வீடு மாறுவதைப்போல் சிரமமான வேலை வேறு எதுவும் இல்லை என்பது எனது மனைவியின் அனுபவம். வீட்டுத்தளபாடங்களை அடுக்கிக்கட்டி சுமந்து ஏற்றி ட்றக்கில் அனுப்பினாலும், புதிய வீட்டுக்குச் சென்றதும் அவற்றை இறக்கிப்பிரித்து வைக்கவேண்டிய இடங்களில் வைத்து புதிய வீட்டை சீர்செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் என்று சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் சொல்வதும் சரிதான். அனுபவித்துப்பார்த்தால் உண்மை புரிந்துவிடும்.
இன்னும் இரண்டு வாரத்துக்குள் புதிய வீட்டுக்குச்செல்லவேண்டும். அதற்கிடையில் அத்தியாவசிய சமையல் பாத்திரங்கள் , உடைகள். தலையணைகள், போர்வைகள், அத்துடன் சோப்பு, சீப்பு, ஷம்பு, டவல் முதலான குளியலறை சாதனங்கள் தவிர்த்து ஏனைய அனைத்தையும் பெட்டிகளில் அடுக்கினோம்.
நகருக்கு சமீபமாக ஷொப்பிங் சென்டரில் இருக்கும் பாமஸியில், மருந்துகள் வரும் கார்ட்போட் பெட்டிகள் மூடிகளுடன் கச்சிதமாக இருக்கும். அங்கே சொல்லிவைத்து பல வெற்றுப்பெட்டிகளை வீட்டில் களஞ்சிய அறையில் சேகரித்து வைத்திருந்தேன்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் மனைவி சமையலறை பாத்திரங்கள் , கண்ணாடிப்பாத்திரங்களையெல்லாம் சீராக பெட்டிகளில் அடுக்கி மூடி அவற்றின்மீது உள்ளே என்ன இருக்கின்றன என்பதை தடித்தமை பேனையினால் எழுதிவைத்துவிடுவாள்.
அவளது சாரிகள் பிளவுசுகள், உள்ளாடைகள்,
மற்றும் குளிர்கால, கோடைகால உடைகள் யாவும் அவளுடைய பிரத்தியேகமான விரல்விட்டு எண்ணத்தக்க பல பெரிய பேக்குகளினுள் எப்படியோ நுழைந்துவிட்டன.
“ உங்கட உடுப்புகளை எப்போது அடுக்கப்போறீங்க...?”
எனக்கேட்டாள்.
“ எனக்கு ஒரு பேக் போதும். எஞ்சியிருப்பவற்றை சல்வேஷன் ஆர்மிக்கு கொடுத்துவிடுவேன். நீரும் ஏதும் தருவதென்றால் தாரும்.” என்றேன்.
“ பழைய சாரிகள் கொஞ்சம் இருக்கு. ஆனால் சல்வேர்ஷன் ஆர்மி எடுத்துக்கொள்ளுமா?” எனக்கேட்டாள்.
“ விசாரிப்போம்”
என்றேன்.
“ எல்லாவற்றையும் அடுக்கிவிடலாம். ஆனால் உங்கட புத்தகங்கள்தான் பெரிய லோட். குறைஞ்சது முப்பது பெட்டியாவது தேறும். எப்போது அடுக்கப்போறீங்க...?”
“ அதில் தெரிவுகள் இருக்கு. நான் படித்து
முடித்தவற்றை நண்பர்களுக்கு கொடுக்கப்போறன். அந்த வேலை இப்போது தொடங்கவேண்டாம். பிறகு பார்க்கிறன்”
“ நீங்கள் புத்தகங்களை அடுக்க முன்னம் ஒருதடவை நானும் பார்க்கவேணும். நீங்கள் படித்து முடித்த எனக்குப்பிடித்தமான நான் இதுவரையில் படிக்காத புத்தகங்கள் இருந்தால் தரமாட்டன். அவை எனக்கு வேணும். அதனால் முதலில் நான் புத்தகங்களைப் பார்க்கிறன்” என்று சொல்லிக்கொண்டு,
நான்கு பெரிய Book Shelf களில் சீராக அடுக்கப்பட்டுள்ள புத்தகங்களை ஆராய்வதற்காக அலுவலக அறைக்குள் நுழைந்துவிட்டாள்.
களஞ்சிய அறையிலிருந்து சில வெற்றுப்பெட்டிகளை புத்தகங்கள் அடுக்குவதற்காக எடுத்துவந்து மனைவியிடம் கொடுத்துவிட்டு, வீட்டின் பின்புறம் புதராக வளர்ந்திருந்த புல்லை வெட்டுவதற்கு தயாரானேன். மெல்பனில் தினமும் நான்கு பருவகாலங்கள் கலையும் மேகங்கள்
போன்று நகருவதனால் நல்ல வெய்யிலிருக்கும்போது புல்லை வெட்டிவிடவேண்டும். முதல்நாள் இரவு பொழிந்த பனியில் புற்களில் ஈரலிப்பு. காயும்
வரையில் காத்திருந்துதான்
வெட்டவேண்டும். இல்லையேல் புல்வெட்டும் இயந்திரம் பழுதடைந்துவிடும்.
இயந்திரத்துக்கு எரிபொருள் நிரப்பி வானத்தையும் ஒரு தடவை பார்த்துவிட்டே புல்லை வெட்டும் இயந்திரத்தை கராஜிலிருந்து வெளியே எடுத்து நகர்த்திக்கொண்டு வந்தபோது உள்ளிருந்து மனைவி குரல்கொடுத்தாள்.
“ வந்திட்டுப்போங்க...”
“ எந்த வேலையையும் ஒழுங்கா செய்யவிடமாட்டாள்.” முணுமுணுத்தவாறே வீட்டுக்குள்
வந்தேன்.
அவள் கையில் ஒரு புத்தகம். அட்டை கிழிந்த சிறிய பழைய புத்தகம்.
“ இது யாருடைய கதைத்தொகுப்பு? முன்னுக்கும் பின்னுக்கும் அட்டை இல்லை. யார் எழுதியது என்பதும் தெரியவில்லை. பதிப்புரிமை விபரம் உள்ள பக்கமும் கிழிஞ்சிருக்கிறது. மிகவும் பழைய புத்தகம் போலத்தெரியுது. பழுப்புநிறமாகிவிட்டது. சொல்லுங்க இது யார் எழுதினது?”
“ அட... இது சுந்தரி ரீச்சரின் கதைப்புத்தகம். மறந்தேபோய்விட்டேன். எங்கே இருந்தது.” நான் அதிர்ச்சியும் வியப்பும் மேலிட வாங்கிப்பார்த்தேன்.
“ஒரு மூலையில் கிடந்தது. இதுவரைக்கும் எனது கண்ணிலும் தென்பட்ட புத்தகமாகத்தெரியவில்லை. அதுதான் கேட்கிறன்.” என்றாள் மனைவி.
ஒரு குழந்தையை பரிவோடு தடவி
உன்னிப்பாக
பார்ப்பதுபோன்று, அந்தப்புத்தகத்துடன் அமர்ந்துவிட்டேன். புல்வெட்டும் வேலையையும் மறக்கச்செய்துவிட்டது அந்த அட்டைகள் இல்லாத புத்தகம்.
“ யார்... சுந்தரி ரீச்சர்? எங்கே இருக்கிறா?” மனைவியின் கேள்விகளுக்கு உடனடியாக பதில் சொல்லாமல், அந்தப் புத்தகத்தின் பக்கங்களை புரட்டினேன்.
மனைவி என்ன நினைத்தாளோ... என்னையே நேரடியாகப் பார்த்துக்கொண்டு என்முன்னால் அமர்ந்துகொண்டாள்.
சுந்தரி ரீச்சர் பற்றிய பல்வேறு ஊகங்களுடனும் கற்பனைகளுடனும் அவள் அவ்வாறு அமர்ந்திருக்கக் கூடும்.
........................
சுந்தரி ரீச்சர்......
எங்கள் ஊர் பாடசாலையை விட்டு அந்த கொதிமாஸ்டர் இடமாற்றலாகிச்
சென்ற பிறகு வந்தவதான் சுந்தரி ரீச்சர். அழகான சிவந்த நிறமுடைய ரீச்சர். சிவகாமசுந்தரி என்ற அவவுடைய இயற்பெயர் சுருக்கமாகி சுந்தரி ஆகியது.
தூயகணித பாடத்தை இலகுவாக புரியும்படி சொல்லிக்கொடுத்தா. வீட்டுப்பாடம் செய்யாவிட்டாலும்
அதற்காக முன்பிருந்த கொதிமாஸ்டர் நாகராஜா போன்று விரல்களில் அடிமட்டத்தினால் அடிக்காமல், ஏன் செய்யவில்லை என்று கேட்டுவிட்டு வகுப்பில் செய்தபின்பு பாடத்தை தொடருவது சுந்தரி ரீச்சரின் இயல்பு.
அட்சர கணிதத்தில் தேர்ச்சியுள்ள மாணவர்களுக்கு கேத்திர கணிதம் வேம்பாக கசந்தது. கேத்திர கணிதத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு அட்சரகணிதம் ஏனோ பிடிக்கவில்லை. இரண்டு கணிதங்களையும் சமச்சீருடன் நாங்கள் கற்றுத்தேருவதற்கு பக்குவமாக சொல்லிக்கொடுத்த சுந்தரி ரீச்சர், மாணவர் உளவியல் நன்கு தெரிந்தவராக இருக்கவேண்டும்.
அப்பொழுதெல்லாம் தொலைக்காட்சி இல்லாத காலம். வகுப்பில் எம்.ஜி.ஆர். ரசிகர், சிவாஜி ரசிகர் மோதல்கள் உக்கிரமாக நடந்த காலம்.
மக்கள் திலகம் கொடை வள்ளல் என்று சொல்லிக்கொண்டு திரியும் ஒரு கட்சி. நடிகர்திலகம் போன்று நவரசத்தையும் காண்பிக்க எவராலும் முடியாது என்று சொல்லும் மற்றுமொரு கட்சி. நான் ‘வாத்தியார்’ ரசிகன். மக்கள் திலகம் எப்படி கையை நீட்டி விசுக்கி பாடுவார் என்று அபிநயம்பிடித்து ஆடிக்காட்டுவேன். அப்படி ஒரு நாள் ஆடியவேளையில்தான் சுந்தரி ரீச்சர் வகுப்பறைக்குள் பிரவேசித்தா.
எனது பெயரைக்கேட்டுவிட்டு மீண்டும் ஒருதடவை ஆடிக்காட்டும்படி சொன்னா.
மாணவர்கள் சிரித்தார்கள். நான் வெட்கத்தினால்
தலைகுனிந்து நின்றேன்.
“ பரவாயில்லை. ஒரு தடவை ஆடும். அதன் பிறகு பாடம் தொடங்குகிறேன்.” என்றா சுந்தரி ரீச்சர். அப்படி ஒரு
ரீச்சரை எனது பாடசாலை நாட்களில் வேறு எந்த வகுப்பிலும் நான் மட்டுமல்ல சகமாணவர்களும் பார்த்ததில்லை.
ஆயிரத்தில் ஒருவனில் வரும் ‘அதோ அந்த பறவை போன்று வாழ வேண்டும்....’ என்று வலதுகையை எம்.ஜி.ஆர். போன்று சுழற்றி நீட்டி உயர்த்தி பாடவும் சுந்தரி ரீச்சர் கலகலவென சிரித்தா. வகுப்பறையில் முத்துக்கள் உதிர்வதுபோன்றிருந்தது. கலகலப்பு அடங்க சிலகணங்களாயிற்று.
அன்று முதல் ரீச்சர் எனக்கு வைத்த பெயர் மக்கள்திலகம்.
எங்கள் பாடசாலைக்கு சுந்தரி ரீச்சர் மாற்றலாகி வந்து
ஒரு
மாத காலத்துள்ளேயே .... அவ எங்கள் வகுப்பு
ஆசிரியராகவும் அதிபரினால் நியமிக்கப்பட்டது எங்களுக்கு வரப்பிரசாதம்தான்.
வகுப்புக்கு மொனிட்டர் தெரிவு நடந்தபோது என்னையே
ரீச்சர் முன்மொழிந்தார். கணித பாடத்தில் அக்கறை காண்பிக்காத மாணவர்களை மாலை வேளைகளில் வீட்டுக்கு அழைத்து விசேட கரிசனையுடன் எந்த ஊதியமும் வாங்காமல் சொல்லிக்கொடுத்தா.
சுந்தரி ரீச்சர் வீட்டில் அவவுடைய அப்பா, அம்மா, ஒரு அண்ணன் மாத்திரம் இருந்தனர். அண்ணன் கொழும்பில் ஒரு கம்பனியில் வேலையிலிருந்தார். தினமும் பஸ்ஸில் போய்வந்தார். அப்பா ஓய்வுபெற்ற தபால் அதிபர் என்பது தெரிந்தது. ரீச்சர் வீட்டில் எங்களுக்கு கணிதம் சொல்லிக்கொடுக்கும்போது, ரீச்சரின் அம்மா வீட்டில் செய்யும் வடை, அதிரசம், முறுக்கு போன்ற பலகாரங்கள் தருவார்கள்.
எங்கள் உறவினர் வீட்டுக்குச்செல்வதுபோன்று உரிமையுடன் சென்று வருவோம். ரீச்சருக்கு தம்பி, தங்கைகள் இல்லாத குறையை நாங்கள்தான் போக்கியிருக்கிறோம் என்று ஒரு
நாள் ரீச்சரின் அம்மா, ரீச்சர் வீட்டில் இல்லாத நேரத்தில் எங்களிடம் சொல்லியிருக்கிறா.
நான் கண்வைத்திருந்த சகமாணவி சுகந்தி, “பார்த்தீங்களா...? சுந்தரி ரீச்சர் எங்களையெல்லாம் தன் சகோதரங்களாகத்தான் நேசிக்கிறாங்க. அப்படியெண்டால் நாங்கள் இரண்டுபேரும் சகோதரங்கள்தான். அதனால் இந்த சைட்
அடிக்கிற வேலையை இனிமேல் விட்டிடுங்க...” என்று சொன்னாள்.
இப்போது சுகந்தி எங்கே இருக்கிறாளோ தெரியாது.
சுந்தரி ரீச்சர் கதைகளும் எழுதுவாங்க என்பது முதலில் எங்களுக்குத்தெரியாது. ரீச்சர் சொன்னதும் இல்லை. ரீச்சரின் அண்ணன் கொழும்புக்கு வேலைக்குப்போய்வரும்போது ரீச்சருக்காக கல்கி, குமுதம், ஆனந்த விகடன், சிரித்திரன், மல்லிகை எல்லாம் வங்கிவருவார். ரீச்சர் வீட்டின் வரவேற்பறையில் அவற்றை பார்த்திருக்கிறேன். என் அக்கா ஒரு புத்தகப்பூச்சி. காலப்போக்கில்
அக்காவும் சுந்தரி ரீச்சரின் சிநேகிதியாகிவிட்டாள்.
ரியூஷன் முடிந்துவரும்போது சுந்தரி ரீச்சர் தான் படித்து முடித்த சஞ்சிகைகளை அக்காவுக்காக தந்துவிடுவா. சுந்தரி ரீச்சரின் சிறுகதையொன்று வாரப்பத்திரிகையில்
படித்த தகவலை அக்கா சொல்லித்தான் அறிந்துகொண்டேன். தெரிந்த ரீச்சர் என்பதனால் நானும் அந்தக்கதையை படித்தேன்.
ஒரு விதவைத்தாயின் வாழ்வை சித்திரித்த கதை. பெரும்பாலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு கதை ரீச்சர் எழுதியிருப்பா. இடைக்கிடை இலங்கை வானொலியிலும் ரீச்சரின் சிறுகதை, நாடகம் ஒலிபரப்பாகும்.
ரீச்சர் எழுதிய கதைகள், நாடகங்களில் கூடுதலாக
பெண்களின் துயரம்தான் விஞ்சியிருக்கும்.
“ரீச்சர் ஒரு பெண்ணிலைவாதி” என்று ஒரு நாள் அக்கா சொன்னாள்.
அதற்கு நான், “ஆண்ணிலைவாதிகள் யார்? “ என்று துடுக்குத்தனமாகக் கேட்டுவிட்டேன்.
“ரீச்சரிடமே கேள்...” என்றாள் அக்கா.
ரீச்சரிடம் கேட்டேன்.
“ முதலில் படிப்பை கவனியும். ஏ.எல். பரீட்சை எழுதிய பின்பு சொல்லித்தருகிறேன்” என்றா சுந்தரி
ரீச்சர்.
ஆனால், சொல்லித்தராமலேயே போய்விட்டா.
ரீச்சருக்கு எங்கள் ஊரிலேயே திருமணமும் நடந்தது. மாப்பிள்ளை வீட்டார் பணக்காரர். பல பிஸினஸ்கள் நடத்திக்கொண்டிருந்தார்கள். நகரத்தில் புடவைக்கடை, பலசரக்கு மொத்த விற்பனைக்கடை,
அடவுக்கடை, நகைக்கடை என்பன இருந்தன. கொழும்பில் வெளிநாடுகளுக்கு
வேலைக்காக ஆட்களை அனுப்பும் முகவர் நிலையமும் நடத்திக்கொண்டிருந்த செல்வச்செழிப்புள்ள குடும்பம்.
ரீச்சரின் அண்ணன்தான்
அந்த
சம்பந்தத்தை பேசிக்கொண்டு வந்தவர். ஒரு தைப்பொங்கல் பண்டிகையின் போது அக்காவுடன் அவர்களின் புடவைக்கடைக்கு ரீச்சர் சாரி வாங்கப்போனபோதுதான் அந்த மாப்பிள்ளை, ரீச்சர் மீது கண்வைத்துவிட்டார். எப்படியோ ரீச்சரின் அண்ணனை நண்பனாக்கிக்கொண்டார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
பெற்றுத்தருவதாக
வேறு நம்பிக்கை அளித்துவிட்டார். பாடசாலை அதிபர் ஊடாகவும் வீட்டுக்கு தூது அனுப்பினார்.
“தேடிவரும் செல்வத்தை விட்டு விடவேண்டாம்” என்று அதிபர் சினிமா வசனம் பேசினார் என்றும் அக்கா சொல்லக்கேள்விப்பட்டேன். அந்த அதிபர், அவர்களின் கடைகளில் நிரந்தர வாடிக்கையாளர்.
முதலில் ரீச்சருக்கு அந்த சம்பந்தத்தில்
விருப்பமில்லை. கலவரம் வந்தபோது ரீச்சரின்
அண்ணா கொழும்புக்கு வேலைக்குச் செல்லப்பயந்தார். வேலையையும் விட்டுவிட்டார். அந்த சம்பந்தம் செய்தால் தனக்கு அவர்களது ஏஜன்ஸி மூலமாக வெளிநாடு செல்ல முடியும் என்றும்
சொல்லி ரீச்சரை சம்மத்திக்கவைத்தார் அந்த அண்ணன்.
ரீச்சரின் அழகுதான் அந்த தனவந்த இளைஞனைக் கவர்ந்திருக்க வேண்டும். அத்துடன் ரீச்சரின் கதைகள், நாடகங்கள் கொழும்பு பத்திரிகைகள்,
வானொலியில் வெளியாவதனால் ரீச்சரின் அந்த பிரபலமும் அவருக்குப்பிடித்திருக்கலாம்.
எப்படியோ சுந்தரி ரீச்சரின் திருமணம் தடல்புடலாக நடந்தது. முழுச்செலவையும் மாப்பிள்ளை வீட்டார்தான் ஏற்றிருக்கவேண்டும். நானும் வகுப்பு நண்பர்களும் இரவுபகலாக மண்டபம் சோடித்து அலங்காரம் செய்தோம். ரீச்சரின் உறவினர்கள் வெளியூரிலிருந்து வந்ததனால் அவர்களை தங்கவைப்பதற்காக, மாப்பிள்ளை உல்லாசவிடுதி ஹோட்டல்களில் சில அறைகளையும் வாடகைக்கு எடுத்துக் கொடுத்திருந்தார்.
“ பிடித்தாலும் பிடித்தாய் பெரிய புளியங்கொப்பாகத்தான் பிடித்திருக்கிறாய்” என்று ரீச்சரின் உறவினர்கள் ரீச்சரின் அம்மாவிடம் சொன்னது எனக்கும் கேட்டது.
ரீச்சருக்கு தம்பி இல்லாதமையினால் என்னையே மாப்பிள்ளைத் தோழனாக்குவோம் என்று மாப்பிள்ளை வீட்டார் சொன்னார்கள்.
அந்த தற்காலிக பதவியினால்
எனக்கு கிடைக்கவிருந்த மோதிரம் கிடைக்கவில்லை. ரீச்சரின் உறவுமுறையான
ஒரு சின்னப்பெடியன் உறவினர்களுடன் திருமணத்திற்கு வந்திருந்தான். இரத்த உறவினன்தான் மாப்பிள்ளை தோழனாக முடியும் என்பது அந்த உறவினர்களின் வாதம். ரீச்சரின் அண்ணனை அந்த வேடத்திற்கு தெரிவு செய்திருக்கலாம். ஆனால் திருமண வேலைகள், விருந்தினர் உபசரிப்புகளை கவனிக்கவேண்டியிருந்ததால் அண்ணன் அதனை ஏற்கவில்லை.
எனக்கு கிடைக்கவிருந்த மாப்பிள்ளை
தோழன் உடைகளும் அந்த மோதிரமும் கிடைக்கவில்லை என்பது எனக்கு அப்போது வருத்தமாக இருக்கவில்லை. ரீச்சரை திருமணத்தின் பின்பு வேலையால் நிறுத்தப் போகிறார்கள் என்பதுதான் எனக்குத் தீராத கவலையாக இருந்தது.
இலட்சக்கணக்கில் பணம் படைத்த குடும்பத்திற்கு ரீச்சரின் சில ஆயிரம்கொண்ட மாதச்சம்பளம் சிறுதூசுதான். ஆனால், ரீச்சர் தனது தொழிலையும் மாணவர்களையும்
எப்படி நேசித்தார் என்பது எனக்குத் தெரியும். அந்த நிபந்தனைக்கு கட்டுப்பட விரும்பாமல்தான் ரீச்சர் முதலில் அந்தத் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை
என்பதை அக்காவிடமிருந்து தெரிந்துகொண்டேன். அந்த மாப்பிள்ளை எனது அக்காவுக்கும் ஒரு வரன் பார்த்துவைத்திருந்தார். அந்த மாப்பிள்ளையும் அவர்களின் ஏஜன்ஸி மூலம் விரைவில் வெளிநாடொன்றுக்கு செல்லப்போகிறார் என்றும் எங்கள் அப்பா, அம்மாவுக்கு தகவல் சொல்லியிருந்தார் ரீச்சருக்கு நிச்சயிக்கப்பட்ட அந்த செல்வக் குடும்பத்து மாப்பிள்ளை.
சுந்தரி ரீச்சரின் திருமணம் முடிந்து மறுநாள் அவர்கள் தேன்நிலவுக்காக சிங்கப்பூர் சென்று ஒரு வாரத்தில்
வந்தார்கள். ரீச்சரின் அண்ணன் சில நாட்களில் துபாய் சென்றுவிட்டார். அக்காவுக்கு ரீச்சரின் கணவர் பார்த்துப்பேசியிருந்த மாப்பிள்ளை வீட்டாரும் ஒருநாள் அக்காவை பெண்பார்க்க
வந்து சில நாட்களில் நிச்சயார்த்தமும் செய்துவிட்டனர்.
ரீச்சரின் கணவர், ரீச்சர் மீதிருந்த அளவற்ற பிரியத்தினாலும் தனக்கிருக்கும் செல்வாக்கினாலும் வாக்குத்தவறாமல் சொன்னவற்றை செய்துகொண்டிருப்பதாக வீட்டில் பேசிக்கொண்டார்கள். உயர்தர வகுப்பு முடிந்ததும் என்னையும் லண்டனுக்கு மேல்படிப்பு படிப்பதற்கு
அனுப்புவதற்கு ஒழுங்குகள் செய்யவிருப்பதாகவும் சொல்லி என் அம்மா, அப்பா, அக்காவை அவர் குளிரவைத்தார்.
அப்பாவுக்கு ஊரில்
ஒரு சைவஹோட்டல் இருந்தது. சனி, ஞாயிறு விடு முறைநாட்களில் நான்தான் கஷியர். அப்பா அன்றைய தினம்தான் வீட்டில் ஓய்வு எடுப்பார். அப்பா ஆனந்தமாக வீட்டில் தண்ணிபோடும் நாட்கள் அவை. சுந்தரி ரீச்சர், அரசாங்கம் கொடுத்த ஆசிரிய வேலையை விட்டதுடன் எங்களுக்கெல்லாம் இலவசமாக ரியுஷன் கொடுக்கும் பணியையும் நிறுத்திவிட்டா. கதை எழுதுவதும் குறைந்துவிட்டது.
நான் அறிந்த மட்டில் ரீச்சரின் ஒரே ஒரு சிறுகதைத்தொகுப்புத்தான் புத்தகமாக வெளியாகியிருந்தது.
ஆனால், அது ரீச்சரின் திருமணத்திற்கு ஒரு
வருடத்திற்கு முன்புதான். பாடசாலை அதிபரின்
தலைமையில்தான் ஊர் கலாசார மண்டபத்தில் வெகுவிமரிசையாக
நடந்தது. கொழும்பிலிருந்து பெரிய உருவமுள்ள ஒரு பேராசிரியர், வேறும் சில எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள். வானொலி நிலையத்திலிருந்தும் வந்து நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவுசெய்து பின்னர் வானொலியில் ஒலிபரப்பினார்கள்.
அந்த கதைப்புத்தகத்தின் வெளியீட்டு விழாவும் ரீச்சரின் வாழ்க்கையில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும். விழாவில் முதல் பிரதி பெற்றுக்கொள்வதற்கு வந்தவர்தான் அந்த மாப்பிள்ளையின் தனவந்த அப்பா. அதற்கான ஏற்பாடு செய்தவர் அதிபர்தான். அந்த வருங்கால மாமனாருக்கும்
ரீச்சரை தனது மகனுக்கு மனைவியாக்க வேண்டும் என்ற எண்ணம் அந்த நிகழ்ச்சியில்தான் துளிர்த்திருக்கவேண்டும்.
‘ரீச்சரின் கதைகளில்
பெண்ணிலைவாதம்
உச்சத்தில் ஒலிக்கிறது” என்ற ஒருமித்த கருத்துச்சாரப்பட பேராசிரியரும் இதர
பேச்சாளர்களும் பேசியபோது, அதிபரின் காதுக்கு அருகில் நெருங்கி, ‘ அதென்ன சேர் பெண்ணிலை வாதம்’ என்று கேட்டாராம் அந்த முதலாளி.
இந்தத் தகவலை பின்னர் அதிபர்தான் ரீச்சரிடம் சொல்லிச்சிரித்தார்.
ரீச்சரின் திருமணம் முடிந்த பிறகு ஒரு மாத சஞ்சிகையில் ரீச்சருக்கு வாழ்த்து தெரிவித்து அதன் ஆசிரியர் ஒரு சிறிய குறிப்பும் வெளியிட்டிருந்தார். அதனை ரீச்சர் தனது கணவரிடம் காண்பித்தபோது, “ இவங்களுக்கு
வேறை வேலை வெட்டி இல்லையாக்கும்” என்று அவர் எரிச்சல்பட்டதாக ரீச்சர் அக்காவிடம் சொல்லி வருத்தப்பட்டாவாம்.
சில நாட்கள் ரீச்சரை நகைக்கடையில் அல்லது புடவைக்கடையில் பார்த்திருக்கிறேன். அந்நாட்களில், அவர் கடைகளுக்கு சாமான் கொள்முதல் செய்வதற்கு கொழும்புக்கு சென்றிருப்பதாக அறிந்து கொண்டேன்.
ஒரு நாள் ரீச்சர் என்னை நகைக்கடையில் சந்தித்தபோது அவ கஷியராக காட்சி அளித்துக்கொண்டிருந்தா.
“ தம்பி... நீர் உங்கட அப்பாவின் சைவஹோட்டல்ல கஷியர். நான் இங்கே நகைக்கடை கஷியர்” சிரித்துக்கொண்டு சொன்னாலும் அந்த முகத்தில் வாட்டம் தெரிந்தது.
“ எப்படி இருக்கிறீங்க ரீச்சர்?” என்று கேட்டேன்.
“ ஏதோ இருக்கிறன். உங்களையெல்லாம் ஸ்கூலையெல்லாம் மிகவும் மிஸ்பண்ணிட்டு இங்கே இருக்கிறன். எல்லாம் துபாய்க்குப்போன அண்ணனுக்காகத்தான்.” என்றபோது ரீச்சரின் கண்கள் மின்னியதை கண்டேன். இடுப்பில்
செருகியிருந்த கைக்குட்டையை
எடுத்தபோது நான் முகத்தை திருப்பிக்கொண்டு
நகைக்கடையின்
ஷோகேஸைப்பார்த்தேன். அதில் நகைகள் லைட் வெளிச்சத்தில் மின்னிக்கொண்டிருந்தன.
ரீச்சர் எனக்கு குளிர்பானம் தந்தா. அந்த நகைக்கடைக்கு
வரும் வாடிக்கையாளர்களுக்குத் தரும் குளிர்பானம் அன்று எனக்கும் கிடைத்தது.
ஒரு வருடம் ஓடிவிட்டது. நான் பரீட்சையில் கணித பாடத்தில் சாதாரண சித்தி பெற்றது
ரீச்சருக்கு வருத்தம்தான். தரப்படுத்தலினால் அந்தத்தடவை பல்கலைக்கழக
அனுமதி சில மாணவர்களுக்கு கிடைக்காததும் ரீச்சரை வாட்டியிருக்கவேண்டும்.
ரீச்சரின் வெற்றிடம் பாடசாலையில் பெரிதாகப்பேசப்பட்டது. என்னை மீண்டும் ஒரு தடவை பரீட்சை எழுதுமாறும்
மீண்டும் வீட்டில் பாடம் சொல்லித்தருவதாகவும் ரீச்சர் சொன்னா. ஆனால், எதிர்பாராதவிதமாக ரீச்சர் கொழும்பில் பிரபல தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதால்
ரீச்சரின் விருப்பம் நிறைவேறவில்லை.
ஒரு நாள் இரவு சாப்பாட்டுக்குமேல் ரீச்சர் சத்தி
எடுத்திருக்கிறா. கர்ப்பிணியாகியிருக்கவேண்டும் என்ற மகிழ்ச்சியுடன் டொக்டரிடம் அழைத்துச்சென்றிருக்கிறார்கள். ஒரு நாள் அந்த தனியார் மருத்துவமனையில் இருந்துவிட்டு வந்தா. கர்ப்பத்துக்கான சத்தியல்ல என்பது சோதனைகளிலிருந்து தெரிந்த பிறகு வீட்டுக்கு வந்து மீண்டும் தொடர்ச்சியாக சத்தி எடுத்தா. அம்மாவும் அக்காவும் அடிக்கடி சென்று பார்த்தார்கள். அப்போது ரீச்சரின் பெற்றோர்கள் தங்கள் ஊரில்
இருந்தார்கள். ரீச்சரின் அண்ணன் துபாய் சென்றதும் ரீச்சர் புகுந்த வீடு சென்றதும் அவர்களின் பெற்றோருக்கு அவர்கள் முன்பிருந்த வாடகை வீடு அவசியமற்றதாகிவிட்டது.
ரீச்சர் சத்தி எடுக்கும் தகவல் அறிந்து தாங்கள் பேரப்பிள்ளை காணப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில்தான் அவர்கள்
திரும்பியிருப்பார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல ரீச்சரின் கணவர் உட்பட அனைவருக்கும்
பேரிடியே காத்திருந்தது என்பது ரீச்சர் கொழும்பில் அந்த பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சோதனை முடிவு வந்தபிறகே தெரியவந்தது.
அந்த புன்னகை தவழும் முகத்தில் மரணத்தின் ரேகைகள் படியத்தொடங்கிவிட்டன. புற்றுநோய் சுந்தரி ரீச்சரின் உயிரை சிறுகச்சிறுக குடித்திருக்கிறது. டொக்டர்களின் சோதனையின் பிரகாரம் ரீச்சருக்கு ஒரு வருடத்திற்கு முன்பே அந்த நோய் தொடங்கியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தார் கணவர். அவர் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு நடமாடினார். ரீச்சருக்கான எந்தச்சிகிச்சையும் பலனளிக்காமல் எங்களையெல்லாம் நாட்களை எண்ணவிடாமலேயே ரீச்சர் ஒருநாள் இரவு மருத்துவமனையிலேயே கண்களை மூடிக்கொண்டார்.
ரீச்சரின் திருமணம் போன்று அவரது இறுதிச்சடங்குகளும் தடல்புடலாகத்தான் நடந்தன. கொழும்பு பத்திரிகைகளில் அரைப்பக்க கண்ணீர் அஞ்சலி மரண அறிவித்தல் விளம்பரங்கள் வந்தன.
பஜார் வீதியில் ரீச்சர்
ஒரு
தனவந்தரின் மனைவி என்ற பிம்பமே இருந்தமையால் கடைகள் பலவற்றின் வாசல்களில் ரீச்சரின் புகைப்படத்துடன் சுவரொட்டிகளும் வெள்ளைக்கொடிகளும் காணப்பட்டன. அந்தப்படத்திலும்
ரீச்சரின் மாறாத மந்திரப்புன்னகை.
எங்கள் பாடசாலையிலிருந்து மாணவர்களும் ஆசிரியர்களும் ஊர்வலமாகச்
சென்று ரீச்சரின் இறுதி
நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டோம். வானொலியும் மரண அறிவித்தலை ஒலிபரப்பியது.
ரீச்சரின் அண்ணா லீவு எடுக்க முடியாத காரணத்தை துபாயிலிருந்து
அழுதழுது ரெலிபோனில் சொன்னதாக தெரிந்துகொண்டேன். ரீச்சரின் திருமணத்தின்போது
மாப்பிள்ளை தோழன் வேடம் தரித்து மோதிரம்
பெற்றுக்கொண்ட அந்தச்சிறுவனும் வரவில்லை.
ரீச்சரின் அபிமான வாசகர்கள் என்று சொல்லிக்கொண்டு பலர் வந்திருந்தார்கள். அந்த வாசகர்
கூட்டத்தில்
சில
எழுத்தாளர்களும் இருந்ததாக அதிபர் சொன்னார்.
ரீச்சரின் புத்தக
வெளியீட்டு விழாவுக்கு தலைமைதாங்கிய அதிபரே நா தழுதழுக்க இரங்கலுரை நிகழ்த்தினார். சில எழுத்தாளர்களின் இரங்கல் செய்திகள் வாசிக்கப்பட்டன. ரீச்சர் தகனமானார்.
எல்லாம் கனவுபோலாகிவிட்டது.
தினமும் ரீச்சர் கனவில் வந்துபோய்க்கொண்டிருந்தா. நான் பல்கலைக்கழகம் செல்லத்தவறியது
ரீச்சருக்கு பெரிய கவலையாக இருந்ததை அறிவேன்.
சில வருடங்களில்
அக்காவுக்கும்
திருமணம்
நடந்து அக்கா தனது கணவருடன் கட்டாருக்குப்போய்விட்டாள்.
வருடாவருடம் ரீச்சரின் அந்த செல்வந்த கணவர் ரீச்சரின் நினைவாக கலாசார மண்டபத்தில் ரீச்சர் இறந்த தினத்தன்று அன்னதானம் கொடுத்தார். ஆனால், அந்த நடைமுறை மூன்று வருடங்களுக்குத்தான் நீடித்தது.
அந்தக்கணவர் அந்த மூன்று வருடத்தில் படிப்படியாக மாறிவிட்டிருந்ததையும் என்னால் அவதானிக்க முடிந்தது. ஒரு நாள் அவருக்கு கொழும்பில் மறுமணம் அமைதியான முறையில் நடந்ததாக கேள்விப்பட்டேன். ஒரு நகைக்கடை உரிமையாளரின் மகளை அவர் மணம் முடித்துவிட்டதாக அப்பா சொல்லி தெரிந்துகொண்டேன்.
எங்களுக்கு அழைப்பு இருக்கவில்லை. வந்திருந்தாலும் போயிருப்போமா என்பது நிச்சயமில்லை.
ரீச்சரின் அந்த முன்னாள் கணவருக்கு கொழும்புக்கடையே சீதனமாக கிடைத்துவிட்டதனால் அவர் அங்கே செல்வந்தர்கள் வாழும் ஒரு பிரதேசத்திலேயே
வீட்டோடு மாப்பிள்ளையாகிவிட்டதாக பின்னர் அறிந்தேன்.
எங்கள் ஊரில் அவர்களின் கடைகள் அடுத்ததடுத்து விற்பனையாகி
விட்டன. அவர்கள் வசித்த பெரிய வீடும் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்தது. ஒரு காவலாளியை அந்த
இடத்தில் அவ்வப்போது காண்பேன்.
ஒரு நாள். அப்பா வீட்டில் தாகசாந்தி எடுக்கும் ஓய்வு நாள். நான்தான் எங்கள் சைவஹோட்டலில் கஷியாராக இருந்தேன். ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு கைகழுவிய பின்பு கை துடைப்பதற்கு தேவைப்படும் காகிதங்கள் குறைந்துவிட்டதாக ஒரு சர்வர் சொன்னார். பஜாரில் மறுமுனையில் ஒரு நாடார் கடை இருக்கிறது. அங்குதான் கைதுடைக்கும்
காகிதங்கள் கிலோ கணக்கில் வாங்குவோம். சர்வரிடம் காசு கொடுத்து வாங்கி
வரச் சொன்னேன்.
அவரும் வாங்கிவந்தார். இரண்டு நாட்களின் பின்பு சமையல் கட்டுப்பக்கம் சென்றபோது கழிவுப்பொருட்கள் எச்சில் இலைகள் கொட்டப்படும் பெரிய தகர ட்ரம்மை சுத்தம் செய்யுமாறு பணியாளிடம் சொன்னபோதுதான்
இந்தப்புத்தகம் அட்டை இல்லாமல் கிடந்ததைக்கண்டேன்.
எடுத்துப்பார்த்தால் அது சுந்தரி ரீச்சரின் கதைப்புத்தகம். எனக்கு திகைப்பாகியது. அது எப்படி இங்கே வந்தது. இப்படி தரையில் கிடக்கிறது என்று சற்று அதட்டலாகவே கேட்டுவிட்டேன். இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்த நாடார் கடையில் பழைய காகிதங்கள் வாங்கிவந்த சர்வர் ஓடி வந்தார்.
“ ஐயா.... நீங்க சொல்லித்தான் வாங்கிவந்தேன். இந்தப்புத்தகம்போல
நிறைய புத்தகங்கள் அங்கே அட்டைகள் இல்லாமல்
கிழிஞ்சு கிடந்தது. வாங்கிட்டு வந்தேன்.” என்றார்.
எனக்கு நெஞ்சு அடைத்தது. ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு சர்வர் காண்பித்த
பக்கம் சென்றேன். வாழை இலைக்கட்டுகள், உருளைக்கிழங்கு, வெங்காய மூடைகளுக்கு நடுவில் சுந்தரி ரீச்சரின் அந்தக்கதைப்புத்தகத்தின் பல பிரதிகள் அட்டைகள் இல்லாமல் அலங்கோலமாகக் கிடந்தன.
அனைத்தையும் எடுத்து ஒரு பேக்கில் போட்டுக் கட்டி வீட்டுக்கு எடுத்துவந்தேன். அன்று மட்டுமல்ல அதனைத்தொடர்ந்து வந்த பல நாட்களும் சுந்தரி ரீச்சரின் நினைவுகள் என்னை அரித்தவாறு தொடர்ந்து வந்தன.
ரீச்சர் சித்திரித்த பல பெண்பாத்திரங்கள் எங்கள் ஹோட்டலின் சமையல்கட்டுத்தரையில் கிடந்து அழுதுபுலம்புவதாகவும் தலைவிரி கோலமாக
ஒப்பாரி வைப்பதாகவும் இனம்புரியாத கனவுகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன.
நீண்ட நாட்கள் அந்த சொப்பனாவஸ்தையில் துன்பப்பட்டேன். அட்டைகள் இல்லாத அந்தப்புத்தகங்கள் இருக்கும் பேக் எங்கள் வீட்டில் இருப்பதனால்தான் எனக்கு அடிக்கடி கெட்ட கனவு வருவதாக அம்மா சொன்னார்கள்.
பின்னர் அம்மாவே அவற்றை ஒவ்வொன்றாக எனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்துவிட்டார்கள்.
எனக்கு ஒரு பிரதி
சுந்தரி ரீச்சரின் ஞாபகமாக இருக்கட்டும் என்று இந்த ஒன்றை மாத்திரம் பத்திரப்படுத்திக்கொண்டேன்.
“ஏனைய பிரதிகளுக்கு
என்ன
நடந்தது என்பது தெரியாது போனாலும் இந்தப்பிரதி என்னிடம் சுந்தரி ரீச்சரின் நினைவுகளோடு எப்போதும் இருக்கும்.” என்று மனைவியிடம் சொன்னபோது அவளிடமிருந்து நீண்ட பெருமூச்சு வந்தது.
குழந்தையுள்ளம் படைத்து குழந்தைகளை நேசித்த அந்த சௌந்தர்ய சுந்தரி ரீச்சரின் பெருமூச்சு அடங்கிவிட்டாலும் நினைவுப் பெருவெளியில் அந்த மூச்சு அடங்காமல் பரவிக்கொண்டிருக்கும்.
----0---
(Jeevanathy
2013)
No comments:
Post a Comment