Monday 30 March 2015

’வன்னி’ நாவல் - கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 23 - பகைவன் கோட்டைக்குள்

அன்ரி இன்றைக்கு யார் பற்றிய கதை?" தங்கன்.

இன்று ராச நாச்சியர் வம்சக் கடைக்குட்டி பாவலன்---மேஜர் அம்மான்---பற்றிய திகில் மிகு கதை. உலக முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய தாக்குதல். உலக வரலாற்றில் அதற்கு ஈடான பிரமிக்க வைக்கும் தாக்குதல் எங்கும் நடந்ததில்லை."

முல்லையின் தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னர் மேஜர் அம்மான் பற்றிய கதைகள் எதுவும் வெளிவரவில்லை. அந்தத் தாக்குதலில் தங்கையைக் கண்டு, தன்னை மறந்து நின்ற அவன் மாண்டு போனான், அவன் மாழவில்லை. உயிருடன் உள்ளான், ராணுவஇரகசிய சிறையில் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன.

2001 ஆம் ஆண்டு, 'மேஜர் அம்மான்" என்று கேணல் சாள்ஸ் அழைத்த போது பாவலன் 'எல்லா ஒழுங்கும் செய்து விட்டேன்," என்று கூறிமீண்டும் களத்தில் தோன்றுகிறான்.

 கேணல் சாள்ஸின் சாதனைக்குப் புலி இயக்கத்தில் எவரும் ஈடில்லை. அது பற்றி மக்களுக்குச் சொல்ல ஏன் ஊடகங்கள் ஆர்வங் காட்டவில்லை என்ற கேள்வி என்னை அடிக்கடி விராண்டுவது உண்டு. ஒருவேளை புலிகள் அமைப்புக்குள்ளும் எதாவது அப்படி உண்டோ என்று சஞ்சலப்படுவதும் உண்டு. நீர்கொழும்பில் வாழ்ந்த கேணல் சாள்சின் பாதுகாப்புக் காரணமாகவே ஊடகங்களில் இருட்டடிப்பு நடந்ததாக ஒரு கருத்து உண்டு.

தென் இலங்கைத் தாக்குதல்கள் அனைத்தையும் திட்டமிட்டு நடாத்தியவர் கேணல் சாள்ஸ். நீர்கொழும்பில் தலைமையகத்தை வைத்து தாக்குதல்களை முன்னெடுத்தார். இந்த வகையிலே இவர் சாதனை புரிந்த தாக்குதல் பட்டியல் நீண்டது. பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்தின, ஜனாதிபதி பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓசி அபயகுணசேகர, வீரசிங்க மல்லிமராச்சி, ஜி.எம்.பிரேமசந்திரா கொலைகள், 1995 கொலன்னாவை பெற்றோல் மையம், ஸ்ரீலங்கா இராணுவ தலைமையகம், 1996 மத்திய வங்கி, தெகிவலை புகையிரத நிலையம், தலதா மாளிகைத் தாக்குதல்கள் என்பனவாகும்.
மற்றும் முன்னைநாள் கடற்படைத் தளபதி கிளன்சி பெர்னான்டோ, அமைச்சர் சி.வி.குணரத்தின, பாராளுமன்ற உறுப்பினர் நீலன் திருச்செல்வம் என்போரும் கேனல் சாள்சின் வழிநடத்தலில் நடந்த தாக்குதல்களில் மரணித்தவர்களே.

புலிகளின் தென் இலங்கைத் தாக்குதல்களை தலைமை தாங்கி நடத்திய கேனல் சாள்சுக்கு வலது கரமாய்ச் செயற் பட்டவர் மேஜர் அம்மான்என்னும் பாவலன். இவரது தலைமைப் பீடம் கொழும்பு நகரில் இருந்தது. நீர்கொழும்பில் வாழ்ந்த கேணல் சாள்ஸின் திட்டங்களை---கொழும்பில் நடந்த தற்கொலைத் தாக்குதல்களை---களத்தில் நின்று முன்னெடுத்தவர் மேஜர் அம்மான்.

புலிகளின் தற்கொலைத் தாக்குதல்களில் உலகம் முழுவதையும் திகைக்கவைத்த தாக்குதல் கட்டுநாயக்கா தாக்குதல்.உலக சகல தொலைக் காட்சிகளும், வானொலிகளும் தொடர்ந்து மூன்று தினங்கள் இத்தாக்குதல் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தன. அதனைக் களத்தில் நின்று நடாத்தும் பொறுப்பை கேனல் சாள்ஸ், மேஜர் அம்மானிடம் ஒப்படைத்திருந்தார்.

ஸ்ரீலங்கா விமாப் படையில் 13 இஸ்ரேல் கிபீர் விமானங்கள், 8 உக்கிரைன் எம்.ஐ.ஜி., 27 சண்டை ஜெற் விமானங்கள். பல ஹெலிகொப்டர்கள். அவை தமிழ் ஈழத்தில் குண்டுகள் பொழிந்து, தானியங்கித் துப்பாக்கிகளால் சுட்டுப் பெருஞ் சேதம் விளைவித்தன. அவற்றை அழிப்பதே கட்டுநாயக்கா தாக்குதலின் நோக்கம்.

பாவலன் சுராங்கனி என்ற அழகிய உயரமான சிரித்தால் கன்னத்தில் குழிவிழும் சிங்கள விமானப் பணிப் பெண்ணை சிநேகிதம் பிடித்தான். அவள் பாவலனின் அழகில் சொக்கிப் போனாள். வாய்த்தால் தமிழ் இளைஞர்களை வளைத்துப் பிடிப்பதில் சிங்கள மங்கையர்களுக்கு யாரும் ஈடில்லை. மென்மையான குரலில் வளைந்து வளைந்து பேசுவர். அவர்களின் மொழி ஓசையில் மந்திரம் மாயம் கலந்திருக்கும். முனிவர்களையே கிறுங்கச் செய்து விடுவர். தமிழ் இளைஞர்கள் மயங்கி மயங்கி விளக்குச் சுவாலையுள் விழுந்த விடடில் போல அவர்களோடு இரண்டறக் கலந்துவிடுவர். தான் பிடித்துள்ள 'கொள்ளாவை--பெடியனை' அம்மாவுக்கு காட்டுவதற்காக கட்டுநாயக்காவில் உள்ள தனதுவீட்டிற்கு சுராங்கனி அழைத்துச் சென்றாள். அங்கு அவளது தந்தை சில்வாவும் வீட்டில் இருந்தார். அவர் கட்டுநாயக்கா வான்படையைச் சேர்ந்த இரண்டாம்நிலை அதிகாரி. விரைவில் பாவலன் அந்த வீட்டின் உள்வீட்டுப் பிள்ளையானான்.
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாவலன் விமானப் படை அமைவிடச் செய்திகளைத் திரட்டத் தொடங்கினான்.

ஸ்ரீலங்கா விமானப் படைத் தலைமைக் காரியாலயம், கட்டுநாயக்கா சர்வதேச விமானதளத்தின் ஒரு பகுதியில் இருந்தது. பலநாட்கள் காதலி சுராங்கனியுடன் உல்லாசமாய் கைகோர்த்தபடி விமான நிலையப் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தான். பலதடவைகளில் சில்வாவிற்கு வீட்டிலிருந்து உணவு எடுத்துச் செல்வது போலப் பாசாங்கு செய்து அங்கு சென்றான். இரு வழிகளிலும், தாக்க வேண்டிய மையங்கள், விமானங்கள் தங்கும் ஹாங்கர்கள், வெடிமருந்துக் களஞ்சியம், அவற்றுக்குச் செல்லும் வழி, மின் மாற்றிகள் அமைந்த இடங்கள் எல்லாவற்றையும் நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றார்.
இருவரும் கைகோர்த்தபடி விமானந்தங்க வைக்கும் ஒரு ஹாங்கர் ஓரம் நின்றனர். அப்பொழுது சுராங்கனி பேசினாள். 'என்னுடைய சிநேகிதி பபிசரா, புலிகள் சிநேகிதம் பிடித்து ஏமாற்றுவார்கள் என்று சொல்கிறாள்,"
'புலியா? அந்த வெறி நாய்களை எனக்கு கண்ணில் காட்டக்கூடாது. என்னுடைய அண்ணையை லைட் போஸ்டில் கட்டிச் சுட்டவன்கள். அப்பாவின் புதிய பென்ஸ் காரை பறிச்சவன்கள். நாய்கள். குட்டை நாய்கள்."
'ரவி, தயவு செய்து ஆத்திரப் படாதீர்கள்." சுராங்கனிக்கு தம்பி பாவலன் தன் பெயர் ரவி என்று கூறியிருந்தான்.
'புலிக்கதை பேசுவதென்றால் நாம் பிரிந்து கொள்வோம். பொலிஸ் காதில் விழுந்தால் போதும். என்னுடைய கதை இரத்தம் சொட்டும்," என்று கூறியபடி ஒரு பாரிய மின்மாற்றி உள்ள இடத்தை நோக்கி தம்பி பாவலன் வேகமாக நடந்தான். அதற்குச் செல்லும் பாதையை அவன் மூளை பதிவு செய்துகொண்டிருந்தது. சுராங்கனி பின்னே ஓடிச் சென்று சிங்களக் குமரிகளின் லீலைகள் காட்டி சமாதானப்படுத்தினாள். அப்பொழுது சிவப்புத் தொப்பி அணிந்த மிலிரறி பொலிஸ் அவர்களைக் கண்டுவிட்டது. அவர்களை நோக்கி அந்த வாகனம் விரைந்தது. பாவலன் அவதானித்து விட்டான். சுராங்கனியை மறைவிற்கு இழுத்துக் கட்டி அணைத்து ஏதோ செய்தான். சுராங்கனி உலகை மறந்து சொர்க்கத்தில் மிதந்தாள். விமானப் பணிப் பெட்டையளுக்கு காதல் பண்ணுற இடமாக மாறுது என்று முணுமுணுத்தபடி மிலிரறி பொலிசார் திரும்பிப் போய்விட்டார்கள்.

தாக்குதல் தினம் வந்தது. மேஜர் அம்மான் தலைமையில் புறப்பட்ட தற்கொலைப் போராளிகள் கரும்புலிகளுக்கு உரிய சத்தியப் பிரமாணம் எடுத்தனர்.

தாக்குதல் வீரர்கள் 21 பேர். ஒரு பகுதியினர் கிளிநொச்சியிலிருந்து கடல் மார்க்கமாய்ப் பிரயாணம் செய்து நீர் கொழும்பை அடைந்தனர். சிலர் தரை வழியாய்ப் பிரயாணம் செய்து கொழும்பை அடைந்தனர். தேவையான வெடி பொருட்களை கடல் மார்க்கமாய் எடுத்துச் சென்று நீர்கொழும்பில் களஞ்சியப்படுத்தினர்.

தாக்குதல் தினம் பேராளிகளைக் கட்டுநாயக்காவுக்கு அழைத்துச் செல்ல நாற்பது பேர் பயணம் செய்யும் ஆடம்பர பஸ்வண்டியை பாவலன் ஒழுங்கு செய்திருந்தார்.
வாகனம் கொழும்பில் உள்ள தற்கொலைப் போராளிகளை ஏற்றிக்கொண்டு, நீர்கொழும்பு சென்று மிகுதியானவர்களை ஏற்றிக்கொண்டு கட்டுநாயக்கா புகையிரத நியைத்துக்கு அண்மையில் அமைந்த விளையாட்டு நிலத்தில் தரித்து நின்றது. வாகனத்தால் இறங்கி விளையாட்டு நிலத்தில் ஓய்வெடுத்தனர். சாப்பாட்டுப் பார்சல்களை திறந்து சாப்பிட்டனர். கான்களில் கொண்டு வந்த கொக்கோகோலா பேருகினர். சொக்கிலேட் சாப்பிட்டனர்.

எதிரே வீதிக்கு மறுபுறம் உள்ள வீட்டிலிருந்து ஒருவர்---சாரம் கட்டி பனியன் அணிந்த தாடி வைத்த மனிதர், பேரப்பிள்ளையைத் தோளில் தாலாட்டியபடி---நீண்ட நேரம் அவதானித்தார். அக்காலத்தில் புலிகள் கொழும்பில் அடுத்து அடுத்து தற்கொலைத் தாக்குதல் நடாத்தினர். ஏதாவது சந்தேக நிகழ்வுகளைக் கண்டால் உடன் பொலிசுடன் தொடர்பு கொள்ளவும் என்று வானொலி, தொலைக் காட்சிகள் சொல்லிக் கொண்டிருநந்தன.அண்ணைக்கு அஞ்சி சிங்கள இனம் நடுங்கிய காலம். அந்தத் தாடிமனிதர், பேரப்பிள்ளையைத் தோளில் போட்டபடி விசாரித்து அறிய அங்கு போய்ச் சேர்ந்தார்.
பஸ் வண்டியில் சிங்களப் பாட்டு கேட்டது. அந்த மனிதன் வருவதைக் கண்டதும் அதன் ஒலி அதிகரித்தது.

தம்பி பாவலன் ஒரு சொக்கலேட் பாரை அந்தக் குழந்தைக்குக் கொடுத்தான். 'தாங்யூ அங்கிள்" என்றபடி குழந்தை வாங்கியது. தாடி மனிதனின் வேகம் குறைந்துவிட்டது.
அங்கிள், உங்கள் பேரப்பிள்ளையா?"
ஆம். மூத்த மகளின்.அவவிமானப் பணிப்பெண்."
அம்மாவைப் போல குழந்தையும் அழகாய் இருக்கிறது."
தாடிக்காரர் சிரித்தபடி வினாவினார். 'நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள்?"
எங்களுடைய நண்பர் அவுஸ்திரேலியா செல்கிறார். அவரை வழி அனுப்ப வந்திருக்கிறோம். இன்னும் நான்கு மணித்தியாலங்கள் உள்ளன. அதுதான் இங்கு ஓய்வெடுக்கிறோம்."
எங்கே இருந்து வந்தீர்கள்?"
மாத்தறை."
எனக்கும் மாத்தறையில் உறவினர்கள் இருக்கிறார்கள்."

அந்த மனிதர் பேரப்பிள்ளையோடு கதைத்தபடி போய்க் கொண்டிருந்தார். அவர் ஏனையவர்கள் ஏன் வாய் திறக்கவில்லை என்று யோசித்துப் பார்க்கவில்லை. சொக்கலேட் பாரில் ஒரு துண்டைப் பிரித்து எடுத்து தன் வாயில் போட்டார்.

ராச நாச்சியார் வம்சத்தின் இளைய வாரிசு தம்பி பாவலன்தான்---மேஜர் அம்மான்தான் பதில் சொன்னான். சிங்களமொழியை யாரும் இலகுவில் ஓசைச் சிதைவின்றிப் பேசிவிடமுடியாது. மேஜர் அம்மான் பாவலன் சிங்களம், ஆங்கிலம், இந்தி மூன்று மொழிகளும் சரளமாய்ப் பேசுவான். மொழியை அவன் இலகுவாய்க் கற்றுக்கொள்ளும் வல்லமை உள்ளவன்.

கட்டுநாயக்காவில் மின் வெட்டு இரவு 8.50 தொடக்கம் 11.00 வரை. அன்று சற்று முன்னதாகவே மின்வெட்டு நடந்தது. ஒரே இருள்.
யாவரும் உடைகளை மாற்றினர். வான் படைவீரர்களுக்கு உரியது போன்ற மென்நீலச் சீருடை. வாகனத்தில் ஏறினர். வாகனம் அவர்களை கதிரான பகுதியில் ரெயில் பாதை ஓரம் இறக்கியது.
அவர்கள் தங்களுக்கு உரிய வெடிபொருட்கள் சகிதம் நடக்கத் தொடங்கினர். அவர்களது பொதிகளில் ஜி-3எல் மெசீன்கன். ரி-56 றைபிள், கிரனேட் ஏவுமெசீன்கள், கிரனேட், ஆர்.பி.ஜி. ஏவுகணைகள் போன்ற ஏராளமான வெடிப் பொருட்கள்.

மேஜர் அம்மான் ஏற்கனவே பார்த்து வைத்த இடம். தென்னந்தோட்டத்தின் ஓரம் உள்ள வேலி வழியாக உட்செல்ல வேண்டும். மிதி வெடிகள் ஒருபுறம். வேலியில் மின் பாய்ச்சப்பட்டிருந்தது. அந்த வேலியில் வெள்ளம் பாய்வதற்கான ஒரு பகுதி. வெள்ளம் இல்லை. அதன் வழியே தவழ்ந்து உள் நுழைந்தனர்.

ஏலவே மூன்று பிரிவாகப் பிரிந்து தாக்குவதற்கான பயிற்சியை மேஜர் அம்மான் வழங்கியிருந்தான். அதன்படி எல்லோரும் தத்தமக்கு உரிய இடத்தை அடைந்தனர்.
மூன்று மின்மாற்றிகள். தாக்கி அழிக்க வெடி மருந்துகளை வைத்தனர். சிலர் விமானங்கள் களஞ்சியப் படுத்தும் ஹாங்கர்களைஅடைந்தனர்.

சரியாக அதிகாலை 3.00க்கு துப்பாக்கி வெடி ஒன்று கேட்டது. அதுதான் தாக்குதல் சைகை. 3.20 மணிக்குள் மின் மாற்றிகள் வெடித்துச் சிதறின். எங்கும் இருள் சூழ்ந்தது. ஹாங்கரில்நின்ற விமானங்கள் தகர்ந்தன. விமான நிலையம் முழுவதும் தீச் சுவலை எழுந்து ஆட்சி செய்தது.

போராளிகள் சிலர் விமான நிலைய முடிவில் அமைந்த கட்டுப்பாட்டு நிலைய கோபுரம் மீது எறி அங்கிருந்து விமானங்களைத் தாக்கினர்.

சண்டை ஓய்ந்த பொழுது பதிநான்கு தற்கொலைப் போராளிகள் மரணித்திருந்தனர். ஒருவர் ஒரு விமானத் தோடு வெடித்து மரணமானார். ஐவர் சுடுபொருள் முடிந்து சைனைட் சப்பி மடிந்தனர். எண்மர் விமானப் படைவீரரோடு சுடுபொருள் முடியும்வரை போராடி இறந்தனர். அவர்களுள் மேஜர் அம்மானும்---தம்பி பாவலனும் ஒருவர். ஏனையவர்கள் சுடப்பட்டு இறந்தனர்.

28 விமானங்கள் சேதப்படுத்தப்பட்டன. 18 முற்றாக அழிக்கப்பட்டன.

நாற்பத்தைந்து சதவீத குண்டு வீச்சு விமானங்கள் அழிக்கப்பட்டன.

தம்பி பாவலனின் சாதனை என்னை மெய் மறக்கச் செய்தது. ராச நாச்சியார் வம்ச வரலாற்றிலே பொன் எழுத்துக்களால் பதியவேண்டிய வரலாற்றுச் சாதனை.

கட்டுநாயக்கா தாக்குதலிற்குத் தலைமை தாங்கி உலகசாதனை புரிந்த தம்பி மேஜர் அம்மான்---பாவலன்---வீரமரணம் எய்தியதோடு, ராச நாச்சியார் வம்சஆறுசகோதர பாக்கியங்களில்---சித்தப்பா குடும்பத்தினரைத் தீயில் பொசுக்கி அழித்த பைத்தியகார மிருகங்களைத் தொடர்ந்து பழிவாங்க---நானும் மூத்த அண்ணர் வீரக்கோனும் மட்டும் எஞ்சியிருந்தோம்.


மேலும், ஏலவே ராச நாச்சியார் வம்சத்து தாத்தா துரோணரும், பெரிய தாத்தா தாமோதரனும் தங்கள் சுதந்திரப் போர்ப்பங்களிப்பை, பயங்கர குருதி உறையவைக்கும் நிகழ்வுகள் சுமந்து, செலுத்தி மறைந்து விட்டனர். அவர்களைப் பற்றி ஏலவே சொல்லியிருக்கிறேன்.

~~~~~~~~~~~~ இன்னும் வரும்...

No comments:

Post a Comment