மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
அவுஸ்திரேலியாவில்
இவரைக் காணும்போதெல்லாம் என் உடலில் ஒரு புத்துணர்ச்சி தோன்றிவிடும். எந்த
நேரமும் சிரித்த முகத்துடன் எல்லோரையும் கலகலப்பாக்கிக் கொண்டு காணப்படுவார்.
இவரைச் சந்திக்கும் தோறும் ஏதாவதொரு புது விடயத்தை இவரிடமிருந்து அறிந்து
கொள்ளலாம். இலக்கியம் சம்பந்தமாக ஏதாவது சொல்லி எம்மை மகிழ்விப்பார். இவரிடமிருந்து
கற்றுக்கொள்வதற்கு நிறையவே இருக்கின்றன.
இவரின்
பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது படித்தது வேலை பார்த்தது எல்லாமே இலங்கையில். தற்போது குடியுரிமை பெற்று
வசிப்பது அவுஸ்திரேலியாவில்.
பேராதனைப்
பல்கலைக்கழக தமிழ் சிறப்புப் பட்டதாரியான இவர், கல்வியியல்துறை, சமூகவியல்துறை
போன்றவற்றில் டிப்ளோமா பட்டங்களையும் கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலைத் தத்துவமானிப்
பட்டத்தையும் பெற்றவர். ஆசிரியர், அதிபர், ஆசிரிய ஆலோசகர் என்னும் பதவிகளுடன்
யாழ்ப்பாணம் மட்டக்களப்பு மாவட்டங்களில் பணியாற்றியவர். கல்வித் திணைக்களத்தில்
உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்; யாழ், பேராதனைப் பல்கலைக்கழகங்களின் வெளிவாரிப்
பட்டப்படிப்புப் பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். அத்தோடு
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும் நாடகத்
தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
தமிழ்மொழி
அடிப்படை இலக்கணம், தமிழ்ப்பாட வழிகாட்டி, வட்டுவில் முருகன் திருவூஞ்சல்,
ஆசிரியரும் அகமும், திருப்பம், நெஞ்சே நீ நினை, என் கடன், வள்ளுவர் பேசுகின்றார்,
வாழும் தமிழ், தமிழும் கிறிஸ்தவமும், கோவிலும் நாமும் என்பவை இவர் வெளியிட்ட
ஆக்கங்கள். பத்துக்கும் மேற்பட்ட வில்லுப்பாட்டுகள், இருபதிற்கும் மேற்பட்ட
நாட்டிய நாடகங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட ஓரங்க நாடகங்கள் எழுதியுள்ளார்.
கவிதைகள் எழுதிப் பாடுவதோடு, கவியரங்குகளிற்கும் தலைமை தாங்கியுள்ளார். அத்துடன் பல
கோவில்களுக்கு ஊஞ்சல் எழுதியுள்ளார். அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் மாநகரத்தில் ‘முதற்படி’ என்னும்
குறும்திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதி நடித்தும் உள்ளார்.
பாடசாலை மேடைகள் முதல் பல்கலைக்கழகங்கள், அரசியல் மேடைகள்,
ஆலயங்கள் என இவர் சொற்பொழிவு செய்யாத இடங்கள் கிடையாது. ஆன்மீகம் பற்றியும்
தமிழ்க் கலாசாரம் பற்றியும் சொற்பொழிவாற்றுவதில் வல்லவர். இவரது மேடைப் பேச்சைக்
கேட்டுக் கொண்டிருக்கும்போது நேரம் போவது தெரியாது. விடயத் தெளிவும் நகைச்சுவையும்
கலந்த கனிவான பேச்சாக இருக்கும். எதைப் பேச வேண்டும் எதைப் பேசக்கூடாது என்பதை
சபையறிந்து பேசுவதில் வல்லவர். இவரைப்பற்றிய ஒரு சுவையான தகவல் – ஒருமுறை
யாழ்ப்பாணத்தில் அம்மன் கோவில் ஒன்றில் இராமாயணம் பற்றிய ஒரு தொடர் சொற்பொழிவு
நடைபெற்றது. சொற்பொழிவு ஆலய நிர்வாகத்தினருக்கும் அடியார்களுக்கும் பிடிக்கவில்லை.
சூர்ப்பனகை மூக்கறுந்த கதையுடன் அவரை நிறுத்திவிட்டார்கள். அந்தச் சொற்பொழிவை
விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து எடுத்துச் சென்றவர் இவர்தான். இராமனது வெற்றியை
சொல்லி முடித்தார் ஜெய ராமர் என்று சொல்லுவார்கள். உண்மையில் பெயருக்கேற்ற
விதத்தில் இவர் ஒரு ஜெய – ராம - சர்மாதான்.
1993இல் யாழ்ப்பாணத்தில் நடந்த நாட்டிய மகாநாட்டிலும், 1994இல்
நடந்த ஆன்மீக மகாநாட்டிலும் பங்குபற்றினார். 2008 ஆம் ஆண்டு மதுரை
மாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ சித்தாந்த மாநாட்டில் கட்டுரை சமர்ப்பித்து
உரையாற்றியதுடன், புராண ஆராய்ச்சிப்பகுதிக்கும் தலைமை தாங்கினார். பல மாநாடுகளில்
பேராளராகவும், கட்டுரை சமர்ப்பித்து உரை நிகழ்த்துபவராகவும் இருந்துள்ளார். அண்மையில்
ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று தமிழ், கலாசாரம், இந்துசமயம்
சம்பந்தமாக விரிவுரைகளை ஆற்றியுள்ளார்.
’வல்லமை’ என்ற மின்னிதழில்
தொடர்ந்து எழுதிவரும் இவரின், ’புலம்பெயர்ந்த நாடுகளில் சமயம் கற்பித்தலில்
கையாளப்படும், கையாளப்படவேண்டிய அணுகுமுறைகள்’ என்ற கட்டுரைக்காக
வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அக்கினிக்குஞ்சு, தமிழ்முரசு, திண்ணை,
தமிழ் ஒஸ்ரேலியன், தேனீ, மெல்லினம் போன்ற பலவற்றில் தொடர்ந்தும் கவிதைகள், கட்டுரைகள் படைத்து
வருகின்றார். பொதுவாக கவிதைகள் பாடப்பெறாத இக்காலப் பிரபலங்கள் பலரைப்பற்றியும்
கவிதைகள் எழுதியுள்ளார். நெல்சன் மண்டேலோ, பாலு மகேந்திரா, உ.வே.சா, வாரியார்,
அன்னை தெரசா, ராமகிருஷ்ணர், வாலி, சிவாஜி, வைரமுத்து, பாலமுரளி கிருஷ்ணா, கவிமணி
தேசிகவிநாயகம்பிள்ளை, பாரதி, விவேகானந்தர், கண்ணதாசன் எனப் பலர் அடங்குவர்.
தற்போது மெல்பேர்ண் தமிழ்ச்சங்கம், விக்டோரியா இந்துகல்வி
மையம் போன்றவற்றின் ஆலோசகராகவும், அவுஸ்திரேலியா தமிழ் இலக்கியக் கலைச் சங்கத்தின்
தலைவராகவும் இருக்கின்றார்.
மதங்களின் நோக்கம் என்ன, அவை சமுதாயத்திற்கு என்ன செய்ய
வேண்டும் போன்ற சமயத்தின் தேவையை பின்புலமாகக் கொண்டிருக்கும் இவர், புலம்பெயர்
தேசத்தில் இருப்பது நமக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதமாகும்..
No comments:
Post a Comment