Monday 24 August 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 11 - ஒரு கடா பலியாகிறது

                 கில்லாடியும் சூட்டியும் திரும்பி வந்தபொழுது நேரம் நள்ளிரவைக் கடந்துவிட்டது. அமிரின் அறை பூட்டிக்கிடந்தது.

                அழைப்பு-மணியை விடாமல் தொடர்ந்து அடித்தும் கில்லாடியினால் அமிரின் தூக்கத்தைக் கலைக்க முடிய வில்லை. ஆத்திரம் கொதிக்க கதவில் படார் படாரெனக் குத்தினான். கோட்டான் சூட்டி தலையைச் சுழற்றி வேற்று மனிதன் யாராவது தங்களை வேவு பார்க்கிறார்களா என்று ஹோட்டலின் மூன்றாம் மாடியிலிருந்து ஒற்றைக் கண்ணால் நோட்டம் பார்த்துக் கொண்டிருந்தான். ஆழ்ந்த நித்திரையில் அயர்ந்துபோய் இருந்த  அமிர் திடுக்கிட்டு எழுந்து போய்க் கதவைத் திறந்தான்.

                “மடையா உன்னைக் கதவைப் பூட்டவேண்டாம் என்று சொன்னனான். ஏன்டா நாயே பூட்டினனீ?" என்ற கேட்டபடி கில்லாடி அமிரின் அறைக்குள் விரைந்தான். அதற்கு முன்னர் அவன் அமிரை என்றுமே அவ்வாறு வைததில்லை. கில்லாடி கக்கிய சுடு சொற்களை எதிர்கொள்ள முடியாத அமிர் குளியல் அறை வெள்ளைக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே புகுந்து வெதும்பினான். கில்லாடியின பின்னே வந்த கோட்டான் சூட்டி, கில்லாடியின் ஜேம்ஸ்பொண்ட் பேக்கை அமிரின் கட்டிலின் கீழே மௌள அசுமாத்தம் இல்லாமல் தள்ளிவிட்டான்.

                 குளியலறையிலிருந்து மீண்ட அமிரைப் பார்த்து,
தம்பி அமிர், கில்லாடி அண்ணை சொன்னதை மனதிலே வைத்திராதை. கொஞ்சம் கூடப் போட்டிட்டார். சரிடா தம்பி, நீ நித்திரையைக் கொள்ளு நாங்கள் எங்களுடைய அறைக்குப் போகிறோம்" என்று கூறிய சூட்டி தலையை நீட்டி மேசையில் பொருத்திய கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துவிட்டு நகரத் தொடங்கினான்.
தம்பி டே நான் சொன்னதுக்குக் குறை விளங்காதை. காலையில் நேரத்தோடு புறப்படுகிறோம். நல்லாக நித்திரை கொள் தம்பி" என்று கூறிவிட்டு கில்லாடியும் தனது அறையை நோக்கிப்போனான்.
   
                அமிர் தனது குமுறும் உணர்வுகளை வெளிக் காட்டாமல், சிவப்புப் பூப்போட்ட வெள்ளைப் போர்வைக்குள் மறைந்தான். இதைவிடக் கேவலங்களையும் நான் பொறுக்க வேண்டிவரலாம். ஆத்திரப்பட்டால் என் லண்டன் வருகையின் நோக்கம் நொருங்கிச் சிதறிவிடும்என்ற நினைவலைகளின் மத்தியிலே தூக்கத்தை அரவணைத்தான்.

                விடியற் காலை ஐந்து மணி. அமிர் ஆழ்ந்த நித்திரை. அவனது அறைக் கதவில் படபட வென்று யாரோ தட்டுவது கேட்டு அமிர் திடுக்கிட்டு போர்வையைத் தூக்கி வீசிவிட்டுக் கதவைத் திறந்தான்.  
என்ன தம்பி அமிர். எவ்வளவு நேரமாக மணி அடித்த நாங்கள். அவ்வளவு நித்திரையோ? எழும்பிக் கெதியாக வெளிக்கிட்டு வாரும்." கில்லாடி குழைந்து குழைந்து கூறினான்.
நீங்கள் இப்ப விடியமுதல் போக ஆயத்தமோ?"
ஓ சுணங்காமல் முகத்தைக் கழுவிக்கொண்டு வாரும். நாங்கள் காரிலே இருக்கிறோம். கார் நிற்கிற இடம் தெரியுமெல்லே. வருகிற நேரம் கட்டிலுக்குக் கீழே இருக்கிற எனது ஜேம்ஸ்பொண்ட் பேக்கையும் கொண்டு வாரும் தம்பி" என்று கில்லாடி சொல்லிவிட்டுப் போகும்பொழுது,
அண்ணை இராத்திரி வெளியே போன நேரமெல்லே பேக்கைக் கொண்டு போனனீங்கள்" என்று அமிர் பதில் சொன்னான்.
உனக்கு நல்ல நித்திரைத்தியர் ராசா. பேக்கை எடுத்துக்கொண்டு வாரும்" என்று கூறிய கில்;லாடி அமிரின் பதில் வரமுன்னரே புறப்பட்டுவிட்டான். அவனுக்குப் பின்னே சூட்டியும் விரைந்தான்.

                ஹோட்டலுக்கு வெளியே சன நடமாட்டம் இல்லை. விடியற் காலை மின்சார வெளிச்சத்தில் சடப்பொருள்கள் யாவும் முழு நிலாவின் ஒளியில் தெரிவது போலக் காணப்பட்டன. இரண்டொரு கார்கள் முகப்பு வெளிச்சத்தைப் பாய்ச்சியபடி விரைந்து மறைந்து கொண்டிருந்தன. மற்றும்படி எங்கும் ஒரே அமைதி.

                ஹோட்டலை விட்டு இறங்கிய கில்லாடியும் சூட்டியும் அருகருகே மௌனமாக நடந்தனர். அப்பொழுது கில்லாடி இரகசியமாக,
                “டே சூட்டி நான் முன்னுக்கு நடந்து போய்ப் பெற்றோள் நிலையத்திற்கு அருகே உள்ள பேருந்துதரிப்பு நிலையத்தில் நிற்கிறேன். நீ இப்ப காருக்குக் கிட்டப் போகாதே. கவனம். ஹோட்டலில் எங்கள் அறையைப் பார்த்தபடி ஒரு வெள்ளை சுவரோடு மறைந்து நின்றவன். கவனித்தனியா? ஏதாவது எக்கச்சக்கம் என்றால் நீ காரை எடுத்துக் கொண்டு வந்திடு" என்று கூறிவிட்டு கில்லாடி விறுவிறென்று நடந்து போய் பேருந்துதரிப்பு நிலையத்தில் நின்று ஹோட்டலின் மூன்றாவது மாடியில் அமிர் இருக்கும் அறையை நோட்டம் பார்த்தான்.

                பத்து நிமிடங்களில் வரவேண்டிய அமிர் முக்கால் மணி நேரமாகியும் வராதது அபாய அறிவிப்புப் போலவே இருவருக்கும் உதைத்தது. அவர்கள், நெஞ்சம் தொய்வுக்காரன் போல ஊதிச் சுருங்க, கண் மடல்களை மூடமறந்து ஹோட்டல் வாயிலைப் பார்த்தவாறு அசையாமல் நின்றார்கள். கைகள் மரத்துவிட்ட அதிகாலைக் குளிரின் கொடுமைகூட அவர்களின் உணர்வுகளைத் தொடவில்லை.

                “ஏதாவது வில்லங்கம் என்றால் பொலிஸ் வாகனங்கள் சைரன் ஒலி எழுப்பிய படி அள்ளுப் பட்டு வருமே" என்று கில்லாடி தன்னுள் எண்ணியபடி அமிரின் அறைப்பக்கம் தலையை நீட்டி உயர்த்திப் பார்த்தான். ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. 'திரும்பிப் போய்ப் பார்த்தாலென்ன? மடைச் சாம்பிராணி பிறகும் நித்திரையாகிவிட்டான் போலஎன்ற நினைப்பு பிராண்ட தனது அடிமண்டை ஓரத்தில் சிக்கிக் கிடந்த தலைமுடிக்குள் விரல்களைச் செலுத்தி கேசத்தைக் கோதினான்.

                ஒரு மணி நேரம் உருண்டு மறைந்ததே தெரியவில்லை.

                இருவரும் சூட்டியின் காருக்குச் சற்று அப்பால் வேறு ஒரு வெள்ளைக் காருக்குப் பின் ஒன்றுகூடி ஒளித்து நின்று யோசித்தும் ஒன்றும் புரியாமல் நித்திரைத் தூக்கத்தில் இருந்த அமிர் பிறகும் நித்திரையாகி விட்டானோ?" என்று கில்லாடி மொட்டந் தலையைத் தடவியபடி அபிப்பிராயம் சொல்ல, “ஒரு ஆள் போய்ப் பார்த்தால் நல்லது" என்று ஒற்றைக் கண்ணை அகல விரித்துப் போனி ரெயிலைஆட்டிச் சூட்டி சொல்ல அப்ப நீ ஒருக்கால் எட்டிப் பார்த்திட்டு வாவேன்" என்று கில்லாடி சொல்ல கில்லாடி அண்ணை, எனக்கு உந்த வேலையிலே நல்ல அனுபவம் இல்லை. நீங்கள் போய்ப் பார்த்திட்டு வாருங்களேன்" என்று சூட்டி சொன்னான். அவனுக்குத் தெரியும் நிலைமை சரியில்லை, கில்லாடி தன்னை மாட்டப் பார்க்கிறான் என்று. கில்லாடி பிடரியைச் சொரிந்தபடி சூட்டிமீது உள்ளுர ஆத்திரப்பட்டான். சூழ்நிலை சரி இல்லாததால் மௌனமாக யோசித்தான்.

                அவர்களுக்குத் தெரியாது, தாங்கள் ஹோட்டலைவிட்டு வெளியேறிய கையோடு நான்கு ஸ்கொற்லன்ட் யாட் பொலிசார் அமிரின் அறைக் கதவில் படபடவென குத்தியது.

                அப்பொழுது அமிர் குளியல் அறையில் முகங் கழுவிக்கொண்டு நின்றான். கில்லாடிதான் மீண்டும் வந்து கதவில் தட்டுகிறான் என்ற நினைப்பில், “கில்லாடி அண்ணை. முகங் கழுவுகிறேன் பொறுங்கோ வந்திட்டேன்" என்று கூறியபடி போய்க் கதவைத்திறந்தான். நான்கு பொலிசார் அங்கு நிற்பதை கண்டான். அவர்கள் அமிரின் அப்பாவித்தனமான முகத்தைப் பார்த்துவிட்டு ஒருவரை மற்றவர் பார்த்தனர். ஓருவர் பெண் பொலிஸ். அப்பெண் பொலிஸ் அமிரைப் பார்த்துச் சிரித்துவிட்டு,
ஹலோ" என்றாள்.
ஹலோ" என்று மெல்லிய புன்னகையோடு கூறிய அமிர் அவர்கள் ஏதோ வழமையான சுற்று வருவதாக எண்ணி,
நீங்கள் ஏன் இந்த நேரம் வந்துள்ளீர்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது" என்று கூறினான். அமிரின் ஆங்கிலத்தைக் கேட்ட அப்பெண் பொலிஸ்,
நீ இராணியின் ஆங்கிலம் பேசுகிறாய்" என்று போற்றிய பின்னர்
உனது பெயர் என்ன?" என்று கேட்டாள்.
அமிர்."
முழுப்பெயர்?"
சிவகுரு அமிர்."
உன்னுடைய தேசியம்."
சிறீலங்கன்."
எங்கே வசிக்கிறாய்?"
ஈஸ்ற்ஹம் நகரில்;."
அது எங்கே?"
லண்டனில். நியூஹம் பறோவில்."

                அந்தப் பெண் பொலிஸ் மீண்டும் ஒரு புன்னகையை உதிர்த்தபடி, “மிஸ்ரர் அமிர், இந்த அகால நேரம் தொல்லைப்படுத்தியதற்கு மன்னிக்கவும்" என்று கூறிவிட்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தாள். ஏனைய பொலிசாரும் அவள் பின்னே சென்று மறைந்தனர்.

                அமிர் மீண்டும் குளியல் அறைக்குள் போய் முகங் கழுவிவிட்டு, மேசைக் கண்ணாடியில் பார்த்து நடுவகிடிட்டு தலைமுடியைச் சீவிக்கொண்டு, குனிந்து கட்டிலின் கீழே பார்த்தான். கில்லாடியின் பேக் பல்லைக் காட்டியது. அவனுக்கு வியப்பாக இருந்தது. பேக்கை இழுத்தெடுத்தான்.

                'இதென்ன இப்பொழுது பாரமாக இருக்கிறதுஎன்று மனதுள் கூறியபொழுது, நதியாவின் எச்சரிக்கை ஈனக் குரலில் அவன் காதுகளில் ஒலித்தது. அதனை விட்டுப்போட்டுப் போகலாமா என்று யோசித்த பொழுது, கில்லாடி கத்துவான் என்ற அச்சத்தில் பேக்கைத் தூக்கிக்கொண்டு கதவைத் திறந்து லிஃப்ற் பக்கமாக நடக்கத் தொடங்கினான். பேக்கைக் கொண்டு போவாமா விடுவோமா என்ற இரட்டை மனத்தோடு ஆமை போல நகர்ந்து சென்று மெதுவாக லிஃப்ற் பொத்தானை அமுக்கிவிட்டு அதன் கதவு திறக்கும்வரை காத்து நின்றான்.

                கதவு திறந்தது. அவனது உள்ளத்திலிருந்து கேள்விகள் எலி வாணங்களாகப் புறப்பட்டன. பொலிஸ் கண்கள் எட்டு அவன்மீது படை எடுத்தன. 
ஹலோ மிஸ்ரர் அமிர்." சற்று முன்னர் சந்தித்த அதே பெண் பொலிஸ் கூறினாள்
ஹலோ" அமிர் சொன்னான்.
விலையுயர்ந்த நல்ல பேக். என்ன இருக்கிறது? உடைகளா?" அவள்தான் கேட்டாள்.
தெரியாது."
என்ன மிஸ்ரர் அமிர் சொல்கிறீர். பேக் உமது கையில் இருக்கிறது. தெரியாதென்று சொல்கிறீர்."
இது என்னுடைய பேக் அல்ல."
பின்னர் யாருடையது?" அவள்தான் கேட்டாள். 
கில்லாடியின் பேக்.
யார் கில்லாடி?"
அவரோடுதான் நான் வந்தேன்."
எங்கே அந்தக் கில்லாடி?"
ஹொட்டல் கார் பார்க்கில்நிற்பதாகச் சொல்லிவிட்டு ஏலவே போய்விட்டார்."
எங்கேயிருந்து லிவர்பூலுக்கு வந்தீர்கள்?"
ஈஸ்ற்ஹம் நகர். நியூஹம் பறோ? லண்டன் சிற்றியில்."
நீ ஏன் இங்கு வந்தாய்?"
ஊர் பார்க்க."
கில்லாடி ஏன் வந்தான்?"
அமிரின் அடிவயிறு குழப்பமடைந்தது.
எனக்குத் தெரியாது." அமிர் கூறினான்.
ஈஸற்;ஹம்பில் எங்கே வசிக்கிறாய்?"
கில்லாடியின் வீட்டில்."
ஓ. அப்படியா? விலாசம் என்ன?"
“39, புரட்சி வீதி, ஈஸ்ற்ஹம், லண்டன் 06"

மிஸ்ரர் அமிர், நீ ஒரு பெட்டைப் புலியின் சிலையை ஒரு கடையில் வாங்கியதை நேற்றுப் பகல் அவதானித்தேன். எங்கே அது?" வேறு ஒரு பொலிஸ் கேட்டான்.
                அமிருக்கு செவியில் முறுக்கியது போலவிருந்தது. அவன் அந்த புலிச் சிலையை தனது நீல ஜகற் பைக்குள்ளிருந்து எடுத்துக் காட்டினான். பெண் பொலிஸ் அதை வாங்கித் திருப்பிப் திருப்பிப் பார்த்துவிட்டுத் மீளக் கொடுத்தபொழுது,
யாருக்காவது பரிசளிக்கவா?" என்று கேட்டாள்.
ஆம். நதியாவிற்கு பரிசளிக்க" என்று கூறினான்.
யார் அது நதியா? உனது சிநேகிதியா?" என்று வினாவினாள்.
இல்லை. கில்லாடியின் சம்சாரம்."
                அவள் கொடுப்புக்குள் சிரித்தாள். அச் சமயம் ஆண் பொலிஸ் ஒருவன் கேட்டான்,
எங்கே உன்னோடு வந்த அந்த ஒற்றைக் கண்ணன்? அவன் பெயர் என்ன?"
                அமிருக்கு விசாரணைகள் திசை மாறுவது புரிந்தது. ஆனால் வேட்டை நாய்கள் இரையை வளைத்துப் பிடித்துக் குதற ஆயத்தமாகின்றன என்பது அவனுக்குப் புரியவில்லை. 

                “அவரும் கார் பார்க்கிற்குகில்லாடியோடு போய்விட்டார். பெயர் கோட்டான் சூட்டி." என்று கூறிய அமிர் வினாத் தொடுத்த பொலிஸ்காரனை உற்றுப் பார்த்தான். தன்னைக் காரில் ஏற்றி வந்து ஹோட்டல் வாசலில் இறக்கியவன் என்பதைக் கண்டபொழுது அனுக்கு மேலுந் திகிலாக இருந்தது. தலைக்குள் விண் என்று கேட்டது.

                அப்பொலிசார் அமிரை ஹோட்டலில் உள்ள ஒரு அறைக்கு அழைத்துச் செல்ல முன்னரே அவனுக்கு விளங்கிவிட்டது, தான் கில்லாடியின் வேள்வியில் பலியாகப் போவது.

                அந்தக் ஹோட்டலில் உள்ள ஒரு விசேட அறையில் அமிர் விடப்பட்டான். சற்று நேரத்தில் ஸ்கொற்லன்ட் யாட் அதிகாரி ஒருவன் அந்த அறைக்குள் திடீரெனப் புகுந்தான்.

                அவன் அமிரின் உடைகளைச் சோதனையிட்டான். ஜகற் பையிலிருந்த புலியின் சிலையையும், ஒரு சிறிய ரேப் றெக்கோடரையும் எடுத்தபின்; தனது கடமையை ஆரம்பித்தான்.

                கேள்விக் கணைகள் சரமாரியாக அமிரைத் துளைத்து எடுத்தன. விசாரணை றப்பர் கயிறு போல நீண்டு நீண்டு சென்றது.

                நேரம் காலை எட்டு மணியாகிவிட்டது. கில்லாடியும் சூட்டியும் 'அமிர் நித்திரை யாகிவிட்டான். இனிக் கண்விழித்துவிடுவான். இப்போ வருவான். இ;னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவான்”  என்று ஒருவருக்கு மற்றவர் சொல்லிக்கொண்டு, அணிலைப் பனையில் ஏறவிட்ட நாய் போல, ஹோட்டலின் மூன்றாம் மாடியைப் பார்த்தபடி நின்றனர்.

                என்ன ஏதோ என்று ஏங்கிக்கொண்டு சூட்டியின் சிகப்பு டீஆறு காரோரம் நின்ற கில்லாடியையும் சூட்டியையும் திடீரென ஒரு சூறாவளி தாவிப் பிடித்து உலுப்பியது. இருவரும் கண்மடல்களை அகல விரித்து உற்றுப் பார்த்தார்கள். கறுப்புத் துணியால் தலையை மூடிக்கட்டிய உருவம். கைகள் பின்புறம் மடங்கியிருந்தன. நான்கு பொலிசாரின் மத்தியிலே வந்து கொண்டிருந்தது. ஒன்று பெண் பொலிஸ். அதே சாம்பல் நிற ரவுசரும் நீல-ஜகற்றுந்தான். உயர்ந்த தோற்றம். கையில் ஜேம்ஸ்பொண்ட் பேக். அமிர்தான்.

கில்லாடி அண்ணை பொலிஸ் அமிரைக் கூட்டிக்கொண்டு வருகிறான். பயமாயிருக்கிறது அண்ணை."
டே சூட்டி பயப்படாதை."
இங்கேதான் வாறான்கள். எங்களைக் கைது செய்யப் போகிறான்கள்."
பயப்படுவதாகக் காட்டாதை. கேட்டால், நான் சொல்வது போலச் சொல்லு."
என்ன சொல்ல அண்ணை.?"
உவன் அமிர்தான் நண்பனைப் பார்க்கப் போவதாக உன்னை லிவர்பூலுக்குக்; கூட்டிவந்தவன் என்று சொல்லு. 300 பவுண் கார் வாடகை தந்தவன் என்று சொல்லு."
நம்புவினமோ அண்ணை?"
நம்பத்தான் வேண்டும். சட்டத்திற்;கு மனச் சாட்சியில் நம்பிக்கை இல்லை, சாட்சிதான் வேண்டும். சாட்சிக்கு நான் இருக்கிறேன். அவனுடைய கையில்தானே பேக் இருக்கிறது. நீ ஏன்டா சூட்டி வீணாக நடுங்குகிறாய்?"
அண்ணை பொலிஸ் கிட்ட வந்திட்டான்கள்."

                பொலிசார் கில்லாடியையும் சூட்டியையும் அண்மித்தார்கள். அவர்களைத் திரும்பியே பார்க்கவில்லை. அமிரை அழைத்துக்கொண்டு அவர்களைத் தாண்டித் தம்பாட்டில் சென்று கொண்டிருப்பதை, கில்லாடியும் சூட்டியும் முதலையின் வாய்க்குள்ளிருந்து தப்பி வந்தவர்கள் போல மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டு நின்றனர்.

                கறுப்பு முக்காட்டுக்குள் முடக்கப்பட்ட அமிருக்கு அருகே நடந்து போய்க் கொண்டிருந்த பெண் பொலிஸ் சொன்னாள்.
மிஸ்ரர் அமிர், எங்களை இரண்டு ஏசியன்கள் பார்த்துவிட்டு மயிந்துகிறான்கள்."
எப்படி ஆட்கள்?"
ஒருவன் கட்டை.. உச்சந் தலை மொட்டை. மண்டை அடிவாரத்தில் மயிர் கத்தையாக உள்ளது."
வெள்ளை டவுசர், வெள்ளை கோட், கறுப்புப் புள்ளிபோட்ட மஞசள் கழுத்துப் பட்டி அணிந்திருக்கிறாரா?"
ஆம்."
அவர்தான் கில்லாடி. மற்றவன்?"
ஒற்றைக் கண்ணுக்கு கறுப்பு கவசம் போட்டிருக்கிறான். போனி ரெயில்வேறு கட்டியிருக்கிறான். இவன் மற்றவனிலும் ஆறங்குலமளவில் உயரம்கூட."
அவன்தான் சூட்டி. இரண்டு பேரையும் கைது செய்யுங்கள். நான் சொன்னனே. இந்த பேக் கில்லாடியின் பேக்தான்."
கைது செய்ய முடியாது."
ஏன்?"
உன்னை விசாரித்தாரே ஸ்கொற்லன்ட் யாட் அதிகாரி. அவருடைய கட்டளை."

                லிவர்பூல் துறைமுகவழியாகப் போதைப் பொருள் கடத்தும் மாபியா கூட்டத்தை கைப்பற்றுவதே ஜ்கொற்லன்ட் யாட்டின் வியூகம். உள்ளுர் விநியோகத்தர்கள் சார்பாகப் போதைப் பொருளை ஏற்றி இறக்கும் கில்லாடியையும் சூட்டியையும் அடையாளங் கண்டுகொண்டனர். அவர்களை எப்பொழுதும் கைதுசெய்ய முடியும். அவர்களைக் கைது செய்தால் மாபியா கூட்டம் விழித்துக்கொள்ளும். எனவேதான் பொலிசார் கில்லாடியையும் சூட்டியையும் கைதுசெய்யவில்லை என்பது அமிருக்கு அப்பொழுது தெரியாது.


                அவனது காதுகளில் நதியாவின் எச்சரிக்கை மூசிமூசி இரைந்தது. ஜ்கொற்லன்ட் யாட்டுக்குக் கொண்டு செல்வதற்காக பொலிசார் அவனை ஒரு ஹெலிகொப்டரில் ஏற்றினர்.   

தொடரும்...

No comments:

Post a Comment