குவீன்ஸ்லாந்து
தமிழ்மன்றம் நடத்திய சிறுகதைப்போட்டியில் முதல் இடம் பெற்றது (2019)
பல்கலைக்கழகத்தின் கிழக்குப்புறப்
படிக்கட்டுகளின் ஒரு அந்தத்தில், புத்தகங்களைப் பரப்பியபடி காத்திருந்தாள் கரோலின்.
கரோலின் அவுஸ்திரேலியா நாட்டு வெள்ளை இனத்துப் பெண். மருத்துவம் பயில்வதில்
மூன்றாம் ஆண்டில் இருந்தாள்.
அடோனி அவளைக் கடந்து போகும் தருணங்களில் தன் வசம் இழந்து
விடுவாள். புத்தகத்தைச் சற்றுக் கீழ் இறக்கி, மாரளவில் பிடித்துக்கொண்டு,
கடைக்கண்ணால் ஒருதடவை அவனைப் பார்ப்பாள். ‘ஏதாவது கதையேன்’ என்பது போன்று அந்தப்
பார்வை இருக்கும். அடோனி ஒரு அபொறியினல், திருடப்பட்ட தலைமுறையைச் சார்ந்தவன். மேற்கு
அவுஸ்திரேலியாவில் இருந்து படிப்பதற்காக மெல்பேர்ண் வந்திருந்தான்.
இப்படித்தான், அன்று அடோனி அவளைக் கடந்து செல்கையில்,
திடீரென கரோலின் தன் இருப்பை விட்டு எழுந்து நின்று புன்னகைத்தாள். எத்தனை நாள்
தான் கடைக்கண்ணால் வெட்டுவது? அடோனி பயந்தே போய்விட்டான். பளிங்குக்கண்கள்,
மெல்லிய கீற்றுப் போன்ற புருவங்கள், கூரிய நாசி, காற்றிலாடும் பறவையின் மெல்லிய பொன்நிற
இறகுகளாகக் கூந்தல், பரிதிவட்டம் போன்றதொரு ஓலைத்தொப்பி. ஏதோ ஒரு பெயர் தெரியாத
சென்றின் நறுமணம் ஒன்று அவளிடமிருந்து பிரிந்து வந்து அவனைச் சூழ்ந்து கொண்டது.
இவை எல்லாமுமாகச் சேர்ந்து அவனைப் பொறி போல அப்பிக் கொண்டது. அதுவே அவர்களின் மூச்சு முட்டும் தூரத்திற்குள்ளான முதல்
அறிமுகம்.