Saturday, 7 November 2015

வெங்கட் சாமிநாதனனுடன்…


நாளையைப் பற்றி என்ன நிச்சயமாகச் சொல்லமுடியும்…

பொதுவாக ஒரு புத்தகத்தை எடுத்தவுடன் நான் முதலில் வாசிப்பது அதன் உள்ளடக்கம் அல்ல. அணிந்துரை, முன்னுரை, முன்னீடு இவைகளைத்தான் படிப்பேன். இவைகள்தான் புத்தகத்தை தூக்கி நிறுத்துபவை. இவற்றை வைத்துக் கொண்டு ஓரளவிற்கு புத்தகத்தை எடை போடலாம்.

ஒவ்வொருத்தருக்கும் அவருடைய புத்தகம் பெரிது.

நான் எனது ’சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு முதுபெரும் எழுத்தாளர், விமர்சகர் வெங்கட் சாமிநாதனை முன்னுரை எழுதுவதற்காக அணுகினேன். அவரை நான் ஏன் தெரிவு செய்தேன் என்பதற்கு ஒரு காரணம் இருக்கின்றது..

 இந்தியாவில் இருந்து வெளிவரும் ‘வல்லமை’ என்ற மின்னிதழ் 2012 ஆம் ஆண்டு ஒரு சிறுகதைப் போட்டி ஒன்றைஒரு வருட காலமாக நடத்தியது. மாதாமாதம் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்தவற்றைத் தெரிவு செய்து கருத்துக் கூறினார் வெ.சா. முதல்மாதம் (ஆகஸ்ட்) வந்த கதைகளில் என்னுடைய சிறுகதையைத் (காட்சிப்பிழை) தெரிவு செய்து கருத்துக் கூறியிருந்தார். அவர் கூறிய கருத்துகள் :

(ஐக்கியா & வல்லமை சிறுகதைப் போட்டி

ஆகஸ்ட் (2012) சிறுகதைகள்

வெங்கட் சாமிநாதன்

வணக்கம். வல்லமைக்கு இந்த மாதம் வந்த மொத்த சிறுகதைகள் 18.  அவற்றில்நான் சிறந்ததாகக் கருதும் கதையைத் தேர்வு செய்யச் சொன்னீர்கள். தேர்வு, சிறந்தது, நன்றாக எழுதப்பட்டது என்ற முடிவுகள் எல்லாம் அவரவரது சுயம். இந்த அடிப்படைப் பார்வையை ஒத்துக்கொண்டால், எனக்குப் பட்டதைச் சொல்வது சிறந்தது என்று ஏதும் ISI முத்திரை குத்தும் விவகாரம் இல்லை. என்பது புரிந்தால், தேர்வு செய்யப்பட்ட கதையை எழுதியவர் புளகாங்கிதம் அடைய வேண்டியதில்லை. மற்றவர்கள் மனம் சோர்ந்துவிட வேண்டியதில்லை. இதெல்லாம் பால பாடங்கள். ஆனாலும் தமிழர்கள், தமிழ்ச்சூழல் எல்லாம் தொட்டாச் சுருங்கிகள். அவர்களுக்குத் தெரியுமோ என்னவோ, டால்ஸ்டாய் என்னும் ஒரு சிகரம் ஷேக்ஸ்பியர் என்னும் இன்னொரு சிகரத்தைக் காய்ச்சு காய்ச்சு என்று காய்ச்சியிருக்கிறார்.
இந்தப் பதினெட்டு கதைகளில் சில புதிய பார்வைகளை தந்தவர்கள் உண்டு அவர்கள் லட்சிய உலகை முன்னிறுத்துகிறார்கள். சிலர் ஒப்புக்கொள்ளப்பட்ட மதிப்புகளைத் திரும்பச் சொல்கிறார்கள் சிலர்  அலங்கார வார்த்தைகளை, உணர்ச்சிப் பெருக்கெடுத்துக் கொட்டுகிறார்கள். வார்த்தைகள் வெள்ளமாகப் பெருக்கெடுக்கின்றன. யார் யார் எந்தக் கதை என்று நான் சொல்லவில்லை.
இவற்றில் எல்லாம் சுதாகர் எழுதியுள்ள காட்சிப் பிழை என்ற கதை, நாடு இழந்தாலும், வாழ்க்கை சிதைந்தாலும், மனித சுபாவம் மாறுவதில்லை. அது நாடு கடந்தாலும், வாழ்க்கையின் கடைசிப் படியில் இருந்தாலும், வெறுப்பையும், தன் ego -ஐயும் துறக்கத் தயாராயில்லை. இது வாழ்க்கையின் யதார்த்தம். மன்னிக்கத் தயாராக இருக்கும் அமீரும் தனனை அவமானப்படுத்திய மாமாவை மன்னிக்கத் தயாராக இலலாத பாலாவும், அப்பாவுக்காகவாவது எல்லாத்தையும் மறந்து ஒரு வார்த்தை சொல்லாமே என்னும் செல்வியும், மரணப்படுக்கையிலும் தன் வீராப்பை மறக்காத தெமெட்ட கொட மாமாவும் அவரவர் இயல்புப்படி நம் முன் காட்சிப்படுத்தபடுகிறார்கள். அனாவசிய வார்த்தைகள் இல்லை. செயற்கையாக சித்தரிக்கப்பட்ட லட்சிய நோக்கு இல்லை. உணர்ச்சிக் கொப்பளிப்பு இல்லை. மனித சுபாவம் சிலரது மாறுவதே இல்லை. சூழலும் வாழ்க்கையும் என்ன மாற்றம் பெற்றாலும். சிக்கனமான எழுத்து. இயல்பான மனிதர்கள்.
இங்கு  தான் சுதாகர் எழுத்தை நான் முதன் முதலாகப் பார்க்கிறேன். இனி அவர் எழுத்தை எதிர் நோக்கியிருப்பேன் )

இதன் பின்னர்தான் அவருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, என்னுடைய சிறுகதைத் தொகுப்பிற்கான முன்னுரையை எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டேன்.

அந்தக்  காலப்பகுதியில் அவர் சுகவீனமாக இருந்திருக்கின்றார். அது பற்றி அவர் எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.
(  ஜலதோஷத்தினால் இருமலினால் அவதிப்பட்டது எப்போது என்று எண்ணிப் பார்க்கிறேன்.  நினைவுக்கு வரவில்லை. ஆக, for decades வராத கஷ்டங்கள் இப்பொழுது வருகிறது என்றால், நாளையைப் பற்றி என்ன நிச்சயமாகச் சொல்லமுடியும். எண்பது வயதில் உடம்பு எல்லா வலுவையும் இழந்துவிடுகிறது.செயலிழந்தது செயலிழந்தது தான். spare parts இதுக்கு ஏதும் கிடைக்காதே.)

அவர் எனது கதைகள் பற்றிய கருத்தினை எழுதி ‘புலம்பெயர் வாழ்க்கை’ என்ற தலைப்பில் கணையாழிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அது வெளிவரும்வரை வேறு எங்கிலும் பிரசுரிக்கக்கூடாது என்ற ஒரு நிபந்தனையும் போட்டிருந்தார்.

(அன்புள்ள சுதாகரன்,

வெகு நாட்கள் காத்திருக்க வைத்துவிட்டேன். தவிர்க்கமுடியாது நேர்ந்துவிட்டது. மன்னிக்கவும்.
இத்துடன் உங்கள் கதைகளைப் பற்றி எழுதிவிட்டேன். எழுதி, வரும் மாதம் நான் கணையாழி பத்திரிகைக்கு மாதாமாதம் எழுதி அனுப்ப வேண்டிய எழுத்தாக, உங்கள் கதைகளைப்பற்றி எழுதியதை அனுப்பி விட்டேன். வரும் பிப்ரவரி மாத இதழில் அல்லதுஅடுத்த மார்ச் மாத இதழில் அது பிரசுரமாகலாம்.
இத்துடன் நான் எழுதி அனுப்பிய கட்டுரையை உடன் வைத்திருக்கிறேன்.
கணையாழியில் வெளிவந்ததும் உங்களுக்குத் தகவல் தருகிறேன். அதுவரை காத்திருக்கவும். கணையாழியில் வெளிவருவதற்கு முன்னால் வேறு எங்கும் அது பிரசுரமாகக் கூடாதுஅதான் விஷயம்.

அன்புடன்,
வெ.சா.)

கணையாழியில் வெளிவருவது எனக்கும் மகிழ்ச்சியைக் தந்தது. அடுத்த மாத கணையாழியில் அது வெளிவந்தது. அதுவே இந்தக் கதைத்தொகுப்பின் முன்னுரை ஆகியது.

அதன் பின்னரும் எமக்குள்ளே கடிதப் போக்குவரத்து இருந்தது.

தனது இறுதிக்காலத்தில், எழுத்துலகில் பிரகாசிக்கக் கூடியவர்கள் என்று தான் நினைத்த பலரை அறிமுகம் செய்துவிட்டுப் போயிருக்கின்றார். அதில் அனேகம் பேர் இளைஞர்கள்.

 அவர் ஈழத்தவர்களுடனும், ஈழத்து எழுத்தாளர்களுடனும் அன்பாக இருந்திருக்கின்றார். குறிப்பாக கருணாகரமூர்த்தி, வ.ந.கிரிதரன், திருமாவளவன், தேவகாந்தன் போன்றவர்களுடன் நட்பு பேணி வந்துள்ளார். ஒரு காலத்தில் எமது எழுத்துகளைப் படிப்பதற்கு குறிப்பு தேவை என்றவர்கள், இன்று எமது எழுத்துகளைப் படிக்கின்றார்கள். பாராட்டுகின்றார்கள். தூக்கி விடுகின்றார்கள்.

அதற்கு இணைய வெளியும் புலம்பெயர் வாழ்க்கையும் உதவி புரிகின்றன.

அவர் ஃபேஸ்புக்கைக் பற்றி ஒருமுறை  இப்படிக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

(நீங்கள் சொன்னது போல, நான் அதிகம் ஃபேஸ்புக் பக்கம் போவது கிடையாது. ஆனால் எப்போதாவது பார்ப்பேன்,. அதனால் ஃபேஸ்புக்கின் விவரங்கள் மறந்து விடுகின்றன. அடுத்து இன்னொரு பிரசினை. என் ஃபேஸ்புக் பக்கத்தில் என்னென்னவெல்லாமொ யார் யாரோ கொட்டிவிட்டுப் போகிறார்கள். இதை எப்படி தடுப்பது என்றும் தெரியவில்லை. தடுக்கும் வழி தெரிந்து தடுத்தால், இப்படிக் கொட்டிப் போகிறவர்கள் சில நல்ல விஷ்யங்கள் நல்ல தொடர்புகளும் கிடைத்து விடுகின்றன. என்ன செய்வது என்ற தடுமாற்றம். ஃபேஸ்புக்கை முற்றாக விடவும் முடியவில்லை. முற்றாக அரவணைக்கவும் முடியவில்லை. முதுமையின் கோளாறுகள் தான்.)

அவரை இந்தியா சென்று பார்ப்பதற்கு விரும்பியிருந்தேன். முதுமை காலத்திலும் நேரத்தை ஒதுக்கி, என்னுடைய கதைகளைப் படித்து முன்னுரை எழுதியமைக்காக அவருக்கு ஏதாவது கைமாறு செய்ய விரும்பியிருந்தேன். அதுபற்றி அவருக்கு ஒரு கடிதம் எழுதியபோது,

(இதெல்லாம் எதற்கு சுதாகரன்? ஒரு நல்ல எழுத்தைப் படிக்க எனக்குக் கிடைத்த வாய்ப்பும், அதைப் பற்றி எழுதக் கிடைத்து மற்றவர்ககுச் சொல்லக் கிடைத்த வாய்புமே பெரிய விஷயங்கள். தொடர்ந்து எழுதுங்கள்அடுத்த தலை முறை புலம்பெயர்ந்தோரின் அடுத்த தலைமுறை தமிழ்பேசுமா, தமிழிலெழுதுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. தமிழ் நாட்டின் இன்றைய தலைமுறைக்கே, அரசியல்வாதிகளின் தமிழ் வெறிக்கூச்சலுக்கிடையேயும் தமிழ் மறைந்து பாழ்பட்டு வருகிறதுசென்னையில் அல்லது தமிழ் நாட்டில் எந்த ஊரிலும் தொலைக்காட்சியிலும் பாருங்கள். தமிழ் மறைந்து  வருகிறது. மிஞ்சிய தமிழிலும் அசிங்கப்பட்டு வருகிறதுநாகரீகமும் பண்பாடும் மறைந்து  பொருளீட்டலே பெரிதாகி கூச்சல் அதிகமாகி வருகிறது. என்ன செய்ய?
இவற்றிற்கு இடையில்,
நாம் சந்திக்கும் தினத்தை ஆவலுடன்  எதிர்பார்த்திருப்போம்.)

அவரைச் சந்திக்க முடியாமலே போய்விட்டது.






No comments:

Post a Comment