யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்
அம்பாள் ஆலயத்
திருப்பணி, யூனியன் கல்லூரி வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும். யூனியன்
கல்லூரியில் பயின்ற மாணவர்களில் 95 சதவீதம் சைவசமய மாணவர்களாகும். இருந்தும்
அவர்களது தேவைகள் அபிலாசைகள் கவனிக்கப்படாமல் இருந்தன. 1962இல் அரசு கல்லூரியைப்
பொறுப்பேற்றதும் நவராத்திரி விழா ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் ஒரு பத்தியில் சுவாமி
படத்தை வைத்து காலையில் வணங்கினர். மாணவர்களது சைவசமயம் சம்பந்தப் பட்ட
பிரச்சினைகள் இரண்டு வகையாக இருந்தன. ஒன்று மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில்
திருவிழாச் செய்வது. அடுத்தது வசதியான ஆகம விதிப்படியான கோவில் அமைப்பது.
வீமன்காமம்
மகாவித்தியாலயம், நடேஸ்வராக் கல்லூரி, மகாஜனக் கல்லூரி மாணவர்கள் மாவிட்டபுரம்
கந்தசாமி கோவிலில் நீண்ட காலமாகத் திருவிழாச் செய்து வந்தனர். 95 சதவீத சைவசமய
மாணவர்களைக் கொண்ட தமது கல்லூரிக்கு அந்தப் பாக்கியம் இல்லாததைக் கண்டு யூனியன்
கல்லூரி மாணவர்கள் வருத்தப்பட்டனர். ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையால்
பாதிக்கப்பட்டார்கள். உயர்தர வகுப்பு மாணவர்கள் பலதடவைகள் அதுவிடயமாக என்னை
அணுகினர். பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் என்னை அணுகி மாணவர்
உரிமையைச் செய்து கொடுக்கும்படி வேண்டினர். அவர்களின் வேண்டு கோளின்படி,
திருவிழாச் செய்ய ஒழுங்குகள் செய்யப்பட்டன. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் ஆறாந்
திருவிழாவை 1985 ஆம் ஆண்டு தொடக்கம் யூனியன் கல்லூரி மாணவர்கள் செய்து
வருகின்றனர். தந்தை செல்வா தொடக்க நிலைப் பள்ளி மாணவர்களும் இதில் கலந்து
கொண்டனர். அத்திருவிழாவில் சைவ மாணவர்கள் மட்டுமல்லாது கிறீஸ்தவ மாணவர்களும்
ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்து வந்தனர்.
அடுத்தது
சைவ மாணவர்களுக்கு ஒரு நிரந்த வணக்க தலம் அமைக்க வேண்டிய பணி காத்திருந்தது.
யூனியன் கல்லூரி வளாகத்தில் கிறீஸ்தவ மாணவர்கள் தேவாலயத்துக்குச் சென்று, அங்கு
நீண்ட அழகிய வாங்குகளில் அமர்ந்து இறை வணக்கம் செய்ய வசதிகள் இருந்தன. சைவசமய
மாணவர்களைப் பொறுத்தவரை, ஒரு குகை போன்ற பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பாழடைந்த
தாழ்ந்த பத்தியே வணக்கத் தலமாக அமைந்தது. அதன் எதிரே ஒரு வகுப்பறை. அதுதான் பிரதான
வணக்க மண்டபம். அருகே உள்ள இரு வகுப்பறைகளில் நின்றும் வணங்குவார்கள். அவர்களுக்கு
சுவாமி தெரிவதில்லை. வெளியே வாசலில் மாமரத்தின் கீழும் நிற்பார்கள். ஏதோ ஒரு முறை
மணி கிலுக்குகிற சத்தம் மட்டும் கேட்கும். கண்களை மூடிக் கையைக் கூப்பி
வணங்குவார்கள். அது முடிய வீபூதி சந்தனம் தரித்து சைவத்தின் மணங்கமழ வகுப்பறைகளுக்குச்
செல்வார்கள். இந்தச் சூழ்நிலையில் மாணவர்கள் பலரும் வணங்குவதற்குத் தமக்கும்
மற்றும் பாடசாலைகளில் உள்ளது போன்ற கோவில் அமைத்துத் தரும்படி அடிக்கடி வேண்டினர்.
அதில் உள்ள சாதக பாதகங்கள் பரிமாறப்பட்டன. சிலர் பெற்றார்களை அனுப்பி ஒரு கருத்தை
முன் வைத்தனர். அது:
“நீங்கள் உங்கள் காலத்தில் கோவில்
அமைக்காவிட்டால், வேறு எவராலும் நிறைவேற்ற முடியாமல் போய்விடும்” என்பதே
அக்கருத்து.
அந்தக் கருத்தையே பழைய மாணவர்கள் பலரும்
கொண்டிருந்தனர். அவர்களுள் தொடர்ந்து நியாயங்களைக் காட்டி முக்கியமாக வாதாடியவர்
பழைய மாணவர் சங்கப் பொருளாளராகத் தொடர்ந்து பணியாற்றி வருகின்ற திரு.வே.தேவதாசன்
அவர்கள். அவர் கூறிய நியாயங்களை மரியாதை கருதித் தவிர்த்துள்ளேன். எனது ஓய்வு வயது
நெருங்க நெருங்க சகலரதும் அழுத்தம் அதிகமாகியது.
அவர்கள் அப்படியான கருத்தைச் சொல்லக் காரணம்
இருந்தது, கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரியில் சைவசமய மாணவர்களுக்குக் கோவில் கட்ட
எடுத்த முயற்சி அரைகுறையில் தடைப்பட்டுள்ளது என்று பேசிக் கொண்டார்கள். 200
மீற்றர் தூரத்துள், இன்னொரு –- அதேமதம் சாராத -– வணக்க தலத்தைப் பாடசாலை
வளவுக்குள் அமைக்கப்படாது என்ற சட்டம் வேறு. கல்விப் பணிப்பாளரைச் சந்தித்தேன்.
200 மீற்றர் சட்டத்தை நினைவூட்டினார். எனது வாதம் வேறாக இருந்தது. கிறீஸ்தவ
தேவாலயம் சட்டப்படி யூனியன் கல்லூரி வளவிற்குள் இல்லை என்பதாகும். ஆனால் நாம்
இருவரும் 95 வீதத்திலும் கூடிய சைவசமய மாணவர்களின் நலனைக் கருதி, ஒரு முடிவு
செய்தோம். கல்விப்பணிப்பாளர் எனக்குத் தந்த அனுமதியில் கோயில் (Temple) என்று
எழுதவில்லை. வணக்க தலம் (Shrine) என்றே குறிப்பிட்டிருந்தார். ஆகமவிதிப்படி கோவில்
அமைவதை அவர் வார்த்தை அளவில் அனுமதித்திருந்தார். அதற்கு நான் நன்றி
தெரிவிக்கின்றேன்.
திருப்பணிக்குத்
தேவையான பணவுதவியைப் பொறுத்தவரை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றார், பழையமாணவர்களே
உபய மளித்தனர். மொத்தம் 1,40,000.00 ரூபா பணமாகச் செலவு செய்து அம்பாள் ஆலயம்
அமைக்கப்பட்டது. இப்பணத்துள் கோவில் உடமைகளான பெரிய வெங்கல மணி, தீபங்கள்,
தட்டுகள், விக்கிரகம், கலசம் என்பன அடங்கா. அவை ஆசிரியர்களாலும் மாணவர்களாலும்
அன்பளிப்புச் செய்யப்பட்டவை. பணவிடயத்தில் குறிப்பிட வேண்டியவர் பழைய மாணவர்
சங்கத் தலைவர் திரு. மா.வரராஜசிங்கம் அவர்களாகும். அவரிடம் கோவில்
திருப்பணிக்காகத் திரு.கு.க.செல்லத்துரை அவர்கள் 10,000.00 ரூபா கடன்
பெற்றிருந்தார். ஆனால் அவர் இறுதியில் “நீங்கள் பணமுடையில் இருக்கிறீர்கள்.
திருப்பித் தரத்தேவை இல்லை” என்று சொன்னார்.
எவ்வளவு பெரிய உள்ளம்? உயர்திரு வரராஜசிங்கம் அவர்களுக்கு இச்சமயத்தில்
எனது சார்பிலும், யூனியன் கல்லூரி சார்பிலும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும்
அன்புடன் தெரிவிக்கின்றேன்.
கோவிலுக்கு அத்திவாரம் போடும் சுபமுகூர்த்தம்
நெருங்கியது. நிறையச் சிந்திக்க வேண்டியிருந்தது. அன்றைய சூழ்நிலையில் ஒரு சிலரின்
விரும்பத்தகாத புகைச்சலைத் தணிக்க வேண்டியிருந்தது. கோவில் மாணவர்களுக்கு உரியது.
அவர்கள் அப்பணியைச் செய்வதே சூழ்நிலைக்;கு உகந்தது என்று எண்ணினேன். இறுதி
நேரம்வரை நான் அத்திவாரம் இடவில்லை என்பதை யாருக்கும் சொல்லவில்லை. அப்பொழுது மாணவர்
தலைவர்களின் சிரேட்ட தலைவனாக இருந்த செல்வன் நாகரத்தினம் சுகந்தனிடம் அப்பொறுப்பை
ஒப்படைத்தேன். எவருமே முணுமுணுக்க முடியாத குணநலம் கொண்ட மாணவர். சகல
ஆசிரியர்களதும் மாணவர்களதும் அன்பையும் மரியாதையையும் பெற்றவர். 1986 தை மாதம்
பாடசாலை நேரத்தில் அத்திவாரமிட்ட நிகழ்வில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைத் தலைமை
டாக்டர் சி.கதிரவேற்பிள்ளை அவர்களும், அதே வைத்தியசாலையைச் சேர்ந்த திரு.
கு.சிவானந்தன் அவர்களும் கலந்து கொண்டு பண அன்பளிப்புச் செய்தனர். பெற்றோரும்,
வேறும் பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
1986 ஆவணி மாதம்
நகுலேஸ்வர ஆலய ஆதீனகர்த்தா சிவஸ்ரீ கு.நகுலேஸ்வரக் குருக்கள் தலைமையில்
கும்பாபிசேகம் நடந்தது. சங்கற்பப் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். அவ்வேளை
பலபிரமுகர்கள் சமூகமாக விருந்தனர். அதில் குறிப்பிடக் கூடியவர் நல்லை ஆதீன
முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமசார்ய சுவாமிகள் அவர்கள். அவரது
பாதங்களைத் தொட்டு வணங்கிய மாணவர்களை அவர் ஆசீர்வதித்தார்.
கும்பாபிசேக
வைபவத்தில் பாடுவதற்கு வேண்டிய திருவூஞ்சற் பாக்களை ஆக்கித் தந்தவர் இலக்கண
வித்தகர் திரு.இ.நமசிவாய தேசிகர் அவர்கள். இவர் எமது கல்லூரிப் பழைய மாணவர். இவரது
பிள்ளைகளும் எமது கல்லூரிப் பழைய மாணவர்களே.
வைபவத்தின்
பொழுது முதன்முதலாக ஊஞ்சற்;பாட்டைப் பாடியவர் பிரபல சங்கீத வித்துவான் அளவையூர்
திரு.நடராசா அவர்கள். அவர் பாடல்களை நாதஸ்வர கச்கரவர்த்தி திரு.என்.கே.பத்மநாதன்
அவர்கள் நாதஸ்வரத்தில் இசைத்தார். அவ்வேளை கும்பாபிசேக கிரியைகளை நிறைவேற்றிக்
கொண்டிருந்த சிவஸ்ரீ நகுலேஸ்வரக் குருக்கள் ஐயா அவர்களது கைமணி
திருக்கீதமிசைத்தது. அந்தத் தெய்வீக ஒலிகள் திருக்காட்சிகள் பக்தர்களை மெய்மறக்கச்
செய்தன.
கோவில் கட்டுதல்
பணியை முன்னின்று எடுத்துச் சென்றவர்கள் பலர். அவர்களில் குறிப்பிடப்படவேண்டிய
ஆசிரியர்கள்: பகுதித் தலைவர்
திரு.அ.பரமநாதன், மாணவிகள் ஒழுக்கப் பொறுப்பாசிரியை செல்வி ஜெ.சபாரத்தினம்
வர்த்தக-கலைப் பிரிவுப் பொறுப்பாளர் திரு. பொ.கமலநாதன், பகுதிப் பொறுப்பாளர்
திருமதி பராசக்தி பரமேஸ்வரன், நூலகப் பொறுப்பாளர் திருமதி ம.பத்மநாதன், செல்வி
பரமேஸ்வரி நாகரத்தினம், திருமதி தருமபூபதி சிதம்பரநாதன் என்போராகும். ஆலயம்
அமைக்கவேண்டும் என்பதில் எல்லோரையும் ஊக்கப்படுத்திய சங்கீத ஆசிரியை திருமதி
சிதம்பரநாதன் அவர்கள் பின்னர் ஆசிரிய
பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது
மூத்தமகள், யாழ் பல்கலைக்கழகப் பட்டதாரியாகிய வாசுகி இரண்டாவது பிரசவத்தின் பொழுது
வவுனியாவில் காலமாகியமை பெரும் கவலைதருகிறது. இச்சந்தர்ப்பத்தில் எனது ஆழ்ந்த
கவலைகளைத் தெரிவிக்கின்றேன். மாணவர்கள் ஆசிரியர்கள் யாவரதும் அன்பையும் மதிப்பையும
பெற்ற குளுமையான தோற்றமுடைய புன்னகையுடன் உலாவந்த வாசுகியை எவரும்
மறந்திருக்கமாட்டார்கள். அன்னாரின் ஆத்மசாந்திக்குப் பிரார்த்திக்கின்றேன்.
திருப்பணியில் உற்சாகமாகப் பங்காற்றிய இன்னொருவர் செல்வி பரமேஸ்வரி நாகரத்தினம்.
டிக்சன் இல்லத் தலைவியாக விருந்த, உயர் வகுப்புகளில் மிகச் சிறப்பாக வர்த்தகம்
கற்பித்த செல்வி நாகரத்தினம் அவர்கள் இப்பொழுது ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில்
விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். கோவில் திருப்பணியில் தீவிரமாக உழைத்த மற்றொருவர்
இப்பொழுது ஒஸ்ரேலியாவில் பிள்ளைகளுடன்
வாழுகின்ற திருமதி பராசக்தி பரமேஸ்வரானாகும். கடமை, நேர்மை, ஒழுக்கம்
என்பனவற்றிற்கு எடுத்துக்காட்டாக ஆசிரியப்பணியாற்றியவர். அம்பாள் ஆலய விடயத்தில்
மிக்க அக்கறை காட்டி முன்னின்று உழைத்த இன்னொருவர் செல்வி ஜெயரத்தினதேவி
சபாரத்தினம் அவர்கள். பலரின் புறங்கூறல்களுக்குப் பதில் சொல்லியபடி அம்பாள் ஆலய
முயற்சிகளை தலைமேல் சுமந்தவர். இன்றும் அம்பாள் ஆலயம்பற்றிய கனவில் வாழ்பவர்.
அம்பாள் ஆலயப் பணியில் ஈடுபட்டட அனைவரும் உயர உயரப் பறப்பதைக் காண்கின்றேன்.
இவர்கள் யாவருக்கும் எனது நன்றிகளும் நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக.
சைவசமய
மாணவர்கள் சமயக் கடமைகளை இடையூறின்றி நிறைவேற்ற இன்னும் பணிகள் செய்யவேண்டியுள்ளன.
பழைய அனுபவம் - நவராத்திரி காலத்தில் மாணவர்கள் மாமரத்தின்கீழ் நின்று சிவபுராணமும், சகலகலாவல்லிமாலையும் பாடுவர்.
மழை துமித்தால் பொருட்படுத்தமாட்டார்கள். மழை கொட்டினால் மலாயாக் கட்ட
விறாந்தைக்கு ஓடிச் செல்வர். மழைவிட மீண்டும் வருவர். மீண்டும் மழை தொடங்க
விறாந்தைக்கு ஓடுவர். கோவில் திருப்பணி முடிந்த பின்னரும் அவர்கள் நின்று
வணங்குவதற்காள மண்டப வசதி இருக்கவில்லை. மாணவர்கள் திருக்கோவில் வாசலில் வெயில்
மழை இரண்டுக்கும் ஈடுகொடுக்க வேண்டியவர்களாக இருந்தனர்.
ஆகவே 2000
மாணவர்கள் நின்று தீபதரிசனம் காணக்கூடிய ஒரு மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டினேன்.
ஆனால் அப்பணியை நிறைவேற்றக் கொடுத்துவைக்கவில்லை. அப்பணியை எவராவது பொறுப்பேற்று
நிறைவேற்ற முன்வரவேண்டுமென்று வேண்டுகிறேன்.
தொடர்ந்து வரும்...
தொடர்ந்து வரும்...
No comments:
Post a Comment