Sunday, 30 August 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 12 - நீலக் கண் வீமன்

                  காலை பத்து மணி. வீட்டு மாடியில் அமிரின் அறையில் நின்ற கில்லாடி  மறைந்து மறைந்து யன்னல் திரைச் சீலை இடுக்கு வழியாக கீழே தோட்டத்தில் நின்ற நதியாவைப்  பார்த்தான். அவன் வாய் முணுமுணுத்தது: 'உவள் என்ன வானத்தைப் பார்த்து வரங்;கேட்கிறாள்? கொஞ்சக் காலமாக தோட்டப் பக்கமே காலடி வைக்காதவள், இப்போது என்ன நடந்தது? எப்போதும் தோட்டத்தில்தான் நிற்கிறாள். வீட்டு ஞாபகம் வந்திட்டுதோ?”

                பல் கிடுகிடுக்கின்ற குளிர். அதனையும் பொருட்படுத்தாமல் நதியா வீட்டுக் கோடிப்புறத் தோட்டத்தில் இருண்டுகிடந்த வானத்தைப் பார்த்து முறையிட்டாள்: 'ஐந்து நாட்களாகின்றன. அமிர் கைது செய்யப்பட்டுவிட்டார் என்று மொட்டையாகச் சொல்கிறார்கள். ஏன் கைது செய்யப்பட்டார்? எங்கே கைது செய்யப்பட்டார்? யாருமே சொல்கிறார்கள் இல்லை. முருகா?” கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வழிய தோட்ட அந்தத்தில் உள்ள மேப்பிள் மரத்தைப் பார்த்தாள். அம்மரத்தின் வெற்றுக் கிளைகளில் அரும்பியிருந்த வசந்த காலக் குருத்துக்கள் அவளைப் பார்த்து நான்கு வாரங்களின் முன்னர் பூப்பெய்திய குமரைப் போல ஒன்றும் புரியாமல் விழித்தன.

                லிவர்பூலில் அமிர் கைது செய்யப்பட்டு ஐந்து நாட்கள் ஓடிவிட்டன. ஆனாலும் அவனைப் பற்றிய தகவல் எதுவும் கில்லாடி குழுவில் எவருக்கும் தெரியாது. அவர்கள் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை என்பது நதியாவுக்கு வெளிச்சமாகியது.      

                 கில்லாடி கும்பல்தான் அவமிரைப் பலியிட்டுவிட்டதாக நதியா திடமாக நம்பினாள். விளைவு அன்று இரவு அவர்கள் போதையில் புசத்தும்போது அவள் ஒட்டுக் கேட்டாள். தலை சுழன்றது. கண்கள் இருண்டன. இதயம் படபடவென அடித்தது. அதனைக் காட்டிக் கொள்ளாது படுக்கைக்குப் போனாள். நித்திரை வந்தால்தானே? எப்பொழுது விடியும் விடியும் என்று காத்திருந்தாள். 

                ஜீவிதாவுக்கு தெரியவந்தால் அமிரை மீட்க ஏதாவது செய்வாள் என்று நம்பினாள். விடிந்ததும் அவளுக்கு அமிரின் கதியைச் சொல்லத் தயாரானாள். நதியாவுக்கு ஜீவிதாவின் வீடு எங்கே உள்ளது என்று தெரியாது. ஆனால் அவளின் சிநேகிதி பூமா பிளெசற் பூங்காவிற்கு அருகே உள்ள ஆவரங்கால் அன்ரி வீட்டில் வசிப்பது தெரியும். பூமாமூலம் ஜீவிதாவுக்கு அமிரின் கைதுபற்றித் தெரிவிக்க முடிவுசெய்து அவள் வீட்டுக்குப் போக படிவழியே இறங்கிவந்தாள்.

                வரவேற்பறையில் இருந்த கில்லாடி அவளை ஏற இறங்கப் பார்த்தான். சிவப்பு பிளவுசும் கறுப்பு ரவுசரும் அணிந்து வழமைக்கு மாறாக நேரகாலத்தோடு புறப்பட்டிருந்தாள். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

என்ன நதியா. எட்டு மணியாகவில்லை. அதற்கிடையில் எங்கே புறப்பட்டு விட்டாய்?" என்று கேட்டான்.
சீலன் கடைக்குப் போகிறேன். மரக்கறி வாங்க."
கொஞ்சம் நேரஞ் செல்ல வாங்கலாந்தானே?"
இன்றைக்கு வியாழக்கிழமை. புதிதாக நல்ல மரக்கறி வரும். தெரிந்தெடுக்கலாம்" அவள் அந்தப் பதிலை அன்றிரவு முழுக்க தயார்படுத்தி இருக்கிறாள் என்பது கில்லாடிக்குத் தெரியாது.
நதியா ஐந்தாறு நாட்களாக நீ ஏதோ தலைக்குள்ளே வைத்துப் பினைகிறாய். வீட்டிலிருந்து ஏதாவது கெட்ட செய்தி?"
அப்படி ஒன்றும் இல்லை. எனக்கு ஒரே தலையிடி."
சரி சரி போயிட்டு வா. மூத்தான் இப்ப வருவான். நான் வெளிக்கிடவேண்டும். சுணங்காமல் வா."

                அவள் மனம் பேதலித்திருந்தது. வழமையில் கூறுவது போல 'போயிட்டு வருகிறேன்என்று கில்லாடிக்குக் கூறாமலே, கதவைப் படாரெனச் சாத்திவிட்டு ஆவரங்கால் அன்ரி வீடு நோக்கி பறந்தாள். கில்லாடி அவளைப் பார்த்துக்கொண்டு நின்றான். சின்னப் பெட்டைஎன்று அவன் வாய் முணுமுணுத்தது.
               
                இன்று பொய் சொல்லித் தற்காலிகமாகப் பறந்து செல்லும் கிளி, என்றோ ஒரு பகல் சொல்லாமலே நிரந்தரமாகப் பறக்கப் போவது கில்லாடிக்கு அப்போது தெரியாது.

                உயர்ந்த காலணிக் குதிகள் டொக் டொக் என்ற ஓசை எழுப்ப சீமெந்து நடை பதை வழியே நதியா முயல் குட்டியைப் போலப் பாய்ந்து சென்று கொண்டிருந்தாள். 

                வீதியின் குறுக்கே அமைந்த நடைபாதையின் இருமருங்கிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நதியா பாய்ந்து பாய்ந்து நடைபாதை வழியே வீதியைக் கடந்து கொண்டிருந்த பொழுது, ஒரு காரின் யன்னல் ஊடாகத் தiயை நீட்டிய மூத்தான்,
நதியா! காலமைவெள்ளண எங்கே போகிறாய்? பிளெசற் பூங்காவிற்கா? இன்றைக்கு அது பூட்டு நதியா" என்று கத்தினான்.
வெங்கலத்தில் அடித்தது போன்ற மூத்தானின் சொற்கள் அவள் காதுகளைத் தொட்டன. அவள் திரும்பிப் பார்க்கவில்லை. அவள் சிந்தனையை அமிரின் அவலமும், கண்கள் ஆவரங்கால் அன்ரி வீட்டையுமே மொய்த்திருந்தன.

                நதியா ஆவரங்கால் அன்ரி வீட்டை அடைய முன்னர், அரசநீல ரவுசரும், வெள்ளைச் சேட்டும், கருநீல கழுத்துப் பட்டியும் அணிந்த, ஆறடியிலும் உயரமான நீலக் கண் வெள்ளைக்காரன் ஒருவன் பூமாவைத் தேடி ஆவரங்கால் அன்ரியின் கதவு மணியை அமுக்கியிருந்த சம்பவம் நதியாவுக்கத் தெரியாது.

 xxx

                அந்த நீலக் கண் வெள்ளைக்காரன் ஆவரங்கால் அன்ரியின் வீட்டை அடைய முன்னரே, அன்ரி வீட்டைவிட்டு வெளியேறி சீமெந்து நடைபாதை வழியே மனோபார்க் முருகன் கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்தார். அந்த நீலக்கண் மனிதன் பாதையில் ஆவரங்கால் அன்ரியைப் பார்த்தான். கூன் விழுந்த முதுகு. பால் போன்ற தலைமுடி. பச்சைப் பட்டுப் புடவை வேறு. வலக்கையில் ஒரு தகர உண்டியல். வெளி வழைந்த கால்களை வில்லங்கமாக உயர்த்தி பின் கவனமாகத் தரையில் பதித்து உடம்பை இழுக்க அதற்கேற்ப அன்ரியின் தேகமும் இரு பக்கமும் சாயந்தாடுவதைப் ஊன்றிப் பார்த்தபடிதான் அந்த நீலக் கண்ணன் அவவின் வீட்டைத்தேடிப் போய்க் கொண்டிருந்தான். அவனுக்குத் தான் தேடிப் போகும் வீடு அந்த தாண்டித் தாண்டி நடக்கும் கிழவியினுடையது என்பது தெரியாது. ஆவரங்கால் அன்ரி கையில் நிரந்தரமாக அந்த பச்சைத்தகர உண்டியல் சஞ்சாரித்தது. யாழ்ப்பாணத்தில் இனவெறிகொண்ட சிங்கள இராணுவத்தை எதிர்த்துப் போர்புரியும் கறுப்பு நரி விடுதலைப் போராளிகளுக்கு பணம் தண்டத்தான் அந்த தகர உண்டியலைக் காவிக் கொண்டு கோவிலுக்குச் செல்கின்றார் என்பது வேகமாக நடந்து கொண்டிருந்த அந்த நீலக் கண் வெள்ளைக்காரனுக்குத் தெரியாது.

                அந்த நீலக் கண்ணன், ஆவரங்கால் அன்ரி வீட்டுக் கதவுமணியை ஒலித்தான். 

                ஜீவிதாவின் பிறந்த தினம் அன்று. அவள் முருகன் கோவிலில் பூசைக்கு ஏற்பாடு செய்திருந்தாள். அந்தப் பூசைக்கு வரும்படி பூமாவை அழைத்திருந்தாள். அதற்குப்போகப் புறப்பட்டு நின்ற பூமா கதவைத் திறந்து தலையை நிமிர்த்திப் பார்த்ததும் பூனையைக் கண்ட சுண்டெலி போலத் திகைத்தாள். அமிரிலும் கிட்டத்தட்ட மூன்றங்குலம் உயரமான ஏறக்குறைய நாற்பத்தைந்து வயது மனிதன்; அவள் முன் நின்றான். அரசநீல ரவுசர் அணிந்த, வெள்ளைச் சேட்டின் மேல் கருநீல கழுத்துப்பட்டி கட்டிய, பாரதத்திலே வருகின்ற வீமனைப் போன்ற திடகாத்திரமான ஒரு ஊதிப்புடைத்த நீலக் கண் வெள்ளைக்காரன் அங்கு நிற்பதைக் கண்டாள். அவனின் மேவி வாரிய எண்ணெய் தடவாத பொன்னிற கேசம் சற்றுக் குலைந்து காணப்பட்டது. அவனது இடது கையில் ஒரு சின்ன கறுப்பு பேக் தொங்கியது.

                நீலக் கண்கள் பூமாவை கணக்கெடுத்தன. மெல்லிய மண்வண்ண சுடிதார் - தோள் மட்டத்துக்குச் சற்றுக் கீழே கத்தரித்த கருங்கூந்தல் - அதன் ஒய்யார நடனம் - தலையில் வளைவான ஒரு சிவப்பு சிலைட் - வெள்ளைக் கல் மூக்குத்தி - முகத்தில் புரியாத கதை. இவைதான் அவன் கண்களில் பட்டவை.

மிஸ் பூமா. இது எனது அறிமுக அட்டை." நீலக்கண் பேசியது.

                பூமா மிரண்டாள்;. எப்படி முன்பின் தெரியாத ஒரு வெள்ளையனுக்குத் தனது பெயர் தெரிய வந்தது? ஏன் தெரியவந்தது? அவளின் தேகம் தலை கிள்ளிய கோழியாகப் பதறியது.

                அந்த அட்டையை அவன் நீட்டியபடி நின்றான். அவள் உற்றுப் பார்த்து வாசித்தாள்.

                பின் எதுவித பேச்சுமின்றித் தலையை நிமிர்த்தி அவனது நெஞ்சுக்கு மேலே கழுத்துக்கு அப்பால் தெரிந்த வெளுறிய வெள்ளை முகத்தையும் நீலக் கண்களையும் மீண்டும் ஊன்றிப் பார்த்தபின்,
நீங்கள் ஏன் இங்கு நிற்கிறீர்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது" என்று ஆங்கில வழக்கத்தில் கூறினாள்.
நான் ஸ்கொற்லன்யாட்டிலிருந்து வருகிறேன். உங்களிடம் சில தகவல்கள் சேகரிக்க." சுருக்கமாகச் சொன்னான்.
என்ன தகவல்?"
வீட்டுக்குள் வந்து ...." அவன் வசனத்தை முடிக்கவில்லை.
ஆட்சேபனை இல்லை."
அவள் அவனை அழைத்துச் சென்று வரவேற்பறையில் அமர ஓரு சோபாவைக் காண்பித்தாள்.

                அந்த வீமனின் நீலக் கண்கள் வரவேற்பறையினை நோட்டம் பார்த்தன. மிகக் குறைந்த தளபாட வசதிகளைக் கொண்ட அந்த அறையில் ஒரு பன்னிரண்டு அங்குல சொனி ரி.வியும், ஒரு டீகோடரும், ரி.வியின் மேலே ஒரு கறுப்புக் குரங்குப் பொம்மையும,; ஒரு தொலை பேசியும், வான்நீலச் சோபாவும் மட்டுமே உள்ளதையும், சுவர்கள் மெல்லிய பூவரசம்ப+ வண்ணச் சுவர்க் கடதாசியால் அலங்கரிக்கப் பட்டுள்ளதையும் அவதானித்தன.

                சோபாவில் அமர்ந்தபடி கையில் இருந்த கறுப்பு பேக்கைத் தனது வலக்கால் ஓரமாக பக்குவமாக இருத்தினான். தன்னைக் கண்டு பூமா பயந்து நடுங்கி ஒடுங்குவதை அவதானித்த அந்த நீலக் கண் வெள்ளைக்காரன் மிஸ் பூமா, என்னைப் பற்றி நீங்கள் பயப்படத் தேவையில்லை. இவ்விதமாக வேறு ஒருவரிடமும்; வாக்கு மூலங்கள் பெற்றுள்ளேன் . இதனால் உங்களுக்கு எதுவித துன்பமும் வராமல் என்னால் உங்களைப் பாதுகாக்க முடியும். ஆனால் நீங்கள் என்னோடு ஒத்துழைக்க வேண்டும். நான் கேட்கின்ற கேள்விகளுக்கு உண்மையான பதில் தரவேண்டும்" என்று கூறிவிட்டு தனது பேக்கை கால் விரலால் நகர்த்தினான்.

                பயம் தெளிந்து  கொண்டிருந்த பூமா தலையைச் சிலுப்பி சிவப்பு சிலைட்டை அழுத்திச் கூந்தலைச் சரிசெய்துவிட்டுத் 'சரி கேளுங்களஎன்று தலையை அசைத்த பொழுது, கன்னங்களை அரவணைத்து வளர்ந்து தொங்கிய அவளது கூந்தல் தோள்களில் பட்டும் படாமலும் ஆடியதைப் பார்த்த அந்த வெள்ளைக்காரனின்  நீலக்கண்களை, அவளது கழுத்தின் வலது பக்கத்தில் உள்ள பெரிய தழும்பு தாவி இழுக்க, அவன் தனது கடமையைத் தொடங்கினான்.

உன்னுடைய முழுப்பெயர்?"
பூமா தங்கராசா."
வயது?"
இருபத்து மூன்று."
சொந்த நாடு?"
இலங்கை."
இலங்கையில் எவ்விடம்?"
யாழ்ப்பாணம். நெடுந்தீவு."
எப்பொழுது கிறேற் பிரிட்டனுக்கு வந்தாய்?"
சென்ற வருடம்."
ஏன் வந்தாய்?"

                பூமா உண்மை சொல்ல முடியுமா? தன்னைக் கெடுத்தவனைக் கொலை செய்ய வந்ததாகச் சொல்ல முடியுமா? சுவரைப் பார்த்து பதட்டத்தோடு யோசித்தாள். பதில் சொல்லவில்லை.

பூமா! நீ இங்கு வரமுன்னர் யாழ்ப்பாணத்தில் கறுப்பு நரிகள் தீவிரவாத இயக்கத்தின் உளவுப் பிரிவில் இருந்தாயா?" அவன் குரலில் சிறிய கடுகடுப்பு இருந்தது.
இல்லை." அவளுக்கு அச்சமாக இருந்தது.
ஏன் ஐக்கிய இராச்சியத்துக்கு வந்தாய்? சொல்." மீண்டும் அழுத்திக் கேட்டான்.
அரசியல் தஞ்சங் கோரி." அவள் பொய் சொன்னாள்.

                நீலக் கண்ணனுக்கு அவள் பொய் சொல்கிறாள் என்பது புரியாமல் இல்லை. அதனைக் காட்டிக்கொள்ளவில்லை. விசாரணை தொடர்ந்து ஒரு மணிநேரம் நடந்தது

                யாழ்ப்பாணத்தில் உள்ள நெடுந்தீவில் தொடங்கிய அந்த விசாரணை லண்டன் மனோபார்க் முருகன் கோவில் வரை நீண்டு வளர்ந்து முடிந்தது. ஏலவே சில துப்புகளோடு அந்த வெள்ளைக்காரன் வந்திருந்தபடியால் அவளிடமிருந்து தனது தொழில் முறைத் தந்திரங்களையும் வழிமுறைகளையும் பாவித்து அவன் தனக்குத் தேவையான தகவல்களை எல்லாம் பால் தடவிப் பால் கறப்பது போலக் கறந்து எடுத்திருந்தான். அவன் பூமாவின் எல்லா வாய்ப்பிறப்புக்களையும் பதிவு செய்து அதன் கீழ்ப்பகுதியில் ஒவ்வொரு பக்கத்திலும் பூமாவின் ஒப்பத்தை வாங்கிக் கொண்டான். அதே நேரம் அவனது கறுப்பு பேக்கில் உள்ள ரேப் றெக்கோடர் நடந்து முடிந்த விசாரணைகள் எல்லாவற்றையும் பதிவு செய்திருந்தது. அது எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் பலமிக்க சாட்சியாக அமையப் போவது அப்பொழுது பூமாவுக்குத் தெரியாது.

                அந்த வெள்ளைக்காரன் வெளியேறுவதற்காக வீட்டுக் கதவைத் திறந்தபொழுது, முகத்தைத் திருப்பி,
மிஸ் பூமா. நான் உன்னைச் சந்தித்ததையோ வாய்ப்பிறப்பு வாங்கியதையோ எந்தக் காரணம் கொண்;டும் யாருக்கும் வெளியிடக் கூடாது. அதனால் எதிர்காலத்தில் வீண் துன்பங்களை நீ சந்திக்கவேண்டி வரும்" என்று கூறிவிட்டுப் போனான்.

                அது வரை மிக நட்பு ரீதியில் கதைத்த அந்த நீலக்கண்ணன் போகும் பொழுது எச்சரித்தது அவளுக்கு வியப்பையும் அச்சத்தையும் கொடுத்தது.

xxx
                                                      
                 அவன் தன்னை மடக்கி எப்பெண்ணும் சொல்லவிரும்பாத விடயங்கள் சிலவற்றையும் பெற்றுவிட்டமை பூமாவுக்குப் பின்னர்தான் வெளிச்சமாகியது. கவலைக் சாகரம் அவளை இழுத்துத் துவட்டியது. சீ என்ன மடைத்தனம் பண்ணிப் போட்டேன்?’ என்று வாய்விட்டுக் கூறி தலைமுடியைப் பிய்த்தாள்.

                அதே வேளை மீண்டும் கதவு மணி ஒலித்தது. அந்த நீலக்கண் வீமன்தான் மீண்டும் வந்திருக்கிறானோ என்று அஞ்சி அஞ்சிக் கதவைத் திறந்தாள். அங்கு வேதனை ஒளிபரப்பும் நதியாவின் சின்ன வட்ட முகத்தைக் கண்டாள். அதுதான் முதற்தடவை அவள் அந்த வீட்டுக்குச் சென்றது. பூமாவுக்கு வியப்பாக இருந்தது. ஏன் வந்திருப்பாள் என்ற நினைப்போடு
ஏன் நதியா இந்த வேளை வந்தாய்? புதமையாக இருக்கிறது."
அமிரைப் பற்றி ஏதும் கேள்விப்பட்டனீங்களோ?"
இல்லை. ஏன்? ஏதன் அவருக்கு ............." பூமா தொடராமல் நதியாவைப் பார்த்தாள்.
ஜீவிதாவுக்கும் தெரியாதோ?"
என்ன தெரியாது? என்ன விசயம் என்று சொல் நதியா." அமிருக்கு என்ன ஏதோ என்று துடித்தாள். 
பொலிஸ் அமிரைக் கைது செய்துபோட்டுது."
என்ன! அமிரைப் பொலிஸ் கைதுசெய்து போட்டுதோ? என்னால் நம்ப முடியவில்லை."
ஓம் அக்கா."
ஏன்?"
போதைப் பொருள் கடத்தினதாக."
போதைப் பொருள்!" பூமா வாயடைத்து மிரண்டு கண்மடல்களை அகல விரித்து நதியாவைப் பார்த்தாள்.
உண்மை. பாவம். பொறிக்குள் சிக்கிவிட்டார்."
எங்கே வைத்திருக்கிறார்கள்?"
தெரியாது."

                அச்செய்தியைக் கேள்விப்பட்டதும் பூமா ஆடிப்போனாள்;. கால்கள் உதறின. கண்கள் மிரண்டன. உடன் தொலை பேசி மூலம் ஜீவிதாவுக்கு அறிவிக்க ஓடிப்போனாள். நதியா சுணங்கவில்லை. தன் வீடு நோக்கி குடுகுடு என்று ஓடத் தொடங்கினாள்.

                நதியா பிரதான வீதிக்கு வந்துவிட்டாள். அவள் பச்சைச் சைகை ஒளிமனிதன் முகங்காட்ட முன்பே வீதியைக் கடக்க, அதே சமயம் ஒரு வாகனம் திடீரென பயங்கராமாகக் கீச்சிட்டுக் கூவி அவளின் முன் நின்றது. அதன் சாரதி தலையை நீட்டி,
ஏ பெட்டை நாய். கண்ணைத் திறந்து பார்த்துப் போ," என்று கத்தினான். பாதசாரிகள் அவனையும் நடைபாதையில் ஏறி அதன் வழியே ஓடிக்கொண்டிருந்த நதியாவையும் திகைப்போடு பார்த்தனர்.

                தோல் சப்பாத்து டொக் டொக்கென்று ஓசை எழுப்ப விரைந்து கொண்டிருந்த நதியாவைப் பயம் கௌவியிருந்தது. முன்னர் வீதியைக் கடந்தபொழுது தன்னைக் கண்ட மூத்தான், வீடு சென்று கில்லாடிக்கு அதுவரையில் அள்ளிவைத்திருப்பான் என்ற பயம் வாட்ட, ஓடோடிச் சென்று வீட்டுக் கதவைத் திறந்தாள். அப்பொழுது, 'சீ வரும்;போது சீலன் கடையில் ஏதாவது மரக்கறி வாங்கி வந்திருந்தால் சாட்டுச் சொல்லியிருக்கலாம். இனித் திரும்பிப் போனால் கில்லாடியிடம் மாட்ட நேரிடும்என்று எண்ணியபடி பயத்தில் மைந்தி மைந்தி நகர்ஓடை வழியாக, வரவேற்பறை முகப்பைக் கடந்து சமையலறைப் பக்கம் நழுவினாள்.

                வரவேற்பறையில் கில்லாடி நாடிக்குக் கைவைத்துக்கொண்டு மூத்தான் சொல்வதைக் கேட்டுக்கொண்டு இருந்தான். அவன் தன்னைக் கவனிக்கவில்லை என்பது நதியாவிற்குத் தெரியாது.
அண்ணை நம்பிக்கையான ஆள்தான் சொன்னவன். லிவர்பூலிலே அமிரைக் கைதுசெய்த கையோடு அவனை ஸ்கொற்லன்ட் யாட்டுக்குக் கொண்டுவந்து விட்டார்களாம்." மூத்தான் கில்லாடிக்குச் சொன்னான்.
ஹெரோயின் பேக் ஆருடையது என்று கேட்டிருப்பார்களே?"
கேட்டிருப்பார்கள்."
எங்களைப் பற்றிப் பெடியன் சொல்லியிருப்பானோ மூத்தான்?"
பெடியன் அப்படிப்பட்ட ஆளில்லை. எனக்கு அண்மையிலேதான் குகன் சொன்னவன் பெடியன் நல்ல குலம் கோத்திரம் என்று. பெடியன் அந்தளவுக்குப் போகாது. சொல்லியிருந்தால் லவர்பூலில் வைத்தே பொலிஸ் எங்களை அப்பி இருப்பான். அல்லது இவ்வளவுக்கு பொலிஸ் வந்திருக்கும். எதற்கும் எழும்புங்கள் அண்ணை போய் அலுவலைப் பார்ப்பம்."

                சமயலறைக்குள் போன கையோடு நதியா திரும்பி வந்து அவர்கள் பேசியதை ஒட்டுக் கேடடுக்கொண்டு நின்றாள். நதியாவுக்கு இப்போது விளங்கியது கில்லாடி தன்னைக் கவனிக்கவில்லை என்பது. அவர்கள் சம்பாசித்தது எல்லாவற்றையும் ஒட்டு; கேட்ட நதியா, அவர்கள் வெளியே போக எழுந்ததும் மேல் மாடிக்குப் போகிற சாட்டில் படிக்கட்டில் ஏறத் தொடங்கினாள். அவள் கண்கள் அவர்களை அவதானித்தன. ஏதோ அவசரமாகப் பறந்து செல்கிறார்கள் என்பது அவளுக்குப் புரிந்தது.

                அமிர் பற்றிய பூமா கூறிய அதிர்ச்சி தரும் செய்தியைக் கேட்டபொழுது, ஜீவிதா மனோபார்க் முருகன் கோவிலுக்குப் போவதற்காக சேலை கட்டி ஆயத்தமாகிக் கொண்டு நின்றாள். செய்தியைக் கேட்டதும் பதைபதைத்து ஓட்டமும் நடையுமாக சில நிமிடங்களில் பூமா வீடு போய்ச் சேர்ந்து வியர்க்க வியர்க்க மூச்சு வாங்கியபடி கேட்டாள். 

நதியா வேறென்ன சொன்னாள் பூமா?" ஜீவிதா வினாவினாள்.
அவ்வளவுதான். நான் உனக்கு ரெலிபோன் செய்துவிட்டு திரும்பிப் போய்ப் பார்த்தேன். அவள் இல்லை. போய்விட்டாள்."
பூமா, அவள் சொன்னதிலே உண்மையிருக்கிறது. அமிர் அந்த எழிய கூட்டத்தோடு சேர்ந்து போதைப் பொருள் வியாபாரத்திலே இறங்கியிருக்கிறார் போல" என்று சொல்லிவிட்டு நெஞ்சில் தவழ்ந்த கூந்தலை முதுகுப் பக்கம் வீசிக் கொண்டையாக முடிவதை அவதானித்த பூமாவுக்கு விளங்கியது ஜீவிதாவுக்கு ஏதோ மனதில் புகைச்சல் பொங்குகிறது என்பது.
ஜீவிதா உனக்கு அமிரை நன்கு தெரியும். ஏழு மாதமாக சிநேகிதமாக இருக்கிறாய். அபாண்டமாகச் சொல்லக்கூடாது."
இல்லை பூமா. அவருக்கு உழைப்பில்லை. சென்ற மாதம் சொலிசிற்றருக்கு எழுநூறு பவுண் கொடுத்தவர். விலை உயர்ந்த புதுப்புது உடுப்புகள் வாங்குகிறார். ஏது பணம்?"
நீ கேட்கவில்லையா?"
இல்லை."
அது உன்னுடைய தவறு. உதவவேண்டிய நீ உதவவில்லை. அவர் கில்லாடியிடமே கடன் வாங்கியிருக்கலாம், இல்லையா?"
கில்லாடி கடன் கொடுத்தால் ஏதோ காரணத்தோடுதான் கொடுப்பான். எனக்கு அவனை நன்கு தெரியும்."
ஜீவிதா, நீயே உன் கண்களைக் குத்துகிறாய். பெண்மைக்கே இழுக்கு ஜீவிதா."
                பூமாவின் பதில் அவளை ஆட்டியது. தான் அவ்வாறு ஒரு கீழ்த்தரமான அபிப்பிராயத்தைத் தெரிவித்திருக்கக் கூடாது என்பதை உணர்ந்த ஜீவிதா, “இல்லைப் பூமா. அவரிடம் காசு எதுவும் இல்லை என்றது எனக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் கேட்டேன். அது சரி அவ்வளவு பணத்தை எப்படிப் பெற்றிருப்பார் என்று நினைக்கிறாய்?" என்றாள் ஜீவிதா.
நதியா வீட்டில் வசிக்கிறார். நதியாவுக்கும் அவர்மேல் நல்ல அபிப்பிராயம். அவளுக்குச் சமூக உதவிப் பணம் கிடைக்கிறது. அவளிடம் வாங்கியிருக்கலாம் அல்லவா?" என்ற  பதில் ஜீவிதாவை மேலும் குழப்பியது.

                ‘நதியா அமிர் விடயத்தில் ஏன் அவ்வளவு அக்கறை காட்டவேண்டும்? அதற்குள் ஏதும் மனித பலவீனத்துக்குரிய மர்மங்கள் மறைந்து இருக்குமோ? ஏன் கலியாணம் பண்ணின பெட்டைக் கழுதை அமிர்மீது அத்தனை ஆர்வம் காட்ட வேண்டும்?’  என்ற சந்தேகமும் கேள்வியும் ஜீவிதாவின் உள்ளத்தில் பூதாகாரமாக உருவெடுத்தன. நதியா அழகாகவும் தன்னிலும் மிகவும் இளமையாகவும் இருந்தது மேலும் அவள்மீது ஜீவிதா பொறாமை கொள்ளச் செய்தது. இருப்பினும்  அமிர் கைது செய்யப்பட்டுவிட்டான் என்ற செய்தி அவளை மிகவும் சித்திரவதை செய்ய, “எங்கே வைத்துக் கைது செய்தார்களாம்? எப்போது கைது செய்தார்களாம்?" என்று ஜீவிதா வினாவினாள்.
நதியா சொல்லவில்லை. தெரிந்திருந்தால்; சொல்லியிருப்பாள்."
எங்கே வைத்திருக்கிறார்களாம்?"
அவள் அதையும் சொல்லவில்லை."
இப்போ நாங்கள் என்ன செய்யலாம் பூமா?"
எனக்கு ஒன்றும் புரியவில்லை."
நான் பிழைவிட்டிட்N;டன் பூமா. புதன்;கிழமை மாலை பிளெசற் பூங்காவிலே சந்திக்கிறேன் என்றவர். நான் போய்க் கனநேரம் வருவார் வருவார் என்று காத்திருந்துவிட்டு வந்தனான். லைபிரரிக்குப் போயிருக்க வேண்டும், அதுதான் வரவில்லை என்று எண்ணி அக்கறை இல்லாமல் இருந்துவிட்டேன்."

                அப்பொழுது தொலை பேசி அழைப்பு ஒன்று வந்தது. ஜீவிதா தான் றிசீவரைஎடுத்தாள்.

ஹலோ."
ஹலோ நதியா பேசுகிறேன். யார் பேசுகிறது?"
ஜீவிதா பேசுகிறேன்."
ஜீவிதா அக்கா, ஒரு முக்கிய தகவல். அமிரை ஸ்கொற்லன்ட் யாட்டில் வைத்திருக்கிறார்கள். மூத்தான் இப்ப வந்து அவருக்குச் சொன்னவன். பெரிய சிக்கலான விடயமாக இருக்கவேண்டும் என்று கதைக்கிறார்கள்."
விவாகம் செய்த மனுசி அக்கா என்றது ஜீவிதாவுக்கு ஆத்திரத்தைத் தூண்டியது. காட்டிக்கொள்ளாமல் எங்கே வைத்துக் கைது செய்;தவர்களாம்?" என்று வினாவினாள்.
லிவர்பூலில்."
ஏன அமிர் அங்கு போனவர்?"
தெரியாது."
எப்போ?"
ஐந்து நாட்களுக்கு முன்னர்"
ஏன் கைது செய்தார்களாம்?"
போதைப் பொருள் ...." நதியா வசனத்தை முடிக்கவில்லை.
யாராவது உங்கள் ஆட்கள் அமிரைப் பார்க்கப் போகிறார்களா?"
நான் அப்படி நினைக்கவில்லை. அவர்களுக்கு அப்படி ஒரு எண்ணம் இருப்பதாகவே தெரியவில்லை. நீங்கள் ஒரு பரிஸ்ரரைப் பிடித்து ஏதாவது செய்தால் என்ன? பாவம் அமிர். தெரியாமல் மாட்டுப் பட்டுப்போனார். அவர்களோடு எங்கு போனாலும் இக்கட்டான கட்டம் வந்தால் கூடப் போற ஆளை மாட்டிவிட்டுத் தாங்கள் தப்பி விடுவார்கள் என்று ஏலவே நான் எச்சரித்தனான். லிவர்பூலுக்குப் புறப்பட்ட சமயம் நான் முருகன் கோவிலுக்குப் போய்விட்டேன். நான் நின்றிருந்தால் போக விட்டிருக்க மாட்டேன். காசு எவ்வளவு கேட்டாலும் நான் தருகிறேன். நல்ல ஒரு பரிஸ்ரரை கூட்டிக்கொண்டு ஸ்கொற்லன்ட் யாட்டுக்குப் போங்கோ" என்று நதியா வாய் ஓயாது அடுக்கிக் கொண்டு போனதைக் கேட்ட ஜீவிதாவுக்கு ஆத்திரம் கொதித்தது.

                அமிர்; கைதாகிப் பொலிசில் இருப்பதால் ஏற்பட்ட கவலையிலும், நதியா அமிரை மடக்கிப் பிடித்துப் போட்டாளோ என்ற கவலையே ஜீவிதாவிடம் மிகுதியாகக்  காணப்பட்டது. 'புருசன் இருக்க கள்ளப் புருசன் பிடிக்கப் பார்க்கிறாள் தேவடியாள். சமூக விரோத சின்னம்.ஜீவிதாவின் உள்ளம் பொரிந்தது. கையிலே ரெலிபோன் றிசீவர். அது மறந்து போய்விட்டது.
                ஜீவிதாவின் குரல் மறுமுனையில் நிற்கும் நதியாவுக்கு …………

என்ன ஜீவிதா அக்கா நான் லைனிலே நிற்கிறேன். நீங்கள் பேசாமல் இருக்கிறியள்?" என்றாள் நதியா.

                கல்யாணம் செய்த பொம்பிளை நதியா மீண்டும் அக்கா என்று சொன்னதைக் கேட்ட ஜீவிதாவுக்குப் பற்றிக் கொண்டுவந்து. பல்லைக் கடித்து தலையை ஆட்ட, அவளது பெரிய ஜிப்சிகளும் சேர்ந்து ஆட்டம் போட, “காசு தேவை இல்லை. எங்கள் விசயத்திலே நீ காட்டுகிற கரிசனைக்கு நன்றி" என்று சடக்கெனக் கூறிவிட்டு றிசீவரைப்;’ படாரெனக் கீழே வைத்தாள்.

                பூமா ஜீவிதாவைப் பார்க்க, ஜீவிதா பூமாவைப் பார்த்தாள். சந்தர்ப்ப சூழ்நிலை அவர்களைக் கட்டாயப் படுத்தியது. லண்டனில் இனபந்துக்களைத் தேடி ஓடமுடியுமா?


                கீழைத் தேசப் பெண் ஒரு பயந்த ஜீவன். எதற்கும் ஆணின் பக்கபலத்தையும் ஆலோசனையையும் எதிர்பார்ப்பவள். அந்தக் குணம் இயற்கையாகப் பெண்ணுடன் அமைந்ததல்ல என்பதையே அவர்களது முடிவு காட்டியது. சத்தியவானின் உயிரை மீட்கச் சாவித்திரி எமனைப் பின்தொடர்ந்தாள் - கண்ணகி ஒற்றைக் கையில் சிலம்பு ஏந்திப் பாண்டிய மன்னனின் அரண்மனைக்குள்; சென்று நீதி கேட்டாள் - சந்திரமதி மகன் தேவதாசனின் உடலைக் கையிலேந்திக்கொண்டு நடுச் சாமவேளை சுடலையை அடைந்தாள் - இவையெல்லாம் காலா காலமாக ஆணின் தயவில் வாழும் பெண்ணுக்கு இயற்கையாக அமைந்துள்ள மன உறுதியையும் மனோபலத்தையும் காட்டப் படைக்கப்பட்ட கதைகளே. சந்தர்ப்ப சூழ்நிலை பெண்ணின் உள்ளார்ந்த ஆத்ம சக்தியைத் தூண்ட அவள் கண்ணகியாகவோ சந்திரமதியாகவோ மாறி வரலாறு எழுதுகிறாள் என்பதையே ஜீவிதா பூமா ஆகிய இருவரும் அமிரை மீட்க எடுத்த திகில் நிறைந்த செயல்கள் சொல்கின்றன. 

தொடரும்...

No comments:

Post a Comment