நீளத்துக்கு அமைந்த ‘மலாயா புளக்கில்’ முதலாம் வகுப்புத் தொடக்கம் ஐந்தாம் வகுப்;புவரையான வகுப்புக்கள் நடைபெற்றன. ஆரம்ப பிரிவு அதிபராகத் திரு.க.சிவநேசன் அவர்கள் இருந்தார். 1978 - சில சமயங்களில் ஆரம்ப பிரிவை மேற்பார்வை செய்தேன். அப்பொழுது நான் உதவி அதிபர். எனது மேற்பார்வையின் உரிமையை அவரால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அதனை அடுத்து யூனியனைப் பிரிக்க வேண்டும் என்ற கருத்து மின்னாமல் முழங்காமல் உலா வந்தது. அதன் பின்தளத்தில் இருந்த சூத்திரதாரி யார்? இச்சூழ்நிலையில் யூனியன் கல்லூரியின் எழுச்சியை மனதில் வைத்துச் செயற்பட்ட நான், கிடைத்த வாய்ப்பை நழுவவிட விரும்பவில்லை. கல்லூரியின் மாணவர் எண்ணிக்கை வீழ்ச்சி அடையும். அதனைக் கவனத்தில் எடுக்காமல் ஏன் அவ்வாறு அவர்களோடு ஒத்துழைக்கிறேன் என்பதை அவ்வேளை புரிந்தவர்கள் எவரும் இல்லை.

     பிரிப்பதைப் பற்றி ஆலோசிக்க, விளையாட்டு மைதானத்தின் கிழக்கில் அமைந்த தகரக்கூரைக் கட்டடத்தில் ஒரு கூட்டம் 1978 இறுதியில் நடந்தது. நவம்பர் மாதமாக இருக்கலாம். அப்பொழுது நான் எழுத்து மூலம் உறுதிப்படுத்தாத அதிபராகவிருந்தேன். அக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ அ.அமிர்தலிங்கம் அவர்கள் - காங்கேசன்துறைப் பாராளுமன்ற உறுப்பினர்  -  அவர்தம் துணைவியார் திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அம்மையார் அவர்கள், காங்கேசன்துறை வட்டாரக் கல்வி அதிகாரி திரு.சிவஞானசுந்தரம் அவர்கள், திருவாளர்கள் கே.சிவநேசன், சிவலிங்கம், சி.சின்னத்தம்பி, குமாரசாமி, பொன்னுசாமி, திருமதிகள் நேசம் செல்லத்துரை, சரஸ்வதி ஆறுமுகராசா, ஏ.காசிலிங்கம், ஞானாம்பிகை அந்தோனிப்பிள்ளை, மூத்ததம்பி, நவமணி இராசையா முதலிய ஆரம்பபிரிவு ஆசிரியர்களும், பெற்றார் ஆசிரிய சங்கத்தைச் சேர்ந்த திரு.கு.க.செல்லத்துரை, மற்றும் வீமன்காமம் மகாவித்தியாலய அதிபர் திருவாளர் மு.சிவராசா, திரு.எஸ்.ஜே.வி.பொன்னுத்துரை, திரு.ஆறுமுகம் முதலியோரும் கலந்து கொண்டனர். சுமார் 75 பேரிருக்கும். பிரிப்பது என்ற முடிவு முன்னரே எடுத்தாகிவிட்டதால், அதிக நேரம் தேவைப்படவில்லை. பெயர் வைக்கும் நேரம் முகத்தை நீட்டியது. “என்ன பெயர் வைக்கலாம்?” என்று கௌரவ அமிர்தலிகம் அவர்கள் வினாவினார். ஒருவரை ஒருவர் பார்த்துச் சிந்தித்தபொழுது, திருமதி மங்கையர்க்கரிசி அம்மையார் அவர்கள் “தந்தை செல்வா தொடக்க நிலைப் பள்ளி” என்ற பெயரை முன்வைத்தார். அதனை அமரராகிய திரு.மு.சிவராசா அதிபர் அவர்கள் தாமதமில்லாமல் ஆமோதித்தார். சபை ஏகமனதாக ஏற்றது.   அப்பொழுது ஒரு புதிய நிலப்பரப்பு வாங்கி, அதில் கட்டடங்கள் அமைத்து வெகு சிறப்பாக முன்மாதிரியான பாடசாலையாக வளர்த்தெடுக்க விருப்பதாக கௌரவ அமிர்தலிங்கம் அவர்கள் தெரிவித்தார்கள். 1979 தைத் திங்கள் முதலாந் திகதி தொடக்கம் தந்தை செல்வா தொடக்க நிலைப் பள்ளி தனித்து இயங்கத் தொடங்கியது.

     கூட்டத்தில் பங்குகொண்ட அனைவரும்  மகிழ்ச்சியாகக் கூட்டத்தை முடித்துக்கொண்டு வெளியேறினர். தந்தை செல்வா தொடக்க நிலைப் பள்ளி - பிரச்சினை கொண்டுவரப்போகிறது என்பதைக் கூட்டத்தில் பங்குபற்றியர்கள் எவரும் உணரவில்லை. யூனியனிலிருந்து ஆரம்ப பிரிவைப் பிரித்து எடுத்தபின்னர், அங்கு ஆறாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்புவரையே இருந்தன. தந்தை செல்வா தொடக்க நிலைப் பள்ளியைப் பொறுத்தவரை, அது ஒரு புதிய உத்வேகத்துடன் வளர்ந்தது. புதிய மாணவர்கள் வருகை வெட்டிய வாழைக் குருத்துப் போலச் சீறிக்கொண்டிருந்தது. வகுப்புகளில் 50 மாணவர்களுக்கு மேலும் காணப்பட்டனர். சில வகுப்புகளிற்கு இரண்டு இடாப்பும் தேவைப்பட்டது. முன்னர் ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு பிரிவுகளே இருந்தன. மூன்றாவது பிரிவும் ஆரம்பிக்கப்பட்டது. சுற்றாடலில் இருந்து மட்டுமல்ல, வெகு தூர இடங்களிலிருந்தும் அனுமதிகோரிப் பெற்றார் படை யெடுத்தனர். பாடசாலை அபிவிருத்திச் சங்கத்துக்கு எவ்வளவு நன்கொடை கொடுத்தும், தம் பிள்ளைகளை அங்கு சேர்த்துவிட முண்டியடித்தனர். அதற்குத் தந்தை செல்வா ஆசிரியர்களின் அயராத உழைப்பும் ஒரு காரணம். அதைவிட வேறும் ஒரு முக்கிய காரணம் இருந்தது. அதுதான் ஐந்தாம் வகுப்புப் படித்து முடிய, தமது பிள்ளைகள் யூனியன் கல்லூரியின் ஆறாம் வகுப்பிற்கு வகுப்பேற்றம் செய்யப்படுவார்கள் என்று கருதினர். அதுதான் அத்தனை பேரும் புகழும் பெரும் போட்டியும்.

     அந்த வருட முடிவில் ஆறாம் வகுப்பில் யூனியனுக்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. தந்தை செல்வா தொடக்க நிலைப் பள்ளி உதவி ஆசிரியர் திரு.சிவலிங்கம் அவர்கள் - இவர் பின்னர் தந்தை செல்வாவின் அதிபராக இருந்தவர் –- ஒரு பட்டியலுடன் வந்தார். அதில் தந்தை செல்வாவில் ஐந்தாம் வகுப்பில் அவ்வருடம் பயின்ற மாணவர்கள் அனைவரது பெயர்களும் இருந்தன. அவர்களைத் தெரிவுப் பரீட்சை இல்லாமல் சேர்க்கும்படி தமது அதிபர் சார்பில் விண்ணப்பித்தார். “சகலரும் தெரிவுப் பரீட்சைக்குத் தோன்றவேண்டும். அதன் மூலமே தெரிவு செய்யப்படுவார்கள்” என்று கூறினேன்.

பிரச்சினை தலையைச் சிலுப்பியது. தந்தை செல்வா மாணவர்களும் தெரிவுப் பரீட்சை எழுத வேண்டுமா என்ற கேள்வி உரத்துப் பெரிதாகக் கேட்கத் தொடங்கியது. பெற்றோர்களிடம் ஒரு தவறான அபிப்பிராயம் இருந்தது. தந்தை செல்வாவில் சேர்த்துவிட்டால், பிள்ளைகள் தெரிவுப் பரீட்சைக்குத் தோன்றாமல் யூனியனால் உள்வாங்கப்படுவார்கள் என்பதே அந்த அபிப்பிராயம். எனது முடிவு சகலரையும் சிந்திக்க வைத்தது. தந்தை செல்வா மாணவர்களை உள்வாங்க மறுத்ததை அடுத்து, அவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர். தெரிவுப் பரீட்சையில் தந்தை செல்வா மாணவர்கள் பலர் தேவையான புள்ளிகளைப் பெறவில்லை. அதனால் அவர்கள் தெரிவாக வில்லை. யூனியன் கல்லூரியைப் பற்றிக் குறுகிய காலத்திலேயே நல்ல அபிப்பிரயாம் பரவத் தொடங்கியிருந்தது. அதனால் வெளியிடங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் ஆறாம் ஆண்டில் சேர்வதற்கான தெரிவுப் பரீட்சைக்குத் தோன்றியிருந்தனர். தந்தை செல்வா பக்கத்திலிருந்து, கல்வி அதிகாரிகளுக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டன. கௌரவ காங்கேசன்துறை பாராளுமன்ற உறுப்பினருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டது. அதன் பேற்றால் யூனியனில் சேர்ந்து, பின்னர் பிரிந்து சென்றவர்கள் தேர்வில் தவறியிருந்தால் அவர்களைச் சேர்க்க வேண்டும் என்று முடிவாகியது. ஒவ்வொருவருட முடிவிலும் தீராத வியாதியாக இப் பிரச்சினை இருந்து வந்தது. ஏனெனில் தந்தை செல்வா மாணவர்களை, யூனியன் கல்லூரி எதுவித தெரிவுப் பரீட்சையுமின்றி ஆறாம் ஆண்டுக்கு, அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து விரும்பினர். அதனை ஏற்றுக் கொண்டால் யூனியன் கல்லூரியின் ஆறாம் வகுப்பிற்கு அனுமதி வழங்குபவர்கள், தந்தை செல்வா நிருவாகம் என்றாகிவிடும். சிலரால் அதனைப் புரிந்து கொள்ள முடியாதிருந்தமை வருந்தத் தக்கது.


     ஆறாம் வகுப்பு அனுமதி விடயத்தில் நான் கண்டிப்பாக இருக்க வலுவான காரணம் இருந்தது. முதலாம் வகுப்பில் எதுவித தெரிவும் இல்லாமல் முன்னர் அனுமதித்த மாணவர்களில் கணிசமானவர்கள், வகுப்புகளில் மிகவும் பின் தங்கியிருப்பதை அவதானிக்க முடிந்தது. அவர்களை எந்தவித ஊக்கத்தாலும் பாடங்களில் திறம்பட அல்ல, சாதாரணமாகக்கூட இயங்க வைக்க முடியாமல் இருந்தது. ஓரிருவர் க.பொ.த. (சா.த) பரீட்சையில் எப்பாடமும் சித்தி பெறாமலே வெளியேறுவதும், சிலர் சமயபாடத்தில் மட்மே சித்தி அடைவதும் அவதானிக்கப்பட்டது. ஆகவேதான் கல்லூரியை மேனிலைப் படுத்துவதானால் தெரிவுப் பரீட்சை மூலமே மாணவர்களை அனுமதிக்க வேண்டியிருந்தது. யூனியனின் மேனிலை கருதியே நாம் இயங்கியதால், தந்தை செல்வா மாணவர்களை அப்படியே உள்வாங்க முடியவில்லை. 

தொடர்ந்து வரும்... 

No comments:

Post a Comment