Tuesday, 11 February 2020

ஒட்டமோ ஓட்டம்



அந்தத் தொழில்நுட்பக் கல்லூரியின்  இரண்டு வாசல்களும், இரண்டு வீதிகளைத் தொட்டு நின்றன. பிரதான வாசலின் முன்னால் வந்து நின்ற பேரூந்தில் இருந்து – சாயினியும், அவளது மூத்த அண்ணன் கிருபனும், அம்மாவும் அப்பாவும் இறங்கிக் கொண்டனர்.

சாயினி - கறுப்பு என்றாலும் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு. பளீரிட்டு மார்புவரை கீழ் இறங்கி நிற்கும் `பொனி ரெயில்’. நெற்றியிலே மரூன் கலரில் துலங்கும் ஒரு அரசமிலை ஸ்ரிக்கர் பொட்டு. இரண்டு பெரிய வட்டங்கள் கொண்ட மூக்குக்கண்ணாடி. பள்ளிக்கு உரித்தான எடுப்பான ஆடை.

சாயினிக்கு இன்று கடைசிப் பரீட்சை. அவள் மனதில் பதட்டம். பரீட்சை எழுதுவதில் அவளுக்கு என்றுமே பதட்டம் இருந்ததில்லை. இன்று அவளது வாழ்க்கைக்கும் ஒரு பரீட்சை.

அவள் பிரதான வாசலுக்குள்ளால் உள்ளே சென்றதும் அம்மாவும் அண்ணனும் அங்கே நின்று கொண்டார்கள். அப்பா பொடி நடையாக ஒரு சுற்றுச் சுற்றி 15 நிமிடங்களின் பின்னர் கல்லூரியின் பின்புற வாசலை அடைந்தார். அங்கேயே நின்று கொண்டார். அவர்கள் எல்லோரினது கண்களும் தொழில்நுட்பக்கல்லூரிக்கு வருவோர் போவோர் மீது பார்வையை எறிந்தபடி இருந்தன. இன்று ஏதாவது நடக்கலாம் என்பது அவர்களின் எண்ணம்.

கல்லூரிக்கு நடுவிலே ஒரு சிறு கேற் இருப்பதை அவர்கள் அறியமாட்டார்கள். கிருபன் அங்கே முன்னர் படித்திருந்தும், அப்படியொரு கேற் இருப்பதை மறந்துவிட்டான்.

அந்த சிறு கேற்றின் வழியே – வாட்டசாட்டமான ஒரு இளைஞன் தனது சட்டையின் மேல் இருக்கும் தொப்பியினால் தனது முகத்தை மூடியபடியே உள் நுழைந்தான்.

வெளியே கடும் பனி வீசிக்கொண்டிருந்தது. மரங்களிலிருந்து உதிர்ந்த சருகுகள் காற்றினால் அங்கு இங்குமாக அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. மழை வேறு தூறிக் கொண்டிருந்தது.

சாயினி படிப்பிலே வலு கெட்டிக்காரி. வினாத்தாளை அரைமணி நேரத்திற்கு முன்னதாகவே செய்து முடித்துவிட்டாள்.

”சேர்! நான் விடையெழுதி முடித்துவிட்டேன். விடைத்தாள்களைத் தரலாமா?” என்று மேற்பார்வையாளரிடம் கேட்டாள்.

“இன்னும் 15 நிமிடங்கள் பொறுத்திருக்க வேண்டும்” என்றார் அவர்.

அவள் மனம் திகிலடையத் தொடங்கியது. கண்ணாடி ஜன்னலிற்குள்ளால் வெளியே நோட்டமிட்டாள். அவளையே பார்த்தபடி, ஒரு மரத்தின் கீழே தனது முகத்தை மூடியபடி நின்றான் நிக்கலஸ்.

இன்றைக்கு நடக்கப்போவதை நினைக்க அவள் மனம் கலவரமடைந்தது. எப்படி இதற்கு நான் உடன் பட்டேன்? இதன் பின்விளைவுகள் என்ன என்று சிந்திக்கத் தொடங்கினாள். மேற்பார்வையாளர் தானாகவே வந்து அவளிடமிருந்த விடைத்தாள்களை வாங்கிக் கொண்டார். அவள் விறுவிறெண்டு பரீட்சை மண்டபத்தை விட்டு வெளியேற, வாசலில் அவளை மடக்கிப் பிடித்தான் நிக்கலஸ்.

“எங்கே கன்யா” சாயினி நிக்கலஷிடம் கேட்டாள்.

“காரிற்குள் இருக்கின்றாள். சீக்கிரம் போயாக வேண்டும்.” நிக்கலஸ் பதில் தந்தான்.

கார் ஒரு மரநிழலின் கீழ் பதுங்கி நின்றது. கன்யா, றைவர் சீற்றில் ஆணாட்டம் உடையில் கம்பீரமாக இருந்தாள். மஞ்சள் நிறம். சற்றே குவிந்த சப்பைமூக்கு. குள்ள உருவம். பூத்துக் குலுங்கும் ஆடையுடன் பூலோக ரம்பையைப் போல் புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு காரினின்றும் கீழ் இறங்கி நின்றாள்.

சாயினியின் தாய்மொழி தமிழ். கன்யாவின் மொழியே தாய் தான்.

சாயினி ஓடிச் சென்று அவளைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.

“தாமதிக்கக் கூடாது. றியிஸ்ரர் ஒஃபிஷில் நண்பர்கள் காத்துக்கொண்டு நிற்கின்றார்கள்.” சொல்லியபடியே காரின் பூற்லிட்டைத் திறந்து, தயாராகவிருந்த இரண்டு மாலைகளை எடுத்துவந்தான் நிக்கலஸ். ஒன்றை சாயினியிடமும், மற்றதை கன்யாவிடமும் குடுத்தான். இருவரும் ஆளை ஆள் பார்த்தபடியே மாலைகளை மாற்றிக் கொண்டனர். பின் ஆசனங்களில் பாய்ந்து ஏற, நிக்கலஸ் காரை வேகமாக ஓட்டத் தொடங்கினான்.

நன்றி : வெற்றிமணி (மாசி 2020)






No comments:

Post a Comment