கார் காலம் - தொடர் கனடா உதயன் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது.
இது பற்றிய திரு குரு அரவிந்தன் அவர்களின் கருத்தை இங்கே தருகின்றேன்.
இது 29.09.2017 கனடா உதயன் பத்திரிகையில் வெளியானது.
உங்கள் கருத்துகளையும் அறியத்தந்தால் மிக்க நன்றி உடையவனாக இருப்பேன்.
கார்காலம் தொடர்கதை பற்றிய கண்ணோட்டம்
(குரு அரவிந்தன்)
கே.எஸ்.சுதாகரின் கார்காலம் என்ற தொடர்கதை உதயன் பத்திரிகையில் வெளிவந்த போது பலராலும் பாராட்டப்பட்ட தொடராக இருந்தது. இலக்கியத்தில் உள்ள ஆர்வம் காரணமாக, இந்தத் தொடரைப்பற்றி வாசகர்களின் கருத்து என்ன என்பது பற்றி அறிந்து கொள்ள சிலருடன் உரையாட நேர்ந்தது. ‘உதயன் பத்திரிகை வாசிப்பீர்களா?’ என்று நூல் வெளியீட்டுக்கு வந்த மொன்றியல் நண்பர் ஒருவரிடம் கேட்டபோது, ‘என்ன பயணக்கட்டுரை பற்றியா கேட்கிறீர்கள்?’ என்றார். ‘இல்லை கார்காலம் பற்றி’ என்றேன். ‘நல்லகதை, கெதியாக முடித்துவிட்டார்கள்’ என்றார். ‘தொடர்ந்து வாசிக்க முடியவில்லை, ஆனாலும் வாசித்த பகுதிகள் சிறப்பாக வாசகர்களை கவரும் வண்ணம் அமைந்திருந்தது’ என்று நண்பர் அகணி அவர்களைக் கேட்டபோது குறிப்பிட்டிருந்தார். நண்பர் அகணியும் ஏற்கனவே தொடர் நாவல் ஒன்று எழுதியிருந்தார். ‘பத்தொன்பது வாரங்களாக இரசித்து வாசித்தேன், அவுஸ்ரேலிய வாழ்க்கை பற்றி ஓரளவு அறிந்து கொள்ள முடிந்தது’ என்றார் பீல் பிரதேசத்தில் வசிக்கும் மங்கை என்ற இலக்கிய ஆர்வலர். ‘ஏன் இவ்வளவு விரைவாகக் கதையை முடித்து விட்டார்’ என்று இன்னுமொரு வாசகர் கேள்வி எழுப்பியிருந்தார். கதாசிரியரிடம் பதிலை எதிர்பார்க்காவிட்டாலும், எனது அனுபவம் என்வென்றால், ‘எந்தத் தொடரை அலுப்பில்லாமல் வாசிக்கிறோமோ அது விரைவாக முடிந்து விட்டது போலத்தான் தெரியும். நல்ல திரைப்படங்களும் அப்படித்தான்.’