Thursday, 27 February 2020

மனிதன் கடவுளைப் படைத்தான் ! - சிசு.நாகேந்திரன்



பகுதி (2)

இஸ்டதெய்வ வழிபாடு
இவ்வுலகில் மானிடனாகப் பிறந்த எவரும் தமது வாழ்க்கையில் துன்பம், கஸ்டம், துக்கம் முதலியவற்றை அனுபவிக்க விரும்புவதில்லை. மனிதர்கள் தமது வாழ்நாள் முழுவதும் சுமுகமான, இன்பமான வாழ்க்கையையே எதிர்பார்க்கிறார்கள்.

அத்தோடு, மறுபிறவியில் நம்பிக்கை ஊன்றியிருக்கும் இந்துமதம் போன்ற சமயங்களைச்    சார்ந்தவர்கள் தங்களுக்கு இப்பிறப்பில்மட்டுமல்ல, வரும் மறுபிறவிகளிலும்கூட நோய்நொடியற்ற சுபீட்சமான வாழ்வு கிடைக்கவேண்டுமென்பதற்காகவே  இப்பிறப்பில் தீவினைகள், பாபச்செயல்கள் முதலியவற்றைத் தவிர்க்கின்றார்கள்.

சமயகுரவர்கள் காட்டிய வாழ்க்கைமுறைகளைக் கடைப்பிடித்து, தாங்கள் கடைத்தேற   வழிதேடுகிறார்கள்.  அதற்கென தங்கள் இஸ்டதெய்வத்தைத் தினமும் வேண்டிக்கொள்கிறார்கள்.

இந்தஇஸ்டதெய்வம்என்றால் என்ன?
நிற்கும்போதும், நடக்கும்போதும், உட்காரும்போதும் அடிக்கடி எமது இஸ்டதெய்வத்தை நாம் மனதால் நினைக்கிறோம், வந்திக்கிறோம். சில சந்தர்ப்பங்களில் வாய்விட்டுக்கூட அழைக்கிறோம். 

சிவனே, பிள்ளையாரே, முருகா, நாராயணா, ஈஸ்வரா, விஷ்;ணுப்பெருமானே, இறைவா, பார்வதித்தாயே, தாயே பராசக்தி, யேசுவே, புத்தபகவானே, கடவுளே என்று பலதரப்பட்ட பெயர்களை எமது மனம் நினைக்கிறது, வாயும் சொல்லுகிறது.

ஆனால், அப்படித் தெய்வத்தை விளித்தபின் அடுத்ததாக மனதில் எழுகின்ற - வாய் சொல்கின்ற - சொற்கள் என்ன என்பதுதான் பிரதானம். அப்படி நாம் கூவி அழைத்த தெய்வத்திடம் என்ன சொல்ல முனைகிறோம், அவரிடம்
என்னத்தைக் கேட்கிறோம் என்பதுதான் முக்கியம்.

நாம் கடவுளைக் கும்பிடும்பொழுது அவரைப் போற்றுவதுடன், வாழ்த்துவதுடன்மட்டும் விட்டுவிடுவதில்லை.

அதற்கு அடுத்தது என்ன?

அடுத்தாற்போல அவரிடம் ஏதாவது இறைஞ்சிக் கேட்கிறோமே, அதுதான் என்ன?

அடுத்து எமது வாயில் வரும் சொற்கள் எவை?

சிலர் தெய்வத்தைத் தொடர்ந்து போற்றிக்கொண்டே இருப்பார்கள்.
வேறும் சிலர்எனக்கு அது வேணும், இது வேணும்என்று உலகாயத விடயங்களைக் கேட்டு உருகுவார்கள்.

உலகம் சம்பந்தமான விடயங்களை நாம் அவரிடம் கேட்கவேண்டிய அவசியமில்லையே!, அவற்றைக் கேட்கலாகாதல்லவா!.

தன் பிள்ளைக்கு என்ன கொடுக்கவேணும், ஏதுசெய்யவேணுமென்று பெற்ற அன்னைக்குத் தெரியாதா, என்ன?

ஏனெனில், நாம் முற்பிறவிகளிற் செய்துகொண்ட வினைகளுக்கேற்பவே இப்பிறவியில்  நமக்கு இன்பதுன்பங்கள், சுகபோகங்கள், ~;டங்கள், கவலைகள் யாவும் அமைகின்றன. அவற்றைத் தெய்வத்திடம் கூறி முறையிட்டு, அவரை வணங்கி, அவரைப் போற்றி ஆராதித்து, நாம் அவரிடம் கையேந்தி இரங்கி அழும்போது எம்முடனிருக்கும் நான், எனது என்னும் ஆணவம் குறைகிறது, அவ்வளவுதான்.
அதுதான் யதார்த்தம்.

எம்மால் ஒன்றுமே ஆகாது, எல்லாம் அவரின் சித்தப்படியே நடக்கின்றது. ஆகவே நாம் வீணே அலட்டிக்கொள்வதில் பலனில்லை. எமது வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் நமது முந்திய கர்மவினைக்கேற்ப ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது.  ஆகவே, தெய்வத்திடம் நாம் மன்றாடும்பொழுதும் அவரிடம் யாசிக்கும்பொழுதும் நமது சிறுமையை நாம் உணருகிறோம். எமது இயலாத்தன்மையை நாம் ஏற்றுக்கொள்ளுகிறோம்.  ஆனால் பிரார்த்தனையால் என்ன பலன் கிடைக்கிறது?

அக்கஸ்டங்களையும் கவலைகளையும் தாங்கிக்கொள்ளக்கூடிய மனநிலையை நாம் வணங்கும் தெய்வம் நமக்கு அருளும் என்ற திடநம்பிக்கை உண்டாகிறது.

 எல்லாம் முடிந்த விடயம் - யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகள் அடிக்கடி சொல்லுவார்.

 இப்பிறப்பில் எமக்கு ஏற்படும் கஸ்டங்கள், உத்தரிப்புகளைக் களையும்படி கடவுளை  வேண்டி, இரங்கி அழுதால், அதன் முடிவில் எமது மனதில் ஒரு சாந்தி  ஏற்படுகின்றதை அவதானிக்கலாம்.

எமது துன்பங்களைத் தெய்வத்திடம் முறையிட்டுவிட்டோம், இனித் தெய்வம் பார்த்துக்  கொள்ளும் என்று எமது மனதில் ஒரு திருப்தி, ஒரு அமைதி ஏற்படுகிறது. கடவுளின் அருளினால் அந்தத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தி எமது உள்ளத்தில் தோன்றுகிறது.அதுதான் நமக்கு முக்கியம்;  அதுதான் கடவுள் வழிபாட்டிலுள்ள சூட்சுமம்.எமது செயலால், வார்த்தைகளால் நாமே நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளுகிறோம்.

நாம் ஒருவருக்கு நன்மை செய்யும்பொழுது எமது மனதில் ஒரு திருப்தி ஏற்படுகிறது. அதையும் மீறி, ‘நான்தான் அந்த நன்மையைச் செய்தேன்என்ற எண்ணம் மனதில்  தலைகாட்டினால் அதைவிட்ட மடைமையான எண்ணம் வேறொன்றில்லை.
 
பஞ்சபூதங்களும் சக்தியும்
காலப்போக்கில், தான்தான் பஞ்சபூதங்களையும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறேன்  என்று மனிதன் இறுமாந்திருக்கிறான்.  ஆனால் உண்மை அதற்கு மாறானது.அவற்றைக் கட்டுப்படுத்த எந்த மனிதனாலும் முடியாது. பஞ்சபூதங்களில் எவற்றையாவது மனிதனின் ஆளுமைக்குள் அடக்கி வைத்திருக்க  விஞ்ஞானத்தால்கூட முடியாது. நெருப்பு, நீர், மண், காற்று, ஆகாயம் இவை கட்டுமீறித் தொழிற்பட்டால் மனிதனின்  விஞ்ஞான அறிவுகூட அவற்றைக் கட்டுப்படுத்தப் போதாது உதாரணமாககாட்டுத்தீ, சூறாவளி, எரிமலை, வெள்ளம், ஆகாயப் பெருவெளி, நிலநடுக்கம், கடல் கொந்தளிப்பு முதலிய இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும்போது மனிதன் என்னசெய்வதென்று தெரியாமல் தடுமாறுகிறான்.

பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றும் அடங்கி ஒடுங்கி மனிதனுக்கு உதவும்வரை, அவனுக்குக்  கட்டுப்படும்வரை, அவன் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுகிறான். ஆனால் அவை ஒரு சிறிதளவு மிஞ்சிவிட்டால் போதும், மனிதன் அவற்றின் சக்திக்கு நின்றுபிடிக்கமாட்டான்.

உதாரணமாக, காற்று, நெருப்பு, நீர், நிலம், ஆகாயம் முதலிய பூதங்கள் அளவிற்குமீறிச் செயல்படத் தொடங்கினால் மனிதனால் அவற்றைக் கட்டுப்படுத்தமுடியாது.

பிரபஞ்சமானது மேற்கூறிய ஐந்து பூதங்களினால்மட்டுமே சிருட்டிக்கப்பட்டதாகும். அவை யாவும் சடப்பொருட்கள் :  தாங்களாகவே இயங்கமாட்டா.  அவற்றை இயக்குவதும் கட்டுப்படுத்தி வைத்திருப்பதும் சக்திதான்.சக்தியின்றேல் சிவமில்லைஎன்ற முதுமொழி மிகவும் ஆழமான கருத்தைக் கொண்டது.

ஆனால், உயிர் (ஆன்மா) என்பது இந்தப் பஞ்சபூதங்களுக்கும் அப்பாற்பட்டது. உயிரானது தன்னிறைவானது, தனிமையானது, அழிவற்றது. அது கடவுளின் சக்தியின் ஒரு புறம்பான அம்சம். கடவுள் எனும் சோதியில் உயிர் ஒரு பொறி. பஞ்சபூதம் ஒவ்வொன்றிற்கும் தனித்தனிப் பணிகளுண்டு. சகல பொருள்களும் சீவராசிகளும் இப்பஞ்சபூதங்களினால்தான் உண்டாக்கப்பட்டவை.
உதாரணமாக, மண் (பூமி) என்னும்பொழுது உலகம், நட்சத்திரங்கள், கோள்கள், கட்டிடங்கள், பொருட்கள், சீவராசிகள் சகலதும் - அதாவது திண்மப்பொருட்கள் யாவும் - மண் என்ற பதத்திற்குள் அடங்கும்.

அவ்வண்ணமே, நீர்;, நெருப்பு, ஆகாயம், காற்று. எந்தவொரு மூலப்பொருள்களிலிருந்து வந்தோமோ அந்த மூலப்பொருள்களில் போய் ஒடுங்குவதற்காகவே இந்த உயிரும் உடம்பும் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது  என்கிறார்கள் ஞானிகள்.

ஒலி, ஒளி, மின்சாரம், புவியீர்ப்பு, வெப்பம், குளிர், வேகம், விறைப்பு, நிசப்தம்,  நுண்கலை முதலிய சக்திகளையும், சூரியமண்டலம், பூமியின் சுழற்சி, பஞ்சபூதங்களின் இயக்கம், மனிதனதும் மற்றும் உயிரினங்களதும் உடலுறுப்புகளின் இயக்கம், தாவரங்களின் இயக்கம், முதலிய தானாக உணர்ந்துகொள்ளக்கூடிய இயக்கங்களை மனிதன் புரிந்துகொள்கிறான். ஆனால், அவற்றிற்கு அப்பாற்பட்ட சூட்சுமமான இயக்கங்கள் அவனுக்கு புரியாத புதிராகவே இன்னும் இருக்கின்றன.

இயற்கையானதுஅதாவது பிரபஞ்சம் முழுவதும் - பஞ்சபூதங்களினால்தான் ஆனது. அந்தப் பஞ்சபூதங்களையும் இயக்குவது சக்தி. சக்தியானது பல வடிவங்களைக்கொண்டு செயற்படும்.சகல சீவராசிகளின் உடல்களையும் இயக்குவிப்பது சக்திதான். சக்திதான் பஞ்சபூதங்களையும் கருவியாகக்கொண்டு  தனது செயலாற்றுகின்றது.

தொடரும்....

1 comment:

  1. இயக்குவிப்பது சக்திதான் | உம்பில் இருக்கும் சத்துதான் | சத்திதான்
    கட்டுரை நன்று

    ReplyDelete