காவலூர் ராசதுரை
கிழவி செத்தது விசேஷமில்லை; சாகு முன்னர் நடந்த சிறு சம்பவம்தான் விசேஷம்.
செத்த வீட்டுக்கு வந்திருப்பவர்கள் எல்லோரும் அந்தச் சம்பவத்தைப் பற்றியே பேசுகிறார்கள்.
சவத்துக்குத் தலைமாட்டில், கால் நீட்டியிருந்து, சிற்றுரலில் வெற்றிலை துவைத்து வாய்க்குள் அடக்கிக் கொண்டு, மாணிக்கம் பாட்டி, அப்பொழுதுதான் வந்த செல்லம்மாவுக்கு, அந்தச் சம்பவத்தைப் பற்றிச் சொல்லுகிறாள்.
கிழவியின் தூரத்துப் பேர்த்தி புஷ்பம். அந்தச் சம்பவத்தை நினைக்க நினைக்க அவளுக்கு மனசு ஆறவில்லை. பந்தலுக்குள் உட்கார்ந்திருக்கும் செல்லம்மாவின் புருஷனும் அந்தக் கதையைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறான்.
“எப்பவும் இப்படித்தான், ஆரு செத்தாலும் சாகு முந்தி விசேஷமான காரியம் ஏதும் நடக்கும்.”
சட்டம்பியார் தத்துவம் பேசுகிறார்,
°
கரம்பன் செவத்தியார் கோயிலடி வாசிகளுக்கு அந்தோக் கிழவி ஒரு ஸ்தாபனம் - கோயில், சிற்றமார், மடம், கூப்பன் கடை மாதிரி.
ஏரம்பு பரம்பரை, யார் கூட்டம் ? ஞானப்பிரகாசம் வீட்டுக்காரர் எந்தப் பகுதி?