Saturday 29 February 2020

தூரத்தில் தெரிகிறது - சிசு.நாகேந்திரன்



                இயமன் தூரத்திலிருந்துகொண்டே என்மேல் கண் வைத்துவிட்டான்.  ஆனால் அந்தத் தூரம்தான் எவ்வளவு என்று எனக்குத் தெரியவில்லை. தனது நாட்குறிப்பை எடுத்து அடுத்து எந்தெந்தத் திகதிகளில் யார்யாரின் முறை வருகிறது என்று புரட்டிப்புரட்டிப் பார்ப்பது தெரிகிறது.

                உயிரினங்கள் இந்தப் பூமியிலிருந்தாலென்ன, வேறெந்தக் கோளங் களில் இருந்தாலென்ன, அவனுக்கு அது பொருட்டல்ல.  நியமித்த நாளில் குறித்த நேரத்தில் வாழ்நாள் முடிந்த உயிர்களைக் கவரவேண்டியது அவனது கடமை.  அவன் தனது கடமையிலிருந்து தவறியதாக நாம் கேள்விப்பட்டதில்லை. சாவித்திரியின் அழுத்தத்தின் நிமித்தம் சத்தியவானின் உயிரைத் திருப்பிக்கொடுத்தது ஒரு கதைதானே!
                ஆகவே, நான் இந்த நாட்டைவிட்டு வேறெந்த நாட்டுக்குப் போய் ஒளிந்துகொண்டாலும் இயமன் விடப்போகிறதில்லை.  கடைசிமுறையாக, உடம்பு தள்ளாடும் பருவம் வருமுன்னர், எங்காவது வெளிநாட்டுக்குப் போய் உற்றவர்களைப் பார்க்க மனம் ஏவுகிறது.  அதற்குக் காரணம், சிறுசிறு வருத்தங்கள் அடிக்கடி வருவதும் தொந்தரவு கொடுப்பதுமாக இருக்கின்றன.
                வெளிநாடென்னும்போது ஜேர்மனியைத்தான் மனது முன்னணியில் வைக்கின்றது.  அங்குதான் என்னை விளங்கிய ஒரு உயிர், என் விருப்பு வெறுப்பகளை விளங்கிக்கொள்ளும் ஒரு உயிர் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்.  ஆயினும் வெளிநாட்டில் தங்கியிருக்கும்பொழுது இயமதர்மராஜன் என் உயிரைக் கவ்விக்கொள்வானாகில்,  அதுவரையும் என்னைப் பார்த்தவர்களுக்கு, அங்கு எனது உடம்பை எரிப்பவர்களுக்கு, மிகவும் கஸ்டமும் பணச்செலவும் ஏற்படுத்துவேன் என்னும் மனப்பயம் பயணத்தைப் பின்னடையச் செய்கிறது. 

No comments:

Post a Comment