Wednesday 26 August 2015

தடுத்தாட்கொள்ளல்



தினேஷின் பத்தாவது பிறந்தநாள். ஏறக்குறைய நூறுபேர் வருகையுடன் ஹோலில் கொண்டாடிக் கொண்டிருந்தான். ஹோலின் முன்பகுதியில் கேக் ஒரு மேசையில் சோடனைகள் புடைசூழ வைக்கப்பட்டிருந்தது. பின்புறத்தில் 'டின்னர்' தயாராகிக் கொண்டிருந்தது.

கேக் வெட்டும் நேரம். மங்களம் அக்கா தலையைச் சிலுப்பியவாறு ஹோலிற்குள் நுழைகின்றார். அவரின் நடைக்கேற்றவாறு கையிலுள்ள 'கான்ட் பாக்' அசைகின்றது. செங்கம்பளம் விரிக்காத தரை மீது சிருங்கார நடை நடந்து பின்புறம் போகின்றார். 'குச்சி' நறுமணம் அவரைப் பின் துரத்துகின்றது.

"சரவணன், ரேவதி எங்கே?" பதட்டமாக நின்றவர்களிடம் கேட்டார். அவர்கள் குசினிப்பக்கம் கையைக் காட்டினார்கள். சரவணன் மகனை ஒரு கையில் பிடித்தபடி, குசினிக்குள் பிஷியாகிப்போன ரேவதியை கேக் வெட்ட அழைத்துக் கொண்டிருந்தான்.
"நீங்கள் கோயில் காசு கட்டிவிட்டீர்களா?" ரேவதியை நோக்கி கேள்விக்கணை தொடுத்தார் மங்களம்.

 "அக்கா... கேக் வெட்ட நேரமாப் போச்சு. வெட்டிப்போட்டு வாறன். எல்லாம் கதைப்பம்."

"இல்லை... இல்லை... நீங்கள் 500 டொலர் தாறதா வாக்குக் கொடுத்திருக்கிறியள்!" மங்களம் அக்கா வாயைச் சுழட்டி பொச்சடிச்சு சொல்லத் தொடங்குவதற்கிடையில் சரவணனும் ரேவதியும் கேக் வைத்திருந்த  மேசைக்குப் போய்விட்டார்கள்.

கேக் வெட்டி, ஹப்பி பேர்த்டே பாடி, படப்பிடிப்புகள் முடிய மீண்டும் சரவணனைப் பிடித்துக் கொண்டார் மங்களம்.

"நான் இஞ்சை வரமுதல் லிஸ்ற் செக் பண்ணினனான். நீங்கள் 200 டொலர் மாத்திரம்தான் குடுத்திருக்கிறியள்."
சலசலப்பு அறிந்து ரேவதியும் அந்த இடத்திற்கு விரைந்தாள். மங்களம் அக்காவை இருவருமாக ஒரே அமுக்காக அமுக்கி குசினிக்குள் கூட்டிச் சென்றார்கள்.

"நான் 500 டொலரையும் எப்பவோ குடுத்திட்டன்" ஆணித்தரமாகச் சொன்னான் சரவணன். பிறந்தநாள்விழாவிற்கு வந்த சிலர் இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றனர்.

"எப்ப கடைசியா குடுத்தனியள்?"

"யூனுக்கு முதலிலை குடுத்திட்டன்."

"அடடா... என்னட்டை மார்ச் மட்டும் குடுத்தவையின்ரை லிஸ்ற்தான் இருக்கு" மழுப்பத் தொடங்கினார் மங்களம்.

"அக்கா...  நீங்கள் எவ்வளவு காசு கோயிலுக்கெண்டு குடுத்தனியள்?"

"நான் ஏன் குடுக்கவேணும்? நான் றஸ்ரி மெம்பரெல்லே! (Trustee member)"

"அக்கா... உங்களை நான் ஒண்டு கேட்கிறன். தற்சமயம் அந்தக்காசை நான் குடுத்திருக்காட்டி இப்ப இந்தப் பிறந்தநாள்விழாவைக் கொண்டாட விடமாட்டியளோ?" கேட்டு முடிப்பதற்குள் அவரைக் காணவில்லை. மங்களம் அக்கா ஒருநாளுமே தான் தொடங்கிற விஷயத்திற்கு மங்களம் பாடினதா சரித்திரம் இல்லை. அவர் சோதியில் (சாப்பாட்டு வரிசையில்) கலந்துவிட்டார்.

மகனுக்கு ஒவ்வொருநாளும் உறக்கத்திற்குப் போகும் முன்னர் ஒரு கதை சொல்ல வேண்டும். இன்று சுந்தரமூர்த்தி நாயனாரின் தடுத்தாட்கொண்ட கதை. ஆண்டவன் அடியவர்களை தடுத்து ஆட்கொள்ளுவான். நம்மவர்கள் அடியவர்களை தடுத்து ஆள் கொல்லுவார்கள்.


1 comment: