Friday, 20 March 2026

மாதுளை மரம் - எனக்குப் பிடித்த கதை

 

T . தம்பிமுத்து
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட T . தம்பிமுத்து எழுதி 'நியூ யோர்க்கர்' சஞ்சிகையில், 05 நவம்பர் 1954-இல் வெளியாகிய சிறுகதை :The pomegranate tree.

தமிழில்: எழுத்துக்கினியவன்

சில மனிதர்களுக்கு ஒரு விசேடமான பலவீனம் இருக்கும்; அதற்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்து விடுவார்கள், தங்களுக்கு உயிரானவர்களின் மனமகிழ்ச்சியைக் கூட அர்ப்பணித்து விடத் தயங்க மாட்டார்கள். இதற்கு ஒரு நல்ல உதாரணம் மகாபாரதத்தில் திரௌபதியைப் பணயமாக வைத்து இழந்த தர்மன். எனது இரத்தின மாமாவின் பலவீனம் வட இலங்கையின் அச்சு வேலிக் கிராமத்தில், அவருடைய வீட்டுக் கிணற்றடிக்கு அருகில் வளரும் மாதுளை மரத்தின் பழங்களுக்குத்தான்.

விறாந்தைக்குக் கீழே கல்லாசனத்தின் மேல் விரித்திருந்த புலித்தோலில் உட்கார்ந்து மாதுளம் பழக் கொட்டைகளைச் சுவைத்தபடி இரத்தின மாமா எனக்கும் என் சகோதரர்களுக்கும் சேர் வால்டர் ஸ்காட்டின் கதைகளுக்குத் தானும் கொஞ்சம் கண்ணும் மூக்கும் வைத்து ஆலாபிப்பார்: “அப்போ அந்தக் கருப்பு மறவன் கடிவாளத்தைப் பற்களால் கடித்துப் பிடித்தபடி குதிரையை ஓட்டிவந்து, ‘ஹோ ஐவன்ஹோ! ஹோ ஐவன்ஹோ!’ என்று கூவினான். ரெபெக்கா வெகு உயரத்திலிருந்து, தன் கூந்தல் ஒரு கார்மேகம் மாதிரிக் கவிழ்ந்து விழக் கீழே பார்த்தாள்…இந்த மாதுளம்பழம் அருமை. அச்சுவேலிக் கிணற்றடி மாதுளைக்குப் போட்டியாக எதுவுமே கிடையாது!”

ஆங்கிலேயர் மாதுளம்பழக் கொட்டைகளைக் கரண்டியால் கோதி அள்ளி உண்ணும் முறை முழுப்பிழை என்று இரத்தின மாமா சொல்வார். கரண்டியால் கோதி எடுத்தால் ஏதோ கற்பூரத் தைலம் சாப்பிட்டது போல மாதுளம்பழத்தின் உருசியையே கெடுத்துவிடும். அது மட்டுமல்ல, மாதுளங் கொட்டைகளை விழுங்கக் கூடாது. ஒரு கொஞ்சத்தை வாயில் போட்டு ஒன்றிரண்டு முறை மென்று மாதுளம்பழச் சாற்றை, சிப்பிமீன் சாப்பிடுகிற மாதிரி உறிஞ்சி எடுத்தபிறகு கொட்டைகளைத் துப்பிவிட வேண்டும். மரத்திலேயே பழுத்த புத்தம்புது மாதுளம்பழம் கொஞ்சம் எலுமிச்சை கலந்த ஷாம்பேன் மாதிரி இருக்கும். அச்சுவேலிக்கு வெளியே இவ்வளவு உருசியான மாதுளம்பழத்தைக் கண்ட ஞாபகமே எனக்கு இல்லை.

மாரிகாலத்தில் நானும் எனது ஐந்து சகோதரர்களும் எங்கள் பெற்றோருடன் கொழும்பு நகரத்தில் வசித்தோம். அங்கேதான் பள்ளிக்கூடம் போனோம். கோடை விடுமுறைகளுக்கு அச்சுவேலிக்குப் போய்விடுவோம். அப்பப்பா உயிரோடிருக்கும் வரை அவருடன் தங்கியிருந்தோம். அவருக்குப் பிறகு இரத்தின மாமாவுடன் அல்லது ஆறு மாமவுடன். இரத்தின மாமா எனது அப்பாவின் ஒன்றுவிட்ட மைத்துனர். ஆறு மாமா அம்மாவின் மைத்துனர். இலங்கை உறவுமுறைகளின் படி இவர்கள் எனக்கும் என் சகோதரர்களுக்கும் மாமாக்கள்தான். இலங்கையில் மாமாக்கள் மருமக்களுக்கு அளவுமீறிய செல்லம் கொடுப்பது வழக்கம். ஆகவே அச்சுவேலிக்குப் போவதென்றால் எங்களுக்குக் கொள்ளைப் பிரியம்.

ஆறு மாமா ஒரு சன்னியாசி மாதிரியான மெலிந்த சிறிய உருவம் கொண்டவர். செம்மையாகச் செதுக்கிய கழுகு போன்ற தலையில் நரைத்துப்போன வெள்ளைத் தலைமுடி. ஒரு பறவை மாதிரி கொஞ்சம் பதட்டமான அசைவுகள் கொண்டவர். எந்த விஷயத்தையும் கவனித்துச் செய்கிற கறார்ப் பேர்வழி. கீரிமலைக் கேணியில் குளித்துப் பிறகு பிராமணக் கடையில் மதிய உணவு அருந்த எங்களைக் காரிலோ குதிரை வண்டியிலோ அனுப்பும் போது எல்லோருக்கும் தனித்தனியாகத் துவாய்களும், சாப்பிட்டபின் குட்டித்தூக்கம் போடப் பாய்களும் கவனமாக எடுத்து வைப்பார். பிறகு அந்தப் பயணத்துக்குத் தேவையான சரியான அளவு பணத்தை எடுத்துத் தன் மகன் - எங்கள் மைத்துனன் - ராஜா கையில் வைப்பார். ஏதாவது ஏற்பாடுகள் செய்யப்படாத மாலைகளில் எங்களை உள்ளான் குருவியோ புறாவோ வேட்டையாட அழைத்துச் செல்லும்படி ராஜாவைப் பணிப்பார்.

ராஜா உயரமாக அழகாக இருப்பான். கவிதைகளை, முக்கியமாக ஔவையாரின் நாலடிச் செய்யுள்களை, மேற்கோள் காட்டுவதென்றால் அவனுக்கு அலாதிப் பிரியம். இப்போது அவன் ஒரு அரசாங்க அதிபராகக் கடமையாற்றுவதால் நடைமுறைகளையும் பல்வேறு படிவங்களைப் பூர்த்தி செய்வதையும் சீராக நடத்துவதிலேயே கவனமாக இருக்கிறான். ஆனால் என் நினைவில் அவன் ஒரு கவிஞன்தான். வேட்டை என்பது திறந்த வெளிகளிலும், பனங்காணிகளிலும், வயல்வெளிகளிலும், பறவைகளிலும் காணக்கூடிய கவிதைகளின் ஒரு அம்சம்தான். சிலவேளைகளில் சிறுமிகளைப் பற்றிக் கேட்டு ராஜா எங்களைக் கேலி செய்வான். “வளர்ந்த பிறகு ஆரைக் கட்டுவாய்? நளினியா சகுந்தலாவா சாவித்திரியா?” நான் “சாவித்திரி!” என்று சிலவேளைகளில் கத்துவேன். அல்லது “சகுந்தலா!” ஒரே கும்மாளம்தான். திரும்பி வரும்போது பென்னாம்பெரிய பனையோலைகள் சரசரக்க, சில்வண்டுகள் இருண்ட பனங்காணிகளில் களேபரம் செய்ய, ஒற்றைக் காபைட் விளக்கெரியும் தெருவோரக் கடையில் நிறுத்தி ஒரு கோர்வை வடையும் எலுமிச்சம்பழச் சாறும் வாங்கித் தருவான். ஆறு மாமா வீட்டுக்குப் போகும் போது பெட்டிபெட்டியாக வாணங்களும் பட்டாசுகளும் இருக்கும் என்று எங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். கோப்பாய்க்கு அருகிலுள்ள முடிவில்லாத 'நிலாவரை' கிணற்றைப் பார்க்கப் போகும்போதும் அல்லது விடுமுறை முடிந்து வீடு திரும்பும்போதும் ஆறு மாமா எங்களுக்கு ஆளுக்கொரு வெள்ளி ரூபாய் நாணயம் தருவார்.

Friday, 13 March 2026

வேடம் தாங்கல் - சிறுகதை


அசோகன் புரண்டு புரண்டு படுத்தான். உறக்கத்திற்கும் விழிப்புக்குமிடையே மனம் பெண்டூலமாக ஆடிக்கொண்டிருந்தது. அலாரம் வைத்துவிட்டுப் படுத்தும் அவனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. அலாரம் என்பது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மனிதர்களுக்கு மாத்திரம் தான்.

கடந்த சில வருடங்களாக இழுபறி நிலையில் இருந்துவந்த `அந்த’ வீதி புனரமைப்புத் திட்டம் நடைமுறைக்கு வர இருந்தது. `அந்த’ வீதியின் பெயரை உச்சரிப்பதற்கே பலருக்கும் தயக்கமாக இருந்தது. வருடத்திற்கு குறைந்தது ஏழெட்டுப் பேரையாவது காவுகொள்ளும் அந்த வீதியின் கூனலைத் தட்டி நிமிர்த்த, அரசு இன்று அனுமதி வழங்கிவிட்டது.

அந்தத் திட்டத்தின் முக்கியமான முதன்மை எதிரி பறவைகள் என்றால் நீங்கள் வியந்து போவீர்கள்! அலாஸ்க்கா, சைபீரியா போன்ற பிரதேசங்களில் இருக்கும் சில பறவைகள், அங்கே நிலவும் குளிர் காலநிலையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இங்குள்ள வெப்பத்தை நாடி வலசை வருகின்றன. ஏறக்குறைய 35 விதமான 2 மில்லியன் நீர்ப்பறவைகள் இப்படி வருடாவருடம் வந்து போகின்றன. அவை அந்த வீதிக்கு அருகாமையில் இருக்கும் காடுகளில் தமது வசந்தகாலத்தைக் குதூகலமாகக் கொண்டாடி ஞாபகச்சின்னமாக இனவிரித்தியும் செய்துகொண்டு, இங்கே குளிர்காலம் ஆரம்பிக்கும்போது மீண்டும் தமது பழைய இடங்களுக்குத் திரும்புகின்றன.

பறவைகளுக்குச் சார்பாக வாதாட `விலங்குகள் – பறவைகள்’ நலன் பேணும் அமைப்புகள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. எப்பொழுதெல்லாம் விபத்து நடந்து பிரச்சினை வலுக்கின்றதோ, அவர்கள் அவுஸ்திரேலியாவின் எந்த மூலை முடுக்குகளில் இருந்தாலும் மோப்பம் பிடித்து வரிசைகட்டி வந்துவிடுவார்கள். விபத்து நடக்கும் வீதியின் இருமருங்கிலும் நின்று, பதாகைகளை ஏந்தியவண்ணம் தமது கண்டனங்களைத் தெரிவிப்பார்கள். விபத்து நடக்கும் பகுதிகளுக்கு அருகில் இருக்கும் மரங்களைத் தறிப்பதால் காட்டின் சில பகுதிகள் பறிபோகும், பறவையினங்களின் வருகையில் வீழ்ச்சி ஏற்படும், வலசை வரும் பறவைகளின் வாழ்வுக்கு குந்தகம் ஏற்படும் என்பது அவர்களின் விவாதம்.

வசந்த காலத்தில் மட்டும் பறவைகள் வந்து போவதால், வருஷம் பூராவும் மக்கள் இன்னல் கொள்வதா என்பது அரச தரப்பினரின் ஆதங்கம். மேலும் காட்டின் ஒரு சிறு பகுதியை அழிப்பதால், பறவைகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்படாது என்பது அவர்கள் கருத்து.

Tuesday, 10 March 2026

காதல் காற்சட்டை - எனக்குப் பிடித்த சிறுகதை



அல்வாயூர் மு.செல்லையா

யாழ்ப்பாணம் ஒட்டியுள்ள ஒரு பகுதி, புறநகர் என்று சொல்லலாம். அதில் இரண்டு பரப்புக்காணி. தென்னம் கமுகுகள் மாமரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கும் வளவு. ஒரு வீடு ஒரு மால் ஒரு அடுக்களை இந்த மூன்று வீடுகளும் ஓலைக்குடிசைகளாக இருந்தாலும் புனிதம் உடையவைகளாய் காணப்பட்டன.

விரத காலங்களில் வீடுகளும் திண்ணைகளும் மெழுகப்பட்டிருக்கும் அழகே அலாதியானதுதான். பக்கத்திலுள்ள வீடுகளில் வசிக்கும் சில பெண்கள் கூட மெழுகிய இந்த திண்ணைகளிலே வந்து இருந்துகொண்டு புகழுவார்கள்.

“பத்தினி அக்கையின் வீடுகள், எங்கள் கல்வீடுகளிலும் பார்க்க குளிராகவும் கவர்ச்சியாகவும் இருக்கின்றன. இது பக்கத்து வீட்டாருடைய பாராட்டுரை.

அந்த வீடுகளிலே பத்தினி என்ற தாயும் பார்வதி என்ற மகளுமே வாழுகின்றனர். பிறந்த காலத்திலே பத்தினி என்ற பெயரைப் பிதாமாதாக்கள் என்ன காரணத்தினால் வைத்திருப்பார்களோ தெரியவில்லை. ஆனால் இப்போது அவள் பத்தினியாகவே காலங்கழித்து வருகின்றாள்.

Friday, 16 January 2026

சொல்லில் வருவது பாதி - பாகம் 2 - அத்தியாயம் 26

மொத்தம் 44 அத்தியாயங்கள் கொண்ட இந்த நாவல், மூன்று பாகங்களைக் கொண்டது.

பாகம் 1 – ஸ்ரீதர்

பாகம் 2 – ஆராதனா

பாகம் 3 – திருமணம்

சொல்லில் வருவது பாதி – நாவல் தற்போது விற்பனையில் இருப்பதால்,

பாகம் ஒன்றிலிருந்து முதலாவது அத்தியாயத்தையும், பாகம் இரண்டிலிருந்து இருபத்தியாறாவது அத்தியாயத்தையும் இங்கே தருகின்றேன்.

ஆர்வம் உள்ளவர்கள் தற்போதையை சென்னை புத்தகக் கண்காட்சியில் – சுவாசம் பதிப்பகத்தில் இந்த நூலைப் பெற்றுக் கொள்ளலாம். இலங்கையில் வெண்பா புத்தகசாலையில் பெற்றிக் கொள்ளலாம்.


Thursday, 15 January 2026

சொல்லில் வருவது பாதி - பாகம் 1 - அத்தியாயம் 1

 

மொத்தம் 44 அத்தியாயங்கள் கொண்ட இந்த நாவல், மூன்று பாகங்களைக் கொண்டது.

பாகம் 1 – ஸ்ரீதர்

பாகம் 2 – ஆராதனா

பாகம் 3 – திருமணம்

சொல்லில் வருவது பாதி – நாவல் தற்போது விற்பனையில் இருப்பதால்,

பாகம் ஒன்றிலிருந்து முதலாவது அத்தியாயத்தையும், பாகம் இரண்டிலிருந்து இருபத்தியாறாவது அத்தியாயத்தையும் இங்கே தருகின்றேன்.

ஆர்வம் உள்ளவர்கள் தற்போதையை சென்னை புத்தகக் கண்காட்சியில் – சுவாசம் பதிப்பகத்தில் இந்த நூலைப் பெற்றுக் கொள்ளலாம். இலங்கையில் வெண்பா புத்தகசாலையில் பெற்றிக் கொள்ளலாம்.


Friday, 9 January 2026

சொல்லில் வருவது பாதி (நாவல் ) – பாகம் 2 (ஆராதனா)

 

இந்தக் கதையானது 1970-களில் தொடங்கி ஈழப் போர்ச் சூழலில் ஒரு குடும்பம் எதிர்கொள்ளும் சமூக மற்றும் வாழ்வியல் மாற்றங்களை விவரிக்கிறது. குமரேசன், சிவகாமி ஆகியோரின் மகளான ஆராதனா பிறந்தது முதல் அவளது பூப்புனித நீராட்டு விழா வரையிலான நிகழ்வுகளையும், சிவகாமி தனது உறவினர்களிடம் காட்டும் அன்பும் அவர்களால் வஞ்சிக்கப்படுவதையும் இது சித்திரிக்கிறது. போர் தீவிரமடையும் போது, மகன் அகிலன் இயக்கத்தில் இணைவதும், இந்திய அமைதிப்படையின் வருகையால் குடும்பம் சிதறுவதும் விரிவாகக் கூறப்படுகிறது. உறவுகளுக்கு இடையிலான பொறாமை, நிறவெறி மற்றும் சொத்துத் தகராறுகள் ஒருபுறமும், போர் தரும் இடப்பெயர்வும் உயிரிழப்புகளும் மறுபுறமுமாக இக்கதை நகர்கிறது. இறுதியில், ஊரை விட்டு வெளியேறும்போது முதியவரான சண்முகசுந்தரத்தை விட்டுச் செல்வதும், அவரைத் தேடிச் சென்ற மகன் இளங்கோ காணாமல் போவதும் போரின் கொடூரத்தை உணர்த்துகின்றன. இத்தொகுப்பு ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் சிதைவையும், ஈழ மண்ணின் வரலாற்றுத் துயரத்தையும் ஆராதனாவின் வாழ்வின் ஊடாகப் பதிவு செய்கிறது.

Thursday, 8 January 2026

சொல்லில் வருவது பாதி - பாகம் 1 (ஸ்ரீதர்)

 இந்த ஆதாரங்கள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிலவிய போர்க்காலச் சூழலையும், அதன் விளைவாகச் சாதாரண மக்கள் எதிர்கொண்ட வாழ்வியல் துயரங்களையும் ஆழமாகப் பதிவு செய்கின்றன. 1970-களில் தொடங்கி 1980-களின் இறுதி வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கிய இந்தக் கதைகள், இயக்கங்களுக்கு இடையிலான மோதல்கள், கட்டாய ஆள்சேர்ப்பு மற்றும் இராணுவ அடக்குமுறைகளை விவரிக்கின்றன. கல்வி பயிலும் இளைஞர்கள் எவ்விதத் தொடர்பும் இன்றி சித்திரவதை முகாம்களுக்கு இழுத்துச் செல்லப்படுவதையும், அதனால் குடும்பங்கள் சிதைவதையும் இந்த நாவல் சித்தரிக்கிறது. சீமெந்து ஆலை பின்னணியில் தொழிலாளர்களின் அன்றாடப் போராட்டங்களும், யாழ்ப்பாணக் கலாச்சாரக் கூறுகளும் இதில் விரிவாகப் பேசப்படுகின்றன. இறுதியில், யுத்தத்தின் பிடியில் சிக்கிய ஒரு சமூகத்தின் அச்சம், இடப்பெயர்வு மற்றும் வலி நிறைந்த நினைவுகளின் தொகுப்பாக இது அமைகிறது.


Monday, 5 January 2026

சொல்லி வருவது பாதி - முன்னுரை

     



சுவாசம் பதிப்பகம் மற்றும் ராமச்சந்திரன் உஷா இணைந்து நடத்திய வரலட்சுமி அம்மாள் நாவல் போட்டியில் இந்த நாவல் தேர்வாகியிருக்கின்றது. இதுவே அச்சில் வெளிவரும் எனது முதல் நாவல். ஏற்கனவே மூன்று சிறுகதைத்தொகுப்புகளும் ஒரு குறுநாவலும் அச்சில் வந்திருக்கின்றன.

`ஒற்றுமையே பலம்’ என்பது ஒரு பழங்கால நீதிக்கதை. அதில் வரும் குச்சிகள் போல இன்று நாம் எல்லாரும் தனித்தனியே பிரிந்து கிடக்கின்றோம். எத்தனையோ வருடங்கள் நாம் அடிமைப்பட்டிருந்தும், அதிலிருந்து பாடம் எதனையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. சிலர் பட்டுத்தெளிந்து கண் விழித்தாலும் செய்வதற்கு வழி தெரியாது திகைத்துக் கிடக்கின்றார்கள். நல்லது செய்வதைத் தடுப்பவரும் நம்மவரே. குச்சிகளை ஒன்றாகக் கட்டி, அதை உடைக்க முடியாதபடி வலிமையாக்குவது எப்போது?

இந்தக் கதை,1970/1995 காலப் போர்ச்சூழலில், இலங்கையின் வடபுறத்தேயுள்ள எல்லைக்கிராமமொன்றில் நிகழ்கின்றது. அரச அட்டூழியங்கள், இயக்கங்கள், வாழ்க்கைப் போராட்டங்கள் பற்றி இங்கே விலாவாரியாகச் சொல்லப்படவில்லை. நாவலின் நோக்கமும் அதுவல்ல. அதன் பின்னணியில் – கிராமத்து மக்களின் வாழ்க்கை முறை, சில குடும்பங்களுக்கிடையேயான ஊடாட்டம், குறிப்பாக பெண்களின் கோபதாபங்கள் பிடிவாதம் சூழ்ச்சிகள் என்பவற்றை இணைத்து ஒரு திருமணத்தை சஸ்பென்ஸ் ஆக்கியிருக்கின்றேன். குண்டு வெடிப்பைவிட உறவினர்களிடையே நிகழும் குழப்பத்தின் தாக்குதலை நீங்கள் கடுமையாக உணரக்கூடும். மூன்று பாகங்கள் கொண்ட இந்த நாவல், மணம் முடித்த தம்பதியினர் புலம்பெயர்ந்து செல்வதோடு முடிந்து விடுகின்றது. வருங்காலத்தில், அதன் நீட்சியாக புலம்பெயர்ந்த நாட்டை மையமாகக் கொண்டு இன்னொரு நாவலும் எழுதும் எண்ணமுண்டு.

நடுவராக இருந்து இந்த நாவலைத் தேர்வு செய்த குங்குமம் இதழ் ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கும், சுவாசம் பதிப்பகம் ஹரன் பிரசன்னா மற்றும் ராமச்சந்திரன் உஷா அவர்களுக்கும் எனது நன்றிகள்.

அன்புடன்,

கே.எஸ்.சுதாகர்

(அவுஸ்திரேலியா)

kssutha@hotmail.com

https://shuruthy.blogspot.com/

Thursday, 1 January 2026

சொல்லில் வருவது பாதி - நாவல் - சென்னை புத்தகக் கண்காட்சியில்

 




சொல்லில் வருவது பாதி – நாவல்

இலங்கைப் போர்ச் சூழலின் பின்னணியில் ஒரு குடும்பத்தின் இருபது வருட வாழ்வியலைப் பேசுகிறது நாவல்.

இவர்கள் எந்த இயக்கத்தினையும் சாராதவர்கள். எந்தக் கொள்கையையும் உயர்த்திப் பிடிக்காதவர்கள். சாதாரண மனிதர்கள். தங்கள் வாழ்க்கையை நேர்மையாக வாழ நினைப்பவர்கள்.

பதற்றமே அன்றாட வாழக்கையாக மாறுபடும் நிலையும், போர்ச்சூழலும் எவ்விதம் மக்களைப் பாதிக்கின்றன என்பதையும், இயல்பு வாழ்க்கை போராட்ட வாழ்க்கையாக மாறும் தருணத்தையும் இந்த நாவல் விரிவாகப் பேசுகிறது.

நம் கண்முன்னே கண்ட காட்சிகள் எவ்வாறெல்லாம் மாறுகின்றன என்பதைக் கதையின் ஊடே இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார் கே.எஸ்.சுதாகர்.

இயல்பான மொழியும் நேர்மையான பதிவுமே இந்த நாவலின் பலம்.

வரலக்‌ஷ்மி அம்மாள் நினைவு நாவல் போட்டியில் ஆறுதல் பரிசு வென்ற நாவல்.

சொல்லில் வருவது பாதி, கே.எஸ்.சுதாகர், ரூ 380, அட்டை ஓவியம்: ஓவியர் தமிழ், சுவாசம் வெளியீடு.