Sunday, 15 March 2015

’வன்னி’ நாவல் - கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 21 - செஞ்சட்டை போர்வையில்

பெரிய வாகனம் ஒன்று பாடசாலையின் எதிரே வீதியில் நின்றது. போட்டிக்கோவின் வாசலில் நின்று கவனித்தேன்.

சீமெந்தாலான மின்சாரக் கம்பம் ஒன்று இறக்கினர். லொறி சற்றுத் தூரம் நகர்ந்து தரிக்க இன்னொரு கம்பத்தை. இழுத்து  நிலத்தில் போட்டனர். லொறி தொடர்ந்து மின்சாரக் கம்பங்களை இறக்கியது.
மனதிலே மகிழ்ச்சி. தொலைக் காட்சி பார்க்க எனக்குக் கொள்ளை ஆசை. அந்த ஆசையை மரணமாக முன்னர் நிறைவேற்ற வேண்டும் என்ற பிறிதோர் ஆசை. கல்யாணம் சொர்க்கத்திலே எழுதியிருக்குது. மரணம் எங்கே எழுதியிருக்குது?மற்றவைக்குப் புரிந்திருந்தால் எழுதியிருப்பினம். எனக்கு புரியுது. எப்ப மரணம் என்று. நான் ஓரிடத்தில் எழுதி வைத்திருக்கிறேன்.

தங்கனும், சிந்துசாவும் கடதாசிச் சுருள்களில் வீரைப் பழம் கொண்டு வந்து கொடுத்தார்கள். சின்ன சின்ன உருண்டை சிவப்புப்பழங்கள். இலந்தைப் பழத்திலும் சிறியவை.

ஆசனங்களில் அமருங்கள். இன்றைக்கு ஆசை அண்ணர் சங்கிலி பற்றிய கதை. சங்கிலி ஏனைய சகோதரங்களிலும் வித்தியாசமானவர். எதையும் ஆழ மாகச் சிந்திப்பவர். அவசரப்படமாட்டார். ஆனாலும் இயக்கத்திலே சேர்ந்தவேளை கொஞ்சம் அவசரப்பட்டு விட்டார். கதையைக் கேளுங்கள்.

வீட்டின் வடமேற்கே இலுப்பை மரத்துக்கு அப்பால் அமைந்த விசாலமான மாட்டுத் தொழுவம் நோக்கி நடந்தேன். மாடுகள் பட்டிக்கு இன்னும் திரும்பவில்லை. அரசியல் விவாதங்கள் நடைபெறும் நீதிமன்றம் அது. சங்கிலி அண்ணர் பெரிய நீண்ட முதிரை மரக் குத்திமீது சோக கோலம் சுமந்தபடி அமர்ந்திருந்தார். எதிரே கவிழ்த்து வைத்த கள்ளிப் பலகைப் பெட்டிமீதுஅமர்ந்தேன்.

சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை.

திடீரென வினாவினேன். 'ஏன் அண்ணா ஈ.பி.ஆர். எல்.எப். இயக்கத்துக்குப் போக யோசிக்கிறியள்?"

யோசிக்கவில்லை தங்கச்சி. முடிவு செய்திட்டேன். தெளிவான கொள்கை அடிப்படையில் அமைந்த அருமையான அமைப்பு. தலைவர் பத்மநாபா படித்தவர். பண்பாளர். அமைதியானவர். எதையும் நாலுபேருடன் பேசி முடிவு செய்யும் விருப்பம் உள்ளவர். காங்கேசன்துறையில் குரு வீதியில் அவரது வீட்டில் சந்தித்து நீண்ட நேரம்உரையாடினேன்."
'எப்படி அண்ணா உங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது?"
என்னுடைய வகுப்புத் தோழன் விமலன் அழைத்துச் சென்றான். பத்மநாபா அண்ணைக்கு அவன் நெருங்கிய உறவு. மச்சான் முறை."
புலிகளுக்கும் தெளிவான கொள்கை இருக்குத் தானே. தமிழ் ஈழம் பெற வேண்டும் என்று."
தங்கச்சி,அதுகொள்கை இல்லை. நோக்கம்."
'சரி. உங்களின் ஈ.பி.ஆர்.எல்.எப். கொள்கை என்ன? வடிவாய்ச் சொல் அண்ணா."
சமூக அநீதிகள், மூடநம்பிக்கைள், பாரபட்சங்கள், ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறைகள் அற்ற சமத்துவ சோசலிச அரசு நிறுவுவது. சமூகத்தின் சகலவிதமான தளைகளிலிருந்தும் மக்களுக்கு விடுதலை. நியாயத்தின் வெளிச்சத்தில் விடயங்களை நன்றாகக் கூர்ந்து நோக்கித் தீர்ப்பு வழங்குதல்."
நான் கெக்கட்டம் போட்டுச் சிரித்தேன்.
ஏன்டி சிரிக்கிறாய்?"
'உது சிவப்புச் சட்டைக்காரனை கொப்பி அடிச்சிருக்குது. நீங்கள் சொன்னது எல்லாம் செய்ய நாடு வேணும், அண்ணா. புலிகள் தமிழ் ஈழத்தை அமைத்துக் கொண்டு பிறகு நீங்கள் சொன்னதை எல்லாம் செய்வார்கள். அதன் மேலும் இருக்குதுஆசை அண்ணா."
சொல்லடி. அந்தப் புலிப் பூச்சாண்டியை."
நீங்கள் பேசுகிற சமத்துவம் கொண்டுவர ஏன் அண்ணா
சிங்களவனோடு சண்டை பிடிக்க நாங்கள் ஆயுதப் பயிற்சிக்குப் போக வேணும்?அதுக்கு எங்கள் சமூகத்துள்தான் யுத்தம் புரியவேணும்."
உனக்கெடி நான் சொன்னது இப்ப விளங்காது. கொஞ்சம் வயசு வரவேணும்."

'ஆசை அண்ணா உங்களின் இயக்கம் நலிந்த மக்களின் இயக்கம் என்று சொல்லுகினம். அவையும் உங்கள் அமைப்பிலேதான் நிரம்பச் சேர்ந்திருக்கினம். அவை உங்கள் அமைப்பை நாடக் காரணம் என்ன?"
ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பு நலிந்த மக்கள் விடுதலைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. சோசலிச சமதர்ம தத்துவங்களைக் கொண்டது. அதுதான் காரணம்."
'உதைத்தான் அந்தக் காலத்திலே கம்யூனிஸ்ட் கந்தையரும் பருத்தித்துறைத் தொகுதியிலே சொன்னவராம். பிறகு அளவெட்டிப் பொன்னம்பலத்தாரும் சொன்னவராம். தெற்கேயிருந்து வந்த இடதுசாரிகள்---என்.எம். பெரேரா, பீ;ற்றர் கெனமன், விக்கிரமசிங்க---அவையும் யாழ்ப்பாணத்திலே முந்திச் சொன்னவையாம். ஈ.பி.ஆர். எல்.எப். இப்ப சொல்லுது.அவைகாலத்திலே அந்த ஏழைச்சனத்தின் வாழ்விலே விடிவு எதுவும் நிகழவில்லை.
அவர்கள் தங்கள் பாட்டிலே படித்து, உழைத்து உவை சொன்ன உரிமைகளிலும் கூடிய உரிமைகளோடு இப்ப நல்லாயிருக்கிறார்கள். சுpறப்பாய் வாழ்கிறார்கள். சட்டமும் உதவவில்லை. உவையளின் கம்யூனிச சாத்திரமும் உதவவில்லை. கம்யூனிச சமதர்ம சோசலிசம் அவைக்குத் துரும்பு கூடக் கொண்டு வரவில்லை."
'நீயெடி சிவகாமி, நல்லாய்க் கதைக்கப் பழகியிட்டாய். உதெல்லாம் எங்கை பொறுக்கிப் பாடமாக்கி வைத்திருக்கிறாய்?"

ஆசை அண்ணர் சங்கிலி, கல்லூரி விடுதிக்கு மீண்டும் போவதாகக் கூறிச் சென்றவர், நேரடியாகக் காங்கேசன்துறை போய் இந்தியாவுக்கு வத்தை ஏறினார்.
ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்புக்கு இந்தியாவில் ஏழு பயிற்சி முகாம்கள்---தஞ்சாவூர் மேற்கு மூன்று, தென் ஆர்க்காடு இரண்டு, திருச்சி ஒன்று, இராமநாதபுரம் ஒன்று. அவற்றுள் தென் ஆர்க்காடு முகாமில் பயிற்சி பெற்றார். ஆங்கு எழுபத்தி மூன்று போராளிகள் பயிற்சி பெற்றனர்.
கொரில்லா யுத்தம், ஆயுதபாவனை, தேகப் பயிற்சி, யுத்தவாகனங்கள் துறைகளில் வழங்கிய பயிற்சிகளில் வெகு திறமை காட்டியதால் அண்ணா பாலஸ்தீனம் அனுப்பப்பட்டார்.
அங்கு விடுதலைக்கான பாலஸ்தீன மக்கள் முன்னணி அமைப்பினரிடம் பயிற்சி பெற்றார். பாலஸ்தீன மக்கள் முன்னணி மாக்சிஸ்ற்-லெனினிஸ்ற் சித்தாந்த அடிப்படையில் நிறுவப்பட்டது. அதன் இராணுவப் பிரிவு அபூ அலி முஸ்தபா பிரிகேட் ஆகும். மேற்குலக நாடுகளுக்குப் பகைமையான கொள்கைகளை மேற்கொண்டு, அறுபதுகளில் விமானங்களை கடத்திப் பெரும் பயங்கரஅதிர்ச்சி அலைகளை உலகம் எங்கும் பரப்பியதுதில் பெண்களுக்கும் நிறையப் பங்குண்டு.

புலிகளை அழித்து, இந்தியாவின் உதவியோடு ஈழத்தை வென்றெடுப்போம் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்கள் அறிக்கை விட்டனர். அதனால் விடுதலைப் புலிகள் அந்த அமைப்பைத் தடை செய்து உறுப்பினர்களைக் கைது செய்தனர். உறுப்பினர்களை உடனடியாக சரண் அடையுமாறும் அல்லது சுடப்படுவார்கள் என்றும் தெருத் தெருவாக ஒலி பெருக்கியில் எச்சரித்தனர். வசித்த கட்டிடங்களுள் புகுந்து தேடினர். யாழ்நகரப் பகுதிகளில் ஆங்காங்கு வெடி ஓசைகள் கேட்டன. பலாலி வீதியில் உள்ள வீட்டில் இருந்த பெண் உறுப்பினர்களை தங்களுடன் அழைத்துச் சென்றனர். வீடுகளிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற சிலரைச் சுட்டுக் கொன்றனர்.

நல்லூரில் உள்ள கந்தன கருணைஎன்னும் வீட்டை உரிமையாளரிடம் பறித்து எடுத்து, சரணாகதி அடைந்த அறுபது உறுப்பினர்களின் கைகால்களைக் கட்டிச் சிறை வைத்தனர். அவர்களுள் ஈ.பி.ஆர்.எல்.எப். மத்திய குழு உறுப்பினரான ஆசை அண்ணர் சங்கிலியும் ஒருவர்.
புதிய மிற்சுபிசி லான்சர் வாகனத்தில் யாழ்ப்hணம் இரண்டாம் குறுக்குத் தெருவில் பிரயாணித்தார் கிட்டு. விடுதலைப் புலிகள் அமைப்பின் யாழ்ப்பாணத் தளபதி. அவர் மீது எவரோ கைக் குண்டு வீசினர். உயிர் தப்பினார். முழங்காலின் கீழ் காலை அகற்றவேண்டி வந்தது.

விபத்தை அடுத்து விடுதலைப் புலி இயக்க உறுப்பினர் அருணா ஆவேசம் கொண்டெழுந்தான். அவனை கிட்டுதான் சிறையிலிருந்து தந்திரமாக அண்மையில் விடுவித்தார். அவன் நன்றிக் கடன் செலுத்த ரண்டு எம்16 துப்பாக்கிகளுடன் பாய்ந்து சென்றான். கந்தன் கருணை இல்லத்தில் கைதிகளாக இருந்த 55 பேரைச் சுட்டுக் கொன்று குவித்தான். சடலக் குவியலுள் ஐவர் உயிர் தப்பினர். அவர்களுள் ஒருவர் ஆசை அண்ணர் சங்கிலி.
அருணாவின் அக்கிரமத்தை விடுதலைப் புலிகள் ஏற்கவில்லை. எனினும், அருணாவை தண்டனைக்கு உட்படுத்தவில்லை. இந்தஅணுகுமுறைபுலிகளோடு ஒட்டியது.

வடகிழக்கு மாகாண சபைத் தேர்தல். இந்திய சமாதானப்படையின் ஆதரவு பெற்ற ஈ.பி.ஆர்.எல்.எப். வெற்றி பெற்று ஆட்சி நிர்வாகத்தைக் கைப்பற்றியது.
சமாதான படையின் தூண்டுதலில் ஈ.பி.ஆர்.எல்.எப். தமிழ்தேசிய இராணுவத்தை---ரி.என்.ஏ---அமைத்தது. தளபதியாக ஆசை அண்ணை சங்கிலியை அமர்த்தினர். பெரிய எதிர்பார்ப்புடன் பதவி ஏற்றார்.
படையில் சேர்ந்தவர்களுக்குச் சில கிழமைகள் இந்திய முகாம்களில் வைத்து இராணுவம் பயிற்சி வழங்கியது. தெளிவான கொள்கை, கண்டிப்பான ஓழுக்கவியல் விளக்கம் வழங்கவில்லை. அரசியல் அறிவு வழங்கி தன்நம்பிக்கை ஏற்படுத்தவில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான வன்மத்துக்குத் தூபம் போட்டு, கைகளில் ஏகே47 துப்பாக்கிகள் கொடுத்து களத்தில் இறக்கினர்.
எதிர்பார்த்தபடி இளைஞர்களை பெரியளவில் ரி.என்.ஏ.யில் சேர்க்க முடியவில்லை. துரத்திப் பிடிக்கத் தொடங்கினர். துப்பாக்கிகளுடன் சென்று, பஸ்வண்டிகள், சந்தைகள், கோவில்கள், களியாட்ட விழாக்களில் வைத்து இளைஞர்களை பலாத்காரமாய்ச் செவிகளில் பிடித்து இழுத்துச் சென்றனர். பாடசாலை சென்ற மாணவர்களை பனை அடைப்புகளில் வதை;துக் கடத்தினர். தமிழ் ஈழத் தாய்மார்கள் மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இடிந்துபோயினர். ஒப்பாரி வைத்தனர்: ';அறுவான்கள்! இந்திய தளபதிகள் தலைக்குள் மண்ணும் இல்லை. ஈ.பி.ஆர்.எல்.எப். காரன்கள் நாசமாய்ப் போவான்கள்! நரகத்துக்குப் போவான்கள்!"
வசதியான பெற்றோர் பன்னிரண்டு பதின்மூன்று வயது பிள்ளைகளைக்கூட விடான்கள் என்று அவர்களை அழைத்துக் கொண்டு கொழும்புக்கு ஓடித் தப்பினர்.
பயிற்சி பெற்றவர்கள் ஒளித்தோடினர். பிடித்து வந்து பலாலி இராணுவ முகாமில் வைத்து அடி, உதை பட்டிணி என்று பலரக சித்திரவதைகள்.

ரி.என்.ஏயில் ஒட்டுமொத்தமாக இணைந்த சிறு பான்மைத் தமிழர்கள் பாரம்பரிய ஏழைகள். சமூகத்தில் வளத்துடன் வசதியாக வாழ்ந்த உயர் சாதிமீது தமது அதிகாரத்தைக் காட்டத் துடித்தனர்.
உயர் சாதிதான் தங்கள் ஏழ்மைக்குக் காரணம் என்று செஞ்சட்டைக்காரர் தேர்தலில் வாக்குப் பெறுவதற்காகப் பரப்பிய துவேசம் அவர்கள் மனங்களில் உறைந்திருந்தது. உயர்சாதியினரை வெறுக்கத் தொடங்கினர். உற்சாகமாக வேட்டை ஆடினர். புலிகளின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தி தேடித்தேடி நாய் சுட்ட மாதிரிச் சுட்டனர். யாழ் சமூகத்தில் பெரும் பான்மையினர் பாரம்பரிய விவசாயிகள்--- கமக்காரர்கள். அரச உத்தியோகத்திலும் அவர்களே முதன்மை வகித்தனர். சமூகத்தில் ஓரளவு வசதியாக வாழ்ந்தனர்.
ஈ.பி,ஆர்.எல்.எப். கொலை வெறியாடல் யாழ் சமூக வரலாற்றில் அருவருப்பான கரும்புள்ளி. வடகிழக்கு ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். அந்த கொடுமையை பார்த்து வாளாவிருந்தது. அதிகார போதையில் எதிர் காலம் ஒன்று எழுந்து வரும் என்பதை மறந்து போயினர்.

பிள்ளைகளே,
அவர்கள் புரிந்த அக்கிரமத்துக்குச் சாட்சியங்கள் இரண்டு உங்கள் கவனத்திற்கு. தெல்லிப்பழை ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பைச் சேர்ந்த கில்லாடி என்பவன் ஆடிய கொலை வெறிப் பேயாட்டம் சொல்லப் போகிறேன்.

காலை பத்துமணி;. சனிக்கிழமை. மாவிட்டபுரம் தேர்முட்டியில் நாகமணியரின் பேரனும், கனகசபையரின் பேரனும். மச்சானும். மச்சானும்---பாடசாலை மாணவர்கள். கையில் புத்தகங்கள். அடுத்த தினம் பரீட்சை. வயது இருவருக்கும் பதினாறு. கறுப்புக்கட்டைக் காற்சட்டை. சேட் இல்லை. திடீரென இந்திய ராணுவ ரக் அரச மரத்தின் கீழ் நின்றது. கில்லாடியும், இன்னும் நால்வரும் குதித்தனர். தேர் முட்டிக்கு பாய்ந்து ஓடினர். கில்லாடியின் கையில் தானியங்கித் துப்பாக்கி. இருவரையும் கையில் பிடித்து இழுத்து தூக்கி வாகனத்துள் வீசினர். வாகனம் ஓட ஒட இரு பையன்களையும்---பெரிய சாதி நாய்கள் என்று பலவாறு வசைபாடி---காலால் உதைத்தனர்.
வாகனம் மயிலிட்டிவீதி வழியே ஒடிச் சென்று தையிட்டிபனை அடைப்புக்குள் தரித்தது. இருவரையும் வாகனத்திலிருந்து தள்ளி நிலத்தில் விழுத்தினர். கஷ்டப்பட்டு எழுந்து நின்றனர். பயத்தில் கண்கள் வெளியே பிதுங்கி சிவந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது.
'நீங்கள் தலைமறைவாயிருக்கிற புலிகளுக்கு, மரவள்ளித் தோட்டத்துக்குள் வைத்து சோத்துப் பார்சல் கொடுத்னீங்கள். எங்கேயடா ஒளிதிருக்கிறான்கள்?" கில்லாடி வினாவினான். 'தெரியாது அண்ணை." ஒருவன் பூவரசங் கொட்டனால் இருவரதும் முதுகில் விளாசினான். 'ஐயோ!. ஐயோ! அடியாதையுங்கோ அண்ணை.எங்களுக்குத் தெரியாது."

கில்லாடியின் துப்பாக்கி பேசியது. 'டும்! டும்!" நெற்றியில். நிலத்தில் தொம்மென விழுந்தனர். இரத்தம் சீறிக்கொண்டிருந்தது.
மாணவர்களைக் கடத்தியது கண்டு கூட்டம் ஒன்று வாகனத்தின் பின்னே ஓடிவந்தது. தூர வரும் பொழுதே வெடி பறிந்துவிட்டது. ஓடிவந்தவரில் ஒருவர் அந்தப் பையன்களின் நெருங்கிய உறவினர்.

இன்னொரு ஈ.பி,ஆர்.எல்.எப். கொடுங்கோன்மை. தெல்லிப்பழை தபாற் கந்தோருக்குள் துப்பாக்கியுடன் நுழைந்தான் கில்லாடி.பின்னே இன்னும் நான்கு பேர். வெளுறிய சிவப்பு சாரம். சிவப்பு சேட்.கையில் தடிப்பான கறுத்த துவரந்தடி. உழவு மாடு அடிப்பது.தபாலதிபர் கைதடி இராசையாவின் மேசையின் முன்னே நின்றான் கில்லாடி. துவக்கை நெஞ்சுக் நேரேநீட்டி 'புறப்படு விசாரணை இருக்குது." இராசையர் கதிரையைவிட்டு எழுந்து நின்றார். உதடுகள் துடித்தன. கண்கள் பயத்தில் கலங்கின. வினாவினார். 'என்ன விசாரணை?" 'துரோகி வரப்போறியோ? வெடிவைக்கவோ?"
இராசையர் சுற்றும் முற்றும் பார்த்தார். ஆறு அரச அலுவலர்கள். கதிரைகளில். படமெடுத்து ஆடும் பாம்பு பார்த்த முயல் குட்டி போல முழுசினர். எவரும் வாய் திறக்கவில்லை. விறாந்தையில் நின்ற வாடிக்கையாளர்கள் எமனின் பாசக் கயிற்றைப் பார்த்தது போல ஒடுங்கிப் போய் நின்றனர்.
இராசையரைச் சாய்த்துப் போய் வெளியே நின்ற காரில் ஏற்றினான். கார் மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் கிழக்கே திரும்பியது. மயிலிட்டி வீதியில் ஓடிக் கொண்டிருந்தது. வழியில் சிகரட்டால் முகத்தில் சுட்டான். 'டே நீ புலிகளின் ஆதரவாளன். அந்த துணிவிலேதான் கேட்ட காசு தர மறுத்தனியோ?" 'என்னிடம் அவ்வளவு காசு - இரண்டு இலட்சம் இல்லை. பத்தாயிரம் தாறன் என்னை விட்டுவிடுங்கள். உங்களைக் கும்பிட்டன் . உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்."
'புண்ணியம் கூழ் காய்ச்சவும் உதவாது. என்ன செய்யப் போகிறோம் தெரியுமா?"
'தெரியாது."
தொட்டால் தீட்டு என்று அவமானப்படுத்திய பெரிய சாதி நாயே! உன்னைச் சுட்டுக் கொன்று போட்டு போய் உன் பொண்டாட்டியிடம் சொல்லப் போகிறோம். உங்கள் புலிகள் சொல்வது போலவெள்ளைச் சேலைகட்டிக் கொண்டாடு.என்று."
கார் வீமன்காமம் கொலனி பனை அடைப்பு வீதியில் நின்றது. காரால் இறக்கி உள்ளே இழுத்துச் சென்றனர். சல்லி கிண்டுகிற பத்தடிப் பள்ளம். விளிம்பில் நிறுத்தினர். காவோலை ஒன்று அடி மரத்தை உராசி சுர்ர்ர்என்று ஓசை எழுப்பியபடி விழுந்தது. பறட்டைத் தலை ஒல்லியன் ஓடிப்போய் அதனை எடுத்து வந்து கருக்கினால் முதுகில் அடையாளம் வைத்தான். குருதி கசிந்தது.

கில்லாடி துப்பாக்கியை பிடரியில் பதித்தான். 'படார்".
உடல் முன் பக்கம் சரிந்து பள்ளத்துள் தொப்பென விழுந்தது. பள்ளத்தின் ஓரம் நின்ற கட்டாக்காலி நாய்களின் தொங்கும் நாக்குகளிலிருந்து வீணீர் வழிந்தது. பனைவட்டுள் இருந்தபடி காகங்கள் காகா என்று கரையத் தொடங்கின.

சங்கிலி ரி.என்.ஏயை வழிநடத்துகிற பலாலியில் அமைந்த இந்திய அதிகாரி கார்த்திக்கின் அலுவலகம் சென்றார்.
வாருங்கள் மிஸ்டர் சங்கிலி;. அமருங்கள்."
மிஸ்டர் கார்த்திக். ரி.என்.ஏ. இளைஞர்கள் கட்டுக் கடங்காமல் செயல்படுகிறார்கள். முறையிட வந்துள்ளேன்."
மிஸ்டர் சங்கிலி நீங்கள் என்ன பேசுகிறீர்கள். புலிகளை துரத்தித் துரத்திச் சுட்டுத் தள்ளுகிறான்கள். நேற்றும் நல்ல வேட்டை. மூன்று புலிகள். இரண்டொரு மாதத்தில் புலிகளை பூண்டோடு ஒழித்துப் போடுவான்கள்."
உங்களுக்கு யாழ்ப்பாணத்திலே ரி.என்.ஏ. என்ன செய்கிறது என்று புரியவில்லை. தாய்மார் தலையிலே அடித்து ஒப்பாரி வைத்தபடி கதறுகிறார்கள். இந்தியா பற்றி சமூகம் தவறாக எண்ணப் போகிறது. புலியை ஒழிக்கவில்லை. புலியென்ற போர்வையில் உயர்சாதியை தேடித் தேடிக் கொல்கிறார்கள்."
மிஸ்டர் நீங்கள் பேசுறது புரியவில்லை."
'படையில் நாம் சேர்த்திருப்பது பெரும்பாலும் சிறுபான்மைத் தமிழர்."
'யார் சிறுபான்மைத் தமிழர்?"
இந்தியாவில் தலித் என்றுகூறுவீர்கள். யாழ்ப்பாணத்தில் சாதி துவேசம் கொழுந்துவிட்டு எரிகிறது. அதைச் செய்தவர்கள் தென் இலங்கை மாக்சிய வாதிகள் தேர்தலில் வாக்கு சேகரிக்க உயர் சாதியே அவர்கள் ஏழ்மைக்குக் காரணம் என்று சொல்லி தலித் மக்களை உயர் சாதிக்கு எதிராக துவேசம் கொள்ள வைத்தனர்.; அந்த தலித் மக்களை டச்சுக்காரர் தமிழ் நாட்டில் மலிவான விலைக்கு வாங்கி, அடிமைகளாக யாழ்ப்பாணம் கொண்டு வந்து விற்றார்கள். அவர்களை விலை கொடுத்து வாங்கியவர்கள், புகையிலைத் தோட்டங்களிலும் பிற கூலித் தொழில்களிலும் பயன்படுத்தினர். காலகதியில் அவர்கள் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டு பணத்துக்குக் கூலி வேலை செய்து வாழ்ந்தனர். உயர் சாதியினர் வேலை வழங்கி உதவினரே தவிர அவர்கள் உழைப்பை உறிஞ்சிப் பஞ்சு மெத்தையில் படுக்க வில்லை. அந்தச் சிறு தோட்ட கமக்காரன் வேலை வழங்காதிருந்தால் பட்டினியில் தலித் சமூகம் முழுவதுமே இறந்து அந்த இடத்தில்பனைவிருச்சம் எழுந்திருக்கும்."

நீங்கள் புலியின் ஆள் போலப் பேசுகிறீர்கள். நீங்கள்தானே ரி.என்.ஏயின் தளபதி."
பெயரளவில். நீங்கள்தானே துப்பாக்கி வழங்கி ரி.என்.ஏயை வழிநடத்துகிறீர்கள். போராளிகளைக் கட்டுப் படுத்துங்கள். துப்பாக்கிகளைப் பறித்து எடுங்கள்."
மிஸ்டர் சங்கிலி, நான் தலைவர் பத்மநாபாவுடன் பேசுகிறேன்."

திடீரென சங்கிலி காணாமல் போனார். இரண்டு தினங்களாகின. பத்மநாபா வந்து விசாரணை நடாத்தினார்.
பத்மநாபாவை போராளி ஒருவன் அழைத்துப் போய் அறையைக் காட்டி விட்டு மறைந்து கொண்டான். இருண்ட அறை.முனங்கல் சத்தம். சங்கிலியோடு சேர ஒன்பது பேர் தலை கீழாகத் தொங்கினர்.

ஈ.பி.ஆர்.எல்.எப். செயலாளர் நாயகம் கே.பத்மநாபா தமிழ்நாடு சென்னையில் கோடம்பாக்கத்தில் தமது அமைப்பின் மத்தியகுழுக் கூட்டம் நடாத்திக்கொண்டிருந்தார். வடகிழக்கு மாகாணசபையின் அமைச்சர்களும் மற்றும் மத்திய குழு உறுப்பினர்களும் பங்குபற்றினர். உட்புகுந்த புலிகள் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் பதினைந்து பேர் கொல்லப்பட்டனர். மரணித்தவர்களுள் செயலாளர் நாயகம் பத்மநாபா, பாராளுமன்ற உறுப்பினர் யோகசங்கரி, மாகாண சபை அமைச்சர் கிருபாகரன், ஆசை அண்ணர் ஆயிலடி சங்கிலி என்போர் அடங்குவர்.

ஆசை அண்ணன் அவலச் செய்தி அறிந்ததும் என் நெஞ்சு வெடிக்கும் போலிருந்தது. ஓடிப்போய் பங்கருக்குள் பதுங்கினேன். தமிழ் ஈழ விடுதலைக்குப் புறப்பட்ட பையன்கள் பாதையிலே பண்ணிய கூத்து, அவர்கள் பலர் அந்தப் புனித கைங்கரியத்துக்கு லாயக்கற்றவர்கள் என்று பிரகடனப்படுத்தியது. நான் என் கருத்தை எவருக்கும் மூச்சுவிடவில்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~ இன்னும் வரும்...

No comments:

Post a Comment