Monday, 23 March 2015

’வன்னி’ நாவல் - கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 22 - பாசம்

'வேம்படியில் படித்துக்கொண்டிருந்த பொழுது யாழ்ப்பாண பொது நூலகத்தைப் பார்க்கப் போயிருந்தேன். கண்ணீர் கொட்டியது. எரிந்து போன கட்டிடந்தான் எஞ்சி நின்றது.
நூலக வாசலில் சரஸ்வதி தேவியின் சிலை. வெக்கையின் கொடுமையில் உருக்குலைந்திருந்தது. எரித்தவன்களின் கழுத்தை நெரிக்க வேண்டும் போல ஆத்திரம்அலைமோதியது."
'யார் எரித்தது?" கோமதி.
இரண்டு சிங்க வாரிசு அமைச்சர்கள்.'சிங்கள நாய்கள். மிருக சாதி." எழுந்து நின்று வைதாள் சிந்துசா.
'சிந்துசா, எல்லாச் சிங்களவர்களும் அப்படியில்லை. போரின் பின்னர் நான் திருகோணமலையில் சந்தித்த கேணல் செனிவரத்தின மிக நல்ல சிங்களவர். அப்படியான தருமவான்கள் இன்னும் இருப்பர். அப்படி யானவர்கள் ஆட்சிக்கு வந்தால்...

பிள்ளைகளே, நான் கதைக்கு வருகிறேன்

இன்றைக்கு கரும்புலி முல்லையின் கதை. அவள் சொல்வாள்  எரித்த கதை.  எஞ்சிய கதையை தன் பாணியில் பதிவுசெய்வாள்."

காலை பத்து மணிக்குப் புதுக்குடியிருப்பில் உள்ள கரும்புலிகள் முகாமில் முல்லை வாகனத்தால் இறங்கினாள். பெண்களுக்கான தனித்த முகாம். போக முன்னரே அவளைப் பற்றிய கவர்ச்சியான கதைகள் முகாமில் வலம் வந்தன. சிலர் அருகே சென்று 'வருக, வருக!" என்று வரவேற்றனர்.

முல்லையின் மனம் பேசியது. விரும்பிய உடைகள் அணிந்திருக்கிறார்கள். எவரும் இரட்டைப் பின்னலை சுற்றி வளைத்துப் பிடரியில் கட்டவில்லை. நான் பின்னலை பிடரியில் வளையமாய்க் கட்டியிருக்கிறேன். சோதியா அக்காவும் எதுவும் கூறவில்லை. எல்லாம் சற்றே வித்தியாசமாய்த் தெரிகிறது.

கண்களைச் சுழற்றிச் சுழற்றிப் பார்த்தாள். மீண்டும் வெளியே ஒசை வராமல் வாய் வர்ணித்தது. பத்தேக்கர் வரையான பெரிய வளவு.எல்லைக்கு யாரும் போகாமல் உள்ளேயும்ஒருகம்பிவேலி. வளர்ந்த தென்னை மரங்கள். தேங்காய் குலை குலையாகத் தொங்குகிறது. செவ்விளநீர்க் குலைகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. ஆங்காங்கு மாமரம். பூவும் பிஞ்சுமாயிருக்குது. வடகிழக்கு மூலையில் பனங்கூடல். ஆறு கட்டிடங்கள். ஒன்று மட்டும் பெரியது. ஓடு போட்டது. ஏனையவை கிடுகால் வேய்ந்தவை. வீட்டு வாசல்களில் வண்ணக் குறோட்டன் பூஞ்செடிகள் அழகாய் சுமார் நாலடி உயரத்தில் வெட்டியிருக்குது. இருபெண்கள் வாளியில் நீர் காவிச் சென்று பூஞ்செடிகளுக்கு ஊற்றுகிறார்கள்.

இளங் கன்று ஒன்று துள்ளிப் பாய்ந்து ஓடியது. முல்லையின் கவனம் கன்றுக் குட்டியில் நிலைத்தது.

மீண்டும் முல்லையின் உள்ளம் பேசியது.
கரும்புலிகள ஆங்காங்கு இருவர் மூவராக நின்று பேசுகின்றனர். சுதந்திரமாய் நடமாடுகிறார்கள்.
சற்றுத் தூரத்தில் ஐந்து பெண்கள். ஒரே விதமான ஆடை. சிவப்பு கட்டைக் காற்சட்டை. மஞ்சள் சட்டை. எட்ட எட்ட நிற்கிறார்கள். ஏதோ பயிற்சி போல விருக்குது. அசையாமல் நிற்கிறார்கள். நிரம்ப நேரமாக நிற்கிறார்கள். அதுதான்பயிற்சி போலும்.

பெண் ஒருவர் முல்லையை நெருங்கினார். வயது நாற்பது பார்க்கலாம். நிலாப் போல வெள்ளையாய் குளிர்மையாய் இருந்தாள். 'வணக்கம் முல்லை. நான்தான் உம்முடைய பிரிவுக்கு பொறுப்பாளர். பெயர் நிலவு. வாருங்கள் உங்கள் இடத்துக்குப் போகலாம்."

இருவரும் ஓலையால் வேய்ந்த வீட்டுள் சென்றனர். உள்ளே சுவர் ஏதும் இல்லை. சுற்றிவரச் சுவர். இரண்டு சின்ன யன்னல்கள். பத்துக் கட்டில்கள். ஒன்று முல்லைக்கு. கட்டிலருகே சவுக்காரப்பெட்டிகளை ஒன்றன் மேல் இன்னொன்றை வைத்து உருவாக்கிய திறந்த குட்டி அலுமாரி. உள்@ரச் சிரித்துக் கொண்டு முல்லை உடைமைகளை அதனுள் வைத்தாள்.

நாலாம் நாள் கிளேய்மோர் வெடி பொருள் பற்றிய வகுப்பு. வகுப்பில் ஐவர் மட்டும் இருந்தனர். அவர்களும் முல்லையைப் போலப் புதியவர்களே.
ஒரு அக்காதான் பாடம் நடாத்தும் அறைக்குள் பிரவேசித்தார். கயிறு போன்ற உடம்பு. பொது நிறம். நீள் சதுர முகம். பொப் முடி.வலது கை இல்லை. 'எனது பெயர் மாதங்கி. லெப். கேனல் மாதங்கி" என்று சொல்லிவிட்டு தன்முன் ஆசனத்திலிருந்து எழுந்து நிற்கும் புதுமுகங்கள் ஐவரையும் அவதானித்தார்.

'இருங்கள். நீங்கள் தற்கொலைக் குண்டுதாரி பற்றிக் கேள் விப்பட்டிருப்பீர்கள். குறித்த ஒரு வெடிபொருளை அவர்கள் பாவிப்பர். ஒரு கேள்வி. எவராவது தற்கொலை குண்டுதாரி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  உமக்குத் தெரியுமா? அடுத்த ஆள். அடுத்த ஆள்?" நால்வர் பதில் பேசவில்லை.

ஆசிரியை முல்லையைப் பார்த்து 'நீ பார்வைக்கு சற்றே வித்தியாசமாய்த் தெரிகிறாய். தற்கொலைக் குண்டால் பழிவாங்கிய ஒரு குண்டுதாரியின் பெயர் கூறமுடியமா?"
'ஆம் ரீச்சர். தனு. அது இயக்கப் பெயர். சொந்தப் பெயர் தேன்மொழி இராசரத்தினம். ஸ்ரீபெரும்புதூரில் வைத்து இந்தியபிரதமர் ராஜீவ் காந்தியை தற்கொலைக் குண்டை வெடிக்கவைத்துக் கொன்றவர். வடஇந்தியாவில் நைநிதல் என்ற ஊரில் அமைந்த புலிகளின் முகாமில் பயிற்சி பெற்றவர். ஒற்றைக் கண் சிவராசனும் தனு அக்காவும் ஒரே காலத்தில் புலிகள் அமைப்பில் அங்கு பயிற்சி பெற்றவர்கள்."
'யார் ஒற்றைக் கண் சிவராசன்?"
ராஜீவ் காந்தி கொலையை களத்தில் நின்று வழி நடத்தியவர்."
ஆசிரியை வாயடைத்துப் போனார். அவருக்கே தெரியாது தனுவும் சிவராசனும் வட இந்தியாவில் ஒரே முகாமில், ஒரே காலத்தில் பயிற்சி பெற்றமை. சிறிது நேரம் முல்லையை உற்றுப் பார்த்தார்.

மஞ்சள் ரவிக்கை. சிவப்பு கட்டைக் காற்சட்டை. பால் வெள்ளையில் மெல்லிதாய் குங்கும வண்ணம் படிந்த முகம் பளபளத்தது.கண்கள் கதை பேசி. நீண்ட கறுத்த கேசம் நெஞ்சில் இருபக்கமும் படர்ந்திருந்தது.
முனிவர்களையும் ஆட்டிப் படைக்கும் அழகு. ஓசை வாய்க்குள் அமிழ்ந்து போனது. ஆசிரியை போலிக்குச் சிரித்துவிட்டு தனதுபாடத்தைத் தொடர்ந்தார்.

'தற்கொலைக் குண்டு தயாரிக்கும் வெடிபொருளின் பெயர் எம்181 கிளேய்மோர். கிளேய்மோர் என்றால் ஸ்கொத்துலாந்தில் பண்டைக்காலத்தில் பாவனையில் இருந்த அகலமான தகட்டை உடைய இருபக்கமும் கூரான வாள். வெடி பொருளைக் கண்டுபிடித்த ஸ்கொத்துலாந்து வாசி, கிளேய்மோர் என்ற பெயரை அந்த வெடிபொருளுக்குச்  சூட்டினார்.

கால்வைத்த குட்டிப் பெட்டியில் கிளேய்மோரை வைத்து, நிலத்தில் படுத்தபடி ஏவப்படும். ஒரு வெடியில் 700 உருக்கு சன்னங்களும், 680 கிராம் சி4 வெடி மருந்தும் அமையும்.சன்னங்கள் பறக்கும் எல்லைப்பரப்பு விரிந்து விரிந்து செல்லும்.செக்கனுக்கு 3,937 அடி பாயும். 6.5 அடி உயரம், 55 யார் அகலப்பிரதேசத்தைத் தாக்கும். சன்னங்கள் உடைந்து சிதறி அவையும் பறந்து தாக்கும்.

நாங்கள் கிளேய்மோர் குண்டுத் தாக்குதலை, எமது தேவைக்கு ஏற்பமாற்றி அமைத்துப் பாவிக்கின்றோம். கால்வைத்த குட்டிப் பெட்டிக்குப் பதிலாகச் சட்டை போன்ற கவசத்தைப் பாவிக்கின்றோம். கவசத்தைத் தற்கொலைப் போராளியின் சட்டை போலப் பொருத்தி விடுவர். சட்டை தவிர்ந்து இதன் நிறை 2.43 றாத்தல்.

கவசம் போன்ற பாரமுடைய சட்டையை அணிந்து கொண்டு நாளைக்குப் பயிற்சி எடுக்கவேண்டும். ஆறு மணி நேரம், அதோ அந்த மாமரத்தின் எதிரே வெயிலில் நிற்கவேண்டும். அடுத்த வகுப்பு நாளைக்குக் காலை ஆறுமணிக்கு.  நன்றி."

முல்லைக்கு ஏதோ சந்தேகம். அடுத்த வகுப்பில் கேட்கலாம் என்று எண்ணினாள்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஓடிமறைந்து விட்டன. முல்லையின் நாளாந்த வாழ்க்கை. முகாமை விட்டு வெளியேறுவதில்லை. ஆயுதப் பயிற்சிகள் பெரிதாக வில்லை. தற்கொலைப் போராட்டம் தொடர்பான படங்கள் நிரம்பப் பார்க்கிறாள். உள்ளே மற்றவர்களோடு சுதந்திரமாய்ப் பழுகுகிறாள். இறால் மாங்காய் போட்ட சொதியோடு இடியப்பம் தாராளமாய்க் கிடைக்கிறது. இரவுநேரச் சாப்பாட்டை விரும்பிய நேரம் சாப்பிடுகிறாள்.
தங்கச்சி முல்லைக்குத் தான் எந்தத் தரத்தில் உள்ளாள் என்பது தெரியாது. தாக்குதலுக்கு எப்பொழுது அழைப்பு வரும் என்பதும் தெரியாது. எந்த நேரம் புறப்படுவதற்கும் தயாராக இருக்கிறாள். தான் செய்யப் போகும் தற்கொலைத் தாக்குதல் என்னவென்று தெரியும். அது பற்றி நெருக்கமான தோழியோடும் பேசுவதில்லை. என்ன செய்யப் போகிறாள் என்பது ஒரே ஒருவருக்கு மட்டும் தெரியும்.அண்ணைக்கு மட்டுந்தான்.

யாழ்ப்பாண பொது நூலகத்தை எரித்த அமைச்சர்களில் ஒருவர்---லலித் அத்துலத்முதலி---ஏலவே கரும்புலித் தாக்குதலில் மண்டையைப் போட்டு விட்டார். இன்னொரு அமைச்சர் எஞ்சி இருந்தார். காமினி தி;ஸநாயக்கா. பொலிஸ், இராணுவ பாதுகாப்பு அணிமுன்னும் பின்னும் தொடரவீட்டை விட்டு வெளியேறுபவர்.

புலிகளின் தென் இ;லங்கைத் தாhக்குதல்களுக்குப் பொறுப்பானவர் கேணல் சாள்ஸ். காமினியை மேலே அனுப்பக் கரும்புலி முல்லையை தெரிந்தெடுத்தார். முக்கிய காரணம் சினிமா நட்சத்திரம் போன்ற முல்லையின் பேரழகே. காமினி திஸநாயக்க ஆணழகன்.முல்லையைப் போன்ற வெள்ளை நிறம். நல்ல வளர்த்தி. தனது முதலாவது தேர்தலில் நுவரேலியாத் தொகுதியில், ஆனானப்பட்ட அமைச்சர்கள் பலரும் மண்கௌவ, முன்பின் அறிமுகமில்லாத அவர் வென்றதற்கு ஒரே காரணம் அவரது வசீகர அழகே. முல்லையை அவரின் உறவினர் என்று பொலிசார் நம்புவார்கள் என்று கேணல் சாள்ஸ் எதிர் பார்த்தார்.

யாழ் பொது நூலகம் ஆசியாவிலேயே மிகப் பிரமாண்டமானது. 1933ஆம் ஆண்டு தொட்டு படிமுறையாக வளர்ச்சி கண்ட பிரபல நூலகம். 97,000 நூல்கள். அவற்றுள் கிடைத்தற்கரிய பண்டைய ஓலைச் சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள், யாழ் பிரதேசவரலாற்று மூலப் பிரதிகள், நூறாண்டுகளின் முன்னர் பிரசுரமான பத்திரிகைப் பிரதிகளும் இருந்தன. இந்திய, பிறநாட்டு அறிஞர்கள் ஆய்வுகள் செய்ய பயன்படுத்தினர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியினர் யாழ் நாச்சிமார் கோவில் வீதியில் கூட்டம் நடத்தினர். எதிர்க் கட்சித் தலைவர் கௌரவ அ.அமிர்தலிங்கம் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார். கூட்டத்துக்கு மூன்றுபொலிசார் பாதுகாப்பு வழங்கினர்.
புளட் இயக்கப் போராளிகள், மேடையில் ஏறி அமிர்தலிங்கம் அவர்கள் பேசுவதை நிறுத்தும்படி கட்டளை போட்டனர். 'நீங்கள், பெடியள் அரசியல் பேசினால், தமிழினம் தலையில் அடித்து ஒப்பாரி வைக்க நேரிடும். பேசுவதை நிறுத்த முடியாது." துவக்கை நீட்டினர். 'உதுக்குப் பயந்து அரசியல் செய்பவன் நான் அல்ல."
அவருடன் வாக்குவாதப்பட்ட பின்னர் காவலுக்கு நின்ற பொலிசாரைச் சுட்டனர். சாஜன் புஞ்சி பண்டாவும், கொன்ஸ்ரபிள் கனகசுந்தரமும் தலத்திலேயே உயிரிழந்தனர்.

யாழ் நகரில் தங்கியிருந்த அமைச்சர்கள் காமினி திஸநாயக்காவும், லலித் அத்துலத்முதலியும் பழிவாங்க பொலிசாரை ஏவிவிட்டனர். நூல் நிலையத்துக்கும் வேறும் முக்கிய கட்டிடங்களுக்கும் பொலிசார் தீமூட்டினர். இரவு முழுவதும் ஓடிஒடி கலாசார சமய அடையாளங்களைச் சேதப்படுத்தினர்.
அமைச்சர்கள் இருவரும் கோட்டை வாசலில் நின்று எதிரே யாழ் பொதுநூலகத் தீ கொழுந்துவிட்டு விடிய விடிய எரிவதைப் பார்த்து இரசித்தனர்.

பழிக்குப்பழி வாங்க அத்துலத்முதலியை கொழும்பு கிரிலப்பனையில் வைத்து 1993 ஏப்பிரல் மாதம் கொலை செய்வித்த கேணல் சாள்ஸ், எஞ்சிய அமைச்சர் காமினி திஸநாயக்காவையும் வானுலகத்துக்கு வழியனுப்பி வைக்க திட்டமிட்டார். காமினிமீது சிங்களதேசம் பெரும் மதிப்பு வைத்திருந்தது. முப்பது வருட துரித மகாவலித்திட்டத்தை ஆறுவருடங்களில் முடித்த பெருமை அவருக்கு உண்டு. நிலமற்ற சிங்களக் குடியானவர்களுக்குச் சுவர்ண பூமி திட்டத்தில் இலவச நிலம் வழங்கிய பெருமை உண்டு, ஐம்பதாவது பிறந்த தினத்தின் பொழுது போற்றிப் புகழ்ந்து ஏராளமான நூல்கள் வெளியாகின. கொத்மல நீர்த்தேக்கத்தின் பெயரை காமினி திஸநாயக்கா நீர்த் தேக்கம் என மாற்றம் செய்தனர். சிங்கள இனத்தின் முடிக்குரிய அழகான இளவரசனாக வலம் வந்தார். அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிவாய்ப்பு வாருங்கள்,வாருங்கள்என்றுகைகாட்டி அழைத்தது.

கேணல் சாள்ஸ் முல்லையை நீர்கொழும்புக்கு அழைப்பித்து, பெரேரா லேனில் உள்ள சிறிய வாடகை வீட்டில் குடியிருத்தினார். முல்லை என்ற பெயரை மல்லிகை என்று கூறி அறிமுகம் செய்தார். தாயார் என்று சொல்லி ஒருவரை அவருடன் அமர்த்தினார். விவாகம் செய்ய கனடா செல்ல வந்துள்ளார் என்ற சாட்டில் வைத்திருந்தார்.

மல்லிகையின் அழகு காரணமாக வீட்டின் முன்னுள்ள சிவந்த கிரவல் வீதி சுறுசுறுப்படைந்தது. இளைஞன் ஒருவன் விடாமல் சுத்திக்கொண்டிருந்தான். தவிர்ப்பதற்காக நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்துக் கல்லூரியில் ஓ.எல். வகுப்பில் சேர்த்தார்.

மல்லிகையின் அழகை வைத்தே சாள்ஸ் தெரிவு செய்தார். அழகு பிரச்சினையைக் கொண்டுவரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. மல்லிகையை அவன் ஒரு தலையாய்க் காதலித்தான். தமிழ் பேசுபவன். தன்னைச் சிங்களவன் என்று சொன்னான். பெயர் ஜோன். இருபத்தெட்டு வயதிருக்கும். சுமாரான வளர்த்தி. மல்லிகை யைப் போல நல்ல நிறம். தந்தை நீர்கொழும்பு சந்தையில் மீன் வியாபாரம். தந்தைக்கு உதவியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். ஒருதலைக் காதல் ஆரம்ப கட்டம். சாள்ஸ்சை காதலுக்குக் கண்மண் தெரியாது.கடத்தினால் என்ற பயம் ஆட்டியது.

மல்லிகையை இடம் மாற்றினாலும் காதல் பைத்தியம் விடாது. தொடர்வான். தாமதம் வேதனை தரும். வேறு மார்க்கம் இல்லை.கேணல் சாள்ஸ் எண்ணினார்.

அவனை யாரோ ஓர் இரவு கடத்திச் சென்று கடலில் வீசிவிட்டனர். பிரேதம் கரை ஒதுங்கியது. நீந்தப் போய் மரணித்ததாய்ப் பத்திரிகைகளில் செய்தி வந்தது.

கொழும்பு கிரான்ட்பாஸ் தொடங்கஸ்லந்த என்ற இடத்தில் அமைச்சர் காமினி திஸநாயக்காவின் அரசியல் பிரசாரக் கூட்டம் அடுத்த தினம் நடக்க ஏற்பாடுகள் நடந்தன. பொலிஸ் உதவி மாஅதிபர் அவ்விடத்தில் பிரசன்னமாகி கூட்டம் நடக்கும் இடத்தைப் பார்வையிட்டார். அவரோடு பொலிஸ் சுப்பிரீன்டென்ரன் ஜயசூரிய. அடிக்கடி சேர், சேர்என்றபடி கட்டளைகளை அவதானமாகக் கேட்டார்.
அண்மை காலங்களில் ஜனாதிபதி தொடக்கம் குட்டி அமைச்சர்கள் வரையான பலரை விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிகள் கொழும்பில் வைத்துக் கொன்றிருந்தனர். அதனால் பொலிஸ் பாதுகாப்புப் பலமாக அமைக்கத் திட்டங்கள் தீட்டினர். அருகே உள்ள கட்டிடங்களின் கூரைகளில் பொலிசார் மறைந்திருந்து கண்காணிக்க ஒழுங்கு செய்தனர். பார்வையாளர்களோடு அமர விசேடமாக நாற்பது சிவில் உடைப் பொலிசாரை ஒழுங்கு செய்தனர். பன்னிரண்டு புகைப்படப் பிடிப்பாளரை அழைத்திருந்தனர். விசேடமாய்ப் பெண் பொலிசாரை ஈடுபடுத்தினர். தற்கொலை குண்டுதாரிகள் பெரும்பாலும் பெண்களாக இருந்தமையே காரணம்.

அடுத்த தினம், மல்லிகையின் வீட்டுக்கு இருவர் கொழும்பிலிருந்து போயினர். சிவப்பு ரக்சி வாகனத்தின் சாரதி காரால் இறங்கி காரோடு நின்றார். பெண் இறங்கி உள்ளே போனார். மல்லிகை எட்டிப் பார்த்தாள். உயரமாக வெள்ளை நிற வாலிபன். அடர்ந்த மீசை. பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவனைப் பார்க்கிறாள். பாவலனின் ஞாபகம் வந்தது.
வந்த பெண் ஒரு பார்சலைக் கொடுத்து, 'மல்லிகை, கவசம். அணிந்து ஆயத்தமாக நில். சரியாக நாலு மணிக்கு பச்சைச் சாரி அணிந்த பெண் வருவார். அவரோடு செல்."
'காரோடு நிற்கிறார். அவரின் பெயர் பாவலனா?"
இல்லை. அம்மான்."
'அது இயக்கப் பெயர். சொந்தப் பெயர்?"
எனக்குத் தெரியாது."
மேலும் சில வினாக்கள் எழுப்பினாள். தெரியாது, தெரியாது என்ற பதிலே கிடைத்தது.

சிவப்பு ரக்சி கொழும்பு திரும்பிக் கொண்டிருந்தது. சாரதியின் அருகில் அமர்ந்திருந்த பார்சல் கொடுத்த பெண் சொன்னாள்,
அம்மான். அந்தப் பெண் உங்கள் பெயர் பாவலனாஎன்று கேட்டது.இல்லைஅம்மான்என்றுசொன்னேன்."
அம்மான் திகைத்துப் போனார். ரக்சியை ஒட்டியபடி அம்மான் கேட்டார், 'எப்படி உருவம்? கறுப்பா வெள்ளையா?"
உங்களைப் போல நிறம். நல்ல உயரம். இருவரையும் பார்த்தால் சகோதரம் என்று சொல்வார்கள்."
'வேறு என்ன சொன்னாள்?"
'யாழ்ப்பாணமா அல்லது வன்னியா என்று கேட்டாள். நான் வன்னி. வன்னி குறுநிலமன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர் என்றேன்"
பாவலன் பார்சல் கொடுத்த பெண்ணின் முகத்தைப் பார்க்கவில்லை. சின்னக்கா முல்லை என்று விளங்கி விட்டது. அதைக் காட்டிக் கொள்ளாது வாகனத்தை ஓட்டினான். திரும்பிப் போய் பார்க்க மனம் ஏவியது. போனால் இன்னும் சில மணிநேரங்களில் நடக்க விருக்கும் தாக்குதல் சறுக்கினாலும் சறுக்கலாம் என்று அஞ்சினான். மனதுள் போராட்டம். ஓரு முறை பார்த்து சின்னக்கா முல்லையுடன் இரண்டு வார்த்தை பேச மனம் துடித்தது. ஆவல் அலை மோதியது. போய்ப் பார்க்க முடிவு செய்த வேளை, நாலாம் மாடியில் பார்த்த அம்மா, அப்பா தோற்றங்கள் கண்களில் காட்சி கொடுத்து பாவலனை எச்சரித்தன. அடுத்து அண்ணை பாவலனின் மனக்கண்களில் தோன்றிக் கேட்டார், 'அம்மான். தனிமனிதர் உணர்ச்சி முக்கியமா? ஓர் இனத்தின் மீட்சி முக்கியமா? உலக இன்பங்கள் அத்தனையையும் துறந்து நான் இந்த இருண்ட முப்பத்திரண்டு அடி ஆழ பங்கருள் எத்தனை ஆண்டுக் கணக்காக மனதைஒடுக்கி வாழ்கிறேன்." தம்பி பாவலன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு கொழும்பு போய்ச் சேர்ந்தான்.

ஐந்து மணி. கூட்டம் ஆரம்பிக்க ஆயத்தம்.

கூட்டத்துக்குப் போன பார்வையாளர்களோடு பாவலனும் கலந்து கொண்டான். தாக்குதல் திட்டத்தில் அங்கு பிரசன்னமாக இருக்கக்கூடாது. தாக்குதல் முடிந்ததும் தமிழர்கள் யாவரையும் கைது செய்வார்கள். ஒருமுறை சின்னக்கா முல்லையைப் பார்த்து விடவேண்டும் என்னும் துடிப்பு அவனைத் துரத்திக் கொண்டிருந்தது. முல்லை ஏலவே பார்வையாளர்களோடு நகர்ந்து ஆசனத்துக்குப் போய்விட்டாள். பாவலன் இலகுவாக அவளைக் கண்டு விட்டான்.

வைத்த கண்கள் வாங்காமல் பார்த்தான். நரம்புகள் குதூகலித்தன. கண்கள் குளிர்ந்து மகிழ்ந்தன. முள்ளந் தண்டு அவனது உணர்வை எதிரொலித்தது. தன் கடமையை, தான் நிற்குமிடத்தை மறந்து போனான். சகோதர பாசத்தின் வலிமைக்கும், இனவிடுதலைத் தியாகத்தின் வலிமைக்கு மிடையில்ஜீவமரணப் போராட்டம்.

சின்னக்காவைப் பார்த்தான். பெரிய வட்டக் கொலர் வைத்த வெள்ளை ரவுக்கை. பச்சைப் பாவாடை அரை முழுவதையும் சுற்றி அகன்ற கொய்யகம். கேசத்தைப் போனி ரெயிலாக வைத்திருந்தாள். வட்டக் கண்ணாடி. எல்லாம் அவன் அனுப்பியவை. சிங்கள குமர்ப்பெண்ணின் கோலம். சின்னக்கா தேவலோக கன்னிகை போல ஜொலிப்பதாக அவனுக்குப் பட்டது. தான் ஒழுங்கு செய்த, உயரமான வெள்ளைப் பெண். சிங்களப் பெண்ணின் உடையில், சின்னக்காவின் அருகே ரண்டாவது வரிசையில் அமைந்த கதிரையில் இருப்பதைக் கண்டான்.

புத்திசாலி முல்லை, தம்பி பாவலன்தான் தனது தாக்குதலை ஓழுங்குபடுத்தி நடாத்துகிறான். களத்தில் எங்காவது நிற்பான் என்று நம்பினாள். தம்பியை ஒரு முறை பார்த்துவிட உள்ளம் அழுதுகுளறி ஏங்கியது. அரை மணி நேரம்கூட இல்லை.. ஒரு முறையாவது பார்க்கத் துடித்தாள். வழமைக்கு மாறாக முல்லையின் முகத்தில் பீதி லேசாய்ப் படர்ந்தது. சுற்றும் முற்றும் திரும்பித் திரும்பிப் பார்த்தாள். நெஞ்சு படக்படக் என அடித்தது. கண்கள் கலங்கின. நெஞ்சு பொங்கி அமிழ்ந்து, பொங்கி அமிழ்ந்து அழுதது.

மல்லிகையின் குழப்பத்தை எஸ்.பி. ஜயசூரிய அவதானித்து விட்டார். முகத்தை உற்றுப் பார்த்தார். மனம் கூறியது: ஏதோ பயங்கரம் தெரிகிறது. இருள் மண்டிய ரேகைகள் ஆட்சி புரிகின்றன.அவளை நோக்கிமுன்னேறுவது எப்படி என்று யோசித்தார்.
மேடையில் காமினி திஸநாயக்கா பேசிக்கொண்டிருந்தார். அண்மையில் சென்று விசாரிக்க முடியாது. கிட்ட நெருங்கினால், கிளைய்மோர் குண்டு வைத்திருந்தால் கட்டாயம் வெடிக்க வைப்பாள் என்று அஞ்சினார்.
இன்னுமொரு பொலிஸ் அதிகாரியை---இன்ஸ்பெக்டர்---கூப்பிட்டு மல்லிகையை அவதானிக்கச் சொன்னார்.
'சேர், அவளின் வயதில் சபையில் வேறு யாரும் பெண்கள் இல்லை. நிட்சயம் கொட்டியாதான்," என்றார் பொலிஸ் இன்ஸ்பெக்டர்.
'என்ன செய்வம்?"
சினைப்பரால் சுடலாம்."
'அது கூட்டத்தைக் குழப்பிக் கலகத்தை உண்டாக்கலாம். தற்செயலாக குண்டுதாரி இல்லாமல் இருந்தால்? காமினி மாத்தையா மாதிரி அழகாக உயரமாகவிருக்கிறாள். காமினி மாத்தையாவின் உறவாய் இருந்தால்? பெரிய சீர்கேடு. எதற்கும் வல்லமையான பெண் பொலிசைக்கூப்பிடு." எஸ்.பி.ஜயசூரியகட்டளைபோட்டார்.
பெண் சாஜன் ஹேமமாலி வந்து 'மாத்தையா" என்றாள். நடுத்தர வயது. பெரிய உயரமில்லை. கருங்காலிக் குத்தி மாதிரி. தொப்பியை அடிக்கடி சரி செய்தாள்.
'இரண்டாவது வரிசையில் அழகான இளம் பெண்.வெள்ளைச் சட்டை. வட்டக் கண்ணாடி போட்டிருக்கிறாள். வயதுக்கு பொருத்தமில்லை. என்ன நினைக்கிறாய்?" எஸ்.பி. ஜயசூரிய வினாவினார்.
ஆம். நானே சந்தேகப்பட்டு உள்ளே வந்த சமயம் விசாரித்தேன். ஆங்கிலத்தில் பதில் சொன்னாள். வெள்ளைக்காரி மாதிரிப் பேசுகிறாள்."
பக்கத்திலே இருப்பது யார்?"
'தாயாக இருக்கும்."
ஹேமமாலி, தாயை விசாரித்தாயா?"
இல்லை.'
'தவறு செய்துபோட்டாய், ஹேமமாலி "
இப்போ போய் விசாரிக்கவா?"
இடியட். காமினி மாத்தையா பேசுகிறார். சபையைக் குழப்பியதாக கண்டிப்பார். அடுத்த ஜனாதிபதி."
என்ன செய்ய மாத்தையா?"
அவளுக்கும் காமினி மாத்தையாவுக்கும் இடையில் எவ்வளவு தூரம் இருக்கும்?"
'நூறு மீட்டருக்கு கொஞ்சம் அதிகம்." ஹேமமாலி பதில் சொன்னாள்.
புல்லட் நூறு மீட்டர்வரைபாயும். எதற்கும் கூட்டம் முடிந்ததும் சனம் நகரும். நீ பாய்ந்து அங்கே செல். ஏதாவது அசுகை தெரிந்தால் கைகளை அசைக்க முடியாமல் உடம்போடு அழுத்திப் பிடி. நான் மிச்சத்தைக் கவனிக்கிறேன்."

காமினி ஒலிபெருக்கியின் முன்னே நின்று சிங்கக் குரலில் சிங்களத் தமிழில் பேசினார்.

'புத்த பெருமான் கால் பட்ட புண்ணிய பூமி. ஆரிய சிங்கள ஜாதியோட பூமி. சிங்கள ஜாதி தெமில சாதியை குறைவா நடாத்துறான், அடிமையா நடாத்துறான் என்று கத்துறீங்க. தெமில ஈழம் கேட்கிறீங்க. நாங்க பாகுபாடு காட்டினா, உரிமை தரமாட்டான் சொன்னா, நீங்க---தெமில ஜாதி---இந்தியா போங்க. அதுதான் உங்க சொந்த நாடு. நீங்க கள்ளத் தோணி. அங்கே உங்க கோவில்,
கடவுள் ரொம்ப ரொம்ப இருக்கான். அங்கே உங்க கலை கலாசாரம் பண்பாடு இருக்குது. அங்கே நீங்க உங்க விதியைத் தீர்மானிக்கும் எஜமான். இங்கேயிருந்து சும்மா சும்மா ஊளையிடாதீங்க, போங்க. போங்க இந்தியாவுக்கு."
விசிலடியும், கரகோசமும் வானைப் பிளந்தது.
'அடுத்த ஜனாதிபதி நான்தான். தெமில ஜாதி ரொம்ப பேசுறான், தெமில ஈழம் கேட்டான். கடலிலே தூக்கி வீசுவான். அப்பி---நாங்க---மகா ஆரிய சிங்கள ஜாதி."

கைகளை உயர்த்தி வீராவேசமாய்ப் பேசினார். மக்கள் எழுந்து நின்று கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். சிலர் விசில் அடித்தனர். சிலர் சிங்களத்தில் கத்தினர்.

தாக்குதலுக்கு எண்ணி ஏழு நிமிடம்கூட இல்லை. நூறுமீட்டருக்குள்ளே தம்பி பாவலன் நிற்கிறான். மனதில் குமுறும் எரிமலைப் போராட்டம். சின்னக்கா முல்லையோடு இரண்டு வார்த்தைகள் பேசவில்லையே என்ற தீராத ஏக்கம் வதைக்கிறது. இதயம் துடிக்கிறது. சின்னக்கா என்னை ஒரு முறை பார்க்க மாட்டாளா? துடிக்கிறான்.
முல்லைக்குத் தம்பியை ஒருமுறை பார்த்துவிட மனம் தவிக்கிறது. நெஞ்சம் ஊதியிறங்கி அழுகிறது. கண்கள் தம்பியைத் தேடியலைகின்றன.

நூலகம் எரித்த பழிக்குப்பழி தீர ஆயத்தம். பலிபீடத்தில் ஏறக் காத்திருக்கும் பலிக்கடா அமைச்சர் காமினி திஸநாயக்கா, கூட்டத்தில் கரகோசத்துக்கிடையே பேசி முடிந்து நன்றி சொல்லி முடிக்கிறார்.
மேடை நுனியில் நின்ற காமினி குனிந்து சந்தோசமாய்ப் பேசிக் கொண்டு நிற்கின்றார். கீழே தரையில் நிற்கும் மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், நண்பர்கள் தலைகளை நிமிர்த்தி சூடான பேச்சுக்குமகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். எட்டி எட்டிக் கை குலுக்குகின்றனர்.

யுகத்தின் முடிவில் ஆசைகள் அரைகுறையாக நிறை வேறுகின்றன. அக்கா-தம்பி இருவர் கண்களும் சந்திக்கின்றன. மகிழ்ச்சிப் பேரலைகள் பொங்கி எழுந்து ஆர்ப்பரிக்கின்றன. ஆனந்த மணித்தேன் ஓசைகள் முழங்குகின்றன. முல்லை மேலும் கீழும் தலையாட்டுகிறாள். பூரண அம்புலி அன்ன வதனத்தில் சிறிய புன்னகை. போ, போ. நில்லாதே போ போஎன்றுதலைஅசைக்கிறாள்.

எஸ்.பி. ஜயசூரியமுல்லையைநோக்கிப் பாய்ந்து சென்றார். பெண் பொலி;ஸ் சாஜன் ஹேமமாலி பார்வையாளர்களை இருபக்கமும் இடித்துத் தள்ளி முல்லையை நோக்கி வேகமாக முன்னேறினாள். பொலிஸ் உடையில் விரைந்து நகரும் ஹேமமாலியை முல்லை அவதானித்து விட்டாள். பத்து மீட்டருக்கு மேலேமுன்னேறிவிட்டாள். காமினிக்கும் முல்லைக்குமிடையில் எண்பது மீற்றர்கூட இல்லை.

ஹேமமாலி கட்டிப்பிடிக்கக் கைகளை அகட்டி நீட்டி வளைத்தாள். முல்லையின் முழங்கை இடி கொடுத்தது. நெஞ்சில் கொந்தாலியால் அடித்த மாதிரி. தடுமாறிப் போனாள் ஹேமமாலி.

எஸ்.பி. ஜயசூரிய பிஸ்ரலை தலைக்கு மேலே உயர்த்திப் பிடித்தபடி பாய்ந்து சென்று முல்லையின் தலையில் பிஸ்ரலை அழுத்திச் சுடு பொறியைத் தட்ட முன்னர், உடற் கவசத்துள் அமைந்த கிளைய்மோர் குண்டு பயங்கர ஓசையுடன் வெடித்துவிட்டது.

எங்கும் புகை மண்டலம். ஓலக் குரல். யாருக்கு என்ன நடந்தது? எவருக்கும் தெரியாது.

குண்டுத் தாக்குதலில் மொத்தம் 56 பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் படுகாய மடைந்தனர். பலர் பின்னர் மரணித்தனர்.

காமினியின் சடலத்தில் எந்தக் காயமும் இல்லை. நெஞ்சிலும் நெற்றியிலும் சன்னங்கள் ஏற்படுத்திய துவாரங்கள் தெரிந்தன.

முல்லையின் தலை, பார்வையாளர் மத்தியில் காவல் புரிந்த பொலிஸ்காரனின் தலையில் தொப்பென விழுந்து உருண்டது. உடல் சிதறியிருந்தது. அணிந் திருந்த பச்சைப் பாவடையின் உள்ளே அணிந்த கறுப்புக் காற்சட்டை சேதமாக வில்லை. அதற்குள் முல்லை பாதுகாத்து வைத்திருந்த புகைப்படம் பத்திரமாக விருந்தது.

பொலிசார் உசாரடைய அரை மணி நேரமாகியது. சுற்றாடலில் அகப்பட்ட தமிழ் இளைஞர்களையும் யுவதிகளையும் கைதுசெய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். மொத்தமாக பதினெட்டுப் பேர்.
அடுத்த தினம் சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகள் எல்லாம் முல்லை வைத்திருந்த புகைப்படத்தை முற்பக்கத்தில் பெரிதாய்ப் பிரசுரித்தன.

மூன்றாவது தினம் புதினப் பத்திரிகைகள், ‘புகைப்படத்தில் உள்ள இரு பெண்களில் ஒருவரை ஓய்வு பெற்ற திறைச்சேரிப்பணிப்பாளர் ஆரியரத்தின அடையாளம் காட்டியதாக செய்தி வெளியிட்டன. பெயர் இலக்கியா சிவநேசன். கொழும்பு இராமநாதன் பெண்கள் கல்லூரியில் படித்தவர். 1983 கலவரத்தின் பொழுது பெற்றாரோடு சேர்த்து காருள்வைத்து எரிக்கபட்டவர்என்ற திகிலான செய்தி வெளியிட்டிருந்தன. ஆங்கிலப் பத்திரிகை ஒன்று எரிந்த காரின் படத்தையும், சித்தப்பா சிவநேசன் குடும்பத்தின் படத்தையும் பிரசுரித்திருந்தது. தலையங்கம் பழிக்குப் பழி.

~~~~~~~~~~~~~~ இன்னும் வரும்......

1 comment:

  1. நல்லதொரு முயற்சி .தொடர்ந்து தரவும் .

    வாழ்த்துக்கள்

    ReplyDelete