Sunday, 14 June 2015

உயிர்க்காற்று

படார்' என்றொரு சத்தம். நான் விழித்துக் கொண்டேன். இரவுப்பொழுதாகையால் அந்தச் சத்தம் பெரிதாகக் கேட்டது. எத்தனை மணியாக இருக்கலாம்? அப்பா வழக்கமாக நேரத்திற்கு (நாலரை ஐந்து மணியளவில்) எழும்பி  சுவாமி கும்பிடத் தொடங்கி விடுவார்.

"அது என்ன சத்தம்?" படுக்கையிலிருந்தபடியே அப்பாவும் கேட்டார். எல்லாரும் எழுந்து கொண்டோம். விளக்கைப் போட்டோம். ஆளாளுக்கு ஒவ்வொரு அறையாகத் தேடுதல் செய்தோம். ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பா மணிக்கூட்டைப் பார்த்தார். மணி மூன்று பதினைந்து.

 "சரி எழும்பி விட்டேன். இனிச் சுவாமியைக் கும்பிடுவோம்" காலைக்கடன்களை முடித்து குளித்து பூக்கூடையை எடுத்துக் கொண்டார். தேவாரம் பாடியபடியே பூக்கள் கொய்வதற்காக முற்றத்திற்கு விரைந்தார். நாங்கள் மீண்டும் உறங்க முயற்சி செய்தோம். மனதில் பயம். அந்தச் சத்தம் இப்பவும் காதிற்குள் ஒலித்தபடி.

அப்பாவின் தேவாரங்களைக் கேட்டபடியே கண்ணயரும்போது, "ஓடி வாங்கோ! ஓடி வாங்கோ!!" என்ற கூக்குரல் சுவாமிப்பட அறையிலிருந்து கேட்டது.

சுவாமிப்பட அறையில் - ஒரு பக்கச் சுவரில் நீட்டிற்கு தட்டு அடித்து, அதிலே நிறைய சுவாமிப்படங்களை வைத்திருந்தார் அப்பா. அவற்றின் மத்தியில் இருந்த ஒரு படம் நூற்றியெண்பது பாகையால் திரும்பி எதிராகி நின்றது.

அறையின் ஜன்னல்கள் எதுவுமே திறந்திருக்கவில்லை. காற்றும் ஒன்றும் பெரிதாக வீசவில்லை. நாங்கள் திகைத்துப் போனோம். இது எப்படி நடந்தது?

அப்பா கொஞ்ச நேரம் அந்தப்படத்தையே உற்று நோக்கியபடி இருந்தார். பின்னர் அந்தப்படத்தை திருப்பி நேராக வைத்தபோது அவர் கைகள் நடுங்கின. முருகன் படம். கற்பூரம் சாம்பிராணி கொழுத்தி மணி அடித்து தேவாரங்கள் பாடினார்.

அம்மா எல்லாரிற்கும் சுடச்சுட தேநீர் வைத்துத் தந்தார். நானும் அண்ணாவும் படிப்பதற்காக புத்தகங்களை மேசை மீது பரப்பினோம். புலன்கள் ஒன்றாகவில்லை. ஆளாளுக்கு எப்படி நடந்திருக்கலாம் என்று கதைத்தபடி இருந்தோம். அப்பா கும்பிட்டு முடித்து சாய்வணைக்கதிரையில் சரிந்தார். விடியத் தொடங்கியது.

சற்று நேரத்திற்கெல்லாம் படலையில் அரவம் கேட்டது. "துரை... துரை..." என்று கூப்பிட்டபடியே ஒருவர் சைக்கிள் மணியையும் அடித்துக் கொண்டு சைக்கிளில் இருந்து குதித்தார். அப்பா அரிக்கன் விளக்கைத் தூக்கிக் கொண்டு 'கேற்' வரைக்கும் சென்றார். கேற்றைத் திறந்து, வந்தவரைக் கூட்டிக் கொண்டு உள்ளே வந்தார். அது சிவம் மாமா. அவர் வளவளவென்று கதைத்தபடியே வந்தார். அப்பாவின் குரலிலும்  ஏதோ கலவரம் தெரிகிறது.

உள்ளே வந்தவர் "தம்பி இறந்து போனார்" என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு வீட்டிற்குள்ளே சென்று உடுப்பை மாற்றத் தொடங்கிவிட்டார். சிவம் மாமாவை இரு என்று கூடச் சொல்லவில்லை. அம்மாதான் அவருடன் பேச்சுக் கொடுத்தார்.

"என்ன நடந்தது?" - "ஹாட் அற்றாக்!" - "எத்தினை மணிமட்டிலை?" - "விடியப்புறம் மூன்று மணிமட்டிலை"

அம்மா இரண்டு சொல்லுக் கதைக்கவில்லை. அப்பா வெளிக்கிட்டுக் கொண்டு வந்துவிட்டார்.

"நான் போட்டு வாறன். விடிஞ்சாப்பிறகு நீங்களும் வெளிக்கிட்டு வாங்கோ" சொல்லிவிட்டு வந்தவருடன் கூடச் சென்றார். பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. திரும்பவும் வீட்டிற்குள் வந்தார்.

"அந்த முருகன் படம் - என்ரை தம்பி வாங்கித் தந்ததுதான்" என்றார்.




1 comment:

  1. சில செயல்களுக்கு; சில ஆச்சரியங்களுக்கு காரணங்கள் சொல்ல முடியாது.
    பிரபஞ்சத்துக்குள் புதைந்திருக்கிற அதிசயங்கள் இப்படிச் சில வேளைகளில் வெளிப்படுகின்றன போலும்!

    இம்மாதிரி பல கதைகளை நான் கேள்விப்பட்டும் அனுபவித்தும் இருக்கிறேன். இது மாதிரியான ஒரு சம்பவத்தை எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் ஒரு முறை தன் வாழ்விலும் நடந்ததாகச் சொன்ன ஞாபகம்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி சுதாகர்.

    பிரபஞ்ச சக்தி மீதான நம்பிக்கையை மீண்டும் துளிர்க்கச் செய்கிறது இப்பகிர்வு.

    சொந்தத் தயாரிப்பில் படமும் கருத்துக்கு வலுவூட்டுகிறது.தொடர்க....

    ReplyDelete