நாம் நிறைவேற்றமுடியாத ஆசைகள்,
எண்ணங்கள், கற்பனைகள்தாம் பின்னர் கனவில் தோன்றும்
என்று சொல்வார்கள். அவர்கள்
கூறுவதில் உண்மை இல்லாமலில்லை.
கனவோ கற்பனையோ என்று கூற முடியாத
அளவுக்கு எனக்கு ஒரு அனுபவம்
உண்டாயிற்று.
வெளி முற்றத்தில் மல்லாக்கப்
படுத்திருக்கிறேன். நித்திரை
கொள்ளவில்லை. மூளை
வேகமாக வேலைசெய்தது. கற்பனை
கரை புரண்டு ஓடிற்று. என்னுடைய உடலை அப்படியே கிடக்க
விட்டு விட்டு, நான் (சூக்குமதேகம்
- உயிர்) மேல்நோக்கிக் கிளம்பிவிட்டேன். மிக
வேகமாக, சத்தத்திலும்பார்க்க வேகமாக, மேல்நோக்கிப் போய்க்கொண்
டிருக்கிறேன்.
ஒரு நூறு கிலோமீற்றரளவு
உயரம் போனதும் எனது விசையைக்
குறைத்துவிட்டு, நிற்பாட்டி, காற்றில் மிதந்தபடியே நின்றபடி பூமியைப் பார்க்கிறேன். பூமி தட்டையாகவே தெரிகிறது.
ஆனால் விளிம்புகள்மட்டும் வளைவாக இருப்பது தென்படுகிறது. தொடுவானம்
முழுவதும் பரந்துகிடப்பதைப் ஒரே பார்வையில் பார்க்கக்கூடியதாக
இருக்கிறது. உயரமான
பெரிய கட்டிடங்கள் தெரிகின்றன, ஆனால் நெருப்புப்பெட்டிகளைப் பிரித்துப் பிரித்து
கோலம்போட்டு அடுக்கினது போலத் தெரிகின்றன.
தெருக்கள் நெருப்புக்குச்சுகள்போல நீண்டும் வளைந்தும், குறுக்கும் மறுக்கும் போய்க்கொண்டிருக்கின்றன. கடும்பச்சை, இளம் பச்சையாகத் தென்படுவது
என்னவென்று பார்த்தேன், அவை காடுகள். வீடுகள்
தாயக்கட்டைகள்போலத் தோற்றமளித்தன. ஆனால் மனிதர் நடமாட்டத்தைக்
காணோம். கடும்
பிரகாசமாயிருந்த சூரியவெளிச்சத்தைக் கையால் மறைத்துக்கொண்டு கூர்ந்து
பார்த்தேன். சிற்றெறும்புகள்
அசைவது போலவும், தீப்பெட்டி அளவிலுள்ள மைதானங்களில் அவர்கள் ஓடியாடி விளையாடுவதுமாக
மனிதர்கள் கண்ணுக்குத் தென்பட்டார்கள். ஆறுகள் பாம்புகள்போல வளைந்தும்
நெளிந்தும் வெயிலுக்குப் பளபளப்பாகத் தெரிந்தன. இடைக்கிடை அட்டைகள் ஊர்ந்து போவனபோலத் தென்பட்டன தொடரூந்துகள். தும்பிகள்
மரங்களுக்கிடையில் பறந்து பறந்து திரிவனபோன்று
ஆகாயவிமானங்கள் பறப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.
பொதுவாகப் பார்க்கும்பொழுது மேற்சொன்னவற்றைவிட பூமியில் வேறு சலனங்கள் எதுவும்
இல்லாமல் அமைதியாக இருப்பது போன்ற ஒரு தோற்றம். ஆயினும்,
மிகவும் அவதானமாகக் கவனித்துப் பார்த்தால், இடைக்கிடை தீக்குச்சியைப் பற்ற வைத்ததுபோல் தீச்சுவாலைகள்
கிளம்புவதும், ‘தும்பிகள்’ பறந்தபிறகு
கட்டிடங்கள் நொருங்கி விழுவதும், எறும்புகள் போல மனிதர்கள் கூட்டமாக
ஓடுவதும், பின்னர் காணாமற்போவதுமாக கன
காட்சிகளைக் கண்டேன். பிள்ளைகள்
கடுதாசியில் செய்து தண்ணீரில் விடும்
தோணிகள்போல கப்பல்கள் அசைந்து கொண்டிருந்தன. நீலச்சேலை
விரித்தாற்போலக் கடல் தோற்றமளித்தது. ஆனால்
அலைகள் தென்படவில்லை. பெரிய
மரங்களாக இருக்கலாம், புயற்காற்றுக்கு அசைவது தெரிந்தது.
எங்கள் சூரியனைப்போல் ஆயிரக்கணக்கான
சூரியன்கள் விண்வெளியில் இருக்கின்றன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அவை ஒவ்வொன்றையும் சுற்றி, நமது சூரியனைக்
கோள்கள் சுற்றிவருவதுபோல, பல கோள்கள் சுற்றுகின்றனவாம். இவற்றைவிட,
நட்சத்திரங்கள் கோடிக்கணக்கிலுண்டு. அவற்றின்
பருமன் சூரியனைவிடப் பெரியனவாம். ஆகவே,
நாம் நமது கற்பனையைத் திறந்து
பார்க்கவேண்டியது, பிரபஞ்சம் எத்துணைப் பெரியது என்பதை.
அந்தப் பிரமாண்டமான பிரபஞ்சத்தில்,
மனிதனின் உருவம் எந்தளவு? மனிதனின் விருப்பு, வெறுப்பு, கோபம், துக்கம் - இந்தக்
குணங்கள் எங்கே? நினைத்துப் பார்க்கக்கூட
முடியவில்லையல்லவா!
No comments:
Post a Comment