Sunday, 2 February 2020

என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்


“டொக்ரர்…. இன்னுமொரு ஹொஸ்பிற்றலுக்குப் போய், செக் பண்ணிப் பார்த்தால் என்ன?” எதிரே இருந்த குடும்ப வைத்தியர் கருணாகரனிடம் கேட்டுவிட்டு, தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தாள் கமலா. கொஞ்ச நாட்களாக அவள் மனம் பதை பதைக்கின்றது. சரியாக உறக்கம் கொண்டு நாளாகிவிட்டன. திடீர் திடீரென உறக்கம் கலைந்து, எதையோ பறிகொடுத்தது போல யோசனைகள். வாழ்வின் சமநிலை குலைந்து மனம் அந்தரித்தபடி இருக்கின்றது.

அவுஸ்திரேலியாவிற்கு வந்த நாள் தொடக்கம், வைத்தியர் கருணாகரன் தான் இவர்களின் குடும்ப வைத்தியர். அவளுக்குப் பக்கத்தில் பன்னிரண்டு வயதில் மகளும், எட்டு வயதில் மகனும் இருந்தார்கள். இருவரும் தமது கைகளை முழங்காலுக்கு மேல் படரவிட்டபடி நிறுதிட்டமாக அமர்ந்திருந்தார்கள்.

வைத்தியர் கருணாகரன் நெடிதுயர்ந்த தோற்றம் கொண்டவர். மருத்துவத்துறையில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர். சற்றே வயிறு துருத்திக் கொண்டிருந்தாலும் கம்பீரத்திற்குக் குறைவில்லை. குழந்தைகள் இருவரும் தமது கழுத்தை உயர்த்தி வலிக்கும் வண்ணம், வைத்தியர் முகத்தைப் பார்த்தபடி இருந்தார்கள். வைத்தியர், கமலாவின் கேள்விக்கு பதில் தராமல், புத்தகமொன்றை எடுத்து பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“ரவுன்லை நீங்கள் போனதுதான் நல்ல ஹொஸ்பிற்றல். அவர்கள் என்ன சொல்கின்றார்கள்? திரும்பவும் எனக்குச் சொல்லுங்கள்!” புத்தகத்தினின்றும் கண்ணை விலத்தாமல் கேட்டார் கருணாகரன்.

“இதுவரை மூன்று தடவைகள் போய் விட்டேன் டொக்ரர்! எல்லா ரெஸ்றுகளும் எடுத்துவிட்டார்கள். ஒன்றும் இல்லை என்றுதான் சொல்கின்றார்கள். ஏதாவது உடம்பில் வித்தியாசம் இருந்தால் வரச் சொல்லியிருக்கின்றார்கள்.

எனக்குப் பயமாக இருக்கின்றது டொக்ரர். எனக்குக் காச்சலோ தலையிடியோ இல்லை. காலின் அடிப்பாதங்களிலிருந்து கிழம்பும் வலி, உடம்புக்குள்ளாலை ஊடுருவித் தலை மட்டும் போகுது. அப்ப என்ரை உடம்பு முழுக்க பச்சை பச்சையாக நோகின்றது. இது வித்தியாசம் இல்லையா? செக்கண்ட் ஒப்பீனியன் எடுத்துப் பார்த்தால் என்ன டொக்ரர்?”

“சரி… இன்னுமொரு ஹொஸ்பிற்றலுக்கு எழுதித் தாறன். டொக்ரர் எட்வேர்ட் ஜென்னர் என்ற ஒரு ஸ்பெஷலிஸ்ற். அவரும் கெட்டிக்காரர் தான்” சொல்லியபடி கமலாவின் இரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை, நிறை என்பவற்றை அளந்து எழுதினார்.

“உங்க கணவர் இன்னமும் பேர்த்தில் தான் வேலை செய்கின்றாரா?”

“ஓம் டொக்ரர். அதுதான் ஒரே கவலையா இருக்கு. மெல்பேர்ணுக்கு மாதத்துக்கு ஒரு தடவைதான் வருவார். அவசரத்துக்கு ஒரு உதவி இல்லை. எனக்கு ஏதேனும் நடந்தா, பிள்ளைகளை யார் பாக்கிறது? அம்மா அப்பா, மாமா மாமி எல்லாரும் என்னோடைதான் இருக்கினம்” கண் கலங்கினாள் கமலா.

வைத்தியர் முகத்தைத் தாழ்த்தி, கண்ணை சற்றே இடுக்கி பிள்ளைகளைப் பார்த்தார்.

“மகளின்ரை பியானோ கிளாஸ் இப்ப எப்பிடிப் போகுது?”

“நீங்கள் சொன்னமாதிரி இன்னொரு ரீச்சரிட்டை மாத்தி விட்டுப் பாத்தோம். இப்ப நல்லாச் செய்கின்றாள் டொக்ரர்.”

“ஓகோ…. அதுதான் ஒரு ஹொஸ்பிற்றல் சரியில்லையெண்டு இன்னொரு ஹொஸ்பிற்றல் மாத்தித் தரச் சொல்லிக் கேக்கிறியளோ?” வைத்தியர் கருணாகரன் உதட்டுக்குள் சிரித்தார். கமலா சிரிப்பை வரவழைத்துப் பார்த்தாள். ஆனால் அது நடக்கிற காரியம் இல்லை. பேய் அறைந்தவர்களைப் போல வெளிறிய தோற்றத்தில் அவள் இருந்தாள்.

முன்பொரு தடவை வைத்தியரைச் சந்தித்த பொழுது - கமலா தன் மகள் பியானோ படிப்பதில் விருப்பம் இருப்பதாகவும், ஆனால் சரிவர அவளால் கற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் சொல்லியிருந்தாள்.

“சில நேரங்களிலை ரீச்சர் பெரிய படிப்பெல்லாம் படிச்சிருப்பார். ஆனால் அவருக்குக் கற்பிக்கும் திறன் இருக்காது. இன்னும் சில ரீச்சர்மார் சுமாராகப் படிச்சிருப்பார்கள். ஆனால் பிள்ளைகளுக்கு புரியும் வண்ணம் படிப்பித்து விடுவார்கள். அதாலை நீங்கள் ஒருக்கா ரீச்சரை மாத்திப் பாருங்கோ” என ஆலோசனை கூறியிருந்தார் கருணாகரன். அது கமலாவைப் பொறுத்தவரை வெற்றியளித்தும் இருந்தது.

“உங்களுக்கு ஒரு வருத்தமும் இல்லை. எல்லாம் ஒரு மனப் பிராந்தி தான். ஒண்டுக்கும் யோசிக்காதீர்கள். எதற்கும் ஒருதடவை டொக்ரர் எட்வேர்ட் ஜென்னரைச் சந்தியுங்கள்.”

வைத்தியர் எட்வேர்ட் ஜென்னருக்குக் கடிதம் ஒன்று எழுதிக் குடுத்தார் கருணாகரன்.

v

சில நாட்களின் பின்னர் வைத்திய நிபுணர் எட்வேர்ட் ஜென்னரை அவரது கிளினிக்கில் சந்தித்தாள் கமலா. இம்முறை பிள்ளைகளை அவள் அழைத்துச் செல்லவில்லை. ஒருநாள் முழுவதும் அவர்களைத் தன்னுடன் வைத்திருப்பதால் அவர்களின் படிப்பும் பாழாகி விடும், தன்னுடைய வருத்தத்தையிட்டு அவர்களும் கவலை கொள்ளக்கூடும் என அவள்  நினைத்திருந்தாள்.

எட்வேர்ட் ஜென்னர் ஒடிந்து விழும் தோற்றத்தில் இருந்தார். பார்த்த மாத்திரத்தில் அவரைத்தான் நோயாளி என்று சொல்வார்கள். குள்ள உருவம், மெல்லிய தேகம். காற்றாகப் பறக்கின்றார். கிளினிக்கில் பலரும் சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஓடியபடி இருந்தார்கள்.

“என்னுடன் மூன்று மாணவ டாக்டர்கள் வேலை செய்கின்றார்கள். உங்களை நான் பரீட்சிக்கும்போது அவர்கள் உடன் இருப்பதை நீங்கள் விரும்புகின்றீர்களா?” என எட்வேர்ட் ஜென்னர் கமலாவிடம் கேட்டார். அவள் அதற்கு மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

அவளுக்கு தனது உடலை எவர் பரிசோதித்தாலும் சரி, பாரதூரமாக உடம்பில் எதுவும் இல்லை என்று கூறிவிட்டால் போதுமானது. அவர்கள் சொல்லும் ஒரு சொல்லில் தான் அவள் எதிர்காலமே இருந்தது.

ஜொனதான், லோறா, ஜெசிக்கா என்ற மூன்று மாணவ டாக்டர்களை கமலாவிற்கு அறிமுகம் செய்தார் எட்வேர்ட் ஜென்னர்.

“நீங்கள் இவர்களுடன் கதைத்துக் கொண்டிருங்கள். நான் சற்று நேரத்தில் வந்துவிடுவேன்” சொல்லிவிட்டு அவசர அவசரமாகக் கிழம்பிவிட்டார் எட்வேர்ட் ஜென்னர்.

அந்த மூவரும் கமலாவின் எடை, உயரம், குருதி அழுத்தம் போன்றவற்றை அளந்து எழுதினார்கள். வேறும் சில பரிசோதனைகளை அவள் உடம்பில் மேற்கொண்டார்கள். கமலாவின் வருத்தம் பற்றி ஆளாளுக்குக் கேள்வி மேல் கேள்விகள் கேட்டுக் குறிப்பெழுதத் தொடங்கிவிட்டார்கள். கமலா பதில் சொல்லிக் களைத்துவிட்டாள். எல்லோருக்கும் முதலில் இருந்து சொல்லியே மூச்சிரைத்தது அவளுக்கு. அவர்களில் விடுத்து விடுத்துக் கேள்விகள் கேட்கும் லோறாவை கமலாவிற்கு அறவே பிடிக்கவில்லை. கொஞ்சம் தற்பெருமைக்காரி போல் இருப்பாளோ என நினைத்துக் கொண்டாள். அவர்களுக்கு அவர்கள் படிப்பு முக்கியம். கமலாவிற்கு அதுவே வாழ்க்கைப் பிரச்சினை.

மூன்று மாணவர்களும் வெவ்வேறு விசித்திரப் பண்புகளைக் கொண்டவர்கள். ஜொனதானுக்கு பணம் தான் முக்கியம் - வைத்தியத்தை வியாபாரமாக மாற்றும் எண்ணம் கொண்டவன். ஜெசிக்கா சேவை மனப்பாங்கு உடையவள் – எங்கு என்றாலும் வேலை செய்வதற்கு தயாரானவள். லோறா எப்பொழுதுமே புதிது புதிதாகக் கண்டு பிடிக்கவேண்டும், தன்னை எல்லோரும் புகழ வேண்டும் – நகரப்புறத்தில் தான் வேலை செய்யவேண்டும் என்பதில் குறியாக இருப்பவள்.

சற்று நேரத்தில் எட்வேர்ட் ஜென்னர் தனது உவார்ட் விசிற்றை முடித்துவிட்டு வந்தார். முதலில் இருந்து கமலாவிடம் ஆரம்பித்தார். இவர்களுக்கு வருத்தம் பற்றிச் சொல்லிச் சொல்லியே தனது வருத்தம் மேலும் அதிகரித்துவிட்டதாக உணர்ந்தாள் கமலா. நிபுணர் வாயைத் திறக்கும் போது அந்த மூன்று மாணவ டாக்டர்களும் வாயை மூடிக் கொண்டார்கள். மூச்சுக் கூட விடவில்லை. லோறா மாத்திரம் துடித்துப் பதைத்து தன்னை அடக்கிக் கொண்டிருந்தாள்.

கமலாவுடன் கதைத்து முடித்துக் கொண்ட பின்னர், அவளை வெளியே உள்ள ஆசனத்தில் போய் அமருமாறு சொன்னார் எட்வேர்ட் ஜென்னர். தனது மூன்று மாணவ வைத்தியர்களுடன் மந்திராலோசனை நடத்தினார். தனது கண்டுபிடிப்பை மாணவ வைத்தியர்களிடம் தெரிவித்தார். கமலாவிற்கு ஒரு வருத்தமும் இல்லை என்பதுதான் அது. அப்போது ஜெசிக்கா குறுக்கிட்டாள். தனது அவதானிப்பு ஒன்றை பவ்வியமாக அவரிடம் எடுத்துச் சொன்னாள். அதையே தான் தானும் நினைத்திருந்ததாக ஒத்தூதினாள் லோறா. ஜெசிக்காவின் அவதானிப்பை உற்றுக் கேட்ட எட்வேர்ட் ஜென்னர் உஷாரானார். அவளின் திறமையை மெச்சினார். மேலும் அது பற்றி விரிவாக நான்கு பேரும் விவாதித்தார்கள். கமலாவின் உடலில் ஏதோ ஒரு பிரச்சினை இருப்பது உறுதியாயிற்று.

“கமலா…. உங்களுக்கு மேலும் சில பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கு. இதிலே இருந்து இவர்களுடன் கதைத்துக் கொண்டிருங்கள். நான் ஏற்பாடு செய்துவிட்டு வருகின்றேன்” எட்வேர்ட் ஜென்னர் சொல்லிவிட்டு தனது நண்பரான இன்னொரு ஸ்பெஷலிஸ்றிடம் செக்கண்ட் ஒப்பீனியன் கேட்பதற்காகப் புறப்பட்டார். அவர் மனதில் ஏதோ ஒன்று சுழன்றோடியது. கொடிய வருத்தம் ஒன்று கமலாவின் உடலினுள் ஒழிந்திருக்கலாம் என நினைக்கும்போது அவர் வயிற்றில் அமிலமாக எரிந்தது.

எட்வேர்ட் ஜென்னர் போய்விட்டார் என்பதை எட்டிப் பார்த்து உறுதி செய்துவிட்டு லோறா கமலாவிற்குக் கிட்ட நெருங்கினாள்.

“இதற்கு முன்னர் யார் யாரையெல்லாம் நீங்கள் பார்த்திருக்கின்றீர்கள்? என்னென்ன மருந்துகள் எல்லாம் எடுத்திருக்கின்றீர்கள்?”

கமலா தயங்கியபடியே தன் வரலாற்றைச் சொன்னாள். காய்ச்சல்கார நோயாயின் மீது வைக்கப்பட்ட உடல்வெப்பமானியின் பாதரச நிரல் கிடுகிடுவென்று மேலேறிச் செல்வது போல, தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் அவள் உடல் பதறியது.

“பார்த்தீர்களா? உங்கள் குடும்ப வைத்தியராலும், ரவுண் ஹொஸ்பிற்றல் ஸ்பெஷலிற் எவராலையும் கண்டுபிடிக்க முடியாததை நாம் கண்டு பிடித்துவிட்டோம். எமது கிளினிக் தான் இங்கே மிகவும் நல்லது. புகழ் வாய்ந்தது” மகிழ்ச்சிப் பிரவாகத்தில் சொல்லிக்கொண்டே போனாள் லோறா. கமலாவின் முகம் கருகருவெனக் கறுத்து, உதடுகள் வெண்ணிறமாகி துடிக்கத் தொடங்கியது. தனக்கு ஏதோ பாரதூரமான வருத்தம் இருக்கின்றது என்பதை நினைத்து அழத் தொடங்கினாள்.

`ஒரு நோயாளியின் வருத்தத்தைக் கண்டுபிடித்துவிட்டதில் இவ்வளவு மகிழ்ச்சி கொள்கின்றார்களே” என கமலாவின் மனம் வருந்தியது.

ஜெஷிக்கா லோறாவின் கைகளைப் பிடித்து நெரித்தாள். ஆனால் அவள் கமலாவிடம் கேள்வி கேட்பதை நிறுத்துவதாக இல்லை.

எட்வேர்ட் ஜென்னர் எல்லா ஒழுங்குகளையும் செய்துவிட்டு விரைந்து வந்து கொண்டிருந்தார். நோயாளி இருந்த அறைக்குள் ஒரே குதூகலம் கண்டு, அப்படியே வாசலில் நின்றுகொண்டார்.

“ஜெஷிக்கா… எங்கே உன் கையைத் தூக்கு!”

அவள் ஒன்றும் பேசாமல் மெளனமாக நின்றாள்.

“ஜொனத்தான்… நீ தூக்கு…”

ஜொனத்தான் தன் வலது கையை உயர்த்தி,  ஐந்து விரல்களையும் அகல விரித்தான். லோறா அவனது விரல்களுடன், தன் விரல்களைக் குத்தி ஓசை எழும்பும் வண்ணாம் அடித்தாள்.

“ஜே…. நாம் கண்டுபிடித்துவிட்டோம். ஜே!! ஜொனத்தான் இன்று மாலை நான் உனக்கு விருந்தே தருகின்றேன்” உலகத்தை மறந்து உரத்துக் கத்தினாள் லோறா. எட்வேர்ட் ஜென்னருக்கு அந்தக் காட்சி விசித்திரமாக இருந்தது. பாம்புகள் இரண்டு படம் எடுத்து ஆடுவதைப் போல் இருந்தது.

’இந்தப் பழக்கவழக்கங்கள் அவுஸ்திரேலியாக் கலாச்சாரத்தில் இல்லையே! பல்லினக் கலாச்சாரம் இப்படிப்பட்ட பண்புடையவர்களையும் உள்வாங்கிக் கொண்டதோ? ஒன்றில் லோறா இந்த நாட்டிற்கு இடையில் வந்தவளாக இருக்க வேண்டும். அல்லது அவளது பெற்றோர்களும் காரணமாக இருக்கலாம்’ எட்வேர்ட் ஜென்னர் லோறாவை உற்று நோக்கினார்.

இப்போ யாருக்கு தான் முதலில் வைத்தியம் பார்ப்பது? மனநோயாளியான லோறாவுக்கா, அல்லது கமலாவுக்கா?

கமலா, எட்வேர்ட் ஜென்னர் வந்ததும் தெரியாமல் மேசை மீது கவிழ்ந்து குலுங்கிக் குலுங்கி அழுதபடி இருந்தாள்.

எட்வேர்ட் ஜென்னர் மூன்று மாணவ வைத்தியர்களையும் உள்ளே வரும்படி கூப்பிட்டார். அவர்கள் உள்ளே போனதும் கமலாவிடம் வந்தார்.


“நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு பாரதூரமாக எதுவும் இல்லை. ஒரு சந்தேகம் தான். சில ரெஸ்ற்றுகள் எடுத்துப் பார்த்தால் நல்லது. நல்லது நடக்கும் என நம்புவோம். இதிலே இருந்து கொள்ளுங்கள்.”

உள்ளே சென்ற எட்வேர்ட் ஜென்னர் ஒரு கடதாசிப் பேப்பரில் விறுவிறெண்டு எதையோ கிறுக்கினார். மடித்து ஒரு என்வலப்பிற்குள் வைத்தார். ஒட்டவில்லை.

“நாளை உங்கள் டிப்பாற்மென்ற் ஹெட்டைச் சந்தியுங்கள்” கோபமாக லோறாவிடம் அதை நீட்டினார். லோறா கெஞ்சினாள், தன்னை மன்னித்து விடும்படி மன்றாடினாள். எதுவும் எட்வேர்ட் ஜென்னரிடம் பலிக்கவில்லை. வெளியேற வேண்டிய சூழ்நிலை. போய்விட்டாள். ஜொனத்தானும் ஜெஷிக்காவும் மெளனமாக ஒருவரையொருவர் பார்த்தபடி இருந்தார்கள்.

எட்வேர்ட் ஜென்னர் கமலாவிற்கு ஆறுதல் சொல்ல விரும்பினார். அறையை விட்டு வெளியே வந்து பார்த்தபோது அங்கே கமலா இருக்கவில்லை.

’என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லாமல் சொல்லியது அவள் இருந்த இருக்கை.

நன்றி : தினக்குரல் (19.01.2020)

No comments:

Post a Comment