இராஜகாந்தன் கவிதைகள் - 4
வருகிறது விடுமுறை, வாருங்கள் லண்டனுக்கு.
வந்துபோனபின்
நீங்கள் பொரித்த வார்த்தைகளை வைத்த
நான் வரைந்த நளின மடல்
ஒன்று கேளுங்கள்
*
‘அசுத்தமான வீதி அலங்கோலமாய் இருக்கே.
ஒடுக்கமான றோட்டு
ஒழுங்கையாய் இருக்கே.’
‘கனகாலத்துக் கட்டிடமோ? கைபட்டால் விழுந்திடுமோ?
கவனமா யிருங்கோ காலன் வந்திடுவான்.’
கவலை
தெரிவித்தார்கள் ஜேர்மன்காரர்கள்.
‘என்ன மெற்றோ இது?
ஒழுங்கா ஓடுதில்லை.
நீங்கள் நம்ம
நாட்டுக்கு வாங்கோ. வந்து பாருங்கோ.’
வாய்மலர
அழைத்தார்கள் பிரெஞ்சுக்காரர்கள்.
’தாகம் வந்து குழாய்த் தண்ணீர் குடித்தால்
தேகத்துக்குக் கூடாத
வருத்தம் வருமோ?’
தயவாகக்
கேட்டார்கள் டென்மாக்காரர்கள்.
‘சுவாசக் காற்றுக்கூடச் சுத்தமில்லையே?
சாவுதரும் நோய்கள் தேடிவரும் கவனம்.’
நொந்து
கொண்டார்கள் நோவேக்காரர்கள்
‘வீட்டுக்குப் போனால்
விசாரிக்க ஆளில்லை.
வேலை வேலை என்று
ஓடுகினம் லண்டனில்.’
சுட்டிக்
காட்டினார்கள் சுவிஸ்காரர்கள
*
‘போனால் போகுது
போக்குவரத்து சுகாதார
அமைச்சர்களிடம்
பேசிப் பார்க்கிறேன்.’
செய்து
வைத்தேன் சமாதானம்
இத்தனைக்கும் அத்தனை பேரும்
சத்தியமாய் நம்ம
ஈழத்திலிருந்து
அகதிகளாய்
வந்தவர்கள் தான்.
வந்த இடத்தில் எந்த இடம்,
நல்ல இடம் என் பதுவும்
தமிழர்தம் தலைபோற
பிரச்சினைதான்.
பிரச்சினைதான்
நம் வாழ்க்கை ஆயிற்றே!
No comments:
Post a Comment