இந்தச் சிறுகதைத்
தொகுப்பின் ஆசிரியர் திருமதி உஷா ஜவஹர். இலங்கையில் கொழும்பில் பிறந்து
வளர்ந்தவர். தற்போது சிட்னியில் இருக்கின்றார்.
'அம்மா என்றொரு
சொந்தம்' இவரது முதல் சிறுகதைத்
தொகுப்பு. தொகுப்பில் மொத்தம் 16
கதைகள் உள்ளன. இவற்றுள் ஒரு சிறுகதை வீரகேசரி பத்திரிகையிலும், இரண்டு 'உதயம்' பத்திரிகையிலும்,
ஏழு 'கலப்பை' சஞ்சிகையிலும்
ஏனையவை ஸாம்பியா நாட்டில் வெளிவந்த 'செய்தி மடலிலும்' வெளிவந்தவை.
இத்தொகுப்பு ஒரு
மணிமேகலைப் பிரசுரமாகும். இதற்கு குங்குமச்சிமிழின் பொறுப்பாசிரியர் கெளதம
நீலாம்பரன் அணிந்துரை வழங்கியிருக்கின்றார். அவர் தமது அணிந்துரையில்,
"சிறுகதை இலக்கியம் தமிழில் அமரர்
கு.ப.ரா.வின் 'குளத்தங்கரை
அரசமரம்' முதலே தோன்றி, செழித்து வளர்ந்து வருவதாகக் கூறுவர்"
என்று ஆரம்பிக்கின்றார். வ.வே.சு. ஐயர் எழுதிய குளத்தங்கரை அரசமரத்தை
கு.ப.ரா.தான் எழுதினார் என்று
எழுதியிருப்பது அவருக்கே 'சிறிது
வெளிச்சம்'.
மேலும் அவர்
சிறுகதைகளின் ஜாம்பவான்கள் என்று ஒரு சிலரைக் பட்டியலிடுகின்றார். ஒரு ஈழத்துப்
படைப்பாளியின் சிறுகதைத் தொகுப்பிற்கு அணிந்துரை எழுதும்போது, ஒரு ஈழத்து எழுத்தாளரைத்தானும் அவருக்கு ஞாபகம்
வராமல் இருப்பது அவரின் அசட்டையீனத்தையே குறிக்கின்றது. தொடர்ந்து இந்த
அணிந்துரையை வாசிக்கும்போது இதனை கெளதம நீலாம்பரன்தான் எழுதினாரா என்ற சந்தேகம்
வருகின்றது.
இனி தொகுப்பிலுள்ள
சிறுகதைகளிற்கு வருவோம். தொகுப்பில் உள்ள அனேகமான சிறுகதைகள் தாய், தந்தை, பிள்ளைகளிற்கிடையிலே நிலவும் உறவு நிலைகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
கதைகளை ஆரவாரமில்லாமல் எவரும் விளங்கக்கூடிய விதத்தில் தெளிந்த நீரோடை போல
நகர்த்திச் செல்கின்றார் உஷா ஜவஹர். கதைகள் மனதை ஏதோ விதத்தில் நெகிழ வைக்கின்றன.
புதிய சிந்தனைகளைத்
தோற்றுவிக்கும் சிறுகதைகளாக 'சூரியகாந்திப்
பூவொன்று', 'மீண்டும் பூபாளம்',
'சுயம்வரம்' என்பவை உள்ளன.
'சூரியகாந்திப்
பூவொன்று' முதிய தம்பதியினருக்கு
இடையேயுள்ள பாசப் பிணைப்பை எடுத்துக் கூறுகின்றது. 'ஸ்ரோக்' வந்து
அறிவு நினைவில்லாமல் 7 வருஷமாக 'நேர்ஷிங் ஹோமில்' இருக்கும் கணவனை சலியாது நித்தமும் பார்த்து
வருகின்றாள் ஒரு பெண். தனது 40
வருஷ குடும்ப வாழ்க்கையை நினைவு கூரும் அவள் என்றாவது ஒரு நாள் தனது கணவன்
திரும்பவும் தன்னுடன் கதைப்பார் என்று நம்பிக்கை கொள்கின்றாள். நம்பிக்கை என்ற
அச்சாணியிலேதான் உலகம் இயங்குகின்றது.
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்பதை வலியுறுத்துகின்றது
இந்தக்கதை.
'மீண்டும் பூபாளம்'
சிறுகதையில் சாந்தி என்பவள் திருமணம்
செய்து 2 வருடங்களில் தனது கணவனை
மாரடைப்பில் இழந்துவிட, மீண்டும்
திருமணம் செய்து கொள்கின்றாள். முதல் கணவனின் திவசதினம் வருகின்றது. அதை
அனுஷ்டிக்க கோவிலுக்குப் போக எண்ணுகின்றாள். புதிய கணவனிடம் தயங்கித் தயங்கி
அனுமதி கேட்கின்றாள். அவன் அவளின் நிலையை உணர்ந்து பெருந்தன்மையுடன்
அனுமதிக்கின்றான். கணவன் மனைவி உறவிலுள்ள புரிதலை விளக்குகின்றது இந்தக்கதை.
'சுயம்வரம்' கதையில், மலேசியாவில் வேலை பார்க்கும் 35 வயதுடைய ரகுராம் உழைத்து உழைத்து பணத்தை பெற்றோருக்கு
இலங்கைக்கு அனுப்புகின்றான். தன்னுடைய 2 சகோதரிகளிற்கும் திருமணம் செய்து
வைக்கின்றான். அவனுடைய திருமணத்தை பேராசை கொண்ட தந்தை தட்டிக் கழிக்கின்றார். தனது
பிள்ளைகளுக்குக் கொடுத்த சீதனம் டொனேஷனை விட 10 மடங்கு எதிர்பார்க்கின்றார். விளைவு - காத்திருந்து
ஏமாந்த ரகுராம் தன்னுடன் வேலைசெய்யும் செக்கிரட்டரியான சீனப்பெண்ணை துணையாக்கிக்
கொள்கின்றான். அவள் ஏற்கனவே இன்னொருவனுடன் சேர்ந்து வாழ்ந்தவள் என்று
தெரிந்திருந்தும் மயக்கம் அவனை விடவில்லை.
'செஞ்சோற்றுக் கடன்',
'அம்மா என்றொரு சொந்தம்' ஆகிய இரண்டு கதைகளும் உஷா ஜவஹர் எழுதிய
கதைகளில் மிக நீண்ட கதைகளாகவும் சிறப்பாகவும் உள்ளன. இவை இன்னமும் இறுக்கமாக
எழுதப்பட்டிருக்க வேண்டும்.
'செஞ்சோற்றுக்கடன்'
கொழும்பு கட்டுநாயக்கா விமானநிலையம் எரிந்த
காலகட்டத்தில் நடக்கின்றது. அவுஸ்திரேலியாவில் இருக்கும் சுரேனின் தந்தை இறந்து
விடுகின்றார். பதற்றமான சூழ்நிலை. சிங்கப்பூர் போய் நின்று நிலைமை சீரானதும்
கொழும்பு செல்கின்றான். களனிப்பாலத்தருகே அவனைச் சுடுவதற்காக இராணுவம்
எத்தனிக்கின்றது. மேஜர் ரணவீர அவனருகே வந்து பாஸ்போட்டைப் பார்கின்றார். பழைய கதை
ஒன்று அதிலிருந்து தொடங்குகின்றது. ரணவீரவை வளர்த்து ஆளாக்கியதே சுரேனின்
தந்தைதான். முதல்நாள், தான்
அவருக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு வந்ததையும், இறுதிச்சடங்கிற்குப் போகமுடியாமல் தவிக்கும் சுரேனையும்
பார்க்கின்றார். இராணுவ வாகனமொன்றில் சுரேனை ஏற்றி பத்திரமாக அவனது வீட்டிற்கு
அனுப்பி வைக்கின்றார். இந்த உச்சத்துடன் கதையை முடித்திருந்தால் சிறப்பாக
அமைந்திருக்கும். கதை இன்னமும் தொடர்கிறது. ஆனால் நம்ப முடியவில்லை.
'அம்மா என்றொரு
சொந்தம்' தொகுப்பின் இறுதிக்கதை. சிறுகதைத்
தொகுப்பின் ஒட்டுமொத்த தலைப்பும் அதுதான். குழந்தை பிறந்த பின்பு மனநலம்
குன்றிவிடுகின்ற தாய். கொடுமைக்கார தந்தை. நான்கு பிள்ளைகள். பிள்ளைகளில் மூவர்
வெளிநாடு போய்விட கடைசிப் பெண் புவனாவின் பொறுப்பில் தாய். தந்தையும்
காலப்போக்கில் இறந்துவிடுகின்றார். அம்மாவிற்காக தனது திருமணத்தை
தள்ளிப்போட்டும் காதலை மறுத்தும்
வருகின்றாள் புவனா. கடமை பெரிதாகிறது. நீண்ட காத்திருப்பின் பின்பு அவளின்
வாழ்க்கை வளமாகிறது.
'ஆகாயத்தில் ஒரு
ஒப்பந்தம்' போர்க்கால சூழலைப்
பற்றியதான இன்னொரு கதை. ஆசிரியர்
இக்கதையின் மூலம் என்ன செய்தி சொல்ல வருகிறார் என்பது தெரியவில்லை. இரு
இனங்களையும் சார்ந்த மைந்தர்கள் மண்ணிலே போரிட்டு மடிகின்றார்கள். அவர்களின்
தாய்மார் விமானத்திலே அரவணைத்துக் கொள்கின்றார்கள். இதுவே மண்ணின் பெருமைமிக்க
தாய்மைக்குணம் என கதையை முடிக்கின்றார். சிறீமாவும் சந்திரிக்காவும் இதை
உணர்ந்திருப்பின் எமக்கு எப்போதோ விடிவு பிறந்திருக்கும்.
'தங்கைக்காக',
'இறைவன் தந்த பரிசு', 'காகித ஓடம்', 'தனிமரம்', 'மனம் ஒரு குரங்கு', 'ஒருத்தி
ஒருவனை நினைத்துவிட்டால்' போன்ற கதைகள் ஏற்கனவே வாசித்திருந்த சில கதைகளை
ஞாபகமூட்டுகின்றன.
'காயமே பொய்யடா!',
'கோபமா? தாபமா?', 'வாழையடி வாழை', 'இளமைக்
கோலங்கள்' போன்ற கதைகள் சிறு
செய்திகளைத் தாங்கி நிற்கின்றன. துணுக்கு ஒன்றை வாசித்தது போன்று உணர்வைத்தான் இவை
தருகின்றன.
சுகமும் துக்கமும்
சுழலும் சக்கரங்கள், இன்பமும்
துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை. உஷா ஜவஹர் தனது கதைகளில் யாரையாவது இறக்க
வைத்து விடுகின்றார். அனைத்துச் சிறுகதைகளுமே சோகத்தைத்தான் பிரதிபலிக்கின்றன.
ஆங்காங்கே மகாபாரதம், இராமாயணத்திலிருந்து
சில எடுகோள்கள் பொருத்தமாகக் காட்டப்பட்டுள்ளன. ஒரு சில கதைகளைத்தவிர, கதைகள் எழுதப்பட்ட ஆண்டுகள் தரப்படவில்லை
வாழ்க்கையின் மீள்
தரிசனமான இத்தொகுப்பில், ஒரு சில
கதைகளாவது உலகைப் புரிதலில் ஒரு புதிய வெளிச்சத்தை எங்களுக்குத் தருகின்றது.
No comments:
Post a Comment