ஒருமுறை எனது ஆசன
வாயில் நோய் வந்து கஸ்டப்பட்டுப் போனேன். Fistula என்று அந்த நோயைச் சொல்வார்கள். மலம் சிரமமில்லாமல்
வெளியேற உதவும் சுரப்பிகளின் துவாரம் அடைபடுவதால், சுரப்பிகளிலிருந்து வெளிவரும் நீர் வெளிப்படாமல்
கிருமிகள் அதனைப் பாதிக்கும். மூன்றுமுறை சத்திரசிகிச்சை செய்தபின்னர்தான் ஓரளவு
முன்னேற்றம் வந்தது. கார் ஓடும் போதும், இருக்கும்போதும் 'போதும்'
என்றாகிவிடும். தலையணை போன்ற வட்ட
வடிவிலான 'பிளாஸ்ரிக் குஷன்'
ஒன்று எப்போதும் என்னுடன் கூடவே பிரயாணம்
செய்யும்.
ஒருமுறை இராசு மாமா
என்னைப் பார்க்க வரும்போது - இப்படியானவர்கள் அமருவதற்காக மருத்துவ ரீதியில்
செய்யப்பட்ட பிளாஸ்ரிக்கிலான வளையம் ஒன்றிருப்பதாகச் சொன்னார்.
"எங்கே மாமா
அதை வாங்கலாம்?" - "ஃபார்மசியில் வாங்கலாம்" - "அதற்கு
என்ன பெயர்?" - அவர் அதன்
பெயரை மறந்துவிட்டார். "நான்கூட அதைத்தான் பாவிக்கிறேன். நெடுகலும் கார் ஓட
வேண்டி வாறதாலை நோ வராமலிருக்க பாவிக்கிறனான்" சொல்லிக் கொண்டே காருக்குள்
வைத்திருந்த அந்த வளையத்தை எடுத்து வந்தார். அந்த வளையத்தில் கூட அதன் 'பிறாண்ட் நேம்' இருந்ததேயொழிய அதன் பெயர் இருக்கவில்லை. பெயர் இல்லாத
அதற்குள் மேலும் காற்றை ஊதினார் இராசு மாமா. தனது ஞாபகமாக அதை என்னிடம் தந்தார்.
தான் இன்னொன்று வாங்குவதாகவும் சொன்னார். அவரது அந்தக் கருணை உள்ளத்தை நான்
வியந்தேன்.
கடந்த மூன்று நான்கு
வருஷங்களாக அந்த வளையத்தைத்தான் பாவித்து வருகின்றேன். ஒரு 'ஷொக் அப்ஷோவர்' மாதிரி அது என்னைக் காத்து வருகின்றது. காரிற்குள் அதை நிரந்தரமாக விட்டு
வைத்திருக்கின்றேன். அதற்குள் திரும்பவும் காற்றை ஊதவேண்டிய தேவை இற்றைவரை எனக்கு
ஏற்படவில்லை.
இராசு மாமாவிற்கு
திடீரென்று வருத்தம் கண்டது. சத்திரசிகிச்சை செய்த வைத்தியர்கள் அவர் பிழைப்பது
மிகவும் கஸ்டம் என்று சொல்லிவிட்டார்கள். அவருக்கும் அது தெரிந்தே இருந்தது.
அடிக்கடி வைத்தியசாலை சென்று அவரைப் பார்த்து வந்தேன். அவர் வாங்கித் தந்த
வளையத்தை அவருக்கு நினைவூட்டினேன். அவர் ஊதித்தந்த காற்றுடன் பத்திரமாக
இருப்பதாகவும் சொன்னேன். திரும்பிப் படுப்பதற்கெல்லாம் மிகவும் கஸ்டப்பட்டார்.
அந்த வளையத்தைப் போல தனது உடம்பு பூராவும் 'கவர்' பண்ணக்கூடியவாறு
ஏதாவது இருந்தால் நல்லாக இருக்கும் என்றார்.
இராசு மாமாவை
வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு போகும்படி சொல்லிவிட்டார்கள். இருக்கும் காலங்களை -
மகிழ்ச்சியாக - உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கழிப்பதற்காக அந்த ஏற்பாடு. நோயின்
உபாதை நீங்குவதற்கு மாத்திரம் மருந்து கொடுத்தார்கள். இராசு மாமா சிரித்தபடியே
காலத்தைக் கழித்தார்.
அடிக்கடி அவரிடம்
போய் உரையாடிவிட்டு வருவேன். அப்படி ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை மாமாவைச்
சந்தித்துவிட்டு வந்து ஒரு குட்டித்தூக்கம் போட்டேன். மாலை நான்குமணி இருக்கும்.
இராசு மாமா இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. அடித்துப்பிடித்துக் கொண்டு
மீண்டும் அவர்களின் வீட்டிற்குப் புறப்பட்டேன். காரிற்குள் ஏறி இருந்தபோது முற்றாக
ஒரு வேறு அனுபவத்தை நான் பெற்றேன். அந்த பிளாஸ்ரிக் வளையத்தினுள் இருந்த காற்று
சுத்தமாக முழுவதும் வெளியேறி சுருங்கி இருந்தது. எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது.
இது எப்படி நடந்தது?
இரவு திரும்பி
வரும்போது ஒரு மணியாகிவிட்டது. மறக்காமல் அந்த வளையத்தை எடுத்து வந்து காற்றினால்
நிரப்பினேன். எங்காவது ஓட்டை இருக்கின்றதா எனச் சோதித்தேன். எந்தவிதமான துளைகளும்
இல்லாமல் இருந்தது. இப்போது அந்த வளையத்தினுள் என்னுடைய 'உயிர்க்காற்று" புகுந்து கொண்டது.
No comments:
Post a Comment