Monday, 2 November 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்


 

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 19 - போதும் ஆசாமி சகவாசம்

           
            இந்தியாவுக்கு நதியா சென்ற விமானம் முப்பத்தையாயிரம் அடி உயரத்தில் இன்னமும் பறந்து கொண்டிருந்தது. லண்டனில் நள்ளிரவுக்கு இன்னும் ஒரு மணிநேரமே இருந்தது.

            அயர்லாந்து வியாபாரப் பயணத்தை முடித்தபின், சூட்டியின் கார், லண்டன் மாநகர எல்லைக்குள் வந்துகொண்டு இருந்தது. அந்தக் காரின் பின் ஆசனத்தில் கில்லாடி தூக்கத்தில், 'அன்பே என் சின்ன வடிவு
ஆருயிரே என் தங்கமே
ஓடிவா என் மனக் குயிலே' என்று வாய்புசத்தி நதியாவோடு சரசமாடிக் கொண்டிருந்தான்.

            வீட்டை அண்மித்ததும் கூட்டாளிகள் கில்லாடியைத் தட்டி எழுப்பிவிட்டனர். அவன் காரிலிருந்து இறங்க முன்னரே தனது சகபாடிகளின் பங்கைக் கணக்கிட்டான்.
            கில்லாடி இலாபத்தில் 8,000 ஸ்ரேலிங் பவுணைத் தனக்கு ஒதுக்கினான். அவனோடு சேர்ந்து சென்ற கோட்டான் சூட்டி, ஊத்தைவாளி குகன், சால்வை மூத்தான் ஆகியோருக்குத் தலைக்கு 400 ஸ்ரேலிங் பவுண் கொடுத்தான். அதனைக் கண்டதும் குகனின் சின்னோட்டி மூக்குச் சினந்து விரிந்து சுருங்கியது. மூத்தானின் உச்சந்தலைக் குள்ள மயிர் ஆத்திரத்தில் எழுந்து நின்று காரிலிருந்து இறங்கிய கில்லாடியை வெறித்துப் பார்த்தது. அவர்கள் மத்தியில் அதுவரை இருந்து வந்த பாதாள உலக தர்ம நியதிப்படி, கில்லாடி தங்களுக்குக் குறைந்தது ஆளுக்கு 1300 ஸ்ரேலிங் பவுணாவது தந்திருக்க வேண்டும் என்று மூவரும் கில்லாடிக்குக் கேட்கவேண்டும் என்ற மனக் குமுறலோடு பேசியது காரில் இருந்து இறங்கி போய்க்கொண்டிருந்த கில்லாடியின் காதில் விழுந்தது

            அவன் யாழ்ப்பாணத்தில் கழுதைப்புலி இயக்கத்தில் இருந்த பொழுது அதிலும் பார்க்க எத்தனையோ புறங்கூறலைக் கேட்டு, அதற்கெல்லாம் சுடச்சுட மருந்து கொடுத்துப் பழக்கப்பட்டவன். அவன் அதனைப் பொருட் படுத்தாமல்பழக்கிக் காட்டுகிறேன்  வடுவாக்களுக்கு. என்னை விட்டால் வழியில்லாத பொறுக்கி நாய்கள். உது உவைக்குப் போதாதோ?’ என்று தன்னுள் நெருமியபடி காரை விட்டு இறங்கினான். சூட்டியின் கார் புறப்பட்டது.

            எண்ணாயிரம் பவுன் என்றால் இலங்கைப் பணத்தில் கிட்டத்தட்ட ஒன்பது லட்சம் ரூபா. மூன்று நாட்களில் தேடிய பணம். அந்த மகிழ்ச்சியில் ஒரு சினிமாப் பாட்டை விசில் அடித்தபடி கில்லாடி கதவைத் திறந்து வீட்டுக்குள் புகுந்தான்.

            நதியாவை எண்ணியதும் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது. 'மை டியர் சின்ன வடிவு. உன் அத்தான் வந்துவிட்டேன். உனக்கு 1200 பவுண் பெறுமதியான பரிசு கொண்டு வந்திருக்கிறேன் கண்ணே, ஓடிவாஎன்று குரல் கொடுத்தான்.

            அவளின் சரச நினைவுகள் அவனை அவசரப் படுத்தின. 'என் உயிரே நதியாஎன்று அழைத்தபடி முதலாம் மாடிக்குச் செல்லும் படிகளில் ஓடி ஏறினான்

            படுக்கை அறைக் கதவைத் திறந்து மின்சார வெளிச்சத்தைத்  துணைக்கு அழைத்தான். கட்டிலில் நதியா இல்லை. குளியல் அறையில் இருக்கிறாள் என்ற எண்ணத்தில் சிறிது நேரம் தாமதித்தான். அவள் வரவில்லை. விரைந்து போய்க் குளியல் அறையில் தேடினான்;. நதியா இல்லை. மனம் துடித்தது. தாவிச் சென்று இரண்டு குட்டி அறைகளிலும் தேடினான். நதியா இல்லை. அவன் நெஞ்சு எரிவது போல இருந்தது.

            உச்சி மொட்டந் தலையைத் தடவியபடி மிரண்டவன், படிவழியே இறங்கி ஓடிச் சென்று வரவேற்பறைக்குள் புகுந்தான். குங்குமப் பொம்மைதான் தெரிந்தது. அது வழமையைப் போல அவனுக்கு போதை ஊட்ட முயன்றது. அவன் ஒன்றும் புரியாமல் திக்கு முக்காடினான்

            வரவேற்பறையிலும் நதியா இல்லை. சமையலறைப் பக்கம் ஓடினான். பின் கதவைத் திறந்து தோட்டத்துள் தேடினான், தேடினான். எங்குமே நதியா இல்லை.

            அப்பொழுது அவன் தன் மனதுள் 'நான் மடையன். என் அன்பு நதியாவில் சந்தேகப்படக்கூடாது. எப்படித் தன்னைக் காணாது நான் அவத்தைப்படுகிறேன் என்பதை வேடிக்கை பார்க்கவே அலமாரியினுள் ஒளித்திருக்கிறாள் கள்;ளிஎன்று கூறியபடி மீண்டும் வீட்டுக்குள் புகுந்து மாடி அறைக்குச் செல்லும் படி வழியே ஓடியேறித் தனது படுக்கை அறையுள் பிரவேசித்து ஒரு அலமாரியைத் திறந்தான். உடுப்புகளை ஆவலோடு இழுத்தெறிந்தான். நதியா இல்லை. மற்ற அலமாரியைத் திறந்தான். அங்கும் நதியா இல்லை.

            'நான் மடையன். அவள் கீழே செல்லருள் ஒளித்திருக்கிறாள். பொல்லாதவள். என்னைத் தவிக்கவைத்து வேடிக்கை பார்க்கிறாள்என்று கூறிப் படி வழியே கீழே இறங்கி, நிலத் தளத்தை அடைந்து மீண்டும் படிவழியே கீழே செல்லருள் இறங்கி அங்கு நிறைந்து கிடந்த பழைய காட்போட் பெட்டிகளை ஆவேசமாகத் தூக்கிவீசிக் கண்மடல்களை விரித்துத் தேடினான். நதியா இல்லை.

            அவன் நெஞ்சு பொருமியது. சொற்கள் வெளியே வரமறுத்தன. அப்பொழுது 'நதியாவுக்கு அமிரென்றால் போதும். பனங்கட்டியை இலையான் மொய்க்கிற மாதிரி மொய்க்கிறாள்என்ற மூத்தானின் சொற்கள் பிரேதம் எடுக்கும் சமயம் கொட்டும் பறைமேள ஓசை போலக் காதுப்பறையைத் தகர்த்தன.

            'அமிரோடு ஓடியிருப்பாளோ?” என்ற எண்ணம் தலை நீட்டியபோது கில்லாடியின் உயிர்நாடி நின்றது. உள்ளம் கச்சான் காற்றில் சிக்கிய காவோலை போலப் பதறத் தொடங்கியது.

            அவன் உள்ளத்தில்  ஐயங்களும் குரோதங்களும் ஏறியிருந்து சவாரிவிடத் தொடங்கின. சமையலறைக்குள் சென்றுஃபிரிட்ஜைத்திறந்து ஒரு விஸ்கிப் போத்தலைக் காவிவந்து வரவேற்பறையில் அமர்ந்து போத்தலோடு வாய்க்குள் ஊற்றினான்.

            வாய் ஒன்று கூற, கண் வேறொன்று காண, தலை இன்னொன்று சொல்லத் தனது உச்சி மொட்டந் தலையைத் தடவிய பின்னர், அடிப் பிடரியில் கத்தையாகக் கிடந்த முடியைக் கோதி,

            'அந்த வடுவா மேட்டுக்குடிப் பெடியனோடு ஓடிவிட்டாளோ? இல்லை. அவள் சின்னப் பெட்டை. அந்த எழிய பயல்தான் ஏமாத்திக் கடத்திக்கொண்டு போய்விட்டான்என்று வாய்விட்டுப் புலம்பினான்.

            விஸ்கிப் போத்தலை எடுத்து மீண்டும் போத்தலோடு வாய்க்குள் வார்த்தான்.

            அவனது நரம்புகள் கதறின. இதயம் வெந்தணலாகக் கொதித்தது. மூளை விண்விண் என்று கூவியது. கண்கள் வெளியே பிதுங்கின.

            திடீரென இருகைகளாலும் தலையில் அடித்து 'ஐயோ முறையோ தருமமோ? சன்னதி முருகா பார்த்துக்கொண்டிருக்கிறாயா?” என்று வாய்விட்டு ஓலமிட்டான். அவனது ஒப்பாரியைச் சுவர்கள் எதிரொலிக்க மறுத்தன. அவனது தெல்லிப்பழை அரக்கச் செயல்களைக் கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன சுவர்கள் மரத்துப்போயிருந்தன.

            கில்லாடியைக் கவலை அமுக்கி முறுக்கிப் பிழிந்தது. துக்கம் வதைக்க சுவரில் தலையை மோதினான். பின்னர் நிலத்திலே விழுந்து புரண்டு, ஓவென்று கதறினான்.

            மீண்டும் எஞ்சியிருந்த விஸ்கியை விழுங்கினான். துக்கத்தின் கொடுமை குரல்வளையத் திருக, பெற்ற பிள்ளையை அநியாயமாகச் சாகக் கொடுத்தவன் போல ஒப்பாரி வைத்தான்.

என் உயிரே ஆருயிரே
உன் மேனியிலே விழுந்தாலும்
என் உள்ளம் கொதித்தது அம்மா.
உன்னைக் கண்டித்து ஒரு வார்த்தை
நான் கனவிலும் சொல்லியிரேன்.
ஏனம்மா ஓடினாய்?
என்ன கொடுமை நான் உனக்குச் செய்தேன்?
வயதுபோன கிழவனென்று ஓடினாயோ?
மண்டையிலே மயிர் இல்லை என்று ஓடினாயோ?
வா கண்ணே என் ஆசைக்கொழுந்தே!
நான் வைதிடமாட்டேன் என் ராசாத்தி.
வாரி அணைத்திடுவேன்,
வா கண்ணே."

            குங்குமப் பொம்மை மேலும் கீழும் தலையை ஆட்டி தன்னை நையாண்டி பண்ணுவது போல அவனுக்குப்பட்டது.

            அரை மணி நேரம் அழுதாயிற்று. அவன் திடுதிப்பென வரவேற்பு அறையைவிட்டு வெளியேறி தட்டுத் தடுமாறிப் படி வழியே ஏறி தனது படுக்கை அறைக்குள் புகுந்தான்.

            அவனது கண்களைக் கண்ணாடி மேசையில் மின்னிய ஒரு பொருள் கவர்ந்தது. அப்பொருளில் அவன் கண்கள் குத்தி நிலைத்தன. அவை இமை வெட்டாமல் பார்த்தன. அந்த பதினாலு பவுண் 22 கறற் தாலிக்கொடி அவனைப் பார்க்காது தலை குனிந்திருந்தது. அது நதியா லண்டனுக்கு வந்து மூன்றாவது நாள் மனோபார்க் முருகன் கோவிலில் வைத்து அவன் அவளுக்குக் கட்டிய தாலிக்கொடி.

            தாலிதான் தமிழ் அணங்கின் உயிரும் உலகமும். வாழ்விலும் தாழ்விலும் அவளோடு ஒன்றியிருப்பது. தாலி தமிழ்க் கலாச்சாரத்pன் மூல வேர். தான் மலைபோல நம்பிய நதியா அத்தாலியை அறுத்து வீசிப்போட்டு ஓடிவிட்டாள் என்று உணர்ந்தபோது அவன் இதயம் எரிமலையாகக் குமுறியது. மீண்டும் தலையில் அடித்து ஓலமிட்டான்.

            அவன் தங்கக் கூட்டுள் பத்திரமாகப் பொத்தி வைத்திருந்த கிளி கூட்டை உடைத்துப் பறந்து போய்விட்டது. ஏன்? உண்மையான காரணம் அவனுக்குப் பிடிபடவில்லை.

            தள்ளாடிய நிலையில் கட்டிலில் விழப்போன கில்லாடியின் கண்களை அங்கு எதிர்பார்த்திருந்த ஒரு பட்டுப்பொருள் கண் சிமிட்டி அழைத்தது. அது அவன் இந்தியாவிலிருந்து வரவழைத்து நதியாவுக்குக் கொடுத்த திருமணக் கூறைச்சேலை. ஆயிரம் பவுண் கூறை. இலங்கைப் பணத்தில் ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கு மேல். அது தன்னைப் பார்த்து நக்கலாகச் சிரிக்கிறது என அவனுக்கு பட்டது. அந்தச் சிரிப்பு தெல்லிப்பழையில் அவன் சுட்டுக் கொன்று வீமன்காம கொலனிப் பனங்கூடலில் வீசிய, இரத்தம் கொட்டித் துடிதுடிக்கும் மனித உடல்களை அவனுக்கு நினைவு படுத்தியது

            அந்தக் கூறைச் சேலையைக் கையில் எடுத்தான். அதனுள் இருந்து உலுப்பிய புளியம்பழம் போல பொருட்கள் பல பொல பொலவெனக் கொட்டுப்பட்டன. கண்கள் மிரண்டு பார்த்தன. துகள்துகளாகக் கிழித்த புகைப்படத் துண்டுகள். கட்டிலில் ஐந்து புகைப்பட அல்பங்கள் இருந்தன. அவசர அவசரமாக அவற்றை எடுத்து ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்த்தான்இன்னும் நூற்றுக் கணக்கான புகைப்படங்கள் எதுவித சேதமுமின்றி இருந்தன. தன்னுடைய தனிப்படங்கள் கிழிக்கப் படாமல் பத்திரமாக இருப்பதைக் கண்டான். ஆனால் தானும் நதியாவும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களோ, நதியாவின் தனிப் புகைப்படங்களோ அல்லது நதியாவின் தலை தெரியும் எந்தப் புகைப்படமுமோ அவனுடைய கண்களில் படவில்லை. அவற்றைத்தான் குறுணி குறுணியாகக் கிழித்திருந்தாள். அப்புகைப்படத் துகள்கள் அவனைப் பார்த்துப் 'போதுமடா சாமி சம்சார சகவாசம். போய் வாறேன் சாமிஎன்று கூறுவது போல அவனுக்குப் பட்டது.

            அந்தப் படங்களை அவ்வாறு சேதப்படுத்த முழு இரவு அவளுக்குத் தேவைப்பட்டிருக்கும் என்று அவன் மனம் கூறியது. அவனுக்கு நதியாவின் மனோநிலை புரியத்தொடங்கியது. ஏன் வெறுக்கிறாள்? அதுதான் அவனுக்கு மூடுமந்திரமாக இருந்து அவனைப் பிச்சுப் பிடுங்கி வதை செய்தது.

            மீண்டும் ஓவென்று கதறிக் கட்டிலில் புரண்டு அழுது முடிந்து எழுந்தபொழுது, ஓடியவள் தன் நகைகளை எல்லாம் அள்ளிக் கொண்டு போய்விட்டாள் என்ற ஆத்திரம் சதுர்புரிய கட்டிலைவிட்டுத் தாவி அலமாரியைத் திறந்து நகைகளை எல்லாம் ஒவவ்வொன்றாக எண்ணிப் பார்த்தான். அவன் வாங்கிக் கொடுத்த 210 தங்கப் பவுண் நகைகளும் அவனைப் பரிதாபமாகப் பார்த்தன. யாழ்ப்பாணத்திலிருந்து வரும்போது நதியா கொண்டு வந்த நகைகள் வைத்த கண்ணாடிப் பெட்டியைத் திறந்தான். வெற்றுப் பெட்டியாக இருந்தது.

            நகைகளை அள்ளிச் செல்லாத திருப்தியில் பெருமூச்சு விட்ட கில்லாடியின் மனக் கண்களில், நதியா அமிரோடு ஓடுவது போலத் தெரிந்ததை அடுத்து, அவன் மன உளைச்சல் அவனைப் பிய்த்துப் பிடுங்கியது. அடுத்து அவனது மனக் கண்களில் அவள் அந்த நெடிய பிராமணன் போன்ற உடம்போடு அணைவது போன்ற பிரமை. அவன் செவ்விரத்தம் ஊழிக் கூச்சல் போட்டது.

            மனக்கண் காட்சிகள் அறுந்தன. சேலைகள் எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு பேய்விட்டாள் என்ற வெப்பியாரம் தலை எடுத்தது. எழுபத்தாறு சேலைகள். யாழ்ப்பாணத்தில் இரண்டு குமர்களைக் கரைசேர்க்கப் போதுமான பணத்துக்கு சென்னையில் வாங்கியவை. ஒவ்வொன்றாக எண்ணினான். அவை அவனைப் பார்த்துச் சரசரத்துப் புறுபுறுத்தன.

            சேலைகளை எரிச்சலோடு நோக்கிய கில்லாடி, திடீரென விழுந்தடித்துக்கொண்டு படுக்கை அறையைவிட்டு வெளியேறிப் படிக்கட்டு வழியே தடுமாறி இறங்கி, தளத்துக்கு வந்து, பின்னரும் படிவழியே விரைந்து செல்லருக்குள் இறங்கி ஒரு கழிவு உடுப்புக் குவியலை விசரனைப் போலக் கிளறி, ஒரு கறுப்பு பொலித்தீன் பேக்கை இழுத்து எடுத்துத் திறந்து கொட்டினான். எல்லாம் பணக் கட்டுகள். ஐம்பது ஸ்ரேலிங் பவுண் நோட்டுக் கட்டுகள். ஒவ்வொன்றாக எண்ணினான். 160 கட்டுகள். ஒவ்வொரு கட்டிலும் பத்தாயிரம் பவுண். பெரு மூச்சுவிட்டான். 'அவள் ஒரு கட்டைக்கூடக் கொண்டு போகவில்லை.” 

            'நதியாவுக்கு அமிர் என்றால் போதும், பனங்கட்டியை இலையான் மொய்க்கிற மாதிரி மொய்க்கிறாள்என்ற மூத்தானின் குசுகுசுப்;பு அவன் காதுகளில் திரும்பவும் ஒலிக்க சோகமும் கோபமும் தாங்காது, 'நீ நம்பிக்கைத் துரோகி. பெண் குலத்துக்கே அவமானச் சின்னம். லண்டன் வாழ் முழு பெண் இனத்துக்குமே இழுக்குத் தேடிய பரத்தை நீ. யாழ்ப்பாணத்திலே வடலிகள் பனைகள், கள்ளிப் பற்றைகள் பனங்கூடல்கள் வேம்புகள் இலுப்பைகள், சுடலைப் பூவரசுகள்கூட உன்னைக் கள்ளப் புருசனோடு ஓடிய தேவடியாள் என்று திட்டிக்கொட்டும்என்று கத்தினான்.

            அப்பொழுது தொலை பேசி கிறீங் கிறீங் என்று விடாமல் அடித்தது. அதனைக் கேட்ட கில்லாடி நதியாதானோ என்ற ஐயத்தில் செல்லரிலிருந்து படிகள் வழியே விழுந்தடித்து மேலே ஏறி வரவேற்பறைக்குள் புகுந்து றிசீவரை எடுத்துஹலோ" என்றான்.
ஹலோ கில்லாடி அண்ணை, நதியா நித்திரையோ? முழிப்போ?" என்ற மூத்தானின் குரல் கேட்டது.
            நதியா ஓடிவிட்டாள் என்ற செய்தியை மூத்தானுக்குச் சொல்ல முடியுமா?  “நதியா நல்ல நித்திரை. என்ன நீ இன்னும் முழிப்போ?" கில்லாடி வினாவினான்.
அண்ணை, ஒரு தகவல் கேள்விப்படுகிறேன். உண்மையோ என்று தெரியறிங்பண்ணினனான்" என்ற சால்வை மூத்தானின் குரல் கில்லாடியைக் கிள்ளியது. அதைக் காட்டிக் கொள்ளாமல்,
என்ன தகவல்? யார் சொன்னது?” என்றான்
என்னுடைய மனுசி சொன்னவ."
என்ன சொன்னவ?" கில்லாடி பதட்டமாக வினாவினான்.
      “நதியாவை அமிரோடு பிளெசற் பூங்காவிலே கண்டவவாம். அவன் எங்களை பொலிசுக்கு அண்டிக் கொடுப்பான். கவனம் கில்லாடி அண்ணை. நான் முந்தியே சொன்னனான். ‘நதியாவுக்கு அமிர் என்றால் போதும். பனங்கட்டியை இலையான் மொய்க்கிற மாhதிரி மொய்க்கிறாள்என்றுஒருமுறை இனித்தா பிறகு இலையான் வலைக்காலே நுழைந்து பறந்திடும். கவனம் அண்ணே" என்று கூறிய பின்னர் சால்வை மூத்தானுக்குக் கலக்கமாக இருந்தது. தான் சொன்னது சரியோ பிழையோ என்று புரியாமல் தடுமாறினான்.
            கில்லாடியோ மலைத்துப் போனான். நதியாவைச் சுற்றிய அவனது சிந்தனை அவனைக் கொதித்துக் குமுறும் இலுப்பெண்ணெயில் போட்டு எடுத்தது.
            புருசனை மட்டுமல்லப் பெற்ற பிள்ளையையும் கைகழுவிப் போட்டுக் கள்ளப் புருசனோடு ஓடுகிற கலாச்சாரக் கேவலங்கள் லண்டனிலே பெரிதாக இல்லை. அந்தச் சின்னக் கணக்கிற்குள் நதியாவுமா என்ற கேள்வி கில்லாடியைக் கிழித்தது. ஏன் என்றால் அவன் அவளை சகல இராசபோக சுகங்களோடும் இராணிபோல வைத்திருந்தவன். கில்லாடியின் காதிலேபோன்இருந்தது. ஆனால் மறுமுனையில் சால்வை மூத்தான்றிசீவரோடு லைனில்நிற்கிறான் என்பதை மறந்து அவனது உணர்வுகள் எங்கோ திசை தெரியாமல் அலைந்து கொண்டிருந்தன.

என்ன கில்லாடி அண்ணை, பேசாமல் இருக்கிறாய்? நான் சொன்னதுக்குக் குறைவிளங்காதை அண்ணை. நான் போனை வைக்கட்டே அண்ணை?" என்ற சால்வை மூத்தானின் குரலைக் கேட்ட கில்லாடி, “டே மூத்தான் ஒருக்கா உடனே இங்கே வாறியா? ஒரு அவசர வேலை" என்று கில்லாடி நடுச் சாமத்தில் கூறியது, சால்வை மூத்தானுக்கு மேலும் சந்தேகத்தைக் கிளப்பியது. ‘உன்டை மனுசியைப் பற்றி ஏதன் ..............’ என்று  கேட்க விரும்பியவன் அப்படிக் கேளாமல்,  “அண்ணை, விடிய வந்தால் என்ன?" என்றான்.
இல்லை. தலை போகிற காரியம். உடனே வா மூத்தான்."
அவசரம் என்றால் வருகிறன் அண்ணை. விசயத்தையும் சொல்லுறாய் இல்லை" என்றான் சால்வை மூத்தான் ஒன்றும் புரியாமல்.
எல்லாம் நல்லா முற்றிப் போச்சுது. நீ வருகிற நேரம் சூட்டியையும் குகனையும் கூட்டிக்கொண்டு வா. அந்த பொடிப் பயலுக்குப் பழக்கிக் காட்டுகிறன். நான் அவனுக்கு லண்டன் காட்ட இப்ப அவன் எனக்கு வாசிங்டன் காட்டுகிறான்." 
யார் அண்ணை?"
அந்த படித்த வடுவாதான். நீ உடனே இங்கே வா."
சரி அண்ணை. ஒரு அரை மணித்தியாலத்திலே வந்திடுகிறோம்" என்று கூறினான். அவனுக்குக் கிளி கூட்டைப் பிய்த்துக் கொண்டு பறந்து விட்டுதோ என்ற ஐயம் மின்வெட்டியது.

டே மூத்தான். அந்த பிஸ்டலையும் கையோடு கொண்டு வா. வந்தாப்பிறகு சொல்லுகிறன். ஒரு பத்து பதினைந்து தோட்டாக்களும் கொண்டுவா. மிச்சம்போனிலேவேண்டாம். இங்கே வா மூத்தான், எல்லாம் விபரமாகச் சொல்லுகிறேன்."

இன்னமும் வரும்

No comments:

Post a Comment