Monday, 27 October 2014

வன்னி - நாவல் (அதிகாரம் 1)



மனித உரிமை ஆர்வலர் கதிர் பாலசுந்தரம். பிரபல தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர். தமிழ் ஆங்கிலம் இருமொழிகளிலும் நாவல் எழுதும் புலம்பெயர்ந்த கனடாவாழ் எழுத்தாளர்.

பன்னிரு வயதில் போர்க்களம் புகுந்து
இருபத்தாறு நீளாண்டுகள் போராடி முடிந்து
தமிழ்ஈழ சுதந்திரப்போர் தோல்வியில் முடிந்து,
ஆண்டுகள் மூன்று இலங்கை அரசின் கைதியாய் வாழ்ந்து,
புனர்வாழ்வு பூர்த்தி செய்து அழுதழுது வெளியே வரும்
மேஜர் சிவகாமி கூறும் குருதி சொட்டும் நவீனம்.

புகலிட இலக்கியத் தளத்தில் இதுவரை இத்தகையதொரு சிறந்த வரலாற்று நவீனம் வெளிவரவில்லை என்பது எனது கணிப்பாகும். -          பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம்


அதிகாரம் 1

அதிர்வலைகள்

தலைமுறைகள் மூன்றின் முன்னரே
ராச பாரம்பரிய வழிவழி வந்த
வன்னி 'ராச நாச்சியார் வம்சத்தை"
வரித்துக்கொண்ட சுதந்திர தாகம்
சிவகாமியை போர்க்களம் அழைக்கிறது.

பன்னிரு வயதில் போர்க்களம் புகுந்து
இருபத்தாறு நீளாண்டுகள் போராடி முடிந்து
தமிழ்ஈழ சுதந்திரப்போர் தோல்வியில் முடிந்து,
ஆண்டுகள் மூன்று இலங்கை அரசின் கைதியாய் வாழ்ந்து,
புனர்வாழ்வு பூர்த்தி செய்து அழுதழுது
வெளியே வருகின்றாள், மேஜர் சிவகாமி.

ஊன்று கோல் இருகை பற்றி
பிறந்து வளர்ந்த வன்னி மண்ணின்
சிவந்த வீதியில் ஒருகால் நின்று
அழிந்து மறைந்துபோன நாச்சியார் வம்ச
மூன்று தலைமுறை நீள் கதையை
ஆரம்பிக்கின்றாள் மேஜர் சிவகாமி.

Sunday, 19 October 2014

உயர உயரும் அன்ரனாக்கள் - கதிர் பாலசுந்தரம்

        
 

பிள்ளையார் கோவில் பின் வீதியில், குளத்தோரம் நின்ற மருதமர நிழலிலிருந்து தெறித்துப் பறந்த சொற்கள் வீமன்காமம் கிராமம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்தன.

மோகன்தான் மொட்டைக் கடிதம் எழுதினவனாம். அதனாலேதான் கிளிக்குஞ்சு கோமதியின்டை கலியாணம் குழம்பினதாம்.இவ்வாறு பொரிந்தபடி - கக்கத்துள் வெற்றுக் கடகத்தை அணைத்தபடி நின்ற, ஒல்லியான வலித்த விசாலாட்சி தனது வயதை ஒத்த குள்ளமான கருமையான கனகத்தைப் பார்த்தாள்.

மேலே மருதங் கொப்பொன்றில் ஒரு கிழிப்பொந்து. அதன் வாயிலோரமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த இரு மருதங் கிளிகளையும் பார்த்தபடி கனகம் ஈனக் குரலில்,

மோகன்தான் மொட்டைக் கடிதம் எழுதினவன். இப்படி நான்தான் கதைகட்டினதென்று கடைசியிலே கதை வரும். மோகன்டை அப்பன் மறியலிலேயிருந்து வந்த சண்டியன். என்னை வம்பிலை மாட்டாதை விசாலாட்சிஎன்று கூறிவிட்டு - கையை நீட்டி ஏதோ உளறியபடி - ஒழுங்கையில் குடுகுடு என்று வந்து கொண்டிருந்த, பச்சைச் சேலை அணிந்த கொஞ்சம் குண்டான சிவகாமியைப் பார்த்தாள்.

கோண்டாவில் டாக்டர் மாப்பிளை, டட்சன் கார் கேட்டவராம். அதாலே தான் கலியாணம் குழம்பினதாம்.என்று உரத்து இரைந்தபடி சிவகாமி அவ்விடம் வந்து சேர்ந்தாள்.

Saturday, 18 October 2014

எதிர்கொள்ளுதல்



கொழும்பு இரத்மலானை 'எயாப்போட்'டிலிருந்து விமானம் மேலெழும்புகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வடபகுதிக்கு பிளேன் வெளிக்கிடுகின்றது.

"அக்காவிற்குக் கடுமை. ஒருக்கா வந்து பாத்துவிட்டுப் போனால் நல்லது."

இவ்வளவும்தான் கடிதத்தில இருந்தது. இத்தனை காலத்தில அத்தான் எனக்கு ஒருபோதும் கடிதம் போட்டதில்லை. என்னவென்றாலும் அக்காதான் போடுவா. அத்தான் எழுதின கடிதத்தின்ர சுருக்கத்தில இருந்து நிலமையைப் புரிஞ்சு கொண்டன். அக்காவின் கடைசிப் பக்கங்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடிதம் கிடைச்ச மூண்டு நாளைக்குள்ள அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிக்கிட்டு சிறீலங்கா வந்திட்டன். வடபகுதி நிலமையள் மிக மோசமா இருந்தன. நாலு கிழமையா பலாலிக்கான விமானப் போக்குவரத்து நடக்கேல்லை. வடபகுதி முற்றாக ஏனைய பகுதிகளிலையிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது.

Friday, 10 October 2014

பேசும் தமிழ்

நேரம் பிந்திவிட்டது. நிகழ்ச்சி - தமிழ் விழா. ஆரம்பிக்கும் நேரம் ஆறு மணி. இப்போது நேரம் - ஆறு ஐந்து. மனைவியின் 'கடைசி நேர அலங்காரத்தினால்' நேரம் கொஞ்சம் பிந்திவிட்டது.

"எப்பத்தான் உங்கடை புறோகிறாம் நேரத்துக்குத் துவங்கியிருக்கு!" - இது மனைவி திலகா.
உண்மைதான். அந்த நேரம் பிந்துதலும், இந்த அலங்காரம் பிந்துதலும் ஒன்றாகப் பொருந்துமானால், ஒருவேளை நிகழ்ச்சி தொடங்கும் நேரத்திற்குப் போகலாம்.

மகள் வெளிக்கிட்டு, சலங்கை கட்டி ஹோலிற்குள் 'தை தை' என்று ஆடினாள். ஒன்பது வயது.
"யானை வந்தது, காட்டு யானை வந்தது
தும்பிக்கையை ஆட்டி ஆட்டி யானை வந்தது"

என்னால் கார் வேகமாக ஓட முடியாது. முள்ளந்தண்டுப் பிரச்சினை. சீற்றில் இருப்பதுவும் கஸ்டம். விழா நடக்குமிடத்துக்கு நாங்கள் சென்றடைந்த போது மணி ஆறு முப்பது. காரை நிறுத்துவதற்கு இடம் இல்லாமலிருந்தது ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஒருமாதிரி தெருவில் இருந்த பஸ் தரிப்பு நிலையத்திற்கு சமீபமாக ஒரு குறுகலான இடம் கிடைத்துக் கொண்டது. மட்டுமட்டாக கோட்டைத் தழுவி நின்றது கார். றைவர் சீற்றிலிருந்து இறங்கும்போது வளையத்தையும் தூக்கிக் கொண்டேன். காற்று ஊதப்பட்ட வளையம், கார் குதித்துக் குதித்து ஓடும்போது 'சொக் அப்ஸோவ'ராகும். றைவர் சீற்றிற்குப் பக்கமாகவிருந்த சீற்றை சரித்துக் கொண்டு, நீட்டி நிமிர்ந்து கொண்டால் சுகமாக இருக்கும். மனைவியும் மகளும் இறங்கிக் கொண்டனர்.

"அப்பா! என்ர புறோகிறாம் இன்ரேவலுக்குப் பிறகுதான். வந்து எழும்பி நிண்டெண்டாலும்பாருங்கோ" போகும்போது மகள் சொல்லிவிட்டுப் போனாள்.
கொஞ்ச நேரத்தில் காரின் சூடு தணிந்து குளிர் பரவத் தொடங்கியது. தெருவிளக்குகள் அழுது வடிந்தன. ஒருசிலர் சோடிகளாகவும் தனித்தும் நடை பழகிக் கொண்டிருந்தனர்.
'இஞ்சை நடுச்சாமத்திலையும் அடை மழைக்கை குடையும் பிடிச்சுக் கொண்டு ஐஸ் கிரீம் சாப்பிட்டுக் கொண்டு போவார்கள்.'

திடீரென்று ஒரு கார் பிறேக் போட்டு பக்கத்தில் வந்து நின்றது. அந்தக் கிரீச்சிட்ட சத்தம் இரவு நேரமாதலால் பயத்தை உண்டு பண்ணியது. யாராவது இளவட்டங்களாக இருக்கலாம். என்ன அவசரமோ? அது முன்னேறி பஸ் தரிப்பு நிலையமான - பிறை போல் வாரிவிட்ட நிலப்பகுதியை நோக்கி மெதுவாக ஊர்ந்து மையம் கொண்டது. ஒருவரும் அதிலிருந்து இறங்குவதாகத் தெரியவில்லை. மர்மமாக நின்றது. கள்ளர் காடையராகக்கூட இருக்கலாம். ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு இருந்த வேளையில், கார் பின்புறமாக நகரத் தொடங்கி வேகம் எடுத்தது. அப்படி ஒரு 'றிவேர்ஸ்' எடுப்பை நான் என் வாழ்நாளில் கண்டதில்லை. நான் துலைந்தேன் என்று நினைப்பதற்கு முன், அது ஒரு மோதலுடன் முடிவுக்கு வந்தது. மனம் மூளைக்கு அனுப்பிய தந்தி போய்ச் சேருவதற்குள் அது நடந்துவிட்டது. காலதாமதமாகவே 'ஹோனை' அழுத்தினேன்.

மசாஜ்

பொழுது போகாமல் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்த குகனிற்கு - இடையில் அகப்பட்டது 'தவம் மசாஜ் சென்ரர். அந்த போர்ட்டைச் சுற்றியிருந்த 'நேயன்' விளக்குகள் விட்டு விட்டு ஒளிர்ந்து கண் சிமிட்ட, குகனின் கால்கள் வலிப்பு நோய் கண்டது போல உள் நுழைந்தன. 

மசாஜ் மசாஜ் என்று சொல்கின்றார்களே அதையும் ஒரு கை பார்த்துவிடலாம் என்று தோன்றியது அவனிற்கு. சாஜரில் பூட்டிய பட்டரி போல அவனது மசாஜ் சாஜ் ஏறியது. மேலும் மலேசியா வந்த மூன்று நாட்களும் உடல் அசதியாக இருந்தது.

கவுண்டரில் வயது போன பெண்ணொருத்தி காதும் ரெலிபோனுமாக நின்றாள். 
'கிழட்டுக் கூட்டங்கள்' பின்வாங்க எத்தனிக்கையில், பத்துப் பன்னிரண்டு பெண்கள் அடங்கிய 'மெனுக் கார்ட்' ஒன்றை நீட்டினாள் அந்தப் பெண். 'லமினேற்' செய்யப்பட்ட அந்த மெனுக் கார்ட்டில் இருந்த அனைவருக்குமே இருபது இருபத்தைந்திற்குள்தான் இருக்கும். அப்படி செகசோதியாக ஜொலித்தார்கள்.

'நான் என்ன குடும்பம் நடத்தவா இங்கு வந்திருக்கிறேன்?' மனம் ஒருதடவை அப்படி யோசித்தாலும் - 'மசாஜ்' அந்த அழகிகளின் காலடியில் சறண்டராகலாம் என்றே சொன்னது. ஒருவேளை அது அவர்களின் தொழில் தர்மமோ?

'காசிலை குறியா இரு. கவிட்டுப் போடுவார்கள்' என்று படித்துப் படித்து குகனிற்குச் சொல்லியிருந்தார்கள் நண்பர்கள்.

"எவ்வளவு?"
"அரை மணித்தியாலம் 80 றிங்கிற்றுகள். பிறகு முடியவிட்டுத் தரலாம்."

பன்னிரண்டில்  மூன்றைத் தெரிவு செய்து தொட்டுக் காட்டினான் குகன். "நீ சரியான குறும்பு. மூன்றும் வேண்டும் என்கிறாய்" அந்தப்பெண் குகனின் முதுகில் செல்லமாகச் சீண்டினாள்.

Monday, 6 October 2014

CODE OF CONDUCT - story by T. Nithiyakeerthy

(Nithiyakeerthy - the  former Eelam Tamil Association President and one of the founder members of the Australian Tamil Congress –Victorian chapter. He also served the Tamil community in New Zealand as the President of Wellington Tamil Society for four years.

He was well respected by the Tamil community in Australia and New Zealand. He was a great writer, poet and actor. He has staged several plays & dramas in Australia and New Zealand. His novel “Thopullkodi” was planned to be launched on Sunday 18th Oct, 2009. But unfortunately he passed away before the launch. )


 


The moulding machines are moving fast and spilling out finished plastic tubs, buckets, road safety barriers and water tanks.  Workers are busy stacking the finished products on pallets. I put on my overall and safety jacket.  Noises of the operating machines were in some form of rhythm, only disturbed by the tooting of fork lifts.  I stopped and talked to some of the workers. Smiled at some of them and listened to complaints from others.  They are always happy to talk to me.   I noticed an unprotected electrical wire running close to one of the new machines that was installed last week.   I looked for Raj, our electrician.  He was attending to a routine check on another machine.

‘Hi Peter’, Raj smiled, brushing off his black curly hair from his forehead.  His white teeth were sparkling under the bright factory light.  ‘That is my next job’, he pointed to the exposed electrical wire.

Friday, 3 October 2014

கங்காருப் பாய்ச்சல் (-5)

'உம்மை நீர் விற்க வேண்டும்!'

அவுஸ்திரேலியாவில் ஆரம்ப வகுப்பிலிருந்து, இடைத்தரத்திற்கோ அல்லது உயர்தரத்திற்கோ மாணவர்கள் மாறும்போது (Primary school இல் இருந்து Intermediate school அல்லது High school) நல்ல பள்ளிக்கூடத்திற்கு (Selective school) போக வேண்டும் என்றால் அவர்கள் வைக்கும் போட்டிப் பரீட்சையில் தேற வேண்டும். கணிதம் ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களில் பரீட்சை வைப்பார்கள். திறமையான மாணவர்களுக்கே (gifted students) அந்தப் பரீட்சை சிம்மசொப்பனமாக இருக்கும். அதற்காக பெற்றோர்கள் தமது பிள்ளைகளை ஒவ்வொரு பாடத்திற்கும் இரண்டு, மூன்று இடங்களில் ரியூசனுக்கு விட்டு பரீட்டைக்குத் தயார் செய்வார்கள். ஒவ்வொரு பாடத்திற்கும் குறைந்தது 50 டொலரிலிருந்து கட்டணம் ஆரம்பிக்கும்.

Thursday, 2 October 2014

இன்றைய ஈழத்து விமர்சனம்

விமர்சனம் என்றவுடன் இன்னமும் கனக.செந்திநாதனையும், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, மு.தளயசிங்கம் போன்றவர்களையும்தான் சொல்லிக் கொண்டிருப்பதிலிருந்து - இன்றைய ஈழத்து விமர்சனத்தை ஓரளவிற்கு எடை போட்டுக் கொள்ளலாம். 'ஈழத்து இலக்கிய வளர்ச்சி', 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி', '20ஆம் நூற்றாண்டு ஈழத்தமிழ் இலக்கியம்' போன்றவற்றைத் தவிர வேறு நூல்களைப் பார்ப்பதும் அருமையாகிவிட்டது.

முன்னையைப்போல பத்திரிகைகள், இதழ்கள், ஊடகங்கள், மேடை என்றில்லாமல் இன்று இலத்திரனியல் ஊடகங்களிலும் விமர்சனம் புகுந்துவிட்டது. முன்பு ஒரு படைப்பு வந்து அதற்கான விமர்சனத்தை பார்ப்பதற்கு நீண்டநாட்கள் எடுக்கும். இப்பொழுது சுடச்சுட இணையத்தளங்கள், வலைப்பூக்கள், முகநூல்கள், இணையக்குழுக்களில் வந்துவிடுகின்றன.

இன்று படைப்புகள் பெருகிய அளவிற்கு விமர்சகர்கள் பெருகவில்லை.