Monday 2 March 2015

வன்னி நாவல் - கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 19
கரும் புலி

சுசீலாஅக்கா கேற்றைதிறந்துவருகிறார். இன்றைக்குப் பேசி முடிக்க வேண்டும். ஒத்திப்போடுவது நல்லதல்ல. சிங்களவன் ஆட்சியில் அடுத்த கணம் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது.

'சிவகாமி, எப்படிச் சுகம்?" என்று வினாவியபடி வரவேற்பு அறைக்குள் பிரவேசித்தார், சுசீலா அக்கா.
நல்ல சுகம், சுசீலா அக்கா. உங்கள் சுகம் எப்படி?"
'எல்லாம் உன் கையில் இருக்குது." சொல்லி விட்டுச் சிரித்தார்.
ஏன் சிவகாமி வரச்சொன்னவ? அப்படி என்ன முக்கிய அலுவல் என்று எண்ணியபடி மணிஅண்ணை வரவேற்பறைக்குள்  கால் பதித்தார். அவர் கையில் விரால் மீன். எப்பவும் குளத்தில் மீன்பிடிக்கப் போனால் தவறாமல் எனக்கும் தாறவர்.

 இருவரும் வரவேற்பறை மறூன் வண்ணச் சோபாக்களில் என்வாயைஅக்கறையுடன் நோக்கியபடி அமர்ந்திருந்னர்.

'வயல் பற்றிக் கதைக்கவே அழைத்தனான். நூற்றி பத்து ஏக்கர் நிலத்தை என்னால் பராமரிக்க ஏலாது. அது பற்றிப் பேசத்தான் வரச் சொன்னனான். கதை கேட்கப் பிள்ளைகள் வர முன்னர் பேசி முடிப்பம்."
பகல் கொளுத்திய வெப்பத்தின் வெக்கை தணிந்து கொண்டிருந்தது. மாடுகள் பட்டிக்குத் திரும்புகிற நேரம்.
'களுபண்டாவுக்கு வயல் பற்றித் தெரியுமே?" மணிஅண்ணை விசாரித்தார். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.
தெரியும்."
'அது பற்றி உன்னோடு பேசினவனோ?"
'பேச வேண்டும் என்ற அளவில் ..." வசனத்தை முடிக்கவில்லை.
மணியண்ணை சோபாவில் நிமிர்ந்து இருந்து என்னை ஊன்றிப் பார்த்துவிட்டுப் பேசினார்.
களுபண்டாவுக்கும் வயலை எடுத்துத் தனது சொந்த பந்தங்களை ஆயிலடியில் குடி அமர்த்தி வயல் செய்யுற நோக்கம் இருக்குது. குத்தகை எவ்வளவு கொடுக்க வேணும் என்று துரைச்சாமியரை விசாரித்தவன்."

வரவேற்பறையில் மௌனம் கோலோச்சியது.

சுசீலா அக்காதான் மௌனத்தைக் கலைத்தார். 'சிவகாமி, எதையும் சீராகச் செய்ய வேணும். ராச நாச்சியார் வம்ச சொத்து பகைவன் கைக்குப் போகக் கூடாது. நீ ஆழமாகச் சிந்திக்கக் கூடிய பெண். நல்ல முடிவு எடு."
'சுசீலா அக்கா நான் முடிவெடுத்திட்டன்."
என் வாய் முணுமுணுத்தது. மணியண்ணையும், சுசீலா அக்காவும் ஆளுக்கு ஐவைந்து ஏக்கராவது பெறும் நோக்கத்துடன் வந்தவர்கள். எனக்குத் தெரியும். தங்கள் ஆசையில் மண் விழுந்துவிடுமோ என்று பதைக்கிறார்கள். வாயை ஆவலோடு எதிர்பார்த்தபடி ஏங்கிப் போய் இருக்கிறார்கள்.

படுக்கை அறைக்குள் போய் வந்தேன். கையில் பத்திரம். சோபாவில் இருந்து வாய்க்குள் வாசித்தேன். பின்னர் சுசீலா அக்காவிடம் 'சுசீலா அக்கா. இந்தப் பத்திரத்தில் வயலை என்ன செய்கிறது என்று விளக்க மாக எழுதியிருக்கிறன். பிடியுங்கள்."
'என்ன எழுதியிருக்குது?"
நீங்கள் இருவருந்தான் வயலை என்ன செய்வது என்று தீர்மானிக்கப் போறீர்கள். இந்தப் பத்திரம் அதிகாரத்தை உங்களுக்கு வழங்குகிறது. என்னுடைய காலத்துக்குப் பிறகு வருமானம் எதிரே இருக்கிற சனசமூக நிலையத்துக்குப் போகவேணும். நல்ல நூல் நிலையம் செயல்படுத்தவேணும்."

நான் எட்டிவளவுவாயிலைப் பார்த்தேன்.

'கதை கேட்கும் பிள்ளைகள் கேற்றடியில் காத்து நிற்கிறார்கள். மிகுதியை நாளைக்குப் பேசலாம்.

பிள்ளைகளே, சென்ற வாரம் முல்லை அண்ணைக்குக் கடிதம் எழுதினவள் என்று சொன்னேன். கிட்டத்தட்ட ஆறு மாதங்களின் பின்னரே அண்ணையிடமிருந்து முல்லைக்கு அழைப்பு வந்தது.
இந்திய சமாதானப் படைகள் சோதனைகள் வேதனைகள் சுமந்துகொண்டு; திரும்பத் தொடங்கியிருந்த காலம். அண்ணை காட்டைவிட்டு வெளியே வந்த காலம்.

கரும்புலி தாக்குதல் அவலங்கள், அது தொடர்பான அபாயங்கள், உடல் வேதனைகள், மன வேதனைகள் அறிந்து முல்லை பின்வாங்க ஆறுமாதகால அவகாசம். கடிதம் கிடைத்ததும் தாமதமில்லாமல் முல்லை பற்றிய சேகரிப்பு ஆரம்பித்துவிட்டது. அதுதான் வழமை.முல்லைக்குஅதுபற்றிஎதுமே தெரியாது.
அண்ணையின் அழைப்பு முல்லைக்கு அளவிலா ஆனந்தம் அளித்தது. ஏற்றிச் செல்ல வந்த வாகனத்துள் ஏறியிருந்து, வெளியே பார்க்க அங்கும் இங்கும் தலையைத் திருப்பினாள். கறுப்புக் கண்ணாடி பொருத்திய வாகனம். வெளியே எதையும் பார்க்க முடியவில்லை. எந்தப் பாதையால் எங்கே செல்கிறது என்பதும் புரியவில்லை. காட்டுப் பாதையால் செல்வது போல வாகனம் குலுக்கிக் கொண்டிருந்தது. அரை மணி நேரத்துக்கு மேலாக வளைந்து வளைந்து ஓடி முடிந்து நின்றது.

சாதாரண வீடு. வரவேற்பறையைக் கடந்து அமைந்த அறையை முல்லைக்குக் காட்டி, 'அறையில் இருங்கள் தலைவர் வருவார்," என்று சொல்லிவிட்டு, பதிலை எதிர் பாராமல் அழைத்து வந்த பெண் சாரதி வெளியேறினார்.

முல்லை அறையை நோக்கினாள். மென்பச்சை வண்ண சுவர்கள். மேலே சீலிங் இல்லை. சிவப்பு ஓடு தெரிந்தது. மத்தியில் அழகான மேசை. அதன் மேல் பட்டு வெள்ளை மேசை விரிப்பு. மையத்தில் மினுங்கும் செப்புக் கிண்ணத்தில் மஞ்சள் சிவப்பு பூக்கொத்து. இரண்டு தண்ணீர்ப் போத்தல்கள். ஒன்று எனக்கு மற்றது அண்ணைக்கு என மனங் கூறியது. மேசையின் இருபக்கமும் ஒவ்வொரு கதிரை.

விடுதலைப் புலிகள் தலைவர் அண்ணையை தரிசிப்பது எல்லோருக்கும் கிடைக்கும் கொடுப்பனவு அல்ல. உலகம் பரந்த தமிழர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் அவரை நேரில் தரிசிக்க தவஞ் செய்கின்றனர். முல்லைக்கு அந்தக் கிடைத்தற்கரிய அற்புத சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.அண்ணைஎன்ன உடையில் வருவார்? எப்படிப் பேசுவார்? என்ன கேள்விகள் கேட்பார் என்ற சிந்தனையில் மூழ்கி இருந்தாள். காலையில் எட்டு மணிக்கு அறைக்குள் போனவள். நேரம் நண்பகலைத் தாண்டி ஒரு மணிபத்து நிமிடம்.

முல்லை இருந்த அறையின் பின் கதவு திறந்தது. அண்ணையைப் பார்க்கும் ஆவலுடன் கண்களை ஏவினாள். ஏமாற்றம். முப்பது வயதுமதிக்கத் தக்க மாது. கார்த்திகை. குள்ளமாய்ச் சற்றே குண்டாய் இருந்தார். விடுதலைப் புலிகள் இராணுவ உடையில். தலைமுடியை இரட்டைப் பின்னலாகப் பின்னி பிடரியில் வளையமாகக் கட்டியிருந்தாள். கழுத்தில் சைனைட் குப்பி தொங்கும் கறுப்புக் கயிறு தெளிவாகத் தெரிந்தது.
கார்த்திகை உணவுத் தட்டங்களை மேசையில் பரப்பி வைத்துவிட்டுப் போய்விட்டாள். ஒரு வார்த்தை தன்னும் பேசவில்லை. அலுமினியப் பாத்திரம் நிறைய சிவப்பு இடியப்பம்.அப்பொழுதுதான் அவித்தது. ஆவி எழுந்து கொண்டிருந்தது. முப்பதுவரை இருக்கும். கமகம சுகந்தம் வீசியது. பின்னர் கும்மா நிறையச்சொதி. மாங்காய், இறால் போட்ட சொதி கொண்டு வந்து வைத்தாள். மணம் முல்லiயின் மூக்கை ஊடறுத்து நாவூறச் செய்தது. அவளுடைய உச்ச விருப்பமான உணவு. பத்து இடியப்பத்தை விழுங்கும் பசி.

மீண்டும் கார்த்திகை வெள்ளித் தட்டத்துடன். வந்தாள்.நிறைந்த திராட்சைப் பழங்கள். முல்லைக்கு வாயூறியது. அப்பா வவுனியா செல்லும் சமயமெல்லாம் சந்தையில் கிடைத்தால் திராட்சைப் பழம் வாங்கி வருவார். தப்பினால் வீடு முல்லையின் கோபத்தில் கைகட்டி நடுங்கும்.

முல்லையின் மூளைக்குள் விசாரணை எழுந்து நின்று தலை அசைத்தது. என்னைப் பற்றி நிரம்ப சேகரித்திருபார்கள் போலிருக்குது. அதைக் காட்டிக் கொள்வது அசட்டுத்தனம். முல்லை எண்ணிக் கொண்டாள்.

உணவுவைத்த கார்த்திகை போனவர் போனது தான். அரைமணித்தியாலம். ஒரு மணித்தியாலம். முல்லையின் குடல் பசிக்குது பசிக்குது என்று கதறியது. முல்லை புத்திசாலி. அவள் தனது பரீட்சைதான் அங்கு வந்து சேர்ந்த நேரமே ஆரம்பித்துவிட்டது என்று எண்ணிக் கொண்டாள்.
சரியாக இரவு ஒன்பது மணிக்கு முல்லையின் முகம் திடீரென செந்தாமரை மலர் போல மலர்ந்தது. அறைக்குள் அண்ணை சிரித்தபடி வருவதைக் கண்டாள். இராணுவ உடை. தலையில் தொப்பி இல்லை. பட்டிகள் இல்லை. அவர் ராணுத்தில் எந்தத் தரம் என்று எவருக்கும் தெரியாது. எழுந்து நின்று இரு கைகளையும் இணைத்து 'வணக்கம் அண்ணை"என்றாள். 'வணக்கம் முல்லை. ஆசனத்தில் அமர்ந்து கொள்."
இருவரும் மேசைக்கு எதிரெதிரே உள்ள கதிரைகளில். 'ஏன் சாப்பிடவில்லை, முல்லை? எனக்குப் பசிக்கிறது. நான் சாப்பிடப் போகிறேன். நீயும் சாப்பிடு."

இருவரும் சாப்பிடத் தொடங்கிவிட்டனர். முல்லை அப்பொழுது ஏழு இடியப்பங்களை  அவக்அவககென்று விழுங்கி முடித்திருந்தாள்.
முல்லை நீ சாப்பிடு. சாப்பிட்டபடியே பதில் சொல்லலாம். பரீட்சை தொடங்கப் போகிறேன்."
முல்லை சிரித்தாள்.
அண்ணைக்கு ஏன் சிரிக்கிறாள் என்று புரியவில்லை. அப்போதுதான் அடேல் அன்ரி முல்லை பற்றிச் சொன்ன குறிப்பு மின்னலடித்தது. 'முல்லை வித்தியாசமான பெண்." ஏன் சிரித்தாய் என்று கேட்பது பொருத்தமாக இருக்காது. வழமையான பாதையை விட்டு, புதிய பாதையில் நேர்முகப் பரீட்சையை நடாத்த வேண்டும் என்று எண்ணினார்.

முல்லை, நீ தற்கொலைத் தாக்குதல் பற்றி எதாவது விசேடமாக வாசித்திருக்கிறாயா? இதுதான் உனது முதலாவது கேள்வி."
முல்லைமீண்டும் சிரித்தாள்.
அண்ணை முல்லையைப் பார்த்து மெதுவாக முன்னும் பின்னும் தலையை ஆட்டிக் கொண்டிருந்தபடி முல்லையை உற்று நோக்கினார்.
முல்லைக்கு விளங்கியது அண்ணையின் உள்மனம். தான் ஏன் சிரித்தேன் என்பதைப் பற்றிச் சிந்திப்பதாக. சொல்வது நல்லது என்று முடிவுசெய்து கொண்டு சொல்ல வாய் திறந்தாள்.
'ஐயா" என்றவள் அப்படி விழித்திருக்கக் கூடாது என்று எண்ணி தலையை இருபக்கமும் வேகமாக ஆட்டினாள்.
'நீ என்னைஎப்படியும்அழைக்கலாம். ஐயாஎன்றுசொல்வது செயற்கையாக இல்லை?"
'அண்ணை, எனது முதலாவது பரீட்சை காலை நான் வந்த வேளையே தொடங்கி முடிந்து விட்டது." என்றாள்.
அடேல் அன்ரி சொன்ன மாதிரி இந்தப் பெண் வித்தியாசம்தான் என்று கணித்துக்கொண்டார்.

'நீ நிரம்ப வாசிப்பதாக அறிந்தேன். தற்கொலைத் தாக்குதல்பற்றி எதாவது விசேடமாய் வாசித்திருக்கிறாயா?
ஓம். விமானம் கடத்திய கதை."
'சொல்."

'உலகில் முதன் முதலில் விமானம் கடத்திய பெண்மணி லஜ்லா ஷாலெட். அவர் பற்றிச் சொல்லப் போகிறேன். பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் பிரசித்த முன்னணியைச் சேர்ந்தவர். அவரின் வீரத்தைப் பற்றி நிரம்பப் பதிவுகள் உண்டு. அதே போல தேவதை போன்ற அழகு, சாணக்கியன் போன்ற அரசியல் வித்துவம் பற்றியும் தாராளமாய்ப் பேசப்படுகிறது.

ஸ்ரேல்-பலஸ்தீன் 1967 ஆறுநாள் போரின் பின்னர் லெபனாலில் அகதி முகாமில் வாழ்ந்தார். அப்போது வயது நாலு. 15 வயதில் சகோதரனைப் பின்பற்றி அரபு தேசிய அமைப்பில் சேர்ந்தார். பெய்றூட்டடில் உள்ள அமெரிக்க பல்கலைக் கழகத்தில் மருத்துவ படிப்பை மேற்கொண்டார். பின்னர்தான் விமானக் கடத்தலில் ஈடுபட்டார்."
'அதைப் பற்றிச் சொல்."

'707 போயிங் விமானம் இத்தாலி நகர் ரோமிலிருந்து கிறீக்தேச தலைநகர் ஏதன்ஸ்குப் பறந்து கொண்டிருந்தது. விமானத்தில் லஜ்லா ஷாலெட், வேறும் அவரது புரட்சிக் குழுவைச் சேர்ந்தவர்களும் பறந்து கொண்டிருந்தனர். லஜ்லா விமான ஓட்டியின் அறைக்கதவைத் திறந்து கிரனைட்டின் அடைப்பு ஊசியைப் பல்லால் கடித்து இழுத்து எடுத்து, கிரனைட்டை பெருவிரலால் அழுத்தியபடி மிரளும் பைலட்டுக்கு உத்தரவு கொடுத்தார். 'விமானத்தை டமஸ்கஸ் நகருக்குத் திருப்பு." விமானம் லெபனான் தலைநகர் டமஸ்கஸ் நோக்கிப் பறந்து கொண்டிருந்தது.
பிரயாணிகள் பயந்து நடுங்கிக்கொண்டு கடவுளைப் பிரார்தித்தனர்.

விமானம் டமஸ்கஸ் விமான நிலையத்தில் இறங்கியது. பயணிகளை பயணக் கைதிகளாக வைத்திருந்தனர். லஜ்லா ஷாலெட், மற்றும் புரட்சிக் காரர்களின் கைகளில் பின் நீக்கிய கிரைனைட்டுகள். விரலின் அழுத்தம் சிறிது விடுபட்டாலே போதும். வெடித்துவிடும் அபாயம்.

பலஸ்தீன் விடுதலை அமைப்புக்கும், ஸ்ரேல் அரசுக்குமிடையில் பேச்சவார்த்தை நடந்தது. ஸ்ரேலிய அரசு 13 பலஸ்தீனக்கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. விமானத்தில் இருந்த பணயக் கைதிகள் விடுதலையாகி விமானத்தை விட்டு வெளியேறினர்.
உடன் அமெரிக்க விமானம்குண்டுவீசி தகர்க்கப் பட்டது.

கதை சொல்லி முடித்த முல்லை, அண்ணையின் முகபாவத்தில் ஏதாவது மாற்றந் தெரிகிறதா என்றுஆவலுடன் நோக்கினாள்.
'முல்லை, இரண்டாவது பரீட்சை சுமாராகப் போகிறது. பரவாயில்லை ஏன் விமானத்தைக் கடத்தினாள் அந்தப் பெண்?" கூறிவிட்டு அண்ணை மெல்லிதாகப் புன்னகை செய்தார்.
'இழந்த மண்ணை மீண்டும் பெறுவதற்காகப் பலஸ்தீன் விடுதலை இயக்கம் போராட்டம் நடாத்துகிறது. சுயநிர்ணய உரிமையுடைய, ஜெரூசலத்தைத் தலைநகராகக் கொண்ட பலஸ்தீன நாட்டை உருவாக்கவும், புலம்பெயர்ந்த அகதிகள் யாவரையும் சொந்த மண்ணுக்கு மீண்டும் கொண்டுவரவும், ஆறு நாள் போரில் இஸ்ரேல் கைப்பற்றிய சகல நிலப் பிரதேசத்தையும்மீண்டும் பெறவும் போராடுகின்றனர். அந்தப் போராட்டத்தின் அங்கந்தான விமானக் கடத்தல். அதனைப் புரட்சி என்றே கூறினர்."
இப்பொழுதும் விமானம் கடத்துகின்றனரா?"
இல்லை. விரைவில் விமானம் கடத்தற் போராட்டத்தைக் கைவிட்டு விட்டனர்"

முல்லை, பலஸ்தீனியர் நடாத்துவது புரட்சி என்று சொன்னாய். விடுதலைப் புலிகள் நடாத்துவது புரட்சியா போராட்டமா?"
'லஜ்லா ஷாலெட் பாசையில் புரட்சி. எங்கள் பாசையில் போராட்டம்."

முல்லை. லஜ்லாவின் விமானக் கடத்தல் தொடர்பான மூன்று வீடியோக்கள் எமது நூலகத்தில் உண்டு. லஜ்லாவின் வீரதீரங்களைப் பார்க்கலாம்."
முல்லை அண்ணையை பார்த்தார். கதிரையை விட்டு எழுந்து கொண்டிருந்தார்.
'முல்லை நான் வருகிறேன்."

அண்ணை போன பாதையைப் பார்த்தபடி முல்லை மனச்சோர்வோடு நின்றாள். தனது பரீட்சை முடிவை அறியத் துடித்தாள்.கரும்புலிக்கு எடுப்பதானால் அண்ணை சொல்லி இருப்பார். கரும்புலிக்குப் பொருத்தமானவள் அல்ல என்று சொன்னால் மனம் நொந்துஅழுவேன்என்று சொல்லாமல் விட்டிருப்பார் போலும்.
ஏலவே வாகனத்தில் கொண்டு வந்து இறக்கிய போராளி'முல்லை வாருங்கள் போவோம்" என்று அழைத்தார். வாகனம் இரவைக் கிழித்து ஓடிக்கொண்டிருந்தது.
சோதியா அணி அலுவலக வாசல். முல்லை வாகனத்தால் இறங்கி, வேட்டைக்குக் கோட்டையோடு சென்று வெறுங்கையுடன் திரும்பியவள் போல மனமொடிந்து சோர்வாக நடந்து போனாள். வாசலில் சிரித்தபடி சோதியா அக்கா நின்றார்.
முல்லை. அண்ணையைக் கலக்கிப் போட்டியாம். காலமை உன்னுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு ஆயத்தமாக இரு.ஒன்பது மணிக்குப் புறப்படுகிறாய்."
'எங்கே?"

'வேறெங்கே? கரும்புலிகள் முகாமுக்கு."

~~~~~~~~~~~~~ இன்னும் வரும்... ~~~

No comments:

Post a Comment