உண்மையில் நேற்றைய தினமே குழந்தை பிறந்திருக்க வேண்டும். ஒரு
நாள் பிந்தி விட்டது. இரவு பகலாக விழித்திருந்ததில் செல்வாவிற்கும் அசதியாக
இருந்தது. ஹொஸ்பிற்றலுக்குப் போவதற்கு ஆயத்தமாகக் காரை வீட்டு முகப்பினிலே
நிறுத்தியிருந்தான் அவன்.
"சாந்தினி வெளிக்கிடுவம்
என்ன!"
சாந்தினி பயந்தபடியே படுக்கைக்கும் ரொயிலற்றுக்குமாக, தனது பென்னாம் பெரிய
வயித்தையும் தூக்கிக் கொண்டு நடை பயின்று கொண்டிருந்தாள். தேவைப்படும் சாமான்களைக்
காரினுள் அடுக்கிக் கொண்டிருந்த செல்வாவிற்கு, அவளைப் பார்க்கக் கவலையாக இருந்தது. சாந்தினிக்கு இது முதற் பிரசவம்.
அடுத்த 'யுனிட்'டில்
வசிக்கும் மாட்ரா கதவைத் தட்டினாள். நிலமையை விசாரித்தாள். சாந்தினியின் வயிற்றை
மெதுவாகத் தடவி விட்டு சின்னக் குழந்தையைப் போலச் சிரித்தாள். அவளின் கனிவான
பேச்சு சாந்தினிக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்தது. தாங்கள் 'ஹமில்டன்' போவதாகவும்
டேவிட்டின் மகளின் வீட்டில் இரண்டொரு நாட்கள் தங்கிவிட்டு வருவதாகவும் கூறிச்
சென்றாள். டேவிட்டும் அவனது மனைவி மாட்ராவும் எப்போதாவது இப்படிப் போய்
தங்கிவிட்டு வருவார்கள். ஹமில்டன் ஆக்லாந்திலிருந்து மூன்று மணித்தியாலம் கார்
ஓடும் தூரத்திலுள்ளது.
இவர்களின் வீடு பிரதான சாலையிலிருந்து கீழே இறங்கிச் செல்லும்
சிறு பாதையில் இருக்கின்றது. ஒருபுறத்தே மூன்று யுனிட்டுகள் இருந்தன. அதில்
முதலாவதில் இவர்களும், அடுத்ததில்
டேவிட்டும், மற்றதில்
அடிக்கடி மாறிச் செல்லும் மனிதர்களுமாக இருந்தார்கள்.
சிறு பாதையின் எதிர்ப்புறத்தில் இருந்த வீட்டிலிருந்து கிறேஷ்
இவர்களின் வீட்டையே பார்த்தபடி நின்றிருந்தாள். அவளது கையில் இருந்த அன்றைய
தினசரிப் பேப்பரான 'நியுசிலாண்ட்
ஹெரால்ட்' இவர்களின்
திசை நோக்கிப் படபடத்தது. ஏதாவது எமது நாடு சம்பந்தமான தகவல்கள் வந்தால் கொண்டு
வந்து காட்டுவாள். அடிக்கடி வருவது நாட்டுப் பிரச்சினைதான். எழுபத்தெட்டு வயதைத்
தாண்டிவிட்ட அவள் இன்னமும் துடிப்புடனே
காணப்படுகின்றாள். இவர்களுக்குக் கரைச்சல் குடுக்கக் கூடாது என நினைத்தாளோ
தெரியவில்லை, மாட்ராவுடன் கதைத்துவிட்டுத் திரும்பிப் போய்விட்டாள்.