Tuesday, 10 March 2015

கங்காருப் பாய்ச்சல்கள் (-14)

வெற்றியின் 'மமதையும்' வீழ்ச்சியின் 'ஞானமும்'

அவுஸ்திரேலியாவில் வெளிவந்த/ வெளிவந்துகொண்டிருக்கும்) தமிழ் பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள்

நான் அறிந்தவரையில் அவுஸ்திரேலியாவில் இரண்டு இலவச தமிழ்ப்பத்திரிகைகள் மெல்பேர்ணில் இருந்து வந்தன. ஒன்று 'ஈழமுரசு' - மாதம் இரண்டு தடவைகள் 1999ஆம் ஆண்டு முதல் வெளிவருகின்றது. பிரான்ஸிலிருந்து வெளிவரும் இதழின் மறுபதிப்பு. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பாக வெளிவரும் பத்திரிகை. விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்படும் வரை முழுக்க முழுக்க 'விடுதலைப்புலிகள் சம்பந்தமான செய்திகளே வந்து கொண்டிருந்தன. 2009ஆம் ஆண்டின் பிற்பாடு பல புதிய சங்கதிகளையும் சேர்த்து வெளிவருகின்றது. இருப்பினும் எல்லா விதமான பலதரப்பட்ட எழுத்துக்களையும் சேர்த்துக் கொண்டு வரும் ஒரு தரமான பத்திரிகையாக இன்னமும் தெரியவில்லை. இப்போது இதைக் காணவும் கிடைக்கவில்லை.

மற்றயது 'உதயம்'. மாதாந்தம் வெளிவரும் இருமொழிப் பத்திரிகை. இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் வெளிவரும் புலி எதிர்ப்புப்பத்திரிகை என்று சொல்லுவார்கள். தமது எதிர்ப்புப்பிரச்சாரத்துடன் கலை இலக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து 1997ஆம் ஆண்டிலிருந்து வந்து கொண்டிருந்தது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்தவுடன், இனிப்பிரச்சாரமும் தேவையில்லை, கலை இலக்கியமும் தேவையில்லை என்று முடங்கிவிட்டது. இலங்கை அரசு பணத்தை நிறுத்திவிட்டது என்று பேச்சு. சரியாக இருக்கலாம். ஏனென்றால், உண்மையில் போர் முடிவடைந்த பின்னர்தான் இத்தகைய பத்திரிகைகள் எமது இனத்திற்குத் தேவை.

சஞ்சிகைகளை எடுத்துக் கொண்டால் - கலப்பை, தென்றல், தமிழருவி, தமிழ் ஓசை (ஆசிரியர், மாத்தளை சோமு), மெல்லினம், இளவேனில் (சமீபத்தில் ஆரம்பம்), தமிழ் அவுஸ்திரேலியன்(சமீபத்தில் ஆரம்பம்) என்பவை தற்போது வெளிவந்து கொண்டிருப்பவை. இதில் தென்றல், தமிழ்முரசு இலவசம். ஆள் பாதி ஆடை பாதி என்பது போல, விளம்பரங்கள் நிறைந்து வழியும் சஞ்சிகைகள். எதுவுமே 'பிஷ்னஸ்' ஆகும் இவ்வுலகிலே அவர்களையும் குறை சொல்ல முடியாது. கலப்பை, சிட்னியிலிருந்து 1994 முதல் வெளிவரும் காலாண்டு இதழ். 'அவுஸ்திரேலிய தமிழ் பட்டதாரிகள் அமைப்பில்' இருந்து ஏனோ தானோவென்று வெளிவருகின்றது. இதில் எழுதும் சில எழுத்தாளர்கள் சமகாலப்படைப்புகளையோ அல்லது குறிப்பாக சிறுகதை, கவிதை என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதையோ அறியாதவர்களாக மிகவும் பிடிவாதமாக எழுதுகின்றார்கள். அவுஸ்திரேலியாவில் எத்தனையோ எழுத்தாளர்கள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சிலரின் படைப்புகளையே காணக்கூடியதாக உள்ளது.
முன்பொருகாலத்தில் மரபு (ஆசிரியர் விமல். அரவிந்தன் - மெல்பேர்ண், 1990), அவுஸ்திரேலிய முரசு (ஆசிரியர் அருண். விஜயராணி -அவுஸ்திரேலிய தமிழர் ஒன்றியம், 1990), அக்கினிக்குஞ்சு (ஆசிரியர் ச.பாஸ்கர், 1990), உணர்வு (தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாணவர் அமைப்பு - மெல்பேர்ண், 1989), தமிழ் உலகம் (ஆசிரியர் சிறீஸ்கந்தராசா - 1994), பிரவாகம் (RMIT பல்கலைக்கழக மாணவர்கள், 2000) , கதிர் (சிட்னி, 1999), மக்கள் குரல் கையெழுத்துப்பிரதி(மெல்பேர்ண், 1988/89), தமிழ்க்குரல் (ஆசிரியர் மாத்தளை சோமு - சிட்னி 1988/89) போன்றவை வெளியாகின. வந்த வேகத்திலே மறைந்தும் போயின.

இதில் அக்கினிக்குஞ்சு (http://akkinikkunchu.com) தற்போது இணையத்தளமாக மெல்பேர்ணிலிருந்து வருகின்றது. தமிழ்முரசு (http://www.tamilmurasuaustralia.com) என்ற இணையத்தளம் சிட்னியில் இருந்து வருகின்றது. அரசியல், கலை இலக்கியம் என பல்சுவை கலந்த இணையத்தளங்கள் இவை.

ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது இவை எல்லாம் ஒவ்வொரு குழுக்களாக இயங்குபவை போலத்தான் தெரிகின்றன.



No comments:

Post a Comment