Monday, 9 November 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 20 - கோப்பி  கொடுத்த  ஊத்தைவாளிகள்




             நேரம் நள்ளிரவு. 'அந்த நெட்டை வடுவாதான் நதியாவைக் கடத்தியிருப்பான். நீ உடனே இங்கே வாஎன்று கில்லாடி கூறிய சொற்களைக் கேட்ட சால்வை மூத்தானின் குறும் மயிர்கள் ஆத்திரத்தில் நிமிர்ந்து எழுந்து நின்று சதுராடின. அவனுக்கு அந்த உயர்ந்த கூட்டத்தின் மீது இப்போதும் காய்ச்சல். காரணம் அவர்கள் லண்டனிலும் யாழ்ப்பாண மேலாண்மையைக் காட்டுவதாக அவன் சொல்கிறான்.

            மூத்தானுக்கு அருமையான சந்தர்ப்பம். அதை அவன் தவறவிட விரும்பவில்லை. பிஸ்ரலையும் சன்னங்களையும் எடுத்துக் கொண்டு ஆற்றுப் பறக்கப் புறப்பட்டான்.

            கோட்டான் சூட்டி, ஊத்தைவாளி குகன் இருவரையும் அழைத்துக் கொண்டு மூத்தான் அரை மணி நேரத்துள் கில்லாடி வீடு போய்ச் சேர்ந்தான்.

             கில்லாடி வாய் திறக்கவில்லை. யாரையோ சாகக் கொடுத்தவன் போல நாடிக்குக் கை கொடுத்தபடி, குங்குமப் பொம்மையைப் பார்த்துக்கொண்டு இருந்தான். அவர்களுக்கு அக்காட்சி வெஞ்சினம் ஏற்றியது. மீன் தொட்டிப் பக்கமாக இருந்த குங்குமப் பொம்மை அவர்களைப் பார்த்து மேலும் கீழும் தலையாட்டியது. மற்றும்படி வரவேற்பறையில் ஒரே மௌனம்.

            முதலில் சால்வை மூத்தான்தான் வாய் திறந்தான். “அந்த றாஸ்கலை, புத்தூர்ச் சந்தியிலே நான் நாதன் மாஸ்டரைத் தந்திக் கம்பத்தோடு கட்டிச் சுட்டது போலச் சுடவேண்டும்" என்று சொன்ன சால்வை மூத்தான், தனது சிபாரிசுக்கு எப்படி வரவேற்பு என்பதைத் தனது கழுத்துச் சங்கிலியை உருவியபடி நோட்டம் பார்த்தான்

            ஊத்தைவாளி குகன் தனது கெட்டித்தனத்தைக் காட்ட விரும்பினான். கையிலிருந்த பிரெண்டிக் கிளாசோடு சோபாவைவிட்டு எழுந்து, ஆழப் பொந்திலிருந்த இத்தினைக் கண்களால் எல்லோரையும் ஒரு சுற்றுப் பார்த்துவிட்டு, “முதலிலே அமிரைக் கடத்தி வந்து எங்கே அவன் நதியாவை ஒளித்து வைத்திருக்கிறான் என்பதை அறிந்தபின்னர்தான் மற்ற எல்லா முடிவும் எடுக்கவேண்டும்" என்று கூறி முடிய அவனது மூக்கு விரிந்து சுருங்கி விரிந்து 'உங்கள் பதில் என்ன? என்ன?” என்று வினாவியது.
அப்பொழுது கோட்டான் சூட்டி கேட்டான், “நான் சொல்லட்டோ எங்கே நதியாவை அமிர் மறைத்து வைத்திருக்கிறான் என்று?"
சொல்லெடா சூட்டி" என்றான் ஊத்தைவாளி.       
எனக்குத் தெரியும். அவன் ஆவரங்கால் அன்ரி வீட்டில்தான் நதியாவை ஒளித்து வைத்திருக்கிறான்" என்றான் கோட்டான் சூட்டி.

முதலிலே அமிரை ஆவரங்கால் கிழவி வீட்டிலிருந்து கடத்தி வரவேண்டும். நதியாவை எங்கே மறைத்து வைத்திருக்கிறான் என்பதைக் கறந்ததும் ஆளின் கதையை முடிக்க வேண்டியதுதான்" என்ற சால்வையின் சிபாரிசைக் கேட்ட கோட்டான் சூட்டியின் மன அலைகளில் அவன் வவுனியா கோட்டான் இயக்க மல்லிகை மாளிகை முகாமில் புரிந்த வீரசாகசங்கள் மின்னி மிதந்தன. குலைந்துகிடந்த தனது முடியைபோனி ரெயிலாகப்பிடித்து றப்பர் வளையத்தை மாட்டி இறுக்கி, குருட்டுக் கண்ணின் ஒற்றைக் கறுப்புக் கவசத்தைச் சரிபார்த்தபின் தனது அபிப்பிராயத்தைச் சொல்லத் தொடங்கினான்.

பிடித்து வந்ததும் முதலில் அந்த எளியவனை செல்லரில் கால் விரல்களில் தலைகீழாகத் தொங்கவிட வேண்டும். அப்படித்தான் வவுனியா கூட்டுறவு யூனியன் தலைவர் வீரசிங்கத்தை எங்கள் கோட்டான் இயக்க வவுனியா மல்லிகை மாளிகையில் முதலில் தொங்கவிட்டனாங்கள். அதற்குப் பிறகு மணல் நிரப்பிய எஸ்லோன் பைப்பால் சப்பல் அடி. அப்படிச் செய்தால்தான் அமிர் உண்மை சொல்லுவான்." கோட்டான் சூட்டி உளறினான்.

            கோட்டான் சூட்டி தனது திட்டந்தான் எடுபடும் என்ற நம்பிக்கையில் உடலை நிமிர்த்தித் தலையை நீட்டி ஒற்றைக் கண்ணால் தனது கூட்டாளிகளைப் பார்த்தான்.

            எப்படி அமிரைக் கடத்துவது? அதில் ஒரு தயக்கம். பல்வேறு முன்வைப்புகள். எகமனதான முடிவில்லை.

கில்லாடியின் மனக்கண்ணில் நதியா தோன்ற, பனாட்டுக்காகப் பனம் பழங்களைப் பினைவதைப் போல, கவலை கில்லாடியைப் பினைந்தெடுத்;தது. உச்சி மொட்டந் தலையைத் தடவிய பின்னர் மண்டை அடிவாரத்துக் கத்தை மயிரைக் கோதியபடி தனது சகபாடிகளைப் பார்த்தான்.

            ஊத்தைவாளி குகன் சோபாவைவிட்டு எழுந்து நின்று மூன்று நண்பர்களையும் சின்னோட்டிக் கண்களால் சுற்றிப் பார்த்த பின்னர், “நான் ஒரு சூப்பர் பிளான் வைத்திருக்கிறேன்" என்றான்.
என்ன சூப்பர் பிளான்? உன்னுடைய புளுகு மூட்டையை அவிழாதை குகன்" என்று சால்வை மூத்தான் சொல்லிவிட்டு தனது கிளாசில் மீண்டும் பிரெண்டியை ஊற்றினான்.
யாழ்ப்பாணத்தில் தழிரசுக் கட்சி எம்.பிக்களைக் கடத்த நான் கைக்கொண்ட ஒருசூப்பர்திட்டம் சொல்லவோ?"
என்ன? நீ தமிழரசுக் கட்சி எம்.பிக்களைக் கடத்தினனீயோ? எப்ப?" என்று கேட்ட சால்வை மூத்தான் கொடுப்புக்குள் சிரித்தான். ஏன் என்றால் அவன் பொய் சொல்கிறான் என்பது சால்வை மூத்தானுக்குத் தெரியும். ஆகவே அவனைப் பொய் சொல்ல உற்சாகப்படுத்தினான் மூத்தான், பின்னர் அவனைக் கிண்டல் செய்ய வாய்ப்பாக.                                                
எப்பவோ? 1985 ஆம் ஆண்டு."
யாரைக் குகன் நீ கடத்தினனீ?"
தருமரையும் ஆலாலுவையும். தருமர்; மானிப்பாய் எம.பி. ஆலாலு கோப்பாய் எம்.பி. மூத்தான் அது தெரியாதே உனக்கு?"
எப்படிக் கடத்தினனீ? சொல்லடா குகன். அப்படியே நாங்களும் அமிரையும் கடத்துவம்" என்று சொல்லி அவனை மேலும் பொய் சொல்லத் தூண்டினான் சால்வை மூத்தான்
முதிலிலே கள்ளியங்காட்டில் உள்ள ஆலாலு வீட்டுக்குப் போய் 'தருமர் எம்.பி. ஐயா ஜீப்பிலே இருக்கிறார். உங்களை வரட்டுமாம் என்று கூற அவர் என்னோடு ஜீப்படிக்கு வந்தார்."
வந்ததும் மண்டையிலே போட்டனியோ?"
இல்லை. அவருடைய ஆசனத்திலே ஒரு உதை கொடுத்தேன். அவர் ஜீப்புக்குள்ளே போய்த் தொப்பென விழுந்தார்."

அப்பொழுது கோட்டான் சூட்டிசொல்லு குகன் பிறகு எப்படித் தருமர் எம்.பியைக் கடத்தினாய்?" என்று ஒறற்றைக் கண் மடலை விரித்தபடி கேட்டான்.
பிறகு ஆலாலுவோடு சுன்னாகத்துக்குத் தருமர் வீட்டுக்கு அதே ஜீப்பிலே போனோம். அங்கு தருமரிடம் போய் 'ஐயா ஆலாலு எம்.பி. ஜீப்பில் இருக்கிறார். உங்களை வரட்டுமாம்என்றேன். அவர் ஜீப்படிக்கு வந்ததும் பிடரியிலே ஒரு சின்னத் தட்டுப் போட்டு ஏறடா என்று ஜீப்புக்கள் ஏற்றிக் கொண்டு போய் சுன்னாகச் சுடலையில் வைத்துபிறகென்ன மண்டையிலே போட்டதுதான்."
அதற்குப் பிறகு?" சால்வை மூத்தான் தனக்கு அதுபற்றி ஒன்றும் தெரியாதவன்போலக் கேட்டான்.
அடுத்து தருமரின் பிரேதத்தைச் சுடலையிலேயே விட்டுப்போட்டு ஆலாலுவின் உடலை ஜீப்பிலே ஏற்றிப் போய் யாழ் நகருக்குள் சந்தை அருகே வீசினேன்.";

            ஊத்தைவாளி குகனின் சின்னோட்டி மூக்கு விரிந்து நின்று எப்படி என் சாகசம் எனக்கேட்டது. எவரும் வாய் திறக்கவில்லை. அவன் குங்குமப் பொம்மையைப் பார்த்தான். அது வழமை போல் தலையாட்டிக் கொண்டிருந்தது.
            கில்லாடிக்கு வரவேற்பறையில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத நிலை. அவனது வரண்டுவிட்ட கண்கள் தரையை அலங்கரித்த மென் சிவப்புக் கம்பளத்தைப் பார்த்தபடி இருந்தன. மேலே மின்சாரக் குமிழ்களிலிருந்து வந்த மின் ஒளியில் அவனது உச்சந்தலை பளிச்சிட்டுக் கொண்டிருந்தது. அவனது மனம் அமிரைச் சுட்டுப் பொசுக்கி எங்கேயாவது காட்டுக்குள் வீசவேண்டும் என்று துடித்தது.

            கறுப்பு நரிகளுக்குத் தங்களைப் பற்றிப் பெரிய நினைப்பு. வெற்றிப் பெருமிதங்களைக் குகன் குவிப்பதை கறுப்பு நரி சால்வை மூத்தானால் உள்வாங்க முடியவில்லை. ஆகவே ஊத்தைவாளி குகனை மட்டந்தட்ட விரும்பி, “டே குகன் பொய் மூட்டைகளை அவிழ்த்து எங்களைப் பேய்க்காட்டாதே. கறுப்பு நரிகளுக்கு நடந்தது எல்லாந் தெரியும். எம்.பிகளைக் கடத்திக் கொன்றது நீயே? அது ஊத்தைவாளி இயக்கக் காளியும் வசந்தனுமெல்லே. உங்கள் தலை சபாரத்தினம் போட்ட கட்டளைப்படிதானே மண்டையிலே போட்டவை?"

            அப்பொழுது கோட்டான் சூட்டி தனக்கும் அக்கொலைகள் பற்றித் தெரியும் என்பதை விளம்பரப்படுத்த விரும்பித் தனது குலைந்துவிட்ட தலைமயிரைச் சிலுப்பியபின்,

கள்ளியங்காட்டில் இரவு வேளை ஆலாலுவைக் கடத்தியதைக் கண்டது சைவங் கடைக்கு முன்னாலே  இரும்புப் பட்டடை வைத்திருந்த மனுசன் எல்லே, குகன்? அந்த மனுசன் அடுத்த நாள் முத்திரைச்சந்தையில் வைத்து ஊத்தைவாளிகள் காளியும் வசந்தனுந்தான் கடத்தினது என்று சனத்துக்குச் சொன்னவர். அதற்காக அந்த மனுசனை நெல்லியடிச் சந்தியிலே தந்திக் கம்பத்தோடு கட்டிச் சுட்டது பெண் வேசம் போட்டு வந்த காளியெல்லே?" என்று சொல்லிவிட்டுக் குகனைப் பார்த்துக் குரங்குபோலப் பல்லைக் காட்டி இளித்தான். குகனுக்கு அவமானம் தாங்க முடியவில்லை.

            போதாததற்குச் சால்வை மூத்தானும் தனது எரிச்சலைக் கொட்டினான்.

அந்தத் தந்திக் கம்பத்தில் தொங்கிய கடதாசி அட்டையில்பல பெண்களைக் கற்பழித்ததாக  இந்தச் சமூகத் துரோகி ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததின் பேரில் மரணதண்டனை விதிக்கப் பட்டுள்ளது. இங்ஙனம் ஊத்தைவாளி இயக்கம்என்று எழுதியிருந்ததல்லே. எங்களின் கறுப்பு நரி இயக்கத்தைக்கொப்பிஅடித்துத்தானே நீங்களும் கடதாசி அட்டையிலே அப்படி எழுதித் தொங்கவிட்டனீங்கள்?"

            ஊத்தைவாளி குகனுக்குத் தனது குட்டு வெளிப்பட்டுப் போய்விட்டது என்ற குமைச்சல். ஆத்திரம் வேறு. ஒரு கிளாஸ் பிரெண்டியை லபக்கென விழுங்கினான். அவன் மூளை சுழன்று ஒரு துரும்பைப் பிடித்தது. தனது கூரிய குறுணிக் கண்களை ஏவி மூத்தானையும் சூட்டியையும் ஏளனமாகப் பார்த்தான். போதாததற்குச் சின்னோட்டி மூக்குவேறு போருக்கு ஆயத்தமாகி பாம்புப் புற்றுப் போல விரிந்து நிற்க குகன் பாணத்தை ஏவினான். “அவர்கள் கொலை பற்றி இன்னொரு கேள்வி? கேட்கவா? உங்களால் பதில் சொல்ல முடியாது."
அவனிடம் தோற்க மூத்தானோ சூட்டியோ தயாராகவில்லை.
முடியாதோ? என்ன கேள்வி சொல்லெடா ஊத்தைவாளி?" என்றான் மூத்தான்.
தருமரையும் ஆலாலுவையும் கடத்திய அதே இரவுவேளை வடமராட்சியில் தமிழ் அரசுக் கட்சி எம்.பிக்கள் - பருத்தித்துறை எம்.பி. துரையையும், உடுப்பிட்டி எம்.பி. இராசரையும் எங்களுடைய ஊத்தைவாளி இயக்கம் கடத்தினது தெரியுமோ?"
ஓம் தெரியும். கேள்வியைக் கேளடா." மூத்தான் சூட்டி இருவரும் ஒரே நேரத்தில் கொக்கரித்தார்கள்.
சரி. கேள்வி இதுதான். தருமரையும் ஆலாலுவையும் கொன்ற எங்கள் இயக்கம் ஏன் துரையையும் இராசரையும் கொல்லாமல் காலையில் கோப்பி கொடுத்து அவரவர் வீட்டில் கொண்டுபோய் விட்டது?" கேள்வியைக் கேட்ட ஊத்தைவாளி குகன் வெற்றிக் களிப்பில் இருவரையும் மாறிமாறிப் பார்த்தான்.

            சால்வை மூத்தான் கறுப்பு நரிகள் இயக்கத்தவன். அவனுக்கு ஓர் ஊத்தைவாளியிடம் தோற்கப் போகிறோமே என்ற கவலை. மேலும் ஆழமாக யோசித்தான். விடை பிடிபடவில்லை. தெரியாதென்று வாயால் சொல்லாமல் பக்கவாட்டில் தலையை ஆட்டினான்.

            ஊத்தைவாளி குகனுக்கு வெற்றிப் பித்தம் தலைக்கேறியது. எழுந்து நின்று இரு கைகளையும் விரித்து மூத்தானைக் காட்டி ஏளனமாக உரத்துச் சிரித்தான். அந்த ஒலி நள்ளிரவு வேளை சுவர்களில் பட்டு முழங்கியது.

            சால்வை மூத்தானுக்குத் தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. கையில் இருந்த பிரெண்டிக் கிளாசைக் குகன்மீது வீசினான். நல்ல வேளை. அது குறி தப்பியது. ஆனால் அது அந்தக் குங்குமப் பொம்மையில் பட அது படாரென்று தரையில் விழுந்தது. அதன் தலை தனித்து உருண்டு சென்று தொலைக் காட்சிப் பெட்டி அருகில் இருந்த குத்துவிளக்கோரம் உயிரைவிட்டது.

            குகனுக்குப் புரிந்தது, இருரையும் சுட்டுக் கொல்லாமல் அனுப்பியதற்கு என்ன காரணம் என்பது மூத்தானுக்குத் தெரியாதென்று. அது அவனுக்கு வெற்றி. அவன் மூத்தான் எறிந்ததைப் பொருட்படுத்தவில்லை.

நான் இப்ப சொல்லட்டோ ஏன் சுட்டுக் கொல்லவில்லை என்று?" குகன் கேட்டான்.
ஓம் சொல்லெடா ஊத்தைவாளி" என்றான் சூட்டி.

மச்சான் சூட்டி, தருமரும் ஆலாலுவும் - அவைதான் யாழ்ப்பாணத்தில் தடித்த குடி. அது தான் அவைக்கு மண்டையிலே போட்டது. துரையரும் இராசரும் எங்கள் பகுதி ஆட்கள். அதுதான் அவர்களைச் சுட்டுக் கொல்லாமல் கோப்பி கொடுத்து அனுப்பினோம்" என்று கூறியபின் ஊத்தைவாளி குகன் தனது மூஞ்சியை நீட்டிமச்சான் மூத்தான் இப்ப விளங்குதோ?" என்றான்.

            இறுதியில் ஊத்தைவாளி குகனின் திட்டந்தான் வெற்றி பெற்றது.

x
                         
             கில்லாடி கோஷ்டியின் கார் அமிரைக் கடத்த ஆவரங்கால் அன்ரி வீடு நோக்கிப் பறந்தது. இரவு வேளை. வெளிச்சம் இருந்தது. ஆனால் வீதியில் தலைக் கறுப்பே இல்லை.

            நேரம் இரவு இரண்டு மணியை அண்டிவிட்டது.
                                     
            மற்ற மூவரும் காருக்குள் இருந்தனர். ஊத்தைவாளி குகன் மட்டும் காரை விட்டு இறங்கி ஆவரங்கால் அன்ரி வீட்டுக் அழைப்பு-மணியைத் தொடர்ந்து அழுத்திக்கொண்டு நின்றான். சிறிது நேரஞ் செல்ல மாடி அறையின் கண்ணாடி யன்னல் திரைச் சீலையை நீக்கி யாரோ இருவர் பார்ப்பது கீழே வீட்டு வாசலில் தரையில் நின்ற ஊத்தை வாளிக்குத் தெரிந்தது.

            குகன் தலையை நிமிர்த்திஆவரங்கால் அன்ரி, அது நான் மோகன். இரவில் கதவில் தட்டுகிறம் என்று குறை நினையாதையுங்கோ. அவசரமாகத் தம்பி அமிரை அவரின் வொல்தம்ஸ்ரோவ் நகரில் இருக்கிற டாக்டர் மாமா சந்திக்க வேண்டுமாம். காருக்குள் இருக்கிறார். அமிரை எழுப்பி விடுறியளோ?" என்று முன்பே ஒத்திகை பார்த்துச் சொல்வது போல எதுவித சந்தேகமும் வராதமுறையில் பொய்யான பெயருக்குரிய ஊத்தைவாளி குகன் குரல் கொடுத்தான்.

ஓம் தம்பி, கொஞ்சம் பொறுங்கோ எழுப்பி விடுகிறேன். நல்ல நித்திரை" என்ற ஆவரங்கால் அன்ரியின் குரல், கீழே வீட்டு வாசலில் நின்ற ஊத்தைவாளி குகனுக்கு  நன்றாகக் கேட்டது.

            ஆவரங்கால் அன்ரி குலைந்து போய்க் கிடந்த தனது பால் வெள்ளைக்  கூந்தலைக் கொண்டையாக முடிந்துவிட்டு இரவுடையைச் சரிப்படுத்தியபின் தனது அறையைவிட்டு வெளியேறி அமிரின் கதவில் டொக் டொக் என்று தட்டி எழுப்பிச் செய்தி சொன்னார்.

            ஆவரங்கால் அன்ரி, அமிரை எழுப்பப் போனதின் பின்னரும், பூமா யன்னல் கண்ணாடியின் ஊடாகக் கீழே வீட்டு வாசலில் கறுப்புக் குளிர்காலப் போர்வை உடுப்பில்  அமிரின் வருகையை எதிர்பார்த்துக்;கொண்டு நின்ற ஆளை அடையாளங்காண முயன்றாள்.

            ஊத்தைவாளி குகன் தனது முகத்தை உள்ளங் கையால் மறைத்து விரல் இடுக்கினூடாக மேலே யன்னலைப் பார்த்தான். அது அவளுக்குச் சந்தேகத்தையும் அச்சத்தையும் ஒருங்கே கொடுத்தது.

            அப்படி ஒரு நள்ளிரவில்தான் யாழ்ப்பாணத்தில் அவளை நெடுந்தீவில் வைத்து மரநாய் இயக்கத்தவன் எழுப்பிக் கடத்திக் கொண்டுபோய் பொட்டல் காட்டுச் சுடலையருகில் விட, அந்த இயக்கப் பிரமுகனாலும், பின்னர் மீண்டும் பனை அடைப்பில் வைத்து அவனின் எடுபிடியாலும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட கோர நினைவுகள் மனதில் தோன்றி அவளைத் தீய்த்தன. அவளால் ஏழேழு பிறவிகளிலும் மறக்க முடியாத, பெற்ற அன்னை தீக் குளிக்க வைத்த காட்சி அது

            ஆவரங்கால் அன்ரி செய்தி சொன்ன கையோடு, உடுத்த உடுப்போடு, ‘என்ன எதுவோஎன்று பதைபதைத்து வீட்டுக் கதவைத் திறந்து காரடிக்கு விழுந்தடித்துப்  போன அமிருக்கு, ஊத்தைவாளி குகன் ஆசனத்திலே ஒரு உதை கொடுக்க, ஏலவே  திறந்து வைத்திருந்த காருக்குள், அமிர் குப்புற விழ, கார்வீர்என்று இரைந்து கொண்டு புறப்பட்டதைக் கண்ட பூமா திகைத்துப் பயந்துஅன்ரிஎன்று ஓலமிட்டபடி அவவைத் தேடி ஓடினாள்.

            அன்ரியின் தொலை பேசி இரண்டு நாட்களாக வேலை செய்யவில்லை. ஜீவிதாவுக்கு நடந்த விடயத்தைக் கூற அடுத்த தெருவிலே இருந்த ஜீவிதாவின் வீட்டுக்கு ஆவரங்கால் அன்ரியையும் அழைத்துக்கொண்டு பூமா புறப்பட்டாள்.

            ஜீவிதாவும் அமிரும் இன்னும் ஒரு முடிவுக்கு வராவிட்டாலும், இருவரதும் நட்பும் திருமணத்தை நோக்கிச் செல்வது பூமாவுக்கு மட்டுமல்லாமல் ஆவரங்கால் அன்ரிக்கும் தெரியும். இருப்பினும் ஜீவிதா முன்னரைப் போல் அமிருடன் இப்பொழுது நெருங்கிப் பழகுவது இல்லை என்பது பூமா அறிந்ததே. ஏதோ இடைக்கால ஊடல் என்று கருதியே பூமா ஜீவிதாவிடம் ஓடினாள்.

            நேரம் இரவு இரண்டைக் கடந்துவிட்டது. ஆவரங்கால் அன்ரிக்கு முழங்காலில்  வாதம். அவ இரண்டு பக்கமும் சரிந்து நிமிர்ந்து பின் சரிந்து காலைப் பக்கவாட்டில் தூக்கி எடுத்து வைத்து அசைவதைப் பொருட்படுத்தாது பூமா ஓடிச் சென்று ஜீவிதாவைத் துயில் எழுப்பி என்ன பயன்?

            அமிர் கடத்தப்பட்ட நிகழ்ச்சி ஜீவிதாவை உசுப்பியதாகத் தெரியவில்லை. அவள் எள்ளளவும் ஆர்வம் காட்டவில்லை. பூமா சொன்னவற்றைக் கேட்டுத் தலையாட்டிக் கொண்டிருந்த ஜீவிதா,

அவர்கள் அமிரை அவரது மாமா வீட்டுக்குத்தான் அழைத்துச் சென்றிருப்பார்கள்" எனறாள்.
இல்லை ஜீவிதா. அவர்கள் அமிரை அடித்து உதைத்துக் காருக்குள் தள்ளியதைக் கண்டனான்" என்று கூறிய பூமா தனது குலைந்த தலைமயிரை ஒழுங்கு செய்தபடி ஜீவிதாவைப் பார்த்தாள்
சாம நேரம் பூமா. நீ சரியாகப் பார்த்திருக்க முடியாது" என்றாள் ஜீவிதா.
வீதியில் மின்சார வெளிச்சம் இருந்தது."
பூமா நீ வீணாகக் குழம்புகிறாய். என்னையும் குழப்பப் பார்க்கிறாய்."
இல்லை ஜீவிதா. அமிர் சாரந்தான் கட்டியிருந்தவர். மேலிலே சேட் இல்லாமல் போயிருக்கவே மாட்டார்."
அசரப்படாதே பூமா. நாங்கள் காலமை பொலிசுக்கு அறிவிப்போம்."

            பூமாவுக்கு ஜீவிதாவைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஜீவிதா அக்கறை காட்டாதது பூமாவுக்கு வியப்பாக இருந்தது. அத்தோடு அவளுக்கு ஒரே பயமாகவும் திகைப்பாகவும் இருந்தது

            ஆவரங்கால் அன்ரி ஜீதாவின் சோபாவில் படுத்துக் குறட்டை விட்டுக்கொண்டிருந்தார். சோபாவின் மறுபக்கத்தில் பூமாவும் ஆழ்ந்த நித்திரையாகி விட்டாள்.

            விடிய இன்னும் ஒரு மணி நேரமே இருந்தது. ஜீவிதாவின் குரல் கேட்டு பூமா திடுக்கிட்டுக் கண் விழித்தாள். அவளுக்கு ஒரே ஆச்சரியம். கண்களையே நம்ப முடியவில்லை. உணர்ச்சி பொங்கத் தழுதழுத்த குரலில் ஜீவிதா ரெலிபோனில் பொலிசுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

            பூமாவுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி. மறுபுறம் வியப்பு. முதலில் எவ்வளவோ இரந்து கேட்டும் அக்கறை காட்டாதவள். உணர்ச்சி யற்ற மரக்கட்டை போலப் பதில் சொன்னவள். காலையில் பொலிசுக்குப் போன் பண்ணுவோம் என்று தட்டிக் கழித்தவள். ஏன் திடீர் மாற்றம்? அதற்கிடையில் என்ன நடந்தது? ‘உவள் எப்பவும் உப்படித்தான்என்று மனதுள் பொருமினாள்.

            பெண்ணின் மனம் ஆழ் சமுத்திரம். அதைப் பெண்ணாலும் புரிய முடியாதோ? பூமாவால் முடியவில்லை.

            பொலிசாரின் கேள்விகளுக்கு ஜீவிதா பதில் கூறுவதுபோலப் பூமாவுக்குப் பட்டது.

ஓம். கில்லாடியும் கூட்டாளிகளும். கில்லாடியின் விலாசம் மட்டும் தெரியும். .....39 றிபல் வீதி, ஈஸ்ற்ஹம், லண்டன் கிழக்கு .... தயவு செய்து ... முன்னாள் தீவிரவாதிகள் .... சுணங்கினால் அடித்தே கொன்று போடுவார்கள். ..... தயவுசெய்து .... தயவு செய்து உடனே ..." என்று ஜீவிதா பதிலளிப்பதைப் பூமா கேட்டு ஆச்சரியப்பட்டாள்.

            அமிரைக் கடத்திய காட்சி மீண்டும் பூமாவை ஆட்டியது. என்ன செய்தார்களோ? ஏது நடந்ததோ என்று அஞ்சி நடுங்கினாள்.

  x

           காரினுள் அமிரை ஊத்தைவாளி குகன் உதைத்துத் தள்ளியதும் அது சீறிப் பறந்தது.
எங்கே தம்பி நதியா?" காரின் பின் ஆசனத்தில் இருந்த கில்லாடி ஆவலோடு கேட்டான்.
எனக்குத் தெரியாதண்ணை" என்று மூத்தானின் காலடியில் குந்தியிருந்த அமிர் சொன்னான். கார் ஓடிக் கொண்டிருந்தது.
உந்தப் படித்த நாய் பொய் சொல்கிறான்" என்று கூறியபடி சால்லை மூத்தான் அமிரின் தலைமயிரைப் பிடித்து உலுப்பினான். அமிர் மனதைத் தைரியப்படுத்தினான்.
டே தம்பியை அடியாதையுங்கோ. .... தம்பி அமிர், நதியாவை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்? சொல்லு தம்பி." கில்லாடி கெஞ்சினான்.

            மூத்தான் அமிரின் கழுத்தைத் திருகியபடிடே பொறுகக்கி, என்னுடைய மனுசி சொன்னவ. பிளெசற் பூங்காவிலே உன்னையும் நதியாவையும் பார்த்ததாக. கோயிலிலும் நதியாவோடு ஒரே கொண்டாட்டமாம்?" என்று உறுமினான்.

கில்லாடி அண்ணை. அடிக்கவேண்டாம் என்று சொல்லுங்கோ." அமிர் இரந்து கேட்டான்.
டே அடியாதையுங்கோ. தம்பி அமிர் நான் உனக்கு 5,000 பவுண் தாறன். நதியாவை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்? சொல்லு தம்பி."

            கில்லடி இரண்டு கைகளையும் கூப்பி அமிரைக் கும்பிட்டபடி கெஞ்சியும் அமிரை உண்மை பேச வைக்க முடியவில்லை. “10,000 பவுண் தருகிறேன்." கில்லாடி நாடியைத் தடவிச் சொன்னான். இறுதியில் அமிரின் கால்களைப் பிடித்துக் கெஞ்சினான். பயனில்லை.

            கார் மனித நடமாட்டம் மரணித்துப்போன வீதியில் ஓடிக்கொண்டிருந்தது.

            அமிர் நதியாவுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற உறுதிபூண்டு அவளைப் பற்றி எதுவும் சொல்ல மறுத்தான்.

            கில்லாடியின் வேதனை அவன் தொண்டையைப் பிய்த்துக் கொண்டு புறப்பட்டது.

என் அன்பே நதியா! நான் உனக்கு என்ன கெடுதல் செய்தேன்? என்ன அநியாயம் செய்தேன்? உன்னை நான் என் உயிராக நேசித்தேன். ஏன் என்னை வஞ்சித்தாய் நதியா? ஏன் என் தலைமீது தீயை அள்ளிக் கொட்டினாய் நதியா? நான் உன்னைச் சந்தேகிக்கவில்லை. அந்த நம்பிக்கைக்கு நீ தந்த பரிசா இந்த வேதனை?"

            கார் கில்லாடி வீட்டு வாசலில் நின்றது. ஊத்தைவாளியும் கோட்டானும் ஒவ்வொரு கையில்பிடித்து அமிரைக் கொற கொறவென கில்லாடி வீட்டு வரவேற்பறைக்கு இழுத்துச் சென்றனர்.

சால்வை மூத்தான் கத்தினான்.
நாயே. உன்னை எங்கள் சொந்தத் தம்பி போல நடத்தினனாங்கள். படித்தவன் என்று உனக்கு நாங்கள் மதிப்புத் தந்தோம். மற்றவன் பெண்டாட்டியைக் கடத்தவோ பெரிய படிப்புப் படிக்கிபறியள்? நல்ல குலத்திலே வந்தவன் என்று நம்பினோம். எளிய றாஸ்கல் உன் வம்சப் புத்தியைக் காட்டிப்போட்டாய். லண்டன் தமிழருக்கே நீ ஒரு அவமானச் சின்னம்."

            தரையிலே இருந்த அமிரைச் சால்வை ஆத்திரம் தீரக் காலால் துவைத்தது. ஊத்தைவாளி அவனது மூஞ்சையில் காறித் துப்பியது. கோட்டான் கிளாசில் இருந்த பிரெண்டியை அவனது முகத்தில் பீச்சியடித்தது. மூவரும் போதையில் விழுந்து எழும்பி அடித்து உதைத்தனர்.
                                     
            சற்று நேரத்தில் கில்லாடி வீட்டுச் செல்லரின் - சுரங்க அறை வளையில் கட்டிய நைலோன் கயிற்றில், அமிர் காற் பெருவிரல்களில்; நிர்வாணமாகத் தலை கீழாக் தொங்கினான். அவனது வாயைமூடிப் பிளாஸ்ரர். அவனது தலையின் கீழே ஒரு சட்டி. அதிலிருந்து மிளகாய்ப் புகை மேலெழுந்து செல்லரை மூச்சுத் திணற சவைத்தது. இவையெல்லாம் அவர்கள் சிங்களப் பொலிசாரிடம் இரவல் வாங்கிய தண்டனை வகை.

            நதியாவை அமிர் எங்கு ஒளித்து வைத்திருக்கிறான் என்பதை அறியும் முயற்சியில் தோற்ற, கில்லாடியும் கூட்டாளிகளும் செல்லரைவிட்டு வெளியேறி வரவேற்பறைக்குத் திரும்பினர்.

            அடுத்த கட்டத்தில் எப்படிச் சித்திரவதை செய்தால் உண்மையைக் கறக்கலாம் என்பதைத் தீர்மானிக்க அடுத்த சுற்று பிரெண்டியில் மூழ்கியவர்கள் மது அரவணைத்த  கதகதப்பு மயக்கத்தில் கால் எங்கே தலை எங்கே என்று தெரியாது ஆழ்ந்த நித்திரையாகிவிட்டனர்.
விடிய 6.00 மணியாகிப் பொலிஸ் வாகனங்களின் சைரன் அபாய ஓசை கில்லாடி வீட்டுக்கு நாலாபக்கமும் கேட்டபொழுதும் அவர்கள் கண் விழிக்க வில்லை.

            நித்திரையில் கில்லாடி 'மை டியர் சின்ன வடிவு, உங்கே கிச்சினுக்குள் என்ன பண்ணுறீர்? இங்கே வாரும்என்று வாய் புலம்பிக் கொண்டிருந்தான்.

            ஒரு நீலக்கண் பொலிஸ் அதிகாரி தலைமையில் ஒரு கூட்டம் பொலிஸ் வந்து கொட்டுப்பட்டது.

            அவர்கள் கதவில் படார் படார் என்று குத்திப் பார்த்தார்கள். யாரும் திறக்கவில்லை. கதவை உடைத்து உட்புகுந்தனர். அவர்களுக்குப் பழக்கமில்லாத கொடிய நாற்றம் அவர்களது மூக்குகளை அரித்தது. கண்கள் எரிந்தன. சிலர் விழுந்து விழுந்து தும்மினார்கள்.

            வரவேற்பறைக்குள் புகுந்த பொலிசார் ஒவ்வொருவராக கையிலும் காலிலும் செவியிலும் பிடித்துக் கண் விழிக்கச் செய்தனர். கில்லாடி கோஷ்டி வெருண்டு எழுந்து மிரண்டது.
கில்லாடியை ஒரு பொலிஸ் கேட்டான்.
யாரையாவது கடத்திவந்தீர்களா?"
வழமையைப் போல பொலிசார் செல்லருள் போக மாட்டார்கள் என்ற நம்பிக்கையில், “இல்லை" என்றான்.

            அவர்களைச் சோதனையிடும்படி கட்டளை பிறந்தது.

            ஒரு பொலிஸ்காரன் மூத்தானின் காற்சட்டைப் பையிலிருந்த பிஸ்ரலையும் தோட்டாக்களையும் எடுத்தான். வேறொரு பொலிஸ்காரன் சூட்டியின் காற்சட்டைப் பையிலிருந்து ஒரு கிறிஸ் கத்தியை எடுத்தான்.

            பொலிசார் நாலா பக்கமும் சிதறித் தேடுதல் நடத்தினர்.

            இரு பொலிசார் ஒரு பெட்டி நிறைந்த பல லட்சம் பெறுமதியான ஹெறோயின் பொட்டலங்கள், இரண்டு பெரிய வாள்கள் என்பனவற்றோடு வரவேற்பறைக்கு வந்து அவற்றைத் தங்கள் பொலிஸ் கோஷ்டியின் தலைவனிடம் கொடுத்தனர்.

            அமிர் செல்லரில் தலை கீழாகத் தொங்குவதை முதன் முதலில் இரு பெண் பொலிசாரே கண்டனர். அவர்கள் கடுகடுத்த முகத்தோடு காணப்பட்டனர். ஏனைய பொலிசாரும் வந்து சேர்ந்தனர். அமிரை வளையால் இறக்கி மேலே வரவேற்பறைக்குக் காவிச் சென்றனர்.

            வேறு இரு பொலிசார் செல்லரைச் சல்லடை போட்டனர். அவர்களிடம் 160 ஸ்ரேலிங் பவுண் நோட்டுக் கட்டுக்கள் சிக்கின. அவர்களும் வரவேற்பறைக்கு வந்து சேர்ந்தனர்.

            ஒரு பொலிஸ்காரன் சமையலறையிலிருந்து ஒரு கிளாஸ் நீரோடு விரைந்து சென்று அமிரின் முகத்தில் தெளித்தான்.

            அமிரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல வந்துகொண்டு இருந்த அம்புலன்ஸ் வண்டியின் ஓசை தொலைவில் கேட்டது.

            கைகள்; முதுகுப்புறத்தில் விலங்கிடப்பட்ட கில்லாடி, சால்வை மூத்தான், ஊத்தைவாளி குகன், கோட்டான் சூட்டி ஆகியோருக்கு அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது மர்மமாக இருந்தது. அவர்களுக்குத் தெரியாது எல்லோரது வீடுகளும் சோதனையிடப்பட்டுச் சீல் வைக்கப்படவிருப்பது.

            மூத்தானை ஏற்றிக்கொண்டு ஒரு பொலிஸ் வாகனம் மூத்தான் வீடு நோக்கி நீலக்கண் பொலிஸ் அதிகாரி தலைமையில் சென்றது

            மூத்தானின் மனைவியும் பிள்ளைகளும் கைவிலங்கிடப்பட்ட மூத்தானையும் நீலக் கண் பொலிஸ் அதிகாரியையும் மாறிமாறிப் பார்த்துத் திகைத்தனர்.

இன்னும் வரும்...


No comments:

Post a Comment