Wednesday 12 August 2015

ஒண்ணுமே புரியல உலகத்தில!



'சுப்பர் மார்க்கெட்'டின் 'டெலி' (Deli) பகுதியினுள் ஏழெட்டுப் பேர் வரிசையில் நிற்கின்றார்கள். அங்கு பொருட்களை வாங்குவதற்காக 'நம்பர் சிஸ்டம்' நடைமுறையில் இருந்தது. 'பைஃவ்' (five) என்று கத்தினாள் 'கவுண்டரில்' நின்ற ஒரு  வெள்ளை இனப்பெண். ஒரு வயது முதிர்ந்த பெண் மெதுவாக நகர்ந்து அவளிடம் சென்றாள். 'நம்பர் துண்டை' வாங்கி வைத்துவிட்டு அவள் கேட்டதை எடுத்து நிறுத்து விலையும் குறித்து அவளை அனுப்பினாள்.

வரிசையில் அடுத்தது ஒரு கறுப்பு உருவம். நம்மவர்தான். கையில் பிள்ளையைச் சுமந்தபடி அவன் நிற்கின்றான். அவனுக்குப் பின்புறமாக வெள்ளை வெளேரென ஒரு ஐரிஷ் நாட்டுப்பெண். வெள்ளையும் கறுப்பும் அருகருகே நிற்கும்போது, அவை தமக்கேயுரித்தான தனித்தன்மையுடன் துலங்குவதைக் காணக்கூடியதாக இருந்தது.

 'டெலி'யில் நின்ற அந்தப்பெண்ணிற்கு - ஐந்துக்குப் பிறகு இலக்கம் நகர மறுத்தது. காரணம் அந்தக் கறுப்பு நிற மனிதன்தான். அவள் கை விரலினால் சொடுக்குப் போட்டு அந்த ஐரிஷ் பெண்ணை வருமாறு கூப்பிட்டாள். அந்தக் கறுப்பு மனிதன் குழந்தையை இடதுபுறம் மாற்றிவிட்டு, வலது கையினால் தன் நெஞ்சைத் தொட்டு - 'நானா?' என்றான். அவள் தன் கைகளினால்  'இல்லை' என்று சைகை காட்டி, அந்த ஐரிஷ் பெண்ணை வருமாறு தனது கையைத் தூக்கித் தூக்கிக் காட்டினாள். அவள் அந்த இடத்தை விட்டு நகராமல் பிரமை பிடித்தவள் போல நின்றாள்.

அந்தக் கறுப்பு மனிதன் 'கவுண்டரை' அணுகி அந்தப் பெண்ணிடம், "ஐந்துக்குப் பிறகு ஆறுதானே வரும்!" என்றான்.
"எனக்கும் தெரியும். ஆனால் அந்தப் பெண் இங்கே நெடுநேரமாக நிற்கின்றாள். நம்பர் சிஸ்டத்தில்தான் வாங்கவேண்டும் என்பது அவளுக்குத் தெரியாமல் போய்விட்டதால் அவள் அலைந்து போய் விட்டாள். அவளுக்குக் கொடுத்துவிட்டு உனக்குத் தருகின்றேன்" என்று வெடுக்கு வெடுக்கென்று அவனுக்குப் புரியாமல் இருக்க கடுகதி வேகத்தில் பேசினாள்.

"அது எப்படி முடியும்? எனக்குத்தான் முதலில் தரவேண்டும். எங்கே உன் சுப்பர்வைசரைக் கூப்பிடு"  மேசையில் பலமாக அடித்துக் கத்தினான் அவன்.
"எல்லாம் இங்கே நான் தான்" என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே - உள்ளேயிருந்து சத்தம் கேட்டு சுப்பர்வைசர் வந்தாள். அவன் தனது பிரச்சினையை அவளிடம் சொன்னான். அவளை உள்ளே வருமாறு சுப்பர்வைசர் கூட்டிச் சென்றாள்.

உள்ளே அவளுக்கு பேச்சு விழுந்தது. முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வெளியே வந்தாள். அவளைத் தொடர்ந்து சுப்பர்வைசரும் வெளியே வந்தாள். ஒரு ஓரமாக நின்று நடப்பதை அவதானித்தாள்.

"நம்பர் சிக்ஸ்" மெதுவாக வேண்டா வெறுப்பாகக் கூப்பிட்டாள். அவன் தனது பொருட்களை வாங்கிக் கொண்டான். அருகே உள்ள சுவர்க்கரை ஓரமாக போய் நின்று கொண்டான். அடுத்ததாக அந்த ஐரிஷ் பெண். அவள் தனது பொருட்களைப் பெற்றுக் கொள்ளும்போது, கவுண்டரில் நின்றவள் நடந்த சம்பவத்திற்காக அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள்.  ஐரிஷ் பெண் "பரவாயில்லை' என்று சொல்லிக் கொண்டாள். தனது பொருட்களை எடுத்துக் கொண்டு சுவர்க்கரை ஓரம் நின்ற கறுப்பு மனிதனை நோக்கிச் சென்றாள் அந்த ஐரிஷ் பெண்.

அவன் அவளைப் பார்த்துப் புன்முறுவல் செய்தான். அவள் அவனிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டாள். அவன் அவளிடமிருந்த பொருட்களை வாங்கிக் கொண்டான். இருவரும் மிகவும் நெருக்கமாக ஒருவருடன் ஒருவர் உரசிக் கொண்டு மெதுவாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்கள்.

கிலி பிடித்தது போல - அவர்கள் இருவரும் போவதையே பார்த்துக் கொண்டிருந்தது 'டெலி'.



No comments:

Post a Comment