Monday, 10 August 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்


கதிர்.பாலசுந்தரம்
அதிகாரம் 9 - அராஜகத்தின்  கொடுமுடி
           
எனது அத்தியந்த சிநேகிதி நர்த்தனாகூட என்னை ஒத்த குடி இல்லை"
என்று லண்டன் வந்த முதல் தினம் அமிர் கூறிய வார்த்தைகள் ஆறு மாதங்களாக ஜீவிதாவை நச்சரித்துக்கொண்டு இருந்தன. ஒருவேளை அந்த நர்த்தனா அமிரின் இதயத்தை இன்னும் அமுக்கி வைத்திருக்கிறாளோ இல்லையோ என்பதை நிட்சயப் படுத்தும் நோக்கத்தோடு அவனைப் பிளெசற் பூங்காவிற்கு வரச்சொல்லி யிருந்தாள்.

                “பத்து மணிக்குப் பிளெசற் பூங்காவில் காத்து நிற்பேன். மறந்துபோய் லைபிரரிக்குப்போய்விடாதீர்கள்" என்று முதல் நாள் ஜீவிதா சொன்னபடி குறித்த நேரத்துக்கு அமிர் அங்கு சென்றுவிட்டான். ரெனிஸ் மைதானத்துக்கு முன்னே உள்ள மேப்பிள் மரத்தின் கீழே காணப்பட்ட சலாகையடித்த பச்சை மரவாங்கில் அவளைக் காணததால், அமிருக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது. அமிரின் உள்ளத்தை ஜீவிதாவின் பொன் வண்ணச் சித்திரம் ஓயாமல் ஊஞ்சலாட்ட, அவள்மீது உள்ள தனது விருப்பத்தைத் தெருவிப்பது முறையோ அல்லவோ என்ற கலவரத்துள் சிக்கியிருந்த அவன் தலைமுடியைக் கோதியபடி வாங்கில் அமர்ந்தான். 
                அதே சமயம் ஏறக்குறைய நூறு மீற்றருக்கு அப்பால் பூங்காவின் மையத்தில் உள்ள தேநீர்ச்சாலை மறைவில் ஜீவிதா நிற்பது அமிரின் கண்களில் படவில்லை. கறுப்பு உடை அணிந்த ஒல்லி நெடுவல் ஒருவன் அவளுக்கு கையசைத்து விடைபெற்று அவ்விடத்தைவிட்டு விரைந்து நகர்ந்து தெற்குப் பக்க வாயிலால் வெளியேறியதையும் அமிர் கவனித்திருக்க முடியாது.

                 அதனைத் தொடர்ந்து ஜீவிதா ஐயங்களும் ஏக்கங்களும் அச்சங்களும் மலிந்த குட்டைக்குள் திணறிக் கொண்டிருந்தாள்.

                மறு பக்கத்தில் இரண்டு கிழமைகளுக்கு முன்னர் முருகன் கோவிலில் தற்செயலாக நதியாவைக் கண்ட வேளை, அவள் அமிரைப் பற்றி வானளாவப் புகழ்ந்து கூறிய சொற்கள் அவளின் காதுகளில் மறு ஒலிபரப்புச் செய்தன.
அமிர் எங்களின் எழிய யாழ்ப்பாணப் பெடியள் மாதிரியில்லை. கெட்ட பழக்கம் எதுவுமில்லை. வீட்டிலே இருந்தால் ஏதோ வாசித்தபடி இருப்பார் அல்லது ரீ.வியில் ஆங்கிலச் செய்தி கேட்பார். வீட்டை விட்டு வெளியேறினால் நூல்நிலயத்துக்கு மட்டுமே போவார். அவருக்கு என்னுடைய சமையலிலே நல்ல விருப்பம், என்னிலேயும் அப்படித்தான்."

                நதியாவின் விமர்சனத்தைக் கேட்டதிலிருந்து அவள் மீது ஜீவிதாவுக்கு இறுக்கமான சக்களத்தி வெறுப்பு. பூமாவும் அமிரோடு மிக நெருங்கிப் பழகுவதால் ஜீவிதாவுக்கு அவள் மேலும் எரிச்சல் புகைச்சல் பொறாமை. நர்த்தனா வேறு அவளைத் தூரப் போவென்று மிரட்டிக் கொண்டிருந்தாள். எனினும் அமிர் தனக்கே உரியவன் என்ற உணர்வு ஜீவிதாவின் இதயத்தில் ஆழ வேர் பாய்ச்சியிருந்தது. இருந்தாலும் அன்று திடீரென அவள் எதிர்பாராத ஒரு புதுப் போராட்டத்துக்குள் தள்ளப்பட்டாள். அந்தச் சிக்கலிலிருந்து தப்பத் தனக்கு கடவுள் அருள்பரிபாலிப்பார் என்ற குருட்டு நம்பிக்கை வேறு. அவ்வேளை,
நேரம் என்ன?" என்ற ஒரு வெள்ளைக்காரனின் குரலைக் கேட்டு திடுக்கிட்ட ஜீவிதா பத்து இருபது" என்று கூறிய பொழுதுதான் அவளுக்கு அமிர் தனக்காகக் காத்து நிற்பான் என்ற ஞாபகம் வந்தது. அவள் தேநீர்ச்சாலை மறைவிடத்திலிருந்து வெளியேறி அவனிருக்கும் இடத்துக்குக் கூந்தல் காற்றில் பறக்க நெடிய கால்களை எட்டி வைத்து விரைந்து போனாள்.

                முகம் மட்டுமே தெரியும் குளிர்கால ஊதாநிற முழுநீள உடையில் தன்னை நெருங்கிவிட்ட ஜீவிதாவின் முகத்தை உற்றுப் பார்த்த பின்னர்தான் அவள் ஜீவிதா என்பதை அமிர் அடையாளம் கண்டான்.

                “ஜீவிதா, உங்களுக்காக எவ்வளவு நேரமாகக் காத்துக்கொண்டு இருக்கிறேன் தெரியுமா?" என்ற அமிரின் வார்த்தைகளைக் கேட்ட ஜீவிதா, “மன்னித்துக் கொள்ளுங்கள். எதிர்பாராமல் ஒரு சிநேகிதி வந்திட்டாள். அதுதான் இழைக்க இழைக்க ஓடிவருகிறேன்" என்று ஒரு பொய்யைச் சொன்னபடி மார்பில் படர்ந்த கூந்தலை முதுகுப் புறம் வீசி எறிந்து தலையை மேலும் கீழும் ஆட்டி உரத்துச் சிரித்த பொழுது அமிர் அவளது கன்னக் சுழிகளை ஆவலோடு தேடினான். அவனுக்கே புரியவில்லை ஏன் அவை ஒளித்து விளையாடுகின்றன என்று.

                அப்பொழுது அவர்களின் காலடியிலுள்ள பூங்காவில் அமைந்த சீமெந்து நடை வீதி நீளத்துக்கு அவர்களைக் கடந்து நடந்து சென்ற வெள்ளைப் பெட்டைகள் இருவர், ஜீவிதா உரத்துச் சிரித்ததைப் பார்த்துத் தங்களுக்குள் ஏதோ கூறித் தாமும் உரத்துச் சிரித்தது அமிருக்குக் கோபம் ஊட்டியது. அமிர் அவர்களை வெறித்துப் பார்த்தான். 

                அமிரை முதன் முதல் சந்தித்தபொழுது அவன் குறிப்பிட்ட 'அத்தியந்த சிநேகிதி நர்த்தனாஅவனோடு எவ்வகையான உறவு வைத்திருக்கிறாள் என்பதை அறியவேண்டும் என்ற உந்தல் மீண்டும் ஜீவிதாவின் உள்ளத்தைக் கிள்ளியது. அதை விசாரிப்பது முறையல்ல என்று இத்தனை நாட்களும் தயக்கம் காட்டி வந்தவள் மேலும் தாமதிப்ப தில்லை என்ற முடிவுக்கு வந்தாள்.
உங்களிடம் ரொம்ப நாட்களாக ......" ஜீவிதா வசனத்தை முடிக்கவில்லை.
ரொம்ப நாட்களாக என்ன? சொல் ஜீவிதா."
ஏதன் வித்தியாசமாகக் கேட்டால் கோபிப்பீர்களோ?"
ஓ நான் முற்கோபி. அதனால் பயப்படுகிறியோ?"
இல்லை. எங்கே உங்கள் மனதைப் புண்படுத்துமோ என்ற பயம்."
அப்படி என்ன கேள்;வி?"
கோபிக்கக்கூடாது."
இல்லை."
உங்கள் சிநேகிதி நர்த்தனாவைப் பற்றி."
சொல்."
அந்த நர்த்தனா இப்பவும் உங்கள் ...." அவள் வசனத்தை முடிக்க அஞ்சினாள். அவனுக்கு அவள் எண்ணம் புரிந்துவிட்டது.
இப்பவும் என் உள்ளத்தில் இருக்கிறாளா? அப்படித்தானே கேட்கவிரும்பினாய்?"
ஓம்."
அவள் என் இரத்தத்தின் ஒவ்வொரு அணுவிலும் நிரந்தரம் ஆகிவிட்டாள். எனது கட்டை சிதையிலே எரிந்து சாம்பலாகு மட்டும் அவள் என்னுடன் கூடவே இருப்பாள்."

                உடன் அமிரின் முகம் காவோலை கொளுத்திக் கருக்குவது போலக் கருகத் தொடங்கியது. அவன் மண்டை ஓட்டுக்குள் விமானம் ஒன்று இராட்சத இரைச்சலோடு ஓடு பாதையை விட்டு எழுந்து பறக்க முயன்றது.

                தலையை நிமிர்த்தி மேப்பிள் மரக் கிளைகளைப் பார்த்தான். அவை குளிரின் கொடுமையைத் தாங்கிக் கொள்வதற்காக இலைகளைச் சொரிந்து பட்ட மரங்கள் போல மொட்டையாகக் காட்சி அளித்தன.  வானத்தில் வெளிச்சத்துக்கு திரை போட்டிருந்த கரு மேகங்கள் அவனுக்கு ஏதோ செய்திகூறியிருக்க வேண்டும் என்பதை அவனது முகம் சொன்னது.

                ஜீவிதா அஞ்சிப்போனாள். பயந்து பயந்து சொன்னாள், “நான் தவறுதலாகக் கேட்டுவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்." 

                “ஜீவிதா நீங்கள் ஒன்றும் தவறுதலாகக் கேட்கவில்லை. தமிழ் ஈழ விடுதலைபெற ஆயுதம் ஏந்திய போராளிகள் தங்கள் சகோதர உறவுகளுக்குச் செய்த அக்கிரமங்களுக்குச் சிகரம் வைத்த ஒரு சோக சம்பவம் நினைவுக்கு வந்தது. என்னால் அதனை எத்தனை பிறவி எடுத்தாலும் மறக்க முடியாது" என்று கூறிவிட்டு ஜீவிதாவை நோக்கினான். அவன் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது.

                ஜீவிதாவுக்கு எதுவுமே புரியவில்லை. அவனது முகத்தைக் கலக்கத்தோடு பார்த்தாள்.

                இருவரும் ஊமைகளாக ஆளை ஆள் நீண்ட நேரம் பார்த்தவாறு இருந்தனர். இறுதியில் அமிரின் வாயிலிருந்து வார்த்தைகள் பிறந்தன.
அது என் வாழ்நாளில் மறக்க முடியாத கதை."
சொல்லுங்கள். கவலை தீரும்."
நான் பாடசாலையில் படித்த காலம்; நடந்த கோர நிகழ்ச்சி அது."
கோர நிகழ்ச்சியா?"
ஆம். அப்பொழுது நான் சின்னப் பெடியன். மல்லாகத்தில் சிவநேசன் என்ற ஒரு பிரபல ஆங்கில ஆசிரியரின் பிரத்தியேக வகுப்பில் ஆங்கிலம் கற்கப்போன முதல் நாள். வகுப்பில் நர்த்தனா மட்டும் இருந்தாள்."
நர்த்தனாவை முன்பே தெரியுமா?" அப்படி ஒரு கேள்வியை அவசரப்பட்டுக் கேட்டதற்காகத் தன்னையே நொந்தாள்.
இல்லை. அன்றுதான் சந்தித்தேன்."
சொல்லுங்கள்."
வகுப்பு ஆரம்பிக்க நிரம்ப நேரம் இருந்தது. அவளிடம் பாடங்கள் பற்றிய கதை யோடு ஆரம்பித்த நட்பு தொடர்ந்து வளர்ந்து மலர்ந்து மாதங்களைக் கடந்து வருடங்களைக் கண்டபின்னர்தான் அவள் அதை முறிக்க விரும்பினாள்."
ஏன்?"
அவள் பெற்றோர் கடற்றொழிலாளர். அவர்கள் அதை விரும்பவில்லை."
உங்கள் பெற்றோர் விரும்பமாட்டார்கள் என்ற காரணத்துக்காகவா?"
ஆம்."
பின்னர் என்ன நடந்தது?"
இருப்பினும் எமது நட்பு நாளடைவில் இறுகியிருந்தது. அவள் அழைப்பை ஏற்று அவள் வீட்டுக்கும் சென்றிருக்கிறேன். ......"
எங்கே வீடு?"
காங்கேசன்துறையில் (கே.கே.எஸ்)" என்ற வார்த்தைகளோடு நிறுத்தி மேலே  மரத்தின் வெற்றுக் கிளைகளுடாக இருண்டுகிடந்த வானத்தைப் பார்த்துச் சிறிது நேரம் மௌனமாக இருந்த பின்னர், மீண்டும் கூறினான்.

ஒரு நாள் நான் அவள் வீட்டில் இருந்தேன். நானும் நர்த்தனாவும் மட்டுமே. மேலே வானத்தில் கோடைச் சூரியனின் உச்சிப்பொழுது ஆட்சி. அப்பொழுது சிறீ லங்கா சிங்களத் தரைப் படைப் பிரிவு ஒன்று அணிவகுத்து பலாலியிலிருந்து காங்கேசன் துறைக்குத் தார்வீதி நீளத்துக்குச் சென்றுகொண்டு இருந்தது."
ஏன்?"
அதுவும் ஒருவகைப் பயிற்சி. வெய்யில் அகோரம். அச்சமயம், அந்தப் படைப் பிரிவு நர்த்தனா வீட்டு வாசலை அடைந்தபொழுது, அந்த அணிவகுப்பில் நடந்து வந்த பதினெட்டு வயது மதிக்கத் தக்க ஒரு சிங்கள இராணுவ சிப்பாய் திடீரென மயங்கி அவளது வீட்டு வாசலில் விழுந்துவிட்டான்."
உடனே படபடவெனச் சுட்டிருப்பார்களே - என்ன ஏதோ என்ற பயத்தில்."
இல்லை. அப்பொழுது, அந்த அணிவகுப்பிற்குத் தலைமை தாங்கிச் சென்ற சிங்களப் படை அதிகாரி வீட்டு வாசலில் நின்ற நர்த்தனாவிடம் தண்ணீர் கேட்டான் - விழுந்து கிடந்த சிப்பாயின் முகத்தில் நீர் தெளித்து மயக்கம் தெளிவிக்க."
தண்ணீர் கொடுத்தாளா?"
ஆம். சூரிய ஒளி பட்டு காலிலிருந்த வெள்ளிச் சங்கிலிகள் மின்மினிப் பூச்சி போலப் பிரகாசிக்க ஓடிச் சென்று ஒரு செம்பு தண்ணீரை அந்தச் சிங்களப் படை அதிகாரியிடம் கொடுத்தாள். நான் எல்லாவற்றையும் வீட்டு வாசலில் நின்று பார்த்துக்கொண்டு நின்றேன்."
                அவள் நீர் கொடுக்கச் சென்ற காரணத்தால்தான் அமிர் குறிப்பிட்ட கோர நிகழ்வு நடந்திருக்க வேண்டும் என்ற நினைப்பில்,
நர்த்தனா போயிருக்கக்கூடாது. நீஙகள் போயிருக்க வேண்டும.;" என்று கூறியபடி குளிருக்காக அமிர் போட்டிருந்த விலை உயர்ந்த நீல குளிர்தாங்கி ஜகற்றை ஜீவிதா அவதானித்தாள். அது நதியா அமிருக்குப் பரிசளித்த உடை என்பது தெரிந்திருந்தால் அவள் சிதறியிருப்பாள்.

                “யார் போயிருந்தால் என்ன? அடுத்த நாள் அதே படை அணிவகுப்பு பலாலிக்குத் திரும்பிச் செல்லும் பொழுது அந்த படை அணிவகுப்பின் சிங்களப் படை அதிகாரி, நர்த்தனாவின் படலையைத் திறந்து, அவளைப் பார்த்துச் சிரித்துக் கை அசைத்து 'ஐபோம். சொகம் எப்படி' என்று சொல்லி விட்டுப் போனான். அதுதான் நர்த்தனாவுக்கு வினையாக வந்தது."
அமிர், எனக்கு நீங்கள் சொல்வது புரியவில்லை."
எல்லாம் இனிப் புரியும், கேள் ஜீவிதா. மூன்றாம் நாள் இரவு நர்;த்தனா கடத்தப்பட்டாள்."
அந்த சிங்களப் படை அதிகாரியினாலா?"
இல்லை."
வேறு யார் அவளைக் கடத்தினார்கள்?"
கே.கே.எஸ். ஊத்தைவாளி இயக்க உள்ளுர்த் தலைவன்."
ஏன். பணம் வாங்கவா?"
இல்லைப் பழிவாங்க."
பழிவாங்கவா?"
ஆம். சொல்கிறேன் கேள் ஜீவிதா. உள்ளுர் ஊத்தைவாளித் தலைவன் மூன்று போராளிகளோடு நர்த்தனாவின் வீட்டுக்குச் சென்று அவளை விசாரணைக்கு என்று அழைத்துச் சென்றான்."
என்ன விசாரணை?"
சிங்களப் படை அதிகாரிக்கு தங்கள் இயக்க இரகசிய உறைவிடங்கள் செயற்பாடுகள் பற்றித் தகவல் கொடுப்பதாக தமக்கு முறைப்பாடுகள் பல வந்திருப்பதாகக் கூறி, விசாரணைக்கு என்று பைசிக்கிலில் ஏற்றிக் கொண்டு போனார்கள்."
யாரும் தடுக்க வில்லையா?"
தடுக்க முடியுமா? அவர்கள் கையில்தானே துப்பாக்கிகள். யாழ்ப்பாணத்திலே சட்டத்திற்கு இல்லாத அதிகாரம் விடுதலை இயக்கங்களின் துப்பாக்கிக்கு."
பின்னர் என்ன நடந்தது?"
அடுத்த தினம் காலை நர்த்தனாவின் மாமன் ஒருவர் ஊத்தைவாளி முகாமுக்குப் போய் நர்த்தனாவைப் பற்றி விசாரிக்க தாம் அப்படி யாரையும் கைது செய்யவில்லை என்று அவரை வெருட்டித் துரத்தி விட்டார்கள்."
நீங்கள் தேடவில்லையா?"
எனக்கும் தகவல் வந்து நானும் போய் நர்த்தனாவின் சொந்த பந்தங்களோடு சேர்ந்து தேடினேன். மூன்றாம் நாள் காலையில் வீமன்காமம் கொலனி சல்லி கிண்டி எடுத்த பள்ளம் ஒன்றில் ஒரு பிரேதம் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. நான் நர்த்தனாவின் பெற்றோரை ஒரு காரிலே ஏற்றிக்கொண்டு வீமன்காமம் கொலனிக்கு விரைந்தேன். இன்னும் பலர் வந்து சேர்ந்தனர்."
அதன் மேல் அவனால் எதுவும் பேச முடியவில்லை. அவன் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் கொட்ட தன் கண்ணெதிரே ஒரு வெள்ளைக்கார வயோதிப மாது குளிரின் அகோரத்தையும் பொருட்படுத்தாமல் தனது கால்கள் ஊனமுற்ற கணவனை ஒரு தள்ளு வண்டியில் பூங்காவில் அமைந்த வட்ட சீமெந்து நடை வீதியில் இரண்டாவது சுற்று தள்ளிக் கொண்டிருப்பதை அமைதியாகப் பார்த்த பின் மீண்டும் கதையைத் தொடர்ந்தான்.
கிட்டத்தட்ட ஒன்பதடிப் பள்ளமொன்றின் விளிம்பில் உள்ள பனையோரமாக நின்று நான் கீழே பார்த்தேன். நர்த்தனாவின் பெற்றோர் உறவினர் பள்ளத்தின் விளிம்பில் ஆங்காங்கு நின்று பள்ளத்தில் செம்மண்மீது கிடந்த பிரேதத்தைப் பார்த்தனர். முகத்தைக் காவோலை கொளுத்திக் கருக்கியிருந்தது. சாம்பல் திரை போட்டிருந்தது."
யார் பிரேதம் என்று அடையாளம் கண்டீர்களா?"
இல்லை. அடையாளம் காண்பது கஷ்டமாக இருந்தது. நிர்வாணமாகக் கிடந்த பிரேதத்தின் தலைமயிர் ஒட்ட மழிக்கப்பட்டு இருந்தது. தாய் தரும் பால் மடியை ஏதேதோ செய்து இருந்தது." 

                அவன் மேலும் ஏதோ சொல்ல வந்து அதனை வார்த்தைகளில் சொல்ல முடியாமல் திணறுவதை ஜீவிதா அவதானித்தாள். 'வேறென்ன அநியாயம் செய்திருப்பார்கள்என்று எண்ணியபடி அமிரின் வாயைப் பார்த்தாள். அவன் குனிந்து காலடியில் இருந்த சீமெந்து நடை வீதியைப் பார்த்தபடி,
வேறென்ன அக்கிரமங்கள் செய்திருந்தார்கள் தெரியுமா ஜீவிதா?" என்று கேட்டான்.
தெரியாது. கூறுங்கள்."
பெண்மையின் குறியில் கூராக்கிய கிளுவங் கதியாலை அடித்து ஏற்றி இருந்தது."

                ப+மியைப் பார்த்தபடி இறைவா" என்ற ஜீவிதா சற்று நேரத்தின் பின்னர்,
பிரேதம் யாருடையது ...... .......... " என்று தயக்கத்தோடு கேட்டாள்.
அப்பிரேதத்தின் வெள்ளிக் கால்சங்கிலி சூரிய ஒளியில் மின்னியது. நர்த்தனாவின் அம்மாவுக்கு அது அடையாளம் காட்டியது. அவ ஐயோ என்று ஓலமிட்டபடி அப்பள்ளத்தில் பாய்ந்தார். கால் முறிந்தவிட்ட நிலையிலும் பிரேதத்தின் மேல் விழுந்து புரண்டு ஓவென்று கதறினார்."

                அவர்கள் இருவரும் பூமியைப் பார்த்தவாறு கற்சிலைகளாகினர்.

                மௌனம் கலைந்த அமிர் ஜீவிதாவைப் பார்த்தான். அவளும் ஊமை போல அவனைப் பார்த்தாள். அவளின் பொன் வதனத்தில் உலகின் சோகம் முழுவதையும் குழைத்து அப்பியிருந்தது போலத் தென்பட்டது.
ஜீவிதா, ஊத்தைவாளி கே.கே.எஸ். உள்ளுர்த் தலைவன் ஏன் அவ்வாறு செய்தான் தெரியுமா?"
சிங்களப் படை அதிகாரிக்குத் தண்ணீர் கொடுத்துக் கதைத்தபடியால்."
இரண்டும் இல்லை."
இரண்டும் இல்லையா?"
ஆம்."
பின்னர் ஏன் அந்த ஊத்தைவாளி அப்படிச் செய்தான்?"
அவனுக்கு நர்த்தனா மீது வெறிகுதறும் மோகம். அவளோடு கதைக்கப் பல தடவைகள் முயன்று அவள் ஆங்கில ரியூசனுக்கு மல்லாகம் போகும் வேளைகளிலும், அவள் நடேஸ்வராக் கல்லூரிக்குச் செல்லும் போதெல்லாம் பின்னும் முன்னும் திரிந்து அவளைத் தன் வலையில் சிக்கவைக்க முயன்றான் - முடியவில்லை."
ஒருதலைக் காதலா?"
அந்தக் கோதாரிதான். ஒரு நாள் நர்த்தனா காங்கேசன்துறை பேருந்து நிலையத்தில் மல்லாகம் ரியூசனுக்கு போக நின்ற வேளை, அவளது இரட்டைப் பின்னல் ஒன்றில் ஒரு வெள்ளை நித்தியகல்யாணிப் பூவைச் சொருக, நர்த்தனா காலில் இருந்த செருப்பைக் கழற்றி அவனது மூஞ்சியில் வீசினாள். அவ்வேளை அவனது தோழர்கள் மட்டுமல்லாமல் வேறும் ஏராளமான பேருந்து பயணிகளும் ஆவென்று பார்த்துக்கொண்டு நின்றார்கள். அந்த ஊத்தைவாளி ஆத்திரத்தோடு தனது துப்பாக்கியை உயர்த்தி நீட்டி உறுமிவிட்டுப் போனான்."

பிறகு என்ன நடந்தது?"
நர்த்தனாமீது பழிக்குப்பழி வாங்க கால நேரம் பார்த்து எரிமலையாகக் குமுறியவனுக்கு சிங்களப் படை வீரனுக்குத் தண்ணீர் கொடுத்த சம்பவம் வாய்ப்பாகியது. அந்தச் சாட்டை வைத்துத்தான் நர்த்தனாவைக் கடத்திக் கொண்டுபோய்   ......." 
அத்தோடு அமிர் தனது கதையை நிறுத்தி விட்டு ஜீவிதாவைப் பார்த்தான்.
இப்பவும் அந்த ஊத்தைவாளி யாழ்ப்பாணத்தில் இயக்கத்தில் இருக்கிறானா?”
என்று ஜீவிதா வினாவினாள்.
இல்லை. அவன் பின்னர் கொழும்பு வெள்ளவத்தை ஊத்தiவாளிக் கேம்பில் இருந்து பெரிய அட்டகாசம் பண்ணினவன். ஒரு எஞ்சினியர் காசு கொடுக்க வில்லை என்று கடத்திப்போய்க் வெள்ளவத்தை ஊத்தைவாளிக் கேம்பிலே வைத்துச் சித்திரவதை செய்ய அந்த எஞ்சினியர் செத்துப்போனார். பிரேதத்தைக் காவிச் சென்று வெள்ளவத்தைக் கடற் கரையிலே உள்ள புகையிரத தண்டவாளத்திலே போட்டு அது தற்கொலை என்று பேப்பரிலே வந்தது." 

அமிரின் கதையைக் கேட்ட ஜீவிதா
அவன் இப்பவும் கொழும்பில் இருந்து அக்கிரமம் செய்கிறானா?" ஜீவிதா கேட்டாள்.
இல்லை. லண்டனில்  இருந்து ..."
என்ன லண்டனிலா?"
ஆம் ஜீவிதா, நீங்களும் அவனைப் பார்த்து இருப்பீர்கள்."
நான் பார்த்திருப்பேனா?"
அடையாளம் சொல்கிறேன். பார்த்திருக்கிறீர்களா என்று சொல்லுங்கள். பெரிய பானைத் தலை. சின்னோட்டி மூக்கு அடிக்கடி விரிந்து மூடும். அவனுடைய கூரிய சிறிய வட்டக் கண்கள் எங்கோ ஆழப் புற்றில் இருந்து அச்சுறுத்தும்."
ஓ. நான் பார்த்திருக்கிறேன். நீங்கள்."
பார்த்திருக்கிறேன் மட்டுமல்ல கதைத்திருக்கிறேன் மட்டுமல்ல அந்த  ஊத்தைவாளி குகன் இப்பொழுது என் உற்ற நண்பனுங்கூட."

ஜீவிதா மிரண்டு பயந்து அமிரை விறைத்துப் பார்த்தாள்.  

தொடரும்...

No comments:

Post a Comment