Sunday 22 November 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 22 - கடவுளின்  கட்டளை
  
            சொலிசிற்றர் நாகப்பனின் அலுவலகத்துக்கு எதிர்ப்பக்கம் உள்ள தங்கு நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேருந்தில் பூமாவுக்கு முன் ஆசனத்தில் மூத்தான் மனைவி இருந்தாள். மூத்தான் மனைவி எப்பொழுது வம்பிற்கு இழுப்பாளோ என்ற பயத்தில், படமெடுத்த பாம்பைக் கண்ட முயல் குட்டி போல பூமா நடுங்கிக்கொண்டு இருந்தாள்.

            நேரம் பிற்பகல் இரண்டு மணியைக் கடந்துவிட்டது.

            பேருந்து புறப்படும் பொழுது பூமா கண்ணாடி ஊடாக வெளியே பார்த்தாள். 'எப்போது குழந்தை வீதியின் மறுபக்கம் போனது? மூத்தானின் குழந்தை வீதிக்கு மறுபக்கத்தில் நின்று கோலா குடிக்கும் ஒருவனின் வாயை அண்ணாந்து  பார்த்துக்கொண்டு நின்றது. பூமாவுக்குப் பரிதாபம் அலைமோதியது. சற்று உடம்பை நிமிர்த்தி முன் ஆசனத்தில் இருந்த மூத்தான் மனைவியின் முதுகைத் தட்டி,
உங்கள் குழந்தை ......... " என்று சொல்லி முடிக்க முன்பே மூத்தான் மனைவி ஆசனத்தைவிட்டு எழுந்து, திரும்பிப் பூமாவைப் பார்த்து முறைத்து ஆவேசமாகக் கத்தினாள்.  

            “பரத்தை. நீங்கள் எல்லாரும் சேர்ந்து என் குடும்பத்தையே கருவறுத்துப் போட்டியள். என் பிள்ளைகளும் நானும் இப்ப நடுத் தெருவிலே நிற்கிறம். நாசமாப் போவீர்கள். நரகத்துக்குப் போவீர்கள். நான் உங்களுக்கு என்னடி கெடுதல் செய்தனான்? என் பிள்ளைகள் உங்களுக்கு என்னடி செய்ததுகள்? உங்களைக் கோதாரிதான் கூட்டத்தோடு அள்ளிக்கொண்டு போகும்." என்று திட்டித் தீர்த்த மூத்தான் மனைவி, எட்டிப் பூமாவின் கூந்தலில் பிடித்து உலுப்பினாள். பூமாவின் பக்கத்தில் இருந்த ஒரு நீக்கிறோ மனுசி சத்தம் போட்டுப் பிடியை விடுவித்தாள். அவளின் கையோடு போன பூமாவின் சிவப்புச் சிலைட்டை இறாஞ்சிப் பூமாவிடம் கொடுத்தாள். அது உடைந்திருந்தது.

            பேருந்தில் இருந்த பெண் பிரயாணிகள் மூத்தான் மனைவியை நோக்கி எச்சரிக்கைகளை ஏவினர். ஆண்கள், பெரும்பாலும் வெள்ளைகள். அவர்கள் நீலச் சேலை அணிந்த அந்த ஆசிய மனுசியை ஆவென்று பார்த்தனர்.

            பேருந்து, தங்கு நிலையங்களில் நின்று நின்று பிரயாணிகளை இறக்கி ஏற்றி ஓடியது.

            மூத்தான் மனைவி தான் இறங்க வேண்டிய இடம் வந்தும் இறங்கவில்லை. அது பூமாவுக்குத் தெரியும். அவள் ஊமை போலப் பேசாதிருந்தாள். அடுத்து வந்த தரிப்பில் பூமா இறங்கி நடைபாதை நீளத்துக்குப் போய்க்கொண்டு இருந்தாள். மூத்தான் மனைவியின் பிரயாணம் தொடர்ந்தது. அவள் எங்கே போகிறாள்? அவளுக்கே தெரியாது.

            வழமையில் பூமா வெளியே போய் வரும் பொழுது புகையிரத நிலையத்துக்கு முன் உள்ள ஸ்ரேசன் சுப்பர்ஸ்ரோஸ் தமிழ் கடையில் பால் வாங்குவது வழக்கம். அன்று கடையைப் பார்த்த போதும்; அவளுக்கு அந்த ஞாபகம் வரவில்லை. பேருந்தில் அந்த விசர் மனுசி நடந்து கொண்ட விதம் அவள் கண்களைப் பனிக்கச் செய்தது. அதைவிட அவள் நாகப்பனின் அலுவலகத்துக்கு எதிர்ப்பக்கம் உள்ள பேருந்து தங்கு நிலையத்தில் வைத்து அமிரைப் பற்றிக் கூறிய வார்த்தைகளின் மறு ஒலிபரப்பு பூமாவின் காதுகளைத் துளைக்கத் தொடங்கின.

            “அந்த நாய்ப் பயல் என்ன செய்திருக்கிறான் தெரியுமா? ………………….   ……………………..அறுவான் குடியோடு பற்றி எரிவான். அந்தப் பெட்டைக் கள்ளனைக் கண்டால் நான் அவனுக்குப் பாடம் படிப்பிக்காமல் விடமாட்டேன்."  

            மறு ஒலி பரப்பு இன்னும் முடியவில்லை. பூமா வீதியோர நடை பாதை வழியே வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தாள். வழியில் எதிர்ப்பக்க நடை பதையிலிருந்து அவள் சிநேகிதி குமுதா குரல் கொடுத்தாள். அவளுக்குக் காதில் விழவில்லை. அந்தக் கிசுகிசு செய்திகள் பூமாவைக் கிண்டிக் கிளறிக் குதறின.

            'விசா கிடைத்ததை ஏன் அமிர் எனக்குச் சொல்லவில்லை? எந்த நேரமும் அவருக்கு நதியாபற்றிய பேச்சும் நினைப்புந்தான். 'நதியா சிப்பியில் பிறந்த முத்து. பெண் குலத்தின் சிகரம்என்று மருந்து மாயத்துள் சிக்கியவர் போல் ஏன் அமிர் அலம்புகிறார். தாயைப் பற்றிய அக்கறை இல்லை. எவளோ எழியவள் பற்றிய பயித்தியந்தான். நெருப்பில்லாமல் புகையாது. அப்போ ஜீவிதாவை .......! அதுதான் அவர்கள் இப்போ முன்னரைப் போல அவ்வளவு நெருக்கம் இல்லையோ? ஜீவிதாவுக்கும் தெரியுமோ? அதுதான் அன்று பொலிஸ் பிடித்தது என்று சொன்ன போது எதுவித அக்கறையும் காட்டாமல் இருந்தவளோ? என்று எண்ணிய பூமா 'மூத்தான் அக்கா பெட்டைக் கள்ளன் என்று சொன்னது சரிதான் போல. நான் அவதானமாக நடக்க வேண்டும். அமிரோடு தேவை இல்லாமல் பேச்சு வார்த்தை வைப்பதை இனி நிறுத்தவேண்டும்”  என்று பூமா தன்னுள் முணுமுணுத்தாள்.

            இனிமேல் அமிரோடு கதை பேச்சு வைப்பதில்லை என்ற வைராக்கியத்தோடு நடந்து சென்று கதவைத் திறந்து வீட்டுள் காலடி வைத்து வரவேற்பறைக்குள் புகுந்தாள் பூமா. அமிர் கடிதம் வாசித்துக் கொண்டிருந்தான். அவளைக் கண்டதும் தலையை நிமிர்த்தி

ஹலோ பூமா, என்ன முகத்தில் புதிய கேள்விக் குறிகள்? நெடுந்தீவிலிருந்து எதாவது கெட்ட செய்திகள்? தலையும் வழமைக்கு மாறாகச் சிலம்பிக் கிடக்குது. எங்கே உன் சிவப்புச் சிலைட்?" என்று கேட்டு விட்டு அவளைப் பாராமல் தொடர்ந்து கடிதத்தை வாசித்தான்.
அப்படி ஒன்றும் இல்லை" என்று கூறிய பூமா சோபாவில் இருந்த கடித உறையைப் பார்த்தாள். அது நதியாவின் கடிதம் என்று ஊகித்தாள். அப்பொழுது அமிர் தலையை நிமிர்த்தாமலே,
பொய் சொல்லாதே பூமா" என்றான்.
நான் ஏன் பொய் சொல்லவேண்டும்? அதைவிடுங்கள். எங்கிருந்து கடிதம்? அதில் என்ன அவ்வளவு இனிக்கிற விடயம்?"

            பூமா தனது வெறுப்பை வார்த்தைகளுக்குள் மடக்கி வைத்துக் கேட்டாள். அவள் பொடி வைத்துக் கதைத்தது தொண்டைக்குள் வேப்பெண்ணெய் ஊற்றியது போல இருந்தது. அமிர் அதனைக் காட்டிக் கொள்ளாமல்,
ஏன் கேட்கிறாய்?" என்றான் அமிர்.
அம்மாவிடமிருந்தா என்று அறியக் கேட்டேன். யாழ்ப்பாணப் புதினம் எழுதியிருப்பாரே?" அவளுக்குத் தெரியும் கடிதம் பாரதமாக இருப்பதால் அது நிட்சயம் நதியாவிடம் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று. ஆனால் குத்தலாகவே அம்மாவிடமிருந்தா என்று வினாவினாள்.
இல்லை. நதியாவிடமிருந்து."

            ‘ அந்த ஓடிப்போன சின்ன நட்சத்திரம் திருமதி நதியா கில்லாடியா? அம்மணி என்ன எழுதியிருக்கிறாள்? வாருங்கோ இந்தியாவுக்கு. என்னால் உங்களைக் கண்ணிலே வைக்காமல் இருக்க முடியவில்லை. உங்கள் எடுப்பான மூக்கும் நடுவடுகிட்ட முடியும் என்னை ஏதேதோ செய்கின்றன. இரவில் நிதத்திரை வருகிறதில்லை. விசாக் கிடைத்துவிட்டதா? கிடைத்தால் உடனே வாருங்கள் இந்தியாவுக்கு. நாங்கள் விருப்பம் போலப் பசியாறலாம்என்று எழுதியிருக்கிறதா என்று கேட்கவே பூமா விரும்பினாள். ஆனல் அப்படி நெத்திக்கு நேரே கேட்பது முறை அல்லவெனப்பட்டது. அப்படிக் கேளாது
அப்படியா?” என்றாள்.

ஓம். எனக்கு அகதி அந்தஸ்து கிடைத்துவிட்டது. கடிதம் அனுப்பி யிருக்கிறார்கள். கடவுச் சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளேன். எனக்கு இங்கே முக்கிய வேலை ஒன்று இருக்கிறது. அது முடிந்ததும் முதல் வேலை இந்தியாவுக்குப் போய், அங்கிருந்து கடவுச்சீட்டுச் செய்துகொண்டு களவாக இலங்கைக்குப் போய் நதியாவைப் பார்ப்பதுதான்."
நதியா இந்தியாவில் இல்லையா?”
இல்லை.”
வேறெங்கே?”
இலங்கையில் - வன்னியில்.”
அவளைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். ஏன் அமிர், புறத்தியிலே தள்ளி வைக்கிற நதியாவில் அவ்வளவு அக்கறையும் பாசமும்?"

'அவள் குறைந்தவள். அவளோடு நட்பா?' என்று நெத்திக்கு நேரே கேளாமல் புறத்தியிலே தள்ளி வைக்கப்படுபவள் என்று கூறினாள்.

அவள் ஓர் இலட்சியப் பெண். வரலாற்று நாயகி. தனக்கென வாழாதவள்." அமிரின் வார்த்தைகளில் இறுக்கம் தொனித்தது.
அப்படியானால் யாருக்காக வாழ்கிறாள்?" அவள் வார்த்தைகளில் கிண்டல் வழிந்தது.

            அமிருக்கு விளங்கியது பூமா தன்னை ஏளனம் செய்கிறாள் என்பது. நதியாவின் பேச்சை எடுக்கும் போதெல்லாம் பூமாவின் முகம் மாறுவதை அவன் முன்னரும் சில தடவைகளில் அவதானித்து இருக்கிறான். அவளின் சந்தேகத்தைப் போக்க விரும்பிக் கையில் இருந்த கடிதத்தின் ஒரு தாளை அவளிடம் நீட்டி
பூமா இதோ இதை வாசி. நதியா எழுதியது. அவள் யாருக்காக வாழ்கிறாள் என்பது புரியும்" என்றான்.

            அமிர் கடிதத்தைக் கொடுப்பான் என்று பூமா கனவிலும் எண்ணவில்லை. இரு கை விரல்களையும் விரித்துப் பக்க வாட்டில் அசைத்து,
இல்லை. இல்லை. ஒருவருக்கு வந்த கடிதத்தை இன்னொருவர் வாசிப்பது முறையல்ல. அநாகரிகம்" என்றாள்.

            'அது காதல் கடிதம் இல்லையோ? அப்படியென்றால் என்ன பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறாள்?” அதனை அறிய அவள் மனம் அலை அடித்தது. அதனை வெளிக்காட்டுவது பண்பல்ல என்பதால்,
வேண்டாம் அமிர்" என்றாள்.
பரவாயில்லைப் பூமா. நீ ஏதோ தப்பாக நினைக்கிறாய். இதை வாசி. உன்னைப் பிடித்திருக்கிற பசாசு ஓடிப்போகும்."

            அமிருக்குத் தான் சந்தேகப் படுவது தெரிந்துவிட்டது என்பதை எண்ணியபோது பூமாவுக்கு அந்தரமாய் இருந்தது. இருப்பினும் அவர்களுக்கிடையில் என்னதான் ஒட்டுகிற மர்மம் உள்ளது என்பதை அறிய அவா தூண்டப் பூமா கடிதத்தை வாங்கினாள்.

            பூமா கடிதத்தின் இரண்டாவது பந்தியை உரத்து வாசிக்கத் தொடங்கினாள்.

            “மக்களுக்கு சேவை செய்யத் தங்களைக் கடவுள் பணித்துள்ளார் என்று மதவாதிகள் யாராவது சொன்னால், அது அவர்களுக்கும் அவர்களுடைய கடவுளுக்கும் இடையிலான விடயம். அப்படியல்ல நாங்கள். நாங்கள் கறுப்பு நரி விடுதலைப் போராளிகள். தலைமை எங்களை என்ன சேவைக்காக அழைத்தாலும் அதனை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவதே எமது திருப்பணி. சிங்கள இனவெறி அரசாங்கத்தின் தொடர்ந்து வரும் கொலை கொடுமை கொடூரங்களினால் செத்து மடிந்து நித்தம் அல்லலுறும் ஈழத் தமிழ் இனத்தின் நிரந்தர விடுதலைக்காகச் சேவை செய்ய நான் அழைக்கப்பட்டுள்ளேன். எமது மண்ணின், இனத்தின் விடிவிற்காக எனது உயிரைத் தியாகம் செய்ய உறுதிமொழி கொடுத்துள்ளேன். கறுப்பு நரி இயக்கத் தலைவர்தான் எனது கடவுள். அவர் இடும் திருக்கட்டளையை தலைமேல் சுமந்து நிறைவேற்றுவதே எனது கடமை. அந்த புனித கைங்கரியத்துக்காகவே நான் சொர்க்கபுரியான லண்டனை விட்டு வெளியேறினேன். அவர் இடும் கட்டளையை தராசில் வைத்து முள் எந்தப் பக்கம் சாய்கிறது என்று கூர்ந்து பார்ப்பது எனது வேலை அல்ல. அவர்  தேகத்தைச் சுற்றி வெடிகுண்டைக் கட்டிக்கொண்டு போவென்று கட்டளை போட்டால், அந்தக் கடமையைச் செய்யத்தான் எனக்குத் தெரியும். எனக்குத் தீர்ப்பு வழங்கத் தெரியாது. ஏன் எதற்கு என்று வழக்காடுவது எனது பணி அல்ல. அது எனது புனித இலட்சியத்துக்கு களங்கம் ஏற்படுத்தும்.” 

            கடிதப் பந்தியை வாசித்ததும் பூமா அமிரையும் கடிதத்தையும் மாறி மாறிப் பார்த்தாள். வார்த்தைகள் உலகந் துறந்த ஞானிகளின் வார்த்தைகள் போல அவளது உள்ளத்தை நெகிழ வைத்தன. கொதிக்கும் வெப்பப் பாலைவனத்தில் மின்னாமல் முழங்காமல் சோனாவாரியாக மழை கொட்டியது போல இருந்தது. எழுத்துக்கள் கூட இலுப்பைப் பூப்போல ஒரேசீராக அழகாக இருந்தன.

இது யார் எழுத்து?"
நதியாவின்."

அமிர் சிரித்தான்.
ஏன் சிரிக்கிறீர்கள்?"
இந்தா இன்னும் ஒரு கடிதத் தாள். இதையும் வாசி. உனது சந்தேகப் பேய் முற்றாக ஓடிப்போய்விடும்."

            பூமா அவசர அவசரமாக வாசித்தாள்.

            “நாம் தமிழ் இனத்தின் விடுதலைக்காகப் பேராளியாக மாற விரும்பினால் எமது வாழ்க்கையைப் பற்றித் தீர்க்கமான உறுதி வைத்திருக்கவேண்டும். ஒருவன் துறவி என்றால் கடவுளுக்கு அடுக்காதது எல்லாவற்றையும் அவன் துறந்துவிடவேண்டும். செயற்கைப் பொருட்கள்மீதான நாட்டத்தைக் களைந்துவிட வேண்டும். அவன் விருப்பங்கள் ஆசைகள் பற்றுக்களைத் துறந்து உறவுகளைப் பிரிந்து புனிதமாக வாழவேண்டும். அதே போலத்தான் நான் ஓர் இனவிடுதலைப் போரளி என்றால், நான் உலகப்பற்றை விட்டு விடவேண்டும். ஆசைகளைக் களைந்துவிடவேண்டும். உற்றார் உறவுகளை மறந்துவிட வேண்டும். எனது ஒரே இலட்சியம் இனவிடுதலைப் போரின் வெற்றியை நோக்கிய பயணமே. அது வீர சொர்க்கத்தை நோக்கிய பயணம். அந்தப் பயணத்தை வழிநடத்தும் தலைவன்தான் எனது இறைவன். அவனது கட்டளையைச் சுமப்பதே எனது திருப்பணி. எனக்கு ஒரு இறுதிப் பணி சொல்லப்பட்டுள்ளது. கொழும்பு செல்லும் அந்த நன்னாளை நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். அது தமிழ் மண் விடுதலைக்காக பணியாற்ற எனக்குக் கிடைக்கவிருக்கும் அரிய வாய்ப்பு. எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்பல்ல. என் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படவேண்டும் என்பதல்ல என் நோக்கம். கல்லறையில்கூட எனது நாமம் பொறிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. பெயர் தெரியாத போராளி ஒருத்தியாகவே இருக்க விரும்புகிறேன். தமிழ் ஈழம் விரைவில் மலரவேண்டும், சதா இன்னலில் உழலும் தமிழ் மக்கள், சுதந்திர தமிழ் ஈழ மண்ணிலே கவலை ஒழிந்து மகிழ்ச்சியாக - சுதந்திரப் பறவைகளாக வாழவேண்டும் என்பதே என் ஒரே கனவு."

            வாசித்து முடித்த பின்னரும் அந்த அற்புத மொழிகளில் இருந்து தனது கண்களை பூமாவால் விடுவிக்க முடியவில்லை

            அந்தப் புனித வாசகங்களுக்கு அவ்வளவு மேன்மையான சக்தியா? பூமாவின் ஐயங்கள் வெம்மை அமுக்கிய பனிபோல மறைந்தன. அவள் தன்னையே நொந்தாள். தான் செய்த தப்பை எண்ணியபடி தலையைத் திருப்பித் தொலைக் காட்சிப் பெட்டியின் மேல் இருந்த குரங்குப் பொம்மையைப் பார்த்தாள். அது ஞானம் பெற்ற தபசி போல அவளுக்குத் தெரிந்தது.

            அவளது உள்ளம் பூவரசம்பூச் சுவர் போல தெளிவாகப் பிரகாசிக்கத் தொடங்கியது.

ஏன் நதியா உப்படி ஒரு முடிவுக்கு வந்தாள்?"
எல்லாவற்றுக்கும் கில்லாடிதான் காரணம்."

அமிரின் பதில் அவளுக்கு மேலும் புதிராக இருந்தது.

என்ன சொல்கிறீர்கள் அமிர்? எனக்கு ஒன்றும் புரியவில்லை."
கில்லாடி லண்டனுக்கு வரமுன்னர் யாழ்ப்பாணத்தில் கழுதைப்புலி இயக்கத்தில் இருந்தது உனக்குத் தெரியுமா?"
தெரியாது."
அக்காலத்திலே தெல்லிப்பழைப் பிரதேசப் பொறுப்பாளியாக இருந்து கில்லாடி செய்த அக்கிரமங்கள் அட்டூழியங்கள் எத்தனை எத்தனையோ? அதன் விளைவுதான், நதியாவின் பயணம்."
என்ன விளைவு?" என்று கேட்டவள் அவனது விடையை ஆவலோடு எதிர் பார்த்தாள்.

முருகன் கோவிலில் வெள்ளிக் கிழமைகளில் ஒரு பெண்பிள்ளை அழுதழுது தேவாரம் பாடும். இருபத்தாறு வயதிருக்கும். உன்னளவு உயரம். உன்னிலும் கொஞ்சம் கறுப்பு. வசீகரமான முகம். நீண்ட கூந்தல். பார்த்திருக்கிறாயா?"
ஓம். பார்த்திருக்கிறேன். பெயர் தெரியாது."
அவள் பெயர் சுகிர்தா. அவளுடைய தகப்பன் தெல்லிப்பழைப் தபாற் கந்தோரில் போஸ்ற் மாஸ்டராக இருந்தவர். பெயர் ராசையர். அவரைச் சுட்டு வீமன்காமம் கொலனிக்குள் வீசியதும் கில்லாடிதான். அது தெரியுமே பூமா?."
தெரியாது. சுகிர்தாவுக்குத் தெரியுமோ கில்லாடிதான் தன் தந்தையைக் கொன்றவன் என்று."
ஓம். நல்லாகத் தெரியும். அடிக்கடி லண்டன் வீதிகளில் பென்ஸ் காரில் கில்லாடி செல்வதை அவள் பார்த்திருக்கிறாள். கோவிலில் நதியாவோடு சேரவும் பார்த்திருக்கிறாள். தெரிந்தென்ன? சுகிர்தாவுக்கு மட்டுமல்ல, லண்டனில் வசிக்கும் சுகிர்தாவின் உறவுகளுக்கும் தெரியும் கில்லாடிதான் ராசையரைச் சுட்டுக் கொன்றவன் என்று. இன்னும் ஒன்று முக்கியம். கில்லாடிக்கும், தேவாரம் பாடும் அவள், தான் சுட்டுக் கொன்ற ராசையரின் மகள் என்பதும் தெரியும்."

சட்டம்?" எனக் கேட்ட பூமாவின் கண்கள் சிவந்தன. பூமா தான் சுமக்கின்ற வேதனையைவிட சுகிர்தாவின் வேதனை பலமடங்கு போல அவளுக்குப் பட்டது. அந்த வேதனை அவள் முகத்தை மூடிநிற்பதை அமிர் அவதானித்தான்.
 
பூமா, சட்டம் கில்லாடி விடயத்தில் மௌனம் சாதிக்கிறது, இல்லையா? சட்டத்துக்குத் தன்னிடம் வருபவனிடம் மட்டுமே கைவரிசையைக் காட்டத் தெரியும். கில்லாடியைப் பிடரியில் பிடித்துத் தள்ளிக்கொண்டுபோய் சட்டத்தின் முன் விட்டால் மட்டும் அது நியாயம் சொல்லும். கில்லாடி மட்டுமா? இன்னும் எத்தனை எத்தனை கில்லாடிகள்? லண்டனிலே மட்டுமில்லை. ரொறன்ரோவில், பாரிசில், பேர்லினில், ஒஸ்லோவில், பேர்ணில், சிட்டினியில், மெல்பணில்? அவர்களைச் சட்டம் ஒன்றும் செய்வதில்லை."

அதைவிடுங்கள் அமிர். நதியா ஏன் கறுப்பு நரிகள் இயக்கத்தில் சேர்ந்தாள். அதைச் சொல்லுங்கள்?"

            “சுதந்திரப் போராளி என்ற நாமத்தை துஷ்பிரயோகம் செய்து, ராசையரை மட்டுமல்ல இன்னும் பலபல தொப்புள்கொடி உறவுகளையும் சுட்டுக் கொன்று வீமன்காமக் கொலனிப் பனந் தோப்புக்குள் வீசிய ஒரு கொலைகாரனுடன் ஜீவியம் செய்ய அவள் மனம் ஒருப்படவில்லை. அப்பாவிகளை, ஆயுத பாதுகாப்பில்லாத உறவுகளைக் கொன்று அட்டூழிய ஆட்சி நடாத்திய போலிப் போராளியின் தாலியைக் காவ அவள் மனம் மறுத்தது. அதை அறுத்து எறிந்துவிட்டு லண்டனைவிட்டே போய்விட்டாள்."

            நீண்ட நேரம் ஆவரங்கால் அன்ரியின் வரவேற்பறையில் நிசப்தம் நிலவியது. அமிர் சுவரைப் பார்த்துக் கொண்டிருந்தான். பூமா தொலைக் காட்சிப் பெட்டியின் மேல் இருந்த குரங்குப் பொம்மையைப் பார்த்தாள். அது மூக்கை வலதுகைப் பெருவிரல் சுண்டுவிரல் இரண்டாலும் பிடித்தபடி தியானத்தில் இருப்பது போல அவளுக்குப் பட்டது.

            பல நிமிடங்கள் ஓடிவிட்டன.

            பூமா அமிரின் அருகே சோபாவில் இருந்த புகைப்படத்தை உற்றுப் பார்த்தபடி நின்றாள். அமிருக்கு விளங்கியது அவள் நதியா அனுப்பிய அந்தப் புகைப்படத்தைப் பார்க்க விரும்புகிறாள் என்பது. அதனைப் பூமாவிடம் நீட்டினான்.

            பூமா அதை வாங்கி வைத்த கண்வாங்காமல் பார்த்துக்கொண்டு நின்றாள்.

            அப்பொழுது அமிர்எனக்கு வேலைக்குப் போக நேரமாகிவிட்டது" என்று கூறிக்கொண்டு புறப்பட்டுப் போனான். அவன் போன பின்னர் பூமா சோபாவில் அமர்ந்து நதியாவின் மிகுதிக் கடிதத்தை வாசித்தாள். ஒரு போராளியின் உள்ளுணர்வை அவள் உதாரணங்களோடு அதில் எழுதி இருந்தாள்.

            வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த ஆவரங்கால் அன்ரி எதிர்ப் பக்கத்து சீமெந்து நடை பாதையில் மற்றவர்களிலும் உயர்ந்த ஒரு மனிதனின் தலையைக் கண்டார். அமிர்தானோ என்று ஊன்றிப் பார்த்தார். அமிர்தான். தோளில் ஒரு தோற் பையோடு வேகமாகச் செல்வதைக் கண்டார்.

            அமிரைக் கண்டதும் அவருக்கு இரண்டு காரணங்களுக்காக ஆத்திரம் பொங்கி வழிந்தது. வாய்க்குள் முறுகித் திட்டிக்கொட்டியபடி வீடு போய்ச் சேர்ந்தார்.

            வரவேற் பறையில் கடிதம் வாசித்துக் கொண்டிருந்த பூமாவைப் பார்த்ததும் அவரது கோபம் அதிகரித்தது. ஏனெனில் அவள்தான் அமிரை அங்கு கொண்டு போய்ச் சேர்த்தவள்.

பூமா எங்N அந்தத் தறுதலை?" என்றார் ஆவரங்கால் அன்ரி.

பூமா திடுக்கிட்டுச் சோபாவைவிட்டு எழுந்து அன்ரியைப் பார்த்து, “அன்ரி யாரைக் கேட்கிறியள்?" என்றாள்.
வேறு யாரை? அந்தப் போக்கிரி அமிரைத்தான் சொல்கிறேன்."
ஏன் அன்ரி ஆத்திரப்படுகிறியள்?"
ஆத்திரப்படுகிறனோ? எனக்கு எட்டுக் கிழமை காசு வரவேணும். இன்னும் நாலு ஐந்துகிழமை தராமல் விட்டால் பன்னிரண்டு பதின்மூன்று கிழமை ஆகிவிடும். முந்தின எளியதுகள் ஓடினது போல அதைத் தராமல் ஓடுகிற புத்திதான். அமிருக்கு விசாக் கிடைத்திட்டது. இந்தியாவுக்குப் போய் நதியாவைக் கலியாணம் செய்து கொண்டு அங்கேயே நிரந்தரமாக வசிக்கப் போகிறானாம். கோவிலிலே சனம் கதைத்து நாக்கு வழிக்குதுகள்."

            அன்ரிக்குச் சரியாக நிற்க முடியவில்லை. உண்டியலை ஒரு மூலையிலே வீசிவிட்டு சோபாக் கைப்பிடியில் பிடித்து மெதுவாக அமர்ந்து பூமாவை வெறித்துப் பார்த்தார்.

            “அன்ரி கோவிலுக்குப் போகிற உங்களைப் போல பென்சன் ஆட்களுக்கு லண்டனிலே என்ன வேலை? மாடு இருக்கே மேய்க்க? ஆடிருக்கே குழை ஒடிக்க? இல்லைக் கோழிதான் இருக்கே? அல்லது தோட்டம் துரவு ஏதன் இருக்கே? பேரப்பிள்ளைகளையும் பார்க்க மாட்டனென்று தனிய வீடு எடுத்து இருக்கிறியள். அரசாங்கம் அள்ளித் தருகுது. எங்களைப் போல உங்களுக்கு வரியே. பொழுது போகுது இல்லை. கற்பனை நாவல் ஆசிரியர்களாக மாறிவிடுகிறீர்கள்."
பூமா, நான் இப்ப உதோ உன்னிடம் கேட்டனான்? என்னுடைய காசை எல்லே தராமல் ஓடப் போகிறான்."
அன்ரி, அமிர் வேலை செய்யத் தொடங்கிவிட்டார். இனி விரைவிலே உங்களின் பிசகைத் தீர்த்திடுவார்."
லண்டன் பெடியள் தரவளிகளை நம்பேலாது பூமா. என்னுடைய காசைத் தராமல் ஓடினால்?"
எவ்வளவு அன்ரி?"
அறுநூறு பவுண்."

            பூமா தனது பேக்கைத் திறந்து பணத்தை எடுத்துக் கொடுத்தாள்.

            புயல் திடீரென மறைந்தது போல அன்ரியின் முகத்தின் நெழிவு சுழிவு எல்லாம் மறைந்தன. முகத்திலே ஒரு ஆனந்தம். காவி படிந்த ஓட்டைப் பற்கள் பூமாவைப் பார்த்தன.

அதுசரி பூமா, பெடியன் என்ன வேலை செய்கிறார்?" அன்ரி ரம்மியமான குரலில் வினாவினார்.
வேறெங்கே, பெற்றோல் நிலையத்தில்தான்."
இப்ப என்றாலும் பெடியனுக்குப் புத்தி வந்தது. உதை முந்தியே செய்து இருக்கலாம், இல்லையே? அதுசரி பிள்ளை பூமா. நான் கேட்கிறன் என்று கோவியாதை. பெடியன் நல்ல குnயிலே வந்தது. அப்படி எல்லாம் செய்யாது........" அத்தோடு நிறுத்திவிட்டு ஆவரங்கால் அன்ரி பூமாவைப் பார்த்தார்.
ஏன் அன்ரி குறையில் நிறுத்தி விட்டீர்கள்?" அவளுக்கு விளங்கியது அன்ரி  என்ன கேட்கப் போகிறா என்று.
மெய்தானே பிள்ளை. உங்கை கதைக்கினம் அமிருக்கு விசா வந்திட்டுதாம். மெய்தானே?" அன்ரி நேரே களத்தில் இறங்காமல் சுற்றி வளைத்தார்.
ஓம். அதற்கென்ன?"
பொய் சொன்னால் வாய் அழுகிப்போம் பிள்ளை. அமிர் இந்தியாவுக்குப் போய் நதியாவைக் கலியாணம் செய்யப் போகிறாராம். அது உண்மையே?"

            பூமா அன்ரியிடம் அமிர் கொடுத்த புகைப்படத்தைக் கொடுத்து, “அன்ரி இந்த புகைப்படத்தைப் பாருங்கோ. பிறகு நான் உங்களுக்குப் பதில் சொல்கிறேன்."

            அன்ரி பூஞ்சல் கண்களால் படத்தில் இருப்பவளைப் பார்த்தார்.
இரட்டைப் பின்னல். வளைத்து கட்டியிருக்கிறாள். சின்ன கவர்ச்சியான வட்ட முகம். ஆமி உடுப்பு. இடுப்பைச் சுற்றி என்ன? கையிலே துவக்கு. உவள் ஓடிப்போன தேவடியாள் நதியாவின் முகச்சாயல் தெரியுது.”
சாயல் இல்லை அன்ரி. நதியாதான்.”
இந்தியாவிலே ஆமி உடுப்போடு என்ன செய்கிறாள்?”
இந்தியாவிலே இல்லை. இலங்கையிலே. கறுப்பு நரி இயக்கத்திலே சேர்ந்திட்டாள்.”
உவள் நதியா இப்ப கறுப்பு நரிப் போராளியே? நதியா போராளி!”
ஓம். தற்கொலைப் போராளி. இங்கே நாங்கள் எல்லாம் வெளி நாடுகளில் புதிய சுகபோகங்களுக்குள் மூழ்கிப் போயிருக்கிறம். தினம் தினம் புதுப்புது ஆடம்பரங்களைத் தேடி அலைகிறோம். அதற்குள்ளால் வெளியேற முடியாமல் திணறுகிறம். அவள் பணம் பொருள் பண்டம,; இனிய வாழ்க்கை, அன்பான கணவன் எல்லாவற்றையும் தூக்கி வீசிவிட்டு - தன் உயிரைத் தியாகம் செய்து - இனவிடுதலைக்காகப் போராடப் போயிருக்கிறாள். உப்படிப் போராளியாகிறது லேசுப்பட்ட காரியமல்ல அன்ரி. துறவியின் மனவலிமை தேவை. எல்லோராலும் அப்படி முடியாது அன்ரி.”

பிள்ளை. நான் படிக்கேலை. எனக்கு உதெல்லாம் விளங்காது. உங்கே சனம் என்ன என்னவோ எல்லாம் கதைக்குதுகள். நீ இப்ப நதியாவைப் பற்றி என்ன சொல்கிறாய் பூமா?"
அரசாங் உதவிப் பணம் வாங்குகிற சனத்துக்கும் பொழுது போக்கு வேணுமெல்லே. அந்தச் சனத்திலும் நதியா எவ்வளவோ மேல் அன்ரி."

            அன்ரி அவள் சொல்வதைத் தொடர்ந்து கொஞ்சநேரம் மௌனமாகக் கேட்டுக் கொண்டு இருந்தார். அவள் சொன்ன விடயம் முழுவதும் விளங்காத போதிலும் அவருக்குஅவள் உவ்வளவு உன்னத லட்சியம் கொண்ட பெட்டையோ?’ என்ற எண்ணம் மனதில் வேர் பாய்ச்சத் தொடங்கியது

            “எங்கள் வயதுபோனதுகளுக்கு வேலை இல்லைப் பிள்ளை. வம்பளக்குதுகள். உண்டியல் குலுக்க வாவென்றால் வர மாட்டார்கள். ஊர்க் கதை கிடைத்தால் போதும் சூப்பி எலும்பைக் காணாமல் விடமாட்டினம்" என்று கூறியபடி அன்ரி சோபாவைவிட்டு எழுந்து, தாண்டித் தாண்டிப் படிகளில் ஏறினார் தனது அறைக்குச் செல்ல

            அன்ரி தனது அறைக்குப் போனதன் பின்னர் பூமா தொலைக் காட்சிப் பெட்டியின் மேல் இருந்த குரங்குப் பொம்மையைத் தற்செயலாகப் பார்த்தாள். அது மேலும் கீழும் தலையை ஆட்டியது. அதன் செயல் மூத்தான் மனைவி சொன்னதை மறந்து விட்டாயா என்று கேட்பது போல அவளுக்குப்பட்டது.

            “அது மட்டுமே? பிளெசற் பூங்காவிலே நாகப்பன் கந்தோரிலே வேலை செய்கிற அந்த உயரமான பெட்டையோடு என்ன கூத்தடிக்கிறான் தெரியுமே
            ! அவவை அவர் கலியாணம் பண்ணப் போகிறாரோ? நல்லாயிருக்குக் கதை. ஜீவிதாவோ? அவ இன்னும் ஒரு கறுப்புச் சட்டை நெட்டையனோடும் தொடுப்பு. அது உனக்குத் தெரியாதே? அந்தக் கறுப்புச் சட்டை இப்பவும் கறுப்பு நரி இயக்கத்திலே இருக்கிறான். அவர் சொன்னவர். ஆருக்கோ மண்டையிலே போடத்தான் லண்டன் வந்திருக்கிறான் என்றவர். அது தெரியாதே உனக்கு? இன்று காலையும் இரண்டு பேரையும் நான் ஸ்ரேசனில் கண்டனான். கூதலுக்கு ஒட்டி நிற்கினம்."

            பூமாவுக்குத் தெரியும் அமிர் ஜனநாயக வழியில் நம்பிக்கை உடைய தமிழ் அரசுக் கட்சியின் தீவிர அங்கத்தவன் என்பது. அவன் விடுதலைப் போருக்கு ஆயுதம் தூக்கிய தீவிரவாதிகள், குறிப்பாகக் கறுப்பு நரிகள், அக்கட்சியின் தலைவர்களைத் தொடர்ந்து கொல்வதை வன்மையாகக் கண்டிப்பவன். ஜீவிதாவுக்கும் அது தெரியும். பூமாவின் உள் மனம் பேசியது.

            'ஜீவிதா ஏன் ஒரு கறுப்பு நரியுடன் நட்பு வைத்திருக்க வேண்டும்? மூத்தான் முன்னர் கறுப்பு நரி இயக்கத்தில் இருந்தவன். அதனாலேதான் அவனுக்கு அந்தக் கறுப்பு அங்கி நெட்டையனைத் தெரியுமோ? யாருக்கோ மண்டையிலே போட வந்திருக்கிறான் என்று மூத்தான் மனைவி கூறியது? அவள் விசர் மாதிரி அலம்புகிறாள். அவள்; கூறிய செய்தி உண்மையாக இருக்குமோ?”

            ஜீவிதா ஒரு கறுப்பு நரியோடு தொடர்பு என்பதைப் பூமாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளைப் பூமாவுக்கு லண்டன் வந்த காலத்திலிருந்து தெரியும். அவள் அப்படி ஒரு இழிய வாழ்க்கையை நினைத்துப் பார்க்கக் கூடியவள் அல்ல. அவள்மீது சந்தேகப்படுவது நட்பைப் பாதிக்கும் என்ற பயம் பூமாவைப் பற்றியது.

            'ஒரு விசரியின் பிதற்றலை நம்பிச் சாடைமாடையாகவும் ஜீவிதாவிடம்; எதுவும் கேட்கக் கூடாது. அவள் என்மீது வைத்திருக்கிற நம்பிக்கை. நான் அவள்மீதுகொண்ட பற்று. எல்லாவற்றையும் நாசமாக்கிவிடும்.” அவள்தானே தன் வாய்க்குப் பூட்டுப் போட்டாள்.


            அதன்மூலம் பூமா தான் தவறு செய்கிறாள் என்பதை உணரவில்லை. நல்ல நட்பின் அடையாளம் ஆபத்து வேளையில் உதவுவது மட்டுமல்ல, மர்மமான சூழலில் நண்பர்கள்மீது ஊதப்படும் சங்குகளின் விபரீத நாதம் ஏன் என்று அலசிப்பார்க்காமல் விடுவதும் மகா தப்பு. தனது மௌனம் ஜீவிதாவின் வாழ்க்கையை அந்தகாரத்துள் தள்ளப் போவது அப்போது பூமாவுக்குத் தெரியாது. அதற்காகப் பூமா கண்ணீர்விடப் போகிறாள்.  

இன்னமும் வரும் ...

No comments:

Post a Comment