ஒரு நீண்ட பாலம். அது மிகவும் அகலமானது. அந்தப்பாலத்தின்கீழ் பெரிய ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. பாலத்தின் தொடக்கத்தையும் முடிவையும் அறியமுடியாதபடி இரண்டு எல்லைகளையும் கருமுகில் மறைத்துக்கொண்டிருக்கிறது.
பாலத்தினூடாக சனங்கள் நிறையப்பேர் போய்க்கொண்டிருக்கிறார்கள். சிலர் நடந்துகொண்டும், சிலர் ஓடிக்கொண்டும், துள்ளி விளையாடிக்கொண்டும், வேடிக்கை பார்த்துக்கொண்டும் போவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அவர்களில் ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், முதியவர்கள், ஏழைகள், பணக்காரர்கள், வெவ்வேறு சமுதாயத்தினர், வேறுவேறு இனத்தவர்கள் என பலதரப்பட்ட மக்கள் அப்பாலத்தின் மேல் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
பாலத்தின் தொடக்கத்திலுள்ள கருமுகிலுக்கூடாக யார் தோன்றுவார்கள், எத்தனை பேர் தோன்றுவார்கள் என்று எவருக்கும் தெரியாது. அதேபோல, பாலத்தின் மறுபக்கத்திலும் கருமுகில் மறைத்துக்கொண்டிருக்கிறபடியால், பாலத்தின் முடிவு எங்கே, நாம் எவ்வளவு தூரம் போகவேண்டியிருக்கிறது, எமது பயணம் எப்போது முடியும், நாம் அடுத்த கரைக்காவது எப்போது போய்ச்சேருவோம், அடுத்த கரையில் என்னதான் இருக்கிறதோ, நாம் எதற்காக இந்தப் பாலத்தின்மேல் போகிறோம், எங்கிருந்து புறப்பட்டோம், என்ற விபரங்கள் எதுவுமே எவருக்கும் தெரியாது. சும்மா போகிறோம், அவ்வளவுதான். மிகுதியெல்லாம் ஒரே மர்மம்.
ஆனால், சனங்களில் எவராவது அவற்றைப் பொருட்படுத்துவதாகத் தெரிய வில்லை. நடப்பவரும், ஓடுபவரும், கும்மாளமடிப்பவரும், மற்றவரை இடித்துத்தள்ளி விட்டு ஓடுபவரும், குழுக்களாகச் சேர்ந்து சண்டையிட்டுக்கொண்டு போகிறவர்களும், கைகால் ஊனமுற்றவர்களும், கவலைதோய்ந்த முகத்துடன் போகிறவர்களும், கட்டி அணைத்தபடி இன்பம் துய்த்துக்கொண்டு போகிற சோடிகளும், எல்லோரும் தொடர்ந்து போய்க்கொண்டேயிருக்கிறார்கள்.
சாரிசாரியாக தொடக்கத்திலுள்ள கருமுகிலுக்கூடாக மக்கள் தோன்றுவார்கள். ஆனால், பாலத்தின் முடிவை அவர்கள் எவரும் சென்றடைவதாகத் தெரியவில்லை. ஏனெனில், பாலத்தில் நிறைய ஓட்டைகள் அமைந்திருக்கின்றன. அவை கண்ணுக்குப் புலப்படா. ஓட்டைகள் எங்கெங்கு இருக்கின்றன என்று எவருக்குமே தெரியாது, போய்க் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், திடீர்திடீரென்று சிலர் காணாமற் போகிறார்கள். காரணம், அவர்கள் அந்த ஓட்டைகளினூடாக கீழே ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் விழுந்துவிடுகிறார்கள். ஆற்றில் விழுந்தால் மீட்சியில்லை, அவ்வளவுதான்.
ஓட்டைகள் எங்கெங்கே இருக்கின்றன என்று பார்வைக்குத் தெரியாதல்லவா!
யார் யார் ஓட்டைகளினூடாக விழக்கூடும், எப்போது விழுவார்கள் என்று எவரும் அறியமுடியாத நிலையில்கூட, தொடர்ந்து போய்க்கொண்டேயிருக்கிறார்கள்.
தொடக்கம் தெரியாது கருமுகிலினூடாகத் தோன்றுகிறார்கள், போகும் வழியில் ஓட்டைகளினூடாக விழுந்து மறைந்துவிடுகிறார்கள், என்பதெல்லாவற்றையும் மக்கள் தெரிந்திருந்தும் அவர்கள் நெரிபட்டுக்கொண்டும், போட்டிபோட்டுக்கொண்டும், சிலர் கவலையற்றும், சிலர் கவலையோடும், சிலர் குதூகலமாகவும் போய்க்கொண்டே யிருக்கிறார்கள். முன்னுக்குப் போய் மறைந்தவர்களைப் பார்த்த அனுபவத்தைக் கொண்டு பாலத்தில் ஓட்டைகளுண்டு, அவற்றினூடாக விழவேண்டிவரும் அது நிச்சயம் என்று தெரிந்திருந்தும் அதுபற்றிய கவலையே இல்லாமல், பாலத்தின் மறுஎல்லைக்குப் போய்ச்சேருவோம் என்ற அசாத்தியத் துணிவுடன் போய்க்கொண்டேயிருக்கிறார்கள்.
இந்தப் பயணத்துக்கு முடிவேயில்லை. இது காலங்காலமாக, பல யுகங்களாக தொடர்ந்து நடந்துகொண்டேயிருக்கும் நிகழ்ச்சியாகும். இது அவசியம் நடந்தே ஆகவேண்டியது உலகநியதி.
இந்த மனிதரைப்பற்றி, கருமுகிலுக்கூடாக அவர்களை அனுப்பிவைத்த கடவுள்தான் அறிவார். ஏனெனில், அவர் திட்டமிட்டபடிதான் பாலமும், அதில் ஓட்டைகளும், கீழே ஆறும், அமைந்திருக்கின்றன. பயணிகள் அதை அறிந்ததில்லை. அறிய எவருக்கும் விருப்பமும் இல்லை. அது அவர்களின் விதி.
ஏகாங்கி
No comments:
Post a Comment