Monday, 28 November 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன்கல்லூரி நினைவுகள் பதிவுகள்

14.   “கோவில் கட்ட முன்னர் ஏன் தெரிவிக்கவில்லை?”


        கல்லூரி வளாகத்துள் அம்பாள் கோவில் கட்டியபொழுது பழைய மாணவர் சங்கத்தில் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அதனைப் பற்றிய கேள்வி எழவும் இல்லை. ஆனால் கோவில் கட்டி முடிந்த பின்னர் நடந்த பழைய மாணவர் சங்கக் கூட்டத்தில் திரு. எஸ்.ஆர்.ஜேசுபாலன் அவர்கள் எழுந்து ஒரு கேள்வி எழுப்பினார்.  -1986-

“கோவில் கட்டுவதைப் பற்றி நீங்கள் ஏன் பழைய மாணவர் சங்கத்துக்குத் தெரிவிக்கவில்லை?” 

அதுவரை காலமும் பழைய மாணவர் சங்கத்தில், எவரும் அப்படி ஒரு கேள்வியை எழுப்ப வில்லை. நான் சொல்வதை அப்படியே உள்வாங்கியவர்கள்தான். அவருக்கு எனது பக்க நியாயத்தைச் சொல்ல எழுந்தேன். யூனியன் கல்லூரியை அண்டிய பிரதேசச் சைவசமய மக்கள், அதனை வேதக்காரப் பாடசாலை என்று நொடிக்கக் கேட்டிருக்கிறேன். புகுந்த வீட்டில் வாழ்ந்த எனக்கே அது உறைப்பாக இருந்தது. அப்படியான சூழ்நிலையில் வாழும் மக்களின் உணர்வுகளைப் பேயாட்டக்கூடிய சம்பவமாகையால், எல்லோரும் சற்று அதிர்ச்சி அடைந்திருந்தனர். நான் பேசத்தொடங்கினேன். 

     “திரு. ஜேசுபாலன் அவர்கள் ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார். ஒரு சிலர் மனதில் மட்டும் இவ்வகையான தவறான கருத்து வளர்வது எனக்குத் தெரியும். கல்லூரியின், மாணவர்களின் நலன் கருதி அவர்களது தவறான அபிப்பிராயத்தை நீக்குவது அவசியமெனக் கருதுகிறேன். எனவே அவர்களின் சந்தேகங்களைப் போக்க இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த விரும்புகிறேன. இந்த வாய்ப்பை அளித்தமைக்கு தெல்லிப்பழை கிறிஸ்தவ சங்கச் செயலாளர் திரு.ஜேசுபாலன் அவர்களுக்கு நன்றி கூறிக்கொண்டு, பதிலைக் கூறவிரும்புகிறேன்.”

     “கல்லூரிப் பொறுப்பை ஏற்ற பொழுது, பல வசதியீனங்கள் இருந்தன. உதாரணமாக நீர் வழங்கல் பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருந்தது. தண்டல் செய்து ஒரு நீர்த்தொட்டி (றயவநச வயமெ) அமைத்து, அந்தப் பிரச்சினையைத் தீர்த்தேன். நான் பழைய மாணவர் சங்கத்துக்கு அறிவித்துவிட்டோ அல்லது அவர்களிடம் அனுமதிபெற்றோ அதனைச் செய்ய வில்லை.”

     “கல்லூரி ஒழுக்கத்துக்கு இரண்டாவது விளையாட்டு மைதானத்தில் இருந்த மலசலகூடம் தடையாக இருந்தது. வளாகத்துள் மலசலகூடங்களைக் கட்டியதோடு, மதில் கட்டி இரண்டாவது விளையாட்டு மைதானத் தொடர்பைத் துண்டித்தேன். யாரிடமும் ஆலோசனை அல்லது அனுமதி கேட்கவில்லை.”

     “வடக்கே வேலிகள் சரியாக இருக்கவில்லை. ஆடுகள் வகுப்புகளைப் பட்டியாகப் பாவித்தன. காலையில் திரு.கதிரன் துப்பரவாக்கி முடிந்துதான் வகுப்புக்கள் ஆரம்பிக்கும். மதிலைக் கட்டி அந்தப் பிரச்சினையைத் தீர்த்தேன். அப்போதும் நான் யாரையும் கேட்கவில்லை.”

“கல்லூரியில் சிறந்த ஆசிரியர்கள் இருக்கவில்லை. தேடித் தேடிச் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு வரவேண்டியிருந்தது. இன்றுள்ள ஆசிரியர்களில் 90 சதவீதமானவர்கள் புதிதாக என்னால் கொண்டு வரப்பட்டவர்கள். அதனால் சிறந்த மாணவர்கள் வெளியேறாமல் பார்த்துக்கொள்ள முடிந்தது. அப்பொழுதும் பழைய மாணவர் சங்கத்தைக் கேட்க வில்லை.”

     “கல்லூரி மாணவர்களுக்குப் பூரண சீருடை கொண்டு வந்தேன். அப்பொழுதும் யாரையும் கேட்கவில்லை.”

     “மகாஜனக் கல்லூரி, நடேஸ்வராக் கல்லூரி, வீமன்காம மகாவித்தியாலய மாணவர்கள், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் திருவிழாச் செய்கின்றனர். யூனியன் கல்லூரி மாணவர்களும் திருவிழாச் செய்ய விரும்பினர். அதன் காரணமாக 1985 தொடக்கம் யூனியன் கல்லூரி மாணவர்களும் ஆறாந்திருவிழாவைச் செய்து வருகின்றனர். யாரையும் கேட்டு மாணவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.”

“கல்லூரியின் நலனுக்கு என்ன நல்லதோ - மாணவர்களின் நலனுக்கு என்ன நல்லதோ, அதனை நானே தீர்மானித்தேன். நானே நிறைவேற்றினேன். நீங்கள்யாரும் அப்பொழுது “யாரைக் கேட்டுச் செய்தீர்கள்” என்று கேள்வி எழுப்பவில்லை. “உதவி தேவையா?” என்றும் கேட்கவுமில்லை. இப்பொழுது “யாரைக் கேட்டுக் கோவில் கட்டினீர்கள்?” என்று புதிதாகக் கேள்வி எழுப்பி உள்ளீர்கள்.”

     “யூனியன் கல்லூரிக்கு எது நல்லதோ? யூனியன் கல்லூரி மாணவர்களுக்கு எது தேவையோ, அதையே செய்தேன். யூனியன் கல்லூரி வளாகத்தில் கோவில் கட்டுவதற்கு நியாயங்கள் - ஒன்று இரண்டல்ல - ஏராளம் உள்ளன. யூனியன் கல்லூரி மாணவர்களில் 95 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் சைவப் பிள்ளைகள். கிறீஸ்த மாணவர்கள் 5 சதவீதத்திலும் குறைவு. அதிலும் 3 சதவீதத்திலும் அதிகம் கத்தோலிக்க மாணவர். மொத்தமாகக் கிறீஸ்தவ மாணவர்கள் சராசரியாக 30 பேரும் தேறமாட்டார்கள். கிறீஸ்தவ மாணவர்கள் காலைக் கூட்டத்துக்குத் தேவாலயத்துக்குச் செல்கிறார்கள். அங்கு விதிப்படி அமைக்கப்பட்ட தேவாலயம் உள்ளது. வசதியான உறுதியான அழகிய நீண்ட ஆசனங்கள் உள்ளன. ஆசனங்கள் வெறுமனையே இருக்கும். ஆனால் சைவமாணவர்களுக்கு? அவர்கள் தலையை இடிக்கும் பதிந்த ஓர் ஓட்டைப் பத்திக்குள் - வெளவால் குடிகொண்ட குகைக்குள் - சுவாமி படத்தை வைத்துக் கும்பிட்டார்கள். ஒரு வகுப்பறைதான் மண்டபம். நிற்கவே இடம் இல்லை. மிக மிக நீண்ட காலம் மறுக்கப்பட்ட உரிமையைதான் வழங்கினேன்.”

     “தெல்லிப்பழை தேவாலயப் போதகர்கள் வணக்கத்துக்குரிய ரி.பிரேமராஜா அவர்களும், வணக்கத்துக்குரிய டி.ஆர்.அம்பலவாணர் அவர்களும் எனது நன்மைக்கும் மகிழ்ச்சிக்குமாக பிரார்த்தித்து ஆசிவழங்கியவர்கள். வண.பிரேமராஜா அவர்கள் ஒரு முறை எனது அலுவலகத்துக்கு வருகை தந்து ஆறுதல் வார்த்தை கூறிய கனவான். ஆசிரியையாகப் பணியாற்றிய வண.பிரேமராஜா அவர்களது துணைவியார் யோகிகூட கையறுநிலையில் எனக்குப் பக்கபலமாக நின்ற பெருந்தன்மைகளின் உறைவிடமான அம்மையார். அவர்கள் மூவருக்கும் இச்சமயத்தில் நன்றி கூறுகிறேன்.”

“நான் எந்த மதத்தையும் வெறுப்பவன் அல்ல. கல்லூரியில் உள்ள கிறிஸ்தவ மாணவர்களிலும் எனக்கு அதே அக்கறை உண்டு. வருடாந்த வரவு செலவுத் திட்டத்தில் சமய நிகழ்ச்சிக்கு என்று பணம் ஒதுக்கப்படும். முன்னர் கறோல் கொண்டாட்டத்துக்கு, அல்லது கிறிஸ்மஸ் கொண்டாட்;டத்துக்குத் தடவைக்கு 35 ரூபா மட்டுமே வழங்கியுள்ளார்கள். சைவ-கிறீஸ்தவ சமய தேவைகளுக்கு ஒதுக்கிய பணம் முழுவதையும் - சைவ சமய நிகழ்ச்சிக்கு ஒரு சதமும் கொடுக்காமல் - கிறீஸ்தவ சமய பண்டிகைகளுக்கே கொடுத்தேன். ஒவ்வொரு பண்டிகைக்கும் 200 ரூபா வீதம் திருமதி தேவி ரீச்சரிடம் வழங்கினே;. அதுமட்டு மல்லாமல் தேவாலயத்தில் நடக்கும் பண்டிகைகள் எல்லாவற்றிலும் கலந்து கொண்டேன். கல்லூரி விடுதலை தினங்களிற்கூட வீட்டிலிருந்து தேவாலய நிகழ்ச்சிகளுக்கு வந்து கலந்து கொண்டிருக்கிறேன். அத்தோடு தேவாலயத்தில் பாடசாலை நேரத்தில் நடந்த வைபவங்களின் பொழுது சைவ மாணவிகள், தேவாலய நிகழ்ச்சிப் பாடல்களில் கலந்து கொண்டார்கள். அதே போல மாவிட்டபுரம் கோவிலில் எமது கல்லூரி நடாத்தும் திருவிழாவின் பொழுது, உயர்வகுப்பு சைவ மாணவிகள் கற்பூரச் சட்டி எடுத்தார்கள். அவர்களுடன் சேர்ந்து கிறீஸ்த மாணவியும் கற்பூருச் சட்டி எடுத்ததை அவதானித் துள்ளேன்.”

“திரு. ஜேசுபாலன்  எனது மைத்துனர் வீட்டுக்குச் செல்பவர். அவரைத் தனக்கு உறவினர் என்று சொல்பவர். அப்படியானால் நான்கூடத் திரு. ஜேசுபாலன் அவர்களுக்கு உறவு. தெல்லிப்பழையில் உறவினர்கள் இருசமயத்திலும் கலந்திருக்கிறார்கள்.”

“இளைய சமுதாயம் சமய வேறுபாடற்று நட்பாக வாழ்கிறது. நீங்கள் படித்தவர்கள் - பெரியவர்கள் முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டியவர்கள், இப்படிச் சமய துவேசத்தை எழுப்புவது கவலை அளிக்கிறது.”


எனது பேச்சு முடிவை அடுத்துக் கூட்டத்தில் எவரும், கோவில் அமைத்து அம்பாளை எழுந்தருளச் செய்த விடயம்பற்றி மூச்சுவிடவே இல்லை. அம்பாள் விடயம் முதலும் முடிவுமாய் நன்றே அமைந்தது.

No comments:

Post a Comment