Monday, 30 November 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்


கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 23 - காற்றில் மிதந்த கறுப்பு நரி

             அமிர் வேலை செய்யத் தொடங்கி ஐந்தாவது வாரம் ஒரு புதன்கிழமை. நேரம் காலை 8.15. வானம் வெளித்திருந்தது. இதமான காற்று வீசிக்கொண்டிருந்தது.

            இதமான காற்றுள்ளும் கறுப்பு நரி பதுங்கி இருந்து பாயும் என்பது அமிருக்குத் தெரியாது.

            யு508 நெடுஞ்சாலையின் ஆறு ஒழுங்கைகளையும்  நிறைத்து வாகனங்கள் எதிரும் புதிருமாக ஓடிக்கொண்டு இருந்தன. அவற்றுள் ஒன்று ஜீவிதாவின் இருண்ட பச்சை ஃபோட் கார். அது லண்டன் மாநகர எல்லைகளைக் கடந்து ஒருமணி நேரத்துக்கும் மேலாக வடக்குத் திசை நோக்கிப் படு வேகமாகப் பறந்து கொண்டிருந்தது. முன் ஆசனத்தில் ஜீவிதாவின் இடப் பக்கம் இருந்த அமிர் யன்னலுக்கு வெளியே பார்த்தான்.


            பரந்த தொடரலை வெற்றுப் பயிர் நிலங்கள். ஆங்காங்கு சிறுசிறு வைக்கோற் பொதிகள். பரந்த பயிர் நிலத்தின் மத்தியில் ஒரு சின்ன வீடு. அதன் ஓரம் உள்ள கட்டடத்தில் விவசாய இயந்திரங்கள். கொழுத்த மந்தைகள் மேய்ந்துகொண்டு நின்றன.

            அமிருக்கு இங்கிலாந்தின் கிராமப்புறக் காட்சிகளைக் காண்பதில் ஒருவித பயபக்தி. அக்காட்சிகளைப் பார்க்க ஜீவிதாவோடு செல்லும் இரண்டாவது பிரயாணமதுஇரண்டு கிழமைகளுக்கு முன்னர் தென் இங்கிலாந்தில் உள்ள சுவானேஜ் நகரக் கடற்கரைக்கச் சென்ற முதலாவது பிரயாணம் பாதிவழியில் குழம்பிவிட்டது. அதைப் போல இம்முறையும் ஜீவிதா குழப்பாமல் இருக்கவேண்டும் என்று வேல்ஸ் அம்மனை வேண்டிக்கொண்டே அமிர் காரில் ஏறியிருந்தான்.

            கடவுளிடம் வேண்டிக்கொண்டால் வெடிக்கப்போகின்ற பூகம்பம் ஒதுங்கிவிடுமா?  

இன்று எங்கே போகிறோம்?" அமிர் கேட்டான்.
ஒரு காட்டுப் பகுதிக்கு. அது மிகவும் ரம்மியமான இயற்கைக் காட்சிகள் மலிந்த இடம. வெள்ளைகள் விரும்பித் தரிசிக்குமிடம்"
காட்டின் பெயர் என்ன?"
குறொம்வெல் காடு. ஒரு துப்பறியும் நாவலில் அக்காட்டுக்கு இடப்பட்ட பெயர். அங்கு ஒரு புதர் மூடிய மாளிகை உண்டு."

            குறொம்வெல் என்ற சொல் அவனுக்குப் பிரித்தானிய வரலாற்றில் அவன் ஒலிவர் குறொம்வெல் பற்றிப் படித்த விந்தையான செய்திகளை ஞாபகமூட்டியது

            '17ஆம் நூற்றாண்டு. பிரித்தானிய பாராளுமன்றத்துக்கும் முதலாவது சாள்ஸ் மன்னருக்குமிடையில் அதிகாரம் தொடர்பாக உள்நாட்டுப் போர் மூண்டது. அவ்வேளை பாராளுமன்றப் படைகளுக்கு ஓலிவர் குறொம்வெல் தலைமை தாங்கி மன்னரின் படைகளை 1642இல் நேஸ்பி போர்க்களத்தில் தோற்கடித்தான்.

            ஆட்சி அதிகாரம் ஒலிவர் குறொம்வெல்லிடம் வந்தது. அவன் தனது நண்பர்கள் இருவரோடு  காட்டில் அமைந்த ஒரு மாளிகைக்குச் சென்று அங்குவைத்து மன்னருக்கு மரண தண்டனை விதிக்கத் திட்டம் தீட்டினான். அதன் பின்னர் வெஸ்ற்மினிஸ்டர் அபேயில் உள்ள பாராளுமன்றத்தில் முதலாவது சாள்ஸ் மன்னருக்கு எதிராக இராச துரோக குற்றம் சுமத்தி, 1649 ஆம் ஆண்டு அட்டாளையில் ஏற்றி மரணதண்டனை நிறைவேற்றினான்

            ஒலிவர் குறொம்வெல் இறந்து இரண்டாவது வருடம், 1660இல், இரண்டாவது சாள்ஸ மன்னர் அரசுகட்டில் ஏறினார். அவர் 1658இல் இறந்த ஒலிவர் குறொம்வெல்லின் உடலைப் புதைகுளியிலிருந்து தோண்டி எடுத்து, அவனது தலையைக் கொய்து வெஸ்ற்மினிஸ்டர் அபேயின் கோபுரத்தில் காட்சிக்குக் குத்திவைத்தார்.

            பின்னர் அந்தத் தலை காணாமல் போனது. அதனை களவெடுத்தவர்கள் அதனைக் கொண்டு போய் மன்னனைச் சிரச்சேதம் செய்யத் திட்டம் போட்ட மாளிகையின் கோபுரத்தில் குத்தி வைத்தனர். 'அந்த இடம்தான் குறொம்வெல் காடா?”

            அவனது வரலாற்று நினைவலைகள் அறுந்தன.

            அமிர் திரும்பித் தனது வலது பக்கம், கார்ச் சாரதி ஆசனத்தில் இருந்த  ஜீவிதாவை ஆசையோடு பார்த்தான். குருத்துப் பச்சை நிறச் சேலையில் என்றும் இல்லாதவாறு வானத்தில் இருந்து இறங்கிய தேவதை போல அழகு சொட்ட, ஜீவிதா தனது காரைப் படு வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தாள்.

             அமிர் தனது முடியை இலேசாகக் கோதியபடி யன்னல் ஊடாக ஒரு குதிரை  பரந்த மேய்ச்சல் அடைப்பில் மேய்வதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். அவனை ஜீவிதாவின் கேள்வி கொளுவி இழுத்தது.

நதியா ஏன் இந்தியாவுக்குப் போய்விட்டாள்? கொஞ்ச நாட்களாக உங்களோடுதான் ஓடிவிட்டாள் என்று சனம் கதைத்ததுகள்."
இப்பவும் கதைக்கிறார்களா?"
ஓம். நீங்கள் இந்தியா போய் அவளைக் கலியாணம் பண்ணப் போவதாகக் கதைக்கிறார்கள்."
நீ நம்புகிறாயா?"
சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி. நீங்களே சொல்லுங்கள் அவளை நீங்கள் விரும்புகிறீர்களா?" 

நதியா இந்தியாவில் இல்லை. இலங்கையில்.”
ஏன் இலங்கைக்குப் போனாள்?”
அவள் கறுப்பு நரி இயக்கத்தில் சேர்ந்துவிட்டாள்.”


            இருவரும் நீண்ட நேரம் பேசவில்லை. காரின் வேகம் சற்றுக் குறைந்தது.

தொடர்ந்து புதர்களும் விருச்சங்களும் நிறைந்த சன நடமாட்டமற்ற நிலக் காட்சிப் பிரதேசங்களினூடாக கார் ஓடியது.

            மீண்டும் ஜீவிதா அவனது தமிழரசு அரசியல் பற்றிக் கிண்டிக் கிளறி விசாரணை செய்துகொண்டு வாகனத்தை ஓட்டினாள்.

            'இவளென்ன இன்று வழமைக்கு மாறாக எதிரி வழக்கறிஞரைப் போலக் குறுக்கு விசாரணை செய்கிறாள்?” என்று மனதில் எண்ணிய அமிர் யன்னல் ஊடாக வெளியே பார்த்தான். காட்டுப் பிரதேசம்

            திடீரென ஜீவிதா காரை நெடுஞ்சாலையின் வலது அந்த ஒழுங்கையிலிருந்து இடது முதலாம் ஒழுங்கைக்குக் கொண்டு வந்தாள். காரின் வேகம் மிகவும் குறைந்துவிட்டது. வாகனங்கள் - கார்கள், பேருந்துகள், லொறிகள், கொன்ரெயினர்கள் - யாவும் ஜீவிதாவின் பச்சை ஃபோட் காரை முந்திச் சென்று கொண்டிருந்தன. பதினைந்து நிமிடங்களுக்கு மேலாகிவிட்டது

            அமிர் எதிரே நெடுஞ்சாலையை விலத்தி அதன் ஓரத்தில் ஒரு வெள்ளைக் கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைக் கண்டான். ஜீவிதாவின் கார் அதனை நெருங்கிய போது கறுப்பு உடை அணிந்த ஓர் ஒல்லி நெட்டையன் ஒரு கம்பைக் கையில் உயர்த்தியபடி காரின் ஓரம் நின்றான். அமிர் அவனைக் கவனிக்க முகத்தைத் திருப்பினான். அதற்கிடையில் ஜீவிதா காரை மீண்டும் புற ஒழுங்கைக்கு எடுத்து வேகமாக ஓடத் தொடங்கி விட்டாள்.

ஜீவிதா, அந்த வெள்ளைக் கார் ஓரம் ஒரு நெட்டையன். ஒற்றைக் கையில் ஒரு கம்பை உயர்த்திப் பிடித்தபடி நின்றான். அவதானித்தாயா?"
எந்த வெள்ளைக் கார்?" 
வீதி ஓரமாக உள்ள புல் நிலத்தில் நிறுத்தியிருந்த வெள்ளைக் காரைக் கவனிக்க வில்லையா?"
இல்லை." பொய் சொன்ன அவள் அக்கறைப்படுத்தாமல் காரை ஓட்டிக்கொண்டு இருந்தாள்.
நான் அவனை எங்கேயோ பார்த்த ஞாபகம்."
எங்கே பார்த்தீர்கள்?" அவள் குரலில் பதட்டம் நெளிந்தது. அதை அமிர் கவனிக்கவில்லை.

பிளெசற் பூங்காவில் இருதடவைகள் பார்த்த ஞாபகம்.” 

            அவள் ஏன் வெருளுகிறாள்? அவளின் முகம் ஏன் மாறிவிட்டது? அமிர் எண்ணிப் பார்க்கவில்லை.

            கார் மனித நடமாட்டமற்ற காட்டுப் பிரதேசத்தை ஊடறத்துக் கொண்டிருந்தது.

            அவள் தேடிய பாதசாரிகள் மேம்பாலம் எதிரே தெரிந்தது. காரின் வேகத்தைக்; குறைதாள். அது இடது பக்க முதலாம் ஒழுங்கைக்கு வந்துவிட்டது. மெல்லமாக ஓடியது. எதிரே அவள் தேடிய ஒடுங்கிய கிறவல் வீதி தென்பட்டது. கார் நெடுஞ்சாலையைவிட்டு இடக்கையில் இருந்த ஒடுங்கிய வீதிக்குத் திரும்பியது.

            அதுதான் ஜீவிதா தேடிய குறொம்வெல் காட்டு வீதி. இரு பக்கமும் சின்னச் சின்ன மரங்களும் புதர்களும்

            ஜீவிதா காரை ஒரு வளைவில் திருப்பிய சமயம் அவள் திடுக்கிட்டாள். பக்கக் கண்ணாடியினூடாக மீண்டும் பார்த்தாள். ஒரு சிவப்புக் கார் தனது காரின் பின்னே வருவதைக் கண்டாள். அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. கவனமாக அந்தக் காரைத் தலைக்கு மேல் உள்ள கண்ணாடியின் ஊடாகவும் பார்த்தாள்.

            முன் ஆசனத்தில் இரண்டு வெள்ளைகள். ஒரு பெடியன் காரை ஓட்டிக்கொண்டிருந்தான். அருகே ஒரு பெட்டை. சிவப்புக் கார் ஹோன் ஊதினது. முந்திச் செல்ல மீண்டும் ஹோன் ஊதியது. ஆனால் வீதியில் முந்தக் கூடியதாக இடமில்லை.

            மீண்டும் தலைமேல் கண்ணாடி யூடாகப் பார்த்தாள். பின் ஆசனத்திலும் இருவர். அங்கேயும் இரண்டு வெள்ளைகள். பெட்டையும் பெடியனும் என்பது ஜீவிதாவுக்குப் பிடிபடவில்லை.

            அந்த வெள்ளைகளின் கார் விடாமல் ஹோன் ஊதினது. அந்த ஓசை பொட்டல் காட்டில் பயங்கரமாக எதிரொலித்தது. ஜீவிதா காரைத் திருப்பினால் என்ன என்று யோசித்தாள். சென்ற முறை சுவானேஜ் நகர கடற்கரைக்கென்று சாட்டுச் சொல்லி அமிரை அழைத்துச் சென்று மனம் பேதலித்ததால் அரைகுறையில் திரும்பிய மனச் காட்சி தலைகாட்டியது.

            அச்சமயம் பின் ஆசனத்தில் இருந்த வெள்ளைப் பெடியன் யன்னலூடாகத் தலையை நீட்டிபக்கி, பக்கி" என்று கேலி பண்ணினான். வெள்ளைகளைப் பொறுத்தவரை தென் ஆசிய கண்டத்தவர்கள் அனைவரும் பக்கிகள்தான் - பாகிஸ்தானி யர்தான்

            பதிலுக்கு அமிர் யன்னலூடாகத் தலையை நீட்டிவெள்ளைச் சிணி நாய்கள்" என்று கேலி செய்தான்.

            மண் வீதி பள்ளமும் திட்டியுமாக இருந்தது. கார்கள் மெதுவாக ஊர்ந்து கொண்டு இருந்தன. கிண்டலும் கேலியும் ஏட்டிக்குப் போட்டியாகத் தொடர்ந்தன.

            அப்பொழுது முக்கோணக் காதுகள் குத்திநிற்க ஊளையிட்டுக் கொண்டு நின்ற இரண்டு செங்காரி நரிகள்; பாதையை விட்டுப் பாய்ந்து மறைந்தன.

            லண்டன் சிற்றி எல்லைகளுக்குள் இனபேதம் நிறபேதம் இருக்கின்ற போதிலும் அதனை அவ்வளவுக்குப் பெரிதுபடுத்த முடியாது. ஆனால் கிறேற் பிரிட்டனின் கிராமப்புறங்களில் நிலமை எதிர்மாறாக உள்ளது. அவர்கள் வேற்றினத்தவரின், குறிப்பாக ஆசிய நாட்டவரின், தலைகள்சிற்றிக்குவெளியே தெரிவதைச் சகித்துக்கொள்வதில்லை என்பதையே அந்தக் காரில் வந்தவர்களின் செயல்கள் காட்டின

            இரு கார்களும் அந்தப் பொட்டல் காட்டின் மத்தியில் உள்; ஓரு சிறு வெளியை அடைந்தன.

            அந்தச் சிறிய வெளியில் ஆங்காங்கு சிறிய மரங்கள் மட்டும். அந்த வெளியைச் சுற்றி அடர்ந்த ஓங்கி வளர்ந்த இருண்ட புதர்கள்

            சிவப்புக் கார் ஒரு மரத்தின் பின்னே நின்றது. அதற்குள் இருந்து இரண்டு பெட்டைகரும் இரண்டு பெடியன்களும் இறங்கினர். பெடியளில் ஒருவன் தடியன். மற்றவன் ஒல்லி. பல்கலைக்கழக மாணவர்கள். பெட்டைகளில் ஒருத்தி பெரியவள். ஒருத்தி சிறியவள். இருவரும் ஒரேமாதிரி தேகத்தோடு ஒட்டிய வெள்ளை பிளவுசும், தொடை தெரியும் கட்டைக் கறுப்பு பாவாடையும் அணிந்திருந்தனர். இருவரும் பாடசாலை மாணவிகள். திகதி குறித்து வந்தவர்கள்

            ஏறக்குறைய எண்பது மீற்றர் தூரத்தில் ஜீவிதாவின் பச்சை ஃபோட். வேறொரு மரத்தின் முன்னே நின்றது.

            ஜீவிதா தனது காரின் கதவோடு நின்றாள். அவளின் தோளில் ஒரு கறுப்புச் சிறிய பை தொங்கியது. அவள் உள்ளம் பயத்தால் நடுங்கியது. தான் ஒரு மடைச்சி என்று தன்னையே நொந்தாள்.   

            அவ்வேளை, எதிரேயிருந்து வந்த ஒரு சின்னி விரல் மொத்த உக்கிய மரச் சுள்ளி ஒன்று அமிரின் காதில் வந்து விழுந்து தெறித்தது. காயம் ஏற்படுத்தாத விழுகை. மெல்லிய ஒரு கீறல் மட்டும். அமிர் திரும்பிப் பார்த்தான்.

            மெலிந்த வெள்ளைப் பையனின் சேட்டை அது.

            அமிரின் உள் வளர்ந்த முற்கோபப் பேய் அவனின் முதுகில் ஏறிச் சவாரிவிடத் தொடங்கியது. அவன் சன்னதமாகினான். வார்த்தைகள் நெருப்பு ஈட்டிகளாகப் பறந்தன.

            அதே கிளையை எடுத்துத் திருப்பி எறிந்தான். அது எறிந்த ஒல்லி வெள்ளையின் வலது கன்னத்தில் கீறி மெல்லிய சிவப்பு அடையாளத்தை ஏற்படுத்த அவ்விடத்தில் இரத்தம் கசிந்தது. அவன் அமிரைவிட முற்கோபி.

            அவன் அமிரின்சேட் கொலரில்பிடித்தான். அவன் அமிரிலும் இளமை போல் தெரிந்தான். மெலிந்தவன் வேறு. உயரமும் குறைவு.

            இருவரும் வெறிபிடித்த இரு வேறு எல்லைப் பிரதேசத்து ஓநாய்கள் ஆகினர்.

            அமிரின் அடி எங்கோ பலமாக உறைத்திருக்க வேண்டும். அடியின் உறைப்புத் தாங்காமல் தடியன் வெள்ளையை உதவிக்கு அழைத்தான்.

            இரு வெள்ளைப் பெடியன்களும் அமிரை உருட்டி உருட்டி அடித்தனர், உதைத்தனர், காலில் பிடித்துக் கொற கொறவென இழுத்தனர், தலை மயிரைப் பிடித்துப் பிடுங்கிச் சிப்பிலி ஆட்டினர்.

            அவர்களோடு வந்த கழுத்தில் நீல கைக்குட்டை கட்டிய பெரிய பெட்டை ஒரு கொட்டனைத் தன் தடியன் சிநேகிதனிடம் கொடுத்து மேலும் ஏவிக் கொடுத்தாள்.
“ ‘பக்கிகளைஅடித்துக் கொல்லுங்கள்என்று கத்தினாள்.

            சிவப்புக் காரின் முன்னே உள்ள மரத்தின் கீழ் நின்ற, கழுத்தைச் சுற்றி சிவப்பு கைக்குட்டை சுற்றிய சின்ன பெட்டை, பெரிய பெட்டையின் செயலைக் கண்டித்துமடைச்சி, நீ பொல்லுக் கொடுத்திருக்கக்கூடாதுஎன்று கத்தினாள்

            அமிர் மரணத்தை நோக்க்p பிரயாணத்தை ஆரம்பித்து விட்டதாக ஜீவிதா உணர்ந்தாள். அமிர் கெஞ்சும் கண்களால் ஜீவிதாவைப் பார்த்தான். அவள் தன்னை விடுவிக்க ஏதாவது செய்யமாட்டாளா என்ற மன்றாட்டமான பார்வை.

            ஜீவிதா ஆவேசமாக அமிரைத் தாக்குகின்ற வெள்ளைகளை  நெருங்கிக் கும்பிட்டு மன்றாடினாள். அவர்கள் மசியவில்லை. அவளைத் தள்ளி விட்டார்;கள். அவள் விழுந்து எழும்பினாள்.

            அவளது வாழையடி வாழையாக வந்த இரத்தம் கொதித்ததா அல்லது அவன்மீது சொக்கிப்போன நினைவுகள் தூக்கத்திலிருந்து எழுந்தனவா என்பது அவளுக்கே தெரியாது.

            அமிரைச் சித்திரவதைப் படுத்திக்கொண்டிருந்த வெள்ளைகளிடமிருந்து, அவனைத் தான் காப்பாற்ற வேண்டிய கடமை தனக்கு இருப்பதாக அவளின் உள்மனம் உறுத்த - ஜீவிதா தனது வலது மார்பில் தவழ்ந்த கூந்தலை வீசிப் பின்பக்கம் எறிந்து கொண்டையாக இறுக்கி முடிந்தபடி - தோளில் படர்ந்த குருத்துப் பச்சை; சேலையின் தொங்கலை இழுத்து இடுப்பில் வரிந்து சொருகியபடி அமிரைப் பார்த்தாள். அவனது கடவாயிலிருந்து இரத்தம் கொட்டுப்பட்டது. அவனின் வெள்ளைச் சேட் செங்குருதியில் நீராடியது.

            அமிர்; ஜீவிதாவைப் பார்த்து கைப்பாசையில் ஏதோ சொன்னான்.

            மெலிந்தவன் சப்பாத்துக் கால்களால் அமிரின் தொண்டையில் உதை உதையென்று உதைக்க, தடியன் பெரிய பெட்டை கொடுத்த கொட்டனால் ஓங்கி நெஞ்சில் அடித்தான்.

            உயரம் குறைந்த பெட்டைஅடிக்க வேண்டாம்என்று கூச்சலிட்டாள். ஓடிப்போய்த் தனது ஒல்லிச் சிநேகிதப் பெடியனை இழுத்தாள். அவன் அவளைத் தள்ளிவிட்டான். அவள் விழுந்து எழுந்து மரத்தடிக்குச் சென்று சிணுங்கிக்கொண்டு நின்றாள்.

            அமிரின் வாயிலிருந்து இரத்தம் வழிந்தது.

            'இனி அமிர் உயிர் தப்பமாட்டார். இனி அமிர் உயிர் பிழைக்க மாட்டார். என் கண்களுக்கு எதிரிலேயே உயிரோடு கொல்கிறான்கள்என்று மனதுக்குள் வெந்த ஜீவிதா, சிவந்துவிட்ட கண்களின் கண்ணீரை இடக்கையால் துடைத்துவிட்டு, தனது தோளில் தொங்கிய கைப் பைக்குள் வலக் கையைச் செலுத்த, ஒரு முரட்டுப் பொருள் அவளது ஐந்து விரல்களதும் அழுங்குப் பிடிக்குள் இருப்பெடுத்தது

            கொடுக்குப் பிடிக்குள் இருப்பெடுத்த கறுப்பங்கி நெட்டையன் கொடுத்த பிஸ்டலை கைப் பைக்கு வெளியே உருவி எடுத்து, இருகைகளாலும் நெருடிப்பிடித்து படபடவெனச் சுட்டாள்

            சிவப்புக் காரின் மேலே மரக் கிளையில் இருந்த ஒரு நீண்ட வாலுடைய கறுப்புக் குருவி அஞ்சி நடுங்கிச் சிறகைப் படபடவென அடித்துக் 'கீகீஎன்று கீச்சிட்டுக்கொண்டு பறந்து மறைந்தது.


            எவருமே எதிர் பார்க்காத பேரச்சம் சூழ்ந்த அகோர சம்பவம். கணப் பொழுதில் பிரளயம் நடந்து முடிந்த கதை.

இன்னமும் வரும் ...

No comments:

Post a Comment