Monday, 8 June 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல் - கதிர் பாலசுந்தரம்


அணிந்துரை - பேராசிரியர் க.பஞ்சாங்கம்

யாருக்காகவோ வாழ்வதற்காக இங்கே வாழ்கிறோம்...

மறைவில் ஐந்து முகங்கள் நாவலை முன்வைத்து...

27 – அத்தியாயங்களில் 336 பக்கங்களில் விரிந்து கிடக்கும் இந்த மறைவில் ஐந்து முகங்கள் என்ற யாழ்ப்பாணத்துக் கதிர்.பாலசுந்தரம் அவர்களின் நாவலை வாசிக்கின்ற ஓர் இந்தியத் தமிழன். எந்த அளவிற்கு இந்நாவல் கட்டமைக்கும் எடுத்துரைப்பு உலகிற்குள் பயணம் செய்யச் சாத்தியப்படும் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிங்களப் பேரினவாதத்தின் வெறித்தனமான தாக்குதலினாலும், ஓர் அரசே தனது மக்களின் ஒரு பகுதியினரைச் சுட்டழிப்பதற்குத் தயாரான மனநிலையோடு செயல்படுகின்ற அரக்கத்தனத்தினாலும், பல்வேறு குழுக்களாகப் பிரிந்துகிடக்கும் தமிழீழ விடுதலை இயக்கங்களின் சகோதரக் கொலைகளாலும் உயிர்களை இழந்து, உறவுகளை இழந்து, சொத்துக்களை இழந்து, பழகிய மண்ணை இழந்து, படிப்பை இழந்து, கற்பை இழந்து, எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு சமூகம் வாழ்வதற்கு அடிப்படையாக அமையும் வாழ்வின் அறங்களை இழந்து வாழும் நிலையில் விடப்பட்ட ஒரு காலகட்ட்த்து மனிதர்களின் சலம் வைத்த புண்களின் வலியாய் நீளும் வாழ்வு குறித்த எழுத்துக்களைக் குறித்து, மேற்கண்ட எந்தவிதமான இழப்புக்களும் இல்லாமல் வாழ்வதாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் இந்தியத் தமிழன் என்ன அப்பிடியொரு பொருட்படுத்தக்கூடிய கருத்தொன்றை முன் வைத்து விட முடியுமெனத் தயக்கமாக இருக்கிறது.

 இது ஓர் அரசியல் நாவல்: வழிதவறிய போராளிகளை முன்னிருத்தி இயக்கச் செயல்பாடுகளை விமர்சிப்பதைக் கலையாக்கமாக வடிவமைக்கிற முயற்சி. இது போன்று கென்யா தேசத்தைச் சார்ந்த சிலுவையில் தொங்கும் சாத்தான் என்ற ஒரு நாவலை வாசித்துப் பிரமித்துப் போனேன். நாவல் வடிவத்தைக் கட்டமைக்கும் படைப்பாக்கப் போராட்டத்தில் நாவலின் உயிரை வடிவமைக்க முடியாமலே போய்விடக்கூடிய சாத்தியப்பாடுகள் அரசியல் நாவல் எழுதும் போது அதிகம். உயிரைப் பிடிக்க முடியாமல் போகும் போது, நாவல் வெறுமனே விவரணைகளாக, ஒரு பக்கப் பார்வை கொண்டதாக, பிரச்சினைகளின் பன்முகப்பட்ட முகம் மறைந்து, ஒற்றை முகம் மட்டும் துருத்திக் கொண்டு நாவலின் ஒட்டு மொத்த வடிவத்தையே அருவருப்பாக்கிவிடும் ஆபத்து நிகழ்ந்து விடும். கதிர்.பாலசுந்தரம் இத்தகைய விபத்துகள் குறித்த விழிப்புணர்வோடு இந்த நாவலெனும் மொழியாலான புனைவுலகத்திற்குள் வினைபுரிந்து வெற்றி பெற்றுள்ளார் எனப்படுகிறது.

நம்பிக்கைத் துரோகங்களும், காட்டிக் கொடுத்தல்களும், அவநம்பிக்கைகளும், சூழ்ச்சிகளும், வஞ்சங்களும், பொறாமைகளும், கூட இருந்தே குழி தோண்டுதல்களும், காரணம் காணமுடியாத சாவுகளும், (அதாவது யாரால், எந்தக் குழுவினரால், எதற்காகச் சுடப்பட்டோம் என்பதை யூகித்துக்கூட அறியமுடியாதபடியான சூழலில் செத்து விடுவது) தப்பிப் பிழைத்து ஓடிவிடுவதற்காகப் பின்பற்றப்படும் எல்லா விதமான தகிடுதத்தங்களும், பொய்மைகளும், பொறாமைகளும் எந்த அளவிற்கு ஓர் இனத்தை நாசப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதை உருவக மொழியில் பலவாறு, பல கோணத்தில் சொல்லிக்கொண்டே போகிறது நாவல். பேரினவாதத்திற்கு எதிராகத் தூக்கிய துப்பாக்கிக் கலாச்சாரம், அந்தப் பேரினவாதத்தைவிட அதிகமாகத் துன்பம் தரும் ஒன்றாக வடிவெடுப்பதை வரலாற்றில் எப்படி எதிர்கொள்வது என்ற வினாதான் இந்த நாவலின் ஆதாரப் புள்ளியாக நின்று, மற்ற மற்ற காட்சிகளைச் சுழல விட்டுக் கொண்டிருக்கிறது. எல்லா விடுதலைப் போராட்டங்களிலும் இந்த வினா ஒரு மனிதப் பிரச்சினையாகத் தொடர்வதுதான் வரலாறாக இருந்திருக்கிறது. இந்தியத் தேசியப் போராட்டத்திலும்  கூட வெள்ளைக்காரன் கொன்றதைவிட, இந்தியர்களுக்குள்ளேயே இந்து முஸ்லிம் என்று மோதிச் செத்தவர்கள்தான் அதிகமாக இருப்பர் என்கிறது வரலாறு. என்ன கொடுமையிது? தீமையை விட, நன்மைதான் மனிதர்களை அதிகம் பலி கேட்கிறதா? சாத்தானை விடக் கடவுளர்கள்தான் அதிக மனித உயிரை வாங்கி இருக்கிறார்கள் வரலாற்றில். இந்தக் கொடூரத்தை மனித இனம் எப்படி வென்றெடுப்பது? இந்த அடிப்படையை நோக்கித்தான் இந்த நாவல் நம்மை இழுத்துச் செல்வதாக உணர்கிறேன்.

மிதவாதியென்று சுட்டுக் கொல்லப்பட்ட மேயரின் மகனான அமிர், தனது தந்தையின் இறுதிச் சடங்கில் ஆற்றுகிற ஆத்திரம் கொட்டுகிற வரிகளோடு நாவல் தொடங்குகிறது. இறுதியில் லண்டனில் தன்னை உளவு பார்த்துக் கொல்ல வந்த, கறுப்புநரிகள் இயக்கத்தைச் சார்ந்த, பிறகு மனம் மாறிய ஜீவிதாவிற்காக அங்கேயே அமிர் காத்திருப்பதாக நாவல் முடிகிறது. துரோகங்களும், உளவு பார்த்தல்களும் தோல்வி அடைந்து, எல்லாவற்றையும் தாண்டி ஒரு தளத்தில் மனிதர்களுக்கிடையே காதல் அரும்பி, வாழ்க்கையெனும் இந்தப் பெரும் வெள்ளத்தில் மிதந்து செல்லத் தோணியாய் வந்து அமையும் என்ற நம்பிக்கை தரும் ஒரு துளியோடு நாவல் முடிகிறது. அமிர், ஜீவிதா, பூமா, நதியா, கில்லாடி ஆகிய ஐந்து முகங்களை வைத்துக் கொண்டு, ஈழத் தமிழனின் வரலாற்றில் நிகழும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்து நிகழ்வுகள் அனைத்தையும் கதைசொல்லிப் பதிவு செய்ய முயன்றுள்ளார். மேலும் தமிழர் என்கிற தேசிய இனத்திற்குள்ளேயே தீநாக்குகளாய் நீண்டு கிடக்கும் சாதி, பெண்ணடிமைத்தனம், வர்க்க வேறுபாடு ஆகிய வரலாற்றுப் பிழைகளையும் கவனமாக முன்வைத்து விடுகிறார். யாழ்ப்பாணம், லண்டன் ஆகிய களங்களில் தனது கதை சொல்லலை ஒரு நிகழ்கலை போல நிகழ்த்திக் காட்டும் படைப்பாளி. இன்னும் கொஞ்சம் கூடுதலாக, இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் மூல காரணமாக நின்று இயக்கிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்தியங்களின் நரிமுகங்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவர முயற்சி செய்திருந்தால் நாவல் இன்னும் ஒரு உலகம் தழுவியதாகப் பரிணமித்திருக்கும். சிலுவையில் தொங்கும் சாத்தான் இப்படித்தான் கென்யாவின் எல்லாக் கொடூரங்களுக்குமான காரணங்கள். ஏகாதிபத்திய அரசியலை மிகத் தெளிவாக்க் கண்டிப்பதைக் காண முடிகிறது. எளிதில் கண்ணுக்குத் தெரியாத, அழுக்குப்படிந்த அதிகாரக் கயிறுகளால் உலக அரசியல் பின்னப்பட்டிருக்கும் ஒரு மாயச் சுழலில் நமது இருப்பு இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. யாருக்காகவோ வாழ்வதற்காக இங்கே உடை உடுத்திக் கொள்கிறோம்; உணவு உண்டு கொள்கிறோம்; கட்டிய வீட்டில் தூங்கி விழித்துக் கொள்கிறோம்; பக்கத்து வீட்டுக்காரனோடு சண்டை போட்டு நமது நான் என்கிற அகங்காரத்தைத் திருப்திப்படுத்திக் கொள்கிறோம். கடும் உழைப்பில் கதை சொல்லியைப் பாராட்டுகிறேன். போற்றுகிறேன்.


க.பஞ்சாங்கம்
தமிழ்ப் பேராசிரியர்,
காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு நிலையம்.
புதுச்சேரி – 605 008.




No comments:

Post a Comment