Monday, 17 August 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்


கதிர்.பாலசுந்தரம்
அதிகாரம் 10 - நரவாச  மல்லிகை  மாளிகை
                  தனது புதிய சிகப்பு டீஆறு காரின் சாரதி ஆசனத்தில் கோட்டான் சூட்டி. அவனின் ஒற்றை வலக் கண் - புற்றுக்குள்ளால் வெளியே வரும் வெள்ளெலியைப் வேட்டையாட தருணம் பார்த்திருக்கும் கூகையின் கண்களைப் போல - கில்லாடியின் வீட்டிலிருந்து அமிர் எப்போது வருவான் என்று குறிவைத்துக் கொண்டு இருந்தன. வீட்டுக்கு வெளியே வந்த அமிர் வாசலில் கோட்டான் சூட்டி காரில் இருப்பதைக் கண்டான். அவனது காருக்கு அண்மையில் சென்று,
சூட்டி அண்ணை எப்படிச் சுகம்?"
நல்ல சுகம். உன்பாடு எப்படி?"
நானும் நல்ல சுகம்."
ஆளைப் பார்த்தாலே தெரிகிறதே. நதியாவின் சாப்பாட்டில் ஒரு சுற்றுப் பருத்திருக்கிறாய்" என்று கூறிவிட்டு ஒரு பொய்ச் சிரிப்பை உதறினான். அவன் அதனைப் பொருட்படுத்தாமல்,
எங்கே அண்ணை காலமை நேரத்தோடு புறப்பட்டு விட்டீங்கள்?"
லிவர்பூலுக்கு. தம்பி அமிர், உனக்குத் தெரியுமே எங்கே லிவர்பூல் நகரம் இருக்கிறது என்று?"
ஓ. நல்லாகத் தெரியும். தூரப் போகவேண்டும். இங்கிலாந்தின் மேற்குக் கடற்கரையில். மேர்சி நதி முகத்துவாரத்தில்."
வந்து ஏழு மாதம். அதற்கிடையிலே நீ இதெல்லாம் பிடித்திட்டாய்."
உது மட்டுமில்லை அண்ணை. எனக்கு லிவர்பூல் சரித்திரமே தெரியும்."
அதென்னடா தம்பி சரித்திரம்? சொல்லு பார்க்கலாம்."
இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய துறைமுகம் லிவர்பூல். 18ஆம் நூற்றாண்டு தெரியுமே அண்ணை? அப்போது அங்கே கறுப்பர் அடிமை வணிகம் சுறுசுறுப்பாக நடந்தது. 20 ஆம் நூற்றாண்டின் முன்னரைக் காலப் பகுதிவரை புடவைக் கைத்தொழிலில் கொடிகட்டிப் பறந்தது. றொக் சங்கீதம் கேள்விப்பட்டனீங்களே?"
ஓ."
அதுகூட 1959லே லிவர்பூலிலேதான் தொடங்கினது."
கோட்டான் சூட்டி மனதுள் கறுவினான்: 'உந்த படித்த நாய்க் கூட்டத்திற்கு எங்களுக்கு ஒன்றும் தெரியாதென்ற தடிப்பு. உவருக்கு இன்றைக்கு இரவைக்குச் சிலவேளை தெரியவந்தாலும் வரும் எங்கள் படிப்பைப்பற்றி.

                இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கில்லாடி முதல் மாடியிலுள்ள தனது அறையிலிருந்து யன்னல் திரைச் சீலை இடைவெளி ஊடாக ஒட்டிப் பார்த்துக்கொண்டு நின்றான். 'சூட்டி எப்படியும் பெடியனை மடக்கிப் பிடித்திடுவான்என்று எண்ணியபடி மீண்டும் அமிர் தங்கள் பொறிக்குள் சிக்குகிறானோ என்று அங்கலாய்ப்போடு பார்த்தான்.

தம்பி டே எங்கே இப்ப பயணம்?" சூட்டி வினாவினான்
லைபிரரிக்கு அண்ணை" என்று ஒரு பொய்யைச் சொன்னான் அமிர். அவன் அப்பொழுது முருகன் கோவிலுக்குப் போகப்புறப் பட்டிருந்தான். ஏலNவு நதியா கோவிலுக்குப் போவதாகக் சைகை காட்டிவிட்டுப் போயிருந்தாள். அவனுக்கு லிவர்பூலைப் பார்க்க ஓர் அரிய சந்தர்ப்பங் கிடைத்திருப்பதாக ஒரு மின்னல் செய்தி மண்டைக்குள் தாக்கியது.
ஏன் அண்ணை போறீங்கள்?"
கில்லாடி அண்ணை யாரோ நண்பனைப் பார்க்க வேண்டுமாம்."
அவரும் வாறாரோ?"
ஆம்."
எப்ப திரும்புறியள்?"
தம்பி டே இந்த டீஆறு பறக்கத் தொடங்கினால் மூன்றரை மணித்தியாலம் தேவையில்லை. சுணங்க மாட்டோம்"
அப்போ இரவைக்கே திரும்பிவிடுவியளோ?"
ஓ. அவ்வளவும் என்னத்துக்கு அங்கே சுணங்க?"

                கோட்டானுக்கு விளங்கியது முயல் வலியவே வந்து நகத்துக்குள் கிழிபடப்போவது. அது சொன்னது,
தம்பி என்னடா யோசனை?"
நானும் வாறன் அண்ணை."
சரி வா தம்பி. காரில் ஏறு."
கொஞ்சம் பொறுங்கள் அண்ணை, என்னுடைய அறைக்குப் போய்விட்டு வருகிறேன்" என்று கூறிய அமிர் தனது அறைக்குப் பாய்ந்து சென்று பெட்டியைத் திறந்து ஒரு எலெக்ரோனிக் சிறிய பொருளை எடுத்துத் தனது நீல ஜகற்றின் பைக்குள் மறைத்துக்கொண்டு திரும்பிக் காரை அடைந்தான்.
தம்பி, வா முன் ஆசனத்தில் உட்காரு" என்று கூறிய கோடடானின் ஒற்றைக் கண்; முதலாம் மாடியில் கில்லாடியைத் தேடியது.

சூட்டி பெடியனை விழுத்தியிட்டான். உந்த வேலைக்கு மூத்தானைக்காட்டிலும் சூட்டிதான் விண்ணன்" என்று கூறியபடி கில்லாடி கீழிறங்கி, வீட்டுக் கதவைத் திறந்து காரை நோக்கி நடந்தான். 

                பெரிய நிர்வாக அதிகாரி போல மிடுக்கு நடையில் வரும் கில்லாடியை அமிர் கவனித்தான். வெள்ளை ரவுசர், வெள்ளை கோட்டு, கறுப்புப் புள்ளி போட்ட மஞ்சள் கழுத்துப்பட்டி, கையிலே ஒரு ஜேம்ஸ்பொண்ட பேக் விளம்பரம் செய்ய கில்லாடி நடந்து வந்து பேக்கை கார் பின் பூற்றுள் தள்ளிவிட்டு காரில் ஏறும்பொழுது,
தம்பி அமிர், நீரும் லிவர்பூலுக்கு வாறீரோ?"
ஓம் அண்ணை. ஊர் பார்க்க ஆசை."
அது சரி. லைபிரரிக்கு போறதென்று கொஞ்சம் முன்னர் சொன்னீர். என்ன தம்பி லைபிரரிக்கு விடுதலை கொடுத்திட்டீரோ?"
கில்லாடி அண்ணை, லைபிரரி என்ன ஓடப்போகிறதே? நாளைக்கும் போகலாந்தானே?"
ஓம் பெடியா. காற்றுள்ளபோதே தூற்றவேண்டும்." கில்லாடி இரண்டு கருத்துப்படச் சொல்கிறான், கழுத்தறுக்கப் போகிறான் என்பது பாவம் அமிருக்குப் புரியவில்லை.

                சூட்டியின் டீஆறு பேமிங்காம் நகரைக் கடந்து யு40 நெடுஞ் சாலை வழியே காற்றைக் கிழித்துக் கொண்டிருந்தது.

                கோட்டான் சூட்டி காரை வேகமாக ஓட்டுவதை அவதானித்தபடி, அவனுக்கு இடது பக்கத்திலே அமர்ந்திருந்த அமிர், அவன் எவ்வாறு ஒற்றைக் கண்ணால் பார்த்து அவ்வளவு வேகமாகக் காரை ஓட்டுகிறான் என்று அதிசயித்தான். கோட்டான் சூட்டியின் போனி ரெயிலாகக்கட்டிய தலைமுடி காற்றில் எதிர்த்; திசையில் பறப்பதைப் பார்த்து மூக்கைச் சுழித்துவிட்டு, வீதிக்கு இரு மருங்கிலும் உள்ள நிலத் தோற்றத்தின் இயற்கை வனப்பில் மூழ்கத் தொடங்கினான்.

                வீதியின் இரு பக்கமும் பரந்த தொடரலைநிலங்கள். தூரத்தே குட்டிக் குட்டிக்  குன்றுகள். ஆங்காங்கு ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் மேய்ந்து கொண்டிருந்தன. எங்காவது ஒரு சிறிய வீடு பெரிய மேச்சல் நிலங்களின் மத்தியில் காணப்பட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் துளிர்விட்ட மொட்டை விருச்சங்கள் தெரிந்தன. மக்கள் நடமாட்டம் அருமையாக இருந்தது. அக்காட்சிகளில் அமிர் லயித்திருக்க, காரின் பின் ஆசனத்தில் தூக்கத்தில் இருந்த கில்லாடி சின்ன வடிவு நதியாவைப் பற்றிய நினைவுக்குள் மூழ்கி ஓ மை டார்லிங் நதியா. என்னணை எட்ட எட்டப் போகிறாய்?" என்று வாய்புலம்பிக் கல்யாணப் பூங்காவில் சஞ்சாரம் செய்துகொண்டு இருந்தான். அவனது கழுத்திலே வெள்ளைக் கோட்டுக்கு வெளியே வடம் போலத் தொங்கிய பத்துப் பவுண் தங்கச் சங்கிலி பக்கவாட்டில் அசைந்து பளபளத்துக் கொண்டிருந்தது.

                லிவர்பூல் நகர எல்லைக்குள் கார் சென்றதும் வீதிகளிலே, தான் வசிக்கும் நியூஹம் பறோவில் உள்ளது போலப் பெருமளவு வேற்று நாட்டவர்களைக்  காணமுடியாதது அமிருக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது. ஒரு தமிழனின் முகச் சாயலையும் அவனால்; அங்கு அடையாளம் காணமுடியவில்லை.

                லிவர்பூல் நகரில் மேர்சி நதிக்கரையில் ஒரு ஹோட்டல் முன் உள்ள கார் நிறுத்தும் பகுதியில் சூட்டி காரை நிறுத்தினான்.

                கில்லாடி காரின் பின்பக்க பூற்றைத் திறந்து ஜேம்ஸம்பொண்ட் பேக்கைப் பார்த்துவிட்டு, “தம்பி அமிர், பேக்கைத் தூக்கிக்கொண்டு வா" என்று கூறிவிட்டு விறுவிறென்று நடந்து சென்று ஹோட்டலின் உட்புகுந்து அறை ஒழுங்கு செய்தான்.

                பேக்கை கையில் பிடித்து ஆட்டியபடி ஹோட்டலின் மூன்றாவது மாடிக்குப் போக லிப்றை நோக்கி நடந்த அமிர் 'என்ன பேக் கனதி இல்லையே? வெறும் பேக் போலஎன்று தனக்குத்தானே கூறியபொழுது, ஒரு மாதத்திற்கு முன்னர் நதியா கூறிய சொற்கள் அவனது காதுகளில் பொலபொலவென விழுந்தன -
'உந்தக் கூட்டத்தை நம்பி உவையோடு வேலைக்குப் போகாதையுங்கோ. உவை செய்கிற தொழில் தெரியுந்தானே? பொலிசிலே பிடிபட நேர்ந்தால் உங்களை மாட்டிவிட்டு உவர் தப்பிவிடுவார். போன வருசம் வரணி சங்கீத வாத்தியார் துரையின் மகன் உவரோடு மிடிள்செக்ஸ் நகருக்குப் போனவர். ஊர் காட்டவென்று கூட்டிப் போனவர். போன பாதையிலே பொலிஸ் மறித்துச் சோதனை செய்த பொழுது டாஸ்போட்டில்இருந்த ஒரு பொதியை எடுத்து விரித்துப் பார்த்தது. பொதியில் என்ன இருந்தது தெரியுமே? ஹெரோயின் போதைப் பொருள். வழமையைப் போல, பொலிஸ் சாரதி ஆசனத்திலே இருந்த பச்சைத் தொப்பியும், பச்சைக் கழுத்துப்பட்டியும் தூயவெள்ளைச் சேட்டும் அணிந்த மூத்தானிடம் அது யாருடைய பொதி என்று கேட்க மூத்தான் என்ன சொன்னவர் தெரியுமோ? முன் ஆசனத்தில் தனக்கு அருகில் இருந்த சங்கீத வாத்தியாரின் மகனைக்காட்டி 'உவருடையதுஎன்றவன். பொலிஸ் மூத்தான் சொன்னதையே நம்பியது. இப்போது அந்தப் பயைன் சிறைக்குள்ளே."

                யாழ்ப்பாணத்தில் புத்தகத்தில் படித்த லிவர்பூலை நேரில் பார்க்கவேண்டும் என்ற அமிரின் பெரும்பசி நதியாவின் எச்சரிக்கையைத் துச்சமாக்கியது.

                அமிர் கில்லாடியின் பின்னே சென்று ஒரு அறைக்குள் புகுந்து அந்த பேக்கை கட்டிலின் மேல் போட்டபின் அவனது கண்கள் அறையைச் சுற்றிப் பார்த்தன.

                ஒரு அழகான மெல்லிய சிவப்புப் பூப் போட்ட வெள்ளைப் படுக்கை விரிப்பால் போர்த்த இரட்டைக் கட்டில், இரண்டு கதிரைகள். முக அலங்காரக் கண்ணாடி மேசை ஒன்று அவனது கண்களை நிறைத்தன. ஒரு வெள்ளைக் கதவு தென்பட்டது. குளியல் அறைக்கு கதவு போட்டிருப்பதை அவன் அவதானித்தான். 

தம்பி டே, இது உன்னுடைய அறை" கில்லாடி சொன்னான்.
ஏன் அண்ணை இன்றைக்கே திரும்பவில்லையா?"
இல்லை. என்னுடைய நண்பர் வரச் சுணங்குமாம். இரவைக்கு நின்றுதான் போகவேண்டும்."
சரி அண்ணை. நீங்கள் எங்கே போகிறீர்கள்?"
பக்கத்திலே வேறு ஒரு அறை எடுத்திருக்கிறோம்" என்று கூறி அறையைவிட்டு வெளியேறிய கில்லாடி திரும்பி,
எங்களுடைய அறையைப் பார்த்துக்கொண்டு வருகிறோம். நீ உந்தப் பேக்கைக் கட்டிலுக்குக் கீழே தள்ளிவிடு" என்றான்.
நான் நகரைச் சுற்றிப் பார்க்கப் போகிறேன்."
இப்ப நேரம். பன்னிரண்டுக்கு அரை மணி;தியாலம் இருக்கிறது. ஆறு மணிக்கு முந்தி வந்துவிடு."
சரி அண்ணை. என்னை விட்டுப்போட்டுப் போகிடாதையுங்கோ."
இடந்தெரியாமல் எங்கேயன் போய் அவதிப்படாதே."
இடந்தெரியாவிட்டால் பொலிசிடம் சொன்னால் கொண்டு வந்துவிடுந்தானே?"
அந்தச் சொற்கள் கில்லாடியின் நெஞ்சில் ஓங்கி ஒரு குத்துவிட்டன.  

                அமிர் அறையைவிட்டு வெளியேறுவதை கில்லாடி பார்த்த வண்ணம் கடுமையாக யோசித்தான். அமிர் பொலிசோடு வந்தால் என்ற எச்சரிக்கை அவனைக் குடைந்தது.

                நகரத்தினைச் சுற்றி வரத்தொடங்கிய அமிரின் வயிறு பிடுங்கியது. நேரம் இரண்டு மணிக்கு மேல் என்பது அதன் அர்த்தம். ஒரு உணவு விடுதியைக் கண்டுபிடித்து வயிறார உண்டபின் மீண்டும் அவன் கால்கள் போனபோக்கில் உலா ஆரம்பித்தன.

                வழியில் ஒரு கடைக்குள் புகுந்து நதியாவுக்கு ஏதாவது ஞாபகப் பொருள் வாங்க அவன் கண்கள் பொருட்களை மேய்ந்தன. மின்னும் சிவப்புக் கண்களையுடைய ஒரு பெட்டைப் புலியின் வெங்கலச் சிலை அவனது கண்களை நிறைத்தது. 'நதியாவுக்கு புலியின் படங்களில் அளவுகடந்த பிரியம். ஏராளமான புலிப் படங்களைச் சேகரித்து அல்பத்தில் வைத்திருக்கிறாள். ஒரு உறுமும் றப்பர் புலி பொம்மையும் வைத்திருக்கிறாள். புலியின் வெங்கலச் சிலையை கொடுத்தால் அவள் மிகவும் சந்தோசப்படுவாள்என்று மனதுள் கூறியபடி அதனை இருபது பவுண் கொடுத்து வாங்கினான்.

                பின்னர் புத்தகத்தில் படித்த புடைவை நெசவாலைகளைத் தேடி அலைந்து திரிந்தான். ஏழு மணி யாகிவிட்டது. அவற்றின் அடையாளத்தையே காணவில்லை. அத்தோடு அவனுக்குத் திக்குத் திசையும் தெரியவில்லை.

                காவலுக்கு நின்ற ஒரு பொலிஸ்காரனை அண்டி உதவிகோரினான். அவன் ஏன் லிவர்பூலுக்கு வந்தாய்? வேறு யார் வந்தார்கள்" என்று பலவாறு விசாரித்துவிட்டு காரில் ஏற்றிச் சென்று ஹோட்டல் வாசலில் இறக்கிவிட்டபின் அமிர் ஹோட்டலுக்குள் நுழைவதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு நின்றான்.

                அமிர் தனது ஹோட்டல் அறையைத் திறந்தான். அங்கு தனது கட்டிலில் கில்லாடி படுத்திருப்பதையும், ஒரு கதிரையில் சூட்டியிருந்து கதைப்பதையும், மதுக் கோப்பைகள் வெறுமையாகக் கிடப்பதையும் கண்டான்.
டே தம்பி அமிர், லிவர்பூல் நகரம் பிடித்துதோ?"
ஓம் அண்ணை. எவ்வளவு பெரிய நகரம்?"
நீ படித்தமாதிரித்தான் இருக்கோ இல்லாவிட்டால் அதுக்கும் மனிதரைப் போல விஞ்ஞான நாகரிகம் பிடிபட்டிட்டுதோ?" கில்லாடி கேட்டான்.
மணத்துக்கும் நான் படித்த லிவர்பூலைக் காணவில்லை அண்ணை."
தம்பி அமிர் உன்னைக் கனநாளா கேட்கவென்று இருந்தனான். உனக்கு இப்ப சமூக உதவிப் பணமும் வருவதில்லை. நீ வேலைக்கும் போவதில்லை. புதிய விலையுயர்ந்த ஜகற்றும் கிட்டடியிலே வாங்கியிருக்கிறாய். நூறு பவுண் வரும். உதுக்கெல்லாம் ஏது பணம்?"

கில்லாடியின் கேள்வி அமிரின் தொண்டைக்குள் ஒரு மரக் கட்டையை ஏற்றியது. உன் பெண்டாட்டி எனக்கு உதவுகிறாள்என்று சொல்ல முடியுமா? என்ன
சொல்வதென்று திருதிருவென்று விழித்தபொழுது ஆபத்தாண்டவர்போல சூட்டி சொன்னான்,
கில்லாடி அண்ணை, நான் நினைக்கிறன் சிநேகிதி ஜீவிதா தம்பிக்கு அள்ளி வீசுகிறா போல. எல்லாம் இனிப்புப் பணியாரம் பண்ணுகிற வேலை, இல்லையே அண்ணை?" அவன் வார்த்தைகள் அவனுக்குப் போதை தலைக்கு ஏறிவிட்டது என்பதையே காட்டியது.
ஓரே வெக்கையாக இருக்கிறது. ஏன்டா பெடியா உந்த நீல ஜகற்றைக் கழற்றி வீசன்?" கில்லாடி சொன்னான்.
அப்பொழுது அமிர் தான் ஜகற்றுள் மறைத்துக்கொண்டு வந்த எலெக்ரோனிப் பொருள் உரிய இடத்தில் இருகிறதா என்று தடவிப் பார்த்துவிட்டு, “என்ன கில்லாடி அண்ணே, எப்ப வீட்டுக்குத் திரும்புகிற உத்தேசம்?" என்று கேட்டுவிட்டு மின்சார வெளிச்சத்தில் உச்சி பளபளத்த கில்லாடியின் அடிமண்டையை நிறைத்த கத்தை மயிர்த் தலையைப் பார்த்தான். 

டே தம்பி அமிர் என்னடா இப்ப அவசரம்? என்ன, பெட்டையின் ஞாபகம் வந்துவிட்டதோ?" என்று கில்லாடி கிண்டலாகக் கேட்டு விட்டு போதையில் ஒரு வெருளிச் சிரிப்புச் சிரித்தான். அவன் பெட்டை என்று சொன்னது ஜீவிதாவை. அச் சொல்லைக் கேட்டதும் அமிரின் மனக் கண்ணில் ஜீவிதா தனது தலையை வெட்டி நெஞ்சில் படர்ந்த கருங்கூந்தலை முதுகுப் பக்கம் வீசிய கையோடு, நதியா துள்ளி நடக்க அவளது போனி ரெயில்குதிக்கும் மையல் காட்சிகள் மாறிமாறி மின்வெட்டின. அதை அவன் காட்டிக்கொள்ளாது,
அவசரம் இல்லை. சும்மா கேட்டனான். சொல்லுங்கோ அண்ணை எப்போ புறப்படுகிறோம்?" என்றான்.
நாங்கள் தேடி வந்த ஆள் எங்கோ வெளியே போய்விட்டான்;. வந்த பிறகுதான் திரும்ப வேண்டும். நாளைக்கு காலையில் தான் திரும்பலாம் போலவிருக்கிறது. அதுவும் நிட்சயமில்லை"; என்று கில்லாடி கூறிவிட்டு, அமிர் வந்த சமயம் விட்ட இடத்தில் கதையைத் தொடங்குவதற்காக கோட்டான் சூட்டியைப் பார்த்து,

வட இந்தியாவிலே உத்தர பிரதேசத்தில் டேராடன் இராணுவ பயிற்சிக் கேம்பில் பயிற்சி எடுத்த காலத்திலிருந்து கோட்டான் இயக்க இரண்டாவது தலைவன் மாணிக்கனை உனக்குத்  தெரியுமோ?" என்று கில்லாடி கேட்டான்.
ஓம். அவனுக்கு என்னிலே பூரண நம்பிக்கை. அதுதான் என்னைத் தன் உதவியாளாக வைத்திருந்தவன்."
                சூட்டி சொன்னது காதினுள் முழுவதும் நுழைய முன்னரே கில்லாடி அயர்ந்து தூங்கிவிட்டான்.
சூட்டி அண்ணை உங்களுக்கு மாணிக்கனை நல்லாகத் தெரியுமே? அவர் கோட்டான் இயக்கத்திலே பெரிய ஆளெல்லே, இல்லையே?" அமிர் அவசரமாகக் கேட்டான்.
டே தம்பி இந்தச் சூட்டியைப் பற்றி அந்த மாணிக்கனைக் கேட்டால் சொல்லுவான்."
என்ன சொல்லுவான,; சூட்டி அண்ணை?"
எத்தனை பேருக்கு மாணிக்கனோடு சேர்ந்து மண்டையிலே போட்டனான் என்று."
மெய்தானே?"
ஓ. கோட்டான் சூட்டி என்ற பெயரைக் கேட்டால் வவுனியா நடுங்கும் பெடியா. தடித்த பூனாக்கள்கூட என்னைக் கண்டால் தோளாலே சால்வை எடுத்தவை. எல்லோரும் ஐயா என்றுதான் என்னை அழைக்கிறவை. தம்பி டே வெறியிலே புசத்துகிறேன் என்று நினைக்காதே." இவ்வாறு தன்னுடைய கோட்டான் இயக்க கால வீரதீரச் செயல்களை விளம்பரம் செய்ய சூட்டி ஆரம்பித்தான். சுய விளம்பரம் செய்ய இலவச வாய்ப்புக் கிடைத்தால் யார்தான் விடுவார்கள்?
அமிர் கையைத் தனது நீல ஜகற்றுப் பைக்குள் செலுத்தி அந்த எலெக்ரோனிக் கருவியை ஓடவைத்துவிட்டு,
அண்ணை சூட்டி, ஏன் அண்ணை உங்களின் இயக்கத்தைக் கோட்டான் இயக்கம் என்று சொல்கிறது?" என்ற ஒரு கேள்வியைக் கேட்டு வாயைக் கிழறினான்.
தம்பி அமிர், உது அனேகம் பேருக்குத் தெரியாது. ஆந்தையைத்தான் கூகை என்று சொல்கிறது. கூகையைத்தான் கோட்டான் என்று சொல்கிறது. விளங்குதோ?"
ஓம் அண்ணை. பெரிய வட்டக் கண். எங்கள் வீட்டுக் கோடியிலுள்ள மஞ்சளுணா மரத்தில் சிலதடவைகள் பார்த்து இருக்கிறேன்."
கோட்டான் எந்தப் பறவையையோ மிருகத்தையோ வேட்டையாடினாலும் அப்படியே முழுதாய் விழுங்கிவிடும். எலும்பு, தோல், நகம், பல்லு, மயிர் ஊத்தை கீத்தை எல்லாத்தையும் அப்பிடியே விழுங்கி இருந்த இடத்தின் அடையாளமும் இல்லாமல் செய்துவிடும். அப்படித்தான் எங்கள் கோட்டான் இயக்கமும்.  எவனையாவது தீர்த்துக்கட்ட வேண்டும் என்றால் பிறகு அவனின் புடுக்கு மயிரைக்கூடக் காணமுடியாது. அதனாலேதான் கோட்டான் இயக்கமென்று பெயர்." அவனது சொற் பிரயோகம் அவனுக்குப் போதை தலைக் கேறிவிட்டது என்பதையே மீண்டும் பிரசாரித்தது.
எனக்கு இன்றைக்குத்தான் உது தெரியும். என்ன பொருத்த மான பெயர். சொல்லுங்கோ அண்ணை. வேறேதோ சொல்ல வந்தீங்கள்." அமிருக்கு அவன் போதையிலே இருக்கிறான் புசத்துவான் என்பது நன்கு புரிந்திருந்தது.

டே தம்பி வவுனியாவிலே மல்லிகை மாளிகை’, ‘லக்கி ஹோம்கேள்விப்பட்டனியோ?"
ஓ கேள்விப்பட்டனான் அண்ணை."
'அம்னெஸ்ரி இன்ரனாசனல் சஞ்சிகையிலேயே மல்லிகை மாளிகை, லக்கி ஹோம் பற்றி நிரம்ப வந்திருக்கிறது, படிக்கேலையோ?"
இல்லை அண்ணை." படித்தும் ஏன் மறைக்கிறான்?
கேளடா பெடியா, எத்தனை பேரை, சிங்களவனை இல்லை எல்லாம் ரத்தத்தின் ரத்தங்களை, தொப்புள் கொடி உறவுகளை - வவுனியாவிலே இருக்கிறவர்களை மடடுமல்ல, வன்னியிலே இருந்து வவுனியாவுக்கு வருகிறவர்கள், யாழ்ப்பாணத்திலே இருந்து தாண்டிக்குளம் வழியாகக் கொழும்புக்குப் போகிறவர்கள், கொழும்பிலே இருந்து வவுனியாவுக்கு வருகிறவர்கள், இவை பசையுள்ளவை என்றால் போதும் கடத்திப்போய்காசு கேட்போம். தந்தால் சரி. இல்லா விட்டால் லக்கி ஹோம் அல்லது மல்லிகை மாளிகையில் வைத்து - வைத்து என்ன செய்கிறனாங்கள் தெரியுமே?"
தெரியாது. என்ன செய்கிறனீங்கள்?"
கத்தக் கத்த திருவிழாத்தான்." அமிருக்கு அது புரிந்தும் புரியாதவன் போல,
அதென்ன அண்ணை திருவிழா?" என்றான்.
சித்திரவதை தெரியுமே? நாங்கள் எல்லாம் புதுமுறை."
அதென்ன புது முறை?"
ஒன்றுக்கும் மசியேலே என்றால் அரம் போல நீளக் கம்பி வைத்திருக்கிறம்."
என்னத்துக்கு? அதாலே அடிக்கிறனீங்களோ?"
இல்லையெடா பெடியா. பிடிக்கிற ஆளைப் பத்தங்குல அகல வாங்கிலே நிர்வாணமாகக் குப்புறக் கிடத்தி கைகளையும் கால்களையும் பலகையின் கீழ் மடக்கிக் கட்டுவம். பிறகு மூலத்துக்குள்ளே அந்த அரக் கம்பியை தள்ளுவம். முடிவிலே கத்தக் கத்த சப்பல் சாப்பாடு கொடுத்து ஆளிருந்த இடமே தெரியாமல் பண்ணிவிடுவோம்."

மை டியர் டார்லிங், எணை என்;டை சின்ன வடிவு, தூரத் தூரப் போகாதையெணை" என்ற கில்லாடியின் வாய் புசத்தலைக் கேட்டு அமிரும் சூட்டியும் அவனைப் பார்த்தனர். அவன் சிவப்புப் பூப்போட்ட வெள்ளைப் போர்வைக்குள் நல்ல நித்திரை.
சூட்டி அண்ணை. அவர் மனுசியின் நினைவிலே மிதக்கிறார். அவர் இபN;பா இங்கே இல்லை. ஈஸ்ற்ஹம் நகரம் போய்விட்டார். நீங்கள் சொல்லுங்கோ அண்ணை." போதையிலிருந்த கோட்டான் சூட்டியை புசத்தவைக்க ஏன் அமிர்  அக்கறைப்படுகிறான் என்பது சூட்டிக்குப் பிடிபடவில்லை. அவன் தனது இயக்க கால வீரதீரச் செயல்களை அவிழ்க்கத் தொடங்கினான்.

டே தம்பி. கோட்டான் இயக்கத்தில் மேலே இருந்த தலைப் போராளிகள் நல்லாய்ச் சனங்களிடம் அடித்துக் கொண்டுபோய் - அதாவது முட்டைவரி தேங்காய் வரி என்று வாங்கி - அது மட்டுமில்லை லொறிக்காரர் ஒவ்வொருவரிடமும் 15,000, 20,000 ரூபா என்றும், பசையுள்ளவர்களைக் கடத்தி லட்சக்கணக்கிலேயும் பிடுங்கிச் சேர்த்த பணத்தோடு இயக்கத்தைவிட்டுக் கம்பி நீட்டி - கொஞ்சப்பேர் கொழும்பிலே பெரிய பெரிய வியாபாரம் செய்கிறார்கள்."
அண்ணை நீங்க சும்மா கதைக்குச் சொல்கிறீர்கள், இல்லையே?"
சத்தியமா உண்மை. கொழும்பிலே ஒருவர் புத்தகம் அடிக்கிற பிறெஸ் வைத்து நடத்துகிறார்;, இன்னொருவர் ஹோட்டல் வைதிருக்கிறார், ஓரு மீசைக்காரன் கொம்மியூனிகேசன் சென்ரர்வைத்து உழைக்கிறார் - இந்தியாவிலே இரண்டு சகோதரர் பெரிய புடவைக் கடை வைத்து ஓஹோவென்று வியாபாரம் நடக்கிறதுஏன் லண்டனிலே குறைவோ? இயக்கங்களிலே அடித்த போராளிகள் பெரிய பெரிய தொழில் பண்ணுகிறார்கள்- றெஸ்ரோறன்ட், வீடியோக் கடை." இப்படிக்கூறிவிட்டுக் கோட்டான் சூட்டி, கதிரையைவிட்டு எழுந்து மீண்டும் ஒரு சுற்று பிரெண்டி பருகத் தொடங்கினான்.

                அச்சமயம் எழுந்த அமிர் மேசைக் கண்ணாடியைப் பார்த்து நடு வகிடு எடுத்துத் தலைமுடியைச் சீவி அழகு பார்த்தபின் பழையபடி கதிரையில் இருந்து சூட்டியிடம் மீண்டும் மர்மங்களை உருவத்; தொடங்கினான்.

கேட்கிறேன் என்று கோவியாதே சூட்டி அண்ணை. நீங்கள் சனத்திடம் காசு பணம் பிடுங்கேலையோ?" இவ்வாறு கேட்டபின் அமிருக்கு உள்ளுரப் பயமாக இருந்தது. தலையை நிமிர்த்தி மேலே பிரகாசித்த மின்சாரக் குமிழ்களைப் பார்த்தான். அவன் நெஞ்சு படக் படக் என்று அடித்தது. ஆனால் அமிர் கேட்டு ஓயமுன்னரே சூட்டி உதடுகளை நாக்கால் வருடிய படி குலைந்து விட்ட போனி ரெயிலைஇறுக்கியபின், இடது குருட்டுக் கண் கறுப்புக் கவசத்தைச் சரிசெய்துவிட்டு கதையை ஆரம்பித்தான்.

கடைசியிலே நானும் காசுபணம் செப்பமாய் அடித்தனான் தம்பி. வவுனியா கூட்டுறவு யூனியன் தலைவர் வீரசிங்கம், வன்னிக் கிளைச் சங்கங்களிலே சேர்த்த காசெல்லாம் - 32 லட்சம் - கொண்டு வந்தவேளை தாண்டிக்குளத்திலே வைத்துப் பிடித்துக்கொண்டு போய் மல்லிகை மாளிகையில் வைத்து நல்ல சித்திரவதை. உவர் மேல்குடி ஆள். மாணிக்கனுக்கு உவையை வதைக்கிறதிலே ஒரு பைத்தியம்."
அப்போ மாணிக்கன்?"
அஞ்சனம் மாணிக்கன் என்றாலே விளங்கும். கில்லாடியின் கூட்டந்தான். சின்ன வித்தியாசம்."
அவர்தான் மனேஜரின் கதையை முடிக்கச் சொன்னவர். முதலிலே கால் விரல்களிலே கட்டித் தலைகீழாகத் தொங்கவிட்டேன். பிறகு படுக்க வைத்து அரக் கம்மியை மூலத்துக் குள்ளே மாணிக்கன் தள்ளினான். பிறகு நான் மணல் நிறைத்த எஸ்லோன் குழாயால் குளறக் குளற அடித்துத்தான் சாகடித்தனான். இப்ப நினைத்தால் ஒருமாதிரி இருக்கிறது" என்று கூறிய சூட்டி ஒரு கோப்பையில் பிரெண்டியை ஊற்றினான்.
பிரேதத்தைக் கொடுத்தனீங்களே?"
பிரேதம் கொடுக்க எங்களுக்கு என்ன விசரே பெடியா? எங்களுக்கு வேறு பிரச்சினை வந்திருக்கும்."
அப்போ என்ன செய்தீர்கள்?" அமிர் கலங்கிய இதயத்தோடு சூட்டானின் ஒற்றைக் கண்ணைப் பார்த்தான்.
வழமையைப் போலத்தான். தலைவர் மாணிக்கன் கட்டளைப்படி பிரேதத்தை ஜீப்பிலே ஏற்றிக் கொண்டுபோய் மடுவுக்குப் போகிற வழியிலே காட்டுக்குள்ளே புதைத்து சருகால் மூடிவிட்டோம்."
சூட்டி அண்ணை, ஒருத்தரும் அந்த மனேஜரைத் தேடி வரவில்லையோ?"
ஏன் வரவில்லை? கடைசியாக வன்னியசிங்கம் பெண்சாதி வந்தவள். எங்கள் கேம்ப் கட்டிட அலுவலகத்துக்கு முன் உள்ள அம்பலவி மாமரத்தின் கீழே விழுந்து புரண்டு கத்தினவள். மாணிக்கன் மனேஜரைக் கைதுசெய்யவில்லை என்று சொன்னார்;."
அவ என்ன செய்தா?"
அவள் போகாமல் புரண்டு புரண்டு கதத்தினாள். தலைவர் மாணிக்கன் கட்டளை போட்டார். நான் துவக்கைக் காட்டி அவளை வெருட்டி தலைமுடியிலே பிடித்துக் கொறகொறவென இழுத்துச் சென்று வீதியிலே உதைத்துத் தள்ளிவிட்டேன்."
அமிருக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. அதனை அவன் சாதுரியமாக மறைத்துக்கொண்டு கேட்டான்.
காசை என்ன செய்தீர்கள்?"
பங்கு போட்டதுதான். அந்தக் காசிலே எனக்குப் பத்து லட்சம். பிறகென்ன முந்திச் சேர்த்த பணம் பதினாறு லட்சம் எல்லாத்தோடும் நானும் முந்தையோர் காட்டிய வழியைப் பின்பற்றி கோட்டான் இயக்கத்துக்கு டாடா காட்டி பாய் சொல்லிப் போட்டு லண்டனுக்குப் பறந்து வந்ததுதான்" என்று கூறிமுடித்த சூட்டியின் கண்கள் திடீரெனக் கோலம் மாறின.

                மேலே சீலிங்கைப் பார்த்தபடி இருந்த சூட்டியின் கண்களில், தான் கடத்தி வந்து காசைப் பறித்துக் கொலை செய்த கூட்டுறுவு யூனியன் தலைவர் வீரசிங்கத்தின் மனைவி மல்லிகை மாளிகைக்கு வந்து தலைவிரி கோலத்தில் கும்பிட்டுக் குழறி விழுந்து புரண்டு போட்ட சாபக் காட்சி அவனை மிரட்டியது.

                சூட்டியின் முகபாவம் அமிரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

                மது போதையில் இருந்த கோட்டான் சூட்டி வலது ஒற்றைக் கண்ணால் அமிரைப்பார்த்தான். அமிர் தலைமுடியைக் கோதியபடி சூட்டியைப் பார்த்து ஏதோ கேட்க விரும்பியவன் வீண் வம்பாகிவிடும’; என்ற அச்சத்தில் குளியல் அறைக்குச் செல்லும் வெள்ளைக் கதவைப் பார்த்துக்கொண்டு இருந்தான். அமிர் ஏதோ கேட்க விரும்புகிறான் என்பது கோட்டான் சூட்டிக்கு விளங்கியது. மீண்டும் ஒரு மிடறு பிரெண்டி பருகிவிட்டு,

ஏன்னடா தம்பி அமிர் ஏதோ கேட்க வாயெடுத்துப் போட்டு நிற்பாட்டிப் போட்டாய். பயப்படாதை பெடியா. முந்திக் கெட்டவன்தான். இப்ப அப்படியில்லை." என்று கூறித் தலையை ஆட்டினான்.

சூட்டி அண்ணை, உவ்வளவு காசையயும் லண்டனுக்கு வரச் செலவழித்த னீங்களோ? இருபத்தாறு லட்சம் ரூபா. நீங்க வந்த காலத்திலே மூன்று நாலு லட்சத்தோடு வந்திருக்கலாமே?" என்று கேட்ட அமிரைப் பார்த்துக் கோட்டான் சூட்டி பலத்துச் சிரித்துவிட்டுச் சொன்னான்.
டே தம்பி, சுன்னாகத்திலே தம்பிக்கு ஒரு லொறி, தங்கச்சிக்குச் சீதணம், வீடு கட்ட அம்மாவுக்கு - எல்லாம் இருபது லட்சம். விளங்குதே?" இப்படிச் சொல்லிவிட்டுக் கோட்டான் சூட்டி வீராப்பாகச் சிரித்தான்.

இந்தப் போலிப் பேராளிகள் தூயவிடுதலை வீரர்களையே கொச்சைப் படுத்துகிறார்கள்என்று அமிர் மனம் நொந்தபடி தனது எலெக்ரோனிக கருவி சரியாக வேலை செய்கிறதா என்று சரி பார்த்தான். 

                திடீரெனக் கில்லாடியின் மோபைல் போன் மணி இசைத்தது. கோட்டான் சூட்டி போனை எடுத்துக் கதைத்துவிட்டு, கில்லாடியை இரு கைகளாலும் உலுப்பி எழுப்பிப்
போனைக் கொடுத்தான். செய்தி கேட்ட கில்லாடி ஒருவித சுணங்கமும் இல்லாமல் சூட்டியையும் அழைத்துக்கொண்டு கதவு வாசலில் உள்ள நடை பாதையில் - மூன்றாம் மாடியில் - நின்று பரபரப்போடு மேர்சி நதியைப் பார்த்தனர். அந்த நதியில் தங்கிநின்ற கடல் வாகனங்களின் மின்னொளி விளக்குள் வானம் தரை இறங்கிவிட்டது போன்ற மயக்கத்தை - அவர்களைப் பின்தொடர்ந்து வந்து அவர்கள் பின்னே நின்ற - அமிருக்கு ஏற்படுத்தின. 

தம்பி டே கதவைப் பூட்டாதே. நாங்கள் சொற்ப வேளையிலே வந்திடுவோம்" என்று கூறியபடி கில்லாடி லிப்ற் பக்கம் நடக்க, சூட்டி அவனைப் பின் தொடர்ந்தான்.


                அமிர் அவர்கள் இருவரையும் ஆச்சிரியத்தோடு நோக்கினான். இருவரும் இரவு பத்து மணிக்கு ஹோட்டலைவிட்டு அவசர அவசரமாக அங்கும் இங்கும் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி பரபரப்போடு வெளியேறுவது அவனுக்கு விசித்திரமாக இருந்தது. மேர்சி நதியில் தரித்துநின்ற ஒரு பெரிய மோட்டார் படகு ஒரு வித்தியாசமான வெளிச்சச் சைகை கொடுத்ததை அவதானித்துவிட்டே இருவரும் தமது போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக வெளியேறுகிறார்கள் என்பது அமிருக்குத் புரியவில்லை. அந்த போதைப் பொருள்தான் இனி அமிரின் வாழ்க்கை வரலாற்றை எழுதப்போகிறது என்பதும் அமிருக்கு அப்பொழுது தெரியாது.

தொடரும்...

No comments:

Post a Comment